10% ஆதரவுப் பேர் வழிகள் - பதில் சொல்லுவார்களா?
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
ஆரம்பம் முதலே இட ஒதுக்கீட்டுக்கு இடையூறு செய்யும் கூட்டம் ஆரியக் கூட்டம்.
எல்லாம் எங்களுக்கே என்று முழுச் சுளையை விழுங்கும் முதலைகள் ஆயிற்றே. மற்றவர்களுக்கும் பங்கு போகிறது என்றவுடன் மார்பில் ரத்தம் வடிய அடித்துக் கொண்டவர்கள்.
1928ஆம் ஆண்டு முதல் சென்னை மாநிலத்தில் இருந்து வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ‘சுதந்திர' இந்தியாவில் சுடுகாட்டுக்கு அனுப்பியவர்கள் அல்லவா!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்துகளுக்கு எதிரானது சென்னை மாநில இடஒதுக்கீடு என்று கூறி வழக்குத் தொடுத்த வன்கணாளர்கள் ஆயிற்றே!
இதில் ஒரு வெட்கக் கேடு என்ன தெரியுமா? அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உறுப்பினராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே, இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக வாதாடினார் என்பதுதான்.
கவர்னர் ஜெனரலாக இருந்த ஆச்சாரியார் (ராஜாஜி) மாநில முதல் அமைச்சர் ஆகவில்லையா?
நியதியாவது வெங்காயமாவது இந்த நீரோ கூட்டத்துக்கு!
இதில் மேலும் ஒரு பித்தலாட்டம் என்ன தெரியுமா?
சென்னை மாநிலத்தில் நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடுத்தவர் செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பனர்.
"தான் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் சென்னை மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு ஆணையால் தனக்கு இடம் கிடைக்கவில்லை என்றும், சென்னை மாநிலத்தில் உள்ள இந்த ஆணை இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதும்தான்" வழக்கு! உண்மை என்ன தெரியுமா? இந்தப் பார்ப்பனப் பெண் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பமே போடவில்லை என்ற குட்டு உடைந்தது உச்ச நீதிமன்ற விசாரணையின்போது!
உச்சிக்குடுமி மன்றமாயிற்றே! அதெல்லாம் நீங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போதே கண்டு கொண்டு இருக்க வேண்டும் என்று கூறி, அந்தப் பார்ப்பனப் பெண்ணின் வழக்கை ஏற்று, சென்னை மாநில இடஒதுக்கீடு ஆணை செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. உச்சிக் குடுமி மன்றம் என்பதால் ஒழுக்கமும், «ந்ர்மையும், நீதியும் பூணூலுக்கு முன்னாலே முக்காடு போட்டு ஒளிந்து கொண்டு விட்டது.
எந்த அளவுக்கு நிலைமை பார்ப்பனத் திமிர் பிடித்து நிமிர்ந்து நின்றது என்றால், மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமாம். தந்தை பெரியார் குரல் கொடுத்து நீதிக்கட்சியைச் சேர்ந்த சென்னை மாநில பிரதம அமைச்சர் பனகல் அரசர் அல்லவா அந்தத் தடையைத் தகர்த்தெறிந்தார்.
இன்னொரு செய்தி தெரியுமா? சென்னை மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைச் சேர்க்க ஒரு தனி அரசாணையே பிறப்பிக்க வேண்டியிருந்தது. (அரசாணை எண் 636, நாள் 20.5.1922).
இந்த ஆணையையும் பிறப்பித்தது நீதிக்கட்சி ஆட்சி தான் - பனகல் அரசர் தான்.
சென்னை மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வந்த வகுப்பு வாரி உரிமை ஆணையை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகளுள் ஒருவரான விஸ்வநாத சாஸ்திரி திறந்த நீதி மன்றத்தில் திருவாய் மலர்ந்து என்ன சொன்னார் தெரியுமா?
‘தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற அவர்களுக் கென்று தனிக் கல்லூரிகளைத் திறக்கலாமே?‘ என்று நையாண்டி கேலி செய்தார்.
பார்ப்பனர்களைப் பொறுத்தவரை இப்போதைய 10% இடஒதுக்கீடு வரை பற்பல முகமூடிகளில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அன்று 1950இல் சமூக நீதியின் தலையில் இடி விழுந்த நிலையில், நீதிமன்றத்தை எதிர்த்து வீதிமன் றத்தில் இறங்கி போர் சங்கு ஊதினார் தந்தை பெரியார்.
