பக்கங்கள்

வியாழன், 27 ஏப்ரல், 2023

அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி சட்ட திட்ட விதிகளில் முக்கியத் திருத்தம்

 அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி சட்ட திட்ட விதிகளில் முக்கியத் திருத்தம்: சமூகநீதியை உள்ளடக்கிய சமூகப் புரட்சி! பெரியார் வென்றார்: வகுப்புரிமை - சமூகநீதி வென்றது!

aaa

அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி சட்ட திட்ட விதிகளில் திருத்தம்:  சமூகநீதியை உள்ளடக்கிய சமூகப் புரட்சி!  பெரியார் வென்றார்! வகுப்புரிமை - சமூகநீதி வென்றது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

இன்றைய ‘இந்து'  (The Hindu)  ஆங்கில நாளேடு, மதுரை பதிப்பு 10 ஆம் பக்கத்தில் ஒரு முக்கிய செய்தி.

சட்ட திட்ட விதிகளில் முக்கியத் திருத்தம்

ராய்ப்பூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்திற்குத் தலைமை யேற் றுள்ள - அதன் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள், கட்சியின் சட்ட திட்ட விதிகளில் முக்கியத் திருத்தத்தை அறிவித்துள்ளார்!

தற்போதைய அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி(CWC) விரிவாக்கம் செய்யப்படுவதுடன், (உறுப்பினர்களின் எண்ணிக்கை 23-லிருந்து 35 ஆக கூட்டப்பட்டுள்ளது) முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 12 ஆக இருந்தது; இப்போது 18 ஆக உயர்த்தப்பட்டும் உள்ளது.

8

சமூகநீதியை உள்ளடக்கிய சமூகப் புரட்சி

இந்த மொத்த எண்ணிக்கையில் 50 சதவிகித உறுப்பினர்கள் எஸ்.சி., (பட்டியலினத்தவர்), எஸ்.டி., (பழங்குடியினர்), ஓ.பி.சி., (இதர பிற்படுத்தப்பட்டோர்) மற்றும் சிறுபான்மையினரிலிருந்து தேர்வு செய்யப்பட்டு, புது அமைப்பு இயங்கும் என்று அறிவித்துள்ளார்!

இது ஒரு சமூகநீதியை உள்ளடக்கிய சமூகப் புரட்சியாகும்!

1920 ஆம் ஆண்டு முதலே வகுப்புரிமையை வற்புறுத்தி திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டிலும், 1921 ஆம் ஆண்டு தஞ்சாவூர், 1922 இல் திருப்பூர், 1923 இல் சேலம், 1924 இல் திருவண்ணாமலை மாநாடு என தொடர்ச்சியாக தீர்மானம் கொண்டு வருவதற்காகத் தந்தை பெரியார் அவர்கள் போராடி, போராடி, கடைசியாக 1925 ஆம் ஆண்டிலும் இந்த வகுப்புரி மையை வற்புறுத்திக் கொடுத்த தீர் மானத்தை ஏற்க உயர்ஜாதி ஆதிக்கவாதிகள் மறுத்த தால்தானே, தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, முழு நேர சமூகநீதிப் போராளியாகி, சுயமரியாதை இயக்கம் கண்டார்.

எந்த காங்கிரஸ் இதனை ஏற்க மறுத்ததோ, அதே காங்கிரஸ் 98 ஆண்டுகள் கழித்து, இன்று 2023 இல் ஆதிதிராவிடர், காங்கிரஸ் தலைமையை ஏற்ற நிலை யில், புது உருவம் கொண்டுள்ளது!

காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படும் போது, அதில் 50 விழுக்காடு பார்ப்பனரல்லாதாருக்கு இடம் ஒதுக்கப்படவேண்டும் என்ற தீர்மானம்தான் பெரியார் கொடுத்த தீர்மானம்.

வகுப்புரிமை - சமூகநீதி வென்றது!

