பக்கங்கள்

வியாழன், 30 மே, 2019

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசின் பாராட்டத்தக்க செயல்

கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறையில் காவலர் பணி


ஜெய்பூர், மே 30 ராஜஸ்தானின் ஆல்வார் நகரில் தனகாஜி பகுதியில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தனது கணவருடன் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.  அவர்களை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்தது.  பின் இருவரையும் சாலை யோரம் இருந்த மணல் குன் றுக்கு பின்புறம் கொண்டு சென்றது.

அந்த கும்பல் கணவரை அடித்து, உதைத்து மரத்தில் கட்டிப் போட்டு விட்டு அவர் முன்னாலேயே அவ ரது மனைவியை பாலியல்  வன்முறை செய்தது.  இந்த சம்பவம் குற்றவாளியான 6ஆவது நபரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  மேலும் அக்கும்பல் 3 மணி நேரம் பிடித்து வைத்துக் கொண்டு, பின்னர் மாலையில் கணவன், மனைவி இரு வரையும் விடுவித்துள்ளது.

இதன்பின் இதுபற்றி யாரி டமும் அவர்கள் கூறாமல் அமைதியாக இருந்து விட் டனர்.  ஆனால், 6ஆவது நபர் பெண்ணின் கணவரை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியதுடன், காணொலி சமூக வலைதளத் தில் வெளியிடப்படும் என் றும் அச்சுறுத்தி உள்ளார்.  இதனால் அந்த பெண்ணின் கணவர் தனது குடும்பத்தினரி டம் கூறிவிட்டு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.  இந்நிலை யில், கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்ட பெண்ணுக்கு ராஜஸ் தான் அரசு காவல்துறையில் காவலர் பணியை வழங்கி யுள்ளது. அந்த மாநில கூடுதல் தலைமை செயலாளர் (உள் துறை) ராஜீவா சுவரூப் செய் தியாளர்களிடம் கூறும் பொழுது, பாதிக்கப்பட்ட பெண்ணை காவல்துறையில் காவலராக நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  அவருக்கு நியமன கடிதம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

-  விடுதலை நாளேடு, 30.5.19

புதன், 29 மே, 2019

எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை வாய்ப்பு தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு இல்லை

பாரீர்!


பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு மட்டும் இடம் உண்டு
புதுடில்லி, மே 28  எல்லை பாதுகாப்பு படையில்  ரேடியோ ஆபரேட்டர்களுக்கான 300 பணியிடங்களுக்கான அறிவிப்பில்  தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது. ஆனால்  புதிதாக சட்டம் கொண்டு வரப்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதி யினருக்கு மட்டும் இடம் உண்டு என்ற அரசு விளம்பரம் இதோ:

-  'எம்பிளாய்மென்ட் நியூஸ்' - 25.5.2019

- விடுதலை நாளேடு, 28. 5 .2019

திங்கள், 20 மே, 2019

பணக்காரர்கள் யார்? பார்ப்பனர்கள் 49.9% பிற்படுத்தப்பட்டோர் 15.8% தாழ்த்தப்பட்டோர் 9.5% இந்த நிலையில் பொருளாதார அடிப்படையில் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குற்றமே!

கல்வியிலும் பார்ப்பனர்களே முதலிடத்தில்!


'எகானாமிக் டைம்ஸ்' ஏடு ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்துகிறது
புதுடில்லி, மே 18 பொருளாதார நிலையில் பார்த்தாலும்கூட பார்ப்பனர்கள் பணக்காரர்கள் 49.9%. அப்படி இருக்கும்பொழுது பொருளாதார அடிப் படையில் அவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது எப்படி சரியாகும்?

'தி எகானாமிக் டைம்ஸ்' ஏடு அம்பலப்படுத்தும் புள்ளி விவரங்கள் இதோ:

பார்ப்பன - உயர்ஜாதியினர்க்கு மோடி அரசு அளித்த 10% இட ஒதுக்கீடு எனும் சமுக அநீதியை தோலுரிக்கும் கட்டுரை.

('எகானாமிக் டைம்ஸ்' பத்திரிக்கையில் (மே 12-19, 2019), சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் ருக்மணி அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழாக்கம்)

இந்தத் தேர்தலில், உயர்ஜாதியினர் வருமானத்தின் அடிப்படையில் இரண்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஒன்று, பாஜக, உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு உதவிட வேண்டும் என்பதன் அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு; இரண்டாவது, பணக்காரர்களுக்கு (பெரும்பாலும் உயர்ஜாதியினர்) 2% வரி கூடுதலாக விதிக்கப்படும் என்ற சமாஜ்வாடி கட்சியின் வாக்குறுதி. இந்திய மனிதவள மேம்பாடு மற்றும் தேசிய குடும்ப சுகாதார துறை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 2018 இல்  நிதின் குமார் பாரதி, பாரீஸ் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸ் அவர்கள் வெளியிட்ட தகவலை ஆதாரமாகக் கொண்டு ருக்மணி அவர்கள் இந்த கட்டுரையை எழுதி உள்ளார்.

உயர்ஜாதியினரின் வருமானம் எந்த அளவில் உள்ளது?


கல்வியில் அதிக ஆதிக்கம்:
பாஜகவின் 10% இடஒதுக்கீடு, உயர்கல்வி நிலையங்களிலும் ஏழை உயர்ஜாதியினர்க்கு இட ஒதுக்கீடு அளிப்பது. தற்போது, பிற்படுத்தப் பட்டோரைக் காட்டிலும், உயர்ஜாதியினரே, அதிக கல்வி ஆண்டுகளைப் பெற்றுள்ளனர். உயர்கல்வியில், பார்ப்பனர்கள் 11.5 கல்வி ஆண்டுகள் பெறுகிறார்கள். ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கு 7.8 கல்வி ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோருக்கு 6.7 கல்வி ஆண்டுகளும், முஸ்லிம்கள் 6.6 கல்வி ஆண்டுகளும், பழங்குடியினர்க்கு 5.9 கல்வி ஆண்டுகளும்தான் பெற முடிகிறது.

அதிக செல்வ வளத்தோடு இருப்போர் யார்?


பார்ப்பனர்கள் 49.9% செல்வ செழிப்போடு இருக்கிறார்கள். மிகவும் ஏழைகள் என்போர் பார்ப்பனர்களில் 4.6% தான்.

இதுவே, பிற்படுத்தப்பட்டோரில் 15.8% பணக்காரர்களாகவும், 18.9% மிகவும் வறியவர்களாகவும் உள்ளார்கள். தாழ்த்தப்பட்டோரில் 9.5% வசதி படைத்தவர்களாகவும், 28.4% ஏழைகளாகவும் உள்ளார்கள்.

உயர்ஜாதியினரில், பனியாக்கள் 43.6% பணக்காரர்களாகவும், 5.8% ஏழைகளாகவும் உள்ளார்கள்.

ஆக, உயர்ஜாதியினரில், பார்ப்பனர்களே, அதிக வசதி படைத்தவர் களாகவும், ஏழ்மையில் இருப்போர் மிகக் குறைவாகவும் உள்ளார்கள்.

மாநில வாரியாக செல்வ செழிப்பில் அதிகம் உள்ளோர் யார்?
பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், அவர்கள்தான் செல்வந்தர்களாக உள்ளார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில், உயர்ஜாதியினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளார்கள்.

