பக்கங்கள்

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

மகன் திருமணத்தில் 18,000 விதவைகளை வாழ்த்தச் சொன்ன தொழிலதிபர்!

குஜராத்தில் தொழில் அதிபர் ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு 18 ஆயிரம் விதவைப் பெண்களை வரவழைத்து வாழ்த்த வைத்துள்ளார்.
என்னதான் நாம் 21ஆம் நூற்றாண்டில் இருந்தாலும் பகுத்தறிவும், பெண்ணுரிமையும், விதவை மணமும் பேசப்பட்டாலும் இன்றும் திருமணம் போன்ற நல்ல காரியங்களில் விதவைப் பெண்கள் கலந்து கொள்வது விரும்பப்படுவது இல்லை. காரணம் அவர்கள் அபசகுனமாகப் பார்க்கப்படுகிறார்கள். அமங்கலமாக எண்ணப்படுகிறார்கள்.
எனவே, மங்கல நிகழ்வில் விதவைகள் வரக்கூடாது என்று எண்ணுகின்றனர். இந்நிலையில் குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் திருமணத்தன்று தனது மகனை வாழ்த்த 18 ஆயிரம் விதவைப் பெண்களை வரவழைத்துள்ளார். குஜராத் மாநிலம் மெஹ்சனாவை சேர்ந்தவர் ஜிதேந்திர பட்டேல். தொழில் அதிபர். ஏழை, எளிய மக்களுக்கு உதவி வரும் அவரை அனைவரும் ஜித்துபாய் என்று அன்போடு அழைக்கிறார்கள். அவரது இளைய மகன் ரவிக்கு கடந்த புதன்கிழமை தேரோலில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு வந்து மகனை வாழ்த்துமாறு வடக்கு குஜராத்தில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஆயிரம் விதவைப் பெண்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். திருமண நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட விதவைப் பெண்கள் மணமக்களை மனதார வாழ்த்தினர். அவர்களுக்கு ஜித்துபாய், போர்வை, பசுமாடு மற்றும் மரக்கன்றுகளைப் பரிசாக அளித்தார்.
இது குறித்து ஜித்துபாய் கூறுகையில்,   என் மகனை சமூகத்தால் ஒதுக்கப்பட்ட விதவைப் பெண்கள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று விரும்பினேன். சுபகாரியங்களில் விதவைகள் கலந்து கொள்வது கெட்ட சகுனம் என்று நினைக்கிறார்கள். அந்த நம்பிக்கை பொய் என்பதை நான் நிரூபிக்க நினைத்தேன் என்றார்.
ஜித்துபாயின் நல்ல உள்ளத்திற்கும் மனிதநேய மாண்பிற்கும், சிந்தித்த முயற்சிக்கும் நமது பாராட்டுக்கள். பலரும் இவரைப் பின்பற்றினால் மனிதம் மலரும்; பெண்ணிழிவு நீங்கிப் பெண்கள் பெருமை பெறுவர்.
-உண்மை,16-28.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக