சமூக நீதி

பக்கங்கள்

▼

வியாழன், 17 பிப்ரவரி, 2022

27 சதவிகித இட ஒதுக்கீட்டில், தி.மு.க. வெற்றி பெற்றது - இந்தியா முழுவதும் அதனுடைய பலன் கிடைத்தது! - தமிழர் தலைவரின் சிறப்புரை



   February 17, 2022 • Viduthalai

உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு: தமிழர் தலைவரின் சிறப்புரை

சென்னை, பிப்.17   27 சதவிகித இட ஒதுக்கீட்டில், தி.மு.க. வெற்றி பெற்றது - இந்தியா முழுவதும் அதனுடைய பலன் கிடைத்தது என்று சாதாரணமாக நினைக்கிறார்கள். ''வெற்றிக்குப் பல கதாநாயகர்கள் உண்டு. யார் காரணம் என்றால், நாங்கள்தான் காரணம் என்று பி.ஜே.பி.,க்காரர்களும்கூட இப்பொழுது வரு கிறார்கள். இதுதான் விசித்திரம்! என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு

கடந்த 1.2.2022 அன்று மாலை  ‘‘உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு'' என்ற தலைப்பில் காணொலி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

இந்நிகழ்விற்கு வரவேற்புரையாற்றிய  கழக வழக்குரைஞரணி தலைவர் மூத்த வழக்குரைஞர் மானமிகு த.வீரசேகரன் அவர்களே,

இந்நிகழ்வில் சிறப்பான முறையில் ஒரு வரலாற்றை எடுத்துக்கூறி, என்னுடைய உரைக்குமுன் ஒரு பீடிகை போல,  அறிமுக உரை போல அருமையான ஓர் உரையை ஆதாரப்பூர்வமாக சிறப்பாக எடுத்து வைத்த கழக வெளியுறவுத் துறை செயலாளரும், அகில இந்திய  பிற்படுத்தப்பட்டோர்  கூட்டமைப்பி னுடைய பொதுச்செயலாளருமான அன்பிற்குரிய சகோதரர் கருணாநிதி அவர்களே,

'புதிய சிறகுகள்'  தோழர் சிவராஜ்

'புதிய சிறகுகள்' என்ற பெயராலே நல்ல ஆக்கப் பணிகளை செய்து, நம்முடைய இளைஞர்களையெல் லாம் ஒன்று திரட்டி, அவர்களுக்கு வெறும் வேலை வாய்ப்புக்கான பயிற்சி என்பதைவிட, வாழ்க்கைக் கான பயிற்சிக்குப் பெரியார்தான் அடிப்படை என் பதற்கு - நம்முடைய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை ஊட்டி, தன்மான மும், தன்னம்பிக்கையும் நிறைவேறினால், தன்னி றைவு  தானே வந்து கதவைத் தட்டும் என்ற பால பாடத்தை அந்த இளைஞர்கள் மத்தியிலே சிறப்பாக செய்த அருமைத் தோழர் விழுப்புரம் சிவராஜ் அவர்களே,

அவர்களை அறிமுகப்படுத்திய கழகப் பொதுச் செயலாளர் மானமிகு முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களே,

அருமையான 'புதிய சிறகுகள்' என முளைத்துக் கொண்டிருக்கக்கூடிய அருமை இளைய தோழர்களே,

மற்றும் நன்றியுரை கூறவிருக்கக்கூடிய வழக் குரைஞர் கணேசன் அவர்களே,

லேண்ட் மார்க் ஜட்ஜ்மெண்ட்!

இந்த உரையைக் கேட்கும் உலகெங்கும் இருக்கக்கூடிய நண்பர்களே, சமூகநீதி வரலாற் றிலே ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்திய, லேண்ட் மார்க் ஜட்ஜ்மெண்ட் (Landmark Judgement) என்று பெருமைப்படக்கூடிய உச்சநீதிமன்றத்தினுடைய அண்மைத் தீர்ப்பி னுடைய அம்சங்களைப்பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கவேண்டும்.

இது அறிவார்ந்த அவை - காணொலிமூலம் இந்த உரையைக் கேட்கக்கூடியவர்கள் ஒவ்வொருவரும் இதனைப் புரிந்து, நம்முடைய இளைஞர்களுக்குச் சொல்லவேண்டும்.

நம்முடைய இளைஞர்களுக்கேகூட, பல வரலாற்று செய்திகள் புரியாத நிலை. கரடு முரடாக இருந்த பாதையை தந்தை பெரியார் என்ற பேராசான் அவர்கள்,  பக்குவப்படுத்தி, இன்றைக்கு ஒரு கான் கிரீட் சாலையைப் போல - இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தார்கள், திராவிட இயக்கங்கள் -  110 ஆண்டு களுக்குமேலான வரலாற்றைக் கொண்ட திராவிடர் இயக்கம்  - சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் - அதேபோல, நீதிக்கட்சித் தலைவர்கள் - சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் நாயர்,  நடேசனார் தொடங்கி,  அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதை இயக்கத் தளபதிகள் பலர் உழைத்து, அதற்குப் பிறகு தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கத்திலே - திராவிடர் கழகத்திலே தன்னை இணைத்துக்கொண்டு தலைமகனாக வாழ்ந்த பேரறிஞர் அண்ணா,  அவர் மறைந்தாலும், அவருடைய பணியை தொடர்ந்து சிறப்பாக செய்து ஒரு வரலாற்றை உருவாக்கி, பொன்னேடுகளாக ஆக்கிய நம்முடைய மானமிகு முத்தமிழ் அறிஞர் சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள், அதேபோல, மேற்சொன்ன அத்தனைப் பேருடைய பணிகளையும் இன்றைக்கு அகில இந்தியாவே உற்றுப் பார்க்கக்கூடிய அளவிற்கு, உலகமே பாராட்டக் கூடிய அளவிற்கு உருவாக்கிக் கொண்டிருக்கின்ற நம்முடைய 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச் சர் அவர்கள் ஆகியோர் கட்டிக் காத்த சிறப்புக்குரியதே 'சமூகநீதி' என்பதாகும்.

இது ஒரு நல்ல திருப்பமான நாள்!

அதேபோல, இயக்கத் தோழர்கள், சமூகநீதிக்கு ஒத்துழைப்புத் தரக்கூடிய தமிழ்நாட்டில்  உள்ள  அத்துணை அரசியல் கட்சிகள், அமைப்புகள் எல் லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு வாய்ப்பை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்மூலம் பெற்றிருக்கிற அருமைத் தோழர்களே, இது ஒரு நல்ல திருப்பமான நாள் என்பதை விளக்கவேண்டும். அதை மற்றவர் களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.

நம்முடைய இளைஞர்களில் பலர் இன்றைக்குக் கான்கிரீட் சாலையில் செல்லுகின்ற காரணத்தினால் தோழர்களே, 'இன்னுமா தேவை இட ஒதுக்கீடு?' என்கிற எதிரிகளுடைய பிரச்சாரத்திற்கு இவர்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்!

கோடையில் இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர்தருவே!

ஏனென்றால்,  இவர்களுக்கு வெயில் தெரியாது; இப்பொழுது இருக்கின்ற நிழலை இவர்கள் அனு பவித்துக் கொண்டிருக்கிறார்கள்!!

எனவே, நிழலில் இருக்கின்ற காரணத்தினால், வெயிலின் கொடுமையையும் தெரிந்து, நிழலுக்கு வந் தால்தான், கோடையில் இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர்தருவே என்று இந்த இயக்கத்தையும், சமூகநீதி யையும் அவர்கள் வரவேற்றுப் பேசக்கூடிய வாய்ப்பு இருக்கும்.

ஆனால், அவர்களுக்கெல்லாம் இன்றைக்கு சமூக நீதி வாய்ப்புகள் தயார் நிலையிலே உருவாக்கப்பட்டு விட்டது. ஒரு காலத்தில் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

திராவிட பார்மூலாவினுடைய சிறப்பு!

ஆனாலும், மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகுதான், சட்டப்படி நமக்கு அமையவேண்டிய அந்த உரிமைகளை நாம் பெறுகிறோம். சட்டத் திற்கு அப்பாற்பட்டு (Not out of the way) எந்த உரிமையையும் பெறவில்லை நாம்.

இதில் ஒரு சிறப்பு, திராவிட இயக்கத்தினுடைய நெடிய ஒரு சிறப்பு - 'திராவிட பார்மூலா' என்று சொல்லக்கூடிய  'திராவிட மாடல்' - அதனுடைய அடிப்படையினுடைய சிறப்பு என்னவென்றால்,

மற்ற  மாநிலங்களில், நேற்று முன்தினம்கூட மண்டலுக்கும், கமண்டலுக்கும் ஏற்பட்ட போட்டி என்ற தலைப்பிலே பேசும்பொழுதுகூட நான் சொன்னேன்,

குஜராத்திலே 200 பேருக்கும் மேற்பட்டோர் இட ஒதுக்கீட்டு போராட்டத்திலே - எதிர்த்து பலியாகியிருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டுக்காக காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில், 118 பேர் பீகாரில் பலியாகியிருக்கிறார்கள்.

ஆனால், 1928 ஆம் ஆண்டிலிருந்து சமூகநீதி மண் இந்த மண் - பெரியார் மண் - திராவிட இயக்க மண். ஆகவேதான், அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது

மக்கள் மன்றத்திற்கு எதிராக நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக்கின்றன

அதிலே சிறிய இடையூறாக இருந்ததெல்லாம் நீதிமன்றங்கள் - அதனுடைய தீர்ப்புகள். ஒவ்வொரு முறையும் மக்கள் மன்றம் தீர்ப்பளிக்கின்ற நேரத்தில், அதற்கு எதிராக நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக்கின்றன.

1928 ஆம் ஆண்டிலிருந்து இருந்து வந்த கம்யூனல் ஜி.ஓ. - 1950 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் வந்த வுடன், கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று முதல் வழக் காகப் போட்டு, அடிப்படை உரிமைப்படி, ஜாதி அடிப் படையில் இட ஒதுக்கீடு வழங்குவது சம வாய்ப்பைத் தடுக்கிறது. உயர்ந்த ஜாதி என்பதற்காக எங்களுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே, அரச மைப்புச் சட்டத்திற்கு எதிரானது அந்த ஜி.ஓ. - அரசாணை என்று வாதிட்டார்கள்.

வாதிடும்பொழுதுகூட அவர்களுடைய நாணயம் எப்பேர்ப்பட்டது என்பதற்கு அடையாளம் - செண்பகம் துரைராஜன் என்ற பார்ப்பனப் பெண்மணி,  மனுவே போடாமல், பொய்யாக, நீதிமன்றத்திற்குமுன் அபிடவிட் என்கின்ற பொய்ப் பிரமாணப் பத்திரத்தை  கையெழுத்துப் போட்டு தாக்கல் செய்தனர். அதுவே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய ஒன்று அல்லவா?

அந்த வழக்கில், காலங்காலமாக இருந்த வகுப் புரிமை செல்லாது என்று ஆக்கினர். ஆனால், அது நன்மையாக முடிந்தது.

ஏனென்றால், தீமையை நன்மையாக்கிக் கொள் வதுதான் பகுத்தறிவு.

உடனே, தந்தை பெரியார் அவர்களுடைய போராட்டம் - திராவிட இயக்கத்தினுடைய போராட்டம் மிகப்பெரிய அளவிற்குத் தமிழ்நாட்டில் ஏற்பட்டதினுடைய விளைவு -  அப்போது முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் (1951) வந்தது என்பது அந்தக் காலத்தில் மிகப்பெரிய ஒரு திருப்பமாகும்.

ஜாதி அடிப்படையில் யாரையும் பிரிக்கக்கூடாது

அதிலேகூட எந்த அடிப்படையில் கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்தார்கள் என்றால், சமத்துவ வாய்ப்பு - சம வாய்ப்பை எல்லோருக்கும் கொடுக்கவேண்டும் - ஜாதி அடிப்படையில் யாரையும் பிரிக்கக்கூடாது என்று - அவர்கள் கொடுத்த ஈக்குவா லிட்டி கிளாஸ் - சமத்துவம் என்பதைத் 'தவறாக' அர்த்தப்படுத்தி வியாக்கியானம் செய்தனர்.

அன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி சொல் லுகின்ற நேரத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்கள், அப்பொழுது அவர் சட்ட அமைச்சராக இருக் கிறார்கள்;

அந்த நிலையில், அவரிடம் கருத்தைக் கேட்ட பொழுது சொன்னார் - இது பல பேருக்கு அடிக்கடி நினைவூட்டப்பட வேண்டிய செய்தியாகும்.

''இந்தத் தீர்ப்பை நான் ஏற்க முடியாது. ஆனால், உச்சநீதிமன்றம்தான் கடைசி நீதிமன்றம் என்பதற்காக அதற்கு நாம் கட்டுப்படவேண்டும். ஆனால், அதை நான் மதிக்கத் தயாராக இல்லை'' (''I am bound by the decision of the S.C., but I am not to respect the same'') என்றார்.

இதைச் சொல்லிவிட்டு,

''அவர்கள் எதை இணைத்துப் பார்த்திருக்கவேண் டுமோ அதை இணைத்துப் பார்க்கத் தவறிவிட்டனர்'' என்றார்.

மிகப்பெரிய  ஆயுதமாக நீதிமன்றத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள்

எனவே தொடக்க காலத்திலிருந்து மக்கள் மன்றம், சட்டமன்றம், கருத்துகள், தமிழ்நாட்டின் சமூகநீதி எண்ணம் இவற்றோடு நாம் போராடிக் கொண் டிருக்கின்றபொழுது, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பாக, ஆதிக்கவாதிகளுக்கு, பார்ப்பனர்களுக்கு, மேல் ஜாதிக்காரர்களுக்கு, காலங்காலமாக அனுபவிப்பவர் களுக்கு  மிகப்பெரிய  ஆயுதமாக நீதிமன்றத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

ஆனால், இப்பொழுது ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அதுதான் தோழர்களே, ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரியது.

பாராட்டவேண்டியவர்களை நாம் பாராட்டுகி றோம். நீதிபதிகள் யாருக்கும் நாம் உள்நோக்கம் கற்பிக்கவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் தம்முடைய உணர்வுகளைக் குமுறி எடுத்துச் சொல் லக்கூடிய அளவிற்கும், எப்பொழுதும் விழிப்புணர் வோடு இருப்பதுதான், நாம் பெற்றிருப்பவற்றை அகலப்படுத்துவதற்கும், மேலும் பெறவேண்டிய இலக்குகள் நோக்கி நம்முடைய பயணத்தை அமைத் துக் கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதற்காகத் தான் இந்தக் கருத்துகளை எடுத்து வைக்கிறோம்.

எப்பொழுதுமே அந்த சூழ்நிலைகள் உண்டு. உதாரணத்திற்குச் சொல்லுகிறேன்.

தெய்வானை Vs சிதம்பரம் வழக்கு

சுயமரியாதைத் திருமணம் செல்லாது - எப்பொழுது - 1953 ஆம் ஆண்டு - தெய்வானை க்ஷிs சிதம்பரம் என்ற வழக்கில்.

காரணம், 'சப்தபதி' (ஓமகுண்டத்தின்முன் ஏழடி) எடுத்து வைக்கவில்லை என்பதால்.

