பக்கங்கள்

கவிஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 அக்டோபர், 2022

சமூகநீதி தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் - கவிஞர் கலி.பூங்குன்றன்

 

சமூகநீதி : சமூகநீதி தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்

டிசம்பர் 16-31,2021

கவிஞர் கலி.பூங்குன்றன்

1921 ஆம் ஆண்டு PUBLIC ORDINARY SERVICE G.O. NO. 613 Dated 16/9/1921) 12

1) பார்ப்பனர் அல்லாதார் 5 (44%)

2) பார்ப்பனர்கள் 2 (16%)

3) முஸ்லிம்கள் 2 (16%)

4) ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறிஸ்துவர்கள் 2 (16%)

5) தாழ்த்தப்பட்டவர்கள் 1 (12%)

மீண்டும் 15.2.1922 மற்றும் 2.2.1924 ஆகிய நாள்களில் இதே ஆணை தொடர்ந்து வெளியிடப்பட்டது. (பானகல் அரசர் என்ற இராமராய நிங்கர் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தார்). 1924இல் சென்னை பல்கலைக்கழக மசோதாவைக் கொண்டு வந்து மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று பார்ப்பனர் போட்டிருந்த சூழ்ச்சியை நொறுக்கினார்.

1928ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் பி.சுப்பராயன் தலைமையில் அமைந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.முத்தையா முதலியாரின் முயற்சியால் அந்த வகுப்புரிமை ஆணை COMMUNAL G.O முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.

1948ஆம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல் அமைச்சராக இருந்த போது பழைய ஆணையைக் கொஞ்சம் திருத்தி அமைத்தார். பெற்ற இடங்கள் 14 என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

பார்ப்பனர் அல்லாதாருக்கு 6 இடங்கள் (43%)

பிற்படுத்தப்பட்டோருக்கு 2 இடங்கள் (44%)

தாழ்த்தப்பட்டோருக்கு 2 இடங்கள் (14%)

ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறிஸ்துவர்கள் ஓரிடம் (7%)

முஸ்லிம்களுக்கு ஓரிடம் (7%)

பார்ப்பனர்களுக்கு 2 இடம் (14%)

இவர்களைத் தெரிந்து கொள்வீர்!

மண்டல் குழுப் பரிந்துரை வெளியாவதற்கு முன், அதில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகளை எப்படியோ அறிந்து கொண்ட நிலையில்‘BURRY THE MANDAL REPORT’ என்று “இண்டியன் எக்ஸ்பிரஸ்’’ எழுதியது.

அன்றைய திராவிடர் கழக பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம்  ‘HURRY THE MANDAL REPORT’ என்று கூறினாரே பார்க்கலாம்!

மண்டல் குழு மீதான 9 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் என்ன கூறினார்? இடஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டினால், அது ஜாதியத்துக்கு வழிவகுக்கும் என்றார்.

(49 சதவிகிதம் கொடுத்தால் ஜாதியத்தை வளர்க்காதோ?)

இன்று ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோர்:

35க்கு 24 அமைச்சகங்களில் அதிகாரிகள்

‘ஏ’ பிரிவு

(Group – A) –  17%

பி.பிரிவு – 14%

சி.பிரிவு – 11%

டி,பிரிவு – 10%

ஒன்றிய அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்டோர்:

37க்கு 25 துறைகளில்

‘ஏ’ பிரிவு – 14%

‘பி’ பிரிவு – 15%

‘சி’ பிரிவு – 17%

‘டி’ பிரிவு – 18%

குடியரசுத் தலைவர், பிரதமர், தேர்தல் ஆணையர் அலுவலகங்களில் 27% அமல்படுத்தப்-பட-வில்லை

(10.12.2017: ‘தி.இந்து’)

தகுதி – திறமை

சிறீ ஹரி கோட்டாவும் வாணியம்பாடியும்

இடஒதுக்கீடுதான் தகுதி திறமை கெட்டுப்போனதற்குக் காரணம் என்ற பல்லவியைப் பாடுவது பார்ப்பனர்களின் பிறவிக் குணம்.

11.2.1981 அன்று வாணியம்பாடியில் இரயில் விபத்தில் மாண்டவர்கள் 200 பேர்களுக்கு மேல். அப்பொழுது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு எழுதியது என்ன தெரியுமா?-

“VANIYAMBADI SMASH LINKED TO RESERVATION POLICY”

தாழ்த்தப்பட்டோருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கொடுப்பதுதான் இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என்று எழுதியது.

சிறீஹரிகோட்டா இஸ்ரோவில் ஜி.எஸ்.எல்.வி _ எஃப் 2 ராக்கெட் 15.7.2006 மாலை 5:37 மணிக்கு ஏவப்பட்டது. 90 வினாடிகளில் ராக்கெட் கடலில் விழுந்தது. அதற்கான செலவு ரூ. 256 கோடி.

தகுதி – திறமைக்குப் பெயர் போனவர்கள் தானே அந்த ராக்கெட்டை ஏவினர்! அந்தத் துறையில் தான் இடஒதுக்கீடு கிடையாதே! அப்படி இருக்கும்போது ஏன் தோல்வி? – ரூ. 256 கோடி நட்டம்! இதுபற்றி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’கள் ஒரு வரி கண்டித்து எழுதாதது ஏன்? இதற்கு பெயர்தான் பார்ப்பனத்தன்மை என்பது.

இரயில்வே அமைச்சராக, துணைப் பிரதமராகவெல்லாம் இருந்த பாபு ஜெகஜீவன்ராம்“CASTE CHALLENGE IN INDIA”

என்ற ஒரு நூலை எழுதினார். அதில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“WHEN A RAILWAY ACCIDENT TOOK PLACE, IT WAS A FASHION TO BLAME THE PROMOTED SCHEDULED CASTES AND SCHEDULED TRIBES EMPLOYEES OR OFFICIALS”.

“எப்பொழுதாவது இரயில் விபத்து ஏற்பட்டால் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் இடஒதுக்கீடு கொடுப்பதுதான் இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டுவது ஒரு வகை நாகரிகமாகப் போய்விட்டது என்று பாபு ஜெகஜீவன்ராம் எழுதியுள்ளார்.’’ஸீ

சமூக நீதியின் ஒரு முக்கிய காலகட்டத்தில் நாடு! - கவிஞர் கலி.பூங்குன்றன்

 

தமிழர் தலைவர் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை

டிசம்பர் 1-15,2021

சமூக நீதியின் ஒரு முக்கிய காலகட்டத்தில் நாடு!

கவிஞர் கலி.பூங்குன்றன்

ஆண்டாண்டு காலமாக வாய்ப்பும், உரிமையும் மறுக்கப்பட்ட மக்களை, கை தூக்கி விடுவதுதான் இடஒதுக்கீடு என்பது.

இடஒதுக்கீடுக்கு என்று ஒரு வரலாறு உண்டு, மகாராட்டிரத்தில் ஜோதிபா பூலே, சாகுமகராஜ் என்று தொடங்குகிறது.

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்று கேட்கின்றனர். ஆம், ஜாதி இருக்கும் வரை _ ஜாதி ஒழிக்கப்படும் வரை ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது தவிர்க்கப்பட முடியாததுதான். அந்த ஜாதிதான் கல்வி உரிமையை மறுத்தது _ இதுவும் கூட ஒரு தடுப்பூசி அணுகுமுறைதான்.

ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்போர், ஜாதியை ஒழிக்கச் சட்டம் கொண்டு வரட்டுமே!

ஒரே தேசம் _ ஒரே மொழி _ ஒரே கலாச்சாரம் என்பவர்கள், எல்லோரும் ஒரே ஜாதி _ ஒரே நிலை _ சரி சமம் என்று சட்டம் செய்யட்டுமே! அப்படி சட்டம் செய்தால், செயல்பாடுக்கு வந்தால் இழப்புகள் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு இடஒதுக்கீடு தேவையில்லை என்று கூற நாங்கள் தயார்தான் என்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

ஏதோ இப்போதல்ல _ இதற்கு முன்பே கூட சொல்லித்தான் வருகிறார். ஆனாலும் எதிர்த் தரப்பிலிருந்து பதிலைத்தான் காணோம்!

இன்றைய தினம் அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கோட்பாடாக இருக்கக்கூடிய சமூக நீதியை, இடஒதுக்கீட்டை, அதன் நோக்கத்தை அதற்கான அடிப்படை வேரினையே வெட்டும் வேலையில் பார்ப்பன _ ஆதிக்கக் கட்சியாக இருக்கக் கூடிய பா.ஜ.க. அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸின் கட்டளைப்படி செய்து கொண்டு இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பாகவத் இடஒதுக்கீடை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையா?

இடஒதுக்கீடு குறித்து ஆர்.எஸ்.எஸின் ஏடான ‘பஞ்சான்யா’வுக்கு ‘அவுட்லுக்’ (20.9.2015) ஏட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அளித்த பேட்டியில் கூறியது என்ன?

“இந்தியா போன்ற மக்களாட்சி நாட்டில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படும் போதுதான் சமூகத்தில் அமைதி நிலவும். ஆனால், இங்கே பலரது வாய்ப்புகளைப் பறித்து சிலருக்கு மட்டுமே கொடுக்கும் சூழ்நிலை இடஒதுக்கீடு என்கிற பெயரில் நடைமுறையில் உள்ளது. இந்த நாடு கலாச்சாரத்தில் முதுமை பெற்ற நாடாகும். கலாச்சாரக் காவலர்கள் இந்த நாட்டை இன்றளவும் புனிதம் கெடாமல் வைத்துள்ளனர். இடஒதுக்கீடு என்கிற பெயரில் கலாச்சாரக் காவலர்களை இழிவுபடுத்தும் விதமாக அவர்களின் தலைமுறைகளுக்குத் துரோகம் இழைக்கும் வகையில் பெரும்பான்மையான மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தி விடும்.

இந்த நாட்டில் வாழும் அனைவரின் நன்மைக்காக ஆட்சியாளர்களின் சிந்தனை இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்த நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் பாடுபடுகிறார். ஆகவே, வளர்ச்சிக்காக தியாகம் செய்யத் துணிச்சலும் இருக்கும் மக்களை அரசு வஞ்சிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபடும் போதுதான், இதுபோன்ற இடஒதுக்கீட்டுத் தேவைக்காகப் போராட்டங்கள் வெடிக்கும். ஆகவே இதுவரை உள்ள இடஒதுக்கீட்டு முறையை மாற்றியமைப்பது அத்தியாவசியமான ஒன்றாகும். அரசு குழு ஒன்றையமைத்து இடஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் கூறிய இந்தக் கருத்துக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை’யில் (22.9.2015) வெளியிட்ட அறிக்கை என்னவோ அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது.

ஆசிரியர் சொன்னது என்ன?

“ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து வருகிற ஆபத்திற்கு ஒரு முன்னோட்டமாகும். பின்னாளில் அவர்கள் சிந்திப்பது என்ன வென்றால், இப்பொழுது இருக்கின்ற அடிப்படை அளவுகோலை அகற்றிவிட்டு, பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் _ இவர்களுக்குக் கிடைக்கின்ற இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படை என்கிற முறையில் இட ஒதுக்கீட்டை மாற்ற வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு அந்தக் கமிட்டி அமைக்கப்படக் கூடிய நிலையில் இருக்கிறது.

இந்தத் துறையில் மட்டுமல்ல, கல்வித்துறையிலும் கூட தனியாக ஒரு வாரியம் அமைத்து, கல்வித் திட்டத்தையே மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கருத்துகளைச் சொல்லிக்கொண்டு ஆழம் பார்க்கிறார்கள்.

எனவே, இந்தக் காலகட்டத்தில், காலம் காலமாக நம்முடைய நாட்டில் தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராசரும், திராவிடர் கழக இயக்கமும் மிகப்பெரிய அளவில் போராடி வெற்றி கண்ட, பாதுகாத்த இடஒதுக்கீடு, சமூக நீதி என்பதற்குப் பெரிய அறைகூவல் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது’’ என்று ஆறு ஆண்டுகளுக்கு முன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தொலை நோக்கோடு சொன்னதுதானே இப்பொழுது நடந்திருக்கிறது?

இடஒதுக்கீடு – உள் ஒதுக்கீட்டின் பலன் என்ன?

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு (29.5.2009) உள் ஒதுக்கீடு வழங்கிய அதன் பலன் என்ன தெரியுமா?

இந்த உள்ஒதுக்கீடு வருவதற்கு முன் அருந்ததியர்த் தோழர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் கிடைத்த இடங்கள் வெறும் 13;  2009இல் கிடைத்த இடங்களோ 29. 2009_2010இல் கிடைத்த இடங்களோ 56. நான்கரை மடங்கு அதிகம். அதே போல பொறியியல் கல்லூரிகளில் 2007_2008இல் அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 44, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட பின் 2009_2010இல் கிடைத்த இடங்கள் 1165, பார்ப்பனர்கள் ஆத்திரப்படுவதற்கும், இடஒதுக்கீட்டை ஒழிக்கக் கூப்பாடு போடுவதற்கும் இதுதான் காரணம்!

மதரீதியாக இடஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனத்தில் இடமில்லை. மதம் மாறியவர்களை பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுடன் சேர்த்து சலுகை வழங்குவதால் ஏற்கெனவே உள்ள ஹிந்துக்களின் அந்தப் பிரிவினருக்கே பாதிப்பு ஏற்படும். தற்போது சலுகை பெற்ற பிரிவிலும் கூட வறுமையில் உழல்பவர்கள் உள்ளனர். அவர்களுக்கு வருமான அடிப்படையில் சலுகை வழங்குவதன் மூலம் சிறுபான்மை மதத்தினர் உள்பட அனைத்து பிரிவினரும் பயன்பெற வசதி செய்யப்படும் என்பது பிஜேபியின் தேர்தல் அறிக்கை (2016).

வருமானஅடிப்படையில் இடஒதுக்கீடு என்று கூறியுள்ளது சட்டவிரோதமாக ஒன்றைத் தேர்தல் அறிக்கையில் சேர்த்து, ஆட்சிக்கு வந்தபின் அந்த சட்டவிரோதத்தைச் செயல்படுத்தியிருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் இது சட்ட விரோத அரசே!

இந்தியாவின்அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் என்பது இடஒதுக்கீட்டுக்காகவே கொண்டு வரப்பட்டது. அதற்குக் காரணம் தமிழ்நாடுதான் _ தந்தை பெரியார்தான்.

1928 முதல் சென்னை மாநிலத்தில் இருந்து வந்த இடஒதுக்கீடு செல்லாது என்று ‘சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தைக் காட்டி வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்புக் கூறிய காரணத்தால் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே கொதித்து எழுந்தது.

தமிழ்நாட்டின் போராட்டத்தை எடுத்துக் காட்டித்தான் பிரதமர் ஜவகர்லால் நேரு முதல் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு காட்டினார்.

அந்தத் திருத்தம் என்ன சொல்லுகிறது?

சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுப்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட உறுதி செய்தது. அப்பொழுதே கூட பொருளாதார ரீதியாக என்ற அளவுகோலையும் சேர்க்க வேண்டும் என்று ஜன சங்க நிறுவனரான தீனதயாள் உபாத்தியாயா ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில் பொருளாதாரத்துக்கு ஆதரவாக அய்ந்து வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்தன. அதன்படி சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்கிற அளவுகோலின்படிதான் இடஒதுக்கீடு இருந்து வருகிறது.

1951ஆம் ஆண்டில் பொருளாதார அளவு கோலைக் கொண்டு வர முயற்சி செய்தவர்கள் இப்பொழுது ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கும் காரணத்தால், உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று ஒரு சட்டத்திருத்தம் (திருத்த எண்.103) கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டார்கள்.

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் செல்லாது என்று ஏற்கெனவே பலமுறை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததே!

பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பொருளாதாரத்தில் பின் தங்கியோர்க்கு என்று 10 விழுக்காடு இடஒதுக்கீடு செய்த போது உச்சநீதிமன்றம் செல்லாது என்று நிராகரித்து விட்டதே!

2016ஆம் ஆண்டில் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் உள்ள பொதுப் பிரிவினருக்கு 10 விழுக்காடு வழங்கி அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது, பா.ஜ.க. ஆளும் குஜராத். இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையிலான அமர்வு குஜராத் சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியதே. ராஜஸ்தான் மாநிலம் கொண்டு வந்த பொருளாதார அடிப்படைச் சட்டமும் நீதிமன்றத்தால் செல்லாது என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அரசே, சட்டத்துக்கு விரோதமாகவும் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிராகவும் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியது _ பச்சையான சட்ட விரோதம் _ நீதிமன்ற விரோதம் தானே!

5.5.2021 அன்று உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியது என்ன?

மகாராட்டிர மாநிலத்தில் ‘மராத்தா’ பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 16 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லாது என்று கூறப்பட்டது. அத்தீர்ப்பில் 50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு செல்லாது என்றும், பிற்படுத்தப்-பட்டோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் உரிமை மத்திய அரசுக்குத்தான் உண்டே தவிர, மாநில அரசுக்குக் கிடையாது என்றும் கூறப்பட்டது.

இந்தச் சட்டம் கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. “செலக்ட்’’ கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பூபேந்திர யாதவ் எம்.பி. ஆவார். அந்தக் கமிட்டியில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி (திமுக), டி.கே.ரங்கராஜன் (சிபிஎம்), நவநீதிகிருஷ்ணன் (அஇஅதிமுக) மற்றும் பிற மாநிலத்தினரும் இடம் பெற்றிருந்தனர். அந்தக் கமிட்டியில் கருத்துச் சொல்ல திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். எழுத்துப்பூர்வமாகவே கழகத்தின் கருத்துகளை எடுத்துக் கூறி நேரிலும் விளக்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் யார் என்று தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாது. மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்ற சட்டத்தின் பிரிவு (342A) மாநில உரிமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது என்று முதன்முதலில் ஆணி அடித்ததுபோல் கூறியவர் திராவிடர் கழகத் தலைவர்தான். ஆனாலும் இதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

மகாராட்டிரத்தில் மராத்தா பிரிவினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு செல்லாது என்ற தீர்ப்பு _ இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளது.

50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திரா சகானி வழக்கில் கூறப்பட்டதையும் மகாராட்டிரா வழக்கில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மண்டல் குழு வழக்கை _ ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியபோது, ஜஸ்டிஸ் திரு.இரத்தினவேல் பாண்டியன் தனித்தன்மையாக தனித்த தீர்ப்பை எழுதினார்.

பாலாஜி எதிர் மாநில அரசு வழக்கில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் ஜெத்மலானி கூறியது என்ன? 50 சதவிகிதத்திற்கு மேல் போகக் கூடாது என்று நீதிமன்றம் சொன்னது தீர்ப்பின் வரிகள் அல்ல, வெறும் கருத்துதான் (Obiter- Dicta); இதற்குச் சட்ட வலிமை கிடையாது என்றாரே! என்று ஜஸ்டிஸ் இரத்தினவேல் பாண்டியன் மணடல் குழு வழக்கில் தன் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜஸ்டிஸ் ஓ.சின்னப்ப ரெட்டி என்ன கூறியுள்ளார்? (வசந்த குமார் வழக்கில்), 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியதற்கு என்ன அளவுகோல்? விஞ்ஞானபூர்வமானதா? புள்ளி விவர தரவுகள் உண்டா? என்று கேட்டாரே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 12ஆம் பிரிவு என்ன கூறுகிறது? ‘ஸ்டேட்ஸ்’ என்றால் மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அரசு மூன்றையும் தான் குறிக்கும்.

1928ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. பிற்படுத்தப்பட்டோரை முடிவு செய்தது மாநில அரசுதான் _ மாநிலத்துக்கு மாநிலம் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையும், தன்மையும் மாறுபடுகிறது. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோரை மாநில அரசு தானே முடிவு செய்ய முடியும்? மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு என்று வருகிற போது அந்தந்த மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் அடிப்படையில்-தானே இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இங்கே மத்திய அரசு எங்கே இருக்கிறது? இன்னும் சொல்லப் போனால் மாநில அரசுக்குத்தான் மக்கள் உண்டு; மத்திய அரசுக்கு நேரிடையாக மக்கள் கிடையாதே!

மகாராட்டிரத்தில் தானே நடந்திருக்கிறது _ நமக்கு என்ன என்று அலட்சியமாக இருக்க முடியுமா? கடைசி வீட்டில்தானே தீ பிடித்திருக்கிறது _ நம் வீட்டுக்கு ஆபத்தில்லையே என்று கைகட்டி நிற்க முடியுமா? அந்தத் தீ நம் வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் பிடிக்கும்?

அதுவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்றால் எல்லா மாநிலங்களையும் கட்டுப்படுத்தத்-தானே செய்யும்!

(தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளுள் ஒருவரான நாகேஸ்வர ராவ் _ அதிமுக அரசு சார்பில் 69 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் ஆவார்).

தமிழ்நாட்டில் முசுலிம்களுக்கும், அருந்ததியர்க்கும், உள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இந்த நிலையில் யாருக்கோ வந்தது என்று அலட்சியமாக இல்லாமல் சமூக நீதிக் களத்தில் _ பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் சிறுபான்மையினர் ஒன்றிணைந்து, நாம்தான் வெகு மக்கள் _ ஜனநாயகம் என்பது பெரும்பாலோரால் ஆளப்படுவது என்பதைக் கணக்கில் கொண்டு களத்தில் நிற்க வேண்டும்.

