பக்கங்கள்

வியாழன், 27 டிசம்பர், 2018

உ.பி. சாமியார் ஆட்சி இதுதான்! தாழ்த்தப்பட்ட மாணவிமீது பெட்ரோல் வீச்சு

ஆக்ரா, டிச.21 பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகோலா ஒன்றியப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவி வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.  அம்மாணவி பள்ளிக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்குத் திரும்புகையில், அவருடைய சைக்கிளை  பைக்கில்  பின்தொடர்ந்த சிலர் திடீரென அவள் மீது  பெட்ரோலை வீசி தீவைத்துள்ளனர்.

கடுமையான தீக்காயம் அடைந்த அம்மாணவி நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து துடித்தாள்.

அப்பகுதியைச் சேர்ந்தவர்களின் உதவியால் காவல்துறையினருக்கு 100 எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கப் பட்டபின்னர் மாணவி மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். தற்பொழுது சப்தர்ஜங் மருத் துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மால்புரா காவல்நிலையத்தில் வழக் குப் பதிவு செய்யப்பட்டது. அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், தாக்குதலுக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பட்நாயக் கூறியதாவது:

“பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற் றோரிடம் விசாரணை செய்தபோதிலும் வழக்கில் முன்னேறிச் செல்ல முடிய வில்லை. தாக்குதலின் பின்னணியில் உள்ள  நோக்கத்தை தெளிவாக அறிய முடியவில்லை. தனிப்பட்ட வகையில் இங்கிவருகின்ற பல்வேறு குழுக்கள் பல்வேறு கோணங்களில் இப்பிரச்சி னையில் விசாரணை செய்து வருகின் றனர்’’ என்றார்.

பதேபுர்சிக்ரி தொகுதியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சீமா உபாத் யாயா, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கலிச்சரம் சுமன் மற்றும் பீம் ஆர்மி அமைப்பினரும் பாதிக்கப்பட்ட மாண வியின் கிராமத்துக்குச் சென்று அவள் உறவினர்களை நேரில் சந்தித்து விசா ரணை செய்து வருகின்றனர்.  பீம் ஆர்மி அமைப்பினர் காவல்துறையினரி டமும், இப்பிரச்சினைகுறித்து விசாரித் துள்ளனர்.

ஆக்ரா பகுதியின் பிம் ஆர்மி அமைப்பின் தலைவர் அனில் கர்தம் கூறியதாவது:

“குற்றமிழைத்தவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையினரிடம் வலியுறுத்தி வரு கிறோம். இல்லையென்றால் போராட் டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித் துள்ளோம்.  அந்த பெண்ணுக்கோ, அவள் குடும்பத்தினருக்கோ எதிரிகள் என்று எவரும் கிடையாது. இந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என் கிற நோக்கத்திலேயே இதுபோன்ற சதிகள் நடந்துள்ளதாகத் தெரிகிறது’’ என்றார்.

உத்தரப்பிரதேச மாநில மேனாள் முதல்வர் அகிலேஷ் டிவிட்டர் சமூக வலைத்தளப்பக்கத்தில் இப்பிரச்சினை குறித்து தம்முடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அவர் டிவிட்டர் பதிவில் குறிப் பிட்டுள்ளதாவது:

“முதலாவது ஒரு பெண்மீதான பாலியல் வன்முறை முயற்சி, இரண் டாவது மாணவிமீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு ஆகிய இந்த இரண்டு நிகழ் வுகள் வாயிலாக எந்த அளவுக்கு சமூக விரோதிகள் துணிச்சல் பெற்றுள்ளனர் என்பதை காட்டுகிறது. சமூக விரோதி களே இதைச் செய்கிறார்கள். அவர் களுக்கு அரசின்மீது அச்சமில்லை அல்லது அரசிடமிருந்து பாதுகாப்பை அவர்கள் பெறுகிறார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாழ்த் தப்பட்ட வகுப்பினர் தாக்கப்படுவது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள் ளாக்கப்படுவது, அவற்றுக்கெல்லாம் ஆளும் பாஜக அரசு துணைநிற்பது, குற்றமிழைத்தவர்களை காப்பது போன்ற செயல்களால் இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
- விடுதலை நாளேடு, 21.12.18

"மனுவாதி பாஜகவை அப்புறப்படுத்துவோம்!"

டில்லியில் பேரணி
புதுடில்லி,டிச.21தலித்உரிமைகளைப் பாதுகாத்திடுவோம், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திடுவோம், மனுவாதி பாஜகவை அப்புறப்படுத்துவோம் என்ற முழக்கங்களுடன் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வியாழக்கிழமையன்று தலைநகர் டில்லியில் நாடாளுமன்றம் நோக்கி, பேரணி- ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இப்பேரணி-ஆர்ப்பாட்டம் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி சார்பில் நடைபெற்றது.பேரணியில் வந்த வர்கள் நாடாளுமன்ற வீதிக்கு வந்தபின் அங்கே தலைவர்கள் உரையாற்றினார்கள்.

தலித் ஒடுக்குமுறை விடுதலை முன் னணியின் தலைவரும் கேரள சட்டமன்ற முன்னாள் சபாநாயகருமான ராதாகிருஷ் ணன் உரையாற்றுகையில்,

மோடி அரசாங்கம், தலித்துகளுக்கு விரோதமான அரசாங்கம் என்று கூறி னார். கடந்த நான்கரை ஆண்டு கால மோடி ஆட்சியில் தலித்துகளுக்கு நீதி வழங்கக்கூடிய விதத்தில் ஒரு நடவ டிக்கையைக்கூட எடுத்திடவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மனுதர்மத்தின் அடிப்படையில் ஆட்சி செய்யும் மோடி அரசாங்கத்தைத் தூக்கி எறிந்திட தொழிலாளர்கள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தலித் ஒடுக்குமுறைவிடுதலைமுன்னணி யின்துணைத்தலைவரானசுபாஷினி அலி, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தலித்துகளுக்கு அளிக்கப்பட்ட உரிமை களைப் பறித்திடும் சூழ்ச்சிகளுக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசி யத்தை விளக்கினார்.

அரசமைப்புச் சட்டத்துக்கு அறைகூவல்!


தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ராமச்சந்திர டோம் பேசுகையில், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தலித்துகள் மீது பல முனைகளில் தாக்குதல் தொடுக்கப்படுகிறது என்றும், டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய மதச்சார்பற்ற, ஜனநாயக அரசமைப்புச் சட்டம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் ஜாதிய, மதவெறி சக்திகளின் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்திருக்கின்றன என்றும், இவற்றுக்கு முடிவு காண் பதற்காகத்தான் இந்தப் பேரணி என் றும், அரசமைப்புச் சட்டத்தைப் பாது காப்போம், தலித் உரிமைகளைப் பாது காப்போம் என்றும் கூறினார். பேரணி-ஆர்ப்பாட்டத்தில் பழங்குடிமக்கள் தேசிய அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிதேந் திர சவுத்ரி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.கே.பிஜு, ஜர்னதாஸ் முதலானவர்களும் உரையாற்றினார்கள்.

9 ஆவது அட்டவணையில் இணைத்திடுக!


ஜாதியம், மதவெறியை எதிர்த்துப் போராட வேண்டும், தலித்,- பழங்குடியி னர் மீதான ஒடுக்குமுறையை நிறுத்த வேண்டும், தலித்,- பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச் சட்டத்தை அமல்படுத்து, தலித்- பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச்சட்டத்தை அரசமைப்புச்சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைத்திடுக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலித்துகள்- பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துக, காலியிடங் களை உடனடியாக நிரப்பிடுக, தலித்,- பழங்குடியினர்பதவிஉயர்வுக்குகிரி மிலேயர்ஷரத்துக்களைஅமல்படுத் தாதே, நிலமற்ற தலித்,- பழங்குடியினருக் குப் போதுமான அளவிற்கு நிலப்பட்டா வழங்கிடு.

துணைத் திட்ட ஒதுக்கீட்டை குறைக்காதே!


தலித்,பழங்குடியினர்துணைத்திட் டத்தின்ஒதுக்கீட்டைக்குறைக்காதே, மக்கள் தொகை சதவீதத்தின் அடிப்படை யில் துணைத் திட்டத்திற்கான தொகையைஒதுக்கிடு,அனைத்துஉயர் கல்வி நிலையங்களிலும் ரோகித் சட் டத்தை அமல்படுத்திடு, சிறையில் வைக்கப்பட்டுள்ள தலித் ஆதரவு செயற்பாட்டாளர்களை விடுதலை செய், தலித்துகளுக்கு எதிராகப் புனையப் பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 200 நாட்களுக்கு வேலை கொடு, குறைந்த பட்சக் கூலியை 350 ரூபாயாக உயர்த்திடு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்து, அனைத்து ஏழை குடும்பத்தினருக்கும் வீடுகள் வழங்கிடு முதலான கோரிக்கைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

- விடுதலை நாளேடு, 21.12.18

உ.பி. சாமியார் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சி!

எதிர்ப்புகள் வெடித்துக் கிளம்புகின்றன


லக்னோ, டிச.21 உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசுப் பணிகளில்  பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் நிலை குறித்து ஆராய, அம்மாநில அரசு நான்கு பேர் கொண்ட சமூக நீதிக் குழுவை அமைத்தது. பணி ஓய்வு பெற்ற அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதி ராகவேந்திரகுமார் தலைமை யில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து ஆராய சமூகநீதிக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை உத்தரப்பிரதேச மாநில அரசிடம் கடந்த அக்டோபரில் அளிக்கப்பட்டது. அவ்வறிக்கை முறையாக வெளியிடப்படவில்லை. அம்மாநில சட்டமன்றத்திலும் வைக்கப்படவில்லை. இந் நிலையில் அக்குழுவின் அறிக்கை பரிந்துரைகள் கசிந்துள்ளன. ஆனால், இப்பிரச்சினைகுறித்து உத்தரப்பிர தேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் கருத்து எதுவும் வெளியிடாமல் அமைதி காத்து வருவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பெரும்பான் மையராக உள்ள வகுப்பினரான யாதவர்கள், குர்மிகள் ஆகியோருக்கான வாய்ப்புகளைக் குறைப்பதற்கு குழு அறிக்கையில் பரிந்துரைத் துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் உத்தி


எதிர்வரும் 2019 தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியை எதிர்கொள்ள, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை யாதவ வகுப்பினருக்கு எதிராக  திரட்டுகின்ற முயற்சியை தேர்தல் உத்தியை பாஜக முன் னெடுத்து வருகிறது.

குழுவின் அறிக்கை இன்னமும் வெளி யிடப்படவில்லை. சட்டமன்றத்திலும் வைக்கப் படவில்லை. ஆனால், கடந்த அக்டோபர் மாதத்திலேயே அரசிடம் அளிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில்,  கசிந்துள்ள குழுவின் அறிக்கை தகவலின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்படுகின்ற 27 விழுக் காட்டை 3 பிரிவுகளாக வகைப்படுத்தி, பிற் படுத்தப்பட்டவர்களுக்கு  7 விழுக்காடு, அதிக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 11 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 9 விழுக்காடு என்று பிரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் 79 ஜாதிப்பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக  9 ஜாதிகளும், அதிக (more) பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக 37 ஜாதிகளும், மிகவும் (most) பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக 33 ஜாதிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 7 விழுக்காடு அளிக் கப்படுகின்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனும் பிரிவில் யாதவ, குர்மி மற்றும் ஜாட்  ஜாதிப்பிரிவுகள் உள்ளன. இந்த ஜாதிகள் அரசியல், சமூக, பொருளாதாரம் மற்றும் கலாச் சார ரீதியில் வலிமையாகவும் அரசுப் பணிகளில் அவர்களுடையவிகிதாச்சாரத்தைவிடகூடுத லாகவாய்ப்புகள்பெற்றுள்ளதாகவும்அரசியல் பிரதிநிதித்துவத்திலும் ஆதிக்கம் செலுத்துவதாக வும் குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், சமூக ரீதியில் ஒடுக்கப்படவில்லை என்றும், அவர் களின் ஜாதியைச் சொல்லிக்கொள்வதில் பெரு மைப்படுபவர்களாக உள்ளனர் என்றும் குழுவின் 400 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜாதிவாரியாக 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்


