பக்கங்கள்

புதன், 15 ஜூலை, 2020

இந்திய அறிவியல் கழக (Indian institute of science)த்தில் முதல் பிற்படுத்தப்பட்டோர்

நேற்றைய தினம் மாநிலங்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்ததலைவர் பி.கே.ஹரிப்ரசாத் இந்திய அறிவியல் கழகம் (Indian institute of science) துவங்கப்பட்ட 1907 ம் ஆண்டிலிருந்து நூறாண்டுகள் கழிந்து 2007 ம் ஆண்டில்தான் முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவர் சேர்ந்ததாக சொன்னார். அதுவும் மறைந்த அர்ஜூன் சிங் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது உயர்கல்விநிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக என்கிற கூடுதல் தகவலையும் அவர் சொன்ன போது மிகுந்த அதிர்ச்சியாகத்தான் இருந்தது..

யோசித்துப்பாருங்கள் ஒரு நூறாண்டுகளில் ஒரு பிற்பட்டவகுப்பினர்கூட நுழைய முடியாமைக்கு தகுதியின்மை மட்டுமா காரணமாக இருக்க முடியும்..? இந்த அநீதி எவ்வளவு குரூரமானது..?

இதற்கெல்லாம் வராத அறச்சீற்றம் 10% அரியவகை ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தால் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறதென்றால் அது எவ்வளவு தேர்ந்தெடுத்த கயமைத்தனம்..?

பக்கத்து வீட்டில் அடுத்த தெருவில் விரும்பிய படிக்க முடியாமல் அரசு வேலை கிடைக்காமல் கிருஷ்ணா ஸ்வீட்நெய் மைசூர்பா வாங்கி உண்ண வழியில்லாமல் இருக்கும் அரியவகை ஏழைகளின் சோகம் பிழியும் கதைகளை தூக்கிக்கொண்டு வருபவர்கள் எவரும் துளிகூட நேர்மையற்ற சல்லிகள்.. இரக்கவுணர்வினை சுரண்டி எத்திப்பிழைக்கவும் எத்திப்பிழைப்பவர்களுக்கு சாமரம் வீசுபவர்களுக்கும் இந்த உண்மைகள் சுடுவதேயில்லை..

இந்த மண்ணில் சமூகநீதிக்கான போராட்டம் நேற்று துவங்கியதுமில்லை.. இன்று முடிவதுமில்லை.. நமது காலத்தில் அது தொய்வடைந்தது என்கிற அவப்பெயரின்றி இதற்காக உறுதியுடன் நின்றாக வேண்டியதொன்றே நம் வரலாற்று கடமை.. டாட்..
16.07.18
From Muruganantham Ramasamy

சனி, 4 ஜூலை, 2020

தனியார்த் துறையில் இடஒதுக்கீடு!