அதற்கு உடனே அண்ணா அவர்கள், திராவிட ஆட்சி தமிழ்நாட்டில் வந்தவுடன், சுயமரியாதைத் திருமணங்கள் செல்லும் என்று ஒரு சட்டத் திருத் தத்தைக் கொண்டு  வந்து, ஒருமனதாக நிறைவேற் றினார்கள் (1968).

திராவிட இயக்க ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி 50 ஆண்டுகாலம் நடைபெற்றதினுடைய காரணத் தினால், நடைமுறையில் சட்டப்படி சுயமரியாதைத் திருமணங்கள் செல்லும் என்று வந்தது.

இது ஏதோ உரிமை மட்டுமல்ல - நம்முடைய தாய்மார்களுக்கு, சூத்திரர்களுக்கு, கீழ்ஜாதிக்காரர் களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு - திருமண உரிமையே கிடையாது என்பதுதானே மனுதர்மம். அதற்குவேண்டிய அடையாளங்கள்தானே- 'சப்தபதி' என்கின்ற சடங்குகள் எல்லாம்.

எனவே, அதை வைத்துக்கொண்டு சுயமரியாதைத் திருமணங்கள் செல்லாது என்று  நீதிமன்றம் சொன்ன நேரத்தில்,  அதற்குப் பிறகு திராவிட இயக்க ஆட்சி அமைந்து, புதுப்பித்து சட்டம் வந்தது.

அப்படி சட்டம் வந்து 50 ஆண்டுகளுக்கு பிறகும் கூட, சில ஆண்டுகளுக்கு முன்பு -  சுயமரியாதைத் திருமணங்கள் செல்லாது என்று வழக்குத் தொடுத்தனர் - சென்னை உயர்நீதிமன்றத்தில்.

அண்ணா கொண்டு வந்த அந்த சட்டம் செல்லாது என்று தீர்ப்பளியுங்கள் என்று அந்த வழக்குத் தொடுக்கப்பட்டது.

ஆனால், சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்று அதே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது. இதுபோன்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

நான் அடிக்கடி சொல்லுகின்ற ஆங்கிலப் பழ மொழி,

''The Public opinion marches forward;  Law comes limping behind.''

அதேமாதிரி மண்டல் -பரிந்துரைபற்றிய தீர்ப் பும்கூட.

நம்முடைய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர் கள், அரசாணை போட்ட உடன், ரங்கநாத் மிஸ்ரா என்பவர் 'மண்டலுக்குத்' தடை போட்டார்.

பி.எஸ்.கிருஷ்ணன்

அதைப்பற்றியெல்லாம் அன்றைக்கு ஒன்றிய சமூகநலத் துறை செயலாளராக இருந்த பி.எஸ்.கிருஷ்ணன் அய்.ஏ.எஸ்.,  அவர்கள், ஓர் ஆழமான புத்தகத்தை எழுதியிருக்கிறார் - அதில் மிகத் தெளிவான விளக்கங்களை சொல்லியிருக்கிறார்.

உறுதியாக நின்றார் நம்முடைய சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்கள்!

மண்டலை எதிர்த்து வழக்குத் தொடுத்த நேரத்தில், ஜீவன் ரெட்டி, பரிபூரண அய்யங்கார்  ஆகிய இரண்டு நீதிபதிகள் மண்டலுக்குத் தடை போட்டு, உத்தரவு போட்ட நேரத்தில்,

திராவிடர் கழகம் அந்தத் தீர்ப்பின் நகலைக் கொளுத்தி, உச்சநீதிமன்றத்திற்கு நம்முடைய கண்ட னத்தைத் தெரிவித்தது.

காரணம்,  நம்முடைய நோக்கம் அவமதிக்கவேண் டும் என்பதல்ல. ஆனால், நாங்கள் புண்பட்டிருக்கின் றோம் என்பதைப் பதிய வைக்கவேண்டும் என்பதற் காகத்தான்.

நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில்...

