பக்கங்கள்

வியாழன், 27 செப்டம்பர், 2018

பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது

பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான கிரீமிலேயரையும் ரத்து செய்க!

தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடரப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு தீர்ப்பினை அளித்துள்ளது!

காலங்காலமாக சமூக இழிவினையும், கொடுமையையும், ஜாதி - வர்ணாசிரம சமூக அமைப்பின் காரணமாக அனுபவித்து, கல்வி, உத்தியோக வாய்ப்புகள், பார்ப்பனரைத் தவிர - மேல் ஜாதி என்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு "அடிமைகள்" அவர்கள் என்பதால் மறுக்கப்பட்ட உரிமைகள், 50, 60 ஆண்டு காலமாகத் தான் நாட்டில் எல்லா மாநிலங்களிலும் அல்ல, தமிழ்நாடு, கருநாடகம் போன்ற ஒரு சில தென் மாநிலங்களில் துவங்கி அங்கீகரிக்கப்பட்டு இட ஒதுக்கீட்டின் மூலம் தரப்பட்டு வருகிறது!

இடஒதுக்கீட்டை ஒழிக்க ஒற்றைக் காலில் தவம்!

பல கோடி மக்கள் மனுதர்மப்படி, கல்வி, உத்தியோகம் மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புத் தருவதற்கு சமூகநீதி - இடஒதுக்கீடு என்ற உதவிகள் - ஊனமுற்றவர்களுக்கு உதவிடும் ஊன்றுகோல் போல  அளிக்கப்படுவதை, ஆதிக்க ஜாதிகளான - பார்ப்பனருக்கும், அவர் போன்ற அடுத்த வரிசையினருக்கும் பொறுத்துக் கொள்ள முடியாத உறுத்தப்பட்ட பார்வையோடு இந்த இடஒதுக்கீட்டினை ஒழித்திட ஒற்றைக் காலில்  'தவம்' செய்கின்றனர்!

தங்களிடம் உள்ள அதிகார வர்க்க ஆளுமை பலம், பத்திரிக்கை ஊடக பலம்; எல்லாவற்றிற்கும் மேலாக  நீதித்துறையில்  உயர் ஜாதி ஆளுமைப் பலம் கொண்டு இந்திய அரசியல் சட்டம் வழங்கிய உரிமை மீட்பைக்கூட சகியாதவர்களாகி, சமர்க்களத்தில் அமர்க்களத்தோடு இறங்கியுள்ளனர்!

தந்தை பெரியார் போராடினார்

தந்தை பெரியார் 1951ஆம் ஆண்டு துவக்கிய சமூக நீதிப் போர் பல்வேறு காலங்களில், பல்வேறு களங்களில் வெற்றி பெற்றே வந்திருக்கிறது!

நீதித்துறையில் இன்னமும் சமூகநீதி தலை தாழ்ந்தே பறக்கிறது!

தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து ஒரே ஒரு நீதிபதிகூட

31 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தில் - 25 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதில் இன்றும்கூட இல்லை. இல்லவே இல்லையே!

தேவை நீதித்துறையிலும் இடஒதுக்கீடு!

பிற்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒன்றோ - இரண்டோ அவ்வளவுதான்!

நீண்ட இடைவெளிக்குப்பின் ஜஸ்டீஸ் திரு. ரஞ்சன் கோகாய் என்ற பிற்படுத்தப்பட்ட சமூக நீதிபதி (அசாம் மாநிலத்தவர்) வரும் 2.10.2018 முதல் பதவி ஏற்று (ஓராண்டுதான் பதவியில் இருப்பார்) இருக்கிறார். என் றாலும் வெளியில் உள்ள மண்டல் காற்று உச்சநீதி மன்றத்திலும் அவ்வப்போது அடிக்கவே செய்கிறது!

அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு - நேற்றைய தீர்ப்பு.

நல்லதோர் தீர்ப்பு நேற்று

நேற்று (26.9.2018) வந்த 5 நீதிபதிகள் அமர்வு (எல்லாம் மேல் ஜாதியினரே! என்றாலும்கூட) அளித்த அரசியல் சட்ட ரீதியான தீர்ப்பு - நல்ல தீர்ப்பாகும்!

தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்குப் பதவிகளில் (இடஒதுக்கீட்டின் படிதான் அவர்கள் இந்த அளவுகூட வர முடிந்துள்ளது) பதவி உயர்வு தருவதற்கு, மேலும் புள்ளி விவரப் பொருளாதார நிலை ஆதாரங்களைத் திரட்டிட வேண்டிய அவசியம் இல்லை; தாராளமாக தற்போதுள்ளதைத் தரலாம் என்று கூறி, - முந்தைய நாகராஜன் வழக்கின் தீர்ப்பினால் (2006) ஏற்பட்ட தடையை - தீய விளைவை - அகற்றி விட்டனர்!

கிரீமிலேயர் முறை தாழ்த்தப்பட்ட மலைவாழ்  (S.C., S.T). மக்களுக்குக் கட்டாயம் இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பு - 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வின் தீர்ப்பாகும்.

ஊனமுற்றவர்களுக்கு உதவுவது இல்லையா?

S.C. S.T. மக்களுக்கு பதவி உயர்வு தரத் தடையில்லை  - ஊனமுற்றோர்கள் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும்போது - மற்றவர்களுக்கு சில அடிகள் முன்னே நிறுத்தி (Handicap) ஓட விடுவதில்லையா? அதே நியாயத்தின் தத்துவத்தின்படி தான் இதைக்  கூறியுள்ளனர்.

மிகவும் பாராட்டி வரவேற்க வேண்டியதாகும்.அதுபோலவே - கிரீமிலேயர் இவர்களுக்கு கிடையாது!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரெங்காச்சார்யா வழங்கிய தீர்ப்பு ஒன்றில் கூறிய கருத்து இங்குப் பொருத்தமானது. Appointment includes promotion also 
என்று தெளிவாகக் குறிப்பிட்டதை நினைவூட்டுகிறோம்.

நேற்று ஊடகங்கள் - தொலைக்காட்சிகள் சரியாகப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது அவர்களது ஆசைகளின் வெளிப்பாடாகவோ திசை திருப்பி, பதவி உயர்வு S.C., S.T., யினருக்குத்  தரக் கூடாது இடஒதுக்கீட்டு அடிப்படையில் என்பது போன்ற செய்தி வெளியிட்டு கொஞ்சம் குழப்பி விட்டனர்!

இம்மாதிரி இவர்கள் செய்வது முதல் முறையல்ல!

அர்ச்சகர் தீர்ப்பு 2016 இறுதியில் வந்தபோதுகூட இப்படிக் குழப்பினர் - நாம் தான் துணிந்து ஓங்கி அடித்து விளக்கி "அந்த விஷப் பற்களை"ப் பிடுங்கினோம்!

'கிரீமிலேயரை' ரத்து செய்க!

கிரீமிலேயர் என்ற இந்திரா சகானி மண்டல் வழக்கில் 9 நீதிபதிகள் தீர்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு  மட்டும் வைத்ததேகூட பெரும் சமூக அநீதியாகும்;

அரசியல் சட்டத்தில் கூறாத பொருளாதார அளவுகோலின் (Economic Criteria)  மறு அவதாரம் தான் கிரீமிலேயரை புகுத்தல் இதையும் பிற்படுத்தப்பட்ட வர்கள் ஒருமுறை எதிர்த்து நீக்குவது அவசரம் - அவசியம்!

கி. வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

27.9.2018

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

'கிரிமிலேயர்' முறையை முற்றிலும் நீக்கிடவும் பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க கோரியும் ஆர்ப்பாட்டம்சென்னை, செப்.14 அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலசங்கங் களின் கூட்டமைப்பின் சார்பில் 11.9.2018 அன்று பகல் 11.30 மணி அளவில் பிற்படுத்தப் பட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தி சென்னை பெரம் பூரில் உள்ள அய்.சி.எப். நிறு வன பொதுமேலாளர் அலுவல கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, இக் கூட்டமைப்பின் செயல் தலை வர் ஜே.பார்த்தசாரதி தலைமை வகித் திட, பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி போராட்டத் திற்கான கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். அய்.சி.எப். பிற்படுத் தப்பட்டோர் நல சங்கத்தின் தலைவர் கே.ராமமூர்த்தி வர வேற் புரையும், அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.அன்பு குமார் நன்றியுரையும் நிகழ்த் தினார்கள்.

