போலி ஜாதிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய கருநாடக காவல்துறை தலைவரை இடமாற்றம் செய்ததால் அவர் பதவி விலகினார்.
கருநாடகாவில் காவல்துறையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனப்பிரிவினர் என போலியான சான்றிதழ்களை வாங்கி அதன் மூலம் நூற்றுக்கணக்கான காவலர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.
அவர்கள் மூலம் காவல்துறையில் பலகோடி ரூபாய் ஊழல் பணம் கைமாறி உள்ளது எனப் புகார் வந்தது. இதனை அடுத்து பல அதிகாரிகள் இந்தப் புகார் குறித்து விசாரிக்க ஆணையிட்டும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், காவல்துறை தலைவர்
பி.ரவீந்திரநாத் நேரடியாக தானே விசாரணையில் இறங்கினார். இதில் சமீபத்தில் காவல்துறையில் இட ஒதுக்கீட்டின் பிரிவில் சேர்ந்தவர்களில் 700 பேர்களின் சான்றிதழ்கள் போலியானவை என்றும், சமூகத்தில் மிகவும் உயர்ந்த ஜாதி என்று கூறிக்கொள்ளும் சிலர் கூட தாழ்த்தப்பட்டோர் என சான்றிதழ் வாங்கி காவல்துறையில் சேர்ந்திருப்பதும் தெரிய வந்தது,
இது குறித்த முழு அறிக்கையை அவர் மாநில முதலமைச்சர் எஸ்.ஆர்.பொம்மையிடம் சமர்ப்பித்தார். ஆனால் வியப்பிற்குரிய வகையில் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தாமல் காலத்தையும், தனது பதவிக்கான கண்ணியத்தையும் காக்கத் தவறிவிட்டார் என்று கூறி மாநில அரசு அவருக்கான பல சலுகைகளை பறித்தது, முக்கியமாக அவருக்கு என்று பாதுகாப்பிற்கு இருக்கும் காவலர்களை வேறு பணிக்குச் செல்ல உத்தரவிட்டு, அவரது பாதுகாப்பிற்கு காவலர்களையும் நியமிக்காமல் விட்டுவிட்டது, இந்த நிலையில் அவரை காவலர் பயிற்சிப்பள்ளியில் மேற்பார்வையாளர் பணிக்கு அனுப்பியது. மிகவும் உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர் கிட்டத்தட்ட துணை ஆய்வாளர் நிலையில் பணியாற்ற கருநாடக அரசால் நிர்பந்திக்கப்பட்டார். அவர் இது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்தார். ஆனால் ஆளுநர் அரசுக்கு சாதகமாகவே நடந்து கொண்டார். இதனை அடுத்து அவர் தனது அய்.பி.எஸ். பதவியிலிருந்து விலகினார். இது தொடர்பாக கருநாடக மாநில தலைமைச் செயலாளர் ரவிக்குமாருக்கு அவர் அனுப்பிய பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
“நான் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் எனப் போலியாக சான்றிதழ்களைப் பெற்று காவல் துறையில் சேர்ந்தவர்கள் குறித்து விசாரணை நடத்த தனிக் குழு ஒன்றை நியமிக்கக் கோரியிருந்தேன், போலிச்சான்றிதழ்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் காவல்துறையில் ஊடுருவி உள்ளனர். இவர்களால் எப்படி நேர்மையாக காவலர்களுக்கான சேவையை மக்களுக்குக் கொடுக்க முடியும்?
ஆனால் அரசு அக்குழுவை அமைக்க முன்வர வில்லை. நானே நேரடியாக விசாரணை செய்து 500க்கும் மேற்பட்ட போலிச்சான்றிதழ்கள் தொடர்பான சான்றுகளை அரசின் பார்வைக்கு அனுப்பினேன். அச்சான்றுகளை ஆய்வு செய்து குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக என்னை அதிகாரமில்லாத பதவிக்கு மாற்றம் செய்தனர். இந்த நிலையில் நான் இந்தப்பதவியில் தொடர முடியாது" என்று பதவிவிலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் "ரூ.1200 கோடி அல்லது அதற்கு அதிகமாக கொடுத்தால் கருநாடக முதலமைச்சராக டில்லி மேலிடம் நியமிக்கும்" என்று பாஜகவின் மேனாள் அமைச்சர், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் மாநில காவல்துறை தலைவர் தனது கீழ் உள்ள காவல்துறையில் பல கோடிகள் ஊழல் கைமாறி போலிச்சான்றிதழ்களைப் பெற்று பணி பெற்றது பற்றிய சான்றுகளோடு புகாரினை சமர்ப்பித்த அவரையே இடமாற்றல் செய்ததைப் பார்க்கையில் கருநாடக சட்டமன்ற உறுப்பினர் கூறியது உண்மையாக இருக்கும் என்றுதான் தெரியவந்துள்ளது.
பிஜேபி ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஊழல், மோசடிகள் என்னும் விரியன் குட்டிகள் பின்னிப் பிணைந்து புதர்களிலிருந்து சாரை சாரையாக பவனி வந்து கொண்டுள்ளன.
பட்டியலின மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பணிகளை, பட்டியலினத்தவர் எனப் போலிச் சான்றிதழ் பெற்று பிற ஜாதியினர் அபகரிப்பது எந்த வகையைச் சார்ந்தது?
இதுதான் ராம ராஜ்யமோ - இந்து ராஜ்யமோ! கருநாடக மாநிலத்தில் உள்ள அனைத்து சக்திகளும் ஒன்று திரண்டு எதிர்வினை ஆற்றிட வேண்டும். இல்லையெனில் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் இழப்புகளை ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும்!