பக்கங்கள்

அர்ச்சகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்ச்சகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 நவம்பர், 2023

திராவிட மாடல்' ஆட்சியின் சமூகப் புரட்சிக் கொள்கை எங்கெங்கும் அரங்கேறி வருகிறது! ராஜஸ்தான் மாநில முதலமைச்சருக்கு நமது பாராட்டு!

 ராஜஸ்தான் மாநில முதலமைச்சருக்கு நமது பாராட்டு!

2

காங்கிரஸ் ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில், அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அவர்கள் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தவர்; அதோடு சமூகநீதியில் ஆழ்ந்த நம் பிக்கை உடையவர். அவர், அனைத்து ஜாதியினரும் - ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைவரும் அர்ச்சகராகலாம் என்று ஆணை பிறப்பித்தது பாராட்டத்தக்கது!

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்' ஆட்சியைப் பின்பற்றி செயல்பட்டால், நீதிமன்றத் தீர்ப்புகளிலும் நிலைத்த சாதனையாக அதனை ஆக்கிட முடியும்! சமஸ்கிருதம் மட்டுமே தனித்த மொழியாக இருக்க முடியாது.

வடபுல ஹிந்தி பேசும் மாநிலங்களில் பெரியார் - அம்பேத்கர் விருப்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன! ‘திராவிட மாடல்' ஆட்சியின் சமூகப்புரட்சிக் கொள்கை எங்கெங்கும் அரங்கேறி வருவது மகிழ்ச்சிக்குரியது!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை 

4.7.2023 

புதன், 28 ஜூன், 2023

ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் யார் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அர்ச்சகர் ஆகலாம்! சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு



சென்னை, ஜூன் 26 பிறப்பின் அடிப்படையில் பாரபட்சமின்றி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம்

தீர்ப்பளித்துள்ளது.

சேலம் சுகவனேசுவரர் கோவில் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக சுப்பிரமணிய குருக்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (26.6.2023) தீர்ப்பளித்தார்.

நீதிபதி அளித்த தீர்ப்பில், குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் யார் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கோவில் நிர்வாக அதிகாரிகளே அர்ச்சகராக நியமித்துக் கொள்ளலாம்.

பிறப்பின் அடிப்படையில் பாரபட்சமின்றி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்.

ஆகமக் கோவில் எது? ஆகமம் அல்லாத கோவில் எது? என்பது குறித்து கண்டறியும் குழு அறிக்கை வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

-விடுதலை நாளேடு, 26.06.23

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

1000 ஆண்டுப் போராட்டமும் 1000 ஆண்டுச் சாதனையும்!


ப.திருமாவேலன்

"புரட்சி என்பது பெரியதாகத்தான் இருக்கும் என்று நினைக்காதீர்கள். என்னைப் போலக் குள்ளமாகவும் இருக்கும்” என்று பேரறிஞர் அண்ணா ஒரு முறை சொன்னார்!

புரட்சி என்பது பெரும் முழக்கம் கொண்ட தாகவே இதுவரை இருந்திருக்கிறது. முதன் முதலாக அது ‘அமைதி’யாகவே நடந்திருக் கிறது. ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோராய் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்துகாட்டி இருக்கும் "அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற புரட்சி சத்தமில்லாமல் செய்யப்பட்டுள்ளது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட சமயச் சான்றோர்களும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவாளர்களும் ஒரு சேரப் பாராட்டும் புரட்சிகரச் செய்கை இது.  காவியும் கருப்பும் ஒன்று சேர்ந்து பச்சைக்கொடி காட்டி இருக்கும் பார் போற்றும் புரட்சி இது!

‘யாருக்கும் சொல்லக் கூடாது’ என்று சொல்லப்பட்ட மந்திரத்தை கோபுரத்தின் மீதேறிச் சொன்னார் இராமானுசர். ஆயிரம் ஆண்டுக்கு முன்னால். இந்திய வைதிகத் தத்துவ மரபுக்கு மூவராகச் சொல்லப்பட்ட ஆதிசங்கரர் - மத்வர் - வரிசையில் மூன்றாமவர் இராமானுசர். ‘யாருக்கும் சொல்லக்கூடாத மந்திரத்தை இப்படி கோபுரத்தின் மீதேறிச் சொன்னால் நரகத்துக்குப் போவாய்’ என்று சபித்தார் திருக்கோட்டியூர் நம்பி. ‘எல்லோரும் முக்தி அடைய நான் நரகம் போவது பாக்கியமே’ என்று சொன்னதால் இராமானுசர், ‘புரட்சித் துறவி’யாக இன்று வரை அடையாளம் காட்டப்படுகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பேரும் ஆயிரம் ஆண்டுகள் நின்று நிலைக்கத்தான் போகிறது; பெரிய கோவில் இருக்கும் வரை இராசராசன் பேர் இருக்கும் என்பதைப் போல!

எல்லா இடங்களிலும் விரட்ட முயற்சிக்கப்படும் ஜாதி ( சாதி என்று எழுதி அதனை தமிழ்ப்படுத்தக் கூடாது என்கிறார் பெரியார்!) கடைசியாக கர்ப்பக்கிரகத்துக்குள் போய் ஒளிந்து கொண்டது. அங்கும் விரட்ட எடுத்த அஸ்திரம்தான், அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் என்பதாகும். சுயமரியாதை இயக்க காலத்தின் முதல் போராட்டமே அதுதான்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஜே.என். இராமநாதனும், திருவண்ணாமலைக் கோவிலில் ஜே.எஸ்.கண்ணப்பரும், திருச்சி - மயிலாடுதுறை - திருவானைக்காவல் கோவில்களில் கி.ஆ.பெ.விசுவநாதமும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் என்.தண்டபாணியும், ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் குத்தூசி குருசாமி ஏற்பாட்டில் மூவரும் நுழைந்தது என்பது 1927-30 ஆகிய ஆண்டுகளில் ஆகும். சுயமரியாதை இயக்கத்தவர் கூட்டம் நடந்தால் கோவிலுக்குள் நுழைந்துவிடுவார்களோ எனப் பயந்து கோவில்களைப் பூட்டிய காலம் அது. இது தொடர்பான பல்வேறு வழக்குகள் பல ஊர்களில் நடந்தன. இது தான் பின்னர் ஆலய நுழைவு மசோதா ஆனது.

1970 ஜனவரி மாதம் தந்தை பெரியார் அவர்கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்தார்கள். ஆலயங் களில் ஜாதிபேதம் இருக்கக் கூடாது, அனைவரும் கர்ப்பக்கிரகம் வரை செல்ல வேண்டும், கர்ப்பக்கிரகம் வரை சென்று வழிபாடு செய்வதற்கு ஜாதி ஒரு காரண மாக இருக்கக் கூடாது. அந்த அடிப்படை யில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.

இந்தப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஒரு வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டார். "அப்படி ஒரு கிளர்ச்சி நடத்தாமலேயே அவரது எண்ணத்தை நடை முறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும்” என்று அறிவித்தார். ‘அர்ச்சகர் களுக்கென சில சிறப்புத் தகுதிகள் வேண்டும், பயிற்சிகள் வேண்டும், அப்படி பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகர் ஆகலாம்' என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்தார். முதலமைச்சர் கலைஞரின் அறிவிப்பை ஏற்ற தந்தை பெரியார் தனது போராட்டத்தைத் தள்ளி வைத்தார்.

2.12.1970 அன்று தமிழ்நாடு சட்ட மன்றத்தில் அர்ச்சகர் சட்டம் நிறை வேற்றப்பட்டது. "இந்து சமய அறக்கட் டளை திருத்த மசோதா” என்று இதற்குப் பெயர். இந்தச் சட்டத்தை ஆதரித்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சட்டமேலவையில் பேசினார். ஆனால் இந்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலர் வழக்கு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கில் 14.3.1972 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. "சட்டம் செல்லுபடியானதே!’’ என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். ஆனாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இத்திருத் தத்துக்காக அன்றைய ஒன்றிய அரசிடம் பலமுறை முதல்வர் கலைஞர் வலியுறுத்தினார்.

1973 டிசம்பர் 8,9 ஆகிய நாள்களில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் அறிவித்தார். இதற்கிடையே டிசம்பர் 24 ஆம் தேதி அன்று தந்தை பெரியார் மறைந்தார்கள். "பெரியாரின் எவ்வளவோ ஆசைகளை நிறைவேற்றினோம். ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தை எழுந்து நடமாட வைக்க முடியவில்லை. பெரியார் அவர்களது நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காமலேயே புதைத்திருக்கிறோம்’’ என்று முதல்வர் கலைஞர் அவர்கள் அப்போது பேசினார்கள். "அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்’’ என்ற தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் நிறை வேற்றினார் முதல்வர் கலைஞர்.

2006 இல் மீண்டும் தி.மு.க. ஆட்சி. 16.5.2006 - அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "உரிய பயிற்சியும் தகுதியும் உள்ள அனைத்துச் ஜாதியின ரும் இந்து சமய திருக்கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையைப் பிறப்பிப்பது என அமைச்சரவைக் கூட்டம் தீர்மானிக்கிறது. இது தந்தை பெரியாரின் நெஞ்சில் உள்ள முள்ளை அகற்றும் அரும்பணி என அமைச்சரவை கருதுகிறது.’’ என்று அறிவிக்கப் பட்டது. மீண்டும் நீதிமன்றத்தில் தடை. இறுதித் தீர்ப்பு - 16.12.2015 உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி சட்டத்துக் குத் தடை இல்லை. சடங்கு முறையில் மாற்றம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டது.

சடங்கு, சம்பிரதாயம் எதையும் மாற்ற வில்லை. உரிய பயிற்சி பெற்ற வர்கள் சடங்கு, சம்பிரதாயம் செய்யலாம் என்பதுதான் இதன் உள்ளடக்கமே. அத்தகைய தகுதியும், திறமையும் பெற்றவர்களைத்தான் அர்ச்சகர் ஆக்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜாதியால் மூடப்பட்ட கதவை, சட்டத்தால் திறந்திருக்கிறார் முதலமைச்சர். அதுவும் சத்தமில்லாமல்!

புரட்சி சில நேரங்களில் இப்படித் தான் அமைதியாகவும் வரும். இந்த அமைதிப் புரட்சி ஆயிரம் ஆண்டு களுக்குப் பேசப்படும். ‘அன்றொரு நாள் கோபுரத்தின் மீதேறி’ என்று சொல் வதைப் போல... ‘கோட்டையின் மீதேறி மு.க.ஸ்டாலின் சட்டம் போட்டார்' என்று சொல்லப்படும்.

அரசியலில் முதலமைச்சர்கள் வரலாம். போகலாம். சமூகத்தில் மாற்றம் செய்பவர்களே, தனித்து பிரித்தெடுத்து வரிசைப்படுத்தப்படு வார்கள். அந்த வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேர், போய்ச் சேர்ந்துவிட்டது. என்றும் அழியாப் பேர் இது! ஆயிரமாண்டுப் பேர் இது!

நன்றி: 'முரசொலி', 17.8.2021 

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

தமிழ்நாடு சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல்


தமிழ்நாடு சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல் கல் - ஈராயிரம் ஆண்டுகளாக நீடித்த கருவறைத் தீண்டாமை இருள் அகற்றப்பட்டது!

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பணி நியமனம்! அரசமைப்புச் சட்ட ரீதியான சமத்துவத்தை நிலைநாட்டி, தனி மனித மாண்பை மீட்டெடுத்து, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி!

- - - - -

தந்தை பெரியார் அவர்கள் 1969இல் கருவறை நுழைவுப் போராட்டம் அறிவிக்க, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பரம்பரை வழி அர்ச்சகர் முறையை ஒழித் தார். உச்சநீதிமன்றத்தில் தடை பெற்ற பழைய அர்ச்சகப் பார்ப்பனர்கள் சட்டத்தை அமல்படுத்த விடாமல் தடுத்தனர்.

மீண்டும் 2006இல் அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டத்தை கலைஞர் அவர்கள் இயற்றியதுடன், அதை அமல்படுத்த தமிழ்நாட்டில் சைவ-வைணவ பயிற்சிப் பள்ளிகளை திறந்து,  இட ஒதுக்கீடு அடிப்படையில் 207 மாணவர்களை அதில் சேர்த்து இளநிலை அர்ச்சகராகப் பயிற்சி கொடுத்து அதற் கான தீட்சையும், சான்றிதழும் மாணவர்கள் பெற்றனர்.

உடனே, மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆதிசைவ சிவாச்சாரியர்கள் உச்சநீதிமன்றம் சென்று அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டத்திற்கு தடை உத்தரவு பெற்றனர். மாணவர்கள் சான்றிதழ் கூடப் பெற முடியவில்லை. அப் போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம்-திருவாசகம் பாட பல்வேறு போராட்டங்களை முன் எடுத்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மய்ய வழக்குரைஞர்கள் விருத் தாசலம் ராஜீ, மதுரை வாஞ்சிநாதன், சென்னை ஜிம்ராஜ் மில்டன் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று  மாணவர்களை அணுகி அனைத்து ஜாதியினர்  அர்ச்சக மாணவர் சங் கத்தை உருவாக்கி மதுரை, சென்னை, திருச்சி, விருத்தாச் சலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  பலரை இணைத்து ஆகமம் பெரிதா? அரசமைப்புச் சட்டம் பெரிதா? எனப் போராட்டம் நடத்தினர்.மீனாட்சி அம்மன் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தினோம். தந்தை பெரியார் சிலை முன்பு நடத்திய போராட்டத்திற்காக மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி விடுதலை பெற்றோம். போராட்டத்தின் உச்சமாக வா.ரங்கநாதன் தீட்சையைத் துறந்து எதிர்ப்பைப் பதிவு செய்தார். இதனால் ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்து முன்னணியினர் ரங்கநாதனைத் தாக்கினர். இன்றுவரை மிரட்டுகின்றனர். எல்லாவற்றையும் தாண்டி உச்சநீதிமன்ற வழக்கில் அர்ச்சக மாணவர்கள் சார்பில் இணைந்தோம். வழக்கை மூத்த வழக்குரைஞர்களை வைத்து நடத்தினோம்.

இதற்கான சட்டரீதியான உழைப்பை மக்கள்  உரிமைப் பாதுகாப்பு மய்யத்தினரும், பல லட்ச ரூபாய் நிதி மற்றும் மக்கள் பிரச்சாரம், நூல் வெளியீடு, போராட்டம், கருத்தரங் கம் உள்ளிட்ட ஆதரவை தோழர்மருதையன், காளியப்பன், மக்கள் பாடகர் கோவன் தலைமையிலான மக்கள் கலை இலக்கிய கழகத்தினர்(ம.க.இ.க.) செய்தனர். இதற்கு முழு ஆதரவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மேனாள் அமைச்சர் வி.வி.சுவாமி நாதன், சத்தியவேல் முருகனார், கிருபானந்த சாமி ஆகியோர் இருந்தனர்.

இவ்வாறான தொடர்  சட்டப் போராட்டங்கள், மக்கள் போராட்டங்களைக் கடந்து அர்ச்சகர் மாணவர்கள் ஆகமக் கோயில்கள், பாடல் பெற்ற தலங்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் முதல் கட்டமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தந்தை பெரியார் சமூக நீதிப் போராட்டம் அறிவித்த நாளான ஆகஸ்ட், 14, 2021இல் மயிலை கபாலீஸ்வரர்கோவில் மண்டபத்தில் குன்றக்குடி அடிகளார், பேரூர் அடிகளார் முன்னிலையில், அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உள்ளிட்டோரை அர்ச்சகர்களாக நியமித்து ஆணை வழங் கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த வரலாற்று நிகழ்வை சாத்தியமாக்க, கருவறைத் தீண்டாமையை ஒழிக்க, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மய்யம்  தொடர்ந்து நடத்திய சட்டப் போராட்டம், மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.                  

உச்சநீதிமன்றத்தின் சேசம்மாள் வழக்கு,ஆதித்தன் வழக்கு, மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வழக்கு, சபரிமலை வழக்கு எனப் பல தீர்ப்புகள் அர்ச்சகர் நிய மனத்தோடு தொடர்புடையன. மீண்டும் சில தீர்ப்புகளைக் காட்டி ஆகமங்கள், பழக்க,வழக்க,மரபுகள் மீறப்பட்டுள்ளன என்று ஆதிக்கவெறி பிடித்த சிலர் நீதிமன்றத்தை அணு கலாம்.எங்கள் மாணவர்கள் சிலருக்கு எதிர்ப்பு என நாடகம் நடத்தலாம். இவற்றையெல்லாம் தமிழ்நாடு மக்கள் முறி யடிக்க வேண்டும் எனக் கோருகிறோம். கடந்த காலத்தில் நாமெல்லாம் கோயில் சென்று சாமி கும்பிட்டாலே தீட்டு என்று தடுத்தவர்கள் இவர்கள் என்பதை தமிழ்நாடு மக்கள் கவனத்தில் கொள்ளக் கோருகிறோம்.

மேலும்  அர்ச்சகர் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் வயது தடை காரணமாக பணிக்கு விண்ணப்பிக்க முடியா மல் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் வயது வரம்பைத் தளர்த்தி பணி நியமனம் தமிழ்நாடு அரசு படிப்படியாக வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அது போல் மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும், அடுத்த நியமனங்கள் மதுரை மீனாட்சி யம்மன், திருச்செந்தூர் முருகன், திருவரங்கம் ரங்கநாதன் உள்ளிட்ட பெருங் கோயில்களில் அமைய வேண்டும்  என்ற கோரிக்கையை இந்த நேரத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சரிடம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் சார் பில் வைக்கின்றோம்.

- வா.ரங்கநாதன், தலைவர். 90474 00485

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு.

வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன்,

மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை

பாதுகாப்பு மய்யம். தொடர்புக்கு : 98653 48163. 

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - முதல் வெற்றி!

நுண்ணோக்கி

 


காலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. அய்ப்பசி மாத வாக்கில் ‘சூத்திரன்’ என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சி துவக்கப்படும். அதில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தெரிவியுங்கள்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கைக்கிணங்க தமிழகமெங்குமிருந்து கருஞ்சட்டைப்படை திரள ஆரம்பித்தது. 18_10_69 முதல் தொடர்ந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பட்டியல் வர ஆரம்பித்தது. சுமார் 2000_க்கு மேற்பட்ட வீரர்களை கர்ப்பக்கிரகப் போர்ப்படையில் அணிவகுத்து நின்று தங்கள் பெயர்களை நுழைவுக் கிளர்ச்சிப் பட்டியலில் பதிவு செய்து கொண்டார்கள்.

தஞ்சை மாவட்டம், மன்னார்குடி கழகக் கட்டடத்தில் 20_10_69 அன்று தஞ்சை மாவட்ட திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டம் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் கூடி, சூத்திரன் என்னும் இழிவு நீக்கக் கிளர்ச்சியான, கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியினை மன்னார்குடி இராஜகோபால சாமி கோயிலில் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு, கிளர்ச்சிக் கமிட்டியும் அமைக்கப்பட்டது.

1970 ஜனவரி 26ஆம் நாள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி தமிழகமெங்கும் தொடங்கப் பெறும் என்று தந்தை பெரியார் போர்க்கொடி உயர்த்தினார். 16_11_69 அன்று மாலை 3.30 மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி கூடியது. தந்தை பெரியார் அவர்கள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியின் அவசியம் பற்றி விளக்கினார். அவர்களால் பிரேரேபிக்கப்பட்ட 8 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

“கர்ப்பக்கிருக நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடும் கழகத் தொண்டர்களுக்கு நீதித்துறை சம்பந்தப்பட்ட எல்லாவித உதவிகளையும் இலவசமாக நடத்தித் தர நாங்கள் இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறோம்’’ என்று நிலக்கோட்டை வழக்கறிஞர்கள் அறிக்கை வெளியிட்டு போராட்ட அணியில் சேர்ந்தார்கள்.