திராவிடர் கழகத்தின் முயற்சியால் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வினைத் திட்பத்தால் 69 சதவிகித இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டுள்ளது. ஒன்பதாவது அட்டவணையில் வைத்துப் பாதுகாக்கவும் படுகிறது.

கருநாடக மாநிலத்தில் உள்ள 73 விழுக்காடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா மற்றும் நீதிபதி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் வழங்கிய தீர்ப்பு என்ன கூறுகிறது?

“தமிழ்நாடு அரசின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது கல்வி மற்றும் அரசுப் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் (தமிழ்நாடு அரசு) 1993இன்படி வழங்கி வருகிறது. இது அரசமைப்புச் சட்டம் 9ஆம் அட்டவணையின் கீழ் கொண்டு வந்துள்ளதால், இது நீதிமன்ற மறு ஆய்விற்கு அப்பாற்பட்டது ஆகும் (ஜூலை 2010) என்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது.’’

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு இத்தனை சதவீதம்தான் _ இத்தனை சதவிகிதத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு என்ன பதில்? (ஒரு முறை ராம் ஜெத்மலானி இடஒதுக்கீட்டுக்காக வாதாடிய-போது நீதிபதி 100 சதவிகிதம் கூட இடஒதுக்கீடு கேட்பீர்களா என்று கேட்டபோது “Why Not?” என்று பதிலடி கொடுத்ததுண்டே!).

அரசமைப்புச் சட்டம் 15(4), 16(4) என்பது அடிப்படை உரிமையாகும். இதில் கை வைக்க எந்த நீதிமன்றத்துக்கும் உரிமை கிடையாது. ஆனால் நீதிமன்றங்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இப்பொழுது எந்த அளவுக்கு நீதிமன்றம் சென்றுள்ளது? நீதிமன்றம் தலையிட முடியாது _ கூடாது என்பதற்காகவே அரசமைப்புச் சட்டம் 9ஆம் அட்டவணை உருவாக்கப் பட்டது. இப்போது அதிலும் தலையிடுவோம் என்று உச்சநீதிமன்றம் சொல்லுகிறது என்றால் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டாமா?

நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, உச்சநீதிமன்றம் செல்லாது என்று கூறியது. நீதிமன்றத்தின் இத்தகைய தலையீட்டைத் தவிர்க்கவே ஒன்பதாம் அட்டவணை கொண்டு வரப்பட்டது. இந்த அட்டவணையின் கீழ் 284 சட்டங்கள் உண்டு. ஆனால், சமூக நீதியும் இதில் முதன்முதல் இடம் பெற்றுள்ளது என்றால் அதற்குக் காரணம் திராவிடர் கழகமே! இதுவரை இந்தச் சட்டங்களுக்கு எதிர் வினை என்பது வந்ததே கிடையாது.

9ஆம் அட்டவணை நீதிமன்ற அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது. அதிலும் தலையிட முடியும் என்று கூறியுள்ள நிலையில் மற்றொரு அட்டவணை கொண்டு வரப்பட வேண்டும் என்பது திராவிடர் கழகத் தலைவரின் கருத்தாகும்.

80 சதவிகித மக்களுக்கு _ 69 சதவீத இடஒதுக்கீடு என்பதற்கு ஆதாரம் உண்டு. ஆனால் 50 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என்பதற்கு ஆதாரங்களோ _ தரவுகளோ கிடையாது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 16(4) என்ன கூறுகிறது? மற்ற (முன்னேறியவர்களோடு சமமான நிலை அடையும் அளவுக்கு) (Adequately) இடஒதுக்கீட்டின் அளவு இருக்கலாம் என்று கூறுகிறது. இதனைக் கண்டறியும் உரிமை அரசுகளுக்கு உரியதே தவிர நீதிமன்றங்களுக்கு அறவே கிடையாது. Adequate என்ற இலத்தீன் சொல்லுக்கு Till it is equalised மற்றவர்களோடு சமநிலை அடைகிற அளவுக்கு என்று பொருள். இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்குரிய இடஒதுக்கீடு விகிதாசாரம் அளவுக்கு இடங்கள் இதுவரை பூர்த்தியாகவில்லை என்பது கவனத்துக்கு உரியதாகும்.

இடஒதுக்கீடு குறித்து நீதிபதிகள் தெரிவித்து வரும் கருத்து குறித்து நோபல் அறிஞர் அமர்த்தியா சென் கூறி இருப்பது கவனிக்கத்தக்கது.

“இடஒதுக்கீடு அளித்தால் தகுதி, திறமை குறைந்துவிடும் என்ற கருத்தை எச்சரிக்கை-யோடு பார்க்க வேண்டும். தகுதி அடிப்படை-யில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவரையும், இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்-பட்ட மாணவரையும் ஒருக்கால் ஒப்பிட்டுப் பார்த்தால், அதை எப்படிப் பார்க்க வேண்டும்? ஒரு நதியின் வளைவை மட்டும் பார்க்கக் கூடாது. நதியின் ஒட்டுமொத்தப் போக்கினையும் பார்க்க வேண்டும். அதுபோல்தான் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கையால் சமூகத்திற்குக் கிடைக்கும் பலன்களை நோக்க வேண்டும். நீதிமன்ற அடிப்படையில் இதற்கு மிக எளிதான பதிலை எட்டிவிட முடியாது. நியாயத்தின் அடிப்படையில் நீண்ட கால நோக்கில் இதைப் பார்க்கவேண்டும்’’ என்று நோபல் அறிஞர் அமர்த்தியா சென் சொன்னார். அதுவும் எங்கு எந்த இடத்தில் சொன்னார் என்பதுதான் கைதட்டிச் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். சென்னை அய்.அய்.டி.யில் (22.12.2009) தான் சொன்னார் என்பது நினைவிருக்கட்டும்!

மக்கள் நலனுக்காக தந்தை பெரியார் நீதிமன்றங்களை விமர்சித்ததுண்டு _ திராவிடர் கழகம் நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட எரித்ததுண்டு.

மக்களுக்குத் தேவையானவற்றை முடிவு செய்வது அரசுகளே _ நீதிமன்றங்கள் அல்ல.

இப்பொழுது சமூகநீதிக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்றங்களும், இத்திசையில் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும். மக்களிடம் எழுச்சியை உண்டாக்க வேண்டும்.

குறிப்பு: சமூகநீதி _ இட ஒதுக்கீடு குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் காணொலியில் (மே 2021) ஆற்றிய உரையைத் தழுவி எழுதப்பட்டது இக்கட்டுரை.

வியாழன், 31 ஜனவரி, 2019

உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு - ஒரு மோசடி

கலி.பூங்குன்றன்




உயர் ஜாதியில் ஏழைகள் இல்லையா? அவர்களும் மனிதர்கள்தானே. அவர்களைக் கைதூக்கி விட வேண்டாமா? எதற்கெடுத் தாலும் இந்த வீரமணிக்கும், தி.க.காரர்களுக் கும் பார்ப்பனப் பார்வைதானா? இது மட்டும் தோஷமில்லையா? என்று பார்ப்பனர்கள் மட்டுமல்ல; பார்ப்பனீயத்துக்குப் பலியான பார்ப்பனர் அல்லாதாரும் கூட படப்பட எனப் பேசுவதுண்டு.

அவர்கள் மீது சீறிப் பாய்வதைவிட, அவர்களின் சிந்தனை என்பது பார்ப்பனீயத்தால் சீழ் பிடித்துப் போனதால்  ஏற்பட்ட கெட்ட நாற்றமே, இது.

1946 நவம்பர் 9ஆம் தேதியிட்ட குடி அரசு இதழில் பார்ப்பான் பணக்காரனா னால்? என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் தந்தை பெரியார்.

இந்த நாட்டில் பார்ப்பனர் மீது பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படி செய்து வரும் (என்னால் தோற்றுவிக்கப்பட்ட) சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் பிரச்சாரத்தால் பார்ப்பனர்கள் தங்களுக்கு உரிய வைதீக சம்பந்தமான ஏழ்மை வாழ்க்கையை விட்டுவிட்டு, பாங்கி, வியாபாரம், இயந்திர முதலாளி முதலிய தொழில்களில் ஈடுபட்டு ஏராளமான பணம் சம்பாதித்து அவர்களில் அநேகர் செல் வந்தர்களாகவும்,  இலட்சாதிபதிகளாகவும், ஆகிவிட்டார்கள்.

இதுதான் துவேஷப் பிரச்சாரத்தால் ஏற்பட்ட பயன் என்று பார்ப்பனர்கள் மீது வெறுப்புக் கொண்ட பலர் என்னைக் குற் றம் சொல்லுகிறார்கள். இது உண்மையா னால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியேயாகும்.

எனக்கு, எனது சுயமரியாதை, திரா விடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான் கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக் கூடாது, அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் இராஜா சர். அண்ணாமலை செட்டியார், பொப்ளி ராஜா, சர்.ஷண்முகம் செட்டியார், சர். ராமசாமி முதலியார் போன்றவர்களாக, கோடீஸ்வரனாகவும், இலட்சாதி பதியா கவும் ஆகிவிட்டாலும் சரியே, எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதி பதிகள் உள்பட எவரும் சிறிது கூட நமக்கு மேல் ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான்.

பணக்காரத் தன்மை ஒரு சமூகத்துக்குக் கேடானதல்ல, அந்த முறை தொல்லையா னது, சாந்தியற்றது என்று சொல்லலாம். என்றாலும் அது பணக்காரனுக்கும் தொல் லையை கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக் கூடியதும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக் கூடியதுமாகும்.

ஆனால், இந்த மேல் ஜாதித்தன்மை என்பது இந்த நாட்டுக்கு, பெரும்பாலான மனித சமுதாயத்துக்கு மிக மிகக் கேடான தும், மகா குற்றமுடையதாகும். அது முன் னேற்றத்தையும், மனிதத் தன்மையையும், சம உரிமையையும் தடுப்பதுமாகும். பெரிய மோசடியும் கிரிமினலுமாகும். ஆதலால், என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக  வேண்டும் என்பது பதிலாகும்.

(குடிஅரசு, 9.11.1946)

- என்று எவ்வளவுத் தெளிவாக தந்தை பெரியார் தனது பார்ப்பன எதிர்ப்பை நேர்த்தியுடன் தெரிவித்துள்ளார்.

பார்ப்பான் பணக்காரனாக இருப்பது பற்றி நமக்குக் கவலையில்லை; அவன் மேல் ஜாதிக்காரன் மற்றவன் தாழ் ஜாதிக்காரன் என்கிற சமூக அமைப்பும் - அதனைக் கட்டிக் காக்கும் ஆதாரங்களும் நிறுவனங்களும்தான் நமக்குப் பிரச்சினை. நமக்கு என்பதைவிட சுயமரியாதையும் சமத்துவ நோக்கும் உடைய ஒவ்வொரு வருடைய பிரச்சினையாகும்.

பிறப்பின் அடிப்படையில் கடவுளை சாட்சிக்கு வைத்த பார்ப்பான் பிர்மாவின் முகத்தில் பிறந்தவன் என்றும், சூத்திரன் அவன் காலில் பிறந்தவன் என்றும், சூத் திரன் படிக்கக் கூடாது என்றும், படித்தால் அவன் நாக்கை அறுக்க வேண்டும் என்றும், படிப்பதை சூத்திரன் கேட்கக் கூடாது என்றும், கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவன் காதில் ஊற்ற வேண்டும் என்ற மனுதர்ம சட்ட அமைப்பு சமூக முறை உள்ள ஒரு நாட்டில் -

சூத்திரன் கண் விழித்தது எப்பொழுது? கல்வி உரிமை பெற்றது எப்பொழுது? என்ற உளவியல் ரீதியான வரலாற்று உண்மைகள் தான் பார்ப்பனர் அல்லாதார் கல்வி, உத்தியோகப் பிரச்சினையாகும். நம் நாட்டு அரசர்களும் கல்வியை யாருக்கு அளித்தார்கள்? போர் நடத்தி உயிரைப் பலி கொடுக்க பார்ப்பனர் அல்லா தார், பள்ளி வைத்துக் கல்வி கற்க பார்ப்பனர் என்ற நிலைதான் சமூக நீதியாகவும் அரசு நீதியாகவும் உள்ள ஏற்றத்தாழ்வின் கடையாணியும் ஆணி வேருமாகும்.

சோழ வேந்தர்கள் பத்தாம் நூற்றாண் டிலேயே தேர்தல் முறையைக் கைக்கொண் டிருக்கிறார்களே, கிராம சபைக்கு உறுப்பி னர்களைத் தேர்ந்தெடுக்க - அது அவர் களுடைய அறிவுத் திறனைக் காட்டுகிறது. கிராமசபை உறுப்பினர் ஆதற்குரிய தகு தியை அவர்கள் தீர்மானித்தது இருக்கிறதே அது, அவர்களுடைய அறிவு ஆரியத் திடம் அடகு வைக்கப்பட்டது என்பதை விளக்குகிறது. கிராம சபை உறுப்பினராக ஒருவன் 35 வயது நிரம்ப இருக்க வேண் டும் - சரி, 70 வயதுக்குள் இருக்க வேண்டும் - சரி. கால் வேலிக்குக் குறையாத நிலம் இருக்க வேண்டும் - அதுவும் சரி. இவை மட்டுமா? வேத மந்திரங்களையும் உப நிஷத்துகளையும் தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஒரு வேதமும் ஒரு வேத பாஷ்யமும் தெரிந்திருக்க வேண்டும்!

(ஆர்.சத்யநாதய்யரின் இந்திய வரலாறு)

பதினோராம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணாயிரத்தில் ஒரு பெரிய கல்விக்கழகம் கண்டனர். அங்கே 140 மாண வர்கள் கலை பயின்றனர். 14 ஆசிரியர்கள் அறிவு புகட்டினர். ஆசிரியர்கட்கும் மாணவர்கட்கும் தினந்தோறும் நெல் அளந்து தரப்பட்டது. உபகாரச் சம்பளம் வேறு தரப்பட்டது. 45 வேலி நிலம் அக்கல்லூரிக்கு அளிக்கப்பட்டது. வேதங்களும் சமஸ்கிருத இலக்கணமும், (ஆரியருடைய) மீமாம்ச வேதாந்த தத்துவங்களுமே அங்கு சொல்லித் தரப்பட்டன! ... பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள திருபுவனத்திலும் சோழ அரசர்கள் ஒரு கல்லூரி ஏற்படுத்தினர். 72 வேலி நிலம் அதற்கு அளிக்கப்பட்டது 260 மாணவர்களும் 12 ஆசிரியர்களும் அங்கு இருந்தனர். இதிகாசங்களும் மனுதர்ம சாஸ்திரமும் அங்குக் கற்பிக்கப்பட்டன... பன்னிரண்டாம் நூற்றாண்டுச் சோழ அரசர்கள் திருவா வடுதுறையில் ஒரு கலைமன்றம் கண்டனர். அங்கு (வடமொழியில் உள்ள) சாரகசமிதை, அஷ்டாங்க இருதய சமிதை இரண்டும் பாடங்கள்.

