பக்கங்கள்

வியாழன், 27 ஏப்ரல், 2023

அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி சட்ட திட்ட விதிகளில் முக்கியத் திருத்தம்

 அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி சட்ட திட்ட விதிகளில் முக்கியத் திருத்தம்: சமூகநீதியை உள்ளடக்கிய சமூகப் புரட்சி! பெரியார் வென்றார்: வகுப்புரிமை - சமூகநீதி வென்றது!

aaa

அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி சட்ட திட்ட விதிகளில் திருத்தம்:  சமூகநீதியை உள்ளடக்கிய சமூகப் புரட்சி!  பெரியார் வென்றார்! வகுப்புரிமை - சமூகநீதி வென்றது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

இன்றைய ‘இந்து'  (The Hindu)  ஆங்கில நாளேடு, மதுரை பதிப்பு 10 ஆம் பக்கத்தில் ஒரு முக்கிய செய்தி.

சட்ட திட்ட விதிகளில் முக்கியத் திருத்தம்

ராய்ப்பூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்திற்குத் தலைமை யேற் றுள்ள - அதன் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள், கட்சியின் சட்ட திட்ட விதிகளில் முக்கியத் திருத்தத்தை அறிவித்துள்ளார்!

தற்போதைய அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி(CWC) விரிவாக்கம் செய்யப்படுவதுடன், (உறுப்பினர்களின் எண்ணிக்கை 23-லிருந்து 35 ஆக கூட்டப்பட்டுள்ளது) முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 12 ஆக இருந்தது; இப்போது 18 ஆக உயர்த்தப்பட்டும் உள்ளது.

8

சமூகநீதியை உள்ளடக்கிய சமூகப் புரட்சி

இந்த மொத்த எண்ணிக்கையில் 50 சதவிகித உறுப்பினர்கள் எஸ்.சி., (பட்டியலினத்தவர்), எஸ்.டி., (பழங்குடியினர்), ஓ.பி.சி., (இதர பிற்படுத்தப்பட்டோர்) மற்றும் சிறுபான்மையினரிலிருந்து தேர்வு செய்யப்பட்டு, புது அமைப்பு இயங்கும் என்று அறிவித்துள்ளார்!

இது ஒரு சமூகநீதியை உள்ளடக்கிய சமூகப் புரட்சியாகும்!

1920 ஆம் ஆண்டு முதலே வகுப்புரிமையை வற்புறுத்தி திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டிலும், 1921 ஆம் ஆண்டு தஞ்சாவூர், 1922 இல் திருப்பூர், 1923 இல் சேலம், 1924 இல் திருவண்ணாமலை மாநாடு என தொடர்ச்சியாக தீர்மானம் கொண்டு வருவதற்காகத் தந்தை பெரியார் அவர்கள் போராடி, போராடி, கடைசியாக 1925 ஆம் ஆண்டிலும் இந்த வகுப்புரி மையை வற்புறுத்திக் கொடுத்த தீர் மானத்தை ஏற்க உயர்ஜாதி ஆதிக்கவாதிகள் மறுத்த தால்தானே, தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, முழு நேர சமூகநீதிப் போராளியாகி, சுயமரியாதை இயக்கம் கண்டார்.

எந்த காங்கிரஸ் இதனை ஏற்க மறுத்ததோ, அதே காங்கிரஸ் 98 ஆண்டுகள் கழித்து, இன்று 2023 இல் ஆதிதிராவிடர், காங்கிரஸ் தலைமையை ஏற்ற நிலை யில், புது உருவம் கொண்டுள்ளது!

காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படும் போது, அதில் 50 விழுக்காடு பார்ப்பனரல்லாதாருக்கு இடம் ஒதுக்கப்படவேண்டும் என்ற தீர்மானம்தான் பெரியார் கொடுத்த தீர்மானம்.

வகுப்புரிமை - சமூகநீதி வென்றது!

அன்றைய காங்கிரஸ் பார்ப்பனர்களால் ‘வகுப்பு வாதம்' என்று குறைகூறி வாய்ப்பு மறுக்கப்பட்ட தீர்மானம் இன்று சட்ட திட்ட விதிகளிலேயே திருத்தத் துடன் நிறைவேறி உள்ளது.

பெரியார் வென்றார்! வகுப்புரிமை - சமூகநீதி வென்றது!

சமூகநீதிக் கொடி தலைதாழாமல் பறக்கிறது!

‘‘எனது போராட்டங்கள் எதுவும் தோல்வியில் முடிந்ததே இல்லை; வேண்டுமானால், வெற்றி சற்று காலந்தாழ்ந்து கிடைக்கக் கூடும்'' என்றார் தந்தை பெரியார்.

அது எப்படிப்பட்ட பாறையில் செதுக்கப்பட்ட உண்மை பார்த்தீர்களா, நண்பர்களே!

பெரியார் வாழ்க! சமூகநீதி வளர்க!!  


                                                                                                                           கி.வீரமணி

                                                                                                                              தலைவர்,

26.2.2023                                                                                                   திராவிடர் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக