பக்கங்கள்

வெள்ளி, 26 ஜனவரி, 2018

மலையாளத்தில் பார்ப்பனீயம்


1929 -குடி அரசிலிருந்து...
தென் திருவிதாங்கூரில் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய சிவசேத்திரமாகக் கருதப் படுவது சுசீந்திரமாகும். இங்கு கோயில் கொண்டிருக்கும் சுவாமியின் பெயர் தானு மாலயன் (மும்மூர்த்திகளும் ஓர் காலத்தில் ஒன்று சேர்ந்து ஒரே மூர்த்தியாய் அமைந்தது) என்று ஸ்தல புராணங்கூறுகின்றது. ஊரின் பெயரை நோக்கினால் இந்திரன் சுசி அடைந்த புரமென விளங்குகின்றது. ஓர் காலத்தில் இந்திரன் செய்த அடாத காரியத்திற்காக அவனது உடம்பு முற்றும் ஆயிரம் யோனிகள் தோன்றிவிட்டன வென்றும், பின்னர் பன் னூறாண்டுகள் தவஞ்செய்ததின் பலனாய் அவ்யோனிகள் கண்களாய் மாறின வென்றும் பண்டைப் புராணங்கள் கூறுகின்றன. சாபத்தை நீக்குவதற்காக இந்திரன் தவஞ்செய்த வனிடம் சுசீந்திர (புர) மென்றும் தனது வெள்ளை யானை அய்ராவதத்தை ஏன் அது மகேந்திரகிரியிலிருந்து தன்கோடு கொம்பு களால்  பூமியைக் கீறிக்கொண்டேவர அவ்வழியாகப் புறப்பட்ட நதியே கோட்டாறு எனப் பெற்றதென்றும் இதனால் இது மிக பழமையான நதியாகையால் பழையாறு என்று இப்பொழுது வழங்கப்படுகிறதென்றும் சுசீந்திரத்திற்கு சுமார் இரண்டு மைலுக்கு வடமேற்காயிருக்கும் ஊருக்கு கோட்டாறு என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது என்று அப்புராணங்கள் கூறுகின்றன.
மேற்சொன்னபடி புறப்பட்ட ஆறு, இந்திரன் யாகம் முதலிய இயற்றிய விடத்தில் வந்து நின்றது என்றும் இவ் விடத்திலேயே இப்பொழுது பொற்றாமரைத்தடாகம் அமைந் திருக்கிறதென்றும் இவ்விடத்தில் பல யாகம் செய்து தூய்மை அடைந்தான் என்றும் இத்தகைய புண்ணிய ஸ்தலத்தை எவ்விதக் குற்றஞ்செய்தவர் தரிசித்தாலும் தூய்மையடை வரென்பதும் மும்மூர்த்திகளை  ஒரே சம யத்தில் ஒரே வடிவில் தரிசிக்கிற பலனும் கிட்டும் என்பதும் இப்பக்கத்து மக்களின் நம்பிக்கை.
இவ்விடத்தில் வசிப்பவர்கள் யார்யாரெ னின் பெருஞ் செல்வத்தையுடைய இக்கோவிலிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு காலங்கழிப்பவரே.
இவ்வூரிலிருந்து சிறிது தூரத்திற்கப் பாலிருக்கும் கக்காடு என்ற சேரியிலுள்ள சாம்போர் முதலிய தீண்டா திருக் குலத்தினரின் வண்டி முதலியவை ஆற்றிலிறங்கியே போக வேண்டுமாயின் அதற்கு உயர்குலத்தாருடைய அனுமதி வேண்டும். இன்றேல் வண்டியைக் கொண்டு போக முடியாது. கோயிலைச் சுற்றியுள்ள அக்கிராகாரத்தினரும் அவருக்கு அடுத்தபடியாயுள்ள வேளாளரும் சுசீந்திரம் சத்தியாக் கிரகத்தின் போது தீண்டாக் குலத்தி னருக்கு எதிராக ஒன்று சேர்ந்து கொண்ட விஷயம் யாருமறிந்த தொன்றாகும். பொதுப் பணத்தைக் கொண்டு போடப்பட்டி ருக்கிற வருடந் தோறும் செப்பனிடப்படுகிற சுசீந்திரப் பாதைகளில் ஒரு குலத்தார் செல்லலாகாது எனத் தடுக்கப்பட்டு வந்ததை யொட்டியே சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்டது.
