பக்கங்கள்

ஸ்டாலின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்டாலின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 பிப்ரவரி, 2021

"இடஒதுக்கீடு கொள்கையை மறுப்பது, எரிமலையுடன் விளையாடுவதற்கு ஒப்பானது!"


மத்திய பா.ஜ.க. அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை,பிப்.9. திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவ ருமான தளபதி மு.க.ஸ்டாலின்  நேற்று (8.2.2021) விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

“சமூகநீதியைச் சீர்குலைக்கும் வகை யில் மத்திய அரசின் முக்கிய துறைகளில் இணைச் செயலாளர் பதவிகளுக்குத் தனியார் துறையிலிருந்து 30 பேரை நியமிக்க முடிவு செய்திருப்பதற்கு” தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகநீதியின் அடிப்படையான இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசு, மண்டல் ஆணைய தீர்ப்பின்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசின்  ஒரே ஒரு துறையில்கூட முழு மையாகச் செயல்படுத்தவில்லை.

சமூகநீதியை உருக்குலைக்க...

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக் களின் இடஒதுக்கீட்டையும் புறக்கணித்து மத்திய அரசின் துறைகளில்,  இதர பிற் படுத்தப்பட்டோர் மற்றும், தாழ்த்தப் பட்ட, பழங்குடியினத்தவருக்கு இட மில்லை என்ற எழுதப்படாத உத்தர வினை வேகமாகச் செயல்படுத்தி வருவது நாட்டின் சமூகநீதிக் கட்டமைப்பையே உருக்குலைக்கும் செயலாகும்.

புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு,  வங்கித் தேர்வுகள், யூ.பி.எஸ்.சி தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், அஞ்சல் தந்தி இலாகா உள்ளிட்ட மத்திய அரசின் துறைகளுக்கு நடைபெறும் பல்வேறு தேர்வுகள் ஆகியவற்றில், ஏற்கெனவே சமூகநீதிக்குச் சாவுமணி அடித்து- போதாக்குறைக்குப் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு மின்னல் வேகத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து - இந்நாட்டின் நிர்வாகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்க உரிமையில்லை என்று  இந்திய அரச மைப்புச் சட்டத்திற்கு எதிராகவே மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

பா.ஜ.க. -  ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு பதவி

இந்திய வரலாற்றில், சமூகநீதிக்கும் - இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கும்  முற்றி லும் எதிரான இப்படியொரு  அரசு இப்போது பா.ஜ.க. தலைமையில் அமைந் திருக்கிறது என்பது, நாட்டிற்கு ஏற்பட் டிருக்கும் கேடு. இதன் அடுத்தகட்ட மாகவே - தற்போது இணைச் செயலா ளர்கள், கூடுதல் செயலாளர்கள் உள் ளிட்ட பதவிகளுக்குத் தனியார் நிறுவனங் களில் இருந்து ஆட்களை - அதுவும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப் போனவர்களை மத்திய அரசின் துறைகளுக்கு அழைத்து வந்து- எஞ்சியிருக்கும் சமூகநீதிக் கட்டமைப்பையும் தகர்க்க, பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்வது மிகுந்த வேதனை யளிக்கிறது.

தனியார் துறையிலிருந்து நியமனம் செய்யப்படும் போது இடஒதுக்கீட்டுக் கொள்கை தூக்கி எறியப்படும். அப்படி நியமிக்கப்படுவோர் அவர்களின் சித்தாந் தத்தில் உள்ளவர்களை அரசுத் துறை களில் சேர்த்து விடுவார்கள்.

குறுக்கு வழியிலும்

இடஒதுக்கீட்டை சீரழிக்க...

பத்து சதவீத இடஒதுக்கீடு போதாது என்று இப்படிக் குறுக்கு வழியிலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையைச் சீர ழிக்க நடக்கும் இந்த முயற்சிகளை தி.மு.க. ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. 

இது கார்ப்பரேட் ஆட்சி என்பதால் -_ பொதுத் துறை நிறுவனங்கள் தனியா ருக்குத் தாரை வார்ப்பு என்று துவங்கி - அது பேயாட்டம் போட்டுக் கொண்டி ருக்கின்ற நேரத்தில் - மத்திய அரசின் துறைகளையும் தனியார் மயமாக்கும் இந்த முடிவு அரசியல் சட்டத்திற்கே விரோதமானது. அதுமட்டுமின்றி - மத்திய அரசு அலுவலகங்களில் தப்பித் தவறி பணியில் அமர்த்தப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின அலுவலர்கள் - அதிகாரிகள் ஆகியோருக்கு உயர்பதவிகளை எட்டாக் கனியாக்கி - அனைத்திலும் முன்னேறிய வகுப்பினரும் - கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டியவர்களும்  ஆக்கிரமித்துக் கொள்வதற்கே வழி வகுக்கும்!

