பக்கங்கள்

மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூலை, 2024

பாட்னா மாநாடு: கொட்டும் மழையிலும் கலையாத 2 லட்சம் மக்கள்

 

சனி, 29 ஜூன், 2024

டில்லியில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாநாடு

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (335)

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் மார்ச் 16-31, 2024

டில்லியில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாநாடு

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள், சிறுபான்மையர் ஆகியோரின் தேசிய ஒன்றியம் நடத்திய மாநாடு 2004, டிசம்பர் 9இல் காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மிகச் சிறப்பாக டில்லி மல்கோத்ரா மைதானத்தில் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்

மாநாட்டிற்கு மேனாள் மத்திய கல்வி அமைச்சர் டி.பி. யாதவ் தலைமை வகித்தார். கருநாடகத்தில் இருந்து திரு.லட்சுமி சாகர், திருமதி இந்திரா ஜெயராமன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திருமதி டாக்டர் சாந்த்வானா அலு மற்றும் கப்பாஸ், தமிழ்நாட்டில் இருந்து சுப. சீதாராமன், கழகப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு, ஆந்திராவில் இருந்து ஜெய்பால், அரியானாவில் இருந்து சாந்த், உ.பி. மாநிலத்தில் இருந்து முகமது அப்துல்லா, ஹீராலால், மோதிலால் சாஸ்திரி, கேரளாவில் இருந்து ராமதாஸ் கதிரூர் முதலியவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

வாய்ப்பு மறுக்கப்பட்டோர், சமூகநீதிப் போராட்டத்தை மற்றொரு விடுதலைப் போராட்டத்தைப் போல் நடத்தவேண்டும் என்றனர்.
கூடியிருந்தவர்களில் கணிசமான ஒரு பகுதி மகளிர் ஆவர்.

இந்த மாநாடு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லுவோம் என்ற முழக்கத்துடன் நடைபெற்ற மாநாடு.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. அரசுப் பணிகளில் தற்போது அளிக்கப்பட்டு வரும் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அளவு தற்போதைய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி சிறுபான்மை மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்தப்பட வேண்டும்.

2. மக்கள் தொகைக்கு ஏற்ற கல்வி வாய்ப்பு பெற, உயர் கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்வி
நிலையங்களின் மாணவர் சேர்க்கையிலும் இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மாநாட்டில் தலைவர்களுடன் ஆசிரியர்

3. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீடு முறை அரசுத்துறை, தனியார்துறை, மின்னணுவியல் துறை, பத்திரிகைச் செய்தித்துறை அமைப்புகள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

4. தாழ்த்தப்பட்ட பழங்குடி, மக்கள் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள அதே அரசமைப்புச் சட்ட அந்தஸ்து பிற்படுத்தப்பட்ட மக்கள் கமிஷனுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

5. ராணுவத் துறை, மத்திய மாநில அரசுகளின் போலீஸ் மற்றும் பாதுகாப்புத் துறை நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளும் இடஒதுக்கீட்டு முறைப்படி செய்யப்பட வேண்டும்.

6. நகராட்சி, பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முறையில் உள்ளாட்சி மன்றங்களில் உள்ளதைப் போல, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் தொகைக்கு ஏற்றவாறு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

7. அமைச்சர்கள், ஆளுநர்கள், அயல்நாட்டுத் தூதர்கள், ஹை-கமிஷனர்கள், கமிஷன்களின் உறுப்பினர்கள், அரசுக் கழகங்களின் உறுப்பினர்கள் ஆகிய நியமனங்களிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
8. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி சிறுபான்மை மக்கள் தங்கள் மக்கள்தொகைக்கேற்ப முன்னேற்றத்தை எட்டும் வரை, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்னும் ‘கிரீமிலேயர்’ கொள்கை நடைமுறைப்படுத்தப்படக் கூடாது.

9. பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் கமிஷனின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கட்டாயமாக இந்தப் பிரிவு மக்களிலிருந்தே நியமிக்கப்பட வேண்டும்.

10. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீட்டு முறையின்படி பொது மற்றும் தனியார் நிறுவன நியமனங்கள் மற்றும் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரையிலான உறுப்பினர்களில் 50 விழுக்காடு பெண்களுக்குச் சட்டப்படி அளிக்கப்பட வேண்டும்.

11. உயர்நீதி மன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்ய தேசிய நீதிக்கமிஷன் ஒன்று அமைக்கப்படவேண்டும். இந்தக் கமிஷன் உறுப்பினர் நியமனத்திலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கான பிரதிநிதித்துவம் இருப்பது உறுதிப்படுத்தப்படவேண்டும்.

12. சட்ட அதிகாரிகள், சட்ட ஆலோசகர்கள், பொதுத்துறை, தனியார் துறைகளில் அரசு வழக்குரைஞர்கள் (ஸ்டாண்டிங் கவுன்சில்) நியமனங்களிலும் இடஒதுக்கீடுச் சட்டம் உடனடியாகப் பின்பற்றப்பட வேண்டும்.

13. இடஒதுக்கீடு முறையை சரியாக நடைமுறைப்படுத்துவோருக்குப் பதவி உயர்வும், தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் தகுந்த ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.

14. சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களின் நல்வாழ்விற்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்கள் பற்றி பத்திரிகைச் செய்தி, தொலைக்காட்சித் துறைகள் மூலமாகப் பரவலாக விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

15. 2005ஆம் ஆண்டில் ஜாதிகளின் அடிப்படையில் தனி மக்கள் தொகைக் கணக்கீடு ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.

16. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

17. பல்கலைக் கழக மான்யக் குழுத் தலைவர் உதவித் தலைவர் பணியிடங்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். தலைவர் மற்றும் உதவித் தலைவர் பணியிடங்கள் இந்தப் பிரிவு மக்களைக் கொண்டே கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும்.

18. மேற்கண்ட பிரிவுகளிலான இடஒதுக்கீட்டு முறையைப் பாதுகாக்க, ஓர் ஒருங்கிணைந்த சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும்.

ஆகிய 18 கோரிக்கைகளை மாநாட்டின் தீர்மானங்களாக நாம் முன்மொழிந்தோம். அதை கூடியிருந்த அனைவரும் கைகளை உயர்த்தி ஒரு முறை, பலத்த கைதட்டல் மூலம் (மற்றொரு முறை என்று) ஒரு மனதாக நிறைவேற்றினர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்ய ஒரு குழுவும் ஆயத்தமாகி பல்வேறு மாநிலங்களிலும் மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சமூக நீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித், கருநாடக மகளிர் சார்பில் திருமதி ஜெயராமன், மாநாட்டுத் தலைவரும் நேஷனல் யூனியன் தலைவருமான மேனாள் எம்.பி. டி.பி. யாதவ் ஆகியோர் வழிமொழிந்தும் விளக்கியும் பேசினர்.

“நிறைவாக எமது உரையில், “உரைகள் நிகழ்த்தும் காலம் இனிமேல் முக்கியமல்ல, செயல்தான் முக்கியம். இடஒதுக்கீடு இரக்கத்தால் பெறுவது அல்ல; அது சமத்துவத்துக்கான உரிமை ஆகும். அதைப் பெறும் வகையில் ஆட்சியாளர்களைச் செயல்பட வைக்கவேண்டும்” என்று வலியுறுத்தினோம்.
அதற்குப் பின்பு சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின் சார்பில் விண்ணப்பம் ஒன்றை மத்திய அரசுக்கு அளிக்க நாடாளுமன்றம் நோக்கிச் சென்றபொழுது, அது தடை செய்யப்பட்டது. தடையை மீறிச் செல்ல முயன்றதால், சந்திரஜித் ஆகியோர் தலைமையில் சுமார் 10,000 பேர் கைது செய்யப்பட்டோம்.
கழகத்தின் சார்பில் 30 தோழர்களும், தோழியர்களும் கைதாயினர். பின்பு மாலை 5 மணிக்கு அனைவருமே விடுதலை செய்யப்பட்டோம்.

( கட்டுரையின் ஒரு பகுதி)

சனி, 7 செப்டம்பர், 2019

கவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்






ற்கு சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் மன்றத்தின் நிர்வாக அறக்கட்டளையாளரும், உச்சநீதிமன்ற முதுநிலை வழக்குரைஞருமான சுப்பாராவ் தலைமை வகித்தார். நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி,

டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து.ராஜா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள உறுப்பினர் ஜெயபிரகாஷ் நாராயண் யாதவ் ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரை வழங்கினர். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் சமூகநீதிக்கான அறைகூவல்கள் பற்றியும், எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும், ஆழமான கருத்துச் செறிவுடன் கூடிய உரையினை ஆற்றினார்.

தலைமை தாங்கிய முதுநிலை வழக்குரைஞர் சுப்பாராவ் உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதி நீதிபதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதி வழங்குவதில் காட்டி வரும் மெத்தனப் போக்கு, அக்கறை அற்ற தன்மை பற்றிய தனது நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சில், சமூக நீதித் தத்துவத்திற்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கல்வி வள்ளல் காமராசர் ஆற்றிய பங்களிப்பின் சிறப்புப்பற்றி  குறிப்பிட்டார். அரசியலமைப்புச் சட்ட முதல் திருத்தத்தின் மூலம் நாடு முழுவதும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்திட தந்தை பெரியார் காரணமாக அமைந்தார். இன்று ‘பொருளாதார அடிப்படையில்’ அரசியலமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்புக்குப் புறம்பாக உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு (?) 10 விழுக்காடு இடஒதுக்கீடு கொண்டு வந்த சட்டத்தினை, ஆணையினை எதிர்த்து தி.மு.க சார்பில் முதன்முதலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுப் பேசினார்.


  து.ராஜா எம்.பி., (சி.பி.அய்.)

நாடாளுமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து.ராஜா பேசும்பொழுது, இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை, கோரிப் பெறவேண்டியதில்லை என எழுச்சியுடன் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உரையாற்றும் பொழுது பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்றார். மேலும் ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 8 லட்சம் என்பது பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு பெற பாதகமாகவும், உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சாதகமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ள ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சியான அணுகு முறைப்பற்றிக் கூறினார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிந்தனையாளர்கள்


தமிழர் தலைவர் தமது நிறைவுரையில் குறிப்பிட்டதாவது:

‘‘பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உரிமைக்குப் 10 ஆண்டு காலத்திற்கும் மேலாகப் போராடி பெற வேண்டியிருந்தது. ஆனால் இன்று உயர்ஜாதியினர் இடஒதுக்கீட்டிற்கு வலுவில்லாத சட்டத்திருத்தத்தினை ஒரு வாரக் காலத்தில் நடைமுறைப்படுத்தியது எப்படி? அடக்குமுறை, ஆதிக்கம் நிறைந்த அரசியல் ஆட்சியாளரான மோடியின் ஒரு தலைப்பட்சமான அணுகுமுறையினையே இது வெளிப்படுத்தியுள்ளது.

இடஒதுக்கீட்டைத் தொடங்கியது இன்றைய காலத்தில் அல்ல; பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வர்ண அடிப்படையில், ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது மனு _ மனுஸ்மிருதி. அந்தப் பாகுபாட்டைக் களைந்திட இன்று கோரப்படுவது நேர்மறை இடஒதுக்கீடு _ சரி செய்ய இட ஒதுக்கீடு தொடங்கியது. பாகுபாட்டைத் தொடங்கிய ஆதிக்க மனநிலை இன்றும் ஆட்சியாளரிடம் தொடர்கிறது என்பதற்கு அடையாளம்தான்  103 ஆம் அரசமைப்புச் சட்ட திருத்தமாகும் (2019). பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை உயர்ஜாதியினருக்குக் கொண்டு வரும் இந்த சட்டத்தை நீதிமன்றத்திலும் சந்திப்போம்; வீதிமன்றத்திலும் ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்துப் போராடுவோம்’’ என்று ஆசிரியர் அவர்கள் தமது நிறைவுரையை முடித்தார்.

கருத்தரங்க நிகழ்ச்சியினை கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு) ஒருங்கிணைத்துத் தொகுத்தளித்தார்.

நிறைவாக திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் நன்றி கூறினார்.

பல தரப்பட்டவர்களும், பெருந்திரளாகக் கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தனர்.

இந்த நிகழ்வின் விருதாளர் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பங்களிப்பு இல்லையெனில், மண்டல் பரிந்துரைகள் நடைமுறையாக்கம் காணுவது அதிகார நிலையிலேயே தடைபட்டு தாமதமாகி இருக்கும். மண்டல் பரிந்துரைகள் வெளிச்சம் காண உதவியாக  இருந்தார்



2018 ஆம் ஆண்டு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குனர் டாக்டர் சோம. இளங்கோவன் டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கினார்.

சமுக நீதிக்கான கி.வீரமணி விருது


புதுடில்லியில் அரசமைப்புச் சட்ட மன்றத்தில்  (Constitution Club) உள்ள துணை சபாநாயகர்  (Deputy Speaker) அரங்கில் 2018 ஆம் ஆண்டுக்கான “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’’ வழங்கும் விழா நடைபெற்றது. அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் பெரியார் பன்னாட்டு மய்யம் ஒவ்வொரு ஆண்டும் “சமூகநீதிக்காகப் பாடுபட்ட சான்றோர், போராளிகள், தலைவர்களுக்கு சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை வழங்கி வருகிறது.

1996ஆம் ஆண்டு விருது வழங்குவது தொடங்கப்பட்டு, இதுவரை 2018 ஆம் ஆண்டுக்கான விருதுவரை மொத்தம் 10 பெருமக்களுக்கு சமூகநீதி விருது வழங்கப்பட்டுள்ளது. நாடு, மொழி, இனம் பாகுபாடு எதுவும் இன்றி, இந்தியாவில், தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராட்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களைச் சார்ந்த தலைவர்களுக்கும், சிங்கப்பூர், மியான்மா, குவைத், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சமூகநீதிக்குப் பங்காற்றிய பெருமக்களுக்கும் இதுவரை விருது வழங்கப் பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான விருது மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி சமூகநீதி வழங்குவதற்கு அளப்பரிய பங்களித்த ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

புதுடில்லியில் 5.2.2019 அன்று பிற்பகல் நடைபெற்ற சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு, இந்த விருதினை 2009 ஆம் ஆண்டு வழங்கப் பெற்றவரும், கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவரும், கருநாடக மாநில அரசின் மேனாள் அட்வகேட் ஜெனரல் பேராசிரியர் ரவிவர்ம குமார் தலைமை வகித்தார்.

விருதினை நிறுவிய பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் சமூகநீதிக்கான வீரமணி விருது நிறுவப்பட்ட வரலாறு, விருது வழங்கப் படுவதன் நோக்கம்பற்றி எடுத்துக் கூறி, 2018 ஆம் ஆண்டுக்கான விருதினை பி.எஸ்.கிருஷ்ணனுக்கு வழங்கப்படுவதன் சிறப்புப்பற்றி உரையாற்றினார்.

விருது வழங்கல்

ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.  அதிகாரி பூபீந்தர்சிங் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.

2018ஆம் ஆண்டு சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை’ (K.Veeramani Award for Social Justice) பணி நிறைவு பெற்ற, மத்திய அரசின் மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்குப் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் விருதுக் குழுவின் சார்பாக டாக்டர் சோம.இளங்கோவன் வழங்கினார்.

பெரியாரின் இயக்கம்தான் மண்டல் குழு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட நாடு தழுவிய அளவில் 42 போராட்டங்களையும், 16 மாநாடுகளையும் நடத்தியது.  1990ஆம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமரானபொழுதுதான் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


விருது மடலினையும், விருதுத் தொகையான ரூ.1 லட்சத்திற்கான வங்கி வரைவோலையும் வழங்கப்பட்டது. விருது வழங்கப்பட்டபொழுது பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையர் இருவருக்கும் சேர்த்து சிறப்பு செய்யப்பட்டது. அவர்களது மகளும் உடன் இருந்தார். விருது வழங்கப்பட்ட பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

விருது வழங்கும் நிகழ்வின் சிறப்புரையினை மத்திய அரசின் மேனாள் செயலாளரும், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் பூபீந்தர்சிங் வழங்கினார்.

தமிழர் தலைவரின் பாராட்டுரை

நிறைவாக விருது பெற்ற பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சமூகநீதிக்காக ஆற்றிய பணிபற்றி எடுத்துக்கூறி, பாராட்டித் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

அவர் தமது பாராட்டுரையில் குறிப்பிட்டதாவது:

சமூகநீதிக்கான விருதினை பெரியார் பன்னாட்டு மய்யம், என்னுடைய பெயரில் நிறுவிய நேரத்தில், நான் எனது பெயரில் விருது அமையப் பெறுவது வேண்டாம்; சமூகநீதிக்காக களம் அமைத்து 95 ஆண்டுகாலம் போராடிய தந்தை பெரியாரது பெயரில்தான் விருது அமையப் பெறவேண்டும் என அழுத்தமாக எடுத்துக் கூறினேன்.

தந்தை பெரியார் போற்றி காத்து வந்த சமூகநீதிச் சுடரை, அவர்தம் கொள்கையினை, அவரது காலத்திற்குப் பின் யார் எடுத்துச் செல்லுகிறார்கள் என்பதை உலகினர் அறிந்து கொள்வதன் பேரில் ஓர் அடையாளமாக எனது பெயரில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான டாக்டர் சோம.இளங்கோவன் மற்றும் டாக்டர் இலக்குவன்தமிழ் ஆகியோர் கூறினர். விருது பெயரில் தந்தை பெரியாரும், அவர் ஏற்றிப் பாதுகாத்திட்ட சமூகநீதிக் கொள்கையும் உள்ளடக்கம் என விளக்கமளித்தனர்.

சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழாவில் மாநிலங்களவை உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள்,  பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர் (டில்லி, 5.2.2019).