(உத்திரமேரூர் கல்வெட்டு, பராந்தக சோழன் தீட்டியது)

தமிழ்வேந்தர் ஆரியத்துக்கு அடி பணிந்ததற்கு இன்னும் என்ன சான்று தேவை?

வெள்ளைக்காரன் கையில் ஆட்சி அதிகாரம் வரும் வரை இந்த நிலை

தானே!

வகுப்புரிமை வரலாறு எனும் நூலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களால் எழு தப்பட்ட நூல் பல அரிய உண்மைகளை, தரவுகளை ஆதாரப்பூர்வமாக தருகிறது. இதோ:

பார்ப்பனரல்லாதார் இயக்கம் தொடங் குவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளைக்கார அரசு இந்தச் சமூக நீதித் தத்துவத்தை ஓரளவு அமல்படுத்த ஆரம் பித்தது என்பது வியப்பிற்குரிய ஒன்றாகும்.

“The Government are unable to regard this increasing share of the administration in the hands of a single class with entire approval in certain departments the proportion of the brahmins must be considered excessive”

"அதிகரிக்கப்பட்ட பங்கு முழுவதும் தனிப்பட்ட ஒரு சாதியினருக்கே செல்வது அரசினரால் ஏற்றுக்கொள்ளப்பட முடிய வில்லை. ஒரு சில இலாகாக்களில் பார்ப் பனர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத் திற்கு மேல் மிகவும் அதிகமாக இருப்பதாகக் கருதப்பட்டது.

இவ்வாறு சொல்லப்பட்ட அதேநேரத் தில், பார்ப்பனர்கள் அரசுத் துறையில் நுழை வதற்கு அரசினர் மிகவும் விரோதமான மனப்பான்மை உடையவர்களாக இருக் கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்த அரசு விரும்பவில்லை . அரசினர் அதில் மிகவும் கவலையோடு செயல்பட்டனர். சாதிவாரியாக எத்தனைபேர் அரசுப் பணிகளில் உள்ளனர் என்று ஒரு கணக்கு எடுத்தது. பொதுவாக எந்தெந்தச் சாதியினர் எந்தெந்த அளவிற்கு முன்னேறியுள்ளனர் என்பதையும், எந்த ஒரு குறிப்பிட்ட சாதி யினருக்கும் தனிச் சலுகை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவுமேயாகும்.

1908-க்கும் 1915-க்கும் இடையே பார்ப்பனரல்லாத் தலைவர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டது. அரசியலில் ஒருங்கி ணைந்து முன்னேற்றம் காணுவதற்குத் தடையாக இருந்த சமூகப் பிரிவுக் கேடு களை ஒழிக்க முன்வர வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது. ஜஸ்டிஸ் சங்கரன் நாயர் அவர்கள் 1908-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்ட மளிப்பு விழாப் பேருரை நிகழ்த்துகையில், ஜாதி, வருணம் என்ற தடைகள் அகற்றப் பட்டாலொழிய, அரசியல் முன்னேற்றம் என்பது குதிரைக் கொம்பே என்று மிகவும் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டார்.

அந்நாளில் பொது வாழ்வில் பார்ப்பனர் ஆதிக்கம் மிகுந்து இருந்த காரணத்தால், பார்ப்பனீயம் ஆழமாக வேரூன்றிச் சமூக சமத்துவக் கோட்பாட்டுக்கு ஆபத்து விளை வதோடு, ஜனநாயகத்தின் அடிப்படையான சமத்துவத்திற்கும் அது கேடு செய்வதாக அமையும் என்று அப்போது பல பார்ப் பனரல்லாத தலைவர்களால் மிகவும் தீவிர மாக உணரப்பட்டது.

1892ஆம் ஆண்டில் சென்னையில் இருந்த வெள்ளைக்கார கவர்னர் வென் லாக் பிரபுவுக்கு ஃபேர் ப்லே (Fair Play) என்ற புனைபெயரில் அரசியல் அறிஞர் ஒருவர் எழுதிய பகிரங்கக் கடிதம் ஒன்று பார்ப்பனர் களுக்கு அக்காலத்தில் இருந்த உயர்ந்த வாய்ப்புகளைத் தெளிவாக்கும் அரிய ஆதாரமாகும். அம்மடலாவது:

"மேதகு கவர்னர் பெருமான் அவர்களே, கீழ்வரும் வரிகள் தங்கள் ஆட்சியிலுள்ள பல லட்சக்கணக்கான மக்களின் இன்ப துன்பங்களைப் பாதிக்கின்றதொரு செய்தி யின் முக்கியத்துவத்தைப் புலப்படுத்தத் தவறமாட்டா எனும் நம்பிக்கையில் அதைப் படைக்கின்றேன்.

மேலும், ஒரு குறிப்பிட்ட இனத்தார் (பார்ப்பனர்) அதிகாரத்திலும் செல்வத்திலும் பெற்றுள்ள ஏற்றம்பற்றி வாய்திறக்கத் தெரியாப் பல லட்சம் மக்களின் உள்ளங்களில் மலைப்பையும், பரபரப்பு - அச்சத்தையும் உருவாக் கியுள்ள தங்களது கடந்த கால விழிப்பற்ற கொள்கையின் தீய விளைவுகளை மட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுவீர் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இந்தியத் தேசியக் காங்கிரசின் இறுதி இலட்சியம், பிரிட்டிஷ்காரர் களிடமிருந்து பார்ப்பனர்களிடம் சேர வேண்டிய ஆட்சி மாற்றமே, ஆங்கிலேய அரசியல்வாதிக ளில் பெரும்பாலோர் இந்தியக்காரியங் களில் அறியாமையுள்ளவர்களாகவே இருக்கின் றனர். இங்கிலாந்தும், இந்தியாவும் வேறுபட்டவை எனும் உண்மையை உண ராதவர்களாகவே அவர்கள் காணப்படு கின்றனர். வேறு வேறு சூழ்நிலைகளுக்கு வேறு வேறு அணுகு முறைகள்தாம் தேவை.

காங்கிரசின் கோரிக்கைகளில் வரு வாய்த்துறை அதிகாரிகளிடமிருந்து நீதி வழங்கும் அதிகாரத்தை எடுத்துவிட வேண்டும் என்பது ஒன்று. இயல்பாக இது வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தவே செய்யும். அதற்கு F.A.-க்களும் (பழைய இண்டர் மீடியட்) B.A.-க்களும் தேர்ந் தெடுக்கப்பட வேண்டுமென்றும், நிருவாகத் தினுள் லஞ்சமுறை புகுந்து விடாமலிருக்கக் குற்றவியல் நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்த வேண்டுமெனவும் எல்லாப் பக்கங் களிலும் கூக்குரல் கேட்கிறது. இந்தக் கோரிக் கையின் மூலமாகப் பார்ப்பனர்களின் ஏற்றமே நாடப்படுகிறது என்பதை எவரும் எளிதில் கண்டுவிடலாம். ஏனென்றால், பார்ப்பனர்கள்தாம் பதவிகளில் விரிந்த வாய்ப்பெல்லை கொண்டவர்கள். புதிய மாஜிஸ்ட்ரேட் பதவிகள் அத்தனையும் அவர்களுக்கே கிட்டுகின்றன.