தேர்தலில் பொய்ப் பிரச்சாரம்

தேர்தலில் பொய்ப் பிரச்சாரம் செய்து,  இதர பிற்படுத்தப்பட்ட- பட்டி யலின- பழங்குடியின மக்களின் வாக் குகளைப் பெற்ற மத்திய பா.ஜ.க. அரசு இப்போது அவர்களைப் பழிவாங்கும் விதத்தில் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, மத்திய அரசுத் துறைகளில் இணைச் செயலாளர், கூடுதல் செய லாளர் போன்ற பதவிகளுக்குத் தனியார் நிறுவனங்களில் இருந்து நியமனம் செய்யும் முடிவை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என்றும் -_ அனைத்துத் துறைகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்ட மற்றும் பழங்குடியின மக் களின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முழுமையாக அமல்படுத்திட வேண்டும் என்றும் பிர தமர் மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதைச் செய் யத் தவறி னால், வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

மக்களின் உரிமை

மத்திய அரசு நிர்வாகம் பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,  பழங்குடியின மக்களின் உரிமை என்பதை மத்திய பா.ஜ.க. அரசு உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற மறுப்பதும், அதற்கு எதிராக நடப்பதும்,  எரிமலையுடன் விளையாடு வதற்கு ஒப்பானதாகும். எனவே, மத்திய பா.ஜ.க. அரசு, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கருதினால், இதுகாறும் கடைப்பிடித்து வந்த அணுகு முறையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் மட்டுமின்றி, சமூகநீதி காக்கப் போராடும் அனைவரது சார்பிலும் எச்சரிக்க விரும்புகிறேன்!

-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

புதன், 10 ஜூலை, 2019

இட ஒதுக்கீடு அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின்

*கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆற்றிய உரை*

சமூக நீதிக் கொள்கைக்கு கிஞ்சிற்றும் சேதாரமில்லாமலும், நீர்த்துப் போகாமலும், காப்பாற்றுவதற்காக நாமெல்லாம் இன்று இங்கே கூடியிருக்கிறோம்.

சமூக நீதியின் ஊற்றுகண்ணாக - இட ஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவதில், பிற மாநிலங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக, முன்னோடியாக விளங்குகிறது தமிழகம்.

தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்திலிருந்து துவங்குகிறது.

"கம்யூனல் ஜி.ஓ" மூலம் சாதி அடிப்படையில், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும், இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு - அந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு "செம்பகம் துரைராஜன்" வழக்கு மூலம் ஆபத்து வந்த போது தமிழகமே கொந்தளித்தது.

1951-ல் வந்த அந்த ஆபத்தை எதிர்த்து, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் தமிழகத்தில் பெரும் போராட்டத்தினை நடத்தினர்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அன்று பிரதமராக இருந்த பண்டித நேரு அவர்களுக்கு அரசியல் அழுத்தத்தைக் கொடுத்தார்.

அதன் காரணமாக, பண்டித நேரு அவர்கள் முன்வந்து இந்திய அரசியல் சட்டத்தில் 1951ஆம் ஆண்டு, முதலாவது திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

இந்திய அரசியல், சட்டம் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பொதிந்திருக்கும் சமூக நீதியை நிலைநாட்ட, முதன்முதலில் திருத்தப்பட்டது என்பதும் - அது தமிழகத்தின் போர்க் குரலால் நிகழ்ந்தது என்பதும் வரலாறு.

அந்தத் திருத்தத்தின் மூலம், அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்ட 15 (4) என்ற புதிய பிரிவில் "சமூகரீதியாகவும், கல்வி நிலையிலும் (Socially and Educationally)" என்ற சொற்றொடர்தான் இணைக்கப்பட்டது.

அரசியல் சட்டத்தின் 15(4) மற்றும் 16(4) ஆகிய பிரிவுகளின்படி "சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு" என்று தெளிவாக இருக்கிறது.

"பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு" என்று எந்த சொற்றொடரும் அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவிலும் இடம்பெறவில்லை.

தமிழகத்தில் மட்டுமல்ல - இந்திய அளவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் "சமூக நீதி" மட்டுமே அடிப்படை அம்சம் (Basic Structure) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களோ, தலைவர் கலைஞர் அவர்களோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களோ, - ஏன் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களோ, இந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளவில்லை.

7.6.1971-ல் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு
25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக முதல்வர் கலைஞர் அவர்களால் உயர்த்தப்பட்டது.

அதே அரசு ஆணையில், பட்டியலின மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு, 16 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 1.2.1980 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தினார்.

1989ல் முதலமைச்சரான தலைவர் கலைஞர் அவர்கள், 28.3.1989 அன்று மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு  20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு அளித்தார்.

பட்டியல் இன மக்களுக்கு 18 சதவீதம் இருப்பது போல், பழங்குடியினர் சமுதாயத்திற்குத் தனியாக 1 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தார்.

இப்படி பல்வேறு காலகட்டங்களில் உயர்த்தப்பட்டு, இன்றைக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் சட்ட ரீதியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் மண்டல் வழக்கில் 19.11.1992 அன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு  வெளிவந்தது.

"கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு
50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது" என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆகவே தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க, முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இருந்தபோது சட்டமன்றத்தில், மசோதா கொண்டு வரப்பட்டு, 31.12.1993 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து 1994-ஆம் ஆண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் "தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடு" சேர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஆகவே 69 இடஒதுக்கீடு, தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், கடந்த 30 ஆண்டுகளாகத் தங்கு தடையின்றி, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதமராக  இருந்த "சமூகநீதிக் காவலர்" திரு. வி.பி.சிங் அவர்கள், மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.

அதன் அடிப்படையில் மத்திய அரசு வேலை வாய்ப்புகளிலும்,  கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு உரிமையைப் பெற்றோம்.

உச்சநீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்த பிறகும், இன்றைக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசின் எந்தத் துறையிலும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

17.1.2019 அன்று "இந்தியன் எக்ஸ்பிரஸ்" பத்திரிக்கையில் வெளிவந்துள்ள செய்தியின்படி, மத்தியப் பல்கலைக் கழகங்கள் முழுக்க முழுக்க மேல்தட்டு வகுப்பினரின் "சொர்க்கபுரியாக" மாற்றப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்  பத்திரிக்கை  வெளியிட்டுள்ள  புள்ளி  விவரங்களின்  அடிப்படையில்  பார்த்தால்,  மத்திய அரசில் உள்ள 71 துறைகளில்,  பிற்படுத்தப்பட்ட  சமுதாயத்தைச்  சேர்ந்தவர்கள் 14.94 சதவீதம் மட்டுமே பணி புரிகிறார்கள்.

மத்திய அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டின் நிலை 30 வருடங்கள் கழிந்த பிறகும் இதுதான்!

ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு சிதைந்து கிடக்கிறது. இந்த நிலையில்,  பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு, ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தை - அவசர அவசரமாகக் கொண்டு வந்து - தேர்தலுக்கு  முன்பு நிறைவேற்றியது.

இந்த நேரத்தில் ஒரு கருத்தை முன் வைக்க விரும்புகிறேன்.

முதன்முதலாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டபோதே சிலர் "பொருளாதார ரீதியாக (Economically)" என்ற சொற்றொடரும் இடம் பெற வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள்.

ஆனால் அதனை அன்று பிரதமராக இருந்த பண்டித நேரு அவர்களோ, அன்றைய சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் அவர்களோ ஏற்றுக் கொள்ளவில்லை.

"சமூகரீதியாக" என்ற வார்த்தை பரந்துபட்ட பல பொருள்களை உள்ளடக்கிய விரிவானதொரு சொல்லாகும். (‘Socially' is a much wider word including many things)" என்று பண்டித நேரு அவர்கள் அன்றைக்கே விளக்கமளித்தார்.

ஆகவே சுதந்திர இந்தியாவில் பதவியேற்ற 15 பிரதமர்களில் 14 பிரதமர்கள், சமூக-கல்வி நிலைகளில்  பிற்படுத்தப்பட்டோர்க்கும், தாழ்த்தப்பட்டோர்க்கும், பழங்குடியினர்க்கும், அரசியல் சட்ட ரீதியாக வழங்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீட்டைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.

இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு மாறாகவே,ஓர் அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, "பொருளாதார ரீதியாக" என்று ஒரு புதிய பிரிவு இணைக்கப் பட்டிருக்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் புகுந்துருக்கும் இந்த "பொருளாதாரப் பிரிவு", இடஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப் போகச் செய்து விடும். அந்த உண்மையை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல என்பது ஒரு தீர்ப்பில் அல்ல - பல்வேறு உச்சநீதிமன்றத்  தீர்ப்புகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட - சமூக ரீதியாகவும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும், பட்டியல் இன, பழங்குடியின மக்களுக்கும் அரசியல் சட்டம் வழங்கிய உரிமையே இடஒதுக்கீடு என்பதாகும்.

அந்த உரிமை பறிக்கப்பட தமிழக அரசு இடமளித்து விடக்கூடாது.

நாம் "50 சதவீத இட ஒதுக்கீடு" ; "கிரிமி லேயர் நீக்கம்";  “இடஒதுக்கீட்டின் அளவை மாநிலங்களே முடிவு செய்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்”  என்று கோரிக்கைகளை வைத்துள்ள நிலையில், இருக்கின்ற 27 சதவீத இடஒதுக்கீட்டையும்  பறிக்கும்  விதத்தில் - முன்னேறிய  பிரிவினருக்கான  இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்த்துள்ளது; எதிர்த்து வாக்கும் அளித்துள்ளது.

அதிமுகவைப் பொறுத்தமட்டில் - இந்த மசோதாவை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்த்திருக்கிறார்கள்.

மசோதாவின் மீதான விவாதத்தில் 9.1.2019 அன்று, மாநிலங்களவையில் பேசுகின்ற நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் திரு.நவநீதி கிருஷ்ணன் அவர்கள் பின்வரும் வாதங்களை வைத்துள்ளார்:-

சமூகத்தில் முன்னேறியவர்களில் உள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

பத்து சதவீத இடஒதுக்கீடு அரசியல் சட்ட விரோதமானது.

இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பொருளாதார அளவு கோலை அறிமுகப்படுத்த முடியாது.

பத்து சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கும் ஒரு திருத்த மசோதாவை இந்த அவையில் தாக்கல் செய்து தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும்.

இதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்றே அனைவரும் கருதுகிறார்கள்.

இந்நிலையில் "முன்னேறிய சமுதாயத்திற்கு பத்து சதவீத இட ஒதுக்கீட்டை மருத்துவக் கல்லூரிகளில் செயல்படுத்தினால் தமிழகத்திற்கு “25 சதவீத இடங்களை அதிகரிக்கிறோம்"என்பதை நம்பி, திராவிட இயக்கத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்றைக்கும் உச்ச நீதிமன்ற அனுமதியுடன்தான், நாம் ஒவ்வொரு வருடமும், 69 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்த்து வருகிறோம்.

அதிக இடங்கள் கொடுப்பதால் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு லாபம் வந்து விடப் போகிறதா? அதுவும் இல்லை.

25 சதவீதம் அதிக இடங்களைக் கொடுக்கப் போகிறோம் என்கிறார்கள்.

உதாரணமாக தற்போது தமிழகத்தில் 3,350 MBBS இடங்கள் உள்ளன.

இவற்றில் 200 இடங்களுக்கு மேலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா விதிப்படி இடங்களை அதிகரிக்க முடியாது.

ஆகவே சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் உயர்த்தப்படாது.

இந்த நான்கு கல்லூரிகளின் இடங்களை கழித்து விட்டால் மீதமுள்ள 20 கல்லூரிகளில் 2350 இடங்கள் இருக்கிறது.

அதில் 25 சதவீதம் என்றால் 587 இடங்கள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படும்.

ஆக மொத்தத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு கல்லூரிகளில் 1000 இடங்கள், பிற 20 கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட இடங்களையும் சேர்த்து 2937 இடங்கள் மட்டுமே.

இந்த இரண்டையும் சேர்த்தால் வரும் 3937 இடங்களில்  பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதாவது ஒதுக்கப்படும்
587 இடங்களில் 393 இடங்கள் உயர் வகுப்பினர்க்குப் போய்விடும்.

மீதமுள்ள 134 இடங்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு கிடைக்கும்.