17-1-1970 - முதல்வர் கலைஞர் அறிக்கை

ஆலயங்களில் கர்ப்பக்கிரகம் வரையில் சாதி பாகுபாடின்றி அனைவரும் சென்று ஆண்டவனைத் தொழுதிட வேண்டுமென்றும், அர்ச்சகர்களுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும். புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும். அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும். அதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. அப்படிப் பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக இருக்கலாம். அதற்கு விதிமுறைகள் வகுக்க அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால், அவர்களுக்கு முதல் சலுகை அளிப்பதுபற்றியும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.

இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதன்படி அர்ச்சகர் பதவிகளை பிறப்பினால் கணக்கிடாமல், தகுதியொன்றினால் கணக்கிடப்படக் கூடிய நாள் வந்துவிடுமானால், ஆண்டவனைத் தொழ ஆலயம் செல்வோர், ஜாதி வேறுபாடின்றி கர்ப்பக்கிரகம் வரையில் செல்வதற்கு தடையில்லையென்பதும் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும்.

கர்ப்பக்கிரகத்தில் இருக்கின்ற பொருள்களின் பாதுகாப்புக்காக மட்டுமே அந்த இடம் ஒருவர் பாதுகாப்பில் விடப்பட வேண்டுமே தவிர, அதற்கு ஜாதி வர்ணம் பூசப்படக்கூடாது. ஆண்டவன் திருமுன்னே ஜாதியின் பெயரால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட, விதிமுறைகள் செய்திட அரசு முன் வருகிறது என்ற உறுதிமொழியினை ஏற்று, பெரியார் அவர்கள், தான் திட்டமிட்டிருக்கிற கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

- மு.கருணாநிதி, தமிழக முதலமைச்சர் (17.1.1970)

19-1-1970 - போரின் வெற்றி!

“தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் திரு. கருணாநிதியவர்கள், ஜாதி அடிப்படையில் கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படாமல் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில் சட்ட விதிமுறைகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளதால், கிளர்ச்சியின் தத்துவத்தை நல்லவண்ணம் புரிந்து செயல்பட முனைந்துள்ள அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், 26_1_70 அன்று நடைபெறவிருந்த கிளர்ச்சி (கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி) ஒத்தி வைக்கப்படுகிறது என்று தந்தை பெரியார் அவர்கள் கழகத் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.

12-3-1970 - கர்ப்பக்கிரகக் கிளர்ச்சி வெற்றி

“தந்தை பெரியார் அவர்கள் கர்ப்பக் கிரக நுழைவுப் போராட்டத்தை ஒத்தி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள். குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத பிற எல்லா இனத்தவரும் கோவில் கர்ப்பக்கிரகத்தினுள் போகவும் தகுதி அடிப்படையில் அர்ச்சகராகவும் அனுமதிக்கும் வண்ணம் சட்டத்திருத்தம் ஒன்றை அரசு கொண்டு வரும்’’ என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் 12_3_70 அன்று முதல்வர் கலைஞர் அறிவித்தார்.

30-11-1970 - பார்ப்பனர்களுக்குள்ள ஏகபோக அர்ச்சகர் உரிமை ஒழிந்தது

அர்ச்சகர் தொழிலுரிமையைப் பார்ப்பனர் மட்டுமே பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருவதை ஒழிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்தி வந்த கொள்கையைப் பின்பற்றி, அர்ச்சகர் தொழிலுக்கு பார்ப்பனரல்லாத பிற வகுப்பினரும் பயிற்சி பெற்று நியமனம் பெறலாம் என்பதற்கு வழி செய்யும் மசோதா ஒன்றை தமிழக சட்டமன்றத்தில் 30_11_70 அன்று அறநிலைய அமைச்சர் தாக்கல் செய்தார்.

2-12-1970

தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த கர்ப்பகிரக நுழைவுக் கிளர்ச்சியின் மாபெரும் வெற்றியாக அர்ச்சகர் நியமன மசோதா தமிழக சட்டமன்றத்தில் எந்தவித எதிர்ப்புமின்றி 2_12_70 அன்று ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது. எல்லாக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரித்தனர்.

திரு. எல்.இளையபெருமாள் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு  (The committee on untouchability, economic and educational development of the Scheduled Castes and connected documents - 1969) மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் தீண்டாமை ஒழிப்புக்கு _ கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகராக உரிமை வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட சட்டம் இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் நிறைவேற்றப் பட்டதாகக் கூறப்பட்டது.

சட்டம் செயல்படாமைக்கு என்ன காரணம்?

தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை எதிர்த்து சிறீபெரும்புதூர் கோயில் மட எதிராஜ் ஜீயரும், தஞ்சாவூரில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஆதிக்கத்தின் கீழ் உள்ள பங்காரு காமாட்சியம்மன் கோயில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அல்லூர் கோயில் ஆகியவைகளில் உள்ளோர் உள்ளிட்ட பலர் 12 ரிட் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

பரம்பரை அர்ச்சகர் முறை செல்லாது என்றும், ஆகம விதிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம் வரலாம் என்றும் சொல்லி உச்ச நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

10-6-1972

சென்னை மாவட்ட திராவிடர் கழக கமிட்டிக் கூட்டம் 10_6_72 இரவு 7.30 மணி அளவில் பெரியார் திடலில் நடைபெற்றது.

திராவிடர் கழக பொதுச் செயலாளரும், ‘விடுதலை’ ஆசிரியருமான கி.வீரமணி எம்.ஏ., பி.எல்., தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 16_6_72 மாலை 5.30 மணி முதல் தந்தை பெரியார் கட்டளைப்படி சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்னால் கோயில் பகிஷ்காரக் கிளர்ச்சியைத் தொடர்ந்து நாள்தோறும் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரியாருக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

திராவிடர் கழகத்தின் தலைவராக அன்னை மணியம்மையார் அவர்கள் பொறுப்பேற்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். அவர்களின் மறைவிற்குப் பிறகும் திராவிடர் கழகத்தின் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

3.4.1974                தமிழகமெங்கும் அஞ்சலகங்கள் முன் வேண்டுகோள் அறப்போராட்டம் நடத்தப்பட்டது. அன்னை மணியம்மையார் தலைமை தாங்கினார்.

6.5.1974                மத்திய அமைச்சர் ரகுராமய்யாவுக்குச் சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.

