பக்கங்கள்

வியாழன், 25 ஜூன், 2026

முற்பட்டோர் இட ஒதுக்கீடு - விசாரணை ஆணையம் அமைக்க கல்வியாளர்கள் அவசர கோரிக்கை!


கோடிக்கணக்கில் வணிகம் செய்யும் தொழிலதிபர்களின் வாரிசுகளுக்கும்
உயர்ஜாதி ஏழைப் பார்ப்பனர்களுக்கான இடஒதுக்கீட்டில் சலுகை!

சென்னை, ஜூன் 21 ஒன்றிய  அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில், பொருளாதார நலிந்த பார்ப்ப னர்களுக்கான (EWS) இட ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து விரிவான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ஒன்றிய அரசின் விதிமுறைப்படி, ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கே 10% இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகைகள் வழங்கப்பட சட்டம் இருக்கிறது. ஆனால், அண்மையில் தேர்ச்சி பெற்ற உயர்ஜாதி ஏழைப் பிரிவைச் சேர்ந்த 104 மாணவர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்தபோது பல அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் வெளி
வந்துள்ளன.

பிரபல பயிற்சி மய்யங்கள்

தேர்ச்சி பெற்ற 104 பேரில் 67 மாணவர்கள், ஆண்டுக்கு ரூ. 2.65 லட்சம் வரை கட்டணம் வசூ லிக்கும் நாட்டின் மிக புகழ்பெற்ற சிவில் சர்வீசஸ் பயிற்சி மய்யங்களில் படித்துத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சொகுசு பள்ளி மற்றும் உயர்கல்வி

46 மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் என்பதும், 14 மாணவர்கள் அய்.அய்.டி (IIT), என்.அய்.டி (NIT) போன்ற நாட்டின் உயர்தர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

தேர்ச்சி பெற்றவர்களில் 28 மாணவர்களின் பெற்றோர்கள் பெரிய தொழிலதிபர்களாகவும், நிறு வனங்களின் உரிமையாளர்களாகவும், சொந்தமாகப் பெரிய கடைகள் மற்றும் குடும்பத் தொழில் நடத்துப வர்களாகவும் உள்ளனர்.

கார்ப்பரேட் ஊழியர்கள்

10 மாணவர்கள் ஏற்ெகனவே பன்னாட்டு நிறு வனங்கள் உள்ளிட்ட முன்னணி தனியார் நிறுவனங் களில் நல்ல ஊதியத்துடன் பணி புரிந்தவர்கள் ஆவர்.

லட்சக்கணக்கில் பள்ளிக் கட்டணம் செலுத்திய வர்களும், கோடிக்கணக்கில் வணிகம் செய்யும் தொழிலதிபர்களின் வாரிசுகளும், பன்னாட்டு நிறு வனங்களில் பணிபுரிந்தவர்களும் எப்படி ‘பொரு ளாதாரத்தில் நலிந்தவர்கள்’ என்ற வரம்புக்குள் வர முடியும் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர்.

உண்மையான ஏழை எளிய மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிக்கும் வகையில் நடைபெற்றுள்ள இந்த இடபுள்யுஎஸ் மோசடி குறித்து ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு, ஒரு உயர் மட்ட விசா ரணை ஆணையம் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கல்வி யாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

சனி, 2 மே, 2026

முத்தமிழறிஞர் கலைஞர்’’ வழியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள் இடஒதுக்கீடு அறிவித்த சித்தராமையா!

 

பெங்களூரு, ஏப்.28 தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் தமது வரலாற்று சாதனைகளில் மணி மகுடமாக ‘அருந்ததியர்’ உள் இட ஒதுக்கீட்டை வழங்கினார்.
2009 ஆம் ஆண்டு முதலமைச்சராக கலைஞர் இருந்த போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருந்ததியினருக்கு 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு சட்ட மசோதா தாக்கல் செய்து சட்டம் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், ஏற்கெனவே உள் ஒதுக்கீட்டை அனுமதிக்கக்கூடாது என்று ஆந்திர மாநில வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. இதன் காரணமாக இந்த வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது. எஸ்சி/எஸ்டி – பட்டியலின பழங்குடினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் அன்று அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று 6 நீதிபதி கள் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.