அன்றைய காங்கிரஸ் பார்ப்பனர்களால் ‘வகுப்பு வாதம்' என்று குறைகூறி வாய்ப்பு மறுக்கப்பட்ட தீர்மானம் இன்று சட்ட திட்ட விதிகளிலேயே திருத்தத் துடன் நிறைவேறி உள்ளது.

பெரியார் வென்றார்! வகுப்புரிமை - சமூகநீதி வென்றது!

சமூகநீதிக் கொடி தலைதாழாமல் பறக்கிறது!

‘‘எனது போராட்டங்கள் எதுவும் தோல்வியில் முடிந்ததே இல்லை; வேண்டுமானால், வெற்றி சற்று காலந்தாழ்ந்து கிடைக்கக் கூடும்'' என்றார் தந்தை பெரியார்.

அது எப்படிப்பட்ட பாறையில் செதுக்கப்பட்ட உண்மை பார்த்தீர்களா, நண்பர்களே!

பெரியார் வாழ்க! சமூகநீதி வளர்க!!  


                                                                                                                           கி.வீரமணி

                                                                                                                              தலைவர்,

26.2.2023                                                                                                   திராவிடர் கழகம்

அமெரிக்காவில் சியாட்டிலில் ஜாதிக்கு தடை விதிப்பு

 அமெரிக்காவில் சியாட்டிலில் ஜாதிக்கு தடை விதிப்பு

3

சியாட்டில், பிப்.22- அமெரிக்காவிலுள்ள சியாட்டில் மாநகர் மன்றக் கூட்டத்தில் ஜாதிக்கு தடை விதிப்பதற்கான தீர்மானத் தின்மீதான வாக் கெடுப்பில் ஆறுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் வாக்களிக்கப்பட்டு பெரும்பான்மையானவர்கள் ஜாதிக்கு தடைவிதிக்க ஒப்புதல் அளித் துள்ளனர். அதன்படி, சியாட்டில் மாநகரில் பாகு பாடுகளைக் கொண்டுள்ள ஜாதி அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலேயே முதல்முறையாக சியாட்டில் மாநகரில் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டத்தின்படி குறிப்பாக ஜாதியின் பெயரால் உள்ள பாகுபாடுகளுக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது.

மனிதர்களை பிளவுபடுத்துகின்ற ஜாதி அமைப்புமுறை வருணாசிரம, சனாதன, இந்து மதத்தின் பெயரால் மனிதர்கள் சமத்துவத்துடன் நடத்தப்படாமல், பிறப்பு முதல் இறந்த பின் னரும் ஜாதி இழிவு தொடர்ந்துகொண்டிருக் கிறது. இந்த ஜாதி பாகுபாடுகள் தெற் காசியா விலிருந்து அமெரிக்க அய்க்கிய நாடுகள், அய்ரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடு களுக்கு புலம் பெயர்ந்தவர் களிடையேயும் நிலவி வருகிறது. 

கண்டம் விட்டு கண்டம் தாண்டியும், பல்வேறு நாடுகளைக் கடந்து பிழைப்புக்காக சென்றபோதிலும், ஜாதி பாகுபாடுகளால், ஜாதி இழிவுகள் மதத்தின் பெயரால் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அவலநிலை இந்த இந்து மதம், வருணாசிரமம், சனாதனத்தின் கொடு வாள் சமத்துவத்தைப் பிளந்துகொண்டுவரு கிறது.

அதற்கொரு முடிவு கட்டும்வகையில், அமெரிக்க நாட்டில் முதல் முறையாக சியாட்டில் மாநகர் மன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தற்பொழுது ஜாதிக் கொடுமைக்கு சட்டப்படி தடை போடப்பட்டுள்ளது.

மனித உரிமையில் மனித நேயத்தில் அக் கறை கொண்டோர் என பலதரப்பினரும் இச் சட்டத்தை பெரிதும் வரவேற்று மகிழ்கிறார்கள்.

