பக்கங்கள்

தீண்டாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீண்டாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 மே, 2025

தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 


விடுதலை நாளேடு

தமிழ்நாடு

சென்னை, ஏப்.29 தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த மாதம் 14ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ஆம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, 24ஆம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தாக்கல் செய்யப் பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.4.2025) பதிலளித்து பேசினார். அப்போது, தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்கிற சொல் நீக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

“இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-ஆவது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும். மேனாள் முதலமைச்சர் கலைஞர், ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு உழைப்பு’ என கூறுவார். ஆனால் அவர் தற்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் ‘சாதனை சாதனை சாதனை’ என கூறியிருப்பார். கலைஞர்  இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன்.

தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம். இந்தியாவில் 11.2% வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை. மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 25 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு.

தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் ஒன்றிய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைந்துள்ளது. ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் தமிழ்நாடு அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

செவ்வாய், 24 நவம்பர், 2020

கருநாடகாவில் தலைவிரித்தாடும் ஜாதியக் கொடுமை கீழ்ஜாதிக்காரர்களுக்கு முடி வெட்டக் கூடாதாம்!

 

November 22, 2020 • Viduthalai • இந்தியா

புகார் கொடுத்தும் கருநாடகா பா.ஜ.க. ஆட்சியில் நடவடிக்கை இல்லை

மைசூரு, நவ.22 கருநாடகத்தில்,  உயர் ஜாதியினர் அல்லாதவர்களுக்கு முடி திருத்தம் செய்ததற்காக, மல்லி கார்ஜூன் ஷெட்டி என்பவர், நாயக் ஜாதிக்காரர்களால் ஊர் விலக்கம் செய்யப்பட்டுள்ளார் மற்றும் அவ ருக்கு ரூ.50000 அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது.

47 வயதாகும் அந்த முடிதிருத்துநர், மைசூரு மாவட்டத்தின் நன்ஜன்குட் தாலுகாவில், ஹல்லாரா கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது முடிதிருத்தம் செய் யும் நிலையத்தில் அனைத்து ஜாதி யினருக்கும் முடிதிருத்தம் செய்து வந்தார்.

அந்த ஊரில் உள்ள உயர்ஜாதியி னர் இவரை வீட்டிற்கு அழைத்து முடிவெட்டி வந்தார்கள். கரோனா பொது முடக்கம் முடிந்த பிறகு இவர் கடையில் முடிவெட்டுபவர்கள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கவே இவருக்கு உயர் ஜாதி யினரின் வீட்டிற்குச் சென்று முடி வெட்ட நேரம் இல்லை. இதனால் நீங்கள்கடைக்கு வாருங்கள்என்று உயர்ஜாதியினரிடம் கேட்டுக்கொண் டார்.இதனால்ஆத்திரமடைந்த  உயர்ஜாதியினர், இனிமேல்உயர்ஜாதி யினருக்குமட்டுமே கடையில்முடி வெட்டவேண்டும் என்று உத்தர விட்டுள்ளனர்.  இவரின் கடைக் குச் சென்ற, இவரது கிராமத்தின் உயர்ஜாதி சமூகத்தைச் சேர்ந்த மகா தேவா நாயக், சங்கரா மற்றும் சிவராஜு உள்ளிட்டோர், இனி மேல் தங்களைத் தவிர வேறு யாருக்கும் முடிவெட்டக் கூடாது, அப்படி வெட்டினால் ஊரை விட்டு விரட்டிவிடுவோம் என்று மிரட்டி யுள்ளனர்.

அதற்கு அவர் நான்  யாருக்கும் ஜாதி பார்ப்பதில்லை என்பதாகப் பதிலளித்தார். இதனை அடுத்து தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் இந்த ஊரைவிட்டுச் சென்றுவிடு என்று கூறி அவர் ரூ.50000அபராதம் செலுத்த வேண்டு மெனவும் கூறினர்.  ஆனால், இதற்கு உடன்பட மறுத்துவிட்டார் மல்லிகார்ஜூன். எனவே, அவர்மீது ஊர்விலக்க நடவடிக்கையை அறிவித் ததோடு, அவரின் கடைக்கு யாரும் முடிதிருத்தச்செல்லக்கூடாதுஎன் றும் ஊருக்குள் பிரச்சாரம் செய்தனர்

கடந்த 3 மாதங்களாகவே உயர் ஜாதியினர் மிரட்டி வருவதால், காவல்துறையில் புகார் அளித்தார்.  காவல்துறையினர், புகாரைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டனர். காவல் துறையினரிடம் தங்கள் மீது புகார் அளித்ததை அறிந்த உயர்ஜாதியினர் மல்லிகார்ஜூனின் 21 வயது மகனை வீட்டிலிருந்து கடத்திச் சென்று, அவரை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து  நாயக் சமூகத்தைப் பற்றிகேவலமாகப் பேசுமாறுசெய்து, அதை காணொலியில் படம் பிடித்த னர். இதன்மூலம், காவல் துறையிடம் சென்றால், அந்தக் காணொலியை வெளியிட்டு விடுவதாகவும் மிரட் டியுள்ளனர்.

மல்லிகார்ஜூன் தன்மீதும், தனது குடும்பத்தினர் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் தொடுத்துவருவதை அடுத்து அப்பகுதி வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், வட்டாட்சியர் உயர்ஜாதியினருக்கு ஆதரவாகப்பேசி அவரைசமாதா னப் படுத்த முயன்றார். இதனை அடுத்து அவர் உள்ளூர் ஊடகவி யலாளர்களைச் சந்தித்து தனது குறையைக்கூறி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித் துள்ளார்.


வெள்ளி, 6 மார்ச், 2020

சமூகம் : தேசிய அவமானம் (தீண்டாமை)


தீண்டாமைக்கு எதிராக  போராடி, அரசியலமைப்பும் 1950இல் அதைத் தடை செய்தது. ஆனால் தேசிய அவமானம் என் றும், பாவச்செயல் என்றும் ஏடுகளில் குறிப் பிடப்பட்டாலும் ஜாதித்தீண்டாமை இந் தியாவின் பல பகுதிகளிலும் இன்னும் பீடித் திருக்கிறது.

வட இந்தியாவில் 49 விழுக்காடு குடும் பங்கள் ஜாதித் தீண்டாமையை இன்னமும் கடைப்பிடிப்பதாக சமீபத்திய 'எக்கனாமிக் & பொலிடிகல் வீக்லி' இதழின் ஆய்வு கூறி யிருக்கிறது.

ஆனால் தென்னிந்தியாவில் 20 விழுக் காடு குடும்பத்தினர் மட்டுமே தீண்டா மையை கடைப்பிடிப்பதாக ஆய்வின் ஆசிரியர்களான அமித் தோரத்  மற்றும் ஓம்கர் ஜோஷி  கூறுகின்றனர். இந்திய மனித மேம்பாட்டு கணக்கெடுப்பு 2012அய் அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய் வினை அவர்கள் மேற் கொண்டுள்ளனர். கல்வியின் நிலை உயர உயர தீண்டாமை யின் அளவு குறைவதாக ஆய்வு கூறுகிறது. இதற்கு இடஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட அள விற்கு காரணம் என்று ஆய்வு கூறுகிறது. ஆனால் 1990-களில் தனியார்மய கொள் கைகளை புகுத்திய பிறகு கல்விக்கான அரசு கட்டமைப்பு சிதைந்து வருவதால் இதில் ஒரு பெரும் தேக்கம் இருப்பதை பார்க்க முடிவதாக தெரிவிக்கின்றனர்.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் அதிக அளவில் அதாவது 35 விழுக்காட்டு சமண குடும்பங்கள் தீண்டாமையை கடைப்பிடிக் கின்றன. அடுத்ததாக 30 விழுக்காடு இந் துக்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கின் றனர். புத்த சமயத்தைப் பின்பற்றும் 1 விழுக் காடு குடும்பங்கள் மட்டுமே தீண்டாமை யைக் கடைப்பிடிப்பதாக இந்த ஆய்வு கூறு கிறது.

- விடுதலை ஞாயிறுமலர் 22 2 20

வெள்ளி, 11 அக்டோபர், 2019

ராமர் கோவில் திருவிழாக் காலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடதாம்


உத்தரப்பிரதேசத்தில் உள்ள  ராமர் கோவிலில் 10 நாள் பூஜைக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் ஹமிர்பூர் மாவட்டத் தில் உள்ள கதா என்ற ஊரில் பிரபல ராமர் கோவில் உள்ளது, அந்தக் கோவிலில்  10 நாள் ராமாயணப் பாடம் படிக்கும் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருவிழா நடத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. அதில் :-

"ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் 10 நாட்கள் நடைபெறும் ராமாயணப்பாடம் படிக்கும் திருவிழா நடக்கும் காலங்களில் கோவில் பூஜைகளில் கலந்துகொள்வதை தடைசெய்கிறோம். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தவறுதலாக கோவிலுக்குள் நுழைந்து விடுவார்கள். ஆகையால் அவர்கள் திரு விழா நடக்கும் 10 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவர்கள் அப்படி வர நேர்ந்தால் கோவிலின் புனிதம் கெட்டு விடும், மேலும், கோவில் திருவிழாவில் உயர்ஜாதியினர் அதிகம் கலந்துகொள்ள வருவார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை தொட்டுவிட்டாலோ, பார்க்க நேரிட்டாலோ தீட்டுப் பட்டுவிடும். ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியது கோவில் நிர்வாகம்.

தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் வருவதை கண்காணிக்க தனியார் பாது காப்பு நபர்களை நியமித்துள்ளனர்.  இது தொடர்பாக சில சமூக ஆர்வலர்கள் ராம் ஜானகி கோவிலுக்குச் சென்று விசாரணை செய்தபோது "தாழ்த்தப்பட்டவர்கள் இங்கே வந்தால் கோவில் புனிதம் கெட்டு விடும். ஆகையால் தான் நாங்கள் இந்த சுற்றறிக்கையை அனுப்பினோம்" என்று கூறினர்.