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக மத்திய அரசை வலியுறுத்தும் கோரிக்கைகளா வன:

1. மத்திய பணியாளர் துறை யின் 6.10.2017 தேதியிட்ட ஆணை, பொதுத் துறை நிறு வனம், வங்கி, காப்பீட்டுக் கழகம் மற்றும் தனியார் நிறு வனங்களில் பணிபுரியும் பிற்படுத்தப்பட்டோர் அனை வரையும் கிரிமிலேயர் என்று பாகுபாடு செய்து, 27 விழுக் காடு இட ஒதுக்கீட்டினை பெற தகுதியற்றவர்கள் என அறிவித்துள்ளது. சமூக அநீதியான இந்த ஆணையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

2. பிற்படுத்தப்பட்டோரை மட்டும் கிரிமிலேயர் எனும் பொருளாதாரக் கோட்பாட்டில் பிரித்திடும் முறையை முற்றி லுமாக நீக்கிடவும், இதற்குரிய அரசியல் சட்ட திருத்தத்தை மத்திய அரசு மேற் கொள்ளவும் வேண்டும்.

3. மத்திய அரசில் பிற் படுத்தப்பட்டோருக்கென தனி யாக ஒரு துறையை உருவாக்க வேண்டும்.

4. பதவி உயர்வில் பிற் படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். மத்திய அரசு, பொதுத்துறை நிறுவன பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் அய்.சி.எப்., ஏர் இந்தியா, பால்மர் லாரி, பாங்க் ஆப் பரோடா, மத்திய கணக் கெடுப்புத்துறை, சென்னை பெட்ரோலியக் கழகம், பணி யாளர் காப்பீட்டுக் கழகம், அய்.அய்.டி, சென்னை உரத் தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி கழகம், நியூ இந்தியா காப்பீட்டுக் கழகம், சேலம் உருக்காலை நிறுவனம், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஆவடி கனரக தொழிற்சாலை  ஆகிய நிறுவன பிற்படுத்தப்பட்டோர் நல சங்க அமைப்புகள் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண் டனர்.

- விடுதலை நாளேடு, 14.9.18

திங்கள், 3 செப்டம்பர், 2018

வேலை வாய்ப்பில் எஸ்சி, எஸ்டி வகுப்பினர் வேறு மாநிலத்தில் சலுகை பெற முடியாது உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

டில்லி, ஆக.31 ‘‘ஒரு மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி என்று வகைப்படுத்தப் பட்டவர், வேறு மாநிலத்தில் அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கோர முடியாது’’ என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஒரு மாநிலத்தில் எஸ்சி அல்லது எஸ்டி வகுப்பினராக உள்ளவர், வேறு மாநிலத்தில் அவருடைய ஜாதி எஸ்சி, எஸ்டி.யாக அறிவிக்கப்படாத நிலையில் அந்த மாநிலத்தில் அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பெற முடியுமா என்று கேள்வி எழுப்பி உச்ச நீதி மன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த எஸ்சி, எஸ்டி வகுப்பி னர் டெல்லியில் அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கோர முடியுமா என்று கேள்வியும் எழுப் பப்பட்டிருந்தது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு விசாரித்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆர்.பானுமதி, எம்.சந்தான கவுடர், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

மனுக்களை விசாரித்து நீதிபதிகள் நேற்று ஒருமனதாக அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஒரு மாநிலத்தைச் சேர்ந்த எஸ்சி, எஸ்டி வகுப்பினர் வேறு மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகையைப் பெற முடி யாது. வேறு மாநிலத்தில் அவருடைய ஜாதி எஸ்சி, எஸ்டி பட்டியலில் அறிவிக் கப்படாமல் இருந்தால், இடஒதுக்கீடு சலுகையைப் பெற முடியாது

மேலும், ஒரு மாநிலத்தில் எஸ்சி அல்லது எஸ்டி வகுப்பினராக அறிவிக் கப்பட்டவர் என்பதாலேயே, அதே அந்தஸ்தை அவர் வேறு மாநிலத்தில் பெற முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

டில்லியைப் பொறுத்தவரையில் எஸ்சி, எஸ்டி விஷயத்தில் மத்திய இட ஒதுக்கீடு கொள்கை இங்கு பொருந்தும் என்ற 4 நீதிபதிகள் கூறினர். இந்தக் கருத்தை நீதிபதி பானுமதி ஏற்கவில்லை. எனினும், 4:1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் டில்லியில் இடஒதுக்கீடு குறித்த விஷயத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 31.8.18

69 சதவிகித இட ஒதுக்கீடு - கிரீமிலேயர் - பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்பாக

உச்சநீதிமன்றத்தில் சமூகநீதியை நிலைநாட்ட திறமை வாய்ந்த வழக்குரைஞர்களை நியமித்து தமிழக அரசு வாதாட வேண்டும்!


நவம்பர் மாதத்தில் டில்லியில் இது தொடர்பான மாநாடு


நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் கிளர்ச்சிகள்


திராவிடர் கழகம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்
சென்னை, ஆக.29 தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக் கீட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் - தாழ்த்தப்பட்டவர் களுக்கும் கிரீமிலேயர், பதவி உயர்வில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்கிற வகையில் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழகம் சார்பில் இன்று (29.8.2018) காலை சென்னை பெரியார் திடலில் கூட்டப்பட்ட 69 சதவிகித இட ஒதுக்கீடு குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்: 1 (அ)

தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டம் 76 ஆம் திருத்தம் - 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்று சட்ட வலிமை பெற்று நடை முறையில் செயலாக்கம் பெற்று வருகிறது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு விசாரணை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

எல்லா வகையிலும் பாதுகாப்பான இந்த சமூகநீதி சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கில் திறமையும், அனுபவமும், சமூகநீதியில் அக்கறையும் கொண்ட மூத்த வழக்குரைஞர்களை நியமித்து உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெறு வதற்கான அனைத்து முயற்சிகளையும் விரைவாக மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசினை இந்தக் கலந்துரையாடல் கூட்டம் வலியுறுத்துகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு - 69 சதவிகித இட ஒதுக்கீடு இவற்றைப் பாதுகாத்திட இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சியின்கீழ் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் - இவ்விரண்டிலும் முறையே முதல மைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கும் முக்கிய பங்கு இருப்பதால், அ.இ.அ.தி.மு.க. அரசு - உச்சநீதி மன்றத்தில் நடைபெறும் இவ்வழக்கில் கூடுதல் பொறுப் புடனும், அர்ப்பணிப்புடனும், அக்கறையுடனும் செயல் படவேண்டிய கடமை உணர்வு கூடுதலாக இருக்கிறது என்பதையும் இக்கலந்துரையாடல் கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் திணிக்கப்பட்டுள்ள கிரிமீலேயரையே நீக்கவேண்டும் என்று சமூகநீதியாளர்கள் வலி யுறுத்திக் கொண்டு இருக்கும் இக்காலகட்டத்தில், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிரிமீலேயர் தேவை என்ற பொருளிலும், பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்திய அரசமைப்புச் சட்டம் 77 ஆம் திருத்தம் உறுதி செய்துள்ள நிலையில், இது குறித்தும் உச்சநீதிமன்றம் இப்பொழுது கேள்வி எழுப்பியுள்ளதானது - சமூகநீதி மீதான பெரும் அச்சுறுத்தலேயாகும். இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உரிய அளவு கவனம் செலுத்தவேண்டும் என்றும், பிரதமரைச் சந்தித்த அழுத்தம் கொடுப்பது, டில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாநாடு ஒன்றை நடத்துவது உள்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 1 (ஆ)

முதுநிலை மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் உள்ள (2018-19) 10,449 இடங்களில் 205 இடங்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) வழங்கப்பட்டுள்ளன. இதுவும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, அகில இந்திய தொகுப்பு இடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திடவேண்டும்.

தீர்மானம்: 1 (இ)

மேற்கண்ட கருத்துகளை மய்யப்படுத்தி, நாடு தழுவிய அளவில் தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங் களையும், தேவையான கிளர்ச்சிகளையும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற  பல்வேறு கட்சியினர் - அமைப்பினர் (29.8.2018, சென்னை, பெரியார் திடல்)


பங்கேற்றோர்


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றோர் வருமாறு:

வி.பி.துரைசாமி, தி.மு.க.

ஆ.கோபண்ணா, காங்கிரசு

உ.பலராமன், காங்கிரசு

தொல்.திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி

து.அரிபரந்தாமன், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி

கே.எம்.காதர் மொகிதீன், இந்திய யூனியன் முசுலிம் லீக்

மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

ஆ.வந்தியதேவன், மதிமுக

பி.சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அ. பாக்கியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கு.கா. பாவலன், விடுதலை சிறுத்தை கட்சி

சுப.வீரபாண்டியன், திராவிட இயக்க தமிழர் பேரவை

எம்.நிஜாம் முகைதீன், எஸ்.டி.பி.அய். கட்சி

வன்னியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி

ஏ.கே.அப்துல்கரீம், எஸ்.டி.பி.அய் கட்சி

பேராயர் எஸ்றா.சற்குணம், இந்திய சமூகநீதி இயக்கம்

மலர் இரா.ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள்  தொழிலாளர் கட்சி