அதற்குப் பிறகு, அதே நீதிபதி ஜீவன் ரெட்டி அவர்களுடைய தலைமையில்தான், இந்திரா சகானி - மண்டல் கமிசன் வழக்கில், மண்டல் கமிசன் கொடுத்த 27 சதவிகித இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வர்களுக்குச் செல்லும் என்று 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுமூலம்  தீர்ப்பளித்தார்.

பெரும்பகுதி தெளிவான ஒரு தீர்ப்பு - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும் அது.

கொஞ்சம் மாறுபட்ட கருத்துகள் எல்லாம் அந்தத் தீர்ப்பில் இருக்கிறது - அந்த மெஜாரிட்டி தீர்ப்பில்.

வரலாற்று சிறப்புமிக்க - சமூகநீதிப் பிரகடனம்

நாம் இணைந்து கொடுக்கமாட்டோம் என்ற நிலையில்தான், நீதிபதி இரத்தினவேல் பாண் டியன் அவர்கள், மிகப்பெரிய ஒரு தனி தீர்ப்பை  அந்த அமர்வில், வரலாற்று சிறப்புமிக்க - சமூகநீதிப் பிரகடனம் போன்று கொடுத்திருக் கிறார்.

இது ஓர் இரண்டாவது உதாரணமாகும்.

மிக நேர்மையாக நடக்கவேண்டும் என்கின்ற நீதிபதிகளும் இருக்கிறார்கள். அப்படி வந்த ஓர் அற்புதமான தீர்ப்புதான் நண்பர்களே, இப்பொழுது வந்திருக்கின்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பாகும்.

உச்சநீதிமன்றத்தினுடைய மாண்பமை நீதிபதி களாக இருக்கக்கூடிய டாக்டர் டி.ஒய்.சந்திரசூட் அவர்களும், போபண்ணா அவர்களும் கொடுத்திருக் கின்ற தீர்ப்பு, மிக அற்புதமான தீர்ப்பு மட்டுமல்ல - வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பாகும்.

நம்முடைய கழக வெளியுறவுத் துறை செயலாளர் கருணாநிதி அவர்கள், அந்த வரலாற்றை சொல்லி விட்டார். அதை நான் அப்படியே வழிமொழிகிறேன்.

அவர் என்னென்ன வாதங்கள், வரலாற்று உண் மைகளைச் சொன்னார்களோ, அதை வைத்துக் கொண்டு, அதற்குமேலே கட்டடத்தை எழுப்புவது போன்று, வாதங்களை எழுப்பி,  எப்படி 27 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்தது என்பது மட்டும் முக்கியமல்ல; அதைவிட, ''லேண்ட் மார்க் ஜட்ஜ்மெண்ட்'' என்று குறிப்பிடத்தகுந்த வரலாறு படைத்த ஒரு தீர்ப்பாக தற்போதைய தீர்ப்பு இருக்கிறது என்று சொல்வதற்குக் காரணங்கள் உண்டு. அதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

27 சதவிகித இட ஒதுக்கீட்டில், தி.மு.க. வெற்றி பெற்றது - இந்தியா முழுவதும் அதனுடைய பலன் கிடைத்தது

நீங்கள் புரிந்துகொண்டால் மட்டும் போதாது நண்பர்களே - ஒவ்வொரு வழக்குரைஞர்களுக்கும்கூட இதைத் தெளிவுபடுத்தவேண்டும். ஏனென்றால்,  பல பேர் இந்தத் தீர்ப்பை சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 27 சதவிகித இட ஒதுக்கீட்டில், தி.மு.க. வெற்றி பெற்றது - இந்தியா முழுவதும் அதனுடைய பலன் கிடைத்தது என்று சாதாரணமாக நினைக்கிறார்கள்.

''வெற்றிக்குப் பல கதாநாயகர்கள் உண்டு. யார் காரணம் என்றால், நாங்கள்தான் காரணம் என்று பி.ஜே.பி.,க்காரர்களும்கூட இப்பொழுது வருகிறார் கள். இதுதான் விசித்திரம்!

(தொடரும்)

parthasarathy r நேரம் 9:50 AM
பகிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.