ஜாதிய பாகுபாடு என்பது மனித உரிமை களுக்கு எதிரான தாக உள்ளது. ஏற்கெனவே உள்ள மனித உரிமைகள் சட்டத் தின்படி ஜாதி பாகுபாடுகளுக்கு எதிரான நடவடிக்கை இல் லாத நிலையில், தற்பொழுது ஜாதிக்கு தடை போடுகின்ற இச் சட்டத்தின்மூலம் சமத்துவம், மனிதநேயம் பாதுகாக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருதி இச்சட்டத்தை வரவேற் கிறார்கள்.

சமூகவியலாளரும், இந்திய அமெரிக்கராக சியாட்டில் மாநகர் மன்றத்தில் இடம்பெற்றுள்ள ஒரே உறுப்பினரான ஷாமா சவந்த் கூறுகையில், இந்த சட்டமானது, ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு எதிரானது அல்ல, நாடு, மத எல்லைகளைக் கடந்து ஜாதி பாகுபாடுகளால் ஏற்படுகின்ற பாதிப்புகுறித்து அக்கறை கொண்டுள்ளதாக உள்ளது.

இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாயத்தில் பிறப்பின் அடிப்படை யிலும், தொழிலின் அடிப்படையிலும் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டுள்ளதாக ஜாதிய முறை இருந்து வந்துள்ளது. ஜாதிய முறை முசுலீம்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிகளிலும் பல நூற் றாண்டுகளாக தொடர்ந்து நீடித்து இருந்து வந்துள்ளது.

பிரமிட் போன்ற ஜாதி அடுக்குமுறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் (தாழ்த்தப்பட்டோர்) அடித்தட்டு வகுப்பினராக பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.

பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் அடைந்த ஓராண்டில் இந்தியாவில் 1948இலிருந்து தீண்டாமை கடைப்பிடிக்கப்படக் கூடாது என்று உள்ளது.

கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள சமத்துவத்துக்கான அமைப்பின் நிறுவனரும், இயக்குநருமாகிய தேன்மொழி சவுந்தரராஜன் கூறுகையில், சியாட்டில் சிட்டி ஹால் பகுதிகளில் இந்த சட்டத்தை வலியுறுத்திய போராட்டங்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர் களுக்கான செயற்பாட்டாளர்களின் தொடர்ச்சி யான செயல்பாடுகள் காரணமாக இச்சட்டத் துக்கு ஆதரவு பெருகியது. என்றார்.

புலம் பெயர்வோர் குறித்த ஆய்வு நிறு வனத்தின் ஆய்வுத் தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து புலம் பெயர்வோர் பன் னாட்டளவில் அதிக அளவில் அமெரிக்க அய்க்கிய நாட்டி லேயே உள்ளனர். 1980களில் புலம் பெயர்ந்தோர் சுமார் 2,06,000 பேர். 2021இல் சுமார் 27 லட்சம் எண்ணிக்கையில் உள்ளனர்.

2010 கணக்கெடுப்பின்படி தெற்காசியாவி லிருந்து அமெரிக் காவுக்கு இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 35 லட்சமாக இருந்து தற்பொழுது 54 லட்சம் பேராக அதிகரித்துள்ளது. பங்களா தேஷ், பூடான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளிலிருந்து அமெரிக்க நாட்டில் இடம்பெயர்ந்து வசித்து வருகின்றனர்.

பிறந்த ஊரைவிட்டு, மாநிலத்தை விட்டு, நாட்டை விட்டு, ஆசியக்கண்டத்தைவிட்டே பிழைப்புக்காக இடம்பெயருகின்ற வர்கள் ஜாதி இழிவுகளை சுமந்தபடியே அமெரிக்க நாட் டிலும் ஜாதியின் பெயரால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். ஜாதி இழிவுக்கு எதிரான மக்கள் போராட்டம் எழுச்சிபெற்றதன் விளைவாக தற்பொழுது அமெரிக்க அய்க்கிய நாட்டில் சியாட் டில் மாநகர் மன்றத்தின் புதிய சட்டத்தால் ஜாதிக்கு சவுக்கடி விழுந்துள்ளது பாராட்டத்தக்கது.

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

திருப்பனந்தாள் மடத்தில் பார்ப்பனரின் ஆதிக்கம்!

