பக்கங்கள்

செவ்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு - கூடாது ஏன்?



கோ. கருணாநிதி அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 31.1.2019 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு, அரசின் கல்வி நிலையங்களிலும், அரசின் வேலைவாய்ப்பிலும், பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பத்திரிக்கையாளர்களிடம் இக்கூட்டமைப்பின் சார் பில் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி கூறியதாவது:

1. உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்கு, அரசின் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்திட வகைசெய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானதாகும்.

2. இந்திய இந்து சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் சிலர் உயர்ந்தவர்கள், பெரும்பான்மை மக்கள் சூத்தி ரர்கள், தாழ்ந்தவர்கள் என பல நூறு ஆண்டு காலமாக கற்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளும் மறுக்கப் பட்டன. அந்த மக்கள் பல இழிவுகளை சுமந்து வந்தனர்.

3. இவ்வாறு ஜாதியின் அடிப்படையில் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அமைப்பின் அடிப்படையில் சமூக நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தான் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

4. அதனால் தான், அரசியல் அமைப்புச் சட்டத்தில் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

5. ஆனால் தற்போது மத்திய அரசின் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம், உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்று அறிவித்து, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.

6. சமூகரீதியாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்குத் தான் இட ஒதுக்கீடு அளிக்க முடியும். அரசியல் அமைப்புச் சட்டம் இதைத்தான் அனுமதிக்கிறது.

7. பொருளாதார ரீதியில் நலிந்தவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்கிட, அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை. இப்போது சட்டத்திருத்தம் செய்து விட்டதனாலேயே, அது சட்டப்படி சரி என்று கூற முடியாது. 8. பொருளாதாரத்தில் நலிந்தவர்கள், உயர்ஜாதியில் மட்டும் இல்லை. எல்லா ஜாதியிலும் உள்ளார்கள். 9. பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் முன்னேற, நலத் திட்டங்கள்தான் தீர்வே தவிர, இட ஒதுக்கீடு அல்ல. அதனால்தான், பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு, பொது வினியோகத் திட்டத்தில் உணவுப் பொருட்கள், மலிவாகவும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

10. அரசியல் அமைப்புச் சட்டம் முதல் திருத்தத்தின் போதே, பொருளாதார அளவுகோல் சேர்க்கப்பட வேண்டும் என்ற சில உறுப்பினர்களின் கோரிக்கை, தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

11. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட ஆணைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பொருளாதார அளவுகோலை மட்டும் வைத்து, இட ஒதுக்கீடு கொடுக்கமுடியாது என ரத்து செய்தனர்.

12. பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் குறித்து 2005-ல் மத்திய அரசால் அமைக்கப்பட்ட சின்கோ கமிசன் தனது பரிந்துரையை ஜூலை 2010-இல் அளித்தது. தனது அறிக்கையில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தர முடியாது; நலத் திட்டங்கள் மட்டுமே தர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

13. அரசியல் அமைப்புச் சட்டமும், நீதிமன்றமும், அரசு அமைத்த ஆணையமும், சமூகரீதியாக கல்விரீதியாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்குத்தான் இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது.

14. உயர்ஜாதியில் உள்ள நலிந்தவர்கள் உள்ளிட்ட எவருக்கும், எந்த காலத்திலும், கல்வி உரிமை மறுக்கப்பட வில்லை. எந்த இழிவையும் அவர்கள் சந்திக்கவில்லை. 15. அதுமட்டுமல்ல. அரசின் அனைத்து நிர்வாகத் திலும், உயர்கல்வி நிலையங்களிலும், தங்களின் மக்கள் தொகைக்கு மிக மிக அதிகமான அளவில் பிரதி நிதித்துவம் பெற்றுள்ளார்கள்.

அ. எடுத்துக்காட்டாக, மத்திய அரசின் 40 பல்கலைக்கழகங்களில், பேராசிரியர்கள் பதவிகளில், உயர்ஜாதியினர் 95 விழுக்காடு உள்ளனர். துணைப் பேராசிரியர் பதவிகளில் 93 விழுக்காடும், உதவி பேராசிரியர் பதவிகளில் 66  விழுக்காடும் உள்ளனர். மீதம் உள்ள நிலைகளில் இட ஒதுக்கீடு உரிமை உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் இருக் கின்றனர். குறிப்பாக, பேராசிரியர் 1125 பதவிகளில், துணைப் பேராசிரியர் 2620 பதவிகளில், ஒருவர் கூட பெரும்பான்மை மக்களைக் கொண்ட பிற்படுத்தப் பட்டோர் இல்லை.

ஆ. இதேபோன்று, குரூப் ஏ பதவிகளில், உயர் ஜாதியினர் 70 விழுக்காடு பதவிகளில் உள்ளனர். பொதுத் துறை நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பதவிகளிலும், உயர்ஜாதியினர் 60 விழுக்காட்டிற்கும் மேலே உள்ளனர். உயர்பதவிகளில், 90 விழுக்காடு உள்ளனர்.

16. அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 16 (4)-ன் படி, அரசுத் துறையில் போதிய பிரதிநிதித்துவம் தருவதற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியும்.

17. ஆனால், மக்கள் தொகையில் 15 விழுக்காடு உள்ள உயர்ஜாதியினர், ஏற்கனவே அரசின் உயர் பதவிகளில் 70 முதல் 90 விழுக்காடு வரை பிரதி நிதித்துவம் உள்ளபோது, அதில் பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் என்று பிரித்து, மேலும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பது, சமூக அநீதி மட்டுமல்ல. பாபா சாகிப் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிக்கின்ற செயலாகும்.

18. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்ட மல்ல. சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் ஜாதியின் காரணமாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு, அரசு அதிகாரத்தில் வழங்கப்படும் பங்கு. 19. உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு, உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் அரசு, அவர்களுக்கு, கல்வி கற்க ஊக்கத்தொகை அளிக்கலாம்; கல்விக் கடன் குறைந்த வட்டியில் தரலாம். அப்படிப்பட்ட திட்டங்களும் அரசு கொண்டு வந்துள்ளது. சிறப்புப் பயிற்சி அளிக்கலாம். ஆனால், இட ஒதுக்கீடு தீர்வு அல்ல. 20. ஏற்கெனவே, தங்களது விகிதாசாரத்திற்கு பன் மடங்கு அதிகமாக (70 விழுக்காட்டிற்கும் மேல்) அதி காரத்தை கையில் வைத்திருக்கும்,உயர்ஜாதியினர்க்கு, குறுக்கு வழியில், மேலும் 10 விழுக்காடு அளிப்பது, சமூக அநீதியாகும்; பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உரிமை பறிக்கும் செயலாகும்.

21.         உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை எந்த ஒரு அரசின் ஆணையமும் தெரிவிக்கவில்லை. அப்பிரிவு மக்கள், போதிய பிரதிநிதித்துவம் பெறவில்லை என்ற புள்ளிவிவரம் எதனையும் மத்திய அரசு நாடாளுமன்றத்திலும் சரி, மக்களுக்கும் தெரியப்படுத்தவில்லை.

22. மத்திய அரசு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தர உள்ளதாக அரசின் சார்பில் சொல்லப்படுகிறது. இது மக்களை ஏமாற்றுவதற்கும், திசை திருப்புவதற்குமான சொல் தானே தவிர உண்மை அல்ல. 23.              உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரி வினர் என்போர், ஆண்டு வருமானம் ரூ.எட்டு லட்சத் திற்கும் குறைவாக உள்ளோர் அதாவது மாதம் ரு.65000 பெறுபவர், நலிந்த பிரிவில் இட ஒதுக்கீடு பெறலாம். அதேபோன்று, 1000 சதுர அடிக்கு குறைவாக அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளோர், அய்ந்து ஏக்கருக்கும் சற்று குறைவாக நிலம் வைத்திருப்போர் நலிந்த பிரிவில் இட ஒதுக்கீடு பெறலாம். இவர்கள் எல்லாம் ஏழைகளா?

24. மேற்குறிப்பிட்ட அளவுகோல் ஒன்றே, இந்த சட்டம் யாருக்குப் பயன்பட போகிறது என்பதை தெளி வாக்குகிறது. ஒருபுறம், ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் மேல் இருந்தால், வருமான வரி கட்ட வேண்டும் என்று அரசு சொல்லி விட்டு, இன்னொருபுறம், அவர் களை நலிந்த மக்கள் என வரையறுப்பது, கேலிக்கூத்து மட்டுமல்ல. அரசின் நோக்கமே வேறு என்பதை எடுத்துக் காட்டுகிறது.

25.         மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்கு, பள்ளிகளில் இட ஒதுக்கீடு உள்ளது. புதுடில்லியில் ஆண்டு வருமானம் ரூ.65000-க்கும் குறைவாக உள் ளோர், இந்த இட ஒதுக்கீடு பெறலாம். அதற்கு மேல் இருந்தால் பள்ளியில் சேர முடியாது. ஆனால், தற் போதைய 10% இட ஒதுக்கீடு, மாத வருமானம் ரூ.65000 இருந்தால் பெறலாம். இத்தகைய முரண்பாட்டை உள்ளடக்கி மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

26.         மத்திய அரசில் அரசியல் அமைப்புச் சட்டத் தின்படி, சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்க்கு இட ஒதுக்கீடு இருந்தும், அது முறையாக நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து, எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இப்பிரிவு மக்கள், 30 விழுக்காட்டிற்கும் குறைவாகவே அரசு பதவிகளில் உள்ளனர். இது குறித்த புள்ளி விவரங்கள் நிறையவே உள்ளன.

27. ஆனால், உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு தருவதில், அரசு இவ்வளவு வேகம் காட்டுகிறது. இதனை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் புரிந்து கொள்ள வேண்டும்.

