பக்கங்கள்

கணக்கெடுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணக்கெடுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 நவம்பர், 2023

ஜாதிவாரி கணக்கெடுப்பு மறுப்பு எதிர்க்கட்சிகளின் ஆயுதமாக மாறும்


2024-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை. அதேசமயம் ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு உச்சவரம்பை அகற்றுவதற்கான கோரிக்கை அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே பக்கத்தில் நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, 2011-இல் சமூக, பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தக் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடவும், அதன டிப்படையில் ஜாதிகளுக்கான இடஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகள் ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பீகாரில் ஆளும் 'மகாத்பந்தன்' கூட்டணியில் அங்கம் வகிக்கும் அய்க்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் நாமும் வலியுறுத்தி வருகிறோம்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் இதை வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் கருநாடகாவின் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, "2011-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட இதர பிற்படுத் தப்பட்டோர் கணக்கெடுப்பு விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். ஆனால் பிரதமர் மோடி இதனை ஒரு போதும் செய்யமாட்டார். பிரதமர் மோடிக்கு இதர பிற்படுத்தப் பட்டோர் (ஓபிசியினர்)மீது அக்கறை இல்லை. ஆனால் காங்கிரஸ் அரசு நிச்சயம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடும்" என்றார். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பா.ஜ.க. தனது வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க இந்துத்துவா கொள்கையைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு உச்சவரம்பை அகற்றுவது ஆகியவை 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முக்கிய கேள்வியாக மாறி யிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1872-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1931-ஆம் ஆண்டு வரை இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்திய ஒவ்வொரு முறையும் அதில் ஜாதி தொடர்பான தகவல்களும் பதிவு செய்யப்பட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1951 ஆம் ஆண்டு தனது முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தியபோது, ​​தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மற்றும்  பழங்குடியினர் மட்டுமே ஜாதியின் பெயரால் வகைப்படுத்தப்பட்டனர்.

 1980களில் ஜாதி அரசியலை அடிப்படையாகக் கொண்ட பல மாநில கட்சிகள் தோன்றியபோது நிலைமை மாறியது.

அரசியலில் உயர்ஜாதியினர் என்று அழைக்கப்படுபவர்களின் மேலாதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் இந்தக் கட்சிகள், தாழ்த்தப்பட்ட ஜாதியினர் என்று அழைக்கப்படுபவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கின.

சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆராய இந்திய அரசு 1979 ஆம் ஆண்டில் மண்டல் ஆணையத்தை அமைத்தது.

ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது. ஆனால் இந்தப் பரிந்துரை 1990 ஆம் ஆண்டு தான் செயல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொதுப்பிரிவு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் இடஒதுக்கீட்டுடன் இணைக்கப்பட்டதால், அரசியல் கட்சிகள் அது தொடர்பான கோரிக்கையை அவ்வப்போது எழுப்பத் தொடங்கின. இறுதியாக 2010இல், ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கோரியபோது, ​​அப்போதைய காங்கிரஸ் அரசு சம்மதித்தது. சமூக-பொருளாதார  - ஜாதிக் கணக்கெடுப்பு 2011 இல் நடத்தப்பட்டது. ஆனால் இதன் மூலம் பெறப்பட்ட ஜாதி தொடர்பான தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இதேபோல் கருநாடகாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இதில் பெறப்பட்ட தரவுகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி மாநில அரசு கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கியது.

இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ள இந்தப் பணியின் முதல் கட்டத்தை மே 31-ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில், பீகாரில் வசிக்கும் மக்களின் ஜாதி, துணை ஜாதி மற்றும் சமூக-பொரு ளாதார நிலை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படும். பீகார் அரசு நடத்தும் இந்த ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக் கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜாதியைக் காப்பாற்றிக் கொண்டு, அதே நேரத்தில் அதன் கணக்கெடுப்பை மறுதலிப்பது பிஜேபியின் மலிவான அரசியலே! உயர்ஜாதி ஆதிக்கம் வெளிச்சத்துக்கு வந்து விடுமோ என்ற அச்சமும்கூட.

 

தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை


காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, செப். 13- இடஒதுக் கீட்டின் பலன்கள் மக்களுக்கு துல்லியமாக சென்றடைய தமிழ் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர் தலை எதிர்கொள்வது தொடர் பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவ னில் 11.9.2023 அன்று நடை பெற்றது.

கூட்டத்தின் முடிவில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மக்களவை தேர்தலுக்கு தயாரா வது தொடர்பாக சோழ மண்டல காங்கிரஸ் வாக்குச்சாவடி உறுப்பி னர்கள், நகர, மாநகர, ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை கும்பகோணத்தில் அண்மையில் நடத்தி இருந்தோம். 

அடுத்ததாக திண்டுக்கல், தேனி ஆகிய மக்களவைத் தொகுதி நிர் வாகிகள் கூட்டம் 21ஆ-ம் தேதியும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம் பரம் தொகுதி நிர்வாகிகள் கூட் டம் 24ஆ-ம் தேதியும், திருவள்ளூர் தொகுதிக்கு 30ஆ-ம் தேதியும், விருதுநகர், தென்காசி தொகுதி களுக்கு அக்.8-ஆம் தேதியும், கன்னி யாகுமரி தொகுதிக்கு அக்14ஆ-ம் தேதியும், தூத்துக்குடி, திருநெல் வேலி தொகுதிகளுக்கு அக்.22ஆ-ம் தேதியும் நடைபெற உள்ளன. 