மாணவர்களும் கல்வி நிறுவனங்களைப் புறக்கணித்தனர். திருச்சியில் வகுப்புரிமை மாநாட்டை அவசரமாகக் கூட்டினார் சமூக நீதியின் தந்தையான பெரியார் (3.12.1950).
நாடெங்கும் வகுப்புரிமை நாள் (14.9.1950) கொண்டாடுவீர் என்றார்.
இந்தத் திருத்தத்துக்கு அவசிய - அவசர காரணம் சென்னை மாநிலத்தில் நடந்துவரும் மக்கள் போராட் டமே என்று பிரதமர் நேருவே நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டு பேசினாரே! (29.5.1951).
உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறி இருக்கலாம். அன்று 1950இல் வீதிமன்றமே மக்கள் கிளர்ச்சி என்னும் எரிமலை வீச்சுக்கு முன் பணியவில்லையா?
இறுதி வெற்றி வீதிமன்றத்துக்கே கிடைத்தது. முதல் சட்ட திருத்தம் என்பது அதுதான்.
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்றுதானே இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது (15(4), 16(4)).
பொருளாதாரம் என்ற அளவுகோல் மெத்த படித்த அண்ணல் அம்பேத்கருக்கும், ஜவகர்லால் நேருகளுக்கும் தெரியாதா?
பொருளாதார நிலை அடிக்கடி மாறக்கூடிய எலாஸ்டிக் தன்மை கொண்டதாயிற்றே! சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தள்ளப்பட்டது எவ்வளவு காலமாக?
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்லவே! உயர்ஜாதியில் ஏழைகள் இருந்தால் பொருளாதார உதவிகளைத் தாராளமாகச் செய்யட்டுமே - யார் வேண்டாம் என்று குறுக்கே நின்றது?
அப்படிப் பார்த்தாலும், பொருளாதாரத்தில் நலிந்த நிலை என்பது உயர் ஜாதியாரிடத்தில் மட்டும்தான் இருக்கிறதா? எல்லா ஜாதிகளிலும் தான் இருக்கிறார்கள். பொருளாதாரத்தில் கூட வருணப் பார்வையா? வர்க்கத்திற்கு வருணமா?
உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு தேவை என்று யார் கேட்டார்கள்?
இடஒதுக்கீட்டின் தத்துவத்தையே, அதன் ஆணிவேரையை வெட்டி வீழ்த்த பார்ப்பன மூளை என்ற எந்திரம் வேலை செய்திருக்கிறது என்று கருத எல்லா வகையிலும் நியாயம் உண்டு.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கோ, பட்டியலின மக்களுக்கோ இடஒதுக்கீடு பிரச்சினை நீதிமன்றத்தில் வழக்காக வரும்போது நீதிபதிகள் கேட்கும் முதல் வினா என்ன தெரியுமா?
தரவுகள் என்ன? புள்ளி விவரங்கள் உள்ளனவா? என்று கேட்கும் உச்சநீதிமன்றம் உயர்ஜாதி ஏழை களுக்கு (EWS) 10% இடஒதுக்கீடு என்று வரும்போது மூச்சு விடவில்லையே ஏன்?
எவ்வளவு அவசர அவசரமாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு செயல்பாட்டுக்கும் வந்திருக்கிறது!
2019 ஜனவரி 8 அன்று 10% இடஒதுக்கீடு தொடர் பான (EWS) 103ஆம் அரசமைப்புச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றம்.
மறுநாளே (9.1.2019) அவசர அவசரமாக மாநிலங் களவையில் நிறைவேற்றவும், மூன்று நாட்களுக்குள் (12.1.2019) குடியரசு தலைவரின் ஒப்பம்; உடனடியாக செயல்பாட்டுக்கும் வந்து விட்டது.
இந்த சுனாமி வேகம் அக்கறை வேறு எந்தப் பிரச்சினையிலாவது இதற்கு முன் இருந்தது உண்டா?
சங்பரிவார்களா கொக்கா! ஹிந்து ராஜ்ஜியத்தில் என்ன நடக்குமோ அது நடக்கிறது - ஆம், நடந்தே விட்டது!