இதனைப் பின்பற்றி தற்போது கரு நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.
கருநாடகாவில் பட்டியல் ஜாதிகள் இடது கை, வலது கை, தீண்டத்தகாத பிரிவு என பிரிக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் சில சமூகங்களே இடஒதுக்கீட்டின் பலனை அனுப விக்கின்றன என்கிற சர்ச்சை வெடித்த நிலையில் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதில் ஏஜே சதாசிவா ஆணைய மானது, எஸ்சி/எஸ்டி- பட்டியல் ஜாதியி னருக்கான 15% இடஒதுக்கீட்டை 6:5:3:1 என்ற விகிதத்தில் பிரிக்கப் பரிந்துரைத்தது.
ஆனால், 2023 இல் ஆட்சியில் இருந்த பாஜக அரசு, எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தியது. அத்துடன் 6 சதவிகிதம் (இடது), 5.5 சதவிகிதம் (வலது), 4.5 சதவிகிதம் (தீண்டத்த காத ஜாதியினர்) மற்றும் ஒரு சதவிகிதம் (மற்றவர்கள்) எனப் பிரித்து உள் இட ஒதுக்கீடு அறிவித்தது.
தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்க ளில் இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக கருநாடகா பாஜக அரசின் நடவடிக்கை இருந்ததால் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி நாகமோகன் தாஸ் ஆணையம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

தற்போதைய காங்கிரஸ் அரசு அமைத்த இந்த ஆணையம், விரிவான ஆய்வுகளை நடத்தி 1-6-5-4-1என்ற பார்முலாவைப் பரிந்துரைத்தது.
அதாவது எஸ்சி/எஸ்டி சமூகங்களை 5 பிரிவுகளாகப் பிரித்து அவர்களுக்கான உள் இடஒதுக்கீடாக 1-6-5-4-1 பார்முலா முன்வைக்கப்பட்டது. ஆனால் இது 17 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படை யிலானது. இதனை செயல்படுத்தினாலும் நீதிமன்றம் தடை விதிக்கும்.

இந்த நிலையில்தான் கருநாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலை மையிலான காங்கிரஸ் அரசு எஸ்சி/எஸ்டி பட்டியலில் உள்ள 3 பிரிவினருக்கு 5.25- 5.25- 4.50 என இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இதற்கு அம்மாநில அரசின் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி எஸ்சி/எஸ்டி பட்டியலில் உள்ள
Group A: மாதிகா உள்ளிட்ட 15 ஜாதியி னருக்கு 5.25 சதவிகிதம்
Group B: 18 ஜாதியினருக்கு 5.25 சத விகிதம்
Group C: லம்பானி, போவி உள்ளிட்ட 59 மிகவும் பின் தங்கிய பிரிவினருக்கு 4.50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்ப டும்.
அதே நேரத்தில் இந்த உள் இட ஒதுக்கீடு முறை குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

- விடுதலை நாளேடு, 28.04.26

வியாழன், 18 டிசம்பர், 2025

நீதித்துறையா? பார்ப்பன ஆதிக்கத் துறையா? இந்தியாவில் நீதித்துறையில் முன்னேறிய வகுப்பினர் 75.45% 841 நீதிபதிகளில் 49 பேர் மட்டுமே பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள்!


 நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு ஒன்றிய அரசின் பதில்

புதுடில்லி, டிச.12 2018 முதல் 2025 வரை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் 841 நீதிபதிகளில் 49 பேர் மட்டும் பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என ராமதாஸ் அத்வாலே தெரிவித்தார்.

கடந்த 7 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 841 நீதிபதிகளில், 49 பேர் மட்டுமே பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் (2%) என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நிய மிக்கப்படும் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை கடைப்பிடிக்க ஒன்றிய அரசு சட்டம் ஏதும் கொண்டு வருகிறதா என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், சட்டம் இல்லாத சூழ்நிலையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதில், ஒன்றிய அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் வினவியிருந்தார்.

சமூகநலத்துறை அமைச்சரின்
எழுத்துப்பூர்வ பதில்!

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஒன்றிய சமூகநலத்துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, அரசமைப்பு சட்டம் 124, 217, 224 பிரிவுகளின் கீழ் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாகவும், அதில் இடஒதுக்கீடு முறை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2025 நவம்பர் வரை 841 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 32 பேர் பட்டியலினத்தவர் என்றும், 17 பேர் பழங்குடியினர் என்றும் தெரிவித்துள்ளார்.

129 பெண்கள் நீதிபதிகளாக…

மேலும், 103 இதர பிற்படுத்தப்பட்டோர், 46 சிறு பான்மையினர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 129 பெண்களும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பொதுப் பிரிவினர் 76.45% ஆவர்.

பட்டியலினத்தவர் 3.8%

பழங்குடியினர் 2%

பிற்படுத்தப்பட்டவர் 12.2%

சிறுபான்மையினர் 5.5%

பெண்கள் 14%.

