பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் வெறும் 4 விழுக்காடுதானா?
புதுடில்லி, ஆக.3- நாடாளுமன்றத்தில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் அளித்த பதிலில், ஒன்றிய அரசின்கீழ் இயங்கிவரும் மத்திய பல்கலைக்கழகங்கள் 45 இல் பேராசிரியர்கள் பணியிடங்களில் வெறும் 4 விழுக்காடு மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மண்டல் குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன்படி ஒன்றிய அரசின் துறைகளில் பணிவாய்ப்புகளில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால், வெறும் 4 விழுக்காட்டளவில் மட்டுமே பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. மேலும், கூடுதல் பேராசிரியர் பணியிடங்களில் 6 விழுக்காடு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநில நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் குமார் சிங்காரி எழுப்பிய கேள்வியில் ஒன்றிய அரசின் கீழ் இயங்கிவரும் மத்திய பல்கலைக்கழகப் பணியிடங்களில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை அளிக்குமாறு கோரினார் அதற்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் வெளியிட்ட தகவலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி யுள்ளது.
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்கள் 45இல் துணை வேந்தர்கள் பணியிடங்களில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வர்கள் 5 பேர் மட்டுமே உள்ளனர்.
மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் கூடுதல் பேராசிரி யர்களுக்கான பணியிடங்களில் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கையைவிடவும் குறைவாகவே பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளது. பேராசிரியர்கள் பணியிடங்களில் பொதுப்பிரிவில் 85 விழுக்காடும், கூடுதல் பேராசிரியர் பணியிடங்களில் பொதுப்பிரிவில் 82 விழுக்காடும் உள்ளனர்.
பேராசிரியர்களுக்கான மொத்த பணியிடங்கள் 1341இல் பொதுப்பிரிவில் 1146, தாழ்த்தப்பட்டோர் (SC)96, பழங்குடியினர்(ST) 22, பிற்படுத்தப்பட்டவர்கள்(OBC) 60, பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதியினர் (EWS) 3, மாற்றுத் திறனாளிகள் (PWD) பிரிவில் 14 ஆக உள்ளது.
கூடுதல் பேராசிரியர்களுக்கான மொத்த பணியிடங்கள் 2,817, பொதுப்பிரிவில் 2,304, தாழ்த்தப்பட்டோர்ர் (SC)231, பழங்குடியினர்(ST) 69, பிற்படுத்தப் பட்டவர்கள்(OBC) 187, பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதியினர் (EWS) 7, மாற்றுத் திறனாளிகள் (PWD) பிரிவில் 19 ஆக உள்ளது.
உதவிப் பேராசிரியர்களுக்கான மொத்த பணியிடங்கள் 10,098, பொதுப்பிரிவில் 8,734, பட்டியலினத்தவர் (SC)1,421, பழங்குடியினர் (ST) 625, பிற்படுத்தப் பட்டவர்கள்(OBC) 1,901, பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதியினர் (EWS) 192, மாற்றுத் திறனாளிகள் (PWD) பிரிவில் 225 ஆக உள்ளது.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன் கூறுகையில், தேசிய அளவில் அரசுப்பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான காலியிடங்கள்குறித்து தனியே ஆய்வு செய்யப்பட வேண்டும். அதன்மூலம் நாடுமுழுவதுமிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து தகுதியான பேராசிரியர்கள் வரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அதேபோல், துணைவேந்தர்களாக நியமனம் பெறவும் தகுதியான போராசிரியர்கள் குறித்த தகவல்களும் திரட்டப்பட வேண்டும் என்றார்.
உதவிப்பேராசிரியர்கள் நியமனங்களில் பொதுப்பிரிவில் 59 விழுக்காடாக உள்ள நிலையில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 18 விழுக்காடாக எண்ணிக்கை உள்ளது. ஆனாலும் இடஒதுக்கீட்டில் இன்னமும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பணிநியமனங்களில் 27 விழுக்காடு முழுமை அடையவேண்டியதாகவே உள்ளது.
ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் பொதுப்பிரிவில் 70 விழுக்காடாக உள்ள நிலையில், பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 12 விழுக்காடாக உள்ளது.
கிரீமிலேயர் முறை நீக்கப்பட வேண்டும்
அகில இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி கூறுகையில்,
மத்திய பல்கலைக்கழகங்களுக்கு தகுதியான பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிரீமிலேயர் முறையால் விண்ணப்பிக்கக்கூட முடியாத நிலை உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிருமி லேயர் முறையில் ஆண்டு வருவாய் வரம்பு ரூ.8 லட்சம் என்பதை ரூ.15 லட்சமாக அதிகரித்திட வேண்டும். குறைந்த வருவாய் வரம்பின்மூலம் அரசுப்பணியில் உள்ளவர்களின் பிள்ளைகள் விண்ணப்பிப்பதையே தடுக்கும் நிலை உள்ளது. கிரீமிலேயர் முறையே முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்றார்.