28.         அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சமூக நீதிக் கோட்பாடு தான் முதன்மையாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சமூக நீதிக் கோட்பாட்டை முற்றி லுமாக நீக்கி, பொருளாதார அளவுகோலை உயர்ஜாதி மட்டுமன்றி, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என அனைவருக்கும் பொதுவாக்கி, அதன்மூலம், தொடர்ந்து தங்களின் ஆதிக்கத்தை தளர்த்த விடாமல், உறுதிப்படுத்திக் கொள்ள, எடுக்கப் பட்ட மிகப் பெரிய திட்டமே இந்த சட்டம்.

29. ஆகவே தான், இந்த ஆபத்தை பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் உணர்ந்து, ஒன்றிணைந்து அறவழியில் போராட வேண்டும்; சமூக நீதியைக் குழிதோண்டி புதைக்க நினைக்கும் முயற்சியை தடுத்திட வேண்டும் என்று தெரிவிக்கவே, எங்களது அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங் களின் கூட்டமைப்பு இந்த செய்தியாளர் சந்திப்பின் வழியே தெரிவிக்கிறோம்.

30. உயர்ஜாதியினர்க்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்க்கும் அதே வேளையில், இதன் ஆபத்தை உணர்ந்து, சமூக நீதியைக் காப்பாற்றிட, அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என அனைத்து சமூக நீதி அமைப்புகளுக்கும், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்கங்களின் கூட்ட மைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

31. சமூக நீதியில் நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து, அனைத்து மாநிலங் களிலும், போராட்டம் நடத்திடவும் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் ஜே.பார்த்தசாரதி - செயல் தலைவர், எம். இளங்கோவன் - பொருளாளர், எம்.ஜார்ஜ் பெர்னாண்டஸ் -துணைப் பொதுச் செயலாளர், இராம. வேம்பையன் - அமைப்புச் செயலாளர், செய லாளர்கள் ஏ.ராஜசேகரன், எஸ்.பிரபாகரன், அன்புகுமார் மற்றும் யூனியன் வங்கி கே.சந்திரன் ஆகியோர்  பத்திரிக்கை யாளர் சந்திப்பில் உடன் இருந்தனர்.

-  விடுதலை நாளேடு, 2.2.19

வியாழன், 24 ஜனவரி, 2019

இடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே

இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி




சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத்  தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இந்து ஆங்கில ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு ஆசிரியர் அளித்த பேட்டியின் தமிழாக்கம்.

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 விழுக்காடு என்பது இட ஒதுக்கீடு பெறும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியாகும்.

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக் காடு இடஒதுக்கீடு என்பது அநீதியான ஒன்றாகும். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்தும் ஞாயிற்றுக்கிழமை 'தி இந்து' ஆங்கில இதழுக்கு திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

கேள்வி: உயர்ஜாதியினரில் ஏழைக் களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து உங்கள் கருத்து என்ன?

நமது அரசமைப்பு  பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதை ஒருக்காலும் கூறவே இல்லை, அது சமூகத்தில் ஜாதியைக் காரணம் காட்டி, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒடுக்கப் பட்ட மக்களுக்காகவே கொண்டு வரப்பட்டது,  இங்கு பொருளாதாரம் என்ற அளவுகோல் கிடையவே கிடையாது, இவர்கள் கொண்டுவந்தது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும்.

அரசமைப்புச்சட்டம் பிரிவு 46ஆம் பிரிவு கூறுவது என்னவென்றால் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களும் சமூகத்தில் சம உரிமை பெற்று வாழவேண்டும், அவர்களுக்கும் சமூகத்தில் சமமான தகுதி கிடைக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்டது, முக்கியமாக பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்களுக்காக இந்த ஒதுக்கீடு எந்த அளவு பயன்பட்டுள்ளது என்பதை   காண்கிறோம், இட ஒதுக்கீடு ஒன்றும் ஏழைகளை பணக்காரர்களாக மாற்றும் அரசு திட்டங்களுள் ஒன்று அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்., இவர்கள் கொண்டுவந்த இந்த சட்டம் இதுவரை இட ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு அநீதி இழைக்கும் நடவடிக்கை ஆகும். மேலும் இந்தச்சட்டம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும்.

இதே போன்று முன்பு பி.வி. நரசிம்மராவ் பிரதமராகவிருந்த போது 1992இல் அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு உயர்ஜாதியின ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று கூறினார்கள். அது நீதிமன்றத்தால் தூக்கிவீசப்பட்டது, இன்று பாஜக அரசு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது அவ்வளவே!

பாஜக இந்தச் சட்டத்தை கொண்டுவந்து அரசமைப்புச் சட்டத்தில் தில்லுமுல்லு வேலைகளைச்செய்ய முன்னோட்டம் விட்டுள்ளது, ஆனால் இந்திய அரசமைப்புச்சட்டத்தை யாராலும் அசைத்துப்பார்க்க முடியாது, பொருளாதார அடிப்படை குறித்து இந்திய அரசமைப்புச்சட்டத்தில்   குறிப்பிடவில்லை.  பொருளாதார இட ஒதுக்கீட்டால் சமன்பாடு ஏற்படும் என்று நினைக்கவேண்டாம், இது திணிக்கப்பட்ட ஒன்று  ஆகும், உண்மையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான ஜாதிய கொடுமைகளை நீக்கவேண்டும், இதுதான் அரசமைப்புச் சட்டம் சொல்லும் இட ஒதுக்கீட்டின் நோக்கம் ஆகும், பொருளாதார இட ஒதுக்கீட்டால் ஜாதி பாகுபாடு நீங்கிவிடுமா?

நமது நாட்டில் சமூகப் பாகுபாடுகள் ஜாதி அடிப் படையில் தான் உள்ளன; ஜாதிய அடிப்படையில் தான் புறக்கணிப்புகள் இன்றும் தொடர்கின்றன. இன்று பணக் காராக  உள்ள ஒருவர் நாளை ஏழையாக மாறிவிடுவார். இது இயற்கையாக நடக்கும் மாற்றமாகும். ஆனால் ஜாதி அப்படி அல்ல, அது பிறப்பில் இருந்தே தொடர்கிறது. செத்தபிறகும் ஜாதி தொடர்கிறது. இங்குதான் ஜாதி தொடர்பான கொடுமைகள் சமூகத்தில் உயர்நிலையை அடைந்த பிறகும் தொடர்கிறதே,

கேள்வி: தந்தை பெரியார் அனைத்து வகுப்பாரும் சமமான உரிமை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மக்கள் தொகை அடிப்படையில்  வேண்டும் என்று கூறினாரே?

ஆமாம் உண்மைதான் வகுப்புவாரி விகிதாச்சாரப் பிரதிநிதித் துவம் குறித்து பெரியார் பேசினார், அதாவது அனை வருக்குமான உரிமைகள். ஆனால் பாஜக கொண்டுவந்தது வெறும் உயர்ஜாதியினர் மட்டும் பயன்படும் திட்டம் ஆகும்.

கேள்வி: காங்கிரஸ் இந்த 10 விழுக்காடு இட ஒதுக் கீட்டை ஆதரித்துள்ளது, தற்போது திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளது, இது திராவிட கொள்கையைச் சுமப்பதாக கூறும் திமுகவின் கொள்கை முரணாக தெரியவில்லையா?

இல்லை, இதுமட்டுமே என்று கூறிவிடமுடியாது பல்வேறு வகையில் திமுக மற்றும் காங்கிரஸ் இரண்டுக்கும் கொள்கை முரண்பாடுகள் உள்ளன. இதைத்தான் வேற்றுமையிலும் ஒற்றுமை என்று கூறுகிறோம். ஆனால் தற்போது மிகவும் முக்கிய நோக்கம் மோடி தலைமையிலான பாஜக அரசை அதிகாரத்தில் இருந்து விரட்டவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன.

கேள்வி: முக்கிய திராவிடக் கட்சிகளுள் ஒன்றான அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயல்வதுபோல் தெரிகிறதே, இருவருடைய தேர்தல் கூட்டணி  பேச்சுவார்த்தை குறித்து உங்கள் கருத்து என்ன?

தற்போதுள்ள அதிமுக முந்தைய அதிமுக போல் இல்லை, அது உருவம் இல்லாத அமீபா போன்று மாறிவிட்டது, இன்றைய அதிமுக வில் தலைமையே இல்லை. மக்களவை துணைத் தலைவரும் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து கடுமையாகஎதிர்ப்பு தெரிவித்து பேசுகிறார். ஆனால் எதிர்த்து வாக்களிக்கும் துணிச்சல் இல்லை. அதிமுகவினர் இரட்டை வேடம் போடுகின்றனர். அங்கு தலைவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது, அவர்கள் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்கின்றனர். ஆனால் அதை உறுதியாக எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுக்கப் பயப்படுகின்றனர். அதிமுகவை திராவிடக் கட்சி என்று கூறாதீர்கள். திராவிடக் கட்சி என்றாலே அது சமூகநீதிக்கு ஆதரவான நிலைப்பாட்டின்பக்கம்  என்றுமே உறுதியாக நிற்கும். இரட்டை வேடம் போடாது.

கேள்வி: தாழ்த்தப்பட்டோர் (தலித்துகள்)  - திராவிட அமைப்பில் இருந்து விலகிச்சென்றுகொண்டிருப்பது போன்ற சூழல் உருவாகியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறதே?

அப்படி அல்ல, அப்படி பேசுபவர்கள் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். புரிந்துகொள்ளாமல் அல்லது சுயலாபத்திற்காக இப்படிப்பட்ட செய்தியை பரப்பிவருகின்றனர். உண்மை என்னவென்றால் பட்டியல் இனத்தின் தலைவர்கள் திராவிடர் கழகக் கொள்கையில் நின்று செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் பணியும் எங்களின் பணியும் ஒன்றே, திராவிடர் கழகம் சமூகத்தின் அனைத்துக் சமூக அநீதிப் பிரச்சினைகளுக்கும் எதிராகக்  குரல் கொடுத்து வந்துள்ளது, முக்கியமாக சமூகத்தில் அதிகம் புறக்கணிப்பட்ட பிரிவினருக்கு குரல் கொடுப்பது எங்களின் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று. சிலர் சுயநலத்திற்காகவும், வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அதாவது திராவிட இயக்கங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுகின்றனர்.