ஒரு நூற்றாண்டுக் காலமாய் இந்தியாவை ஆண்டு வரும் கருணையுள்ள பிரிட்டிஷ் ஆட்சியின் நற்பலன்கள் கேடுசூழும் பார்ப் பனச் செல்வாக்கின் பெரும் வளர்ச்சியால் எல்லோருக்கும் கிட்டாமல் தடுக்கப்படு கின்றன. பெயரளவில் ஆங்கிலேயர் இந் தியாவை ஆளுவதாகச் சொல்லப்பட்ட போதிலும், நடப்பில் பார்ப்பன இனம்தான் ஆளுகிறது! காலப்போக்கில் பார்ப்பனர் களிடமே யாவற்றையும் விட்டுவிட்டுத் தங்கள் சொந்த மண்ணுக்குப் பிரிட்டிஷ்காரர் கள் திரும்பவேண்டி நேரிடும். கடந்த நூறு ஆண்டுகளாக வெள்ளைக்காரச் சிவில் அதிகாரி ஒவ்வொருவருடைய நட்பாதர வுக்கும் சலுகைக்கும் பார்ப்பனரே பாத்தி ரராயினர். இதில் இயக்குநர்கள் மன்றம் (Court of Directors) முந்தைய நடவடிக்கைக் குறிப்புகளில் பதவிகள் எல்லாச் சாதி மக்களிடையேயும் வழங்கப்பட வேண்டுமே யொழிய பார்ப்பனர்க்குள்ளாக மட்டுமே பங்கு வைக்கப் பெறக்கூடாது என்று விதித் திருந்ததையும் இந்தச் சிவில் அதிகாரிகள் மதிக்கத்தவறினர்.

நெடிய இந்த நூறாண்டுகளில் F.A.-க் களும் B.A.-க்களும் மட்டுமே அரசுப் பதவிகட்காகத் தேர்வு செய்யப்பட வேண்டு மென்ற கூச்சல் முன் எப்போதும் கிளம்பியது கிடையாது. ஏனென்றால், எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் வண்ணம் தகுதி பெறுவதில் பார்ப்பனர் கருத்துச் செலுத்தி வந்தனர். இப்போது அவர்களுக்கான எதிர் காலம் வந்துவிட்டதால், தம் நெஞ்சாற்றல் அத்துணையும் கொண்டு வெறியோடு கத்தத் துணிகின்றனர். F.A.-க்களும் B.A.-க்களும் இல்லாமல் அரசுப் பணிகளை நடத்த முடி யாதா? கடந்த காலத்தில் நடத்தவில் லையா? வெறும் அன்றாட வழக்கமான பணிகட்கு F.A.-க்களும் B.A.-க்களும் தேவையே யில்லை.

மக்கள் பிரதிநிதித்துவ அரசாங்கம் பார்ப்பனரின் தேவைகள் எல்லாவற்றுக்கும் ஏற்ற சஞ்சீவியாகும் ஆகவே, அவர்கள் அதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார் கள். பார்ப்பனர் தமது மேல் நிலையை மக்களின் அறியாமை எனும் அடித்தளத் தின் மீதுதான் கட்டினர். இந்தியா என்னும் ஒரு தேசம் இல்லவே இல்லை. அளவிறந்த சூழ்ச்சியுடன் பார்ப்பனர் தம் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கும் கற்பனைச் சொல்லே இந்திய தேசம் என்பது. தமது இன மக்களாலேயே வழி நடத்தப்பெறும் பல்வேறு அரசியல் கட்சிகளென்ற சூழ்ச்சிவலையை நாடு தழுவிய முறையில் விரிப்பதில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதிநிதித்துவ அரசு அமைப்பில் தங்கட்குத் தாங்களே எஜ மானர்களாவதோடு, இந்தியாவிற்கே தடை யில்லா எஜமானர்களாவது உறுதி என்றி ருக்கின்றனர் பார்ப்பனர்.

இதுதான் அந்தக் கடிதம்.

இந்த அடிப்படையைப் புரிந்து கொண் டால்தான் மிகப் பெரிய எழுச்சி நாட்டில் ஏற்பட நிலையிலும், சட்டங்களும் ஆணை களும் பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப் பட்ட பிறகும் கூட பார்ப்பனர்களின் ஆதிக் கம் அவர்களின் விகிதாசாரத்துக்கு மேலாக பன்மடங்கு பன் மடங்கு செங்குத்தாகக் கோலோச்சி நிற்கிறது!

வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் ஒரே ஒரு குடும்பம் மட்டும் ஆக்டோபசாக எத்தனை எத்தனை பதவிகளை சுருட்டி விழுங்கி ஏப்பமிட்டுள்ளது. ஏப்பமிட்டு உள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே போதுமானது.

கடப்பை மாவட்டத்தில் ஒரேயொரு பார்ப்பன அதிகாரியான டி.கிருஷ்ணராவ் என்பவர்ஹுஸுர் செரஸ்தார் என்ற கலெக் டருக்கு இணையாக தனது பதவியைப் பயன்படுத்தி தனது 116 உறவினர்களை அரசு பதவிகளில் அமர்த்தினார்.

கடப்பை மாவட்டத்தில் தமது உறவி னர்கள் 116 பேர்களை வேலை வாய்ப்பில் அமர்த்தினார் என்றால் அனந்தப்பூர் மாவட்டத்திலோ தனது உறவினர்கள் 108 பேரை பணிகளில் அமர்த்தினார் என்றால் பார்ப்பன ஆக்டோபசின் ஆக்ரோச ஆட் டத்தை என்னவென்று சொல்லுவது.

தென்னாட்டில் நீதிக்கட்சி, சுயமரியரிதை இயக்கம், திராவிடர் இயக்கம் இவற்றின் எழுச்சியால் ஆண்டாண்டுக் காலமாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்னும் ஊட்டச்சத்து ஊன்று கோல் கிடைத்து கண்விழித்து நடைபோடத் தொடங்கியுள்ளனர்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் முயற்சியால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் வாய்ப்புக் கதவுகள் திறக்கப்பட்டன.

எல்லாம் வெறும் 50 ஆண்டு காலத் திற்குள் ஏற்பட்ட வாய்ப்புகள்தான். உண் மையைச் சொல்லப்போனால் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்க்கென்று சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் விழுக்காட்டு அளவின் முனையைக் கூடத் தொட முடியாத நிலைதான்.

பிற்படுத்தப்பட்ட மக்களைப் பொறுத்த வரை அரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்த 1950ஆம் ஆண்டு முதல் இடஒதுக் கீடு வந்ததா என்றால் அதுதான் இல்லை.

கடும் போராட்டத்துக்குப் பின் 40 ஆண்டுகளுக்குப் பின்தான் மாண்புமிகு வி.பி.சிங் பிரதமராக வந்தபோது முதற் கட்டமாக  வேலை வாய்ப்பில் 27 விழுக் காடு பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக் கிறது.