முதலாவதாக இத்தகைய புண்ணிய ஷேத்திரத்தின் புராணப்படி பார்த்தாலும் அங்கு ஜாதி வித்தியாசமில்லை யென்பதும், இந்திரனைப் போன்ற பெரும் பாவங்களைச் செய்தவரும் அங்குள்ள கடவுளை வணங்கித் தூய்மை பெறலாமென்பதும் வெள்ளிடை மலைபோல் விளங்குகின்றது. எனவே சிறிதும் குற்றமின்றி, தாழ்த்தப்பட்ட வகுப்பினரை அனுமதிக்காது தடுப்பது பெரும் அறியா மையும், ஆண வமுமாகும்.
உற்றுநோக்கின் இங்கோர் உண்மைப் புலப்படும். அதாவது எந்தப் போராட்டத்திலும், கோடாரிக்காம்புகளாய்ப் பிறந்தி ருக்கும் பிராமணரல்லாதாரே தம் இனத்தவரைத் தாழ்த்துவ தற்குத் துணைபுரிகிறார்களென்பது, கடந்த சுசீந்திரம் சத்தியாக் கிரகத்திலும் யார் யார் முன்வந்தார்கள் பார்ப்பனர் யாரேனும் உண்டா? இல்லவே இல்லை எனலாம் சோற்றுத் தடியர்களான பார்ப்பனரல்லாதாரே, அதாவது பார்ப்பனர், தூண்டி விட்டுப் பின் நிற்பதே பார்ப்பனர் வேலை ஏதாவது குரோ தத்தைக் கிளப்பிவிட்டால் பார்ப்பனரல்லாத கோடாரிக் காம்புகள் தலைவிரித்தாடும். நம் இனத்தவரை துன்புறுத்துகின்றோமே எனச் சிறிதும் நினைக்கமாட்டார்கள்.
கோவில்  சோற்றுக்கு வழியில்லாமற் போய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கதிகம், சுசீந்தரம் கோவிலைப் பற்றிய வருவாயே அங்குள்ள பார்ப்பனருக்கும் பிற உயர்ந்த இனத்தவர்க்கும்.
எனவே தாழ்த்தப்பட்டவரை அனுமதித்து விட்டால், தம்பிழைப்புக் கெட்டுப்போய்விடும் என்ற பயம் ஒரு புறம் இதற்காக எதிர் சக்தியாகிரகஞ்செய்தனரேயன்றி வேறல்ல. வேறு காரணமுமில்லை. தாழ்த்தப்பட்டவர் வீதிகளில் வராத தால் வண்டிக்கூலி விறகு வெட்டுக்கூலி முதலிய பலவும் அவர்கட்கே பார்ப்பனருக்கு கோவிலினின்றும் பொருள் ஏராளமாக கிடைப்பதால், எவ்வளவு கொடுத் தாலும் அதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
எனவே பார்ப்பனீயத்தின் ஆட்சிக்குத் தோள் கொடுப் பவர் பிராமணரல்லாத கோடரிக் காம்புகளேயாகும். பிராமணரல்லா தார் யாவரும் ஒரு முகப்பட்டு நின்றால் தாழ்த் தப்பட்டவருடைய உரிமைகள் விரைவில் பாதுகாக்கப்படும். இந்திரனைத் தூய்மை படுத்திய தானுமாலய மூர்த்திக்கு இவர்களு டைய மாசற்றநெஞ்சைத் தூய்மைப்படுத்த மனம் வரவில்லைபோலும். திருவாங்கூர் அரசாங்கத்தார் தேவஸ் தான விஷயத்தில் செய்திருக்கும் சில சீர்திருத்தங்கள் ஓரளவுக்கு போற்றற் குரியனவாகும். தேவஸ்தான இலாகாவை ஏற்படுத்தியதிலிருந்து கோவில் காரியங்களெல்லாம் சிறிது கவனமாகப் பார்க்கப்படுகின்றன. பெருச்சாளிகளுடைய மனம் போல் நடக்கத்தடை ஏற்பட்டுவிட்டது.
இன்னுஞ்சிறிது முற்போக்கைக் கொண்டு கோவிலுட் சென்று கும்பிடவும் தெருவீதிவழி செல்லவும் மனிதராய்ப் பிறந்த எவருக்கும் உரிமையுண்டென உண்மையை நிலை நிறுத்தினால் மிகவும் நலமெனக் கூறுகிறோம். மிருகபலியை நிறுத்திய கவர்மெண்டார் மனித உரிமைகளின் பலியையும் நிறுத்த முன்வர வேண்டியது அவசியமாகும். ஒரு குலத்திற் கொருநீதி வழங்கல் நியாயமன்று. யாவரையும் அனுமதிப்ப தால் சுவாமி ஓடிவிட மாட்டார்! அதனால் யாதொருவிதக் கெடுதியும் நேரிடாது நன்மையே உண்டாகும்.
பார்ப்பனீயம் ஒழிக! சமத்துவம் ஓங்குக! மூடத்தனம் மூழ்குக!
-விடுதலை, 26.1.18

செவ்வாய், 23 ஜனவரி, 2018

உத்தரப்பிரதேசத்தில் சகலமும் பார்ப்பன மயம் மாவட்ட ஆட்சியர் எல்லாம் பார்ப்பனர்களே!