கேள்வி: திராவிடர் கழகம் தமிழ்நாட்டைத்தவிர வேறு எங்கும் வலுவாக செயல்பட்டு வருகிறதா?

திராவிடர் கழகம் என்பது ஒரு பெயர் மட்டுமே, எங்களின் கொள்கைகள் முக்கியம் அந்த கொள்கைகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் திராவிடர் கழகங்கள் உள்ளது, பெங்களூருவில்  பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தொடர்பாக கருத்தரங்கம் ஒன்று ஜனவரி 28-ஆம் தேதி நடை பெற உள்ளது.  முக்கியமாக அங்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் வழிமுறை தொடர்பாக ஆலோசிக்க இருக்கிறோம். அதில் நானும் பங்கேற்கிறேன் என்றார்.

‘We should understand that reservation is not a poverty alleviation scheme’

t to set right the injustice meted out to the oppressed, says DK leader

Dennis S. Jesudasan 
CHENNAI,  JANUARY 21, 2019 
Dravidar Kazhagam (DK) president K. Veeramani has been highly critical of the Centre’s move to provide 10% reservation for the economically weaker sections in the general category, and is set to challenge it in the Madras High Court. In an interview on Sunday, he answered a range of questions on the new quota, the DMK and the AIADMK. Excerpts:
What is your justification for opposing the 10% quota for economically weaker sections in the Open Competition category?
Our Constitution does not provide for reservation based on the economic conditions of citizens. Such a provision has been made only for the socially and educationally backward classes. The 10% quota on the basis of economic conditions is unconstitutional and unethical. Even Article 46 of our Constitution provides for the State’s special care only for weaker sections, the SCs and STs in particular. We should understand that reservation is not a poverty alleviation scheme. It is meant for setting right the injustice meted out to the socially oppressed sections of society. This [10% quota] will not stand judicial scrutiny.
An earlier attempt by the erstwhile Congress government to provide such a quota was made through a Government Order. But this time, the BJP has brought about a Constitutional amendment...
The BJP may say that it has introduced an Act. But it has no right to change the basic structure of the Constitution. This issue comes under the basic structure of the Constitution. You cannot touch it. Economic criteria are not there in the Constitution. 
But don’t you think discrimination has taken new forms now, besides caste? We are talking about caste discrimination, but what about class discrimination?
In our country, discrimination is primarily based on caste. A person may be rich today and may become [poor] tomorrow and vice versa. But once you are born into a caste, it doesn’t change even after your death, as there are caste-based graveyards. Economic criteria are very volatile. They may change over time.
Periyar E.V. Ramasamy was for proportional representation of opportunities based on the population of caste groups. That way, he was for quota for every caste...
Yes, we are for proportional representation. But this 10% quota brought about by the BJP is primarily aimed at benefitting a section of the upper castes.
Despite opposing the 10% quota, the DMK is still in an alliance with the Congress, which supported the quota. Don’t you think the DMK is putting politics above principles?
No. This is only one of the problems. Unity in diversity is more important. Who should come to power and who shouldn’t is important...because [Prime Minister] Modi has not delivered at all.
The AIADMK, a major Dravidian party, is said to be divided over joining hands with the BJP for the Lok Sabha polls. Your comments...
The present AIADMK is not like the old AIADMK. It is like an amoeba, which is shapeless. When she [late CM Jayalalithaa] was around, there was leadership. There is no leadership [now]. [Deputy Speaker of the Lok Sabha] Thambi Durai strongly opposed [the 10% quota] but didn’t vote against it and decided to abstain. They are playing a double game. There is a leadership crisis there. Though officially, they are against the 10% quota, they are not strongly opposing it. So, they are not a Dravidian party. A Dravidian party is one that is for social justice.
There are claims that Dalit voices have been left out of the Dravidian movement...
No, no. There is some misrepresentation and misunderstanding [in this matter]. Real Dalit leaders owe their existence only to the Dravidian movement. Even now, the Dravidian movement encompasses all sections of people. It is meant more for the oppressed and the downtrodden. Some people have been advancing a systematic, false propaganda that the Dravidian parties have nothing to do with Dalits.
Is the DK active in States other than Tamil Nadu?
For the DK, principles are important, not its name. Aren’t there reservations in those States? Our philosophy has reached other States. I have been invited to a seminar by the Backward Classes Commission in Kerala on January 28 over this (10%) reservation.