எடுத்துக்காட்டாக, வட மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், குஜராத், மகாராட்டிரா, மேற்கு வங்கம், அசாம், ஒடிசா, தென் மாநிலங்களான, தமிழகம், கருநாடகம், ஆந்திர பிரதேசம், கேரளா என அனைத்து மாநிலங்களிலும், பார்ப்பனர்களின் வருமானம் என்பது, ஏனைய உயர்ஜாதி மற்றும் இதர சமுகத்தினரைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

வேலை வாய்ப்பில் பார்ப்பனர்களின் நிலை: மத்திய அரசின் உயர்ஜாதியினர்க்கான 10% இட ஒதுக்கீடு, அரசின் பணிகளுக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், இந்திய மனிதவள மேம்பாடு ஆய்வின்படி, பார்ப்பனர்கள் 44% அரசின் அனைத்துப் பணிகளிலும் உள்ளனர். உயர்ஜாதியினர் 35%, பிற்படுத்தப்பட்டோர் 19%, தாழ்த்தப்பட்டோர் 18%, முஸ்லீம் 15%, பழங்குடியினர் 13% என்ற நிலையில் தான் உள்ளனர்.

தமிழாக்கம் மற்றும் தொகுப்பு:

கோ.கருணாநிதி,

திராவிடர் கழக வெளியுறவு செயலாளர்

- விடுதலை நாளேடு, 18.5.19

ஞாயிறு, 19 மே, 2019

உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபடுவதா?