 

வரலாற்றுச் சுவடு : திருப்பனந்தாள் மடத்தில் பார்ப்பனரின் ஆதிக்கம்!

பிப்ரவரி 16-28,2022

இரா.முல்லைக்கோ, பெங்களூரு

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் திருப்பனந்தாள் மடத் தலைவர் சாமிநாதத் தம்பிரான் அவர்களைச் சந்தித்த தகவல்:

திருப்பனந்தாள் மடத் தலைவராகத் திருத்தவத் திரு. சாமிநாதத் தம்பிரான் அவர்கள் இருந்த காலத்தில் ஒரு முறை சென்று அவர்களைக் கண்டு, என் தமிழாராய்ச்சியை எடுத்துக் கூறி, அதை வெளியிடப் பொருள் வேண்டினேன். தம்பிரான் அவர்கள், நான் சொன்னதை அமைதியாகச் செவி கொடுத்துக் கேட்டு, அடுத்து வரும் குரு பூசை நாளன்று வரச் சொன்னார்கள். மகிழ்ச்சியோடு திரும்பினேன்.

ஆயினும், நான் கருதியது கைகூடுமா என்று ஓர் அய்யம் எனக்கிருந்தது. ஏனெனில், அங்கு ‘இராயசம்’ என்றிருந்த பிராமண எழுத்தாளர், நான் பண்டாரர் திரு முன்பு செல்லுமுன்பே என்னையழைத்து, தம் அகவைக்கும் அறிவுக்கும் பதவிக்கும் தகாத பல வினாக்கள் வினாவினார். நான் தங்கியிருந்த மடத்து விடுதி மேலாளரும் என்னைப் பண்டாரத் திருமுன்பு அழைத்துச் சென்ற பணியாளரும் மடத்துக் காசுக் கணக்கரும் பிராமணரே. அதோடு, பெரும் பேராசிரியர் உ.வே.சாமிநாத அய்யர் அங்கு வந்து தங்கும் தனிமனையையுங் கண்டேன். அவர் தம்பிரானுக்கு ஆசிரியராக இருந்தவர் என்றுங் கேள்விப்பட்டேன்.

ஆதலால், ‘வாய்த்தால் தமிழுக்கு; வாய்க்காவிட்டால் வடமொழிக்கே’ என்று கருதிக் கொண்டு குருபூசை நாளன்று சென்றேன். அவர்களும் ஒருங்கே நின்றவிடத்துச் சென்று கண்டேன். ‘அய்யர் அவர்களைப் பற்றித் தெரியுமா?’ என்று தம்பிரான் அவர்கள் வினவினார்கள். ‘தெரியும்’ என்றேன். அய்யரோ, “ஒருமுறை நான் அவர் இல்லம் சென்ற கண்டிருந்தும் தனக்கு நினைவில்லை’’ என்றார். அவ்வளவுதான். தம்பிரான் அவர்கள் அப்பாற் சென்று விட்டார்கள். நானும் விடுதிக்குத் திரும்பினேன்.

என்னோடு தமிழன்பரான தமிழர் வேறு சிலரும் விடுதித் தாழ்வார அறையில் தங்கியிருந்தனர். பிராமணர்க்கோ உள்ளிடம். நண்பகலுணவு எங்கட்குப் பிற்பகல் 3:00 மணிக்குத்தான் வந்தது. கரணியம் வினவியபோது அப்பொழுதுதான் பிராமணப் பந்தி முடிந்ததென்று தெரிவிக்கப்பட்டது.

எனக்கு மடத்துப் பொருளுதவி தப்பியது பற்றி எள்ளளவும் வருத்தமில்லை. தமிழர் குமுகாய நிலைத் தாழ்வே என்னை மிகமிகப் புண்படுத்தியது. நாடு தமிழ்நாடு; மடம் தமிழன் மடம்; மதம் தமிழன் மதம்; பணம் தமிழன் பணம்; அங்ஙனமிருந்தும் நூற்றாண்டிலும் தொடர்கின்றதெனின், இவற்றைத் தமிழன் உயர்திணையைச் சேர்ந்தவனல்லன் என்பது தெள்ளத்தெளிவாம்.