31.5.1974              மத்திய நிதி அமைச்சர் ஒய்.பி.சவானுக்கு சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.

24.8.1982              வேண்டுகோள் அறப்போர் 35 கோயில்களின் முன் நடத்தப்பட்டது.

10.5.2000              வேண்டுகோள் அறப்போர் 28 கோயில்களின் முன் நடத்தப்பட்டது.

5.7.2004                மாவட்டத் தலைநகரங்களில் அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மாநாடுகள் பல நடத்தப்பட்டு வேண்டுகோள்கள் - தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக ஆட்சியின் செயல்முறைகள் யாவை? 19.3.2005

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வகையில் இந்தச் சட்டமன்றத் தொடரிலேயே இதற்குச் செயல் வடிவம் கொடுக்க ஆணை பிறப்பித்து வரலாறு படைக்கட்டும் முதலமைச்சர் ஜெயலலிதா.

- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

1.2.2006

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் மறியல் - 10 ஆயிரம் கழகத் தோழர்கள் கைது.

21.8.2006

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின் காரணமாக ஒரு திருத்தத்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டது. (21.8.2006)

மாற்றுப் பாலம் அமைப்பதாலேயே பாலம் கட்டப்படாது என்று யாரும் சந்தேகப்படவோ அச்சப்படவோ தேவையில்லை - இறுதியில் யார் சிரிப்பார்கள் என்பதே முக்கியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை. (22.8.2006)

23.11.2006

நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கையை தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞரிடம் அளித்தது.

28.2.2007

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பம்

தந்தை பெரியாரின் இறுதி முழக்கமான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பயிற்சிக்கு விண்ணப்பங்களை வரவேற்று அரசு அறிவிப்பினை வெளியிட்டது. வைணவ, சைவ பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டன.

22.10.2012

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

4.5.2013

04.05.2013 அன்று இராஜபாளையத்தில் நடைபெற்ற மாநில திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்.

(ஆகஸ்டு 1 (2013) சிறை நிரப்பும் போராட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார். அடுத்த கணமே 1081 பேர் கையொப்பமிட்டுப் போராட்டக் களத்திற்குத் வர எழுந்தனர். இதில் பலரும் ரத்தக் கையொப்பமிட்டிருந்தனர்.)

16.12.2015இல் உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான தடை நீங்கியது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமித்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்பின் பல அழுத்தங்கள் தந்தார்.

இறுதியில் தமிழக அரசின் அர்ச்கர் பயிற்சி முடித்த 206 பேரில் ஒருவரான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அர்ச்சகர் மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவரை பிப்ரவரி 26, 2018 அன்று மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவில் அர்ச்சகராக முதன் முறையாக தமிழக அரசு நியமித்துள்ளது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போராட்டத்திற்கு முதல் வெற்றி. பெரியாருக்கும் கலைஞருக்கும் பெரு வெற்றி!

-  உண்மை இதழ், 16-31.8.18

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: முதல் வெற்றி!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: முதல் வெற்றி! தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் - செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழர் தலைவர் நேரில் பாராட்டு




தந்தை பெரியார் அறிவித்து, தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் முயற்சியால் சட்டமியற்றப்பட்டு, 48 ஆண்டுகாலப் போராட்டத்தின் பயனாக, ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மதுரை, தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில் (இந்து அறநிலையத் துறையின்கீழ் உள்ளது) அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது இப்பிரச்சினையில் திராவிட இயக்கத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

அதன் மகிழ்வாகவும், அடையாளமாகவும் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களையும், தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களையும் நேற்று (1.8.2018) மாலை சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து, வெற்றிக் கனியாக ஆப்பிளையும் அளித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்.

கலைஞர் நல்ல உடல்நிலையில் இருந்தால், அவரைச் சந்தித்து இந்த மரியாதையைத் திராவிடர் கழகம் செய்யும் - அந்த இடத்தில் நீங்கள் இருப்பதால், இந்தப் பாராட்டைச் செய்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உடன் சென்றிருந்தார். (சென்னை, 1.8.2018)

கலைஞருக்கு நன்றி- வெற்றி விழா கொண்டாடுவோம்! தமிழ்நாடு அரசு ஆகமப் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் தொடங்க வேண்டும்: செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 

சென்னை, ஆக.2 தமிழ்நாட்டில் முதல் முறையாக பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். திராவிடர் கழகம் அதை வரவேற்பதுடன், தி.மு.க. தலைவர் கலைஞருக்கு நன்றி வெற்றி விழா கொண்டாடுவோம் என்றும், அரசின் ஆகமப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் அனைவரையும் அர்ச்சகர்களாக பணியில் நியமித்திட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு ஆகமப் பள்ளிகளைத் தொடங்கவேண்டும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் (1.8.2018) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று சென்னை பெரியார் திடலில் செய்தியாளர்களை சந்தித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறியதாவது:

1969இல் தொடங்கிய ஒரு சமுதாயப் புரட்சிக்களம், ஒரு அறப்போராட்டம் ஒரு நல்ல வெற்றிக்கனியை பறித்திருக்கிறது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும், ஜாதிப் பாம்பை தாக்கிய தந்தை பெரியார் அவர்களுடைய அந்த முயற்சிகள் 1924 இல் வைக்கத்திலே தொடங்கின.

பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களிலே  அவை வெற்றி பெற்று, தண்ணீர் பானைகள் உடைக்கப்பட்டு, பல்வேறு இடங்களிலே சமத்துவபுரங்களாக மாற்றப்படக்கூடிய ஆட்சி வாய்ப்புகள் கிடைத்தன. தந்தை பெரியார் அவர்கள் விரும்பிய ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கு வழிவகுத்துவிட்டோம். ஆனால், கோயில் கருவறைக்குள்ளேதான் இது இன்னமும் நிலைப்பெற்றிருக்கிறது. ஆகவேதான், அங்கே நிலைப் பெற்றிருக்கக்கூடிய அதனை எதிர்த்து, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டிய போராட்டத்தை, அறப்போரைத் தொடங்கி, அதற்காக சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு என்ற மாநாட்டையும் தந்தை பெரியார் தன்னுடைய 95ஆவது வயது நிரம்பிய நிலையிலும்கூட, களத்திலே நின்றார்கள். இதே சென்னையிலே மாநாடு நடத்தி, போராட்டங்களை அறிவித்தார்கள்.