மண்டல் குழுப் பரிந்துரை செயல் பாட்டுக்கு வரவேண்டும் என்பதற்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்த வேண்டி யிருந்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் அதற்கும் 15 ஆண்டுகள் கழித்துத்தான் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகவும், அர்ஜுன் சங் மனித வள மேம்பாட்டுத் துறை (கல்வி) அமைச்ச ராகவும் இருந்தபோதுதான் செயல் பாட்டுக்கு வந்தது.

இதில் இன்னும் கொடுமை என்னவென் றால் பிரதமர் வி.பி.சிங் நாடாளுமன்றத்ல் பிரகடனப்படுத்தினாரே (7.8.1990) அந்த நாள் முதலாவது செயல்பாட்டுக்கு வந்ததா என்றால், அதுதான் இல்லை. அதனை எதிர்த்து வழக்குப் போடப்பட்டதால் இரண்டாண்டுகள் கழித்து 1992இல் தான் செயல்பாட்டுக்கு வந்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கும் கல்வியில் இடஒதுக்கீடு வந்து 13 ஆண்டுகள்தான் ஆகின்றன, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வந்து 26 ஆண்டுகள் ஆகின்றன.

உண்மையைச் சொல்லவேண்டுமா னால் 78 ஆண்டுகளாக இடஒதுக்கீடு பெற்று வந்த தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் மக்களுக்கும் சரி 26 ஆண்டுகள் இட ஒதுக்கீடு பெற்று வரும் பிற்படுத்தப்பட்ட வர்களும் சரி, அவர்களுக்குரிய விகிதா சாரத்தின் அளவில் இடங்கள் பெற்று இருக்கின்றனரா என்றால், அதுதான் இல்லை.

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த புள்ளி விவரம் அதிர்ச்சிக் குரியது. மத்திய அரசின் 40 அமைச்சகங் கள் மற்றும் சமூக நீதித்துறை உள்ளிட்ட 48 துறைகளில் 12 சதவீதத்திற்குக் குறைவா கவே இதர பிற்படுத்தப்பட்டோர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப் பட்டது.

தாழ்த்தப்பட்டவர்களின் நிலையும் இதேதான். சட்டப்படியான விகிதாச்சார எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டோ ருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் அளிக் காத நிலையைப் பற்றி மத்திய பிஜேபி அரசுக்கு அக்கறையில்லை.

ஆனால் கிடக்கிறது கிடக்கட்டும்; கிழ வியைத் தூக்கி மணையில் வை என்பது போல் உயர் ஜாதியில் ஏழையானவர் களுக்கு 10 விழுக்காடு இடம் என்பது சட் டத்துக்கு எதிராக என்ற தீர்ப்புகளுக்கும் எதிராக மத்திய பிஜேபி அரசு தங்கத் தாம்பாளத்தில் பட்டுக் குஞ்சம் கட்டித் தூக்கிக் கொடுக்கிறது என்றால் இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல!

இது பாரதிய ஜனதா அல்ல. பார்ப்பன ஜனதா தான் என்று திராவிடர் கழகம் தொடர்ந்து சொல்லி வருவது நியாயத்தின் பாற்பட்டது என்பது நின்ற சொல் அல்லவா?

தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட் டோரும் போராடிப் போராடி இடஒதுக் கீட்டைப் பெற்றிருக்க, உயர் ஜாதியினரோ ஒரு சொட்டு வியர்வை சிந்தாமல், நகத்தில் அழுக்குப் படாமல் 10 சதவீத இடஒதுக் கீட்டை லாட்டரி சீட்டு போல ஜாக்பாட் போல் பெற்று விட்டனரே!

சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்குக்கொரு நீதி என்று பார்ப்பனப் பாரதி சொன்னதுதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.

உயர் ஜாதியில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடாம். உயர் ஜாதி ஏழைகள் என்றால் யார் தெரியுமா? ஆண்டு ஒன்றுக்கு  ரூ.8 லட்சத்துக்கும் கீழாக வருமானம் உள்ளவர் களாம். 5 ஏக்கர் நிலத்துக்கு கீழாக இருக்க வேண்டுமாம். 1000 சதுர அடிக்கு கீழ் வீடு உள்ளவர்களாக நகரத்திலும், 2000 சதுர அடிக்குக் கீழாக கிராமப்புறங்களிலும் இருக்க வேண்டுமாம்.

பார்ப்பன ஜனதா அரசு கூறும் இந்த வித்தை என்ன தெரியுமா? ஆண்டு ஒன் றுக்கு ரூபாய் எட்டு லட்சம் வருமானத்துக் கும் கீழ் என்றால் நாள் ஒன்றுக்கு வரு மானம் ரூ.2500.

நாள் ஒன்றுக்கு ரூ.2500 வருமானம் உள்ள உயர் ஜாதிக்காரர் பார்ப்பன ஜனதா பார்வையில் ஏழையாம். மாதம் ஒன்றுக்கு ரூ.66,666 உடைய மேல்ஜாதியினர் ஏழைகளாம்.

மேல்ஜாதி ஏழை என்றால் சாதார ணமா? அவர்கள் முகத்தில் பிறந்தவர்களா யிற்றே. பிராமணோத்தமர் ஆயிற்றே - சும்மாவா?

கிராமப்புறங்களில் நாள் ஒன்றுக்கு 27 ரூபாய்க்குக் கீழும், நகரப்புறங்களில் 33 ரூபாய்க்குக் கீழும் வருமானம் உள்ளவர் கள் வறுமைக் கோட்டுக்கும் கீழ் உள்ளவர் கள் என்று இதே அரசாங்கம் தான் சொல்லு கிறது. வறுமையில்கூட வருணம்தானா?

நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமெர்த் தியா சென் மிக நேர்த்தியாகக் கூறி யுள்ளார். இப்படியெல்லாம் ஒதுக்கீட்டைக் கொடுத்துக் கொண்ட போனால் இட ஒதுக்கீடே ஒன்றுமில்லாமல் போய்விடும் என்று கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா என்ற பார்ப்பன அமைப்பின் நோக்கமே அதுதான்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீடு பற்றி என்ன சொன்னார்?

RSS Chief Mohan Bhagwat on sunday pitched for a review of the reservation policy, contending it has been used for political ends and suggesting setting up of non-political committee to examine who needs the facility and for how long.


(PTI, 21.9.2015)

தற்போதைய இடஒதுக்கீடு பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினாரே!

அதன் முதல் அடிதான் உயர்ஜாதியின ருக்குப் பொருளாதார அடிப்படையிலும் இடஒதுக்கீடு என்பது.

மனுதர்மம்தான் இந்தியாவின் அரசியல் சட்டமாக வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். குருநாதரான எம்.எஸ்.கோல்வாக்கர் கூறி னார் அல்லவா?

பா.ஜ.க. ஆட்சிக்கான முடிவு இரண் டொரு மாதங்களில் நிகழ இருப்பதால் அதற்குள் இந்த அவசர அவசரமாக சமூக நீதிக்கு கல்லறை எழுப்பும் அஸ்திவாரக் கட்டட வேலை தொடங்கிவிட்டது.

சமூக நீதிக்குக் கல்லறை கட்டும் கட்டட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வுக்கு வரும் தேர்தலில் நாட்டின் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் கல்லறைக் கரசேவையில் ஈடுபடு வார்களாக.

-  விடுதலை ஞாயிறுமலர், 26.1.19