- விடுதலை நாளேடு,12.12.25

வியாழன், 31 ஜூலை, 2025

50% இட ஒதுக்கீடு தொடர்ச்சி

விடுதலை நாளேடு
 இந்நாள் அந்நாள்

50% இட ஒதுக்கீடு தொடர்ச்சி (31.7.2025)

1980-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கான (BC) இட ஒதுக்கீட்டை 31% இலிருந்து 50% ஆக உயர்த்தியது (31.7.2025). இதனால், பட்டியலினத்தவர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) இட ஒதுக்கீட்டையும் சேர்த்து மொத்த இட ஒதுக்கீடு 68% ஆக உயர்ந்தது.

பொருளாதார அளவுகோலை பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் புகுத்தியதன் காரணமாக திராவிடர் கழகம் தொடர்ந்து நாடெங்கும் போராட்டத்தை நடத்தியது. சமூக நீதியில் அக்கறை கொண்ட தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் தோழர்கள் இணைந்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. வருமான வரம்பு ஆணை தீயிட்டுக் கொளுத்தப்பட்டு அதன் சாம்பல் கோட்டைக்கு அனுப்பப்பட்டது. அதன் காரணமாக மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் அ.தி.மு.க. பெரும் தோல்வியை சுமந்தது.

இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்ததன் விளைவாக ஏற்பட்ட எதிர்ப்புணர்வை சரிசெய்யும் நோக்கில் வருமான வரம்பு ஆணை பின்வாங்கப்பட்டது. பொருளாதார அளவுகோல் நீக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டது.

குறிப்பு: பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு 50%ஆக உயர்த்தப்பட்ட நாள் 31.07.1980 ஆக இருக்கலாம்.

வியாழன், 17 ஜூலை, 2025

தமிழ்நாட்டில் தெருக்கள் சாலைகளுக்கு வைக்கப்பட்ட ஜாதிப் பெயர்களை மாற்றி பொது பெயர்கள் சூட்ட வேண்டும்

 


உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவு

சென்னை, ஜூன் 20-  தமிழ்நாட்டில் தெருக்கள், சாலைகளுக்கு வைக்கப்பட்ட ஜாதிப் பெயர்களை மாற்றி பொதுப்பெயர்களைச் சூட்டவேண்டும் என்று  உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

- விடுதலை நாளேடு,20.6.25

இதுதான் சமூகநீதி அரசு அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு

 


சென்னை, ஜூன் 26 தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டி யின்றி மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்கவும் தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது. இந்த சூழலில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

அரசு பணிகளில் பதவி உயர்வின்போது, பணியிட மாறுதலின்போது மாற்றுத்திறனாளி களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங் கப்படும். அரசால் கண்டறியப்பட்ட பதவிகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படும். இதில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சதவீதம், செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சதவீதம், பெருமூளை வாதம், தசைநார் சிதைவு, அமில திரவம் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சதவீதம், ஆட்டிம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சதவீதம், அனைத்து மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு ஒரு சதவீதம் என மொத்தம் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு,26.6.25

சமூகநீதி அமைப்புகள் இதற்காகக் குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம்! (உச்சநீதிமன்ற பணிகளில் இட ஒதுக்கீடு)

 


உச்சநீதிமன்ற பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடுக்கு

வழி செய்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் ஆணை வரவேற்கத்தக்கது!
உயர்நீதிமன்றங்களிலும் இம்முறை இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்!
எஸ்.சி., எஸ்.டி.,க்கு அளிக்கப்பட்டதைபோல பிற்படுத்தப்பட்டவர்களுக்கும்
உச்ச, உயர்நீதிமன்றங்களிலும் அரசமைப்புச் சட்டப்படி இட ஒதுக்கீடு அவசியம் தேவை!
தமிழர் தலைவர் ஆசிரியரின் சமூகநீதிக்கான அறிக்கை

உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது; இதில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வழி செய்யவேண்டும்; அதேபோல, உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும்; இதற்காக சமூகநீதி அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமூகநீதி பாய வேண்டிய முக்கியமான தளங்களில் முதன்மையானது உச்சநீதிமன்றம்; அதற்கடுத்தவை உயர்நீதிமன்றங்கள்.

ஆசிரியர் அறிக்கை

நீதிமன்றங்களிலும்
இட ஒதுக்கீடு!

நாமும் (திராவிடர் கழகம், தி.மு.க. போன்ற திராவிட இயக்கம்), முற்போக்கு கட்சிகளும், அமைப்புகளும், ராகுல் காந்தியின் முக்கிய பொறுப்பில் இயங்கும் இன்றைய இந்திய தேசிய காங்கிரசும், இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் இயக்கங்களும் சமூகநீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது – சற்று காலந்தாழ்த்தியாவது – பலன் அளித்து வருகிறது!

