பக்கங்கள்

பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 நவம்பர், 2018

உயர்நீதிமன்றங்களில் 9 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகள்

புதுடில்லி, நவ.12- நாடு முழுவதிலும் உள்ள உயர்நீதிமன்றங்களில் வெறும் 9 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகள் உள்ளனர்.

இந்திய நீதித்துறையின் பொற்காலம் என போற்றும் வகையில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முக்கிய 4 உயர்நீதி மன்றங்களுக்கு பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக இருந்தனர். நீதிபதிகள் மஞ்சுளா செலூர் மும்பை உயர்நீதிமன்றத் திற்கும், ஜி.ரோகினி டில்லி உயர்நீதிமன்றத்திற்கும், நிஹிதா நிர்மலா மத்ரே கோல்கட்டா உயர்நீதிமன்றத்திற்கும், இந்திரா பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் தலைமை நீதிபதிகளாக இருந்தனர். ஆனால் 2017 ஏப்ரல் 13இல் நீதிபதி ரோகினியும், செப்.,19இல் மத்ரேவும், டிச., 4இல் செலூரும் பணி ஓய்வுபெற்றனர். இந்திரா பானர்ஜி சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் தகில் ரமணியும், காஷ்மீர் உயர்நீதிமன்றத்திற்கு கீதா மிட்டலும் தலைமை நீதிபதிகளாக உள்ளனர். மொத்தமுள்ள 24 உயர்நீதி மன்றங்களில் 1221  நீதிபதிகள் பணியிடங்களில் 891 நீதிபதிபணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 70 பேர்களின் பெயர்கள் 2 ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பால் பரிந்துரைக்கப் பட்டது.

தற்போதுள்ள 891 நீதிபதிகளில் 81 பேர் மட்டுமே பெண்கள். கடந்த ஓராண்டில் மட்டும் 20 க்கும் அதிகமான பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 7க்கும் அதிகமானவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நிய மிக்கப்பட உள்ளனர். கடந்த 68 ஆண்டு கால நீதித்துறை வரலாற்றில் தற்போது 3 பேருடன் சேர்த்து இதுவரை 8 பெண் நீதிபதிகள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-  விடுதலை நாளேடு, 12.11.18

புதன், 10 அக்டோபர், 2018

பழைய சம்பிரதாயங்கள் எவ்வளவோ மாற்றம் கண்டுள்ளன - அய்யப்பன் கோவில் வழிபாட்டில் மட்டும் பெண்கள் வழிபடக்கூடாதா?

உச்சநீதிமன்றத் தீர்ப்பு: கேரள அரசின் முடிவு வரவேற்கத்தக்கது!




- தி எகானமிக் டைம்ஸ்', 4.10.2018

எவ்வளவோ சம்பிரதாயங்களும், பழக்கங் களும் மாற்றத்திற்கு ஆளான நிலையில், சபரி மலை அய்யப்பன் கோவில் வழிபாட்டில் பெண்கள் நேரடியாக ஈடுபடக் கூடாது என்பதில் மட்டும் மாற்றம் வரக்கூடாதா? உச்சநீதிமன்றமும், கேரள மாநில அரசும் இதில் எடுத்த முடிவின்படி சபரிமலை அய் யப்பன் கோவிலில் பெண்கள் நேரில் சென்று வழி பாடுஎன்பதுசெயல்படுத்தப்படவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

ஆண்களுக்கு உள்ள வழிபாட்டு உரிமை - பெண்களுக்கும் தேவை!


சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 10 வயதுக்கு மேற்பட்ட - 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அய்யப்பன்' தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாதது இந்திய அரசியல் சட்டப்படி - ஆண் - பெண் பாகுபாடு கூடாது என்பதற்கு முற்றிலும் முரண்பட்டது; எனவே, ஆண்களுக்கு உள்ள வழிபாட்டு உரிமை அங்கே பெண்களுக்கும் தேவை என்பதை வலியுறுத்தி, முற்போக்குச் சிந்தனை யாளர்களும், சில அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். (ஏற்கெனவே கேரள உயர் நீதிமன்றம், வழக்கம் - மதச் சுதந்திரம் - வழிபாடு என்பது மதச் சம்பந்தப்பட்ட நிகழ்வு என்பதைக் காட்டி, பழைய சனாதனத்திற்குப் பாதுகாப்பு அளிப்பதுபோல் தீர்ப்பு தரப்பட்ட நிலையில், அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது!)

சனாதன சடங்கு என்ற சாக்கில் தடுப்பது ஏற்கத்தக்கது அல்ல!