பிராமணர்க்கு உள்ளும் தமிழர்க்கு வெளியுமாக வெவ்வேறிடத்தில் உண்டி படைக்கப்படினும் ஒரே நோக்கில் படைக்கப்பட்டிருப்பின் ஓரளவு நன்றாயிருந்திருக்கும். அக்காலத்துப் பிராமணப் பொது உண்டிச்சாலைகளில் பிராமணரின் எச்சிலைகளில் இருந்து கறி வகைகளை எடுத்துத் தமிழர்க்குப் படைப்பது வழக்கமாய் இருந்தது. காசு கொடுத்துண்ணும் இடத்திலேயே அந்நிலைமையாயின் இலவசமாய் உண்ணும் இடத்தில் எங்ஙனம் இருந்திருக்கும்!

தரவு: முதுமுனைவர் இரா.இளங்குமரனார் எழுதிய “பாவாணர்’’ நூலின் பக்கம் 168, 169. (1987)

சனி, 8 ஏப்ரல், 2023

உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதிப் போரில் பெற்ற சரித்திர வெற்றி! - கோ.கருணாநிதி

 


ஜனவரி 16-31,2022

 கோ.கருணாநிதி

(சமூகநீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்)

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு எனும் அரசமைப்பு சட்டப்படியான உரிமை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக நீதி வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல். இந்த சாதனையை வழமைபோல் தமிழ்நாடு சாதித்துக் காட்டியுள்ளது. ஏனைய மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக, வழிகாட்டியாகத் திகழ்கிறது. இந்தச் சாதனை சாதாரணமாக நிகழ்ந்ததல்ல. மக்களிடம் கருத்துருவாக்கம், சட்டப் போராட்டம் எனத் தொடர்ந்து அடிமேல் அடிவைத்து இந்த உரிமையை நாம் பெற்றிருக்கிறோம். இதற்காகப் போராடிய, துணை நின்ற அனைவருக்கும் நமது நன்றி. குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், அதன் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி வெற்றியை பெற்றுத் தந்துள்ளார். தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமல்ல; நாடு முழுவதும் இன்று பிற்படுத்தப்பட்டோர் மனமகிழ்ந்து நன்றியைத்  தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக திராவிடர் கழகம், தமிழர் தலைவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அசாதாரண-மனவை. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வோர் ஆண்டும், மருத்துவ மேற்படிப்புகளில் (PG- எம்.டி, எம்.எஸ். மற்றும் எம்.டி.எஸ்) 50% இடங்களையும், மருத்துவப் படிப்புகளில் (UG– எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்) 15% இடங்களையும் அகில இந்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கின்றன.

இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) மற்றும் மருத்துவ கலந்தாய்வு மய்யம் (MCC) இவை மேற்கொள்கின்றன. 2020_-21 கல்வி-யாண்டில், ‘நீட்’ மருத்துவ மேற்படிப்பு மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பில் மாநிலங்கள் முறையே 7,981 இடங்களையும், 274 இடங்களையும் அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைத்தன. இவ்வாறு மாநிலங்கள் அளித்த எட்டாயிரத்திற்கும் கூடுதலான அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு சதவிகிதம் வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.

2017-ஆம் ஆண்டில் இருந்து தருவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அகில இந்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்த இடங்கள் (பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு), 40,842 இடங்களாகும். இதில் பிற்படுத்தப்-பட்டோர்க்கு தரப்பட்ட இட ஒதுக்கீடு சதவீதம் பூஜ்யமே.

27 சதவிகித அடிப்படையில் அளிக்கப்-பட்டிருந்தால், 11,027 ஓபிசி மாணவர்களுக்கு வாய்ப்புக் கிட்டியிருக்கும். இத்தகைய சமூக அநீதியைச் சுட்டிக்காட்டி, கடந்த சில ஆண்டுகளாக, திராவிடர் கழகம் மற்றும் அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற சமூக அமைப்புகள், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் கடிதம் எழுதியும், குரல் எழுப்பியும் எந்தப் பதிலும், தீர்வும் இல்லை.

இந்த அநீதியை எடுத்துரைத்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 2020 மே 9-ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டார். மேலும் இந்த சமூக அநீதிக்கு எதிராகப் போராட அனைவருக்கும் ஒரு தெளிவான அழைப்பும் விடுத்தார். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் திமுக, மதிமுக, சி.பி.அய்., சி.பி.அய். (எம்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க. – என அனைத்துக் கட்சிகளும் சமூக நீதியைக் கோரி அறிக்கைகளை வெளியிட்டனர். மேலும், இந்த அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை (தி.மு.க., ம.தி.மு.க, காங்கிரஸ், சி.பி.அய்., சி.பி. அய் (எம்), பா.ம.க.) உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்தன. திராவிடர் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. சென்னையில் மே 30-ஆம் தேதி திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மருத்துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் மக்களின் ஆதரவை உணர்ந்த அன்றைய தமிழ்நாடு அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. சமூக நீதி விஷயத்தில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் உள்ளது. தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காகப் போராடினார். இதன் விளைவாக 1951ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் ஏற்பட்டது. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய நாடு முழுமைக்கும் அரசமைப்புச் சட்டம் 15 (4)வது பிரிவின் கீழ் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு வழி வகுத்தது.

தந்தை பெரியாருக்குப் பிறகு, அவரது கொள்கையைப் பின்பற்றி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம், மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்திடக் கோரி 42 மாநாடுகள், 16 போராட்டங்களை நடத்தி, சிறைத்தண்டனை உள்ளிட்ட தியாகங்களைச் செய்துள்ளது.

1979 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர்க்கு ரூ.9000 பொருளாதார அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதில், திராவிடர் கழகம் போராட்டத்தை நடத்தியதோடு நின்றுவிடாமல், அரசமைப்புச் சட்டம் 31- சி பிரிவின் அடிப்படையில் ஒரு வரைவு மசோதாவை தமிழ் நாடு அரசுக்கு அளித்து, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் பின்னர் அரசியலமைப்பின் 9-ஆம் அட்டவணையில் சேர்க்கப்படுவதற்கும் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வைப்பதிலும் முழுமூச்சாய் செயலாற்றியது.

இவ்வாறு, தந்தை பெரியாரின் கொள்கை-களை நிறைவேற்றுவதற்காக, திராவிடர் கழகம், சமூக இயக்கமாக, நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சமூக நீதியை வழங்குவதைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் அதன் பங்கை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. சமூக நீதி குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து தமிழ் மக்களிடையே உருவாக்குவதிலும், அனைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்-பதிலும், தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் அவரது மறைவுக்குப் பின்னரும் தமிழர் தலைவர் தலைமையில் தொடர்ந்து பங்காற்றி வருவதால், தமிழ்நாட்டில் சமூகநீதி காப்பாற்றப்பட்டு வருகிறது. இப்போது மருத்துவ சேர்க்கையில் ஓபிசி பிரிவினர்க்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட இந்தப் பிரச்சினையில், திராவிடர் கழகம் நாடு முழுவதும் இந்த அநீதியை எதிர்த்து  தீவிரப்படுத்தி வந்தது. இதன் ஒரு முயற்சியாக, இந்தியா முழுவதும் உள்ள பாஜக தவிர்த்த அரசுகளின் பதினோரு முதல்வர்களுக்கும் அதே போன்று, வட மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் என பதினோரு தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்தத் தலைவர்களில் சிலர் திராவிடர் கழகத்தின் முயற்சிகளைப் பாராட்டி, கடிதம் எழுதினர். மருத்துவப் பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக திராவிடர் கழகம், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மருத்துவக் கல்விக்கான மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்று 27.7.2020 அன்று சிறப்பான தீர்ப்பினை உயர்நீதிமன்றம் அளித்தது. தீர்ப்பின் சிறப்பு அம்சங்கள்:

1. மாநில சட்டங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அளித்திட, இந்திய மருத்துவக் குழு இயற்றிய விதிகள் [(9(4), 5(5)], அகில இந்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீட்டை மறுக்கவில்லை. (பாரா 85)

2. ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பிற்படுத்தப் பட்டோர்க்கு அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கு இந்திய மருத்துவக் குழு, எந்த விதியையும் குறிப்பிட இயலவில்லை . (பாரா 86)

3. ஓபிசி பிரிவினர்க்கான இட ஒதுக்கீடுக் கொள்கையை சட்டமாக்குவதற்கு ஒன்றிய அரசுக்கு அதிகாரங்கள் உள்ளன. அதன் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் இருந்து தடுக்கப்படவில்லை . (பாரா 87)

4.            யுஜி/பிஜி மருத்துவப் படிப்புகளில் மாநிலங்கள் பங்களித்த அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த சட்டமோ அல்லது அரசியலமைப்பும் தடையாக இல்லை. (பாரா 90).

5.            அகில இந்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு இல்லை என்பதை மாநில அரசுகள் அறிந்திருப்பதாக MCI வாதம் செய்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதன் மூலம் MCIஇன் வாதம் மறுக்கப்பட்டதாகி விடுகிறது. (பாரா 95).

6. இந்திய மருத்துவக் குழு, மாணவர் சேர்க்கைக்கான தரங்களை நிர்ணயிக்க முடியும். ஆனால், இடஒதுக்கீடுக் கொள்கை அரசாங்கத்தின் சட்டத்தின் மூலமாகவோ அல்லது நீதிமன்றத்தின் எந்தவொரு உத்தரவு மூலமாகவோ செய்யப்பட வேண்டும். (பாரா 97)

7. தமிழ்நாடு மனுதாரர்களின் மனுவில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் கோரப் பட்டுள்ளது. இது ஒன்றிய அரசின் யோசனைக்கு மாறாக உள்ளது. (பாரா 98)

8.            சமூகநீதி, சமத்துவம் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கான முந்தைய வழக்குகளில் உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகளை விசிமி மற்றும் ஒன்றிய அரசு புறக்கணிக்க முடியாது. (பாரா 102)

9.            இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுக்க ஒன்றிய அரசுக்கு அரசியலமைப்பு கடமை உள்ளது, இது இப்போது அவசியமாக உள்ளது. (பாரா 104)

10.         மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு _- ஒன்றிய அரசின் சுகாதார செயலாளர்,

MCI மற்றும் தமிழ்நாடு அரசின் சுகாதார செயலாளர், இட ஒதுக்கீடு சதவிகிதத்தை முடிவு செய்ய அமைக்கப்பட வேண்டும்.

11.         செயல்படுத்தல் தற்போதைய கல்வியாண்டில் அல்ல, எதிர்கால ஆண்டுகளிலும் செய்யலாம். (பாரா 105)

12.         இடஒதுக்கீடு சதவிகிதத்தை அமல்படுத்துவது தொடர்பான குழுவின் வழிமுறைகளை ஒன்றிய அரசு மூன்று மாதங்களுக்குள் அறிவிக்க வேண்டும். (பாரா 106)

இந்த தீர்ப்பின் மூலம், ஒன்றிய அரசின் மருத்துவக் கவுன்சிலுக்கான அதிகாரம், இட ஒதுக்கீட்டில் நுழைய முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவாக்கியது. மேலும், இட ஒதுக்கீட்டைத் தருவதில் எந்த நீதிமன்றத் தடையும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியது. ஆனாலும், மூன்று மாதத்தில் ஒன்றிய அரசு எந்த முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடத்திட முடிவு செய்தது. இதனை எதிர்த்து, திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது.