அந்த காலகட்டத்திலேதான் கலைஞர் அவர்களுடைய ஆட்சி, 1970இலே அதே கொள்கையுடன் உங்களுக்கு அர்ப் பணிக்கப்பட்ட ஆட்சி, ஆகவேதான், நீங்கள் எங்களுடைய ஆட்சியிலே போராட வேண்டிய அவசியமிருக்காது - சட்டம் கொண்டுவருகிறோம் என்று சொல்லி, ஆதிதிராவிடர் உள்பட, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும். அதன்மூலம் தீண்டாமை, ஜாதி ஒழிப்புக்கு அடித்தளம்  வகுக்க வேண்டும் என்று மிகத்தெளிவாக சொல்லிவிட்டார்கள்.

48 ஆண்டு கால வரலாறு. ஓர் அரை நூற்றாண்டு கால வரலாறு. திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சுக் கொள்கைகளிலே ஒன்று ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு.

1969-க்கு முன்பாக இந்திரா காந்தி தீண்டாமை ஒழிப்புக்காக இளைய பெருமாள் எம்பி தலைமையிலே ஒரு கமிட்டி அமைத்தார்கள். அந்த கமிட்டியின் இரண்டு பரிந்துரைகளில் மிக முக்கியமான பரிந்துரை அனைத்து ஜாதியினரும், குறிப்பாக ஆதிதிராவிடரிலிருந்து அர்ச்சகர்கள் அனைத்து கோயில்களிலும் நியமிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான பரிந்துரை. காங்கிரசு அரசுகளேகூட அதை பின்பற்றாதபோது, தந்தை பெரியார் விருப்பப்படி, கலைஞர் அரசு, திமுக அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வரும்போது, ளிதீழீமீநீts ணீஸீபீ ஸிமீணீsஷீஸீs ஷீயீ tலீவீs ஙிவீறீறீ இந்த மசோதாவினுடைய நோக்கம் இளையபெருமாள் கமிட்டி பரிந்துரையை செயல்படுத்துகிறோம் என்று கூறித்தான் மசோதாவை அறிமுகப்படுத்தினார்கள். அது 1970ஆவது ஆண்டிலே சட்டம் ஆயிற்று.

50 ஆண்டு கால திராவிட இயக்க ஆட்சியில் அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்காக 3 ஆணை யங்கள், 2 சட்டங்கள், 2முறை உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புகள் உள்ளன.

திராவிடர் கழகத்துக்குக் கிடைத்த

மாபெரும் வெற்றி

மதுரையில் தமிழக அரசின் சார்பில் பார்ப்பனரல்லாத ஒருவர் அர்ச்சகராகப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளது திராவிடர் கழகத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

கலைஞருக்கு நன்றி வெற்றி விழா கொண்டாடுவோம். எல்லா தலைவர்களையும் சந்தித்து நன்றி தெரிவிப்போம்.

36 ஆயிரம் கோயில்களில்...

செய்தியாளர்: 38 ஆயிரம் கோயில்களில் 36 ஆயிரம் கோயில்களில் ஆகமப்பயிற்சி பெற்றிருக்கவில்லை என்று கூறுகிறீர்கள்...? பயிற்சி பெற்றுள்ளவர்கள் 206 பேர் தானே இருக்கிறார்கள்?

தமிழர் தலைவர்: ஆம். அரசு அமைத்த குழுவின் பரிந் துரையில் 38 ஆயிரம் கோயில்களில் 36ஆயிரம் பேர் ஆகமப் பயிற்சி பெறவில்லை. 2 ஆயிரம் கோயில்களில் தான் ஆகமப்பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மதுரை மீனாட்சி யம்மன் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், வடபழனி முருகன் கோயில் போன்ற கோயில்களிலேயேகூட ஆகமப்பயிற்சி பெற்றிருக்கவில்லை.

இந்து சமய அறநிலையத் துறையின்படி அர்ச்சகர் பணி என்பது அரசுப்பணி. ஓய்வு வயது உண்டு, தகுதிக் குறைவுகளால் பணியிடம் காலியாகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, உடனடியாக தமிழ்நாடுஅரசு, இந்து சமய அறநிலையத்துறை ஆகமப்பயிற்சி பள்ளிகளை தொடங்கிட வேண்டும். சைவ, வைணவ கோயில் களுக்கு தனித்தனி பயிற்சிக் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.

செய்தியாளர்: பயிற்சி பெற்ற 206 பேரில் சிலர் உயிரிழந்து விட்டார்கள். அவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கலாமே?

தமிழர் தலைவர்: தாராளமாக உதவி செய்ய வேண்டும். இந்த அரசைப் பொருத்த வரையில் இறந்தவர்களுக்கு கருணை காட்டுவதில் தாராளமாக இருக்கிறது. அது வரவேற்கவேண்டிய ஒரு மனிதாபிமானம்.

செய்தியாளர்: கேரளா, கருநாடகா, ஆந்திரப்பிரதேச மாநிலங் களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் இயங்கிவருகின்றன. பணியும் அளிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஏன் எதிர்ப்பு ஏற்பட்டது?

தமிழர் தலைவர்: தமிழகத்தில் பார்ப்பனர்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று அர்த்தம். அங்கெல்லாம் எதிர்ப்புகள் இல்லை. இன்னும்கேட்டால், தமிழ்நாட்டில் போட்டது சட்டம். கேரளாவில் போட்டது அரசாணை. இங்கே சட்டத்தை எதிர்த்து இத்தனை ஆண்டுகள் வழக்கு நடத்தியிருக்கிறார்கள். கடைசியில் கேரளாவிலும் வழக்கு தொடரப்பட்டபோது, உச்சநீதிமன்றத்தில் அந்த நியமனக் கொள்கைக்கு சாதகமாகவே தீர்ப்பு அளித்தார்கள்.

கேரளாவைவிட நியாயமாக தமிழ்நாடுதான் முந்தியிருக்க வேண்டும். திருப்பதியில்கூட பயிற்சிக்கல்லூரிகள் உள்ளன.

இங்கேகூட சத்தியவேல் முருகனார் பயிற்சிக் கல்லூரி நடத்துகிறார். சில இடங்களில் தனியார் பயிற்சி கல்லூரிகள் இருக்கின்றன. தமிழக அரசு பயிற்சி கல்லூரிகளைத் தொடங் குவது மட்டுமல்லாமல், அறநிலையத் துறை, தனியார் கல்லூரி களையும் அங்கீகரிக்க வேண்டும். போதுமான அளவுக்கு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் கோயில்களில் இருப்பதற்காகவும் அரசு கொள்கையளவில் முயற்சி எடுக்க வேண்டும்.

செய்தியாளர்: சிலை திருட்டுகள்-...?