இந்த விவகாரம் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சியில் வெளிவந்த பிறகு ஊரில் சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற நோட்டீசை அகற்றியுள்ளனர். ஆனால் தனியார் நிறு வன பாதுகாவலர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் பகுதிகளில் அதிகம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, இதனை அடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராம்ஜானகி கோவிலுக்குச் சென்று விசா ரணை நடத்த வருவாய்த்துறை அதிகாரி களை அனுப்பினார்.   அவர்களின் விசார ணையில் தாழ்த்தப்பட்டமக்களில் அதிகம் பேர் இறைச்சி சாப்பிடுகின்றனர், மது அருந்துகின்றனர். ஆகவே தான் இது போன்ற ஒரு சுற்றறிக்கையை நாங்கள் அனுப்பியுள்ளோம் என்று பதில் கூறியுள் ளனர்.  மேலும்  இந்த கோவில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது, இந்துமத சாம்பிரதா யங்களின் படி சூத்திரர்கள் கோவிலில் நுழையக்கூடாது என்பதை வலியுறுத்தி இருக்கலாம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக தாழ்த்தப்பட்ட மக்களி டம் நடத்த விசாரணையில் அவர்கள் கூறும் போது, “கோவிலில் நுழைவதற்கு நீண்டகாலமாகவே எங்களுக்கு கடுமை யான எதிர்ப்புகள் வருகிறது, எங்களை கோவில் உள்ள தெருக்களில் கூட நடக்க அனுமதி மறுக்கின்றனர். மேலும் எங்களை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை" என்றனர்.

மற்றொரு தாழ்த்தப்பட்ட நபரான ராஜூ சாகு என்பவர் கூறும் போது "கோவில் பகுதியில் நாங்கள் சென்றால் எங்களை அடித்து விரட்டுகிறார்கள். எந்த ஒரு விழா மற்றும் பூஜைகளுக்கும் எங்களை அனுமதிப்பதில்லை. ஆனால் எங்களிடம் வந்து கோவில் திருவிழாவிற்கு பணம் மட்டும் வசூலித்துச்சென்றுவிடுகின்றனர்" என்று கூறினார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர் சுரேஷ் குமார் மிஸ்ரா கூறும்போது, “ நாங்கள் விசாரணைக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளோம். அதிகாரிகள் கொண்டு வரும் விசாரணை அறிக்கையினை அடுத்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இங்கு யாரும் எந்த காரணத்தைச் சொல்லியும் கோவி லிலோ, பொது இடங்களிலோ தாழ்த்தப் பட்டமக்கள் வருவதை தடுக்க முடியாது என்று கூறினார்.

- விடுதலை ஞாயிறு மலர், 7 .9 .19

வியாழன், 5 செப்டம்பர், 2019

தாழ்த்தப்பட்ட பெண் சட்டமன்ற உறுப்பினரை விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொள்ள விடாமல் அடித்து விரட்டிய உயர்ஜாதியினர்



அய்தராபாத்,செப்.5 ஆந்திராவில் விநா யகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வந்த  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் சட்டப்பேரவை உறுப்பினரை அங் கிருந்து விரட்டியுள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் உள்ள தடிகொண்டா தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினரான உண்ட வள்ளி சிறீதேவி என்பவர் தாழ்த் தப்பட்ட  வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மருத்துவராக பணி புரிபவர். சிறீதேவி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம்  குண்டூர் மாவட் டத்தில் துள்ளூர் பகுதியில் உள்ள அனந்தவரம் என்னும் ஊரில் மறைந்த மேனாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜ சேகர் ரெட்டியின் நினைவு தின நிகழ்வு நடந்தது. அதில் சிறீதேவி கலந்துகொண்டார்.

ஜாதிப்பெயர் சொல்லி கூச்சல்

அப்போது அங்கிருந்த சிலர் அவரை அதே ஊரில்  நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அழைத்துள்ளனர். அங்கு சென்ற சிறீதேவி அந்த பந்தலில் அமைக் கப்பட்டிருந்த விநாயகர் சிலையை வணங்கி உள்ளார். அப்போது அங்கு வந்த உயர்ஜாதியினர் சட்டமன்ற உறுப்பினர் சிறீதேவியை அவர் சார்ந்த ஜாதிப்பெயர் சொல்லி கூச் சலிட்டு அங்கிருந்து செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளனர். அவர் தொடர்ந்து அங்கு பேசிக்கொண்டு இருந்ததால் அவரை தாக்கி விரட்டி யுள்ளனர்.

விழாவிற்கு ஏற்பாடு செய்தவர் களிடம் அங்கு திரண்ட உயர்ஜாதி யினர்  “இவர் தீண்டத்தகாதவர், இவரை ஏன் இங்கு அனுமதித்தீர்கள்? இவரால் நமது ஊரே தீட்டுப்பட்டு விட்டது'' எனச் சத்தம் போட்டுள் ளார். இதனால் உயர்ஜாதியினருக்கும் சட்டமன்ற உறுப்பினர் தேவியின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு காவல்துறையினர்  இரு தரப் பையும் சமாதானம் செய்துள்ளனர். சிறீதேவி இதுகுறித்து, ‘‘ஜாதியின் பெயரால் என்னைச் சிறுமைப்படுத் துவது  மிகவும் அவமானகரமான செயல் ஆகும், அதுவும் மாநிலத்தின் தலைநகர் பகுதியில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. என்னை இவ்வாறு அவமதித்தவர்கள் உயர்ஜாதியினர்'' என்று கூறினார்.

இதுகுறித்து அந்தப் பகுதி காவல்துறை அதிகாரி சுப்பாராவ் கூறியபோது, ‘‘அப்பகுதியில் இருந்த சிலர் மது குடித்து இருந்தார்கள். அவர்கள் போதை அதிகமாகி சிறீ தேவியை ஜாதி குறித்துத் திட்டினர்.  இச்சம்பவம் குறித்து யாரும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம்'' என்று கூறினார்

தெலங்கானாவில் புகழ்பெற்ற குழந்தைகள் நல மருத்துவர்களில் ஒருவராக கருதப்படுபவரும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான சிறீதேவி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற் காக விநாயர் கோவிலில் அனுமதிக் கப்படாமல் விரட்டி அடிக்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ‘‘குடித்துவிட்டு இவ்வாறு செய்விட்டார்கள்'' என்று கூறி இச் சம்பவத்தை மூடி மறைக்கப் பார்க் கிறார்கள்.

- விடுதலை நாளேடு, 5.9.19

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

தாழ்த்தப்பட்ட சகோதரரின் சவம்கூட மரியாதையோடு எரியூட்டப்படக் கூடாதா?

வேலூர் நிகழ்விற்குத் தமிழர் தலைவர் கண்டனம்




வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள நாராயணகுப்பம் என்ற ஊரில் தாழ்த்தப் பட்ட  சமூக சகோதரர்களில் ஒருவரான குப்பன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது சவத்தை அவர்கள் ஊருக்கு அருகில் உள்ள சுடுகாட்டில் எரியூட்ட எடுத்துச் செல்ல முடியாதபடி, அச்சுடுகாட்டுக்கு ஒதுக்கப்பட்ட பாதையையும் மற்றவர்கள் ஆக்கிரமித்து, சவங் களை சுமந்து சென்று எரியூட்ட வழி இல்லாமல் செய்ததால், தொட்டில் ஒன்று கட்டி, 20 அடி உயரமுள்ள கட்டப்பட்ட பாலத்திலிருந்து அச் சவங்களைத் தொட்டிலிலிருந்து இறக்கி, பிறகு இறுதி நிகழ்வுகள் செய்தார்கள். இது சில மாதங் களாகவே தொடருகின்றது என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய செய்தியாகும்!

பெரியாரின் திராவிட மண்ணிலா?


இந்த 21 ஆம் நூற்றாண்டில், அதுவும் தமிழ் நாட்டில் - பெரியாரின் திராவிட மண்ணிலா இப்படிப்பட்ட அநாகரிக ஆக்கிரமிப்புகள்.

வாழும்போதுதான் கொடுமை என்றால், இறந்த பிறகாவது எம் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் கண்ணியமாக - பிரச்சினையின்றி எரியூட்டப்பட வேண்டாமா?

வேலூர் மாவட்ட நிர்வாகம் இதனை உட னடியாக சரி செய்தாகவேண்டும். வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதன்மீது உடனடி யாக நடவடிக்கை எடுத்து, சுடுகாட்டுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உறுதி கூறியுள்ளது ஆறுதலானதும், மிகவும் வரவேற்கத்தக்கதும் ஆகும்.

வேலூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், வேலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சென்று சந்தித்து, விரைந்து பரிகாரம் காணுமாறு கூறிட, தலைமைக் கழகம் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

இதுபோல் சுடுகாட்டுக் கொடுமைகளை எதிர்த்து மனிதநேய போராட்டம்  - அறப்போரில் ஈடுபட கழகம் தயங்காது - தலைமை அனுமதி பெற்று ஈடுபடவேண்டும். இது மிகமிக முக்கியம், அவசரம்!

 

கி.வீரமணி,


தலைவர் திராவிடர் கழகம்


22.8.2019

சென்னை

புதன், 19 ஜூன், 2019

தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை தேவை இல்லையேல், போராட்டம் வெடிப்பது உறுதி!

சமையல் உதவியாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் அவர்களை இடமாற்றம் செய்வதா?


தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்த அவலமா?




சமையல் உதவியாளர்களாகப் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட இரு தாழ்த்தப்பட்ட பெண்களை, ஊரார் எதிர்ப்பு என்ற காரணம் கூறி, வேறு இடத்திற்கு மாற்றியது சட்டப்படி குற்றமாகும். இதற்குக் காரணமானவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும். எடுக்கா விடின், போராட்டம் வெடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதி யில் உள்ள வலையப்பட்டி என்ற கிரா மத்தில் அங்கன்வாடியில் உதவியாளராகப் பணிபுரிய மாவட்ட ஆட்சியரால் 3.6.2019 அன்று (10 நாள்களுக்கு முன்பு) அன்ன லட்சுமி என்ற தாழ்த்தப்பட்ட சமுக(எஸ்.சி.,)த்தைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்கச் சென்றுள்ளார்.

சமையல் பணி உதவியாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் மாறுதல் செய்வதா?


இவரது பணி குழந்தைகளுக்கான சமையல்  கூட உதவியாளர் பணியாகும். இதை அறிந்த அந்த கிராமத்து மற்ற ஜாதி யினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். அதனால், அவர் வேறு ஒரு கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். (இதுவே தவறான முடிவாகும். சட்டத்தை அமல் படுத்தவேண்டிய அதிகாரிகளே இப்படி வளைந்து கொடுக்க ஆரம்பித்தால், நிர் வாகம் நடத்த இயலுமா?)

மற்றொரு தாழ்த்தப்பட்ட சமுகப் பெண் - ஜோதிலட்சுமியை மதிப்பனூர் என்ற ஊரில் அங்கன்வாடி ஊழியராக - சமையல் உதவியாளராக நியமனம் செய்துள்ளார் மாவட்ட ஆட்சியர். அவரும் வேறு இடத் துக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த இரு பெண்களாலும் எங்கள் பிள்ளைகள் உண்ணும் உணவு தீட்டுப் பட்டு விடும்'' என்று கூறி, ஜாதி வெறியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்!

