பக்கங்கள்

பிற்படுத்தப்பட்டோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிற்படுத்தப்பட்டோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஜூலை, 2025

வரவேற்கத்தக்க அறிவிப்பு! உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு!



தமிழர் தலைவர் ஆசிரியரின் பாராட்டும், நன்றியும்!

உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதற்கு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தமது நெஞ்சம் நிறைந்த பாராட்டினையும், நன்றியையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் எஸ்.சி.,  எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆணை பிறப்பித்ததை வரவேற்று நேற்று (4.7.2025) ‘விடுதலை’யில் அறிக்கை வெளியிட்டிருந்தோம்.

OBC என்ற பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு  விரிவுப்படுத்த வேண்டியது அவசரம், அவசியம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். நமது கோரிக்கைக்கு செவி சாய்த்ததுபோல் இன்று (5.7.2025)) காலை அந்த நல்ல செய்தி வெளிவந்துவிட்டது. ‘பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என்ற ஆணையை உச்சநீதிமன்றம் பிறப்பித்துவிட்டது. சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமாக இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள், மேனாள் ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கும் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதி மன்ற மேலதிகாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கான 1961 ஆண்டின் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பணி சார்ந்த விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் சார்ந்த விவரங்கள் அடங்கிய பட்டியலில் முறைப்படி திருத்தம் செய்துள்ளனர். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜூலை 3 ஆம் நாள் கையொப்பமிட்டு விதி எண்.4A–வில் திருத்தத்தை அங்கீகரித்துள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் விதி எண்.146/பிரிவு 2–இன்படி உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு பெறுவது உறுதி

புதிய விதி 4A–வின்படி- “பல்வேறு பதவிகளுக்கான நேரடி நியமனங்களுக்கு எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்படுகிறது. அவ்வப்போது ஒன்றிய அரசு வெளியிடும் அறிவிப்புகள், அறிக்கைகள்,  அரசாணைகள் மட்டும் விதிமுறைகளுக்கு ஏற்றபடி இது பின்பற்றப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பற்றிய விவரங்கள், இன்ன பிற திருத்தங்கள், நிபந்தனைகள் போன்றவற்றை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவ்வப்போது அறிவிக்கும்போது அவற்றுக்கேற்ப மேற்கண்ட ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும். பணி நியமனங்களின்போது மேற்கண்ட பிரிவினர் அனைவரும் ஒதுக்கீடு பெறுவது உறுதி செய்யப்படுகிறது.”

இவ்வாறு திருத்தப்பட்ட விதி எண்.4A–வில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

நமது நெஞ்சம் நிறைந்த
பாராட்டு – நன்றி!

‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி, மாற்றுத் திறனாளிகள் என அனைத்து பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அளித்திடும் ஆணையை பிறப்பித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் பி.ஆர்.கவாய் அவர்களுக்கு,  நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், நன்றியையும் உரித்தாக்குகிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

5.7.2025

புதன், 25 செப்டம்பர், 2024

ஆந்திர சட்ட மன்றத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு – அமைச்சரவையில் தீர்மானம்


விடுதலை நாளேடு

அமராவதி, செப்.20 ஆந்திர அமைச் சரவை கூட்டம் முதலமைச்சர் சந்திரபாபு தலைமையில் அமராவதியில் நேற்று (19.9.2024) நடை பெற்றது.

இதில் சட்டப் பேரவையில், பிற்படுத் தப்பட்ட பிரிவினருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதன் மூலம் தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் சந்திரபாபு நிறைவேற்றி உள்ளார். மேலும் மதுபான கடைகளை மீண்டும் தனியாருக்கே வழங்கி, தரமான மதுபானங்களை குறைந்த விலைக்கு கொடுப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

180 மிலி ரூ.99-க்கு தரமானதாக வழங்கிட வேண்டுமெனவும், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் அளவுக்கு விலை இருக்க வேண்டுமெனவும், அதுவும் தரமான மதுபானங்களை மட்டுமே விற்க வேண்டுமெனவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஜெகன் அரசு, அவரது ‘சாட்சி’ நாளிதழை மட்டுமே கிராம,வார்டு செய லகங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ.200 செலுத்தி அரசு சார்பில் வழங்கி வந்தது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும், சாட்சி நாளிதழ் வழங்குவதை நிறுத்தவும் முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவிட்டார்.