சட்ட விரோதம் மட்டுமல்ல - நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுது இந்த முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபடுவது சரியல்ல!
ஒத்தக் கருத்துள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் போராட்டத்தில் ஈடுபடும் - எச்சரிக்கை!
தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி
தருமபுரி, மே 11  பொருளாதாரத்தில் பின்தங் கிய உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக் கீடு அளிக்கும் முயற்சியில் அ.தி.மு.க. அரசு ஈடுபடுவது சட்ட விரோதம் - வழக்கு நீதிமன்றங் களில் நிலுவையில் இருக்கும்பொழுது இந்த முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கினால், மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட உயர்ஜாதிக்காரர்களுக்கு
10 சதவிகித இட ஒதுக்கீடு
இன்று (11.5.2019)  தருமபுரிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்பேட்டியின் விவரம் வருமாறு:
மோடி அரசு சமுகநீதிக் கொள்கைக்கு விரோதமாக இந்திய அரசியல் சட்டத்தில் இல்லாத பொருளாதார அடிப்படையை வைத்து, அதன்மூலமாக இட ஒதுக்கீடு என்பதை உயர்ந்த ஜாதியில் உள்ள வசதியற்றவர்களுக்கு என்ற பெயராலே, ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தை உருவாக்கியது - அவர்களுடைய ஆட்சி நில விய மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வியினால், மேல்ஜாதிக்காரர்களின் ஓட்டு நாடாளுமன்றத் தேர்தலிலாவது கிடைக்கவேண்டும் என்பதற் காகவே செய்யப்பட்ட - ஒரு வார காலத்தில் அவசர அவசரமாக செய்யப்பட்டது. எதிர்க்கட்சிக் காரர்களுக்குக்கூட அதனுடைய நகலை முதல் நாளே கொடுக்காமல், ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தை அவர்கள் வேக வேகமாகக் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓரிரு நாள்களிலேயே நிறைவேற்றி, உடனே அது அரசாங்கப் பதிவேட்டில் கெசட் செய்யப்பட்டு,  அவசரமாக அனுப்பினார்கள்.
பிரதமர் நரசிம்மராவ் கொண்டு வந்த ஆணை செல்லுபடியற்றது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இதை எதிர்த்து, ஏற்கெனவே பொருளாதார அடிப்படை என்பது கிடையாது. கல்வி, உத்தியோகங்களில் இட ஒதுக்கீடு என்பது காலங் காலமாக அரசியல் சட்டத்தினுடைய விதிப்படி, தெளிவாக சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்பதுதான் அதனுடைய அடிப்படையாக இருக்கவேண்டும் இட ஒதுக்கீட்டிற்கு.
எகனாமிக்கலி என்று சொல்லக்கூடிய பொரு ளாதார அடிப்படை இருக்கக்கூடாது; அதையும் மீறி இருக்கலாம் என்று நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருக்கின்ற காலகட்டத்தில் கொண்டு வந்த அந்த ஆணை செல்லுபடியற்றது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது.
அதேபோல மிகத் தெளிவாக, எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தபொழுது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பினைக் கொண்டு வந்ததை எதிர்த்து திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு, இன்னும் சில காங்கிரசு தோழர்கள் எல்லாம் இணைந்து ஒரு பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திய பிறகு, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அரசியலில் ஒரு பெரிய தோல்வி ஏற்பட்டது;  அவர் அதை கைவிட்டு, மறுபடியும் இட ஒதுக்கீட்டின் சத விகிததத்தை அதிகப்படுத்தினார் என்பது பழைய வரலாறு.
31 சதவிகிதம் 21 சதவிகிதமாகக் குறையும்!
ஆனால், இதற்கு நேர் எதிராக வேண்டு மென்றே பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த் தப்பட்டவர்களுக்கும் இருக்கக்கூடிய திறந்த போட்டி என்பது இருக்கிறதே, அது அதிகமான அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு திறந்த போட்டி.  மற்ற மாநிலங்களில் 50 விழுக்காடு; நம்முடைய மாநிலத்தைப் பொறுத்தவரையில், 69 சதிவிகித இட ஒதுக்கீடு இருக்கின்ற காரணத்தினால், 31 சதவிகிதம் மற்ற அனைவருக்கும்.
பொதுப் போட்டி என்று சொன்னால், தாழ்த்தப் பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், முன்னேறிய ஜாதியினர் ஆகிய எல்லோருமே போட்டியிடலாம் திறமை அடிப் படையில் என்பதற்காக இருக்கக்கூடிய ஒரு பொதுப் போட்டி பிரிவுதான் அந்த 31 சதவிகிதம்.
இப்பொழுது 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று சொன்னால், 31 சதவிகிதத்தில் 21 சதவிகிதமாகக் குறையும். அதுமட்டுமல்ல, உயர்ஜாதிக்காரர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல.
Reservation is not a policy of poverty annihilation scheme
என்பது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பாகவே கொடுக்கப் பட்ட ஒன்றாகும்.
இன்றைக்கு தமிழக அரசு சார்பில் வெளிவந்த அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி!
எனவேதான், அதை எதிர்த்து திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அதுபோல, பிற்படுத்தப்பட்ட சமுக நல அமைப்புகள் எல்லாம் சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்குப் போட்டிருக்கிறோம். அதேபோன்று, உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, அந்த வழக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டு, அதை அய்ந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட ரீதியான பெஞ்ச் விசாரிக்கவேண்டும் என்பதற்காக உடனடியாக வேறு தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்தக் காலகட்டத்தில், மத்திய அரசு, தேர்தல் கண்ணோட்டத்தோடு மோடி அரசு, அதை அமல் படுத்தவேண்டும் என்று, அவசர அவசரமாக மாநிலங் களுக்கு நிறைய இட ஒதுக்கீடு கொடுக்கிறோம் என்று. முன்னேறிய ஜாதிக்காரர்களின் பிள்ளைகள் ஏற் கெனவே நல்ல அளவிற்குப் படித்தவர்கள். நல்ல அளவிற்கு புளியேப்பக்காரர்கள்; அவர்களுக்கே விருந்து படைக்கக்கூடிய அளவிற்கு அவர்கள் செய்கிறார்கள். தமிழ்நாடு அரசு அதனை நாங்கள் ஏற்கவில்லை; அந்தக் கொள்கையை எதிர்க்கிறோம் என்று நம்மிடம் சொல்லிவிட்டு, வழக்கம்போல நீட் தேர்வில் எப்படி முன்னே பார்த்தால் ஒரு முகம்; பின்னே பார்த்தால் வேறொரு முகம் என்று இரட்டை வேடம் போடுகின்ற  தமிழ்நாடு அரசு - ஒரு பக்கத்தில் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்; இன்னொரு பக்கத்தில் நீட் தேர்வுக்குப் பயிற்சி கொடுக்கிறோம் என்று சொல்வதுபோன்று, இன்றைக்கு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி வந்திருக்கிறது.
பொருளாதார அடிப்படை கூடாது என்பதை கொள்கை ரீதியாக எதிர்த்தவர்கள் எம்.ஜி.ஆரும்- ஜெயலலிதாவும்!
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு என்பதுதான் அந்த செய்தி.
அப்படியானால், தமிழக அரசு இதைக் கொள்கை பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறதா? என்பதுதான் எங்களுடைய கேள்வி.
தமிழக அரசு எம்.ஜி.ஆர். அரசு என்று சொல்லப்படு கிறது; அம்மாவினுடைய அரசு என்று ஜெயலலிதா பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மேற்சொன்ன இரண்டு பேருமே, பொருளாதார அடிப்படை என்பதை ஏற்காதவர்கள்.
இன்னுங்கேட்டால், 69 சதவிகித இட ஒதுக்கீடு சம்பந்தமான ஒரு வழக்கு வந்த நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் வாதாடியபோது, தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இருந்த காலகட்டத்தில், தெளிவாக, பொருளாதார அடிப்படை கூடாது; அதை தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக எதிர்க்கிறது என்றெல்லாம் பதிவு செய்திருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பில், இந்திரா சகானி என்ற மண்டல் கமிசன் வழக்கில் அது மிகத் தெளிவாகப் பதிவாகியிருக்கிறது.
ஆகவே, இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், தமிழக அரசு இந்த முடிவை செய்யக்கூடாது. காரணம் என்னவென்றால், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு இருக்கிறது; இந்த சட்டம் செல்லாது என்று சொல்வதற்கு - அது அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.
தடை இல்லை என்கிற ஒரே காரணத்திற்காக...
சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குப் போடப்பட்டு இருக்கிறது - அந்த வழக்கை நீதிபதிகளும் அனுமதித்திருக்கிறார்கள்.
ஸ்டே இல்லை என்கிற ஒரே காரணதிற்காக நாங்கள் அதை செய்கிறோம் என்பது சரியான நிலைப்பாடு அல்ல. சட்டப்படி. எப்பொழுது அந்த வழக்கை விசாரிக்கக் கூடிய அளவிற்கு, அடிப்படை உரிமை, அதாவது அடிக்கட்டுமானம்  Basic Structure of the Constitution என்பதை  மாற்ற முடியாது எந்த அரசியல் சட்டத் திருத்தமும்.
ஆகவேதான், இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த முயற்சிகளைத் தமிழக அரசு கைவிடவேண்டும். ஒவ்வொரு நாளும் இதுபோன்ற வேலைகளைச் செய்து கொண்டு வருகின்றது.
'வழவழா கொழகொழா' விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள்!
நேற்றுகூட தமிழைப் பொறுத்தவரையில், தமிழ் விருப்பப்பாடமாக இருக்கக்கூடிய அளவிற்கு என்று சொல்லி, இன்றைக்குக்கூட அதற்கு ஒரு வழவழா கொழகொழா விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள். செம்மொழி நிறுவனத்தை, ஒன்றுமில்லாமல், தினக்கூலி நிறுவனமாக ஆக்கிவிட்டார்கள்.
எனவேதான், மொழியைக் காப்பாற்றவேண்டும், சமுகநீதியைக் காப்பாற்றவேண்டுமானால், இந்த ஆட்சியினுடைய நிலைப்பாட்டை மாற்றவேண்டும்; நிலைப்பாட்டை அவர்கள் மாற்றிக் கொள்ளாமல் - நீட் தேர்வில் எப்படி அவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்களோ - அதேபோன்று இந்த விஷயத்திலும் போடுகிறார்கள்.
நீட் தேர்வில் விலக்குக் கோராத தமிழக அரசு - வெளிப்படுத்திய மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது சொன்னார், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரவேயில்லை. நீட் தேர்வில் சில ஒழுங்கு முறைகளை செய்யவேண்டும் என்றுதான் கேட்டார்களே தவிர, ரத்து செய்யச் சொல்லி கேட்கவில்லை.
ஏற்கெனவே தமிழக அரசு நீட் தேர்வு சம்மந்தமாக இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியதைப்பற்றி, அவர்கள் கவலைப்படவேயில்லை. இவர்களும் அதை வலியுறுத்தவே இல்லை.
அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் அணி - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நாங்கள் வெற்றி பெற்று வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.
மாணவச் செல்வங்களைப் பலி கொள்ளக்கூடியதாக நீட் தேர்வு இருக்கிறது
நேற்றுகூட, மேனாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள்  தெளிவாக சொல்லியிருக்கிறார். அவர்தான் காங்கிரசு தேர்தல் அறிக்கையை தயாரித்தவர். தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது; ஆனால், தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லிக்கொண்டு, அந்தத் தேர்விற்காகப் பயிற்சி வகுப்புகளை நடத்து கிறார்கள். அந்தப் பயிற்சியில் பெண்களுக்கு எவ்வளவு கொடுமைகள் நடத்தப்பட்டன என்பதுபற்றி செய்திகள் வந்திருக்கின்றன. கடைசி நேரத்தில், தேர்வு மய்யங்கள் மாற்றப்பட்டு, அதனால் ஒரு மாணவிகூட இறந்து போயிருக்கின்றார் இந்த ஆண்டு.
ஒவ்வொரு ஆண்டும் மாணவச் செல்வங்களைப் பலி கொள்ளக்கூடியதாக நீட் தேர்வு இருக்கிறது. ஆகவேதான், அதனை கைவிடவேண்டும் என்பதை உங்கள் மூலமாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
தமிழ்நாடு சமுகநீதி மண் - பெரியார் மண்
10 சதவிகித இட ஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் இருக்கிறது. ஆகவே, இது சமுகநீதிக்கு விரோதமானது. தமிழ்நாடு சமுகநீதி மண் - பெரியார் மண் - சமுகநீதிக்கே இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடியது தமிழ்நாடுதான். வடநாட்டுக்காரர்களுக்குக்கூட தெளிவு படுத்தவேண்டிய மாநிலம் தமிழகம்தான்.
தமிழ்நாடு அரசு, உடனடியாக இந்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவேண்டும்!
ஆகவேதான், இந்தக் கருத்தை உங்கள் மூலமாக வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசு, உடனடியாக இந்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவேண்டும்.
நெறிமுறைகள் தயார் என்று சொன்னால், என்ன அர்த்தம்? நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்றுதானே அர்த்தம். அதேநேரத்தில், தங்களுக்கு மாறான கருத்து இருந்தால், மத்திய அரசுக்கு, மாநில அரசு அடிமையாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. தங்களு டைய கருத்துகளை சுதந்திரமாக, தாராளமாக எடுத்துச் சொல்லலாம்.
எங்களுடைய நிலை வேறு; தமிழ்நாட்டில், சமுகநீதி யைப் பொறுத்தவரையில், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு; அதுவும், 9 ஆவது அட்டவணை பாதுகாப்பில் இருக்கின்ற ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடுதான். அப்படியென்றால், நாம் வித்தியாசமான ஒரு இடத்தில் சமுகநீதியில் உச்சக்கட்டத்தில் இருக்கிறோம். அதைக் குழிதோண்டி புதைப்பதுபோன்று, இன்றைக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நாங்கள் செயல்படுத்துவதற்கு வழிமுறைகளைத் தயாரிக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
மத்திய அரசு கடிதம் எழுதினால், இவர்கள் பதில் கடிதம் எழுதவேண்டும்.
இந்தப் பிரச்சினையில் ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, தமிழ்நாடு மாநிலம் சமுகநீதியில் தனித்த மாநிலமாகும். திறந்த போட்டியில் 31 சதவிகிதமாக இருப்பது 21 சதவிகிதமாகக் குறையும். அதனால், தாழ்த்தப்பட்டவர்களுடைய மாண வர்களுக்கு வாய்ப்புகள் குறையும்.
அதேபோன்று, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் திறந்த போட்டியில் போட்டியிடுவது குறையும்.
ஆனால், இப்பொழுது என்ன சொல்கிறார்கள்? புரியாத மக்களிடையே ஏமாற்றலாம் என்று நினைத்துக்கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள், நலிந்த பிரிவினருக்கு எல்லாம் இடம் கொடுப்போம் என்பது - வெல்லத்தில் பிள்ளையார் செய்து வைத்து, அதிலிருந்தே கொஞ்சம் கிள்ளி எடுத்துக் காட்டியது போன்ற கதை போல'' இருக்கிறது.
திராவிடர் கழகம் தலைமையில் பெரிய போராட்டம் நடத்தவேண்டி இருக்கும்
ஆகவேதான், இதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிடவேண்டும்; இல்லையானால், ஒத்தக் கருத்துள்ள, சமுகநீதியில் நம்பிக்கையுள்ள அத்துணைப்  பேரையும் திரட்டி, திராவிடர் கழகம் தலைமையில் பெரிய போராட்டத்தை நடத்தவேண்டி இருக்கும்.
ஏற்கெனவே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்குக்கு விரோதமாக நடக்கக்கூடிய, சமுகநீதியைப் பறிக்கக்கூடிய ஒரு செயலுக்கு, தமிழ்நாடு அரசு துணை போகக்கூடாது மத்திய அரசுக்கு என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
- விடுதலை நாளேடு, 11.5.19