அந்த இரு பெண் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை; அச்சத்தோடு, என்ன செய்வது என்று அறியாமல் வேதனையில் வெந்து கருகுகின்றனர் என்று செய்திகள் வருகின்றன.

ஜனாதிபதியாகக்கூட தாழ்த்தப்பட்டவர் வரலாம் - ஆனால் சமையல் உதவியாளர் பணிக்கு வரக்கூடாதா?


2019 இல்கூட இந்நிலையா?? தாழ்த்தப் பட்ட சமுகத்தினர் ஜனாதிபதி என்றாலும் இந்நிலையா?

அதுவும் பெரியார் மண்ணிலா? தமிழ் நாட்டிலா? வடநாட்டினைப் பார்க்கும் பொழுது, இங்கு வெள்ளை உடை மீது பட்ட கறுப்புப் புள்ளி பளிச்'சென்று தெரியவே செய்யும்.

இதன்மீது தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர் அவர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த கிராமத்தின் ஜாதி வெறியர்களுக்கும், தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தை மதிக்காமல், ஜாதி ஆணவப் போக்கை நிர்வாணத் தன் மையில் காட்டியவர்களுக்கும் தக்க தண்டனை தேவை! வழக்கும்போட வேண்டும்.

சம்பந்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண் கள்மீது இனிமேல் கற்பனைக் குற்றச்சாற்றுகள் - பொய்ப் புகார்கூட ஜோடனை செய்யப்பட்டு, மேல்ஜாதி என்ற ஆணவம் கோர நிலைப்பாட்டுக் கொடுமையை நியா யப்படுத்த முயலக்கூடும்.

முதலமைச்சர் தலையிடவேண்டும்!


முதல்வரின் துறை காவல் துறை என்ப தால்,  இதில் குற்றமிழைத்தவர்களை தக்க வகையில் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும்.

உதாரணத்திற்குக் கூறுகிறோம்,

மாவட்ட ஆட்சியர் தாழ்த்தப்பட்டவர் என்றால், ஜாதி வெறியர்கள் அவரை நிரா கரிப்பார்களா? ஏற்க மாட்டோம் என்பார் களா?

அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக் காகச் செல்லும்பொழுது, மருத்துவர் தாழ்த் தப்பட்டவராக இருந்தால், மறுப்பார்களா? மறுத்தால் அரசுதான் ஏற்று உடனே மாற்றம் செய்யுமா?

வழக்கை விசாரிக்கும் நீதிபதி, தாழ்த்தப்பட்ட சமுகத்தவர் என்றால், இவரை ஏற்கமாட்டோம் என்று கூறினால், அதை உயர்நீதிமன்றம் ஏற்குமா?

பார்ப்பனர்களின்  சந்தர்ப்பவாதம்


இப்படிப்பட்டவைகளை நாம் எடுத்துக் காட்டி கண்டித்தாலும், பார்ப்பன ஆதிக்க வாதிகள் உடனே என்ன சொல்லுவார்கள்? பார்த்தீர்களா? பார்த்தீர்களா? நாங்களா கலவரம் செய்கிறோம்? பார்ப்பனரல்லாத ஜாதிக்காரர்கள்தானே கலகம் செய்கிறார் கள்'' என்று கூறி, தங்களை ஏதோ  ஜாதி உணர்வுக்கு அப்பாற்பட்டவர் களைப்போல காட்டி, நம் அரைவேக்காடு நுனிப்புல்லர் களை ஏமாற்றுவர்!

விஷ விருட்சத்தின் இந்த ஜாதிப் பழம் என்பதற்கான மூலம் - வேர் அல்லவா? அதிலிருந்துதானே முளைத்தது!

புரட்சியாளர் அம்பேத்கர் கூறிய அடுக்குமுறை ஜாதிய அமைப்பு ‘Graded Inequality' யின் படிக்கட்டு முறையின் தீய விளைவு இப்படித்தான் வெளிப்படுவதும் உறுதி!

தண்டனை கொடுக்கப்பட வேண்டும்


ஜாதி வெறி, ஆணவக் கொலை வெறி போன்ற கொடுமைகள் தமிழ்நாட்டில் தலை தூக்குவதே கூடாது; இதற்குத் தமிழ்நாடு அரசு, திராவிடர் கழகத்தினைப் போன்ற ஜாதிவெறி, ஜாதி தீண்டாமை ஒழிப்பு அமைப்புகளின் பிரச்சாரங்களை ஊக்கப் படுத்த முன்வராவிட்டாலும், குறைந்தபட்சம் தடுக்காமலிருந்தாவது ஒத்துழைப்புத் தந்தால், அதன் பளு - சுமையாவது குறையும்.

போராட்டங்கள் வெடிக்கும்!


அரசு சரியான ஒத்துழைப்புக் கொடுத் தால், தமிழக அரசுக்கும், முற்போக்கு இயக்கங்களுக்கும் முன்தோன்றும் இத் தகைய அறைகூவல்களும் அகலும் வாய்ப் பும் ஏற்படுமே!

தமிழ்நாட்டில் இனிமேலும் இத்தகு அவலம், கொடுமை எங்கும் நடைபெறக் கூடாது.

இதில் மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் சமரசம்' செய்து கொண்டு சட்டத்தின் மரியாதையை, நிர்வாகத்தின் உறுதியைக் குலைத்துவிடக் கூடாது. இல்லையேல் போராட்டங்கள் வெடிப்பது உறுதி!

 


கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

13.6.2019


பட்டியல் இனப்பெண் சமையல் பணியாளராக பணியாற்ற உயர்ஜாதியினர் எதிர்ப்பாம்

வளையாபட்டி, ஜூன் 13- மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்து உள்ள வளையா பட்டியில் அன்னலட்சுமி என்ற பட்டியல் இனப்பெண் அங்கன்வாடி சமையல் பணி யாளராக பணியில் சேர்ந்து உள்ளார். இவர் மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு ஒன்றைக் கொடுத்து உள்ளார். அதில் திருமங்கலம் தாலுகாவில் உள்ள வளை யாபட்டியில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வரும் அங்கன்வாடியில் சமை யல் உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளேன்,

நான் பணியில் சேர்ந்தது முதல் என்னுடைய ஜாதி யைக் குறிப்பிட்டு உயர்ஜாதி யினர் தங்களின் குழந்தை களை அனுப்ப மறுக்கின்றனர். மேலும் கீழவென்னேரி கிரா மத்திலும் அங்கன்வாடியில் பணியில் சேர்ந்த பட்டியல் இனத்தைச்சேர்ந்த சமையல் பணியாளரான ஜோதிலட் சுமி என்றவரிடமும் இதே போல் தீண்டாமைக் கொடுமை நிகழ்ந்துள்ளது,

கிராமத்தில் உள்ள உயர் ஜாதியினர் உயரதிகாரிகளி டம் பட்டியல் இன சமையல் பணியாளர்கள் குறித்து பல் வேறு பொய்புகார்களைக் கூறி அவர்களை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தீண்டாமை கொடுமை தொடர்பாக புகார் அளித்த போது வளையாபட்டியில் உள்ள பட்டியல் இன மக்கள் வாழும் வீடுகள் மீது உயர் ஜாதியினர் தாக்குதல் நடத்தி யுள்ளனர்.

இது குறித்து ஜோதி லட்சுமி கூறியதாவது: நான் என்னுடைய சொந்த ஊரி லேயே பணிபுரிய முடியாத நிலையில் உள்ளேன்,

எனது உடல் நலம் குறித்த மருத்துவப் பரிசோதனை சான்றிதழை ஜூன் 4 ஆம் தேதி நிர்வாகத்திடம் அளித் தேன், இருப்பினும் உயர்ஜாதி யினர் ஒன்று சேர்ந்து ஒரு பட்டியல் இனத்தவர் சமைத்த உணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதா? என்று கேட்டு நிர்வாகத்தினரை மிரட்டு கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு இதே ஊரில் உள்ள கோவிலினுள் அன்னலட்சுமி மற் றும் ஜோதி லட்சுமி இருவ ரையும் கோவிலில் நுழைந்து வழிபட விடாமல் உயர்ஜாதி யினர் தடுத்தனர், இதனை அடுத்து கோவிலுக்கு வெளியிலேயே தேங்காய் உடைத்து வழிபட்டுச்சென்றனர். மேலும் ஊர் ரேசன் கடை களில் எங்களுக்கு பொருட் கள் வழங்குவதும், ஊரில் முக்கிய நிகழ்வுகளில் எங்க ளைக் கலந்துகொள்ள மறுப் பதும் தொடர்கதையாக உள் ளது, தற்போது ஜோதிலட் சுமிக்கு அவர்கள் ஊருக்கு சிறிது தொலைவில் உள்ள வேறு  ஒரு ஊரில் சமையல் வேலைக்கு மாற்றல் கிடைத்து சென்று வருகிறார்.

ஜூன் 8 ஆம் தேதி மீண்டும் வளையாபட்டி பகுதியில் பட்டியல் இனமக்களின் குடியிருப்பிற்குள் புகுந்த உயர்ஜாதியினர் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், வீடுக ளில் இருந்து மின்சார மீட் டர் சாதனம் உள்ளிட்டவை களை தாக்கி சேதப்படுத்தினர், இந்த தாக்குதல் தொடர்பாக மாவட்ட காவல்துறை ஆணையர் டி மதியழகன் நேரடியாக நிகழ்விடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியதில் இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த உத்தர விட்டுள்ளார். மாவட்ட ஆட்சியாளர் சாந்த குமாரும் நிகழ்விடத்திற்கு சென்று சேதங்களைப் பார்வையிட்டு  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

-  விடுதலை நாளேடு, 13.6.19

செவ்வாய், 8 ஜனவரி, 2019

மகாகும்பமேளா என்ற பெயரில் சாமியார்களின் அடாவடித்தனம்

சாமியாரின் உடைமையைத் தொட்டதால் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கொலை; மற்றொருவரின் கை உடைப்பு




அலகாபாத்,டிச.29 மகாகும்ப மேளா என்ற பெயரில் ஜனவரி 15 முதல் மார்ச் இரண்டாம் வாரம் வரை அலகாபாத் நகரில் கங்கை, யமுனை இணையும் இடத்தில் குளிப்பதற்கு அம்மணச் சாமியார்கள் பெருவாரியாக வருவார்கள். 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா என்று கூறிக்கொண்டு சாமியார் முதல்வர் ஆதித்யநாத் பெரும் பொருட்செலவு செய்து முன் னேற்பாடுகள் செய்துவருகிறார். அல காபாத் நகரில் கும்பமேளா நடக்கும் இடத்தில்தூய்மைப்பணியில்ஈடு பட்டிருப்வர்கள்தவறுதலாகசாமியார் களின் உடைமைகளைத் தொட்டுவிடு கின்றனர். இப்படி தொட்டவர்களை அடித்துக்கொலை செய்தும், கை கால் களை உடைப்பதும் சாதாரண நிகழ்வாக போய் விட்டது.

இளைஞர் கொலை


அலகபாத் சங்கமம் என்ற இடத்தில் கூடாரங்கள் அமைக்க அப்பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஆயிரக்கணக்கான துப்புரவுப் பணியாளர் கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்து தரப்படவில்லை என்று ஏற்கெனவே துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியிருந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய் அன்று நான்காயி(21) என்ற துப்புரவுத் தொழிலாளி ஆற்றின் கரையோரம் உள்ள புற்களை வெட்டி அகற்றிக் கொண்டு இருக்கும்போது ஆற்றில் குளித்து கொண்டு இருந்த சாமியார் ஒருவரின் உடைமையில் தவறுதலாக கை பட்டுவிட்டது.

இதனை அடுத்து கோபம் கொண்ட அந்த சாமியார் மற்றும் அவருடன் இருந்த மற்ற சாமியார்கள் அந்த துப்புரவுத் தொழிலாளி நான் காயியை அடித்து உதைத்தனர். இதில் நிலைகுலைந்து போன அவர் ஆற்றின் கரையிலேயே மயங்கி விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்றுபவர்களும் தாக்கப் படுவார்கள் என்று மிரட்டிவிட்டு அங் கிருந்து சென்றுவிட்டனர்.

இதனை அடுத்து இரவு முழுவதும் கடுமையான குளிர் மற்றும் ஈரத்தரையில் மயங்கி இருந்த காரணத்தால் உடல் வெப்ப இழப்பு ஏற்பட்டு அவர் மரண மடைந்தார். மறுநாள் காலைவந்த காவல் துறையினர் நான்காயி மது அருந்திவிட்டு ஆற்றின் கரை ஓரத்தில் தூங்கியதால் மரணமடைந்துவிட்டார் என்று கூறி அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டனர். இறந்த நான்காயி பதேபூர் மாவட்டம், காஷிபூர் அருகில் உள்ள பருவா என்ற கிராமத்தைச்சேர்ந்த லாலாக்ராம் என்பவரின் மகனாவார்.

இது நடந்து முடிந்த 2 நாள்களுக்குப் பிறகு மீண்டும் அதேபோல் ஒரு நிகழ்வு நடபெற்றுள்ளது.  சாமியார்களின் கூடா ரங்களை தூய்மைப்படுத்திக் கொண்டு இருந்த மாதாதின் என்ற 55 வயது துப்புரவுத் தொழிலாளி கூடாரத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சாமி யாரின் உடைமைகளை தொட்டு விட்டார். இதனை அடுத்து மீண்டும் சாமியார்கள் ஒன்றுகூடி மதாதினை அடித்து அவரது கைகளை உடைத்து விட்டனர். இவர் மத்தியப் பிரதேசம் சத்தர்பூர் மாவட்டத்தில் இருந்து ஒப் பந்தத்தில் பணிபுரிய வந்தவர் ஆவார்.

அவரின் கைகளை உடைத்தது மட்டுமல்லாமல் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தால் சிக்கிசை அளிப்ப வரையும் தாக்குவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க யாரும் முன்வரவில்லை. இதனை அடுத்து அவர் உடைந்த கைகளுடனேயே தனது ஊருக்குப் புறப்பட்டுச்சென்றார்.

மிரட்டி வருகின்றனர்


இந்தஇரண்டுநிகழ்விலும்எந்த சாமியார்மீதும்வழக்குப்பதிவுசெய்யப் படவில்லை. மேலும் துப்புரவுத் தொழிலாளர் கொலை மற்றும் கை உடைப்பு நிகழ்வுகள் தொடர்பாக வெளியாட்களிடம் யாரும் பேச வேண்டாம் என்று கும்பமேளா பாதுகாப்புப் படைப்பிரிவு காவலர்கள் மிரட்டி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட துப்புரவுத் தொழிலாளி நான்காயின் குடும்பத்திற்கு துப்புரவுத் தொழிலாளர் அமைப்பின் தலைவர் ரமசியா ரூ.5 லட்சம் உதவித் தொகையாக வழங்கினார்.

பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச துப்புரவுத் தொழி லாளர் அமைப்பின் தலைவர் கூறிய தாவது:

"கும்பமேளா தொடர்பாக 4,000 துப்புரவுத் தொழிலாளர்களை பல மாநிலங்களில் இருந்து ஒப்பந்த அடிப் படையில் அழைத்துவந்துள்ளனர். அவர்களை அழைத்துவந்து எந்த ஒரு வசிப்பட வசதியும் செய்துதரவில்லை, அவர்களை எங்கேயும் தங்கவைக்க சாமியார்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள் ஆற்றின் கரையோரம் பன்றிகளுடன் வசிக்கும் அவலத்திற்கு ஆளாகின்றனர். தரைஈரமாகஉள்ளது.மேலும்கடுமை யான குளிரும் நிலவுகிறது. இந்தக் குளிரால் பலர் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு வசதிகளைக்கூட ஒப்பந்ததாரர்கள் செய்து தரவில்லை. மாநில அரசோ ஒப்பந்த தாரர்களிடம் அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டோம் என்று கூறி, கைகழுவிவிட்டது"

மேலும் இவர்கள் பணி புரியும் போது தவறுதலாக சாமியார்களின் உடை மைகளில் கைகள் பட்டு விடுகின்றன. இதனால் சாமியார்கள் கோபமுற்று தாக்குகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு ஒருவர் இறந்துவிட்டார். மற்றொருவரின் கையை உடைத்துவிட்டனர். இந்த இரண்டு நிகழ்வுகளையுமே காவல்துறை மறைத்துவிட்டது,  ஊடகங்களுக்கும் தவறான தகவல்களைத் தந்துவிட்டனர்.