லக்னோ, ஜன.20 சாமியார் ஆதித்யநாத் 2017-ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி மிகுந்த இழுபறிக்கு இடையில் முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற சில நாட் களிலேயே அவரது அமைச் சகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு காத்திருப்பு மற்றும் அதிகாரமில்லாப் பதவிகளுக்கு மாற்றப்பட்டனர். அதன் பிறகு தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சி யாளர்கள் மற்றும் மாவட்ட காவல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர். அப்படி மாற்றப்பட்டவுடன் காலியான இடங்களுக்கு பார்ப்பன அதிகாரிகளும், உயர்ஜாதி இனத்தவரும் அமரவைக்கப்பட்டனர்.

அண்மையில் புதிதாக வெளியிடப்பட்ட மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட காவல்துறை ஆணையர்கள், பார்ப்பனர்கள் மற்றும் உயர் ஜாதியினராகவே உள்ளனர்.

சுல்கான் சிங் (உ.பி மாநில காவல்துறை ஆணையர்),

ராஜீவ் சிங் ரோதேலா (கோரக்பூர் மாவட்ட ஆட்சியாளர்),

ராகேஷ் சிங் (கான்பூர் மாவட்ட ஆட்சியாளர்),

அமித்கிஷோர் சிங் (இடா மாவட்ட ஆட்சியாளர்),

நரேந்திர குமார் சிங் (சஹான் பூர் மாவட்ட ஆட்சியாளர்),

அரவிந்த் குமார் சிங் (பரத்பூர்  மாவட்ட ஆட்சியாளர்),

சரத் சிங் (பிரதேப்கர்  மாவட்ட ஆட்சியாளர்),

இந்திரா விகாஷ் சிங் (சாம்ளி  மாவட்ட ஆட்சியாளர்),

நவ்நீத் சிங் (அமோகா  மாவட்ட ஆட்சியாளர்),

நாகேந்திர பிரதாப் சிங் (சகாரன்பூர்  மாவட்ட ஆட்சியாளர்),

விகேஷ் நாராயன் சிங் (கவுதம் புத்தா நகர்  மாவட்ட ஆட்சியாளர்),

ராகேஷ் சிங் (முர்தாபாத்  மாவட்ட ஆட்சியாளர்),

சுரேந்திர சிங் (கான்பூர் நகர்  மாவட்ட ஆட்சியாளர்),

தன்ராஜ் சிங் (நொய்டா  மாவட்ட ஆட்சியாளர்),

அரிநாராயன் சிங்  (காசியாபாத் மாவட்டக் காவல் ஆணையர்)

தன்சியாம் சிங் (கான்பூர்  மாவட்ட காவல் ஆணையர்),

கவுரவ் சிங் (ராய்பரேலி மாவட்ட காவல் ஆணையர்),

அபிசேக் சிங் (பல்ராம்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர்)

பாஜகவின் ஜாதிவாரியாக வாக்கு வாங்கும் சூழ்ச்சியை அறியாமல் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்த பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவான பெரும்பான்மை மக்கள் தொகைகளைக் கொண்ட குர்மி, கோயிரி,தேளி,மவுரியா, லோதா, நிசாத் கும்பார் பிரிவு அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். அதிகாரிகள் அதிக அளவு இருக்கின்றனர். ஆனால் சாமியார் முதல்வர் ஆதித்யநாத்  பார்ப்பனர்களையும், உயர் ஜாதியினரையும் மாவட்ட ஆட்சியாளர்களாக, காவல்துறை ஆணையர் களாக பதவி உயர்த்தி வழங்கியுள்ளார்.