ஆதார் அட்டைபோன்று, மாணவ, மாணவிகளுக்கு தனி அடையாள அட்டையை அரசு தரப்பில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு ‘ஸ்டே மீ’ எனும் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. உள்துறைக்கு புதிய கார்ப்பரேஷன் கொண்டு வரப்பட உள்ளது.
இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 9 நவம்பர், 2023

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கூடுதலாக ஜாதிகளை சேர்க்க மாநிலங்களுக்கு அதிகாரம் மசோதா மக்களவையில் எதிர்ப்பின்றி நிறைவேறியது


v5

புதுடில்லி, ஆக.11 இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எந்தெந்த சாதிகளை சேர்ப்பது என முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட திருத்த மசோதா மக்கள வையில் நிறைவேறியது. இடஒதுக் கீட்டு உச்சவரம்பை நீக்க தி.மு.க, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

27 சதவீத இடஒதுக்கீட்டுக்கான இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டி யலில் (ஓ.பி.சி.) எந்தெந்த சாதிகளை சேர்ப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு மீண்டும் அளிப்பதற்கான 127ஆவது அரசமைப்பு சட்ட திருத்த மசோ தாவை ஒன்றிய அரசு உருவாக்கி உள்ளது. இம்மசோதாவை நேற்று முன்தினம் நாடாளுமன்ற மக்கள வையில் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் தாக்கல் செய்தார்.

இந்தநிலையில், மக்களவையில் நேற்று (10.8.2021) இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. அப்போது, பெகாசஸ் உளவு விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமைதியாக இருக்கைக்கு திரும்பி, விவாதத்தில் பங்கேற்றனர்.

மழைக்கால கூட்டத்தொடரில், இந்த மசோதா மீது மட்டுமே அமைதியாக விவாதம் நடந்தது. ஒன்றிய அமைச்சர் வீரேந்திர குமார், இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதா, வரலாற்று சிறப்புமிக்கது. இந்த மசோதாவால் 671 ஜாதிகள் பலனடையும் என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, விவாதத்தை தொடங் கினார். அவர் பேசியதாவது:-

இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதாவை காங்கிரஸ் முழுமன தாக ஆதரிக்கிறது.

பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இதை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. அதே சட்டபூர்வ உரிமையை மற்ற மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும். மாநிலங்களுடன் பேசி, 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டும்.

நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க ஒன்றிய அரசு மசோதா கொண்டு வந்ததுபோல், இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்க மசோதா கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. சார்பில் பேசிய டி.ஆர்.பாலுவும் இடஒதுக்கீட்டு உச்ச வரம்பை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), லாலன்சிங் (ஐக்கிய ஜனதாதளம்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), ரிதேஷ் பாண்டே (பகுஜன் சமாஜ்) ஆகிய உறுப்பினர்களும் 50 சதவீத உச்ச வரம்பை நீக்க வேண்டும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண் டனர்.

அப்னா தளம் நாடாளுமன்ற உறுப்பினரும், ஒன்றிய அமைச்ச ருமான அனுப்ரியா படேல், அகில இந்திய  மஜ்லிஸ் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர் அசாதுதின் ஒவைசி ஆகியோரும் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அனுப்ரியா, ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தாழ்த்தப்பட் டோர் முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு அளிக்குமாறு ஒவைசி கோரிக்கை விடுத்தார். சிவசேனா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் களும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

விவாதம் முடிந்தநிலையில், நேற்று (10.8.2021) இரவு மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது.

386 உறுப்பினர்கள் மசோதா வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் மசோதா நிறைவேறியது.

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை காட்டாத ஒன்றிய அரசு! மத்திய பல்கலை.களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அநீதி!!

 

பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் வெறும் 4 விழுக்காடுதானா?

 2

புதுடில்லி, ஆக.3- நாடாளுமன்றத்தில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் அளித்த பதிலில், ஒன்றிய அரசின்கீழ் இயங்கிவரும் மத்திய பல்கலைக்கழகங்கள் 45 இல் பேராசிரியர்கள் பணியிடங்களில் வெறும் 4 விழுக்காடு மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மண்டல் குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன்படி ஒன்றிய அரசின் துறைகளில் பணிவாய்ப்புகளில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால், வெறும் 4 விழுக்காட்டளவில் மட்டுமே பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. மேலும், கூடுதல் பேராசிரியர் பணியிடங்களில் 6 விழுக்காடு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திரப்பிரதேச மாநில நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் குமார் சிங்காரி எழுப்பிய கேள்வியில் ஒன்றிய அரசின் கீழ் இயங்கிவரும் மத்திய பல்கலைக்கழகப் பணியிடங்களில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை அளிக்குமாறு கோரினார் அதற்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் வெளியிட்ட தகவலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி யுள்ளது.

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்கள் 45இல் துணை வேந்தர்கள் பணியிடங்களில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வர்கள் 5 பேர் மட்டுமே உள்ளனர்.

மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் கூடுதல் பேராசிரி யர்களுக்கான பணியிடங்களில் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கையைவிடவும் குறைவாகவே பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளது. பேராசிரியர்கள் பணியிடங்களில் பொதுப்பிரிவில் 85 விழுக்காடும், கூடுதல் பேராசிரியர் பணியிடங்களில் பொதுப்பிரிவில் 82 விழுக்காடும் உள்ளனர்.

பேராசிரியர்களுக்கான மொத்த பணியிடங்கள் 1341இல் பொதுப்பிரிவில் 1146, தாழ்த்தப்பட்டோர்  (SC)96, பழங்குடியினர்(ST) 22, பிற்படுத்தப்பட்டவர்கள்(OBC) 60, பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதியினர் (EWS) 3, மாற்றுத் திறனாளிகள் (PWD) பிரிவில் 14 ஆக உள்ளது.

கூடுதல் பேராசிரியர்களுக்கான மொத்த பணியிடங்கள் 2,817, பொதுப்பிரிவில் 2,304, தாழ்த்தப்பட்டோர்ர் (SC)231, பழங்குடியினர்(ST) 69, பிற்படுத்தப் பட்டவர்கள்(OBC) 187, பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதியினர் (EWS) 7, மாற்றுத் திறனாளிகள் (PWD) பிரிவில் 19 ஆக உள்ளது.

உதவிப் பேராசிரியர்களுக்கான மொத்த பணியிடங்கள் 10,098, பொதுப்பிரிவில் 8,734, பட்டியலினத்தவர் (SC)1,421, பழங்குடியினர் (ST) 625, பிற்படுத்தப் பட்டவர்கள்(OBC) 1,901, பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதியினர் (EWS) 192, மாற்றுத் திறனாளிகள் (PWD) பிரிவில் 225 ஆக உள்ளது.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன் கூறுகையில், தேசிய அளவில் அரசுப்பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான காலியிடங்கள்குறித்து தனியே ஆய்வு செய்யப்பட வேண்டும். அதன்மூலம் நாடுமுழுவதுமிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து தகுதியான பேராசிரியர்கள் வரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அதேபோல், துணைவேந்தர்களாக நியமனம் பெறவும் தகுதியான போராசிரியர்கள் குறித்த தகவல்களும் திரட்டப்பட வேண்டும் என்றார்.

உதவிப்பேராசிரியர்கள் நியமனங்களில் பொதுப்பிரிவில் 59 விழுக்காடாக உள்ள நிலையில்,  பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 18 விழுக்காடாக எண்ணிக்கை உள்ளது. ஆனாலும் இடஒதுக்கீட்டில் இன்னமும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பணிநியமனங்களில்  27 விழுக்காடு  முழுமை அடையவேண்டியதாகவே உள்ளது.

ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் பொதுப்பிரிவில் 70 விழுக்காடாக உள்ள நிலையில், பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 12 விழுக்காடாக உள்ளது.

கிரீமிலேயர் முறை நீக்கப்பட வேண்டும்

அகில இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி கூறுகையில், 

மத்திய பல்கலைக்கழகங்களுக்கு தகுதியான பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிரீமிலேயர் முறையால் விண்ணப்பிக்கக்கூட முடியாத நிலை உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிருமி லேயர் முறையில் ஆண்டு வருவாய் வரம்பு ரூ.8 லட்சம் என்பதை ரூ.15 லட்சமாக அதிகரித்திட வேண்டும். குறைந்த வருவாய் வரம்பின்மூலம் அரசுப்பணியில் உள்ளவர்களின் பிள்ளைகள் விண்ணப்பிப்பதையே தடுக்கும் நிலை உள்ளது. கிரீமிலேயர் முறையே முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்றார்.

சனி, 21 ஆகஸ்ட், 2021

இதர பிற்படுத்தப்பட்டோரை மாநில அரசுகளே அடையாளம் காணும் மசோதா: குடியரசுத்தலைவர் ஒப்புதல்


புதுடில்லி ஆக.21 நடந்து முடிந்த நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற்றப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான  இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கை வெகு நாட்களாக அனைத்துக் கட்சிகளும் எழுப்பி வருகின்றன.  இது குறித்து சட்டத் திருத்தம் அமைக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.  இதையொட்டி நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த 127 ஆம், சட்ட திருத்த மசோதாவில் இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியான இதர பின் தங்கிய வகுப்பினரை மாநில அரசுகளே அடையாளம் கண்டு அறிவிக்கலாம் என ஒரு பிரிவு அமைக்கப்பட்டிருந்தது.   நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலத் தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஏற்கெனவே இந்த மசோதா ஒன்றிய அமைச்சரவையால் ஏற்றுக்  கொள்ளப்பட்ட நிலையில் இதை சட்டமாக்கக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.  எனவே குடியரசுத் தலைவர் ஒப்புதலின் அடிப்படையில் அரசிதழில் 127 ஆம் சட்டத் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மருத்துவப் படிப்பில் 27 சதவிகித இடஒதுக்கீடு கிடைக்க உழைத்த தமிழர் தலைவருக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்


சென்னை,ஆக.21- அகில இந்திய பிற்படுத்தப் பட்ட பணியாளர் நல சங்க கூட்ட மைப்பின் நிர்வாகிகள் நேற்று (20.8.2021) சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித் தனர். மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், இப்பிரச் சினையை முதன் முதல் 8.5.2020 அன்று அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தி மக்கள் மன்றத்திலும், அரசியல் தலை வர்கள் மத்தியிலும் எடுத்துச் சென்று, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்திட வழிவகை செய்தமைக்கு, நன்றி யினையும் மகிழ்வையும்  தெரிவித்துக் கொண்டனர்.

அத்துடன், அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகலாம் மற்றும் மாநில அரசுக்கு இதர பிற்படுத்தப் பட்டோர் குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் ஆகிய முக்கிய பிரச் சினைகளில் தொடர்ந்து வலியுறுத்தி  வெற்றி கண்டதற்கும் நன்றி தெரிவித்தனர்.

ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோருக் கான முக்கிய கோரிக்கைகளை நிறை வேற்றிட ஒன்றிய அரசை வலி யுறுத்த வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் நிர் வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

1.       2021இல் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும். 

2.இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினர் குறித்து ஒன்றிய அரசு மறுபரி சீலனை செய்து முற்றிலுமாக நீக்க வேண்டும்

3.அரசுடைமையாக்கப்பட்ட ஒன்றிய அரசு வங்கிகளில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு பறிபோகும் வேலை வாய்ப்புகள்.

4.       அப்ரண்டிஸ் பயிற்சிக்கான நியமனத் தில் இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறையாக நிறைவேற்றப்படாமை.

5.  நாகையில் சிபிசிஎல் நிறுவனம் 50 சத வீதம் தனியார் முதலீட்டில் துவக்கப்பட்டா லும், இட ஒதுக்கீடும், உள்ளூர் பட்டதாரி களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.

6.       பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டுக் கழகம், அய்.சி.எப்., கனரகத் தொழிற்சாலை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு.

கூட்டமைப்பின் சார்பில் பொதுச் செய லாளர் கோ.கருணாநிதி, பொருளாளர் எம்.இளங்கோவன் (அய்.அய்.டி.), செயலா ளர்கள்: எஸ்.அன்புகுமார் (அய்.சி.எப்), எஸ்.பிர பாகரன் (நியூ இந்தியா காப்பீடு), ஏ.ராஜசேகரன் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி), மற்றும் டி.துரைராஜ் (சென்னை பெட்ரோலி யம் கார்ப்பரேசன்), சுரேஷ் (எச்.வி.எப்., ஆவடி), ராஜ்குமார், லோகநாதன் (சென்சஸ் துறை), டி.ரவிகுமார், எஸ்.நடராசன், எஸ்.சேகரன், ஞா.மலர்க்கொடி, கே.சந்திரன், எஸ்.சத்தியமூர்த்தி, லோகேஷ் பிரபு, வேலாயுதம் (யூனியன் பாங்க் ஆப் இந்தியா), ஆகியோர் பங்கேற்றனர்.

6 அம்ச கோரிக்கைகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி,  திராவிடர் கழகத் துணைத் தலைவர்  கவிஞர் கலி.பூங்குன்றன்  ஆகியோரிடம் வழங்கினர்.

