வியாழன், 25 நவம்பர், 2021

ஜாதி வேறுபாடற்ற மயானங்கள் கொண்ட 111 சிற்றூர்களுக்கு தலா ரூ.10 லட்சம் அரசாணை வெளியீடு!


சென்னை, நவ. 24- தமிழ்நாட்டில் பல கிராமங்களில் ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்பதில் மற்ற வர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்தகைய சிற்றூர்களுக்கு ஊக்கத் தொகையாக வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த அரசு சார்பில் ரூ. 10 இலட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் அறிவிப்பை வெளியிட்டார்.

முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது,

அனைத்து மாவட்டங்களிலும் (சென்னை மாவட்டம் நீங்கலாக) ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டிலுள்ள சிற்றூர்களின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு ஊக்கத் தொகையாக முதற்கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு 3 சிற்றூர்கள் வீதம் 37 மாவட்டங்களிலுள்ள 111 சிற்றூர்களுக்கு தலா ரூ.10,00,000/- வீதம் மொத்தம் ரூபாய் 11 கோடியே 10 இலட்சம் பரிசுத்தொகை வழங்கிட ஏதுவாக நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்களை கொண்ட சிற்றூர் களுக்கு ரூ.10 லட்சம் வழங்குவதற்கு ரூ.11 கோடி ஒதுக்கி அர சாணை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கு பலரும் பாராட்டு களை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக