கி.வீரமணி
பீகார் தந்த மிகப்பெரிய கொள்கைச் சிங்கம் அருமை நண்பர் இராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் வடபுலம் தந்த அருமையான சமூகநீதிப் போர்ப்படைத் தளபதிகளில் ஒருவர்!
மிக மிக எளிய குடும்பத்தில் பிறந்து, படித்துப் பட்டம் பெற்று, காவல்துறை பணிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டும், அரசியல் பொதுப் பணியே அந்த இளைஞரை ஈர்த்தது.
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முழுப் புரட்சி இயக்கத்தின் தாக்கம், ராம்மனோகர் லோகியாவின் ஜாதி மறுப்பு சமூக சமதர்மச் சிந்தனைகள் இவற்றைத் தாண்டி பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி லட்சியங்கள் இவற்றால் அரசியலுக்கு வந்தவர் - மிசாவில் சிறைக் கைதியாக இருந்தவர்.
பீகார் மாநிலத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வரலாற்றுக்கு உரியவர் என்பதோடு, அடுத்த தேர்தலில் முன்னிலும் அதிக வாக்குகள் வித்தியாசம் காட்டி தனது சாதனையை அவரே முறியடித்தவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற வெற்றி வீரர்.
32 வயதில் 33 முறை சிறைசென்ற கொள்கைப் போராளி. கம்பீரமான தோற்றம் - உயரத்திலும் வளர்ந்தவர் - கொள்கை லட்சியப் பயணங்களைப் போலவே!
மேடைகளில் ஏறினால், சிம்ம கர்ச்சனை அவரது தாய் மொழி பீகாரி ஹிந்தியில்!
நாடாளுமன்றத்தில் 8 முறை வெற்றி பெற்று முத்திரைப் பதித்த முதிர்ச்சியாளர்.
தந்தை பெரியார்மீதும், தமிழ்நாட்டின் திராவிடர் இயக்கத்தின்மீதும், நம்மீதும் தணியாத நட்பை உறவாகக் கொண்ட உண்மை நண்பர். கலைஞரின் உற்ற நண்பர்.
கொள்கையால் பூத்த நட்பு
1980 முதல் அவர் நமக்கு அறிமுகமானவர். வடபுலத்தின் மூத்த சமூகநீதிப் போராளித் தலைவர் சந்திரஜித் (யாதவ்) அவர்கள்தான் நண்பர் இராம்விலாஸ் பஸ்வானை எனக்கு புதுடில்லியில் நாடாளுமன்ற வளாகத்திலும், பிறகு அவரது இல்லத்து (நார்த் அவென்யூ) விருந்திலும் அறிமுகம் செய்து நட்புறவுப் பாலம் அமைத்துத் தந்தவர்!
9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு ஆணையை பிற்படுத்தப்பட்டோர்மீது சுமத்திய எம்.ஜி.ஆர். அரசின் ஆணையை எதிர்த்துப் போராடி நாம் வெற்றி பெற்ற பிறகு (தி.க., தி.மு.க, சி.பி.அய். இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சில காங்கிரஸ், ஜனதா தள நண்பர்கள் ஓர் அணியாக ஓராண்டு தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் பயன் விளைச்சல் அது) 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை நீக்கியதோடு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தி, 68 சதவிகித இட ஒதுக்கீடாக்கி தமிழ்நாட்டில் வரலாறு படைத்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.