ஆகவே 120-ஐக் கொடுத்து 393-ஐ நம்மிடமிருந்து பறித்துக் கொள்ள திட்டமிடப்படுகிறது.

இந்த பத்து சதவீத இடஒதுக்கீடு இல்லையென்றால், இந்த 393 இடங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் தாராளமாக இன்னும் 120 பேருக்கு மேல் அதிகமாகவே தேர்வு பெறுவார்கள். மருத்துவக் கல்லூரிகளில் படிப்பார்கள்.

ஒரு கணக்குக்காகவே இதைச் சொல்லுகிறேன்.  இது சரி செய்யப்பட்டாலும், திராவிட இயக்கத்திற்குச் சம்மதம் இல்லை; சம்பந்தமும் இல்லை.

எந்தவிதமான "ஏமாற்று வாக்குறுதி"க்கும் நம் முன்னோர் நமக்கு வழங்கியிருக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை பலி கொடுத்துவிடக் கூடாது.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீட்டில்; பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின சமுதாயத்தில் உள்ள ஏழைகள் அறவே போட்டியிட முடியாது.

ஆனால், முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளும் போட்டியிடும் வகையில் தமிழகத்தில் "பொது பிரிவுக்கான" 31 சதவீத இட ஒதுக்கீடு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் உள்ளிட்ட அனைத்து வகுப்பினரும் போட்டியிட்டு தங்களுக்குரிய இடங்களை, வேலைவாய்ப்புகளை இணக்கமான சூழ்நிலையில் அமைதியாகப் பெற்று வருகிறார்கள்.

ஏற்கனவே "நீட்" தேர்வினால் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத அனிதா உள்ளிட்ட ஐந்து மாணவியரைப் பறிகொடுத்திருக்கிறோம்.

மற்ற மாநிலங்களில் இருப்பது போல் தமிழ்நாட்டில் பத்து சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கும் அளவுக்கு முன்னேறிய வகுப்பினர் அதிக சதவீதம் இல்லை. ஆகவே நம் மாநிலத்திற்கு பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு பொருந்தாது.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை தீர்மானிக்கும் வரையறை நிச்சயமற்றது. அந்த வரையறையை வைத்து இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதியை சீர்குலைக்கும் இந்த இட ஒதுக்கீடு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில்,  நம் மாநிலத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை அடியோடு ரத்து செய்யும் உள் நோக்கத்துடன் தான் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆகவே "முன்னேறியவர்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்குகிறோம்" என்று கூறப்படுவதற்கு நாம் செவி சாய்க்கக் கூடாது. கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுக் காலமாக நாம் கட்டிக் காப்பாற்றி வரும் சமூகநீதிக்குக் களங்கம் கற்பிக்க அனுமதிக்கக் கூடாது.

"பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு மத்திய அரசு பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு"என்று கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் ஆணையை ஏற்கனவே உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மாண்புமிகு நீதியரசர் மறைந்த ரத்னவேல் பாண்டியன் அவர்கள், "பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது"" என்று தீர்ப்பளித்துள்ளார்.

இன்னொரு உச்சநீதிமன்ற நீதிபதி திரு பி.பி. ஜீவன்ரெட்டி அவர்கள், "சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள மக்களுக்கும், அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிடக் கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு. ஆகவே ஒருவரின் வருமானம் அல்லது சொத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது" என்று தெளிவுபடத் தீர்ப்பளித்துள்ளார்.

மண்டல் கமிஷன் தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி கனியா அவர்கள், "வருமானம் மற்றும் சொத்துக்கள் வைத்திருப்பதின் அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது" என்று தீர்ப்பளித்துள்ளார்.

ஆகவே, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு மாறாகவும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராகவும், "பொருளாதாரத்தில் பின்தங்கியோர்" என்று, 124வது அரசியல் சட்டத் திருத்தம் மூலம், இப்படியொரு இடஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வந்திருப்பது ஆச்சரியமானது.

சமூக நீதியின் பிறப்பிடமாக இருக்கும் தமிழகத்தில், சமூக நீதியின் கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெரிய எதிர்க்கட்சியாகிய எனக்கும், ஆளுங்கட்சியாகிய உங்களுக்கும் இருக்கிறது.

ஆகவே, மருத்துவக் கல்லூரிகளில் பத்து சதவீத இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த முடியாது என்பதை தமிழகம் தெரிவித்து  - 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே இடஒதுக்கீடு கொள்கை தொடர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்தப் புதிய முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆகவே, திராவிட இயக்கத்தின் மூலாதாரமான சமூகநீதியை நிலைநாட்ட, இந்த அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும், பிரதான எதிர்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உணர்வு பூர்வமாக முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியளிக்கிறேன்.

- 8.7.19ல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கருத்துரை

செவ்வாய், 22 ஜனவரி, 2019

முற்பட்டோருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டினை அவசரமாகக் கொண்டு வருவது மிகப்பெரிய சதியே!



திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை


சென்னை, ஜன. 18- தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் இன்று (18.1.2019) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

“பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு” என்று நிறைவேற்றிய 103ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மை காய்வதற்குள் “2019 - 20 கல்வியாண் டிலேயே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும், தனியார் கல்வி நிறு வனங்களிலும் முற்பட்ட சமுதாயத்தின ருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக் கப்படும்” என்று ஜெட் வேகத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அவர்கள் அறிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற் படுத்தியுள்ளது மட்டுமின்றி, முற்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டில் மத்திய அரசை, “தண்ணீரை விட ரத்தம் கெட்டி யானது” என்ற ரீதியில் பாரதீய ஜனதா கட்சி செயல்பட வைப்பது அதிர்ச்சிய ளிக்கிறது.

மண்டல் குழு அறிக்கை


பத்தாண்டுகள் கிடப்பில் போடப் பட்ட மண்டல் குழு அறிக்கையை 1990-இல் பிரதமராக இருந்த சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் அமல் படுத்திய போது “மத்திய அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களி லும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்” என்று அறிவித்து தனது பதவியை தியா கம் செய்தார். ஆனால் அந்த அறிவிப் பிற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு மூன்று வருடங்கள் எடுத்துக் கொண் டது. ஆனால் இப்போது முற்படுத்தப் பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட் டிற்கான அரசியல் சட்ட திருத்தம் நிறை வேற்றப்பட்டவுடன் அரசிதழில் வெளியிடப்படுகிறது. “அமலுக்கு வருகிறது” என்று உடனே மனித வள மேம்பாட் டுத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

ஆனால் இதே அமைச்சரின் கீழ் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும் அளிக் கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங் கப்பட்டுள்ள 15 சதவீத இட ஒதுக்கீடும், மலை வாழ் மக்களுக்கு அளிக்கப்பட் டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடும் எந்த அளவிற்கு சிதைக்கப்பட்டு - வஞ்சிக்கப் பட்டுள்ளது. அங்குள்ள பதவிகளில் எப் படி எல்லாம் முற்பட்ட சமுதாயத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” ஆங்கில பத்திரிகையே (17.01.2019) செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக நீதி அடியோடு புறக்கணிப்பு


40 மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் 14.38 சதவீதம் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் பேராசிரியரும், அசோசியேட் பேராசி ரியரும் ஜீரோ சதவீதம்! பேராசிரியர் பதவியில் 3.47 சதவீதம் பேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள். பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களோ வெறும் 0.7 சதவீதம். ஆனால் முற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர்களின் எண்ணிக்கை 95.2 சதவீதம். அசோசியேட் பேராசிரியர் களின் எண்ணிக்கை 92.9 சதவீதம். உதவிப் பேராசிரியர்களின் எண்ணிக்கை 1.3 சதவீதம். இப்படி மத்தியப் பல் கலைக்கழகங்கள் அத்தனையும் முற்பட் டோர் சமுதாயத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டு, சமூக நீதி அடி யோடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலுக்கு வந்தும் மத்திய அரசு துறை களில் அது “அனாதை” போல் விடப் பட்டுள்ளது. மத்திய அரசில் உள்ள 71 துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்தவர்கள் 14.94 சதவீதம் மட்டுமே பணிபுரிகிறார்கள். ரயில்வே துறையில் 8.05 சதவீதமும், மனிதவள மேம்பாட்டுத்துறையில் 8.42 சதவீதமும், மத்திய அமைச்சரவை செயலகத்தில் 9.26 சதவீதமும், நிதி அயோக்கில் 7.56 சதவீதமும், குடியரசுத் தலைவர் செயலகத்தில் 7.56 சதவீதமும், துணை குடியரசுத் தலைவர் செயலகத்தில் 7.69 சதவீதமும் மட்டுமே பணிபுரிகிறார்கள்.