சென்னை உயர் நீதிமன்றமும், 27 சதவிகித இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டோருக்கு நடைமுறைப்படுத்தாமல் நீட் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்திட தடை விதிக்க நேரிடும் என எச்சரித்ததன் அடிப்படியில் ஒன்றிய அரசு ஜூலை 2021இல் ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையில், மிகுந்த போராட்டத்தின் காரணமாக பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவிகிதம் என்பதுடன், உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின்னடைந்தோர் என்ற அடையாளத்துடன் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்பதையும் இணைத்தே வெளியிட்டது ஒன்றிய அரசு.

இந்த இட ஒதுக்கீடுகளை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக சென்ற ஆண்டு நடைபெற வேண்டிய மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்திட வேண்டிய 27 சதவிகித இட ஒதுக்கீடு தள்ளிப் போனது.

இந்த வழக்கில், ஒன்றிய அரசு முன்னுக்குப் பின் முரணாக தனது வாதங்களையும் பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தது. இ.டபிள்யூ.எஸ். என்ற உயர்ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினர்க்கான அதே எட்டு லட்சம் ரூபாய் என்ற வருமான வரம்பு குறித்த உச்சநீதி மன்றத்தின் கேள்விகளுக்கு ஒன்றிய அரசின் வழக்குரைஞர் உரிய பதிலைத் தரவில்லை. மாறாக, மூன்று நபர் கொண்ட குழுவை நியமித்து, வருமான வரம்பை நியாயப்படுத்தித் தந்ததையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பாக நீதியரசர் டி.ஒய்.சந்திரசூட் ஏற்றுக் கொள்ளவில்லை. வருமான வரி கட்டும் ஒருவர் எப்படி பொருளாதாரத்தில் பின் தங்கியவராக முடியும் என கிடுக்கிப் பிடி போட்டார் நீதியரசர்.

இறுதியாக 7.1.2022 அன்று அளித்த தீர்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசு பிறப்பித்த 27 சதவிகித ஆணையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளனர் நீதிபதிகள். அத்துடன் இந்த ஆண்டு மருத்துவ கலந்தாய்வில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடரும் என்றும், வரும் மார்ச் மாத இறுதி வாரத்தில் இது குறித்த இறுதித் தீர்ப்பினை வழங்குவோம் என்றும் கூறியுள்ளார்கள்.

நெடிய போராட்டத்தின் காரணமாக இத்தனை ஆண்டுகள் பிற்படுத்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு இந்த ஆண்டு முதல் அகில இந்திய தொகுப்பு இடங்களிலும் வழங்கப்படும். இதன் மூலம் நான்காயிரத்திற்கும் அதிகமான மருத்துவப் படிப்பு இடங்களை (இளங்கலை மற்றும் முதுகலை) பிற்படுத்தப்பட்டோர் முதன் முறையாகப் பெறுவார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பினை வழங்கிய மாண்பமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் கோபண்ணா ஆகியோருக்கு நமது நன்றி. இந்த சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வெற்றி கண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நமது பாராட்டுகள். மேலும், நீதிமன்றத்தில் திறம்பட வாதம் செய்த தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர், மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் அவர்களுக்கும் நமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வெற்றியின் மூலம் தமிழ் நாடு சமூக நீதி மண்; தந்தை பெரியார் மண் என மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. இருப்பினும் இது முதல் கட்ட வெற்றியே. நாம் கேட்டது அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இடம் தரப்பட வேண்டும் என்பதே. மாறாக, 27 சதவிகிதமே கிடைத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தனது அறிக்கையில் கூறியிருப்பது போல், அகில இந்திய தொகுப்புக்கு இடங்கள் ஒதுக்கப்படும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நூறு சதவிகித இடங்களையும் அந்தந்த மாநிலங்களே நிரப்பும் நடைமுறை வர வேண்டும் என குறிப்பிட்டிருப்பது சரியானது. அதனை நாம் நிறைவேற்றிட தொடர்ந்து போராட வேண்டும். நாடெங்கிலும் உள்ள அனைத்து சமூக நீதி சக்திகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம், சமூக நீதிக்கான போரில் நாம் வெற்றி பெறுவது உறுதி, அதை நோக்கி, நாம் ஒற்றுமையாக முன்னேறுவோம்.