வகுப்புரிமை வரலாற்று ஆவணம்
இதனை பார்ப்பனர் பின்னணியில் இருந்து, பாதிக்கப்பட்டோர் Oppressed Community சார்பில் என்று ஓய்வு பெற்ற சைவப் பிள்ளைமார் ஜாதியை சார்ந்த மார்த்தாண்டம் (பிள்ளை) உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டபோது, நாமும் அதில் இணைத்து அவர்களைக் கொண்டு (தமிழக அரசுடன்) வாதாடிய நிலையில்தான் உச்சநீதிமன்ற ஆணைப்படி இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷனை அன்றைய எம்.ஜி.ஆர். அரசு 1980-81 இல் பிற்படுத்தப்பட்ட (வன்னியர்) சமூகத்தைச் சேர்ந்தவரான அம்பாசங்கர் அய்.ஏ.எஸ். தலைமையில் உச்சநீதிமன்ற ஆணைப்படி நியமித்தது. உச்சநீதிமன்றத்தில் நம் சார்பில் திராவிடர் கழகம் சார்பில்) வாதாட ஆர்.கே.கார்க் என்ற மூத்த வழக்குரைஞரை ஏற்பாடு செய்திருந்தோம். அவர் தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டு வரலாறு தனிப்பெரும் வரலாறு ஆனபடியால் அதை விளக்கிக் குறிப்புகள் அடங்கிய ஓர் ஆவணத்தை ஆங்கிலத்தில் தயாரித்துக் கொடுக்குமாறு நம்மைக் கெட்டுக் கொண்டார். அதற்கிணங்க வகுப்புரிமை வரலாற்றை ஓர் ஆவணமாக்கி- ஆங்கிலத்தில் தந்தோம் - பிறகு அதனை விரிவாக்கி ஆங்கில நூலாகவும் அச்சிட்டுப் பரப்பினோம்.
இதை டில்லி சென்று சந்திரஜித் யாதவ் அவர்களைச் சந்தித்த தி.மு.க. பிரமுகரும், நமது நண்பருமான பாளை சீத்தாராமன் அவர்கள் தந்தார். அதைப் படித்துச் சுவைத்து, நாடாளுமன்ற விவாதத்திலேயே இந்த நூலைப்பற்றியும் கூறி, பதிவு செய்துள்ளார்.
நான் டில்லி சென்று அவருக்கு அறிமுகமாகி நண்பரான நிலையில், எங்கள் நட்பு விரிந்தது - கொள்கை அடிப்படையில்! - அவருடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சமூகநீதி, இட ஒதுக்கீடு பிரச்சினையில் நெருக்கமானவர் நண்பர் இராம்விலாஸ் பஸ்வான்.
நாங்கள் அடுத்தமுறை டில்லி சென்றபோதுதான், அவர்மூலம் மேலே சுட்டிய நட்புறவு தொடங்கியது!
தந்தை பெரியாரின் சமூகப்புரட்சி கருத்துப் புத்தகங் களைத் தந்தோம். ஆர்வமாகப் படித்து உள்வாங்கி மிகுந்த ஈடுபாடு கொண்டார் நண்பர் பஸ்வான்.
தமிழ்நாட்டோர் ரசித்த இந்திப் பேச்சு
அவரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து, இந்த ‘‘Fire Brand Young Leader’’ என்று அறிமுகப்படுத்த வாய்ப்பைப் பெற்றோம்.
அதன் பிறகு பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடு தமிழ்நாட்டின் நடுநாயகமான திருச்சி மாநகரில் நடைபெற்றது. அதில் அவர் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டார். அம்மாநாட்டில் கலைஞர் டில்லி செல்வதற்காக அப்போதுதான் முன்கூட்டியே பேசி விடை பெற்றார். திரு.இராம்விலாஸ் பஸ்வானை நாங்கள் அறிமுகம் செய்து வைத்தோம். அவரும் மிகப் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அம்மாநாட்டில் நண்பர் இராம்விலாஸ் பஸ்வானின் கொள்கை முழக்கம் இரவு ஒரு மணி 2 - மணிவரை தொடர்ந்தது. ஹிந்தியில் அமைந்த அவரது எழுச்சி உரையை - தோழர் தலித் எழில்மலை தமிழில் மொழி பெயர்த்தார்!
துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டாக்களாக அவரது உரை வீச்சு முழக்கங்கள் அமைந்தன! இளைஞர் பட்டாளத்தை வெகுவாகக் கவர்ந்தது மட்டுமல்ல - சுயமரியாதை வீரர் மன்னை ப.நாராயணசாமி அவர்கள் பிரமித்துப் பாராட்டி மகிழ்ந்து, பிறகு கலைஞரிடமும் அதுபற்றி சிலாகித்தார்!
