இடஒதுக்கீடு என்பது சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நிலையாகும். இதில் பொருளாதார அளவுகோல் எங்கிருந்து வந்தது?
இது இப்பொழுது மட்டுமல்ல _ தந்தை பெரியார் அவர்கள் கிளர்ச்சியாலும், காமராசர் போன்றவர்களின் ஒத்துழைப்பாலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்தபோதே, நாடாளுமன்றத்தில் பொருளாதார அளவுகோலையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது பிரதமராக நேரு, சட்ட அமைச்சராக அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் இருந்தனர்.
பொருளாதார அளவுகோல் என்பது நிரந்தரமல்ல; அடிக்கடி மாறக்கூடிய ஒன்று. அதனால், சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு என்பதே சரியானதாகும். அதற்கு வரலாற்றுக் காரணங்களும் உள்ளன என்று பதில் கூறப்பட்டு, அந்தக் கோரிக்கை வாக்கெடுப்புக்கும் விடப்பட்டது. பொருளாதார அளவுகோல் என்பதற்கு ஆதரவாக 5 வாக்குகளும்; எதிராக 243 வாக்குகளும் கிடைத்தன.
பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் குறித்து 2005இல் மத்திய அரசால் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சின்கோ தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் (Sinho Commission) தனது பரிந்துரையை ஜூலை 2010இல் அளித்தது.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தர முடியாது. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு நலத் திட்டங்கள் மூலமே அவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம். (For Extending Measures Only) என்றுதான் அது பரிந்துரைத்தது.
திரு. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது...
திரு.நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்தபோது (1991இல்) பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பாருக்கு _ திறந்த போட்டியில் பங்கேற்கத் தகுதியானவர்களில் ஒரு சாராருக்கு _ 10 சதவிகித இடஒதுக்கீடு ஆணை 25.9.1991 அன்று பிறப்பிக்கப்பட்டதும் செல்லுமா? செல்லாதா? என்று இந்திரா சகானி வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை ஜஸ்டீஸ் ஜீவன் ரெட்டி அவர்கள் எழுதினார்.
அத்தீர்ப்பின் 867ஆவது பாராவில் குறிப்பிட்டுள்ளதன் சாரம்சம், அரசியல் சட்டம் பொருளாதார அளவுகோலை வைத்து இடஒதுக்கீடு கொடுப்பதை ஏற்காத காரணத்தால், அது செல்லத்தக்கதல்ல என்பதே ஆகும்.
அதேதான் இப்போது கொண்டுவரப்படும் மத்திய அரசின் 10 சதவிகித இடஒதுக்கீடு _ முன்னேறிய ஜாதிகளில் உள்ள ஏழைகளுக்கு என்பது, அரசியல் சட்டத்திருத்தமாக (103) அவசர கோலம் அள்ளித் தெளித்ததாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 10 சதவிகித முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு, அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தில் அடங்கிய (Basic Structure of the Constitution) அடிப்படையையே தகர்த்தெறிகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா எப்படி நடந்துகொண்டார்?
1991இல் முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்தபொழுது, தமிழக அரசு நடத்திய பெரியார் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டபோது எங்கள் வேண்டு கோளை ஏற்று, 69% இடஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கச் செய்தார்.
ஏற்கெனவே எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபொழுது கொண்டுவந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 9,000 ரூபாய் வருமான வரம்பு கைவிட்டதை மனதிற் கொண்டே செல்வி ஜெயலலிதா இதைச் செய்தார்.
அதனால்தான் “சமுகநீதி காத்த வீராங்கனை’’ என்னும் பட்டத்தை திராவிடர் கழகம் அவருக்கு அளித்தது. அந்த வரலாற்றை இன்றைய அ.தி.மு.க. அரசு மாற்றிவிடக் கூடாது. மாற்றினால், அது வரலாற்றுப் பிழையாகிவிடும் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு சுட்டிக்காட்ட விழைகிறோம்.
445 உயர்கல்வி நிறுவனங்களில் 28 விழுக்காடு உயர்ஜாதியினர்
கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி வெளிவந்த ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ வார ஏடு ஓர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. அய்ந்து ஆய்வாளர்கள், நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 445 உயர்கல்வி நிறுவனங்களில் உயர்ஜாதியினர் 28 விழுக்காடு இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்குத்தான் மேலும் 10 விழுக்காடு இடங்கள் என்பது சமுக நீதியா?
பொதுப் போட்டியில் உள்ள 31 விழுக்காடு இடங்கள் என்பவை உயர்ஜாதியினருக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைவரும் போட்டியிடக்கூடிய இடம். அந்த 31 விழுக்காட்டில் உயர்ஜாதி ஏழை, உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடங்களைப் பிரித்துக் கொடுப்பது சட்டப்படி எப்படி சரியாகும்?
எடுத்துக்காட்டாக, மத்திய அரசின் 40 பல்கலைக்கழகங்களில், பேராசிரியர்கள் பதவிகளில், உயர்ஜாதியினர் 95 விழுக்காடு உள்ளனர். துணைப் பேராசிரியர் பதவிகளில் 93 விழுக்காடும், உதவிப் பேராசிரியர் பதவிகளில் 66 விழுக்காடும் உள்ளனர். மீதம் உள்ள நிலைகளில் இடஒதுக்கீடு உரிமை உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் இருக்கின்றனர். குறிப்பாக, பேராசிரியர் 1125 பதவிகளில், துணைப் பேராசிரியர் 2620 பதவிகளில், பெரும்பான்மை மக்களைக் கொண்ட பிற்படுத்தப்பட்டோர் ஒருவர்கூட இல்லை.
இட ஒதுக்கீடு வறுமையை ஒழிக்கும் திட்டமல்ல!
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல (NOT A POVERTY ALLEVIATION SCHEME). சமுகத்தில் பிறப்பின் அடிப்படையில் ஜாதியின் காரணமாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு, அரசு அதிகாரத்தில் வழங்கப்படும் பங்கு என உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் ஓ.சின்னப்ப ரெட்டி அவர்கள் ஒரு வழக்கின் தீர்ப்பில் கூறியுள்ளார். உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு, உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் அரசு, அவர்களுக்கு, கல்வி கற்க ஊக்கத்தொகை அளிக்கலாம்; கல்விக் கடன் குறைந்த வட்டியில் தரலாம்; சிறப்புப் பயிற்சி அளிக்கலாம். ஆனால், இடஒதுக்கீடு தீர்வு அல்ல. ஏற்கெனவே, தங்களது விகிதாசாரத்திற்கு பன்மடங்கு அதிகமாக (70 விழுக்காட்டிற்கும் மேல்) அதிகாரத்தை கையில் வைத்திருக்கும், உயர்ஜாதியினர்க்கு, குறுக்கு வழியில், மேலும் 10 விழுக்காடு பொருளாதார அடிப்படையில் அளிப்பது, சமுக அநீதியாகும்; பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உரிமை பறிக்கும் செயலாகும்.
கி.வீரமணி,
ஆசிரியர்
- உண்மை இதழ், ஜூலை, 16-31.19