டி.எஸ். ஏழுமலை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி

இராமகோபால தண்டாள்வர், தலைவர், உழைப்பாளி மக்கள் கட்சி

டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்

ப.அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சி

அப்துல் சலாம், மனிதநேய மக்கள் கட்சி

டி.காஜாமொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி

டி.தாகிர், மனிதநேய மக்கள் கட்சி

அ.இராமசாமி, தலைவர் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

ந.க.மங்கள முருகேசன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொது பள்ளிக்கான மாநில மேடை

ஏ.கே.மொகமத் ரபீ, இந்திய யூனியன் முசுலீம் லீக்

கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகம்

வீ. அன்புராஜ், திராவிடர் கழகம்

வீ.குமரேசன், திராவிடர் கழகம்

வி.பன்னீர்செல்வம், திராவிடர் கழகம்

மஞ்சை வசந்தன், திராவிடர் கழகம்

தே.செ.கோபால், திராவிடர் கழகம்

சு.குமாரதேவன், திராவிடர் கழகம்

அருட்தந்தை ஸ்டோன் ஜெபமாலி, இந்திய சமூகநீதி இயக்கம்

ஞானதேவராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி

கே.எம்.நிஜாமுதீன், இந்திய முசுலிம் லீக்

எம்.ஜெய்னுலாபிதீன், இந்திய யூனியன் முசுலீம் லீக்

முத்தையாகுமரன், திராவிட இயக்க தமிழர் பேரவை

எஸ்.நடராஜன்

- விடுதலை நாளேடு, 29.8.18

தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்புபுதுடில்லி, ஆக. 27 தமிழகத்தில் பின் பற்றப்பட்டு வரும் 69% இடஒதுக்கீடு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த அன்னபூரணி மற்றும் அகிலா என்ற மாணவர்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 69% இட ஒதுக்கீட்டால் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு சிக்கலாக இருப்பதாக கூறி அந்த இட ஒதுக்கீட்டை செல்லாது என்று அறிவிக்கக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில், இடஒதுக்கீடு குறித்து சட்ட மன்றத்தில் சிறப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டப் பிறகே இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதாக தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இதனை ஏற்ற நீதிபதிகள், தமிழ கத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான கூடுதல் மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் தடை விதித்துள்ளனர்.

மேலும், இடஒதுக்கீடு 50% மேல் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த 1992இல் தீர்ப்பு அளித்திருந்தது. அந்த தீர்ப்பிற்கு எதிராக இந்த 69% இடஒதுக்கீட்டை கொண்டுவந்ததா என்பதை குறித்து விசாரணையை வரும் நவம்பர் மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 27.8.18

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை தனியாக கணக்கெடுக்க முடிவு!புதுடில்லி, செப்.3 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், முதல் முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை தனியாகக் கணக்கெடுக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டு களுக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், அடுத்த கணக்கெடுப்பு வரும் 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ளது.

இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஆலோ சனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 25 லட்சம் தகவல் சேகரிப்பாளர்கள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர். சுதந்திர இந்தியாவில், முதல் முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை தனியாகக் கணக்கெடுக்கப்பட உள்ளது. கணக்கெடுப்புப் பணிகள் அனைத்தும் தற்போதைய உயர் தொழில்நுட்ப முறைகளைப் பயன் படுத்தி, மிகத் துல்லியமாக இருக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இதில் மின்-நிலவரைபடங்கள், ஜிபிஎஸ் கருவி போன்றவற்றைப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, கணக்கெடுப்பு நடத்திய பிறகு, அதன் இறுதி அறிக்கையைத் தயாரித்து வெளியிட 7 முதல் 8 ஆண்டுகள் ஆகின்றன. வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், 3 ஆண்டுகளுக்குள் இறுதி அறிக்கையை வெளியிட முடிவு செய்யப் பட்டது என்று அவர் தெரிவித்தார்.

கடைசியாக 1931-ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை தனியாகக் கணக்கெடுக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பை அடிப் படையாக வைத்து, கடந்த 1990-ஆம் ஆண்டு வி.பி. சிங் அரசு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது.

இந்த நிலையில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தங்களைத் தனியாகக் கணக்கெடுக்க வேண்டும் என இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 3.9.18