‘‘இந்து தர்மம் என்பது மனித தர்மத்துக்கு எதிரானது. சமத்துவத்துக்கு எதிரானது. நாம் அந்தத் தர்மத்துடன் உடன்பாடு செய்து கொள்ள முடியாது.’’
‘‘ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பவர்களைக் கேட்கிறேன்; உனக்குத் துணிவிருந்தால் ஜாதிய அமைப்பைத் தகர்க்கத் தயாராக இருக்கிறாயா? ஜாதி இருக்கும்வரை ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருந்துதான் தீரும்; தீரவேண்டும்.’’
தமிழ்நாட்டிலே சூத்திரர்களின் ஆட்சி - தி.மு.க. ஆட்சி நடைபெற்றதே அந்த ஆட்சியில் என்ன குறை இருந்தது? சிறப்பாகத்தான் அந்த ஆட்சி நடைபெற்றது?
திராவிடர் கழகத் தோழர்களே, அந்த உரிமைப் பணியை துரிதப்படுத்துங்கள்! எதிர்வரும் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து எறியுங்கள்! உங்களால் அது முடியும்!” - இப்படி அடுக்கடுக்காக வாதங்களை வைத்து முழங்கியது ஓர் போர் முரசமாகியது!
ஹிந்தி எதிர்ப்புக்குப் பேர் போன தமிழ்நாட்டு மண்ணில் - ஒன்றரை மணிநேரம் ஹிந்தியில் பேசுவதை கைதட்டி வரவேற்ற நிலை மிகப்பெரிய ஆச்சரியத்தை உருவாக்கியது என்று அந்த நிகழ்ச்சிபற்றி பார்ப்பன நாளேடு ஒன்று குறிப்பிட்டிருந்தது என்றால், அதன் தாக்கம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்!
கருப்புச் சட்டைகளின் கட்டுப்பாடு கண்டு பெருமிதம் கொண்ட நண்பர் இராம்விலாஸ் பஸ்வான், அவரது மாநிலமான பீகாரில் வடபுல சுயமரியாதை இயக்கம் ஒன்று தொடங்கப்படவேண்டும் என்ற உணர்வால் உந்தப்பட்டார்!
மண்டலுக்கு முன்னெடுப்பு
மண்டல் அறிக்கையை வெளிப்படுத்த வடபுலத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்தோம். தமிழ்நாட்டிற்கு வடபுலத் தலைவர்கள் அனைவரையும் அழைத்து மாநாடு ஒன்றை பெரியார் திடலில் மாலையில் நடத்தவும்; காலையில், அகில இந்திய அளவில் திட்டமிட ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்தால் நல்லது என அவர்கள் விரும்பியதை அறிந்து, அந்த அழைப்பை ஏற்று திராவிடர் கழகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தோம்.
டில்லியின் முன்னாள் முதலமைச்சரும் பிரதமர் பண்டித நேருவின் நெருங்கிய ‘சகாவு’மான சவுத்திரி பிரம் பிரகாஷ் அவர்கள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பினை உருவாக்கி நடத்தினார். (National Union of Backward Classes) அதன் சார்பில் அனைவரையும் அழைத்ததோடு, தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களையும் ஒருங்கிணைத்தோம். ராம்விலாஸ் பஸ்வான், போலே பஸ்வான் சாஸ்திரி (முன்னாள் பீகார் முதல்வர்), கர்ப்பூரி தாகூர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர்கள் பலரும் வருகை தந்தனர். கலைஞரை முக்கியத் தலைமை விருந்தினராக அழைத்தோம்; அவர்கலந்துகொண்டு பெருமிதம் அடைந்தார்.
அன்றுதான் NUBC என்பதை NUBC and S.C., S.T.,, என்று விரிவாக்கப்பட்டது சென்னை பெரியார் திடலில் - திராவிடர் கழகத்தின் முயற்சி வெற்றி பெற்றது!
இராம்விலாஸ் பஸ்வான் இதுபோன்ற முயற்சிகளுக்கு மிகுந்த ஊக்கம் தந்து பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது!
பீகாரில் உணர்ச்சி வெள்ளம்
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பெரிய மைதானம் - காந்தி மைதானம். அங்கே பீகார் மாநில தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), மலைவாழ் பழங்குடி ஆதிவாசிகள் இணைந்து நடத்திய மாநாட்டில், என்னை சிறப்புப் பேச்சாளராக அழைத்து மகிழ்ந்த நண்பர் இராம்விலாஸ் பஸ்வான். 9.10.1983 அன்று சுமார் 2 லட்ம் பேர் கூடிய அந்த திறந்தவெளி மாநாடு பிற்பகல் 3 மணியளவில் தொடங்கியது.
(அம்மாநாட்டிற்கு அன்றைய தி.மு.க. எம்.பி.யும், தேசிய பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் வழக்குரைஞர் அமைப்பின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினருமான நெய்வேலி டாக்டர் வெ.குழந்தைவேலு M.D., M.P. அவர்களும், புகைப்பட நிபுணர் சுபா சுந்தரம் அவர்களும் உடன் வந்தனர்).
நான்பேச ஆரம்பிக்கும் முன்பே மழை. பஸ்வான் தனது உரையை வெகு சுருக்கமாக்கிக் கொண்டு, மாநாட்டில் கூடியவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்திவிட்டு, பேசுமாறு கேட்டுக்கொண்டார். எனது உரையை சமதர்மக் கட்சியில் சிறப்பான இந்து மஸ்தூர் தொழிற்சங்கத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ராம்னிகா குப்தா அம்மையார் ஹிந்தியில் சிறப்பாக மொழி பெயர்த்தார். அவர் ஏற்கெனவே தமிழ்நாட்டில் சில காலம் பயிற்சி எடுத்தவர். ஆங்கில உரையை எவ்வளவு விறுவிறுப்போடு நான் பேசினேனோ, அதே வேகம் குறையாமல் - பொருளும் மாறாமல் உணர்ச்சியோடு மொழி பெயர்த்து - கொட்டும் மழை - மக்களோ அசையவில்லை - மழைக்கும், நமக்கும் போட்டி - சுமார் ஒரு மணிநேரத்திற்குமேல் தொடரும் உரை. லட்சக்கணக்கான மக்கள் குடைகளைப் பிடித்துக் கொண்டு, அப்படியே கேட்டதோடு, இடையிடையே உற்சாக மிகுதியால் ‘ஜிந்தாபாத்’ முழக்கமிட்டனர்!
இதுபற்றி பிறகு பீகாரின் எதிர்க்கட்சித் தலைவர் கர்ப்பூரி தாக்கூர் அவர்கள் மேடையில் வியந்து பேசினார். அந்நிகழ்வுபற்றி டாக்டர் வெ.குழந்தைவேலு எம்.பி., அவர்கள் ‘விடுதலை’யில் எழுதினார்.
புதிதாக பிரதமராக வந்த திருமதி இந்திரா காந்தி அவர்கள் மண்டல் கமிஷன் அறிக்கையை நாடாளு மன்றத்தில் வைப்பதோடு, பரிந்துரைகளை செயல்டுத்த வேண்டுமென்று வற்புறுத்தினார் நண்பர் பஸ்வான். வகுப்புரிமை, சமூகநீதி தீர்மானத்தைப்பற்றி வாதம் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடுநிசி 12 மணியளவுக்கும் கூட நடந்தது!
Reservation is non negotiable அதுபற்றிய மறு விவாதத்திற்கே இடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவு என்பதுதான் பிரகடனம் அதில் நிறைவேறியது. அதற்கு முக்கிய பங்காற்றியவர் ராம்விலாஸ் பஸ்வான், சந்திரஜித் யாதவ், டி.பி.யாதவ், ஜெய்ப்பால் சிங் காஷ்யப், டாக்டர் குழந்தைவேலு போன்றவர்கள் - துணை சபாநாயகர் நண்பர் லட்சுமணன் எம்.பி.யும் கூட!