தமிழர் தலைவர் அவர்கள் கோரிக்கைகள் குறித்து கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம் விரிவாக உரையாடினார். அரசிடம் உரிய முறையில் தெரிவித்திடவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்  ஆவன செய்வதாக தெரிவித்தார்.  

வியாழன், 22 ஜூலை, 2021

வங்கிகளில் கிளார்க் நியமனம்: பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்!

 

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் எழுத்தர் (கிளார்க்) பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த விவரங்களை வங்கி பணியாளர் தேர்வு மய்யம் வெளியிட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி, தமிழ்நாட்டில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு - 27 விழுக்காடு, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு - 18 விழுக்காடு, பழங்குடியின பிரிவினருக்கு - 1, EWS  - 10 விழுக்காடு என்ற விகிதத்தில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால் வெளியிடப்பட்ட விளம்பரத்தில், குறிப்பாக, யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தமிழ் நாட்டில் 147 எழுத்தர் பணியிடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கு 40 இடங்களுக்கு பதிலாக பூஜ்யம் இடங்களும், EWS  எனப்படும் உயர்ஜாதி ‘ஏழைகளுக்கு’ 14 இடங்களுக்குப் பதிலாக 21 இடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பூஜ்யம் இடங்களும் உயர்ஜாதி ‘ஏழை’களுக்கு 7 இடங்கள் அதிகமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பல மாநிலங்களில்,  இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின  பிரிவினர்க்கு அவர்களுக்குரிய இட ஒதுக்கீடு சதவீதத்தின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படாமல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பின்குறிப்பிட்டுள்ள மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மறுப்பு மற்றும் உயர்ஜாதி ‘ஏழை’களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிக இடங்கள்” குறித்த விவரம்:

                                                     ஓபிசி          உயர்ஜாதி ஏழை’ EWS 

மாநிலம்          மொத்த            ஒதுக்கப்பட்ட             வாய்ப்பு           ஒதுக்கப்பட்ட               கூடுதல்          

               இடங்கள்        இடங்கள்        மறுப்பு              இடங்கள்        இடங்கள்

ஆந்திரா           248        0             67           51           +26

கருநாடகா     209        33           23           37           +16

மகாராட்டிரா               321        9             79           52           +20

ஒடிசா               113        2             29           22           +11

தமிழ் நாடு     147        0             40           21           +07

தெலங்கானா              205        0             55           43           +22

உத்தரப்பிரதேசம்     244        45           21           48           +24

மேற்கு வங்கம்          71           13           06           12           +05

இது குறித்து அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சம்பந்தப்பட்ட வங்கி பணியாளர் தேர்வு மய்யம், யூனியன் பாங்க் ஆப் இந்தியா உயர் அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க.  தலைமையிலான கூட்டணி அரசு இடஒதுக்கீட்டின் முதுகெலும்பை முறித்து, ஆணி வேரை அறவே சுட்டு எரித்து விட்டுத் தான் மறு வேலை பார்க்கும் போலும்.

மேற்கண்ட புள்ளி விவரம்- மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ஜியம் இடம் என்றால் இந்தப் பார்ப்பன ஆதிக்கக் கொழுப்புக்கு முடிவுதான் என்ன?

கடந்த 2020இல் பாரத ஸ்டேடட் வங்கியின் எழுத்தர் (கிளார்க்) தேர்வின் முடிவுகள் சொல்லுவது என்ன?

பழங்குடியினருக்கு கட்ஆஃப் மார்க் - 53.75

தாழ்த்தப்பட்டோருக்கு -  61.25

பிற்படுத்தப்பட்டோருக்கு - 61.25

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதிப் பிரிவினருக்கு - 28.5 என்னே கொடுமை!

இது உயர்ஜாதி ஏழை ( EWS ) என்ற ஒன்றை ஏற்படுத்தி பார்ப்பனர்கள் கொல்லைப்புறம் வழியாக நுழைவதற்கான ஏற்பாடு அல்லாமல் வேறு என்ன?

"ஆயிரங்கால் பூதமடா தொழிலாளி" - என்று ஜீவானந்தம் பாடியதை நினைவு கொள்க. ஒடுக்கப்பட்ட மக்கள் ஓங்கி எழாவிட்டால் ஓட்டாண்டியாக வீதிகளில் நிற்க வேண்டியதுதான்.

பார்ப்பனர் நாயகத்தை வீழ்த்திட, பழிவாங்கப்படும் மக்கள் சக்தி - 'ஆயிரங்கால் பூதமாகக்' கிளர்ந்து எழுக, எழுக, எழுகவே!