குர்ஜார், குஷ்வாகா, மவுரியா, சாக்யா, பிரஜாபதி, கதேரியா பால், பாகெல், சாகு, கும்கார், தெலி மற்றும் லோத் உள்ளிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் அதிக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக குழு வகைப்படுத்தியுள்ளது. மேலும் இவ்வகுப்பினர் கலாச்சார ரீதியில் புறக்கணிப்புக்கு ஆளாகவில்லை என்றும், அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளில் பின்னடைவில் உள்ளதுடன், அவர்களின் விகிதாச்சாரப்படி பாதியளவில்கூட பணி வாய்ப்புகள் பெறவில்லை என்றும்  குழுவின் அறிக்கை கூறியுள்ளது. அவர்களில் குறிப்பிட்ட ஜாதியினர் அதிக பணி வாய்ப்புகளை பிற ஜாதியினருடன் ஒப்பிடுகையில், கூடுதலாகப் பெற்றிருக்கிறார்கள். அதன்மூலம் புதிய நடுத்தர வகுப்பு உருவாவதற்கு இடம் ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டள்ளது.

மூன்றாவது வகையினராக, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ளனர். மிகவும் வாய்ப்புகளைப் பெறாதவர்களாகவும், அனைத்து நிலைகளிலும் பெரும்பாலும் கீழ்நிலைகளில் குரூப் 3, குரூப்  4 பிரிவுக்கான பணியிடங்களில் மட்டுமே பெற்றுள்ளதுடன், அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலையில் உள்ளனர். அரசியல்ரீதியிலான அதிகாரங்களில் குறைவாக உள்ளனர். மல்லா, நிஷாத், கேவாட், காஷ்யப் மற்றும் காகர்  ஆகிய ஜாதிகள் இடம்பெற்றுள்ளன. பிந்த், ராஜ்பர், பார், லோனியா, சவ்கான், தீவார் மற்றும் கோஷி ஆகிய ஜாதிப்பிரிவுகள் மூன்றாவது வகைப்பாட்டில் உள்ளடக்கப்படவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்ட ணியிலுள்ள அமைப்பாகிய சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் கோரிக்கையின்படி, அம்மாநில முதல்வர் சாமியார் ஆதித்யநாத் இடஒதுக்கீடு அளிக்கப்படுகின்ற பிற்படுத்தப்பட்டவர்களை வகைப்படுத்துவதற்காக குழுவை அமைத்தார்.

சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலை வரும், உத்தரப்பிரதேச மாநில அமைச்சருமாகிய ஓம் பிரகாஷ் ராஜ்பர் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும்வரை போராட்டத்தை நடத்துவோம் என்கிறார்.

அவர் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக் கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவரு டைய கட்சியின் சார்பில் 24.12.2018 அன்று மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தக்கோரி பரப்புரை நடை பெறுகிறது.

அகிலேஷ் கண்டனம்


மேனாள்முதல்வர் அகிலேஷ் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களை  தொடர்ச்சியாக சந்தித்து, ஒருங்கிணைத்து வருகிறார். 85 விழுக்காட்டினரை தவறாக வழிநடத்தக்கூடிய சதி என்று மாநில அரசின் செயல்பாட்டை கண்டித்துள்ளார்.