தமிழர் தலைவர்: நடக்கிறதைப் பார்த்தீர்களானால், சிலை திருட்டுகளில் அர்ச்சகர்களை சந்தேகப்படவில்லை. அப்படியே சந்தேகப்படுகிறார்கள் என்று செய்தி வந்தாலும், அர்ச்சகர்கள் குற்றவாளிகள் அல்லர். பல நிரபராதிகள் கண்டிப்புடன் இருந் தார்கள் என்பதால் பெரிய அதிகாரிகள் உள்பட திட்டமிட்டு பழிவாங்கப்படக்கூடிய தன்மை இருக்கிறது.  ஒரு பெரிய பெண் அதிகாரியைக்கூட கைது செய்திருக்கிறார்கள்.

சிலைதிருட்டுகளில் தமிழக அரசே சிபிஅய் விசாரணை கோரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் குறிப் பிட்டார்.

உடன் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் இருந்தனர்.

- விடுதலை நாளேடு, 2.8.18

புதன், 1 ஆகஸ்ட், 2018

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்குக் கிடைத்த முதல் வெற்றி

தந்தை பெரியார் தொடங்கி, முதலமைச்சர் கலைஞர் சட்டமியற்றிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்குக் கிடைத்த முதல் வெற்றி


மதுரையில் நியமனம் செய்ததுபோல ஆகம பயிற்சி பெற்றுக் காத்திருக்கும்


அனைவரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்க!




மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில் நியமிக்கப்பட்ட பார்ப்பனரல்லாத அர்ச்சகர்


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் பல தடைகளுக்குப் பிறகு இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறது - மதுரையில் பார்ப்பனர் அல்லாதார் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இனி எந்த சட்டப் பிரச்சினையும் இல்லாத நிலையில், ஆகமப் பயிற்சி பெற்று நியமனத்துக்காகக் காத்தி ருக்கும் அனைவரையும் அர்ச்சகராக தமிழக அரசு நியமனம் செய்யவேண்டும் என்று திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

1969 இல் தந்தை பெரியார் தொடங்கிய போராட்டம்


நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் தனது தள்ளாத வயதில், முதுமையைப் புறந்தள்ளி, வயதில் அறிவில் முதியார் வாய்மைப் போருக்கு என்றும் இளையார் - உயர் எண்ணங்கள் மலரும் சோலை'' என்று புரட்சிக்கவிஞரால் வர்ணிக்கப்பட்டதற்கேற்ப 95 ஆம் ஆண்டிலும் ஜாதி- தீண்டாமை ஒழிப்புக்கான களமாக,  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்கான போராட்டத்தை 1969 ஆம் ஆண்டில்  தொடங்கினார். அதற்குமுன்பே  30 ஆண்டுகளாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் வேண் டும் என்பதை வலியுறுத்தியும், 1958 இல் திருச்சி ஜாதி ஒழிப்பு மாநாட்டின் முக்கிய தீர்மானமாகவும் அதனை நிறைவேற்றி வலியுறுத்தி வந்தோம் என்பதும் வரலாறு.

தி.மு.க. அரசு - மானமிகு கலைஞர் அவர்கள் முதல மைச்சராக இருந்த காரணத்தால் 1970 இல் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

உச்சநீதிமன்றம் சென்ற பார்ப்பனர்கள்


வழக்கமான உயர்ஜாதி பார்ப்பனர் எதிர்ப்பு; சட்ட ரீதியாக - சமூக ரீதியாக இதற்கு அமோக வரவேற்பு இருந்தபோதிலும்கூட, நேரே உச்சநீதிமன்றத்திற்கே சென்று வழக்குத் தொடுத்தனர்.

சிறீபெரும்புதூர் ஜீயர் தொடங்கி மற்ற சில அர்ச்சகர் அமைப்புகளை இணைத்தும், காஞ்சி சங்கராச்சாரியார்கள், சி.ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) தொடங்கி அனை வரும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இந்த சட்ட வியூகத்தை வகுத்து, சட்டப் போரை நடத்தினர்.

பல்கிவாலா என்ற புகழ் வாய்ந்த பிரபல மூத்த வழக்குரைஞருக்கு ஆச்சாரியார் பரிந்துரை கடிதம் கொடுத்து வாதாடும்படிக் கேட்டுக்கொண்டார். அவர்  பீஸ்' வாங்காமலேயே இலவசமாக பல நாள் வாதாடினார். 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற தனி அமர்வு இந்த வழக்கினை விசாரித்து, இதன் தீர்ப்பை மகராஷ்டிர (பார்ப் பன) நீதிபதியான ஜஸ்டீஸ் பாலேகர் தீர்ப்பை எழுதினார்.

அதன்படி தமிழ்நாடு அரசு - கலைஞரின் தி.மு.க. அரசு கொண்டுவந்த பரம்பரை அர்ச்சகர் ஒழிப்புச் சட்டம் (1970) சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

"ஆபரேசன் வெற்றி - நோயாளி செத்தார்!''


தி.மு.க.ஆட்சியினர்நாத்திகர்கள்;அவர்கள்யாரை வேண்டுமானாலும் - ஏன் கடவுள் நம்பிக்கையில்லாதவர் களையும், பிற மதத்தவர்களையும்கூட இந்து கோவில்களில் அர்ச்சகர்களாக நியமித்து அதன் புனிதத்தைக் கெடுத்து விடக் கூடும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது'' என்று பொய்யுரைகளை வாதங்களாக்கினர்.

அப்படி நிகழ்ந்தால், தாராளமாக மீண்டும் இந்த உச்ச நீதிமன்றத்தை பாதிக்கப்பட்டவர்கள் நாடலாம் என்று கூறி, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தும் - வைக்காமலும் ஒரு அரைப்புள்ளி (Semi Colon) போட்டனர்.

ஆகம விதிகள்படிதான் அர்ச்சனை நடைபெறவேண் டும் என்றும் கூறியதால், நாம் விடுதலை'யில் - ஆபரேசன் வெற்றி; ஆனால், நோயாளி செத்தார்'' என்று முழுப்பலன் உடனடியாகக் கிட்டாத ஒரு நிலை வந்தது என்றோம்.

தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு...


இதற்கிடையில், தந்தை பெரியார் அவர்கள் 1973 டிசம்பர் 24 ஆம் தேதி மறைந்தார்கள். அவருக்குத் தமிழக அரசின் சார்பில் இறுதி நிகழ்ச்சியை அரசு மரியாதையுடன் - எவருக்கும் எளிதில் வராத துணிவுடன் அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் செய்து, மன நிறைவடைந்தார். நாட்டையே வியக்க வைத்த இந்த சாதனையை செய்து தனி வரலாறு ஒன்றைப் படைத்தார்!