வியாழன், 16 மே, 2019

சாதியற்றோர் சான்றிதழ்… புரட்சியா… பொறியா? – தோழர் ஓவியா


அரசியல் சமுதாயம் சாதியொழிப்பு முகாம்கள் இப்படி எங்கு திரும்பினாலும் சாதியாகவே இருக்கும் ஒரு சமுதாயத்தில் இந்தச் சாதியமைப்பை வெறுக்கும் ஒரு தனிநபர் நான் சாதியற்றவர் என்று கத்திக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பது மிக மிக இயல்பானது.  நிச்சயமாக அப்படி ஒரு வெறி நமக்கு வரத்தான் செய்யும்.  அப்படியொரு மனநிலையின் வெளிப் பாடுதானோ என்னவோ தோழர் சிநேகா தான் சாதியற்றோர் என்கின்ற சான்றிதழைப் பெற்றது.

ஆனந்தகிருஷ்ணன் – மணிமொழி தம்பதியரின் மூத்த மகள் நான். காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிறையில் உயிர் நீத்த போராளி சிநேகலதா நினைவாக சிநேகா எனப் பெயரிட்டனர்.  அம்மாவின் முதல் எழுத்தை முதலிலும், அடுத்தது அப்பாவின் முதல் எழுத்து என ம.ஆ.சிநேகா ஆனேன்….

இது சிநேகா அவர்கள் தன்னைப் பற்றி கூறியிருக்கும் வரிகள்.  ஓர் ஆழமான கருத்தியலுக்குச் சொந்தக்காரர் என்பதை இவ்வரிகள் நமக்கு பறைசாற்றுகின்றன.  மேலும் ஒரு கொள்கைப் பாரம்பரியம் உள்ள குடும்பத்தின் வழித்தோன்றல் என்பதும் தெளிவாகிறது. இவரை இப்படியொரு சாதியற்றோர் சான்றிதழ பெறத் தூண்டியது எதுவென அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்.

முதல் வகுப்பு சேர்க்கையில் தான் பள்ளி நிர்வாகம்  முதலில் நான் என்ன சாதி என்று கேட்டது. எனக்கு சாதி இல்லை என்று என் பெற்றோர் சொல்ல, மதத்தையாவது சொல்லுங்கள் என்றனர். மதமும் இல்லை என்றனர் என் பெற்றோர்…..

இப்படி தான் தொடங்கியது என் முதல் பிரச்சாரம்….

பள்ளி முதல் கல்லூரி வரை எதிலும் சாதி மதம் குறிப்பிட்டதில்லை. சாதி சான்றிதழும் இல்லை….என் தங்கைகள் மும்தாஜ் சூரியா, ஜெனிபர் அவ்வண்ணமே வளர்த்தனர்…. என் இணையர் கி.பார்த்திபராஜா உடனான என் இணை ஏற்பு விழா சாதி, மத சடங்குகள் அற்ற தாலி போன்ற சாதிய அடையாளங்கள் அற்ற புரட்சிகர விழாவாக நடத்தினோம்…. ஆதிரை நஸ்ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி எனப் பெயரிட்டு எங்கள் மகள்களை சாதி மத அடையாளங்கள் இன்றி வளர்க்கிறோம்…..சாதி சான்றிதழை எல்லா இடங்களிலும் கேட்கும் இந்த அமைப்பிற்கு நாங்கள் அந்நியர்கள் ஆனோம்….

வாழ்வில் சாதி தன்னை வெளிப்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு இடத்திலும் அதனை மறுத்தும் அதற்கு எதிரிடையான வினைகள் புரிந்தும் தனது ஆழமான சாதி எதிர்ப்பு உணர்வை  சமுதாயத்தில் பதிவு செய்பவராக அவர் இருந்திருக்கிறார்.  இருக்கிறார். இந்த இடம் வரை அவருடைய வாழ்க்கையும் என்னைப் போன்ற சுயமரியாதை இயக்க திராவிட இயக்கக் குடும்பங்களில் பிறந்து வளர்ந்த பலரது வாழ்க்கையும் ஒன்று பட்டு நிற்கின்றன.  தனது அகவாழ்வில் இதனை விட தீவிரமான சாதி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்த பலரையும் நாங்கள் சந்தித்தே இருக்கிறோம்.