1978இல் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பணியினை மண்டல் அவர்களுக்கு மத்திய அரசு வழங்கியது. நாடெங்கும் பயணம் செய்து குழுவின் தலைவர் மண்டலும், குழுவின் உறுப்பினர்களும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கருத்தறிந்து, உண்மை நிலைபற்றி ஆய்வு செய்து 1980ஆம் ஆண்டில் அறிக்கையை அளித்தனர். அரசிடம் அளிக்கப்பட்ட மண்டல் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையினைப் பிரசுரிக்க, பலவிதமான தடைகளை அதிகார வர்க்கத்தினர், அரசியல்வாதிகளில் உயர்ஜாதியினர் ஏற்படுத்தினர். பெரியாரின் இயக்கம்தான் மண்டல் குழு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட நாடு தழுவிய அளவில் 42 போராட்டங்களையும், 16 மாநாடுகளையும் நடத்தியது.  1990ஆம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமரானபொழுதுதான் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த சமயம் அதிகார நிலையில்  அரசின் செயலாளராக இருந்து நிலவி வந்த நடைமுறைக்கான தடைகளைக் களைந்து பரிந்துரைக்கு ஆதரவாக இருந்து சமூகநீதிக் கொள்கைபற்றிய புரிதலுடன், அவசியம் கருதி உறுதுணையாக இருந்தார்- இந்த நிகழ்வின் விருதாளர்  பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பங்களிப்பு இல்லையெனில், மண்டல் பரிந்துரைகள் நடைமுறையாக்கம் காணுவது அதிகார நிலையிலேயே தடைபட்டு தாமதமாகி இருக்கும். மண்டல் பரிந்துரைகள் வெளிச்சம் காண உதவியாக  இருந்தார் _ பணி நிறைவு பெற்ற நிலையிலும் சமூகநீதிப் பணிகளில் அக்கறைகாட்டிப் பாடுபட்டு வருபவர் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி வகுப்பினர் மேம்பாட்டுக்காக இன்றளவும் பாடுபட்டு வருகிறார். சமூகநீதிக்கான அறைகூவல்கள் எழும்பொழுதெல்லாம் உரிய வகையில் விளக்கமளித்து, தனது அதிகார வர்க்கப் பணியில் கிடைக்கப் பெற்ற அனுபவங்கள் வாயிலாக உண்மை நிலையினை உணர்த்தி வருகிறார். தற்பொழுது மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள உயர்ஜாதியினரில் ஏழை(?)களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடுபற்றிய கருத்தினையும் கூறி, இட ஒதுக்கீட்டுக் கோட்பாடு ஒடுக்கப்பட்டோருக்கான கோட்பாடு; உயர்ஜாதியினருக்கானது அல்ல என்று குரல் கொடுத்து வருகிறார். இப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டுவரும் பி.எஸ்.கிருஷ்ணன் முற்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர். அப்படிப்பட்டவரின் ஓய்வு என்பது தனது அரசுப் பணிக்குத்தான், தான் குரல் கொடுத்துவரும் சமூகநீதிக் கொள்கைக்கு அல்ல என்பதாகும். உடலால் சற்று முதுநிலை அடைந்தாலும், உள்ளத்தால் இளைஞரைப் போல சமூகநீதிக்காகப் பணியாற்றிவரும் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களைப் போற்றிப் பாராட்டுகிறோம். அவரது பணி தொடர்க என வாழ்த்துகிறோம். இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

கலந்து கொண்டோர்

சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கப்படும் விழா விற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

டி.கே.எஸ்.இளங்கோவன், து.ராஜா, அரிபிரசாத் மற்றும் சமூகநீதிக்கான வழக்குரைஞர் சங்கத்தின் நிர்வாக அறக்கட்டளையாளர் _ உயர்நீதிமன்ற முதுநிலை வழக்குரைஞர் சுப்பாராவ், வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், மத்திய அரசின் மேனாள் உயரதிகாரிகள், டில்லி மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியப் பெருமக்கள், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த திராவிடர் கழக வழக்குரைஞர்கள், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் எனப் பலதரப்பட்டோரும் வருகை தந்திருந்தனர். வடமாநிலத்தில், டில்லி தலைநகரில் சமூகநீதிபற்றிய ஒரு விழிப்புணர்வு, இன்றைய பொருத்தப்பாடுபற்றிய விளக்கும் நிகழ்ச்சியாக சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கிடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி சமூகநீதி விருதாளரும், செயல்பாட்டாளருமான கோ.கருணாநிதி நன்றி கூறி நிறைவு செய்தார்.

- உண்மை இதழ், 2.16-28.19

வெள்ளி, 26 ஜூலை, 2019

நாக்பூரில் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவர்கள் கூட்டம்



நாக்பூர், ஜூலை 21 நாக்பூர் நகர் சட்டமன்ற விடுதி அரங்கத்தில், நேற்று (20.7.2019)  மகாராட்டிரம் மற்றும் அருகாமை மாநில  பிற்படுத்தப் பட்டோர் அமைப்பின் தலைவர்களின் கூட்டம் பலிராஜ் தோத்தே, பிரதீப் தோப்லே ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு, தற்போது பிற்படுத்தப்பட்டோர் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளை ஒன்றுபட்டு எதிர்த்திட வேண்டும் என்று கழகத்தின் வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான கோ.கருணாநிதி வலியுறுத்தினார்.

தந்தை பெரியார், ஆசிரியர் நூல்கள் அளிப்பு




நேற்று (20.7.2019) அன்று நாக்பூர் நகரில், மகாராட்டிரா சட்டமன்ற மேலவை உறுப்பினர் திரு.பிரகாஷ் கஜ்பியீ அவர்களைச் சந்தித்து, தந்தை பெரியாரது நூல்கள், 69% இட ஒதுக்கீடு - ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய நூல்கள் அளிக்கப்பட்டன. மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார். தந்தை பெரியாரின் தொண்டினையும், திராவிடர் கழகத்தின் தொடர் செயல்பாடுகளையும் பாராட்டினர்.

- விடுதலை நாளேடு, 21.7.19

திங்கள், 15 ஜூலை, 2019

வாரணாசி: பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் 3 ஆவது மாநாடு

கிரீமிலேயர் முறையை முற்றிலுமாக நீக்கவேண்டும்!


தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவரிடம் கோரிக்கை மனு அளிப்பு




வாரணாசி, ஜூலை 15, உத்தரபிரதேசம் வாரணாசியில் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் மூன்றாவது மாநில மாநாடு 13.7.2019 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. நலசங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் அமிர்தான்சு அனை வரையும் வரவேற்று குறிப்புரையையும் வழங்கினார்.

மாநாட்டில் தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் லோகேஷ் குமார் பிரஜாபதி, அகில இந்திய பிற்படுத் தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி மற்றும் யூனியன் வங்கியின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தனது உரையில், சமுக நீதிக் களத்தில் தமிழகம் எத்தகைய முன் னேற்றம் அடைந்துள்ளது; தந்தை பெரியாரின் உழைப்பினாலும், போராட்டத்தாலும் அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் உட்பட தற்போது 69 விழுக்காடு சட்டம் நிறைவேற்றியது வரை திராவிடர் இயக்கம், பெரியார் இயக்கம் செய்த மகத்தான சாதனைகளை, காணொ லியுடன் கோ.கருணாநிதி விரிவாக எடுத்துரைத்தார். வருகை தந்த அனைவரும் பலத்த கரவொலியுடன் வரவேற்றனர்.

தமிழர் தலைவர் எழுதிய நூல் அளிப்பு




சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசுடன், திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய பெரியாரும் அம்பேத்கரும்'' எனும் ஆங்கில நூல் அளிக்கப்பட்டது.

மண்டல் குழு பரிந்துரை முழு வதுமாக நிறைவேற்றப்பட வேண்டும், நீதித்துறை, தனியார் துறையில் இட ஒதுக்கீடு உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டு அரங்கத்தில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், சமுக நீதிக் காவலர் வி.பி.சிங், மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியோரது கருத்துக்கள் பதாகைகளாக வைக்கப்பட்டன. தந்தை பெரியாரை முதன்மைப்படுத்தி, வட நாட்டில், குறிப்பாக உத்தரப் பிரதேசம் வாரணாசியில் நடைபெற்ற மாநாடு இது என்பது குறிப்பிடத் தக்கது.

கோரிக்கை மனு


தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலை வரிடம் அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனுவின் சாராம்சம்




அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பின் சார்பில் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள வாரணாசிக்கு 13.7.2019 அன்று வருகை தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் லோகேஷ் குமார் பிரஜாபதி அவர்களிடம், பிற்படுத்தப் பட்டோர் நலன் குறித்த கோரிக்கை மனுவினை, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அளித்தார்.

மண்டல் குழு பரிந்துரை முழு வதுமாக நிறைவேற்றப்பட்டு, பிற் படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக் கீடு 52 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும்; கிரிமிலேயர் முறையை முற்றிலுமாக நீக்க வேண்டும்; மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கென தனி அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும்; பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு; 2021- இல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண் டும்; இணை செயலாளர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்யப்படுவதில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் அந்தந்த மாநிலத்தில் உள்ளோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண் டும்; தமிழகத்தில் உள்ளது போல், இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற் றப்பட வேண்டும் ஆகிய கோரிக்கை கள் உள்ளடங்கிய மனு அளிக்கப் பட்டது.

- விடுதலை நாளேடு, 16.7.19

புதன், 23 ஜனவரி, 2019

பெரியார் திடலில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் தலைவர்கள் தெரிவித்த தெள்ளிய கருத்துகள்

பிப்ரவரி 5 இல் டில்லியில் சமூகநீதி கருத்தரங்கம்


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு




உயர்ஜாதியினரில் ஏழையாக உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு வகை செய்யும் சட்டத் திருத்தம் (103) மக்களவையில் 8.1.2019 அன்றும், மாநிலங் களவையில் 9.1.2019 அன்றும் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டு விட்டன.

இதுகுறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (19.1.2019) சனிக்கிழமை முற்பகல் சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் தலை வர்கள், பிரதிநிதிகள் பங்குகொண்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கே.எம்.நிஜாமுதின், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.அய். கட்சி சார்பில் அச.உமர்பாரூக், இந்திய சமூகநீதி இயக்கத் தலைவர் எஸ்றா.சற்குணம், விவசாய தொழிலாளர் கட்சியின் தலைவர் குமார், பொது பள்ளிகளுக்கான மேடை என்ற அமைப்பின் சார்பில் பிரின்சு கஜேந்திர பாபு, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் சிறந்த கருத்துகளை எடுத்து வைத்தனர்.