இன்றைய நிலையில் இடஒதுக்கீடு என்பது அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களில் மிகவும் சுருங்கி விட்டது.
தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற திரிசூலம் - சமூகநீதியை வெகுவாகப் பதம் பார்த்து விட்டது. இந்த நிலையில் தனியார்த்துறையில் இடஒதுக்கீடு என்பதுதான் சமூகநீதி கண்ணோட்டத்தில் மிகச் சரியானதாக இருக்க முடியும்.
26.6.2020 அன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் காணொலி மூலம் கருத்துத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இடஒதுக்கீட்டில் நமது அடுத்த இலக்கு தனியார்த் துறைகளில் இடஒதுக்கீட்டைப் பெறுவதே என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மண்டல் குழுப் பரிந்துரையில்கூட இது வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் தனியார் நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய - மாநில உறவுகள் குறித்து வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையமும், தனியார்த்துறைகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஒரு பொதுத்துறை நிறுவனம் தனியார்மயமாக்கப்படும்போதும், அல்லது அதில் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும்போதும், ஏற்கெனவே அந்தப் பொதுத்துறை நிறுவனம் செயல்படுத்தி வந்த இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும், நீதித்துறையிலும் இடஒதுக்கீடு கொண்டு வரப் பட வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் விகிதாச்சார அளவை நிர்ணயிக்கும் உரிமையும், சட்டம் இயற்றும் உரிமை யும் மாநில சட்டமன்றங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி வெங்கடாசலய்யா ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டன.
அமெரிக்கா போன்ற நாடுகளில் தனியார்த்துறைகளில் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படுகிறது. (Affirmative action)
11 பேர்களுக்குமேல் பணியாற்றும் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வோர் ஆண்டும் கருப்பர், இஸ்லாமியர், பெண்கள் எத்தனைப் பேர் என்று அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த நிலை பின்பற்றாவிடின் வழக்குத் தொடரலாம் என்கிற அளவுக்கு அமெரிக்காவில் சட்டம் உள்ளது.
இங்கிலாந்தில் Equality act என்றும், கனடாவில் Employment Equality Act என்றும், சீனாவில் Affirmative Minorities Nationality Act என்றும் இடஒதுக்கீட்டு பெயர்களாகும்.
இந்தியாவில் பிஜேபி ஆட்சி வந்த பிறகு. அரசு நிர்வாகமே தனியார்த் துறைகளிலிருந்து பெறப்பட்ட அதிகாரிகளின் கைகளில் குவிந்து வருகிறது.
2014-ஆம் ஆண்டு திட்டக்குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் என்ற பெயரில் வளர்ச்சிக்குழு அமைக்கப்பட்டது, முதல் முதலாக இந்த வளர்ச் சிக்குழுவில் இந்தியாவின் பிரபல தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஆலோசகர்களாகவும், நிர்வாகிகளாகவும் நியமிக்கப்பட்ட னர்.
இதற்கு அரசு கொடுத்த விளக்கம் தனியார் துறைகளில் சிறப்பாகச் செயல்படும் பல துறைசார் நிபுணர்களின் சேவையை அரசு பயன்படுத்திக் கொண்டது என்பதாகும்.
அதன் பிறகு அரசு பணியிலும், 'லேட்டரல் என்டரி' எனப்படும், தனியார்த் துறைகளில் பணிபுரிவோரை, அரசுப் பணியில் சேர்க்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, ஒன்பது துறைகளுக்கான இணைச் செயலர் பதவிக்கு, தனியார் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தோர் என்று கூறி நியமிக்கப்பட்டனர். வழக்கமாக, இணை, உதவி செயலர் பத விக்கு, அய்.ஏ.எஸ்., எனப்படும் இந்தியக் குடிமைப் பணிகள், அய்.பி.எஸ்., எனப்படும் இந்திய போலீஸ் சேவை, அய்.எப்.எஸ்., எனப்படும் இந்திய வெளியுறவு சேவை, அய்.ஆர்.எஸ்., எனப்படும் இந்திய வருவாய் சேவை அதிகாரிகளே நியமிக்கப்படுவர்.
ஆனால், மோடி அரசு தனியார்த் துறை அதிகாரிகளை இந்தப்பணிகளில் நியமித்து வருகிறது. தற்போது இந்த அரசு மத்திய அரசில் காலியாக உள்ள 1300 இயக்குநர்கள் மற்றும் உதவி செயலாளர்கள் பணியிடங்களுக்கு தனியார் துறையினரை நியமிக்க முடிவு செய்துள்ளது. இணைச் செயலாளர் பதவியில் அமர்த்தப்படும் இவர்களுக்கு ரூபாய் 1 லட்சத்து 44 ஆயிரத்து 200 முதல் ரூபாய் 2 லட்சத்து 18 ஆயிரத்து 200 வரை மாத சம்பளம் என்றும், இந்தப் பணி நியமனம் மூன்று வருடத்திற்கு முதலிலும், அதன் பிறகு அய்ந்தாண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் நீடிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது. அதே நேரத்தில், அவர்கள் கொள்கை முடிவுகளை எடுக்கவும், திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தப்படுவார்கள்; இன்று மத்திய அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானோர் பார்ப்பனர்களே, தனியார்த் துறைகளில் பெரும் அதிகார மட்டத்தில் இவர்கள் நிறைந்து உள்ளனர்.
வருமான வரித் துறை, கலால் துறை, ரயில்வே, தொலைத் தொடர்பு, அஞ்சலகம் மற்றும் வணிகம் உட்பட 37 அரசுத் துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களே தகுதி உயர்வு வழங்கப்பட்டு, அரசின் செயலாளர்களாக நியமிக்கப்படுவது மரபு. ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசால், லேட்ரல் எண்டரி முறையில், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருப்பவர்கள், மத்திய அரசின் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்,
இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் மத்திய வேளாண் துறையில் ககோலி கோஷ், விமானப் போக்குவரத்துத் துறையில் அமர் துபே, வணிகத்துறையில் அருண் கோயல், பொருளாதார விவகாரத் துறையில் ராஜீவ் சக்சேனா, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையில் சுஜித் குமார் பாஜ்பாய், நிதிச் சேவைத் துறையில் சவுரவ் மிஸ்ரா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தினேஷ் தயானந்த் ஜகதலே, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை பிரிவில் சுமன் பிரசாத் சிங், கப்பல் போக்குவரத்து துறையில் பஷன் குமார் ஆகியோரை அரசு இணைச் செயலாளர்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் நியமிக்கப்பட்ட இந்த 9 இணைச் செயலாளர்களும் அடுத்த 3 ஆண்டு களுக்கோ அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ பதவியில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதியினர். அதுமட்டுமல்லாமல் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பில் உள்ளவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
இப்படி இருக்க அரசுத்துறையிலும் தனியார்களை அனுமதிக்கும்போது அங்கு பார்ப்பனர்களே அமருவார்கள். இதன் மூலம் இட ஒதுகீட்டை முற்றிலும் ஒழித்துக்கட்டி, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோர் பதவிக்குவந்து கொள்கை முடிவுகளை எடுக்க முடியாத சூழல் உருவாகிவிடும். இதன் மூலம் அரசாங்க ரகசியங்களின் பாதுகாப்புக்கும் ஆபத்தே! ஏற்கெனவே அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும், தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் மத்திய அரசின் செயலாளர்கள் மட்டத்திலும் தனியாரை நியமித்து அரசமைப்புச் சட்டத்தின் அச்சாணியையே இந்த அரசு அசைத்துப் பார்க்கிறது.
இந்த மிகப் பெரிய அபாயம் உரிய வகையில் வெளிச்சத்துக்கு வரவில்லை. சமூகநீதியாளர்கள் மிகப் பலமாகக் கட்டமைத்து இதற்கொரு முடிவு எட்டப்படாவிடின் சமூகநீதி பட்டப் பகலிலேயே 'படுகொலை' செய்யப்படும் நிலைதான்.
நமது அடுத்த இலக்கு தனியார்த்துறைகளில் இடஒதுக்கீடு நோக்கியே என்று திராவிடர் கழகத் தலைவர் காணொலியில் கூறியது - காலத்தால் ஊதப்பட்ட சமூகநீதி சங்கே ஆகும்.
- கலி.பூங்குன்றன், 4.7.20