தனது சாதித் தொழிலை செய்ய மறுத்தவர்கள். தனது சாதித் தொழிலை பிற சாதியினர் செய்வதற்கு ஏதுவான வேலைகள் செய்ய முற்பட்டவர்கள். சாதி மறுப்புத் திருமணத்திற்காக கொடுப்பதற்கரிய விலை பலவற்றை கொடுத்தவர்கள் என அந்தப் பட்டியல் நீண்டு போகும்…. அது மட்டுமல்ல அவ்வாறு செய்ய முடியாத நிலையில் உக்கி உருக்குலைந்தோரையும் நான் பார்த்திருக்கிறேன்.  என் தாத்தா முத்துச்சாமி அவர்களின் நண்பர் பெயர் மணி.  சைக்கிள் கடை வைத்திருந்தார்.  ஏழ்மை அவருக்கு நிரந்தர நண்பனாக இருந்தது.  பெண்ணுக்குச் சாதி மறுப்புச் சுயமரியாதைத் திருமணம் செய்ய ஆசை. வெறும் கொள்கையை வைத்துக் கொண்டு நின்ற அவரிடம் பெண் எடுக்கும் அளவுக்குக் கொள்கைவாதிகள் கிடைக்கவில்லை. தனது சொந்த சாதியில் கோவிலில் திருமணம். பத்திரிகை கொடுக்க வந்தவர் அழுதார். கோவில்ல வைக்கிறதையாவது நிறுத்தலாம்னு பார்த்தேன்.  முடியலை என்று சொன்னவரால் மேலே பேச முடியவில்லை.  நான் அப்போது சிறுமி.  அவரின் கண்ணீர் என் நினைவுகளில் பதிந்து போனது. 

தெருக்களில் பள்ளிக் கூடத்தில் இப்படி கால் வைத்த இடத்திலெல்லாம் படைச்ச சாமியை இல்லைன்னு சொல்ற…. நீ எப்படி நல்லாயிருக்கப் போறேன்னு இந்த சமுதாயம் பலவாறாகக் கேட்ட கேள்விகளிலும் கேள்வி என்கின்ற பெயரில் ஏவப்பட்ட ஏச்சுக்களையும் கடந்து சீரணித்துதான் எங்களைப் போன்றோரின் வாழ்க்கை நின்று கொண்டிருக்கிறது.  நான் படித்த பள்ளிக் கூடத்தில் அதன் பொது அசெம்பிளியில் கடவுள் எனக்கு நல்ல புத்தியைக் கொடுத்து என்னை ஆட்கொள்ள வேண்டுமென்று ஜெபித்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.  ஆனால் அவர்களின் கடவுளுக்கு அவர்கள் பிரார்த்தனை இன்னும் கேட்கவேயில்லை.  பாவம் அந்த ஆசிரியர்கள் எனக்காக எத்தனை முறை ஜெபித்தார்கள்?

இந்தச் சமுதாயத்தில் சாதியை,

மதத்தை எப்படி மறுப்பது?

இந்தச் சமுதாயத்தில் சாதியை மதத்தை எப்படி மறுப்பது?   வாழும் முறையிலேயே சாதியை மறுக்கும் புது வாழ்க்கை நெறி தந்தவர் பெரியார்.  பொட்டு வைக்கவில்லை … கிறித்துவரா என்பார்கள்  இல்லை என்போம்.  இஸ்லாமியரா என்பார்கள் இல்லை என்போம்.  இப்போதுதான் பள்ளிக் கூடத்தில் மட்டும் கேட்கிறார்கள்.  அப்போதெல்லாம் பேருந்துக்குக் காத்திருக்கையில் கூட கேட்பார்கள். பேருந்தில் அமர்ந்திருக்கும் போதும் கேட்பார்கள்.  யார் வேண்டுமானாலும் கேட்பார்கள்.  நீ யார் கேட்பதற்கு என்று யாரையும் நாங்கள் திருப்பிக் கேட்டதில்லை.  அந்தக் கேள்விக்குக் காத்திருப்பவர்கள் போல் பதிலளிப்போம்.  மதம் இல்லை என்று சொல்வோம்.  ஆம் மதமறுப்புப் பிரச்சாரத்தை நெற்றியிலேயே வைத்திருக்கிறோம் நாங்கள்.

பொட்டு, பூ, நகை துறக்கச் சொன்னார் பெரியார்.  துறந்த இடங்களிலெல்லாம் கேள்விகள் வந்தன.  மதமறுப்பு சான்றிதழாய் வாழ்ந்தோம் வாழ்கிறோம் நாங்கள். தாலி கட்டவில்லையே அப்ப உன்னைக் கல்யாணமானவன்னு நாங்க எடுத்துக்க வேண்டிய அவசியமில்லையேன்னு கேட்டவனையெல்லாம் எதிர்கொண்டுதான் நீ கட்டாத தாலியை நான் ஏண்டா கட்டணும்னு கேட்டோம்.  எங்களைக் காப்பாத்த தாலி வேண்டாண்டா செருப்பு போதும்னு சொன்னோம்.  பொறுக்கி மட்டுமல்ல போலீசும் அதே கேள்வியைத்தான் கேட்டது.  இப்போது பிரபலமாக இருக்கும் எங்கள் தோழர்களில் ஒரு தம்பதியர் ஒருமுறை இரண்டாவது ஆட்டம் திரைப்படத்துக்கு போய்விட்டு வந்து போலீஸ் ஸ்டேசன்ல போய் உட்காரும்படி ஆகி விட்டது.  தாலி இல்லைன்னா கணவன் மனைவின்னு எப்படி நம்புறதுன்னு கேட்டார் அந்தக் காவல்துறை அதிகாரி……ஒருமுறை இன்னொரு தோழர் ஒருவர் அலுத்துப் போய் சரி அண்ணன் தங்கச்சின்னு சொல்றேன். அதையாவது நம்பு. அதுக்கு தாலி வேணாம்ல. ஆளை விடு என்றார். 

இந்தக் கதையெல்லாம் எதுக்குன்னு கேட்கிறீங்களா…?   சாதியும் மதமும் அதற்கு எதிர்மறையாய் மாத்தி வாழ்ந்து காட்டி தீர்க்க வேண்டிய சமுதாய நோய்கள். நான் மேலே குறிப்பிட்ட சூழல்கள் மாறியிருக்கலாம். ஆனால் முடிந்து போய் விடவில்லை. சரி.  இப்போது மறுபடியும் சிநேகாவிடம் வருவோம். அவரின் புரிதல் என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம்.

சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல், சாதி மதம் அற்றவர் என்ற எங்கள் வாழ்விற்கு ஒரு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து அதற்காக முயற்சித்தேன்.

சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ்… என்று தொடங்கியிருக்கிறார்.  அப்படியென்றால்…?  இந்த இடத்தில் சாதிச் சான்றிதழ் பற்றி நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.  சாதி சான்றிதழ் சாதி ஒழிப்பு இயக்கத்தவரால் தோற்றுவிக்கப் பட்டது.  அது சாதியொழிப்புப் பணிக்கு ஆதாரமானதே யொழிய சாதி அமைப்பின்  ஆதாரமுமல்ல அடையாளமுமல்ல.   சாதி அமைப்பின்  அடையாளம் என்கின்ற முத்திரையை அதற்குத் தருவது பேராபத்து. 