இவர்கள் தெரிவித்த கருத்துக்களின் திரட்சி பின் வருமாறு:

உயர்ஜாதிக்காரர்களில் ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்னும் சட்டம் அவசர அவசரமாக முன்னறிவிப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரு சட்டத்தை நிறைவேற்றுமுன் இரண்டு நாள் களுக்குமுன் உறுப்பினர்களுக்கு மசோதாவின் நகல் அளிக்கப்படவேண்டும் என்பது விதிமுறை. அது இந்தச் சட்டம் நிறைவேற்றத்தில் பின்பற்றப்படவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340 ஆம் பிரிவில் பயன்படுத்தப்பட்டுள்ள சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற அதே வரை யறைச் சொற்கள்தான் வேலை வாய்ப்புக்கு வழி செய்யும் அரசமைப்புச் சட்டம் 16(4) - கல்வி வாய்ப்புக்கு வகை செய்யும் 15(4) - இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய அரசமைப்புச் சட்டம் இட ஒதுக்கீட்டுக்காக முதன் முதலில் திருத்தப்பட்டபோது, அது குறித்த விவா தங்கள் நாடாளுமன்றத்தில் நடந்த நேரத்தில் பொருளாதார ரீதியாகவும் (Economically) என்ற சொல்லும் பயன் படுத்தப்பட வேண்டும் என்ற திருத்தத்தை ஒரு சிலர் கொண்டு வந்தபோது, வாக்களிப்புக்கு விடப்பட்டது. அதற்கு ஆதரவாக வெறும் அய்ந்தே வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்தன.

பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பொருளா தார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மண்டல் குழு தொடர்பாக இந்த வழக்கில் (இந்திரா சகானி வழக்கில்) உச்சநீதிமன்றம் அது செல்லுபடியற்றது என்று தீர்ப்பு வழங்கி விட்டது (1992).

குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கருநாடகம், ஜம்மு காஷ்மீர், அரியானா போன்ற மாநிலங்களில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்து சட்டம் கொண்டு வந்தபோது, அவற்றை சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றங்கள் செல்லவே செல்லாது என்று ஒருமுகமாகத் தீர்ப்பு அளித்துவிட்டன.

இந்த நிலையில், இப்பொழுது மத்தியில் இருக்கும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (என்.டி.ஏ.) உயர்ஜாதிகளில் ஏழையாக உள்ளவர் களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டப்படியும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்புகளின்படியும் அறவே செல்லாது என்று திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டது.

அப்படி தெரிந்திருந்தும் என்.டி.ஏ. அரசு இப்படியொரு சட்டத்தை ஏன் கொண்டு வந்தது என்பது முக்கியமான கேள்வியாகும்.

அண்மையில் 5 மாநிலங்களில் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பி.ஜே.பி.க்கு மரண அடி விழுந்துவிட்டது. இதற்கான காரணம் என்னவென்று ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.க்கு ஓர் அறிக்கையை கொடுத்துள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது - அதனை எதிர்த்து நாடெங்கும் கண்டனங்கள் வெடித் தன. நாடாளுமன்றத்தில் புயல் கிளம்பியது. அதற்குக் கட்டுப்பட்டு மத்திய அரசு நடந்து கொண்டதால், வட மாநிலங்களில் உயர் ஜாதியினர் மத்தியில் பி.ஜே.பி.மீது கடும் அதிருப்தியும், வெறுப்பும் ஏற்பட்டுவிட்டன.

உயர்ஜாதிக்காரர்கள் எப்பொழுதும் பி.ஜே.பி.யின் பின்பலமாக இருந்து வந் திருக்கின்றனர். அந்த உறுதியான வாக்கு வங்கியை இழந்ததுதான் வடமாநில சட்ட மன்றத் தேர்தலில் பி.ஜே.பி. தோல்விக்குக் காரணம் என்று ஆர்.எஸ்.எஸ். தனது அறிக்கையில் கூறியிருந்தது.

இந்த நிலையில்தான் உயர்ஜாதியின ரைத் திருப்திப்படுத்திட இத்தகு ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது மத்திய பி.ஜே.பி. அரசு.

1951 இல் முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தபோது பொருளாதார அளவுகோல் சேர்க்கப்படவில்லை. அப் பொழுது ஏழைகளே இல்லையா? இந்த 58 ஆண்டுகளில் அந்த ஏழைகள் எல்லாம் ஏழைகளாகத்தான் இருக்கிறார்களா?