இது அரசியல் சட்டத்தின் துல்லியமான தீர்ப்பாக அமையவேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டு விட்டது.

ஒரு (பெண்) நீதிபதியைத் தவிர மற்ற நான்கு (ஆண்) நீதிபதிகளும் அனைத்துப் பெண்களுக்கும் வழிபட உரிமை உண்டு; சனாதன சடங்கு என்ற சாக்கில் தடுப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று தெளிவான தீர்ப்பு தந்துவிட்டார்கள்!

புரட்சிகர முடிவுகளை வரவேற்று பாராட்டியுள்ளார்கள்


பார்ப்பனர்களும், சில வைதீகப் பிடுங்கல்களும் தவிர, பெரும்பாலான பக்தர்கள் உள்பட இந்தப் புரட்சிகர முடிவுகளை வரவேற்றுப் பாராட்டியுள்ளார்கள்.

கேரளத்தில் முன்பு ஆட்சி செய்த காங்கிரசு தலைமையிலான அரசு, பழைய பழக்கம் - பெண்களை பாகுபாடுபடுத்துவது எல்லாம் சரியே என்று கூறும் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம்:


கேரள முதல்வர் பினராயி விஜயன்


அரசியல் மாற்றத்தின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர் பினராய் விஜயன் அவர்கள் முதல மைச்சராகிய நிலையில், வேற்றுமை பாராட்டக்கூடாது, பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிப்பதில் பாரபட்சம் கூடாது என்று முற்போக்காளர்களது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டதோடு, இத்தீர்ப்பினை வரவேற்று, இதனை செயல்படுத்த கேரள புரட்சி அரசு தக்க ஏற் பாடுகளைச் செய்யும்; உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குக் கட் டுப்படுவோம் என்று அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது!

மறு சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு - தேவசம் போர்டும் போடுவதில்லை என்ற முடிவு வரவேற்கத்தக்கது.

கேரளத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் பெண் பக்தர்களை பாகுபடுத்துவது ஏற்கத்தகாத பழைய அநீதியான முறை என்று 2016 இல் ஆர்.எஸ்.எஸ். ஆண்டுக் கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளரான சுரேஷ் பையாஜி ஜோஷி என்ற பார்ப்பனர் கூறினார். முற்போக்காளர்களின் வழக்கு நிலைப்பாட்டை இதன்மூலம் வரவேற்றும் பேசினார்.

'பேசுநா இரண்டுடையாய் போற்றி!'


அவரே இப்போது திடீர் பல்டி அடித்துத்தான் முன்பு பேசியதை மாற்றிக்கொண்டு, பக்தர்களின் உணர்வை மதிக்கவேண்டும்; பக்தர்கள் ஒப்புதல் இன்றி இதை உடனடியாக செயல்படுத்தக்கூடாது'' என்று பேசுநா இரண்டு' என்ற ஆரிய மாயை'யை அப்பட்டமாக நிரூபித்துள்ளது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய செயலாகும்!

பக்தர்களைக் கேட்டால் பழைய பஞ்சாங்கத் தைத்தானே நியாயப்படுத்துவார்கள். அவர்களின் வாதங்களை ஏற்காமல்தானே உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் ஏகோபித்து ஆராய்ந்து இந்த நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

பின் ஏன் இப்படி ஒரு தலைகீழ் பல்டி - About Turn முறை?

கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. கோழியைக் கேட்டா மிளகாய் அரைக்க முடியும்? (குழம்பு வைக்க)'' என்று - அதுதான் நினைவிற்கு வருகிறது!

சபரிமலை கோவிலில் மின்சார விளக்கு சம்பிரதாயத்தில்'' உண்டா? சாலைகளும், மற்ற நவீன ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறதே, அதில்தானே பக்தர்கள் இப்போது செல்லுகிறார்கள்!  (கல்லும் முள்ளும் என்னாயிற்று?) அது முந்தைய சனாதனப்படி சரியா? அதை மாற்றிடும்போது இந்த சமூக அநீதி பாலியல் அநீதியைக் களைதல் சரிதானே!

பக்திப் பித்தலாட்டம் பல குரலில் பேசுகிறார்கள்; பார்ப்பனியம் வக்காலத்து வாங்குகிறது. ஆனாலும், இதில் ஆர்.எஸ்.எஸால் வெற்றி பெற முடியவில்லை!

 

கி.வீரமணி,


தலைவர் திராவிடர் கழகம்.


சென்னை

4.10.2018

வியாழன், 4 அக்டோபர், 2018

அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லத் தடையில்லை உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது - செத்தது வைதீகம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது என்ற தடையை உச்சநீதிமன்றம் தகர்த்துத் தீர்ப்பு வழங்கியுள்ளதை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வரவேற்று அளித்துள்ள அறிக்கை:

"சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் உரிமை உண்டு" என்ற உச்சநீதிமன்றத்தின் - 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு வரவேற்றுப் பாராட்டத்தக்க ஒன்றாகும்.

ஆண் - பெண் பாலின வேறுபாடு கூடாது என்ற அரசியல்சட்ட அடிப்படை உரிமைகளைச் சரியாகப் பாதுகாத்த ஒரு வரலாற்று முக்கியத்துவமான  தீர்ப்பே இது!

சனாதனம் அரசியல் சட்டத்துக்கு  அப்பாற்பட்டதல்ல!


சனாதனம் என்பது அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டதல்ல; இந்திய அரசியல் சட்டத்திற்கும், அதன் உரிமைகளுக்கும் கட்டுப்பட்டே ஆக வேண்டும்!

மேலும் மாதவிடாய் என்பது பெண்கள் உடலின் ஒரு இயற்கை நிகழ்வு - வியர்வை வெளிப்படுவதுபோல; இதைத் தீட்டு என்று கூறுவது அறிவியல் உடலியல் பற்றிய  அறிவுக்குறைபாடே யாகும்.

எனவே, அந்தக் காரணத்தைக் காட்டுவது - வயதுள்ள பெண்கள் அய்யப்பன் கோயிலுக்குச் செல்ல உரிமை  மறுக்கப்படுவது, மனித உரிமைக் கோணத்தில் மாபெரும் தவறான நடவடிக்கையே! இதை மாற்றிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் சரியான தீர்வே!

செத்தது வைதீகம்!


கேரளத்தில் பகவதியம்மனுக்கு மாதவிடாய் வைத்தே திருவிழாவும், வழிபாடும் உண்டே! பின் இங்கு மட்டும் ஏன் தடை? வைதீகம் செத்தது! தீர்ப்புக்கு மீண்டும் பாராட்டு!

- கி. வீரமணி

தலைவர் திராவிடர் கழகம்


சென்னை

28.9.2018

இந்நாள்... இந்நாள்...

1877 - ஈ.வெ. கிருஷ்ணசாமி பிறப்பு
1907 - பகத்சிங் பிறப்பு

வியாழன், 8 பிப்ரவரி, 2018

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தீர்மானத்தை தோற்கடித்த பிஜேபி, அதிமுக

தமிழர் தலைவர் கண்டனம்

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துத் தோற்கடித்த கட்சிகளுக்கு  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற கோரிக்கை 1996ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

குடியரசுத் தலைவர் உரைமீது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு பற்றிய திருத்தம் ஒன்றை மாநிலங்களவை உறுப்பினர் திரு. டி.கே. ரெங்கராஜன் (சிபிஎம்) நேற்று கொண்டு வந்துள்ளார். அதன் மீதான வாக்கெடுப்பில் திருத்தத்துக்கு எதிராக பிஜேபியும், அ.இ.அ.தி.மு.க.வும் வாக்களித்துள்ளன.

இந்தியா முழுவதும் சட்டப் பேரவைகளில் 9 விழுக்காடு அளவுக்குத்தான் பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவையில் உள்ள 542 பேர்களில் 64 பேர்கள் மட்டுமே பெண்கள். மாநிலங்களவையில் 245 பேர்களில் 27 பேர் மட்டுமே பெண்கள் உள்ளனர். இதில் உலக அளவில் இந்தியா 148ஆம் இடத்தில் உள்ளது என்பது வெட்கக் கேடானதாகும்.

இந்த நிலையில் பிஜேபி, அஇஅதிமுக, சிவசேனா, தெலுங்குதேசம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் திருத்தத்துக்கு எதிராக வாக்களித்திருப்பது பெண்கள் உரிமைக்கான அவர்களின் நிலைப்பாட்டைத் தான் அம்பலப்படுத்தும். இக்கட்சிகளுக்கு பெண்களின் வாக்குகள் மட்டும் வேண்டும். ஆனால் அவர்களின் உரிமைகள் என்றால் எதிர் நிலையா? கசப்பா? மகா வெட்கக் கேடு.

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்கள் தொகையில் சரி பகுதி எண்ணிக்கை உள்ள பெண்கள் இவர்களை அடையாளங் கண்டு உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கி. வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்

சென்னை 
8.2.2018