சரி. இந்தச் சான்றிதழால் இவர் என்ன சமூகச் செயற்பாட்டை ஏற்படுத்த நினைக்கிறார் என்பதும் நமக்குப் புரியவில்லை.  அடுத்து இந்தச் சான்றிதழ் என்ன அடிப்படையில் வழங்கப் பட்டது சாதியற்றோர் என்கின்ற வார்த்தைக்கான வரையறை என்ன என்பதும் வெளிப் படுத்தப் படவில்லை.  சாதியை மறுப்போர் அல்லது பள்ளியில் சாதி சொல்ல விரும்பாதவர்கள் சாதியற்றவர்கள் என்று வகுக்கப் பட்டால்..  முடிந்தது கதை.  பிறகு அம்பேக்கர் சிலைக்கு அடியில் உட்கார்ந்து நாம் அழத்தான் வேண்டும்.

சட்டப்படி பள்ளியில் சாதி சொல்ல விரும்பாதவர்கள் சான்றிதழில் சாதியற்றோர்தான்.  அவர்கள் தாராளமாக சாதியில்லாமல் பள்ளியில் சேர முடியும்.  தனியார் பள்ளிகள் இதனைக் கடைப் பிடிக்க மறுக்கிறார்கள்.  நாம் என்ன செய்ய வேண்டும்.  யார் சட்டப்படி நடக்கவில்லையோ அவர்களைத் திருத்த வேண்டும்.  அதை விட்டு விட்டு சாதியற்றோர் என்கின்ற சான்றிதழ் எதற்கு?

இதில் மதமற்றோர் என்பதையும் சாதியற்றோர் என்பதும் இருவேறு விசயங்கள்.  இதெல்லாம் இருக்கட்டும் சாதியில்லை என்பது முற்போக்குதானே?   எதுக்கு இவ்வளவு பஞ்சாயத்து?  நல்லது நடக்க விடமாட்டீங்களா என்கின்ற ரேஞ்சுக்கு பேசத் தொடங்கிடாதீங்க.  கமலகாசன் பாராட்டு ….சார்பதிவாளர் பிரியங்கா பங்கஜம் வழங்கிய சான்றிதழ்….. சாதி ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு ஒரு புரட்சியின் தொடக்கம் என்றுரைத்திருக்கும் மோடி…. கொஞ்சம் நிதானமாக விவாதிக்கலாமே?

சாதியற்றோர் சான்றிதழ் என்கின்ற விசயத்தில் சாதியற்றோர் சான்றிதழ் சாதிச் சான்றிதழை வில்லனாக நிறுத்துகிறதேயல்லாமல் சாதியமைப்பை அல்ல என்பது சற்று ஆழ்ந்து உள்வாங்கி புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகவே இருக்கிறது.  இதனை சென்ற கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தோம். இருப்பினும் சாதியற்றோர் சான்றிதழை முற்போக்கு நடவடிக்கை என்கின்ற புரிதலில் இருப்பவர்களுக்காக இந்த கட்டுரை தொடர்கிறது.

வரலாறு முக்கியம்…

இந்தியாவின் அனைத்து உயர் பதவிகளையும் பார்ப்பனர்களே ஆக்ரமித்திருந்ததைப் பார்த்த வெள்ளையர்கள் இது சமூக நீதியன்று எனக் கருதத் தலைப்பட்டனர்.  அதே நேரத்தில் வெள்ளையர் தொடர்பு, இராணுவத்தில் இடம் பெற்றமை, பாரம்பரியமாக பார்ப்பனர்களுக்கு அடுத்த செல்வாக்கு நிலையிலிருந்ததால் கல்வியோடு தொடர்பிலிருந்தவர்கள், வெள்ளையர்களின் ஆங்கிலக் கல்வியை அடையும் வாய்ப்பிலிருந்தவர்கள் இந்நிலை மாற்றப் பட வேண்டும் என முனைந்து பணி செய்யலாயினர்.    இவ்வாறாக ஆங்கிலேயர்களே இது அநீதி என உணர்ந்தமையிலும், பார்ப்பனரல்லாத கல்வியாளர்கள் குறிப்பாக ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் தங்கள் சமுதாயத்தின் தாழ்நிலையை மாற்ற உறுதியேற்றமையிலும் கருக் கொண்டதுதான் சாதி எதிர்ப்புப் போர். 

சாதி அமைப்பு தன்னை கட்டமைக்கும் போது முதலில் காவு வாங்கியது பார்ப்பனரல்லாத மக்களின் அறிவு பெறும் உரிமையைத்தான்.  எனவேதான், கல்வி பெறுதலை தமது மக்களின் விடுதலைக்கான முதற்படியாக  பார்ப்பனரல்லாத மக்களின் தலைவர்கள் கருத்த் தலைப்பட்டனர். அன்றைய மன்னர்களில் சிலரும் கூட கல்வி பார்ப்பனரல்லாத மக்களுக்கு செனறு சேர வேண்டுமென்பதில் அக்கறை செலுத்தி நடவடிக்கை எடுத்தனர்.  இவர்களனைவருடையபார்வையிலும் அடிப்படையாக இருந்த்து சாதி ரீதியான அடையாளமேயாகும்.  சாதிய அடையாளத்தை வைத்துதான் இங்கு அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் தொடங்க பெற்றன.  இங்கு ஒரு மனிதனின் சாதி அடையாளம் என்பது அவன் வாழ்நிலையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.  சாதியமைப்பை மாற்ற வேண்டும் சாதியை ஒழிக்க வேண்டும் என உறுதியேற்கும் எவரும் முதலில் ஊன்றிப் பார்த்துணர வேண்டிய உண்மையாக இந்நிலை இருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் வகுப்புவாரி உரிமை இங்கு வென்றெடுக்கப் படுகிறது.  ஆங்கிலேயர் ஆட்சியில் பெற்றெடுத்த இந்த உரிமை சுதந்திர இந்தியா உருவாக்கப்பட்டு அதன் அரசியல் சட்டம் எழுதப்பட்டவுடன் கேள்விக்குட்படுத்தப்படும் முதல் விசயமாக மாறுகிறது.  இன்றைய இளைஞர்கள் வரலாற்றின் இந்த இடங்களை மிக இலேசாக புரட்டி விட்டுப் போய் விடக் கூடாது.  இந்தியாவுக்கு விடுதலை கேட்டவர்கள் விடுதலைக்கு போராடியவர்கள் அந்த போராட்டத்தை விரைவுபடுத்திய காரணிகள் இவற்றையெல்லாம் நாளைய நமது பள்ளிகளின் பாடப் புத்தகங்களில் புதிய அத்தியாயங்களாக எழத வேண்டும்.  அதன்பின் தமிழகத்தில் பெரியாரின் போராட்டம் அகில இந்திய அளவில் கல்வி வேலைவாய்ப்பில் சாதி அடிப்படையிலான ஒதுக்கீடுகளை அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் ஏற்படுத்திக் கொள்ள வழிவகை செய்த்து.  அந்த வகையில் அனைத்து சாதிப் பிரிவினர்களுக்கும் கல்வியையும் அதிகாரத்தையும் பிரித்துக் கொடுக்கும் வகுப்புவாரி உரிமையை சுதந்திர இந்தியாவில் நாம் இழந்தே விட்டோம் எனினும் போராட்டத்தின் வாயிலாக பட்டியல் அடிப்படையிலான பிற்படுத்தப் பட்டோர் தாழ்த்தப் பட்டோர் மலைவாழ் மக்கள் என்கின்ற பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கிக் கொள்ளும் உரிமையை பெற்றோம்.  இதன் தவிர்க்க இயலாத விளைவாக இட ஒதுக்கீடு  பெறும் மக்கள் இடஒதுக்கீடு பெறாத மக்கள் என்கின்ற பிரிவுகளாக மக்கள் பிரிந்து போனார்கள்.   இட ஒதுக்கீட்டின் மீது பகையுணர்வே வளர்ப்பதற்கு இந்த பிரிவு நிலையே ஏதுவாயிற்று.  வகுப்புவாரி உரிமை இருந்திருந்தால் இது சாத்தியப் பட்டிருக்காது.  