"சாமியார்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காது. போராடும் துப்புரவுத்தொழிலாளர்களை காவல் துறையினர் அடித்து துன்புறுத்துகின் றனர்'' என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், தாக்குதல் நடத்திய சாமியார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக நாங்கள் எங்கள் அமைப்பின் சார்பில் அதிகாரிகளைச் சந்தித்து புகார் தெரிவிக்கப்போகிறோம்'' என்று கூறினர்.

- விடுதலை நாளேடு, 29.12.18

வியாழன், 27 டிசம்பர், 2018

உ.பி. சாமியார் ஆட்சி இதுதான்! தாழ்த்தப்பட்ட மாணவிமீது பெட்ரோல் வீச்சு

ஆக்ரா, டிச.21 பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகோலா ஒன்றியப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவி வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.  அம்மாணவி பள்ளிக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்குத் திரும்புகையில், அவருடைய சைக்கிளை  பைக்கில்  பின்தொடர்ந்த சிலர் திடீரென அவள் மீது  பெட்ரோலை வீசி தீவைத்துள்ளனர்.

கடுமையான தீக்காயம் அடைந்த அம்மாணவி நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து துடித்தாள்.

அப்பகுதியைச் சேர்ந்தவர்களின் உதவியால் காவல்துறையினருக்கு 100 எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கப் பட்டபின்னர் மாணவி மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். தற்பொழுது சப்தர்ஜங் மருத் துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மால்புரா காவல்நிலையத்தில் வழக் குப் பதிவு செய்யப்பட்டது. அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், தாக்குதலுக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பட்நாயக் கூறியதாவது:

“பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற் றோரிடம் விசாரணை செய்தபோதிலும் வழக்கில் முன்னேறிச் செல்ல முடிய வில்லை. தாக்குதலின் பின்னணியில் உள்ள  நோக்கத்தை தெளிவாக அறிய முடியவில்லை. தனிப்பட்ட வகையில் இங்கிவருகின்ற பல்வேறு குழுக்கள் பல்வேறு கோணங்களில் இப்பிரச்சி னையில் விசாரணை செய்து வருகின் றனர்’’ என்றார்.

பதேபுர்சிக்ரி தொகுதியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சீமா உபாத் யாயா, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கலிச்சரம் சுமன் மற்றும் பீம் ஆர்மி அமைப்பினரும் பாதிக்கப்பட்ட மாண வியின் கிராமத்துக்குச் சென்று அவள் உறவினர்களை நேரில் சந்தித்து விசா ரணை செய்து வருகின்றனர்.  பீம் ஆர்மி அமைப்பினர் காவல்துறையினரி டமும், இப்பிரச்சினைகுறித்து விசாரித் துள்ளனர்.

ஆக்ரா பகுதியின் பிம் ஆர்மி அமைப்பின் தலைவர் அனில் கர்தம் கூறியதாவது:

“குற்றமிழைத்தவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையினரிடம் வலியுறுத்தி வரு கிறோம். இல்லையென்றால் போராட் டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித் துள்ளோம்.  அந்த பெண்ணுக்கோ, அவள் குடும்பத்தினருக்கோ எதிரிகள் என்று எவரும் கிடையாது. இந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என் கிற நோக்கத்திலேயே இதுபோன்ற சதிகள் நடந்துள்ளதாகத் தெரிகிறது’’ என்றார்.

உத்தரப்பிரதேச மாநில மேனாள் முதல்வர் அகிலேஷ் டிவிட்டர் சமூக வலைத்தளப்பக்கத்தில் இப்பிரச்சினை குறித்து தம்முடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அவர் டிவிட்டர் பதிவில் குறிப் பிட்டுள்ளதாவது:

“முதலாவது ஒரு பெண்மீதான பாலியல் வன்முறை முயற்சி, இரண் டாவது மாணவிமீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு ஆகிய இந்த இரண்டு நிகழ் வுகள் வாயிலாக எந்த அளவுக்கு சமூக விரோதிகள் துணிச்சல் பெற்றுள்ளனர் என்பதை காட்டுகிறது. சமூக விரோதி களே இதைச் செய்கிறார்கள். அவர் களுக்கு அரசின்மீது அச்சமில்லை அல்லது அரசிடமிருந்து பாதுகாப்பை அவர்கள் பெறுகிறார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாழ்த் தப்பட்ட வகுப்பினர் தாக்கப்படுவது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள் ளாக்கப்படுவது, அவற்றுக்கெல்லாம் ஆளும் பாஜக அரசு துணைநிற்பது, குற்றமிழைத்தவர்களை காப்பது போன்ற செயல்களால் இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
- விடுதலை நாளேடு, 21.12.18