மற்ற தொகுதிகளுக்கான தேதிகள் பின் னர் அறிவிக்கப்படும்.

எப்போதோ எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இட ஒதுக்கீடு செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதன் பலன்கள் துல்லியமாக மக்களுக்கு சென்ற டைவதில்லை.

இட ஒதுக்கீட்டின் பலன்கள் பாரபட்சமின்றி, சமமாக, துல்லி யமாக மக்களை சென்றடைய தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரைவில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம். பிர தமர் மோடி, இந்தியாவின் பெயரை மாற்றி இருக்கலாம்.

ஆனால் ஜி_20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் அனை வரும் "இந்தியா" என்று தான் கூறினர். ஒரே நாடு, ஒரே தேர்தலை அமல்படுத்த பிரதமர் மோடி முயற்சிக்கலாம். நாட்டில் சட்டம், நீதிமன்றங்கள் உள்ளன. அதில் அவரது முயற்சி தோற்கடிக்கப் படும். இவ் வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆருண், பீட் டர் அல்போன்ஸ்,  மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ண மூர்த்தி, உ.பலராமன், நாடாளு மன்ற உறுப்பினர்கள் செல்லக் குமார், ஜெயக்குமார், மாணிக்கம் தாகூர், விஜய்வசந்த், அசன் மவு லானா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மேனாள் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் பெ.விஸ் வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

மகாராட்டிரம், பீகாரைப் பின்பற்றி தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றிடுக!

தமிழ்நாடு சமூகநீதி மண் என்ற வரலாற்றை நிலை நிறுத்திடுக!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

மகாராட்டிரம், பீகார் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற் கொள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர்  தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

2020-2021 இல் நடைபெறவிருக்கும் நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ஜாதி வாரியான கணக் கெடுப்பு கட்டாயம் நடத்தப்படவேண்டும் என்பதை, தொடர்ந்து திராவிடர் கழகமும், முற்போக்கு சமூகநீதி அமைப்புகளும், கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன!

தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோர், முன்னேறியோர் (எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., எஃப்.சி.) போன்ற பல ஜாதியினரும், வகுப் பினரும் மக்கள் தொகையில் எவ்வளவு உள்ளனர் என்பதைக் கண்டறிய இது கட்டாயம் தேவை. 1901 இல் முதன்முதலில் பிரிட்டிஷ் அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கியபோதே, இம்முறை பின்பற்றப்பட்டது.

ஜாதி சட்டப்படி இன்னும் ஒழிக்கப்படவில்லையே!

ஜாதியும், ஜாதி அடிப்படையிலான பேதங்களும், சடங்குகள், சம்பிரதாயங்கள், சட்டங்கள், நம் நாட்டில் நடைமுறையில் இருக்கின்றன என்பது யதார்த்தம்.

ஜாதியை ஒழிக்க இந்த 73 ஆண்டுகால ‘‘சுதந்திர சுயராஜ்ஜியத்தில்'' எந்த முயற்சியும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதால்தான் தந்தை பெரியார் கட்டளைப்படி 1957 இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நகலை எரித்து 3000 பேர்,  6 மாதம் முதல் 3 ஆண்டுவரை கருஞ்சட்டைத் தோழர்கள் சிறைத் தண்டனை அனுபவித்தனர்.

திராவிடர் கழகம் நடத்திய

சட்ட எரிப்புப் போராட்டம்

அப்போராட்டத்தின் காரணமாக இருபால் தோழர் கள் சுமார் 16 பேர் மரணமடைந்து, வரலாற்றில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்!

தந்தை பெரியார் நடத்திய கடைசி மாநாட்டில்கூட (1973 ஆம் ஆண்டு) இதுபற்றிதான் முக்கியத் தீர்மானம் நிறைவேற்றி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக கோவில் கருவறைக்குள் நுழைந்து, ஜாதி இழிவைத் துடைத்தெறியும் வாய்ப்புக்காகவே  தந்தை பெரியார் போராடினார்.

பல மாநிலங்களிலும் தீர்மானம்

எனவே, ஏற்கெனவே மகாராட்டிர சட்டமன்றம் இப்படி ஜாதி வாரி கணக்கெடுப்பை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அது இப்போது எதிர்க்கட்சி அணி. ஆனால், பீகாரின் நிதீஷ்குமார் கட்சி ஆட்சியில், பா.ஜ.க.வின் கூட்டணி உள்ளதே!  அங்கேயும் சட்டப்பேரவையில் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை என்று வற்புறுத்தி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஒன்றை, ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது!

ஏற்கெனவே நமது திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றிய தீர்மானப்படியே, தமிழ்நாடு அரசும் வருகிற சட்டமன்றத் தொடரில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போதே (2021 இல்) ஜாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவேண்டியது அவசியம், அவசரமும்கூட!

தமிழ்நாடு சட்டமன்றத்திலும்

தீர்மானம் நிறைவேற்றிடுக!

மகாராட்டிரம், பீகார் மாநிலமும் வழிகாட்டியுள்ளன.

தமிழ்நாடு அ.தி.மு.க. அரசு இதைப் பின்பற்றி சமூகநீதி மண் இந்த மண் என்ற வரலாறு படைப்பதில் முந்திக் கொள்ளவேண்டும்!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

28.2.2020