இந்த நாட்டில் கருத்துருவாக்கத்தின் தலைமை அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பனர் வசமே இருந்து வருகிறது. அரசு அரசு சார்ந்த செய்தி நிறுவனங்கள், அரசு சாராத செய்தி நிறுவனங்கள், கலை இலக்கியம்,  திரைப்படம், ஊடகங்கள் இவை அனைத்தும் அவர்களின் தலைமை அல்லது ஆலோசனை அல்லது நிர்வாகத்திலேயே இன்று வரை இயங்கி வருகிறது.  அதனை இன்று வரை அவர்கள் முழுமையாக பயன்படுத்தியும் வருகிறார்கள்.  பெண்கள் படிப்பதை அவர்கள் முதலில் விரும்பவில்லை.  ஆனால் பெண் கல்வி அவர்கள் தடையை மீறி வளர்கிறது எனத் தெரிந்தவுடன் படித்த பெண்ணை வில்லியாக சமுதாயத்தின் பொதுப் புத்தியில் ஏற்றினார்கள்.  அதே போல்தான் இட ஒதுக்கீடு சட்ட அங்கீகாரம் பெறுவதைத் தடுக்க முடியாத நிலையில் மக்களின் பொதுப் புத்தியை இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திருப்பவும் இட ஒதுக்கீட்டில் பயன் பெறுபவர்களை தாழ்வுணர்வு கொள்ளவுதற்குமான வேலைகளை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.  தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு நிலை பெற்றவுடன் அவர்கள் வெறி உச்சத்திற்கு ஏறியது.  அதன் விளைவுதான் பாலச்சந்தர், கமலகாசன் போன்றோர் உருவாக்கிய ‘உன்னால் முடியும் தம்பி’, ‘ஒரே ஒரு கிராமத்திலே’,  ‘வானமே எல்லை’.  போன்ற திரைப்படங்கள் இந்த மண்ணில் வெளி வந்தன.  பின்னாட்களில் இதன் தொடர்ச்சியாக ‘ஜெண்டில்மேன்’ வெளி வந்த்து.  இது தவிர எண்ணற்ற சிறுகதைகள், கட்டுரைகள் பள்ளிக் கூடத்தில் சாதி கேட்பது குறித்து நீலிக் கண்ணீர் வடிக்க தொடங்கின.  மேடைப் பேச்சு என்றாலே பள்ளி மாணவர்கள் சாதி சொல்ல வேண்டிய நிலை குறித்த கண்டனம் என்பதாக மாறிப் போனது.  பிறந்த வீட்டிலிருந்து சுடுகாடு வரை சாதி பார்த்துக் கொண்டேயிருக்கும் ஒரு சமுதாயம் பள்ளியில் சாதிச் சான்றிதழ் கேட்கப் படுவதற்காக கோபம் கொண்டெழுந்ததாய் நடித்த நடிப்பு இருக்கிறதே அது சிந்தித்துப் பார்த்தால்தான் எவ்வளவு கேவலமானது என்று புரியும்.   ஆனால் மேலே குறிப்பிட்டது போல் இந்த வாதத்தை தாங்கிப் பிடித்து பரப்ப இடஒதுக்கீடு பெறாத பிரிவினர் முழுமூச்சாக வேலை பார்த்தனர்.  இவர்களின் இந்த கூட்டுச் செயற்பாட்டின் விளைவாக விடுதலைக்கான வாசலாக உருவாக்கப் பட்ட ‘சாதிச் சான்றிதழ்’ சாதிஅமைப்பின் அடையாளமாக மாற்றி சித்தரிக்கப் பட்டது.  இது பொய் சித்திரம் மட்டுமல்ல.  இது ஒரு சதி யாகும்.

சாதி கேட்டதால் கமலகாசன் தன்னுடைய பிள்ளைகைளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து படிக்க வைக்கிறார் என்கின்ற செய்தி பெரிய புரட்சிகரமான செய்தியாக அன்னாட்களில் பேசப்பட்டது.  ஊடகங்கள் இதனை ஒரு செய்தியாக வடிவமைத்தன.  உண்மையில் பிள்ளை களை பள்ளியில் சேர்க்கும் போது கட்டாயமாக சாதி போட வேண்டும் என்பதாக அன்றும் சரி இன்றும் சரி எந்த சட்டமும் இல்லை.  இல்லாத ஒன்றை எதிர்ப்பதாக பாவனை காட்டி அப்படியொரு நம்பிக்கையை பள்ளி நடத்துபவர்களுக்கே உருவாக்கி விட்டார்கள் இவர்கள்.  இந்த பொய் புரட்டுகளுக்கு மத்தியில் நாம் எப்படி இதனை எதிர்கொள்வது என்கின்ற கேள்வி இப்போது எழுப்ப்ப் பட வேண்டும்.

முதலில் நமக்கு அடிப்படையான சிந்தனைத் தெளிவு அவசியம்.  பள்ளிக் கூடங்கள் தொடங்கி மருத்துவமனை ஆரம்ப சுகாதார மய்யங்கள் இப்படி பல இடங்களில் சாதி கேட்கப் படுகிறது.  ஆமாம்.  அதனாலென்ன? சாதி அங்குதான் அந்தக் கேள்வியால்தான் உருவாகிறதா?  சமுதாயத்தில் இருக்கிற சாதியைத்தானே அவர்கள் கேட்கிறார்கள்.  சரி அடுத்த கேள்விக்கு வாருங்கள் அவர்கள் எதற்காக்க் கேட்கிறார்கள்?  பள்ளிக் கூடத்தில்/ கல்விக் கூடங்களில் ஒவ்வொருவரின் சாதிக்குரிய எண்ணிக்கையில் மாணவர்களை நிரப்புவதற்காக்க் கேட்கிறார்கள்.  மருத்துவமனை போன்ற இடங்களில் எதற்குக் கேட்கிறார்கள்?  ஒவ்வொரு சாதிச் சமுதாயமும் எந்த அளவுக்கு சுகாதார வசதிகளைப் பெறும் வாய்ப்பிலிருக்கிறது என்பதையும் பிற்படுத்தப்பட்ட தன்மையின் அளவுகளை மதிப்பிடுவதற்காகவும் கேட்கிறார்கள்.  இதற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டியதுதானே சாதி ஒழிப்பாளரின் கடமையாக இருக்க முடியும்?  இவர்களுடன் முரண்படுவதற்கு என்ன இருக்கிறது?    எனவே சமுதாயத்தில் நம்மிடம் சாதி கேட்கும் போது எங்களுக்கு சாதியில்லை என்று சொல்கின்ற அதே வேளையில் அரசுத் தரப்பு ஆவணங்களுக்காக அந்தக் கேள்வி கேட்கப்படும் வேளையில் சாதிச் சான்றிதழுடன் அதனை தெரிவிக்க வேண்டியதே சரியான செயற்பாடாகும்.