இதுதவிர, மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 11.43 சதவீதமும், சிஏஜி அமைப்பில் 8.24 சதவீதமும் இடம்பெற்றுள்ளார்கள். மத்திய பல்கலைக்கழகங்களிலும் சரி, மத்திய அரசின் துறைகளிலும் சரி பிற்படுத்தப் பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மற் றும் பழங்குடியின மக்களுக்கும் அளிக் கப்பட்ட இட ஒதுக்கீடுகளும் நிரப்பப் படவில்லை. குறிப்பாக மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய இட ஒதுக்கீடு அமலுக்கு வந்து 25 வரு டங்களுக்கு மேலான பிறகும் அந்த சமு தாயத்தினரால் அனைத்து மத்திய அரசு துறைகளிலும் தங்களது உரிமையைப் பெற முடியவில்லை. பறிக்கப்பட்டுள்ள இந்த சமூக நீதி பற்றி பிரதமர் திரு நரேந்திரமோடி கண்டுகொள்ளவில்லை. முற்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக் கீட்டினை அளிக்க காட்டும் வேகத்தில் ஒரு சதவீதம் கூட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க அவசரம் காட்டவில்லை. ஏன் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர் தனது துறையில் கூட மண் டல் கமிஷனை முழுமையாக அமல் படுத்த முயற்சிக்கவே இல்லை!

மாபெரும் சமூக அநீதி


மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய போது பிரதமர் வி.பி. சிங் அவர்கள், “சமமற்றவர்களை சம மாக நடத்துவது (ஜிக்ஷீமீணீtவீஸீரீ uஸீமீஹீuணீறீs மீஹீuணீறீ) மாபெரும் சமூக அநீதி. அந்த அநீதி உடனடியாக நீக்கப்பட வேண் டும்” எனக் கூறி “அரசு வேலை வாய்ப் புகளிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு” என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற் றிய முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள், “முழுமையாக மண்டல் குழு பரிந்துரைகளையோ அல்லது மண்டல் குழுவினுடைய பரிந்துரைகளுக்கும் அப்பாற்பட்ட இன்னும் மேலாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளையோ, சலுகைகளையோ நாம் பெற வேண்டு மென வாதாடுவதற்கு ஒரு அடித்தளம் தான் இந்த மண்டல் கமிஷன் பரிந் துரைகள் அமலுக்கு வந்தது” என்றார். ஆனால் “முதலுக்கே மோசம்” மட்டு மல்ல - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு சமூக நீதிக்காவலரும், தலைவர் கலை ஞர் அவர்களும் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தையே தகர்த்தெரியும் விதத் தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலை மையிலான பா.ஜ.க. ஆட்சி செயல்படு கிறது.

மன்னிக்க முடியாத துரோகம்


நாட்டில் பல்வேறு “பிளவு” பாதை களை வகுக்க முற்பட்டு, அத்தனை யிலும் தோற்றுவிட்ட நிலையில், “முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு” என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் கையிலெடுத்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியில் மத்திய அரசில் உள்ள ஒரு துறையில் கூட 27 சதவீதத்தை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெற் றிடவில்லை என்பது மிகப்பெரிய கொடுமை! இதற்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும். “வளர்ச்சி” என்ற மாயஜாலத்தை காட்டி பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் வாக்குகளைப் பெற்ற பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று அவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய் திருக்கிறார்.

மிகப்பெரிய சதி வலை


“சமூக”த்திலும், “கல்வியிலும்” பின் தங்கியவர்கள் என்றிருந்த இட ஒதுக் கீட்டை “பொருளாதார இட ஒதுக்கீடாக” மாற்றி மிகப்பெரிய சதி வலையை தனது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் விரித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடியை அடக்கப்பட்ட, ஒடுக்கப் பட்ட சமுதாயம் நிச்சயம் மறந்துவிடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே தான் செய்த துரோகத்திற்கு பிராய சித்தமாக மத்திய அரசு துறைக ளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு சென்றடைய எஞ்சியிருக்கின்ற நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்க ளைக் கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் வகை யில் மத்திய அரசு பணிகளிலும், கல்வி யிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற் கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்திட வேண்டும் என்று இந்தியா வின் “சமூக நீதித் தொட்டில்” எனக் கரு தப்படும் தமிழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

-இவ்வாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

-  விடுதலை நாளேடு, 18.1.19