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்
பிறகு நல்வாய்ப்பாக வி.பி.சிங் பிரதமராக பொறுப்பேற்ற அமைச்சரவையில் இராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார்.
இவர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்குக்கு மண்டல் பரிந்துரையை செயல்படுத்த வைப்பதில் முக்கிய செயல் ஊக்கியாக அமைந்தார்!
வி.பி.சிங்கைப் பாராட்டி திராவிடர் கழம் ஒருபுறம்; தி.மு.க., கலைஞர் முயற்சிகள் மறுபுறம் என்றெல்லாம் அழுத்தமும் கொடுக்கப்பட்டது. தென்னாட்டிலும், வடபுலத் திலும் திராவிடர் கழகம் 4 மாநாடுகளையும், 16 தொடர் போராட்டங்களையும் நடத்தியது. இதில் பெரும்பாலான வடபுல நிகழ்ச்சிகளில் நண்பர் பஸ்வான் நமது அழைப்பை ஏற்று கலந்துகொண்டு முழங்கத் தவறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரானவுடன் சென்னை வந்த நண்பர் பஸ்வான், பெரியார் திடலுக்கு வந்து, பெரியார் நினைவிடம் சென்று, நம்மிடம் நீண்ட நேரம் வழமைபோல் கலந்துரை யாடினார்!
அப்போது நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வு - இராம் விலாஸ் பஸ்வானின் செயல் ஆற்றலுக்கும், சமூகநீதி உணர்வுக்கும் எடுத்துக்காட்டான ஒன்றாகும்!
சென்னையில் சிறப்பான பல ஆண்டு அனுபவம் பெற்ற உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த திராவிடர் இயக்க பெரியார் பற்றாளர், உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு அவர் தகுதி படைத்தவர். எப்படியோ தமிழக அரசின் பரிந்துரையில் அவரது பெயர் விடுபட்டு விட்டது. இதை அறிந்தவுடன், பெரியார் திடலுக்கு அவரது வாழ்க்கைக் குறிப்புகளுடன் ((Bio-data) வரச் சொல்லி, அவர்பற்றி பிரதமருக்குக் கூறி, இவருக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று மற்ற அளவுகோல்படி எல்லாம் சரியாக இருக்கிறது என்றும், நீங்களும், உரியவர்களும் கருதினால் சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு இவருடைய பெயர் பரிசீலிக்கப்பட வேண்டிய முழுத் தகுதி உடைய ஒன்று என்று கூறி, அவரை அறிமுகம் செய்து வைத்த நிலையில், ஆவன செய்வதாகவும், உரியவர்களிடம் தெரிவித்து முயற்சிக்கிறேன் என்றும் சொன்னார்.
அடுத்து சில வாரங்களில், கழக வழக்குஞைர் பெயர் நீதிபதி நியமனப் பட்டியலில் இடம்பெற்று, சமூகநீதி வெற்றி பெற்றது. அவர் பிறகு தனது பணிகளைப் பல ஆண்டுகள் எவ்வித அப்பழுக்கும் இன்றி, ஒரு மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகி, உச்சநீதிமன்றத்திலும் பல ஆண்டுகள் சிறப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முத்திரைப் பதித்த தீர்ப்புகளை வழங்கியவரானார்! இன்னமும் அமைதியாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நேர்மையின் ஆற்றலின் சின்னமாகத் திகழ்கிறார் (இதை அவரே நன்றி மறக்காமல் ஒருமுறை முக்கியமான இடத்தில் குறிப்பிடவும் செய்தார்!).
இராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் வெறும் வாய்ப்பேச்சு வீரரல்ல என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
இராமாயண எதிர்ப்பு மாநாடு
15.4.1989ல் காரைக்குடியில் நாம் நடத்திய அகில இந்திய ராமாயண எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்று முழங்கினார்.