மற்றொரு முக்கிய பிரச்சினை! பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள உயர்ஜாதியினர் சமூக நிலையிலும், கல்வி நிலையிலும் பின்னிலையில் இருக்கிறார்களா? இந்த சட்டத்திலும், தீர்ப்பிலும் பார்க்கப்படவேண்டிய இடம் இந்த இடம்தானே!
உண்மை நிலை என்ன? புள்ளி விவரங்கள் என்ன? கூறுகின்றன. முகத்தில் அறைந்தது போல இதோ கலவரமான நிலவரம்!
தலைமை பதவிகளில்
பார்ப்பன ஆதிக்கம்!
1 - குடியரசுத் தலைவர் செயலகத்தின்
மொத்த பதவிகள் - 49.
பார்ப்பனர்கள் - 39,
SC/ST- 4, OBC - 06.
2 - குடியரசுத் துணைத் தலைவர் செயலக பதவிகள் - 7.
பார்ப்பனர்கள் - 7,
SC/ST - 00, OBC - 00.
3. கேபினட் செயலாளர் பதவிகள் - 20.
பார்ப்பனர்கள் - 17,
SC/ST - 01, OBC - 02.
4 - பிரதமரின் அலுவலகத்தில்
மொத்த பதவிகள் - 35.
பா£ர்ப்பனர்கள் -31,
SC/ST - 02, OBC - 02.
5. விவசாயத் திணைக்களத்தின்
மொத்த பதவிகள் - 274.
பார்ப்பனர்கள் - 259,
SC/ST - 05, OBC - 10.
6. பாதுகாப்பு அமைச்சக பதவிகள் - 1379.
பார்ப்பனர்கள் - 1300,
SC/ST- 48, OBC - 31.
7 - சமூக நல & சுகாதார அமைச்சகத்தின் மொத்த பதவிகள் - 209.
பார்ப்பனர்கள் - 132,
SC/ST - 17, OBC - 60.
8 - நிதி அமைச்சகத்தின்
மொத்த பதவிகள் - 1008.
பார்ப்பனர்கள் - 942,
SC/ST - 20, OBC - 46.
9 - பிளானட் அமைச்சகத்தில் பதவிகள் மொத்தம் - 409.
பார்ப்பனர்கள் - 327,
SC/ST - 19, OBC - 63.
10 - தொழில் அமைச்சகத்தின்
மொத்த பதவிகள் - 74.
பார்ப்பனர்கள் - 59,
SC/ST - 5, OBC - 10.
11 - கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த பதவிகள் - 121. பார்ப்பனர்கள் - 99,
SC/ST - 00, OBC - 22.
12 - கவர்னர் மற்றும் லெப்டினன்ட்
கவர்னர் ஒட்டுமொத்தம் - 27.
பார்ப்பனர்கள் - 25.
SC/ST- 00, OBC - 2.
13 - வெளிநாட்டில்
வாழ்ந்து வரும் இந்திய தூதர்கள் - 140.
பார்ப்பனர்கள் - 140,
SC/ST - 00, OBC - 00.
14 - ஒன்றிய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் - 108.
பார்ப்பனர்கள் - 100,
SC/ST - 03, OBC - 05.
15 - மத்திய பொதுச் செயலாளர்
பதவிகள் - 26.
பார்ப்பனர்கள் - 18,
SC/ST - 01, OBC - 7.
16 - உயர் நீதிமன்ற நீதிபதிகள் - 330.
பார்ப்பனர்கள் - 306,
SC/ST - 04, OBC -20.
17 - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் - 26.
பார்ப்பனர்கள் - 23,
SC/ST - 01, OBC - 02.
18 - மொத்த I.A.S. அதிகாரிகள் - 3600.
பார்ப்பனர்கள் - 2750,
SC/ST - 300, OBC - 550,
நாட்டின் மக்கள் தொகையில்
3% க்கும் குறைவான பார்ப்பனர்கள்
எவ்வாறு 90% பதவிகளைப் பெற்றனர்?
கடவுள் மதத்தின் பெயரிலா ?
மூட நம்பிக்கையின் பெயரிலா ?
அதை யோசியுங்கள்...
3 விழுக்காடு பெரிதா 97 விழுக்காடு பெரிதா.?
(டில்லியினை அடிப்படையாகக் கொண்ட "யங் இந்தியா" எனப்படும் நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் பெற்றவை இத்தகவல்)
சென்னை அய்.அய்.டி.யில் பேராசிரியர் எண்ணிக்கை 596
பட்டியலினத்தவர் - 16 (2.7%)
பழங்குடியினர் 3 (0.5%)
பிற்படுத்தப்பட்டோர் 62 (10.4%)
(இந்துஸ்தான் டைம்ஸ், 30.6.2021).
மதுரை மக்களவை உறுப்பினர் திரு. சு.வெங்கடசேன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்காடியா தந்த தகவல் இது.
இந்தியாவில் உள்ள 23 அய்.அய்.டி.களில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 7186. இதில் பிற்படுத்தப்பட்டோர் 1635, பட்டியலின மக்கள் 707, பழங்குடியினர் 321, இவற்றுள் 21 அய்.அய்.டி.களில் ஒரே ஒரு பழங்குடியின மாணவர் கூட இல்லை (மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கூறிய தகவல்தான் இவை).
உயர்ஜாதிகளில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான சட்டம் 203 செயல்பாட்டுக்கு வந்த பின் ஏற்பட்ட விளைவு என்ன?
எடுத்துக்காட்டாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் எழுத்தர் தேர்வு முடிவுகளைப் பார்த்தாலே நம் நுரையீரல் எரிந்து விடும்.
பட்டியலின மக்களுக்கு கட் ஆஃப் மார்க் - 61.25%
பழங்குடியினருக்கு - 53.75%
பிற்படுத்தப்பட்டோருக்கு - 61.25%
பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கான (ணிகீஷி) கட் ஆஃப் மார்க் - 28.5%
உயர்ஜாதி ஏழைகள் 28.5% கட் ஆஃப் மதிப்பெண் பெற்றாலே ஸ்டேட் பாங்கில் வேலை கிடைக்கும்.
பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் அதே ஸ்டேட் பாங்கில் வேலை கிடைக்க வேண்டுமானால் அவர்கள் பெற வேண்டிய கட் ஆஃப் மார்க் 61.25%, பழங்குடியின மக்களுக்கு இடம் கிடைக்க வேண்டுமானால் அவர்களுக்கான கட் ஆஃப் மார்க் 53.75%
இந்தக் கொடுமையைக் கண்டு கொதிக்காமல் இருக்க முடியுமா?
இடஒதுக்கீட்டில் புகுத்தப்பட்டுள்ள இந்தப் பொருளாதார அளவு கோல் ஒட்டுமொத்தமாக எல்லாப் பிரிவினரின் இடஒதுக்கீட்டின் அளவு கோலையும் சவக்குழி வெட்டிப் புதைக்கும் ஆரியப் பார்ப்பனர்களின் - அவர்களுக்கே உரித்தான முதற்கட்ட சூழ்ச்சி!
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோர் என்று சொல்லி கடந்து சென்றுவிட முடியாது.
விழிப்பான காலம் என்று நாம் சொல்லிக் கொண்டு இருக்கிறோமே - இப்பொழுதே கூட நம் துடையில் கயிறு திரித்து விட்டார்களே!
நாம் என்ன செய்யப் போகிறோம்! இதுதான் இப்போது நம் முன் உள்ள கேள்வி.
திராவிடர் கழகம் வறிதே இருக்காது.
‘வரிப்புலியாய்‘ மாறும் - மக்களிடத்திலே எழுச்சியை உண்டாக்கும், ‘திராவிட மாடல் அரசு' தீவிர நடவடிக்கைகளில் இறங்கும். ஒரு பக்கம் நீதித்துறை - இன்னொரு பக்கம் வீதிமன்றம் - தயாராகுவீர் ஒடுக்கப்பட்டோரே!
பட்டியலின மக்களும் பிற்படுத்தபட்ட மக்களும் இந்துக்களே என்று ஒரு பக்கத்தில் கூவிக் கூவி அழைத்துக் கொண்டே - அவர்களை ஆதிக்கப்புரியினரான பார்ப்பனர்களின் சங்கமான சங்பரிவார்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு சவக்குழி பறித்துப் புதைக்கிறார்கள்.
புலியாக எழுவோம்
புரட்டிப் போடுவோம்
பொல்லா மனிதர்களின்
மெகா சுரண்டலை!
குறிப்பு: 1950க்கும் 1977க்கும் இடையில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் 50 பேர்களில் பார்ப்பனர்கள் 48 பேர்கள். (டாக்டர் மு.நாகநாதன் முரசொலியில்)
இப்பொழுது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர் ஒருவர்கூட இல்லை.
நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தால் எப்படி?