அனைத்து பிரச்சினைகளிலும் பாஜக தோல்வி அடைந்துவிட்டது. தற்பொழுது பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்கிறது. பாஜக  பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மட்டுமே பேசி வருகிறது. அனைத்து வகுப்பினரின் எண்ணிக்கையையும் கணக் கெடுக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். சப்கா சாத் சப்கா விகாஸ் என்று பாஜக கூறிவருகிறது.

அந்தந்த வகுப்பினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப மதிக்கப்படுவதற்கும் உரிமைகள் பெறு வதற்கும் உரிமை உள்ளது. 2001ஆம் ஆண்டில் ராஜ்நாத் சிங் ஆட்சியில் இதேபோன்று அறிக்கை வெளியானது. அப்போதும் அவ்வறிக் கையின்மூலம்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை 3  வகையினராக பிரித்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 5 விழுக்காட்டினராக உள்ள யாதவ வகுப்பினரை தனித்து விட்டது. இப்போதும் அதுபோன்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அவ்வறிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது ஏனென்றால், தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துவிடும். அதுமட்டுமன்றி நீதிமன்றத் தடையும் உள்ளது என்று செய்தி யாளர்களிடையே அகிலேஷ் தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு, 21.12.18

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பொருளாதார இடஒதுக்கீடு சாத்தியமற்றது!- பேரா. ஜெயரஞ்சன்-


இந்தியப் பொருளாதாரத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர் பேராசிரியர் ஜெயரஞ்சன். 'இந்தியப் பொருளாதார மாற்றம்', 'கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்' உள்ளிட்ட பல்வேறு நூல்கள் எழுதி யுள்ளார். பொருளாதார முறையிலான இடஒதுக்கீடு, சமத்துவமற்ற சமுதாயத்தை ஏற்படுத்திவிடும் என்கிறார்.


இடஒதுக்கீடு என்றால், இருப்பதைப் பங்கிட்டுக் கொள்வது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அது அப்படி அல்ல. ஏழ்மை, வறுமையில் இருப்பவர்களுக்கு உதவும் திட்டமும் கிடையாது. அப்படி யென்றால் இட ஒதுக்கீட்டின் நோக்கம்தான் என்ன?

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்ட வர்கள் அதிகாரத்திற்கும் ஆளுமை நிலைக் கும் வரமுடியவில்லை. அப்படித்தான் சுதந்திரம் அடைவதற்கு முன்பு, இந்தியாவில் அவர்களின் நிலை இருந்தது. இவ்விரு சமுதாயத்தினரும் அதிகாரம், ஆளுமை நிலைக்கு வர முடியவில்லை என்பது, இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய கேடு என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள், அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க முடிவெடுத்தனர். இரு பிரிவு மக்களின் பங்களிப்பும் ஆட்சி, அதிகாரத்தில் இருக்க வேண்டும் என நினைத்தனர்.

அதன்படி அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சிலர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் அந்த ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலாக ஒலிப்பார்கள். அவர்கள் கொள்கை வகுக்கும் இடத்திலும் இருப்பார்கள். அதற் காகத்தான் இடஒதுக்கீடு கொண்டு வரப் பட்டது. அதன் அடிப்படையில்தான் நாடாளுமன்றத்தில் இத்தனை தலித் உறுப்பினர்கள், இத்தனை பிற்படுத்தப் பட்டோர் உறுப்பினர்கள் என நிர்ணயிக்கப் பட்டது. இதே அடிப்படையில்தான் ஆட்சி நிர்வாகத்தை மேலாண்மை  செய்யும் அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின்பு இந்திய அரசிய லமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட போது, அதன் தலைவராக டாக்டர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். இந்தியா வில் அனைவரும் சமம், எதன் பொருட்டும் வேற்றுமை இருக்கக் கூடாது. மதம், மொழி, இனம், சாதி உள்ளிட்ட காரணிகளால் மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டை அம்பேத்கர் எடுத்தார். ஏனெனில், அதற்கு முன்பு இந்தியாவில் மக்களிடையே மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு நிலவி வந்தது. சிறுபான்மையாக இருந்த மக்கள் வசதியாகவும் பெரும் பான்மையாக இருந்த மற்றொரு தரப்பு மக்கள் வசதியின்றியும் இருந்தனர். அந்த நிலையைப் போக்கி, அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கப் போராடினார் டாக்டர் அம்பேத்கர். இந்த முரணை சீர்ப்படுத்த இட ஒதுக்கீடு கொள்கைதான் சரியான பாதை என அம்பேத்கர் வாதிட்டார்.