(THE HINDU, 21.1.2019)

-  விடுதலை நாளேடு, 21.1.19

வெள்ளி, 18 ஜனவரி, 2019

"இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல"

பிபிசி தமிழ் இணையத்துக்கு தமிழர் தலைவர் பேட்டி




செய்தியாளர்: முரளிதரன் காசிவிஸ்வநாதன் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத் திற்கே முரணானது; இந்த அரசியலமைப்பை உருவாக் கியவர்களின் கொள்கைக்கு எதிரானது என்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிலையில், திராவிடர் கழகத்தின் தலைமை யகமான பெரியார் திடலில் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் இது தொடர்பாகப் பேசினார் கி. வீரமணி. பேட்டியிலிருந்து:

கேள்வி: பொருளாதார ரீதியில் பின்தங்கியவர் களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது சரியான முடிவா?

பதில்: இட ஒதுக்கீட்டின் அடிப்படைத் தத்துவமே காலகாலமாக கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதி அமைப்புக்கான தத்துவம். இந்தியாவில்தான் ஜாதி அமைப்பு இருக்கிறது. மனு தர்மம்தான் முதலில் இந்தியாவில் இட ஒதுக்கீட்டை உருவாக்கியது. இந்த ஜாதிக்காரர்கள் இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கூறியது. பிராமணனுக்கு கல்வியும், சத்திரியனுக்கு படையும், வைசியனுக்கு வியாபாரமும், சூத்திரனுக்கு அடிமைத் தொழிலும் செய்ய வேண்டுமென வகுக்கப்பட்டது. இந்த ஜாதி அமைப்பு காரணமாக மிகப் பெரும்பான்மையான மக்கள் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களானார்கள். இதை சரிசெய்யத்தான் 1928இல் நீதிக் கட்சி ஆட்சியில் இருந்த போது, தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு, வகுப்புவாரி உரிமை என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின்னால், அரசியல் சட்டத்தில் உள்ள சமத்துவம் என்ற தத்துவத்தைச் சுட்டிக்காட்டி, உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை இட ஒதுக்கீடு செல்லாது என்ற தீர்ப்பை வழங்கின. இதற்குப் பிறகு, தந்தை பெரியார் போன்றவர்கள் போராடியதன் விளைவாக இதற்காக அரசியல் சட்டம் திருத்தப் பட்டது. அப்போது பிரதமராக ஜவஹர்லால் நேருவும், சட்ட அமைச்சராக அம்பேத்கரும் இருந்தனர். முதலில் கல்வியில் முன்னுரிமை அளிக்க அரசியல் சட்டத்தைத் திருத்தி 15-4 என்ற பிரிவை உருவாக்கினார்கள். தாழ்த்தப்பட்டவர் களைப் பொருத்த வரை, ஷெட்யூல்ட் காஸ்ட் என்ற பட்டியல் இருந்தது. பிற்படுத்தப்பட்ட மக்களை வரையறுக்க என்ன செய்வது? அரசியல் சாசனத்தின் 340ஆவது பிரிவில் ஒரு அம்சம் இருக் கிறது. "சமூக ரீதியாகவும், கல்வி ரீதி யாகவும்" பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அதில் உள்ளது. அதே வரையரையை இந்த 15-4இலும் வைத்துக் கொள்ளலாம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நம்முடைய அரசியலமைப்புச் சட்டத் தின் 340ஆவது பிரிவை உருவாக்கும்போதும், முதல் முதலாக அரசியல் சட்டத்தைத் திருத்தும்போதும் ஒரு கேள்வி எழுந்தது. பொருளாதார ரீதியில் பின் தங்கியவர் களை இதில் சேர்க்க வேண்டுமா என்பது தான் அந்தக் கேள்வி.

இந்த மக்கள் ஒதுக்கப்பட்டது சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும்தான்; பொருளாதார ரீதியில் இன்று பின்தங்கிய வர்கள் நாளை மேம்படலாம். இன்றைய பணக்காரன், நாளை ஏழையாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இன் றைய கீழ் ஜாதிக்காரன் என்றைக்கும் கீழ் ஜாதிக்காரன்தான் என்பது சுட்டிக் காட்டப்பட்டது. அதனால் தான், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் என்று மிகத் தெளிவாக 15-4இல் குறிப் பிடப்பட்டது. இருந்தபோதும் மத்திய அரசின் பணிகளில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல்தான் இருந்தது. 340ஆவது பிரிவை முன் வைத்து, இந்த விவகாரம் பற்றி ஆராய ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அதுதான் மண்டல் ஆணையம். அந்த ஆணையம் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்தது. அதிலும் 'சமூக ரீதியிலும் பொருளா தார ரீதியிலும் பிற்படுத்தப்பட்டவர்கள்' என்பது குறிப்பிடப்பட்டது.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, உயர் ஜாதியினரில் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட் டோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத் தினார். இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை    (இந்திரா சஹானி வழக்கு) 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இடஒதுக்கீடு என்பது 'சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பிற்படுத்தப் பட்டவர்களுக்குத் தான்; பொருளாதார ரீதியில் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு அல்ல' என நீதிமன்றம் தீர்ப் பளித்தது. மேலும் "இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப் புத் திட்டமல்ல; அதற்கு வேறு திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். இது வாய்ப்புகள் மறுக்கப் பட்டவர்களுக்கு வாய்ப்பளிப்பது" என்பதைச் சுட்டிக்காட்டியது.

அதேபோல எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, இடஒதுக்கீட்டைப் பெற 9,000 ரூபாய் ஆண்டு வருவாய் என்பதை ஒரு வரம்பாக அறிமுகப்படுத்தினார். இதனைத் தி.மு.க, தி.க., சி.பி.அய். ஆகிய கட்சிகள் எதிர்த்தன. ஓராண்டு இது அமலில் இருந்தது. இதற்கு அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி யடைந்தது. அப்போது அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை எம்.ஜி.ஆர். கூட்டியபோது நான் இது தொடர்பாக அவருக்கு விளக்க மளித்தேன். "பொருளா தார நிலை என்பது மாறக்கூடியது. பலரது வருமானம் நிலையில்லாதது. குறிப்பாக விவசாயி களின் வருவாய் தொடர்ந்து மாறும். நல்ல மழைக் காலத்தில் நல்ல வருவாயும், வறட்சிக் காலத்தில் மிக மோசமான நஷ்டமும் ஏற்படும். அந்த நிலையில், பொருளாதார நிலையை எப்படி அடிப்படையாக வைக்க முடியுமென" கேட்டேன்.

அதேபோல, அரசு ஊழியராக இருப்பவர் காஞ்சிபுரத்தில் இருக்கும்போது 8,500 ரூபாயைப் பெறுவார். அவர் சென்னைக்கு மாற்றப்பட்டு, சிட்டி அலவன்சை கூடுதலாகப் பெறும்போது 9,000 ரூபாயைப் பெறுவார். உடனே அவர் முற்பட்ட வகுப்பாகிவிடுவார். இது எப்படி சரியாக இருக்கும் என்று கேள்வியெழுப்பினேன். எம்.ஜி.ஆர். விளங்கிக்கொண்டார். அதனை நீக்கினார்.

இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இட ஒதுக்கீட்டில், முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகள் என்று குறிப்பிடுகிறார்கள். அது எப்படி சரியாக இருக்கும்? இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. அதற்கு வேறு திட்டங்கள் இருக்கின்றன. இரண்டின் நோக்கங்களும் வேறு.

இவர்கள் கொண்டுவரும் மசோதா உச்ச நீதி மன்றத்தில் நிற்காது. அதற்காக இவர்கள் அரசியல் சட்டத்தை திருத்தினாலும் அது செல்லாது. நம்முடைய அரசியல்சட்ட கர்த்தாக்கள் எதை மனதில் வைத்து 'சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும்' என்ற வார்த்தைகளை வைத்தார்களோ, அது அடிபட்டுப் போய்விடும் என்ப தால் நீதிமன்றம் அதனை ஏற்காது. இது மத்திய அரசுக்குத் தெரியாமல் இல்லை.

அய்ந்து மாநிலத் தேர்தல் தோல்விதான் அவர்களை இந்த முடிவை எடுக்கச் வைத்திருக்கிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்தி பேசும் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ள பிராமணர்களின் வாக்கு களைப் பெற பா.ஜ.கவினர் விரும்புகிறார்கள். இதுபோக, காயஸ்தர்கள், சத்திரியர்கள் இருக்கிறார்கள். அவர்களது வாக்குகளையும் பெறுவ தற்கான அரசியல் திட்டம் இது.

தவிர, 8 லட்ச ரூபாய் வருவாய் வரம்பு, நில வரம்பு ஆகியவற்றை முன்வைத்திருக்கிறார்கள். இந்த வரம்பு களைப் பார்க்கும்போது இது ஏழைகளுக்குப் பயன்படாது, நடுத்தர வர்க்கத்திற்குத்தான் பயன்படும் எனத் தோன்று கிறது. சமூக நீதியின் அடி வேரையே பறிக்கும் செயல் இது.

கேள்வி: பொருளாதார ரீதியில் பின் தங்கியவர் களுக்கான இட ஒதுக்கீட்டை நரசிம்மராவ் கொண்டு வந்தபோது, முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததா?

பதில்: அவர் முன்னேறிய பிரிவினர் என்றுகூடச் சொல்லவில்லை. The reservation of the 10 percent is in favour of the economically backward section of the people who are not covered by any existing reservations என்றுதான் கொண்டுவந்தார். ஆனால், நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை.

கேள்வி: தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதா ஒருவேளை நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டு விட்டால்....?

பதில்: நிறைவேறினால், நீதிமன்றத்திற்குச் செல் வோம். நாங்களே போவோம். நீதிமன்றத்தில் நிச்சயம் அடிபடும். குஜராத்தில் 2016இல் இதேபோல முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அவசரச் சட்டமாகவே கொண்டு வந்தார்கள். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்திற்குச் சென்றபோது, நீதி மன்றம் அதனை ஏற்கவில்லை. குஜராத்தில் செய்த தைத்தான் இவர்கள் இப்போது மத்தியில் செய் கிறார்கள். இதுவும் நீதிமன்றத்தில் அடிபட்டால் அவர்களுக்கு ஒரு கவலையும் இருக்காது. 'நாங்கள் செய்ய விரும்பினோம். நீதிமன்றம் தடுத்துவிட்டது' என்று சொல்லிவிடுவார்கள்.

கேள்வி: மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியான நிலையில், இந்திய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி உடனடியாக எதிர்வினைகள் ஏதும் இல்லையே ஏன்?

பதில்: இனிமேல்தான் வரும். திருவாரூர் தேர்தல் தள்ளிவைப்பு போன்ற செய்திகளில் இது பெரிதாகத் தெரியாமல் போயிருக்கலாம். எங்களைப் போன்ற சமூக நீதிக்கான இயக் கங்கள் முதலில் பேசுவோம். பிறகு எல்லோரும் சேர்ந்துகொள்வார்கள். வட இந்தியாவில் உள்ள கட்சிகளைப் பொருத்தவரை இட ஒதுக்கீட்டின் அடிப்படைத் தத்துவமே அவர்களுக்குப் புரியாது. இடஒதுக்கீட்டின் அடிப்படைத் தத்துவத்தை தென்னாட்டில் தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை அரசியலுக்குத்தான் முதலிடம். சமூக நீதிக்கு இரண்டாவது இடம்தான். தென்னாட்டிலும்கூட பினராயி விஜயன் போன்ற வர்கள் இதை வரவேற்பேன் எனக் கூறுவது அதிர்ச் சியளிக்கிறது. ஏற்கெனவே எம்.ஜி.ஆர். காலத்தில் வருமான வரம்பு கொண்டு வந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எங்கள் நிலைப் பாட்டை புரிந்து கொண்டு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வருமான வரம்புக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், சில நாட்கள் கழித்து புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.

கேள்வி: இந்தச் சட்டம் நிறைவேறிவிட்டால், மாநிலங்களும் உடனடியாக இதனைப் பின்பற்ற வேண்டியிருக்குமா?

பதில்: ஆமாம். மாநிலங்களும் இதைச் செய்ய வேண்டியிருக்கும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படும் ஒரு சட்டம் எல்லோருக்கும் பொருந்தும். ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமெனவும் இவர்கள் தான் சட்டம் கொண்டுவந்தார்கள். எல்லா மாநிலங் களும் அதை நிறைவேற்றவில்லை. பல மாநிலங்களில் 12 சதவீதம்தான் அதை நிரப்பியிருக்கிறார்கள். ஆனால், இந்தக் குறையை அந்தந்த மாநிலங்களில் உள்ளவர்கள்தான் கேட்க வேண்டும்.

கேள்வி: முன்னேறிய ஜாதியினரில் இடஒதுக் கீட்டிற்கான கோரிக்கை இந்திய அளவில் எவ்வளவு வலுவாக இருந்தது?

பதில்: கோரிக்கை இருந்தது. ராஜபுத்திரர்கள், பட்டேல்கள், தாகுர்கள் போன்றவர்கள் தொடர்ந்து கேட்டு வந்தார்கள். இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. இந்த பத்து சதவீத இட ஒதுக்கீடு அளித்தால் அது 50 சதவீதத்தைத் தாண்டிவிடும். அதனால், இதனை அரசியல் சாசனத்தின் 9ஆவது ஷெட்யூலில் சேர்க்க முயற்சிப்பார்கள். ஆனால், அதிலும் நீதிமன்றம் தலை யிடும் வாய்ப்பு உள்ளது.

கேள்வி: தமிழ்நாட்டில் சமீப காலமாக இடஒதுக் கீட்டிற்கு எதிரான மன நிலை உருவாகியிருப்பதாகத் தோன்றுகிறது. என்ன காரணம்?

பதில்: இந்தியாவில் 69 சதவீத இடஒதுக்கீடு இங்கேதான் இருக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது. அண்ணா மேம்பாலத்தின் மீது வேகமாகச் செல்பவர்களுக்கு, அந்தப் பாலம் கட்டுவதற்கு முன்பாக இருந்த போக்குவரத்து நெரிசல் பற்றித் தெரியாது. ஏனென்றால், அவர்கள் வசதியாகச் செல்ல யாரோ பாடுபட்டிருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியற்றை இட ஒதுக்கீட்டில் பெற்றிருப்பார்கள். ஆனால், அது எப்படி வந்தது எனத் தெரியாது. தொடர்ந்து அவர்களுக்கு விளக்க வேண்டும். ஆனால், பொதுவாகப் பார்த்தால் அப்படியான எதிர் மனநிலை இல்லையென்றுதான் சொல்வேன்.

நன்றி: பி.பி.சி. தமிழ் இணையம், 9.1.2019

-  விடுதலை நாளேடு, 13.1.19