இதில் சாதி மறுப்பு திருமணத்தில் அதாவது இரண்டு வேறு சாதிகளையுடைய பெற்றேருக்கு பிறந்த குழந்தைகள் அதில் பிற்படுத்தப் பட்ட சாதியை தனதாக தேர்வு செய்யலாம்.  இந்த இடத்தில் இந்த கட்டுரையாளராகிய எனது அனுபவங்களை கோடிடிலாமென நினைக்கிறேன்.  எனது தாத்தா பாட்டி காலத்திலிருந்து சுயமரியாதைத் திருமண வழி அமைந்த எங்கள் குடும்பத்தில் பல சாதிகள் கலந்து விட்ட நிலையில் இவ்வாறு கேட்கப் பட்ட இடங்களில் நான் எனக்கு சாதியில்லை என்று பதில் தந்திருக்கிறேன்.  ஆனால் அதனை கொள்கை அடிப்படையில் என்று நான் வாதிட்டதில்லை.  மாறாக எனது குடும்பத்தில் இப்படி பல்வேறு சாதிகள் கலந்திருப்பதால் எந்தவொன்றையும் நான் போட இயலாது என எடுத்துச் சொல்லியே மறுத்திருக்கிறேன்.  அதே நேரத்தில் எனது பேத்தி மற்றும் பேரனுக்கு எனது வாழ்க்கைத் துணைவர் சாதியை போட்டிருக்கிறோம்.  எங்களுடைய இந்த நடவடிக்கையில் கொள்கை அடிப்படையில் எந்த முரண்பாடுமில்லை என்கின்ற தெளிவு எங்கள் குடும்பத்தாருக்கு இருக்கிறது.

இந்த நிலையில்தான்…. சாதிச் சான்றிதழுக்கு எதிராக்க் கட்டமைக்கப் பட்டிருக்கும் இந்த பொதுப் புத்தியின் ஆதரவை நம்பிதான் இன்று ஆட்சியாளர்கள் சாதி ஒதுக்கீட்டுக்கு வெளியே அதற்கு எதிரான 10 சதவீத ஒதுக்கீட்டை அறிமுகப் படுத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.  நான் சாதியற்றவர் என்று ஒருவர் சான்றிதழ் வாங்குவது என்கின்ற செயற்பாட்டை அது எந்தக் களத்தில் நடைபெறுகிறது என்று பொருத்திப் பார்க்கும் போதே அதன் உண்மையான சமூக விளைவுகளை நாம் புரிந்து கொள்ள முடியும்.  கமலகாசன் உடனே தனது வரவேற்பைத் தெரிவித்தது சாதாரணமாக புறக்கணிக்கக் கூடிய ஒன்றல்ல.

நாம் சொல்ல விரும்புவதெல்லாம், சாதியற்றவராக இருப்பது வாழ்ந்து காட்டும் முறையில் இருக்கிறதேயொழிய அதற்கு சான்றிதழ் தேவையில்லை என்பதுடன் இந்த நடவடிக்கை சாதியின் அடிப்படையிலான உரிமைப் பகிர்வு என்கின்ற சமுதாய மாற்ற இயக்கத்திற்கு எதிர்வினையேயாற்றும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  முரண்களுக்குள் பொதிந்திருக்கும் உண்மையை அறிவதே சமூக அறிவியலாகும்.  

- கைத்தடி மாத இதழ், 7.5.19

ஞாயிறு, 5 மே, 2019

பார்ப்பனப் பண்ணையம்!

உண்மையைச் சொல்லப்போனால் மக்கள் தொகையில் குறைந்த சதவீதத்தில் உள்ள உயர்சாதியினரின் ஆதிக்கம்தான் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் எவ ரெஸ்ட் உயரத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக 17.1.2019 நாளிட்ட ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் வெளிவந்துள்ள புள்ளி விவரமே  போது மானதாகும்.
40 மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் 71 துறைகளில் பணியிடங் களில் வகுப்பு வாரியாக வஞ்சிக்கப்பட்ட நிலவரம்:
மத்திய பல்கலைக்கழகங்களில் பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27, தாழ்த் தப்பட்ட வகுப்பினருக்கு 15, மலைவாழ் மக்களுக்கு 7.5 அளிக்கப்பட வேண்டிய நிலையில்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உதவிப் பேராசிரியர்கள் - 14.38, பேராசிரியர் - 0.0, அசோசியேட் பேராசிரியர்கள் - 0.0
பேராசிரியர் பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 3.47, பழங்குடி வகுப்பினர் - 0.7
முற்படுத்தப்பட்ட வகுப்பினர் பேராசிரியர்கள் பணியிடங்களில் - 95.2, அசோசியேட் பேராசிரியர்கள் - 92.9, உதவிப் பேராசிரியர்கள் - 1.3
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (27 இருக்க வேண்டிய நிலையில்) மத்திய அரசின் 71  துறைகளில் - 14.94, ரயில்வே துறையில் - 8.05, மனிதவள மேம்பாட்டு துறையில் - 8.42, மத்திய அமைச்சரவை செயலகத்தில் - 9.26, நிதி ஆயோக்கில் - 7.56, குடியரசுத் தலைவர் செயலகத்தில் - 7.56, துணைக்குடியரசுத் தலைவர் செயலகத்தில் - 7.69, மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் - 11.43, சி.ஏ.ஜிஜி அமைப்பில் 8.24.
மத்திய பல்கலைக் கழகங்களிலும் சரி, மத்திய அரசின் துறைகளிலும் சரி, பிற்படுத் தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும் அளிக்கப்பட்ட இடஒதுக்கீடுகளும் நிரப்பப்படவில்லை.
இந்தப் புள்ளி விபரங்கள் எதைக் காட்டுகின்றன?
நூற்றுக்கு 3 சதவீதமாக மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் மத்திய பல்கலைக் கழகங் களில் 95 விழுக்காடு அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இந்த நிலையில் உள்ளவர்களுக்குத்தான் ‘வீக்கர் செக்சன்’ என்று சொல்லி கல்வியி லும், வேலை வாய்ப்பிலும் மேலும் 10 விழுக் காடு இடஒதுக்கீடு அளிக்கபோகிறதாம் மத்திய பிஜேபி ஆட்சி.
(உயர்ஜாதி வகுப்பினருக்கு பொருளா தார  ரீதியிலான 10% இட ஒதுக்கீடுகூடாது - ஏன்? - கி.வீரமணி, பக்கம் 62)
தகவல்: க.பழனிசாமி
தெ.புதுப்பட்டி
-விடுதலை ஞாயிறு மலர்,20.4.19

அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவீத இடஒதுக்கீடு-உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள பள்ளியின் இள நிலை உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளி இடஒதுக்கீட்டின்படி பணி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் கோபிகிருஷ்ணன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பள்ளிக்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக் கையை படித்துப்பார்த்த நீதிபதி, தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் போதுமான தகவல்கள் இல்லை.மேலும் பள்ளிக்கல்வித் துறை மட்டுமின்றி அரசின் பிற துறைகளி லும் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என வேதனை தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு 8 வார காலத்துக்குள் பணி நியமனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டத்தை அமல் படுத்த வேண்டும். இதுகுறித்து அனைத்து துறைகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்க ளுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
- சட்டக்கதிர், ஏப்ரல் 2019
-விடுதலை ஞாயிறு மலர்,20.4.19