வர லாற்றில் வாய்ப்பு மறுக்கப்பட்ட வர்கள் மூன்று பிரிவினராக கருதப்பட் டனர்.

முதலில் தீண்டத்தகாதவர்களாக கருதப் பட்ட பட்டியல் இனத்தவர்கள். அவர்கள் பெரும்பான்மையான சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்ததால், அரசின் எந்த வளர்ச்சித் திட்டங்களும் சலுகை களும் அவர்களுக்குக் கிடைக்காமல் இருந்தது.

இரண்டாவது, பழங்குடியினர். இவர்கள் பெரும் சமுதாயத்தினரிடம் இருந்து முழுமையாக ஒதுங்கியிருந் தவர்கள். தனித்தீவாக, அரசுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒதுங்கி வாழ்ந்த வர்கள்.

மூன்றாவது, பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், இதர பிற்படுத்தப் பட்டோர் ஆகியோர்களை உள்ளடக்கிய பிரிவினர். இவர்கள் சமூக நிலையிலும் கல்வியிலும் பின்தங்கியிருந் தவர்கள்.

அம்பேத்கர் காலத்திலேயே பொருளா தார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண் டும் என குரல் எழுந்தது. இதுபற்றி பிரதமர் நேரு முன்னிலையில் நாடாளுமன்றத்தில் விவாதம் வந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் இடஒதுக்கீடு தேவைதானே என்ற வாதம் வைக்கப் பட்டது. அப்போது பேசிய அம்பேத்கர், 'இந்தியாவில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களிலும் 80 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர். அவர்கள் அனைவரையும் இட ஒதுக் கீட்டின் கீழ் கொண்டுவருவது சாத்திய மற்றது. மேலும், எந்த நோக்கத்திற்காக இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கு எதிராக அது அமைந்துவிடும் என்று தெளிவுபடுத் தினார். - ஆனால், எஸ்.சி., எஸ்.டி., பி.சி. உள்ளிட்ட வழக்குகள் உயர் நீதிமன்றங் களில் அல்லது உச்சநீதிமன்றத்தில் வரும் போதெல்லாம் நீதிபதிகள், தங்கள் தீர்ப்புகளின்போது சமூகம், கல்வி ஆகிய நிலைகளுடன் பொருளாதார நிலையை யும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண் டும் என்ற கருத்தை மூன்றாவதாக முன் வைக்கத் தவறுவதில்லை . இதுதொடர்பாக, பல் வேறு மாநிலங்களில் பிற்படுத்தப்பட் டோர் ஆணையம் பிரதிவாதங்களை முன் வைத்தபோது, தமிழக அரசின் சட்டநாதன் ஆணையம் தெளிவாக தன் நிலைப் பாட்டை தெரிவித்து விட்டது. சமூக நிலைப்படிதான் இடஒதுக்கீடு கடைபிடிக் கப்படும் என்று தெளிவுபடுத்திவிட்டது.

இந்த நிலையில் பொருளாதார அடிப் படையில் இடஒதுக்கீடு என்ற குரல் எப் படிக் கேட்கிறது. இப்போது இடஒதுக்கீடு கேட்டு குஜராத், மகாராஷ்டிரம், தெலுங் கானா உள்ளிட்ட மாநிலங்களில் போராடு பவர்கள் யார்?

அவர்கள் எல்லாம் உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள். பல ஆண்டுகளாக அவர்கள் தங்கள் விளைப்பொருட்களுக்கு நல்ல விலை வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி மத்திய அரசு, விவசாயிகளின் விளை பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க வில்லை. மேலும், ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்பதும் புஸ்வாணமாகிப் போனது. பா.ஜ.க.வின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சி யில் 10 லட்சம் வேலைவாய்ப்பைக்கூட உருவாக்க முடியவில்லை. இதனால் ஒவ்வொரு வருடமும் நஷ்டத்தை யே சந்தித்த வடமாநில விவசாயிகள், மத்திய அரசைப் பார்த்து, ‘எங்களுக்கு வேலை கொடு' என கொதிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாத மத்திய அரசு, சூடான பிரச்சினையை திசை திருப்ப இரண்டு விவகாரங்களை கையில் எடுத்துக்கொண்டது. ஒன்று, இந்துத்வா, மற்றொன்று பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு.

பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு கொடுத்தால் இந்தப் பிரச்சினை சரியாகி விடுமா? விவசாயத் தொழிலில் நட்டம் என்றால், அதனைத் தீர்க்க, அந்தத் தொழிலை லாபகரமாக்க மத்திய அரசுதான் சரியான கொள்கைகளை, திட்டங்களை வகுக்க வேண்டும். அது போல வே, வேலை வாய்ப்புகளையும் உருவாக்க அரசு முன் வர வேண்டும். சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் வறுமையில் வாடினால், அவர்களின் முன்னேற்றத்திற்குத் தேவை யான திட்டங்களை வகுத்து மேம்படுத்த வேண்டுமே தவிர, அவர்களையும் பொரு ளாதார நிலையைக் காட்டி இட ஒதுக் கீட்டிற்குள் கொண்டு வரக்கூடாது. ஏற் கெனவே அந்த இடஒதுக்கீட்டுக்குள் இருப் பவர்களுக்கு முழுமையாக பயன் சென்ற டையாதபோது, மேலும் கடுமையான பாதிப்பு ஏற்படும்.

நிறைவாக, சமுதாய ஏற்றத்தாழ்வுகளைச் சீராக்க கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு முறையில் பொருளாதாரக் காரணிகளை உள்ளே புகுத்தினால் எந்த நோக்கத்திற்காக இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் சிதைக்கப்பட்டு விடும். நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற் கான ஏற்றத்தாழ்வு சமுதாயத்தில் ஏற்பட்டு விடும்.

- நன்றி: ‘குமுதம் ரிப்போர்ட்டர்’, 30.11.2018

- விடுதலை ஞாயிறு மலர்,8.12.18

புதன், 19 டிசம்பர், 2018

தெலங்கானாவில் இடஒதுக்கீட்டுக்கு உச்சவரம்பு

அய்தராபாத், டிச. 17- தெலங்கா னாவில் உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடியினத்தவர் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்யும் அவசர சட்டத்தை அந்த மாநில அரசு பிறப்பித்து உள்ளது.

தெலங்கானா உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இடஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பை 67 சதவீதமாக உயர்த்த அந்த மாநில சட்டப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் சட்டமியற் றப்பட்டது. இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு 34 சதவீதத்துக்கு குறையாமல் இருக்க அச்சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசா ரித்த அய்தராபாத் உயர்நீதிமன் றம், எஸ்சி, எஸ்டி, இதர பிற்ப டுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தெலங் கானா அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்த உச்சநீதிமன்றம், தெலங் கானா அரசின் மனுவை தள்ளு படி செய்தது.

இதனிடையே, உயர்நீதி மன்றத்தின் உத்தரவுபடி, ஜன வரி 11-ஆம் தேதிக்குள் உள் ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், இட ஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீ தத்துக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அவசரச் சட்டத்தை, தெலங்கானா அரசு பிறப்பித்துள்ளது.

- விடுதலை நாளேடு, 17.12.18

வெள்ளி, 14 டிசம்பர், 2018

மத்திய அரசுத் துறைகளில் இடஒதுக்கீட்டின் நிலை என்ன?