உலகின் பல நாடுகளிலும் இட ஒதுக்கீடு இருக்கத்தான் செய்கிறது. அங்கெல்லாம் கூட பொருளாதார அளவுகோல் கிடை யவே கிடையாது. அப்படி இருக்கும்பொழுது இந்தியாவில் மட்டும் எங்கிருந்து வந்தது - குதித்தது?

மேல்ஜாதி ஏழைபற்றி பேசுகிறார்களே, அந்த மேல்ஜாதி ஏழைகளில் எவர் கட்டட வேலைக்கு வருகின்றனர்? ரிக்ஷா இழுக் கின்றனர்? வயல் வேலைக்கு வருகின்றனர்?

எல்லோருக்கும் இட ஒதுக்கீடு என்று கொண்டு வந்துவிட்டால், இப்பொழுதுள்ள இட ஒதுக்கீடு என்பது காணாமல் போய் விடும் - இதனை பொருளாதார நோபல் அறிஞர் அமர்த்தியா சென் போன்றவர்கள் கூறுவதைக் கவனிக்கவேண்டும்.

இந்தப் பொருளாதார அளவுகோல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே முற்றிலும் தகர்க்கக் கூடியது.

ஜாதியின் காரணமாகவே கல்வி மறுக் கப்பட்டது - ஜாதியின் காரணமாகவே சமூக ரீதியாகக் கீழானவர்களாக ஆக்கப்பட்ட நிலையில், அந்த அடிப்படையில் தானே உரிமை மறுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப் பட்டவர்களை உயர்த்திட வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து அதற் கான அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகே பிற் படுத்தப்பட்டோருக்கு மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது முதல் கட்டமாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடும், அதற் குப் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்வியில் இட ஒதுக்கீடு காங்கிரசு ஆட்சிக் காலத்திலும் கொண்டு வரப்பட்டது.

27 சதவிகித இட ஒதுக்கீடு என்று பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப் பட்டதாக சொல்லப்பட்டாலும் இதுவரை 12 சதவிகித இடங்களைக்கூட அவர்கள் பெறாத நிலையில், கிரீமிலேயர் என்று கூறி பிற்படுத்தப்பட்டவர்களை வடிகட்டுவதும், உயர்ஜாதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறி, அரசமைப்புச் சட்டத்தில் இல் லாத - நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்ட பொருளாதார அளவுகோலைத் திணிப்பதும் எந்த வகையில் நியாயம்?

உயர்ஜாதியில் ஏழைகளாக இருக்கக் கூடியவர்கள் கல்வியிலும், சமூக ரீதியிலும் பின்தங்கி இருக்கின்றனரா? அதற்கான புள்ளி விவரங்கள் கணக்கெடுப்பில் இருக் கின்றனவா? இவை குறித்து விளக்கம் அளிக்காத நிலையில், காரணங்களைக் கூறாத தன்மையில், அவர்களுக்காக இட ஒதுக்கீடு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

பி.ஜே.பி. என்பது இந்த நாட்டின் பெரும்பாலான மக்களான தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், இதர பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர்பற்றிக் கவலைப் படாத கட்சியே. அவர்களின் கவனமும், கவலையும், அக்கறையும் எல்லாம் உயர் ஜாதியினர் பக்கமே - அதிலும் குறிப்பாகப் பார்ப்பனர்கள் பக்கமே!

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மண்டல் குழுப் பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்தபோது, அதனை எதிர்த்த இவர்கள், இப்போது உயர்ஜாதி யினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கத் துடிப்பது ஏன்?

நியாயமாக மண்டல் குழுப் பரிந்து ரையை செயல்படுத்தியபோது வடநாட்டில் உயர்ஜாதியினர், பி.ஜே.பி., சங் பரிவார் கூட்டத்தினர் கடுமையாக எதிர்த்ததுபோல, உயர்ஜாதியினருக்காக இட ஒதுக்கீடு கொண்டு வந்துள்ள இந்தக் காலகட்டத்தில், பெரும்பான்மை மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவுக்குப் போராட்டம் வெடித்துக் கிளம்பியிருக்கவேண்டும்.

தமிழ்நாடு என்பது தந்தை பெரியாரின் மண் - சமூகநீதி மண் என்கிற காரணத்தால், இங்கே எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது.

இந்த உணர்வு தமிழ்நாட்டிலுள்ள குக் கிராமங்கள்வரை கொண்டு செல்லப்பட வேண்டும்; இந்தியா முழுமையும் கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்ளவேண் டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து களையும், ஆலோசனைகளையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

வரும் 5.2.2019 அன்று திராவிடர் கழகத் தின் சார்பிலும், Lawyer's Forum சார்பி லும் டில்லியில் சமூகநீதி கருத்தரங்கம் நடை பெறும் என்றும், அதில் இந்திய அளவில் உள்ள சமூகநீதி அறிஞர்கள், அரசியல், சமு தாய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்தார்.

-  விடுதலை நாளேடு, 20.1.19