மக்கள் பிரதிநிதிகள் இயற்றும் சட்டங்களைச்  ‘செல்லும் அல்லது செல்லாது’ என்று தீர்ப்ப ளிக்கும் மேல்நிலையில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் உள்ளன!

‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான் முக்கியம்!

அங்கே பொறுப்பேற்கும் நீதிபதிகள் நிய மனங்களில் – ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்ற சமூகநீதி அடிப்படையிலும், பல நாள் பட்டினியால் வாடியவர்களான ‘பசியேப்பக்கா ரர்களுக்கு’ முன்னுரிமை, அஜீரணம் ஆகும்வரை ஏற்கெனவே விருந்தில் வயிறு முட்ட உண்டவர்களுக்கு அடுத்த வரிசை என்ற அடிப்படையிலும்தான் நியமனங்கள் அமையவேண்டும்.

தந்தை பெரியார், திராவிடர் இயக்கத்தின்  அடிநாதம் இதுவே ஆகும்!

இந்தத் தத்துவம் – டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அடிப்படை உரிமைகள் பகுதியில் ஒடுக்கப்பட்டோரை நியமனம் செய்யும்போது ‘Adequately’ என்ற சொல்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றவர்களோடு சமப்படுத்தும்வரை!

இலத்தீன் மூலச் சொல் Adequatus என்பதன் ஆங்கிலச் சொல்லான Adequate என்ற சொல்லின் பொருள் ‘Till it is equalized’ – ‘மற்றவர்களோடு சமப்படுத்தும் வகையில் அமையவேண்டும்’ என்பதுதான்.

நீதிபதிகள் நியமனங்களுக்குப் பரிந்து ரைக்கும் கொலிஜியத்தில் (Collegium) சமூகநீதி சில ஆண்டுகளுக்கு முன்தான் உச்சநீதிமன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பிருந்துதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொள்கை அளவில் வெளிப்படையாகவே ஏற்கப்பட்டது. (எடுத்துக்காட்டு, ஜஸ்டிஸ் மகாதேவன் அவர்களது நியமனப் பரிந்துரை).

வரவேற்கத்தக்கது!

இப்போது தலைமை நீதிபதியாகியுள்ள ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் அவர்கள், உச்சநீதி மன்றப் பணி நியம னங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தி ருப்பதை நாட்டின் சமூகநீதிப் போராளிகளின் சார்பாக வரவேற்கிறோம்.

ஆனால், இதில், OBC என்ற பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு உண்டு என்று விரிவுபடுத்தப்படுவதும் அவசியமாகும்.

மாண்பமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் இதனை உடனடியாகப் பரிசீலித்து ஆணை வழங்குவது அவசியமாகும்.

நீதிபதிகள் நியமனத்தில் இக்கொள்கையை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, அது செயலுக்கும் வந்துவிட்ட பிறகு, உச்சநீதிமன்றப் பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோ ருக்கும் அதைத் தருவது நியாயம்தானே!

எனவே, மாண்பமை தலைமை நீதிபதி அவர்கள், பணி நியமனத் தொடர்ச்சியில் விட்டுப் போனதையும் இணைத்தால், சமூகநீதி அனைவருக்கும் கிடைத்த வரலாறு முழுமை அடையும்.

நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு – பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தேவை!

மற்றொரு முக்கிய வேண்டுகோள் – உச்ச நீதிமன்றப் பணி நியமனங்களில் பின்பற்றப்படும் இதே நடைமுறை உயர்நீதிமன்றங்களிலும் பின்பற்றப்படல் வேண்டும்.

உயர்நீதிமன்றப் பணி நியமனங்களில் சமூகநீதி பின்பற்றப்படல் முக்கியமானதாகும். இதுவரை இருப்பதாகத் தெரியவில்லை.

சமூகநீதி அமைப்புகள், இயக்கங்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து, ஓரணியில் நின்று இந்த உரிமைக்குக் குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம்.

முதலில் ‘‘கணக்குத் திறந்தது’’போல  ஒரு புதிய அத்தியாயத்தினைத் தொடங்கிய தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் அவர்களின் உத்தரவு சமூகநீதிக்கான அமைதிப் புரட்சியாகும்! அவருக்கு நமது வாழ்த்துகளும், நன்றியும்!

அனைவரும் ஒருமித்து குரல் தருவதும், அவசரம், அவசியமாகும்!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
4.7.2025

 விடுதலை நாளேடு, July 4, 2025