பெரியார் நெஞ்சில் தைத்த முள்


பிறகு கூறினார், நமது தந்தைக்கு அரசு மரியாதை தந்தோம்; ஆனால், அவர் நெஞ்சில் இருந்த முள்ளை (அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்) அகற்ற முடிய வில்லையே'' என்று ஆதங்கப்பட்டார்; அடுத்த முறை ஆட்சிக்கு வந்த பிறகு, டாக்டர் ஜஸ்டீஸ் ஏ.கே.இராஜன் அவர்கள் தலைமையில் அறிவார்ந்த சமய வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைத்து, (2006) அவர்களது  பரிந்துரைகளைப் பெற்று, சைவம் - வைணவப் பிரிவுகளுக்கு ஆகமப் பயிற்சிப் பள்ளிகளைத் தனியே அமைத்து, 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி பார்ப்பனர் தொடங்கி அனைத்து ஜாதி மாணவர்களையும் சேர்த்து பயிற்சி அளித்து 206 பேர் தயார் ஆனார்கள்.

இடையில் பத்தாண்டுகள் சிக்கல்


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் (உயர்ஜாதி பார்ப்பனர்) குழு உச்சநீதிமன்றத்தில் இதற்கு மீண்டும் வழக்குத் தொடுத்தனர். சுமார் 10 ஆண்டுகாலம் ஓடிற்று. இடையில் அர்ச்சகர் நியமனம் செய்யக்கூடாது என்று உறுதியை அரசிடம் நீதிமன்றம் பெற்றுக்கொண்டதால், பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடியாத சட்டச் சிக்கல் ஏற்பட்டது.

2015 இல்  இறுதி விசாரணை


பிறகு அவ்வழக்கினை இறுதி விசாரணை செய்த  உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு 16.12.2015 இல் தமிழ்நாடு - கலைஞர் அரசு கொண்டு வந்த சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்புக் கூறிவிட்டனர்; நமக்குக் கிடைத்த வெற்றி இது.

தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளிடையே மாறுபாடு இல்லை


இதற்கிடையில் தமிழக ஆட்சி மாற்றம் முறையே எம்.ஜி.ஆர்., செல்வி ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் ஏற்பட்டபோதும், அவர்கள் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை நிச்சயம் அமுல்படுத்துவோம் என்று சட்டமன்றத்திலும் - இரண்டு காலகட்டங்களிலும் உறுதியளித்தனர். எனவே, தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு இதில் மாற்று நிலைப்பாடே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேரில் வலியுறுத்தினோம்


இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு 2015 இறுதியில் வந்துவிட்டதை - வரவேற்று, தெளிவாக்கி திராவிடர் கழகம் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்குப் பிறகு வந்த முதலமைச்சர்கள் இருவருக்கும் (ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.) வேண்டுகோள் மனுக்களை நேரிலும், அஞ்சல் வழியிலும் அனுப்பினோம்.

தமிழ்நாட்டின் அனைத்து முற்போக்குக் கட்சிகளின் தலைவர்களையெல்லாம் அழைத்து சென்னையில் மாநாடு நடத்தினோம். அதற்கு முன்பு பொதுத் தேர்தலின்போது 18.4.2016 அன்று திராவிடர் கழகம் நடத்திய போராட்டத்தில் 5000 பேர் கைது செய்யப்பட்டோம்.

இதற்கெல்லாம் இப்போது கைமேல் பலன் கிடைத் துள்ளது!

மதுரையில் முதல் நியமனம்


பயிற்சி பெற்ற 206 பேர்களில் (சிலர் மறைந்துவிட்டார்கள்) ஆகமப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி பட்டியலிலிருந்து மதுரைக் கோவிலில் அர்ச்சகர் நியமனம் பெற்றது நமது நெஞ்சங்களை மகிழ்ச் செய்துள்ளன!

மருத்துவமனையில் இருக்கும் கலைஞர் கழுத்தில் வெற்றி மாலை


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நமது மானமிகு தலைவர் கலைஞர் அவர்களுக்குச் சூட்டப்பட்ட வெற்றி மாலை இது.

தமிழக அரசுக்கும், குறிப்பாக முதல்வருக்கும் நமது பாராட்டு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஆகமப் பயிற்சி பெற்ற மற்றவர்களையும் இதனைத் தொடர்ந்து உடனடியாக நியமனங்கள் செய்திட தவறக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

அர்ச்சகர் இடங்கள்


ஏராளம் காலியாகவே உள்ளன


(அ) தமிழ்நாட்டுக் கோவில்கள் 38,000 ஆகும். இதில் 2,000 கோவில்களில்கூட ஆகமம் தெரிந்த அர்ச்சகர்கள் இல்லை என்பதையும்,

(ஆ) வைணவ திவ்ய தேசங்கள் 108 எனப்படுபவை களில் 106 கோவில்களுக்குச் சென்று வந்துள்ள வ.வே. வாசு நம் பிள்ளை இராமானுஜாச்சாரியார் அந்த 106 திவ்ய தேசங் களில் 30 கோவில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பயிற்சி பெற்ற அனைவரையும் நியமிக்கவேண்டும்


எனவே, உடனடியாக எஞ்சிய பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டியது அவசர அவசியம்.

அடுத்து, நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து ஜாதிகளி லிருந்து அர்ச்சகப் பயிற்சிப் பள்ளியை தமிழக அரசு தொடர்ந்து இயங்கச் செய்து 69 சதவிகித அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

இனி சட்டக் குழப்பத்துக்கும் இடம் இல்லை


இதில் இனி சட்டக் குழப்பத்தை யாரும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை தமிழக அரசும், இந்து அறநிலையத் துறையும் புரிந்துகொண்டு மேலும் விரைந்து செயல்பட வேண்டும்.

உத்தரகாண்டின் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 15.6.2018 அன்று (புக்கராஜ் Vs உத்தரகாண்ட் மாநில அரசு) உச்சநீதிமன்றத்தில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளித்திருக்கிறது!

ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை நமக்கு ஏதோ சாதகமற்ற தீர்ப்புபோல குழப்பியவர்களின் வாதங் களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது!

ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் முக்கிய மைல்கல்!


மெல்லக் கதவு திறந்துள்ளது. இது முழுமையாக திறக்கப்படவேண்டும். சுமார் 8 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவர்களை கருவறைக்குள்ளே அனுப்பிட வேண் டும். கேரள அரசு முந்திக்கொண்ட இந்தப் பிரச்சினையில், அவர்களையும் முந்திட வேண்டும். தந்தை பெரியார் - கலைஞர் - திராவிடர் இயக்கம் வென்றுள்ளது!

ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் இது ஒரு முக்கிய மைல் கல்லாகும்

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

1.8.2018

 

(தி இந்து ஆங்கில நாளிதழில் 31.7.2018) அன்று வெளிவந்த செய்தி 7 ஆம் பக்கம் காண்க)

- விடுதலை நாளேடு, 1.8.18