- விடுதலை நாளேடு, 20.1.18

இதுதான் இந்துத்துவம்!(கல்வியில்)


ராஜஸ்தான் மாநிலப் பள்ளிகளில் ‘சொல்வழக்கு’என்றபாடம்நாட்டுப் புறக் கதைகள் என்ற பிரிவில் உள்ளது. ‘புனிதத்தலம்‘ உள்ள மலை யடிவாரத்தில் ஒரே ஒரு வீடு, அங்கு ஒரு ஏழைப் பார்ப்பனப் பெண் மலைக்குத் தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுக்கும் பணியைச் செய்து வந்தார். உணவு சுவையில்லாமல் இருந்தாலும், தூய்மையான மன தோடு, தெய்வீக அச்சத்துடன் அவர் உணவு வழங்கி வந்தார். அப்பகுதியில் வீடுகளோ அல்லது வேறு எந்த வசதிகளோ கிடையாது. ஆகவே, அனைவரும் அவர் வீட்டில் சாப்பிட்டு அதற்கான பணத்தைக் கொடுத்துச் சென்றனர். அந்தப் பார்ப்பனப் பெண்ணுக்கு செல்வமும், புகழும் அதிகரித்தது.

அந்த மலைக்கு அப்பால் ஒரு செருப்பு தைக்கும் குடும்பம் வசித்து வந்தது. அவர்களின் நட வடிக்கையால் ஊரார் அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டதால் அவர் களை யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. இந்த நிலையில் பார்ப்பனப் பெண் முதுமையின் காரணமாகஇறந்துவிட்டார்.அந்த மூதாட்டி செத்துப் போன தகவல் எப்படியோ செருப்பு தைக்கும் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்குத் தெரிந்துவிட, அவள் வந்து அந்த மூதாட்டியின் இடத்தைப் பிடித்துக்கொண்டார். அவர் பக்தர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுக்க ஆரம்பித்தார். அந்த செருப்பு தைப்பவர் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்து உணவையும் சுவையாக செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். ஆகையால், இவருக்கும் அந்த பார்ப்பனப் பெண்ணிற்குக் கிடைத்த மரியாதை அனைத்தும் கிடைத்தது. கோவிலுக்கு வரும் அனைவரும் இந்தப் பெண்ணும் பார்ப்பனர் என்றே நினைத்துக் கொண்டனர்.

ஒரு நாள் இமயமலையிலிருந்து வேதம் படித்த ஒரு மதகுரு அங்கே வருகை புரிந்தார். அவருக்கும் இவர் சாப்பாடு செய்து கொடுத்தார். அந்த மதகுரு இவரின் சாப்பாட்டுச் சுவையில்லயித்துவிட்டார்.மனதாரப் பாராட்டி இவ்வளவு சுவையான சாப்பாடு எப்படிச் செய்கிறீர்? இதற்கு முன்பு இருந்தவர் இப்படிச் செய்ததில்லையே என்று கேட்க, அந்தப் பெண்ணும், ‘‘நான் கீரைக்கட்டைப் பிரிக்க முன்பிருந்த பெண் போல பல்லால் கடித்துப் பிரிக்க மாட்டேன்; அது பக்தர்களுக்கு எச்சிலைப் பரிமாற்றி அவர்களை இழிவுபடுத்திவிடும். ஆகையால், நான் கீரைக்கட்டைப் பிரிக்க இதோ இந்தக் கத்தியைப் பயன்படுத்துகிறேன்’’ என்று கூறினார்.

அப்பெண்ணிடம் இருந்த அந்தக் கத்தி செருப்பு தைப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தும் ‘ரப்பி’ எனப்படும் கத்தி ஆகும்.

உடனே அந்த மதகுரு அவரைப் பார்த்து நீ யார்? நீ பார்ப்பனத்தியா இல்லையா? என்று கேட்க,

அவரும், மன்னிக்க வேண்டும், நான் செருப்பு தைக்கும் குடும்பத் தைச் சேர்ந்தவள். இங்கு வருப வர்களுக்கு உணவு கொடுக்க யாரும் இல்லாத காரணத்தால், நான் உணவு சமைத்துக்கொடுக்கும் வேலையை செய்தேன் என்று கூறினார்.

உடனே அந்த மதகுரு, அந்த செருப்பு தைக்கும் பெண்ணை, பார்ப்பனத்தி என்று பொய் சொல்லி பக்தர்களை ஏமாற்றினார் என்று குற்றம் சாட்டி, ஊரார் முன் நிறுத்தி தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.

ராஜஸ்தானில் பி.ஜே.பி. ஆட்சி: அங்குதான் இப்படிப்பட்ட பாடம்.  பிஞ்சு உள்ளத்தில் நஞ்சு - இதற்குப் பெயர்தான் இந்துத்துவா என்பது! - ஜாதி வெறியின் மறுவடிவம்தானே இந்துத்துவா!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 27.9.17