மத்திய அரசுப் பணியிடங்களில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் 1.1.2012 வரை 16.55 விழுக்காடும், 1.1.2016 வரை 21.57 விழுக்காடும் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 1993ஆம் ஆண்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசுப்பணியிடங்களில் 27 விழுக்காடு அளிக்கப்பட வேண்டும் என்பது நடைமுறைக்கு வந்தது. ஆனால், தொடர்ச்சியாக பின்பற்றப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் எழுத்துமூலமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மத்திய அரசுப்பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு  மண்டல் குழு பரிந்துரையின்படி நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், தொடர்ச்சியாக மத்திய அரசுப்பணிகளில் 27 விழுக்காடு நடைமுறைப்படுத்தப்படாத சமூக அநீதி அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. (கல்வியில் இடஒதுக்கீடு 2006 முதல்தான் செயல்பாட்டுக்கு வந்தது)

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:

மத்திய அரசுப்பணிகளில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு கடந்த 1.1.2012 அன்று 16.55 விழுக்காடு மட்டுமே அளிக்கப்பட்டது. 1.1.2016இல் சற்று கூடுதலாகி 21.57 விழுக்காடு அளிக்கப்பட்டது.

மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கான பிரதிநிதித்துவம் அளிக்கும்வகையில் 1993ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 27 இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதிலிருந்து, அதன்பிறகு அதைவிட குறைவாகவே  வழங்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசுப்பணிகளில் பட்டியல் வகுப்பினருக்கு 15 விழுக்காடு, பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். 1.1.2016 தேதி வரை மத்திய அரசுப்பணிகளில் இடஒதுக்கீட்டின்படி பணி நியமனங்கள் குறித்து 78 அமைச்சகங்களிலிருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்களின்படி, பட்டியல் இனத்தவர்களுக்கு 17.49 விழுக்காடும், பழங்குடியினத்தவர்களுக்கு 7.47 விழுக் காடும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 21.57 விழுக்காடும்  அளிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசின் 10 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில்  90 விழுக்காட்டளவில் பணியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் ஏற்கெனவே நிரப்பப்படாத இடங்களாக 92,589 உள்ளன. அவற்றில் 1.1.2017 வரை நிரப்பப்பட வேண்டிய ஒதுக்கீட்டுப்பணியிடங்கள் 63,876 ஒதுக்கீட்டின்படி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

மத்திய அரசு பணியாளர்  மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து அமைச்சகங்கள், அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது. அச்சுற்றறிக்கையின்படி, ஒதுக்கீட்டின்படி நிரப்பப்பட வேண்டிய பணியிடங்கள்குறித்துஆராய்ந்திட ஒரு குழுவை அமைத்திட வேண்டும். நீண்ட காலமாக ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அதில் உள்ள தடைகளைக் களைந்திட வேண்டும். மேலும், அதற்கெனவே தனியே பணிநியமன முன்னெடுப்புகளை செய்திட வேண்டும்" என்று மக்களவையில் எழுத்து மூலமாக அளிக்கப்பட்ட அறிக்கையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் குறிப்பிட்டுள்ளார்.

இடஒதுக்கீடு சட்டப்படி இருந்தும் செயல்படுத்துவதில் எந்தளவு அநீதி தலைதூக்கி நிற்கிறது என்பதற்கு மத்திய அமைச்சரே இதன் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டார்.

வேலை வாய்ப்பில் அளிக்கப்பட்ட புள்ளி விவரம் இது. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப் பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் எந்தளவு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் முக்கியமாகும். எதிர்க் கட்சியினர் இது குறித்தும்  தகவலைப் பெற்றுத் தருவதற்கு உரிய வகையில் முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சட்டங்களும், ஆணைகளும் ஏட்டுச் சுரைக் காய்களாக இருந்து  பயனில்லை. சமூக நீதியாளர்கள் மத்தியில் மேலும் விழிப்புணர்ச்சி தேவை; அந்தப் பலம்தான் சட்டத்தை காயடிக்கும் உயர் ஜாதி மனப்பான்மையினரிடம் அச்சத்தை ஏற்படுத்தும்.
- கவிஞர் கலி.பூங்குன்றன்