பின்னர் அவர் வி.பி.சிங் அமைச்சரவையில் தொழிலா ளர் நலத் துறை அமைச்சராகவும், சமூக நலத்துறை அமைச் சராகவும் இருந்தபோதுதான் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் நூற்றாண்டு விழா கொண்டாட வாய்ப்பு ஏற்பட்ட நிலையில், அதனை மிகச் சிறப்புடன் கொண்டாட பிரதமர் வி.பி.சிங் அவர்களும், அமைச்சர் இராம்விலாஸ் பஸ்வானும் கலந்துகொண்டு இந்தியா முழுவதிலுமுள்ள முக்கிய தலைவர்கள், பல்துறை அறிஞர்கள், விற்பன்னர்கள் கொண்ட ஒரு நூற்றாண்டுக் குழுவை அமைத்து அதன் முதல் கூட்டத்தை புதுடில்லி பார்லிமெண்ட் அனெக்ஸ் (Annex) கட்டடத்தில் பிரதமர் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டு விழாக்குழு
அக்குழுவில் தமிழ்நாட்டிலிருந்து அப்போது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினராக இருந்த திரு.ஏ.பத்மநாபன் அய்.ஏ.எஸ்., ‘விடுதலை’ ஆசிரியர், திராவிடர் கழக பொதுச் செயலாளர் என்ற முறையில் நான், இசைஞானி இளையராஜா, இந்து ஆசிரியர் ராம் ஆகியோர் இடம்பெற்றோம். எதிர்க் கட்சித் தலைவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் ஓர் உறுப்பினராகப் பங்கேற்றுள்ளார். அக்கமிட்டியின் துணைத் தலைவர் இராம்விலாஸ் பஸ்வானுடன் பல்வேறு திட்டங்கள் குறித்து கலந்துரையாடினோம் - சிறப்பாக நடத்த திட்டமிட்டோம். (21.6.1990)
(அக்கூட்டத்தில்தான் இடைவேளையில் என்னிடம் வந்து, என்னை தனியே ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று, ராஜீவ் காந்தி ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி கலந்துரை யாடினார். சில அரிய தகவல்களையும் கூறினார்).
பிறகு அதில் சில தனிக் குழுக்கள் நலத்துறை அமைச்சகத் தால் பஸ்வான் அவர்களால் அமைக்கப்பட்டன. என்னை அம்பேத்கர் எழுத்துப் பேச்சு பற்றி வெளியீடுகளைக் கொண்டு வரும் துணைக் குழுவுக்குத் தலைவராகவும் நியமித்தார். (பிறகு ஆட்சி மாற்றம் காரணமாக, அது செயல்பட முடியவில்லை).
மத்திய அமைச்சராக அவர் இருந்தபோது 13.5.1990 அன்று பெரியார் திடலில் ஒரு நிகழ்ச்சி - தலித் சேனா சார்பில் பெரியாரிஸ்ட், அம்பேத்கரிஸ்ட் நண்பர் சந்திரகேசன் அவர்களது சீரிய ஏற்பாட்டில் நடந்தது. நான் பேசியபோது, ‘‘துரோணாச் சாரியார் விருது’’ என்ற பெயரை ‘‘ஏகலைவன் விருது’’ என்று மாற்ற முயற்சிகள் எடுக்குமாறு வைத்த யோசனையை ஏற்று, விரைவில் முயற்சி எடுக்கிறேன் என்று ஆமோதித்து வரவேற்று உரையாற்றினார் அமைச்சர் இராம்விலாஸ் பஸ்வான்!
28.12.1992இல் திருச்சியில் உள்ள நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் புதிய கட்டடத்தை பஸ்வான் தலைமையில், வி.பி.சிங் (இருவருமே பதவியில் இல்லாதபோது), திறக்கும்படி ஏற்பாடு செய்தோம். மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர் என்பதும் மறக்க முடியாத நிகழ்வு ஆகும்! அதில் நம் குழந்தைகள் இல்லம் அய்யா, அம்மாவின் காலத்தில் எப்படி உருவாக்கப்பட்டு நடைபெற்று வந்தது என்பதையும், நம் காலத்தில் எப்படி தொடர்ந்து சிறப்பாக நடக்கிறது என்பதையும் கேட்டு மகிழ்ந்து பேருவகை அடைந்தார். இப்படி பல நினைவுகள் நிழலாடுகின்றன!
