பக்கங்கள்

சனி, 29 ஜூன், 2024

டில்லியில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாநாடு

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (335)

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் மார்ச் 16-31, 2024

டில்லியில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாநாடு

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள், சிறுபான்மையர் ஆகியோரின் தேசிய ஒன்றியம் நடத்திய மாநாடு 2004, டிசம்பர் 9இல் காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மிகச் சிறப்பாக டில்லி மல்கோத்ரா மைதானத்தில் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்

மாநாட்டிற்கு மேனாள் மத்திய கல்வி அமைச்சர் டி.பி. யாதவ் தலைமை வகித்தார். கருநாடகத்தில் இருந்து திரு.லட்சுமி சாகர், திருமதி இந்திரா ஜெயராமன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திருமதி டாக்டர் சாந்த்வானா அலு மற்றும் கப்பாஸ், தமிழ்நாட்டில் இருந்து சுப. சீதாராமன், கழகப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு, ஆந்திராவில் இருந்து ஜெய்பால், அரியானாவில் இருந்து சாந்த், உ.பி. மாநிலத்தில் இருந்து முகமது அப்துல்லா, ஹீராலால், மோதிலால் சாஸ்திரி, கேரளாவில் இருந்து ராமதாஸ் கதிரூர் முதலியவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

வாய்ப்பு மறுக்கப்பட்டோர், சமூகநீதிப் போராட்டத்தை மற்றொரு விடுதலைப் போராட்டத்தைப் போல் நடத்தவேண்டும் என்றனர்.
கூடியிருந்தவர்களில் கணிசமான ஒரு பகுதி மகளிர் ஆவர்.

இந்த மாநாடு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லுவோம் என்ற முழக்கத்துடன் நடைபெற்ற மாநாடு.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. அரசுப் பணிகளில் தற்போது அளிக்கப்பட்டு வரும் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அளவு தற்போதைய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி சிறுபான்மை மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்தப்பட வேண்டும்.

2. மக்கள் தொகைக்கு ஏற்ற கல்வி வாய்ப்பு பெற, உயர் கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்வி
நிலையங்களின் மாணவர் சேர்க்கையிலும் இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மாநாட்டில் தலைவர்களுடன் ஆசிரியர்

3. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீடு முறை அரசுத்துறை, தனியார்துறை, மின்னணுவியல் துறை, பத்திரிகைச் செய்தித்துறை அமைப்புகள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

4. தாழ்த்தப்பட்ட பழங்குடி, மக்கள் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள அதே அரசமைப்புச் சட்ட அந்தஸ்து பிற்படுத்தப்பட்ட மக்கள் கமிஷனுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

5. ராணுவத் துறை, மத்திய மாநில அரசுகளின் போலீஸ் மற்றும் பாதுகாப்புத் துறை நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளும் இடஒதுக்கீட்டு முறைப்படி செய்யப்பட வேண்டும்.

6. நகராட்சி, பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முறையில் உள்ளாட்சி மன்றங்களில் உள்ளதைப் போல, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் தொகைக்கு ஏற்றவாறு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

7. அமைச்சர்கள், ஆளுநர்கள், அயல்நாட்டுத் தூதர்கள், ஹை-கமிஷனர்கள், கமிஷன்களின் உறுப்பினர்கள், அரசுக் கழகங்களின் உறுப்பினர்கள் ஆகிய நியமனங்களிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
8. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி சிறுபான்மை மக்கள் தங்கள் மக்கள்தொகைக்கேற்ப முன்னேற்றத்தை எட்டும் வரை, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்னும் ‘கிரீமிலேயர்’ கொள்கை நடைமுறைப்படுத்தப்படக் கூடாது.

9. பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் கமிஷனின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கட்டாயமாக இந்தப் பிரிவு மக்களிலிருந்தே நியமிக்கப்பட வேண்டும்.

10. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீட்டு முறையின்படி பொது மற்றும் தனியார் நிறுவன நியமனங்கள் மற்றும் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரையிலான உறுப்பினர்களில் 50 விழுக்காடு பெண்களுக்குச் சட்டப்படி அளிக்கப்பட வேண்டும்.

11. உயர்நீதி மன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்ய தேசிய நீதிக்கமிஷன் ஒன்று அமைக்கப்படவேண்டும். இந்தக் கமிஷன் உறுப்பினர் நியமனத்திலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கான பிரதிநிதித்துவம் இருப்பது உறுதிப்படுத்தப்படவேண்டும்.

12. சட்ட அதிகாரிகள், சட்ட ஆலோசகர்கள், பொதுத்துறை, தனியார் துறைகளில் அரசு வழக்குரைஞர்கள் (ஸ்டாண்டிங் கவுன்சில்) நியமனங்களிலும் இடஒதுக்கீடுச் சட்டம் உடனடியாகப் பின்பற்றப்பட வேண்டும்.

13. இடஒதுக்கீடு முறையை சரியாக நடைமுறைப்படுத்துவோருக்குப் பதவி உயர்வும், தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் தகுந்த ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.

14. சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களின் நல்வாழ்விற்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்கள் பற்றி பத்திரிகைச் செய்தி, தொலைக்காட்சித் துறைகள் மூலமாகப் பரவலாக விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

15. 2005ஆம் ஆண்டில் ஜாதிகளின் அடிப்படையில் தனி மக்கள் தொகைக் கணக்கீடு ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.

16. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

17. பல்கலைக் கழக மான்யக் குழுத் தலைவர் உதவித் தலைவர் பணியிடங்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். தலைவர் மற்றும் உதவித் தலைவர் பணியிடங்கள் இந்தப் பிரிவு மக்களைக் கொண்டே கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும்.

18. மேற்கண்ட பிரிவுகளிலான இடஒதுக்கீட்டு முறையைப் பாதுகாக்க, ஓர் ஒருங்கிணைந்த சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும்.

ஆகிய 18 கோரிக்கைகளை மாநாட்டின் தீர்மானங்களாக நாம் முன்மொழிந்தோம். அதை கூடியிருந்த அனைவரும் கைகளை உயர்த்தி ஒரு முறை, பலத்த கைதட்டல் மூலம் (மற்றொரு முறை என்று) ஒரு மனதாக நிறைவேற்றினர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்ய ஒரு குழுவும் ஆயத்தமாகி பல்வேறு மாநிலங்களிலும் மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சமூக நீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித், கருநாடக மகளிர் சார்பில் திருமதி ஜெயராமன், மாநாட்டுத் தலைவரும் நேஷனல் யூனியன் தலைவருமான மேனாள் எம்.பி. டி.பி. யாதவ் ஆகியோர் வழிமொழிந்தும் விளக்கியும் பேசினர்.

“நிறைவாக எமது உரையில், “உரைகள் நிகழ்த்தும் காலம் இனிமேல் முக்கியமல்ல, செயல்தான் முக்கியம். இடஒதுக்கீடு இரக்கத்தால் பெறுவது அல்ல; அது சமத்துவத்துக்கான உரிமை ஆகும். அதைப் பெறும் வகையில் ஆட்சியாளர்களைச் செயல்பட வைக்கவேண்டும்” என்று வலியுறுத்தினோம்.
அதற்குப் பின்பு சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின் சார்பில் விண்ணப்பம் ஒன்றை மத்திய அரசுக்கு அளிக்க நாடாளுமன்றம் நோக்கிச் சென்றபொழுது, அது தடை செய்யப்பட்டது. தடையை மீறிச் செல்ல முயன்றதால், சந்திரஜித் ஆகியோர் தலைமையில் சுமார் 10,000 பேர் கைது செய்யப்பட்டோம்.
கழகத்தின் சார்பில் 30 தோழர்களும், தோழியர்களும் கைதாயினர். பின்பு மாலை 5 மணிக்கு அனைவருமே விடுதலை செய்யப்பட்டோம்.

( கட்டுரையின் ஒரு பகுதி)