அதன்பிறகு வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசிலும் இடம்பெற்றார். எனினும், எந்த நிலையிலும் எங்களது கொள்கைப்பூர்வ நட்பு மாறாத ஒன்றாகும்! அரசியல் நிலைப்பாடுகள் மாறினாலும்கூட, அவர் கொள்கைகளை மாற்றிக் கொண்டவரல்ல. நம்மோடும், திராவிடர் இயக்கத்தோடும், கலைஞரோடும் கடைசிவரை நட்புறவோடு திகழ்ந்த தனிப்பெரும் பண்புக்குச் சொந்தக்காரர் அவர்.
இனப்படுகொலை எதிர்ப்பாளர்
ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலைக்கெதிரான குரலை எப்போதும் உயர்த்தத் தவறாதவர். ஈழத் தமிழர் உரிமைக்காக பல்வேறு காலகட்டங்களில் நாம் நடத்திய நிகழ்வுகளிலும் பங்கேற்றவர்.
சென்னை வரும்போதெல்லாம் நம்மைச் சந்திப்பார். கலைஞரைத் தவறாமல் பார்ப்பார். ஒருமுறை நான் அவரைச் சந்திக்கவில்லை. அப்போது அவர் உணவுத் துறை அமைச்சராக, சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். எனது உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டோடு இருந்தேன். இதை விசாரித்து அறிந்து விமான நிலையம் செல்லும்முன் ஒரு கூடை பழத்துடன் நண்பர் சந்திரகேசனுடன் அடையாறு இல்லத்திற்கே வந்து, உடல் நலம் விசாரித்து, நேரே மீனம்பாக்கம் சென்றார்!
இரண்டாம் முறை மோடி அரசில் இடம்பெற்ற பிறகு, ஒரு நாள் அவசரமாக ஆய்வுக் கூட்டத்திற்கு சென்னைக்கு வந்து திரும்பும்போது, இரவு 11 மணிக்கு விமானம் நிலைய லவுஞ்சிலிருந்து என்னிடம் தொலைப்பேசிமூலம் நலம் விசாரித்து விடைபெற்றார்!
அவரது சகோதரர் மறைந்த போது, அவருடன் தொலைப்பேசியில் வெகுநேரம் பேசி ஆறுதல் சொன்ன நிகழ்வுதான் கடைசி வாய்ப்பு.
சில வாரங்களுக்குமுன் நண்பர் சந்திரகேசன் அவர்களது மகன், ஒரு தனி எண்ணைத் தந்து, உடல்நலம் குன்றி மன அழுத்தத்துடன் இருக்கும் அவருடன் பேசுமாறு என்னிடம் கூற, உடன் (அவர் மறைவதற்கு இரண்டு வாரங்களுக்குமுன்) அவரது செயலாளர்மூலம் முயற்சித் தேன். அநேகமாக அது செப்டம்பர் முதல் வாரமாக இருக்கலாம். இருமுனைகளிலும் இணைப்பு சரியாக கிடைக்கவே இல்லை.
அதன் பிறகு, மருத்துவமனையில் அவர் சேர்ந்தபோது, கவலையோடு, அவர் உடல்நலம் பெற்றுத் திரும்ப விழைந்தோம். இயற்கை தனது கோணல் புத்தியைக் காட்டி, அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது.
வடபுலத்து போர்த் தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக மறைந்த நிலையில், இன்று நாம் நிராயுதபாணிபோல் ஆகிவிட்டோம் என்ற கவலை நம்மை வாட்டினாலும், அவர்கள் காட்டிய வீரமும், தீரமும் நம்மை சோர்விழக்கச் செய்யாது பயணிக்கவே செய்யும்!
வாழ்க பஸ்வான் - வருக ஜாதியற்ற சமூகம்!