'சண்டாளர்' என்பவர் யார்? அந்த வார்த்தையின் பின்னணி என்ன தெரியுமா?
- முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பிபிசி செய்தியாளர்
'சண்டாளர்' என்ற வார்த்தையை வசைச் சொல்லாகவும் கேலிச் சொல்லாகவும் பயன்படுத்துவது குறித்து தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் நலத்துறை கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த வார்த்தையின் பின்னணி என்ன?
'சண்டாளர்' சர்ச்சை
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியை 'சண்டாளர்' என்ற சொல்லைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ஒரு பாடலை பாடி, இழிவுபடுத்தியதால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
இதற்குப் பிறகு, இதுபோன்ற சொற்களை பயன்படுத்துவோர் மீது எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் எச்சரித்திருக்கிறது.
பாடல் உருவான பின்னணி
திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் டால்மியா சிமென்ட் ஆலை நிறுவப்பட்ட பிறகு, அந்தப் பகுதியின் பெயர் 'டால்மியாபுரம்' என மாற்றப்பட்டது. இந்தப் பெயர் மாற்றத்தை எதிர்த்து 1953ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி மு. கருணாநிதி தலைமையில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்தப் போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதற்குப் பிறகு, 1970களின் துவக்கத்தில் மு. கருணாநிதி குறித்து 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே' என்ற பாடல் எழுதப்பட்டு, நாகூர் ஹனீஃபாவால் பாடப்பட்டது. தி.மு.கவின் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் அனைத்திலும் இந்தப் பாடல் ஒலித்துவந்தது.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக, அந்தப் பாட்டின் மெட்டிலேயே, மு. கருணாநிதியை வசைபாடும் வகையில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டது. அந்தப் பாடல் அ.தி.மு.கவினரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. இந்தப் பாடலில் 'சண்டாளர்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
சாட்டை துரைமுருகன் கைதும் கட்சிகள் கருத்தும்
இந்தப் பாடலைத்தான் விக்கிரவாண்டி தேர்தல் பிரசார மேடையில் பாடினார் சாட்டை துரைமுருகன். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவர் கைதுசெய்யப்பட்டார். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை நீதிமன்றக் காவலில் அனுப்பாமல் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.
இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நானும் அதே வார்த்தையைச் சொல்கிறேன். முடிந்தால் அரசு கைதுசெய்யட்டும். அந்தப் பாடலை எழுதியது வேறு யாரோ.. அவர்கள் எழுதியதைத்தான் நாங்கள் பாடினோம்" என்று குறிப்பிட்டார்.
இதற்கு அமைச்சர் கீதாஜீவன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் எச்சரிக்கை
இந்த நிலையில்தான் இது தொடர்பாக ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்தது.
அந்த எச்சரிக்கையில், "பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன்படி, பொதுவெளியில் பட்டியல் சாதிப் பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் இந்தியாவிலும் சண்டாளர் என்ற பெயரில் மக்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் அட்டவணையில் இப்பெயர் 48ஆம் இடத்தில் இருக்கிறது.
அண்மைக் காலங்களில் பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பெயர் பொதுவெளியில் சமூக ஊடங்களில் அழுத்தமாக பேசப்படுவதைக் காண முடிகிறது. எனவே இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ அரசியல் மேடைகளிலோ சண்டாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் - 1989ன் கீழ் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரைக்கிறது" என்று கூறப்பட்டிருக்கிறது.
சண்டாளர்கள் யார்?
தமிழ்நாட்டின் பட்டியல் பிரிவினரில் 48வது சாதியாக சண்டாளர் என்ற சாதி பட்டியலிடப்பட்டிருக்கிறது. 1971ஆம் ஆண்டின் இந்திய சென்சஸ் ஆவணத்தில் தமிழ்நாட்டின் பட்டியலினத்தினர் குறித்த இனவியல் குறிப்புகளில் "தர்ம சாஸ்திரங்களின்படி சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தையே சண்டாளர் என அழைக்கப்படும் என்றும் அவர்கள் கிராமங்களுக்கு வெளியில் வசிக்க வேண்டும். மரண தண்டனைகளை நிறைவேற்றுவது இவர்களது வேலை" என்று கூறுவதாக சுட்டிக்காட்டுகிறது.
பொதுவாக சடலங்களை எரிப்பது இவர்களது பணியாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தியா முழுவதுமே சில இடங்களில் இந்த சாதியினர் வசிக்கிறார்கள். பொதுவாக, இந்துக்களில் பிற சாதியினர் இவர்களை தீண்டத்தகாத சாதியினராக கருதுகிறார்கள். மேற்குவங்கத்தில் இந்த சாதியினர் தற்போது நாமசூத்திரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இப்போது அங்கே ஒருவரை சண்டாளர் என அழைப்பது இழிவுபடுத்துவதற்காகவே அழைக்கப்படுவதாக கருதப்படுகிறது.
"சீமான் இயக்கிய படத்தில் சண்டாளன் என்ற வார்த்தை"
"சமீப காலங்களில் சாதி பெயர்களைச் சொல்லி ஒருவரை கேலி செய்வது, இழிவுபடுத்துவது போன்றவை அதிகரித்துவருகின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் சர்வசாதாரணமாக சாதிப் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்கள். பொதுவெளியில் யாராக இருந்தாலும் சாதிப் பெயர்களைச் சொல்லி கேலியாகவோ, இழிவாகவோ பேசுவது ஏற்க முடியாத ஒன்று. அதனால்தான் அத்தகைய அறிக்கை வெளியிடப்பட்டது" என்கிறார் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உறுப்பினரான குமாரதேவன்.
சண்டாளர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பாக கண்டனம் எழுவது இது முதல் முறையல்ல. 2006ஆம் ஆண்டுவாக்கிலேயே அப்போது இயக்குநராக இருந்த சீமான் தனது திரைப்படத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியது குறித்து அவரிடம் சுட்டிக்காட்டியதாக சொல்கிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.
"சீமான் இயக்கி 2006ஆம் ஆண்டில் வெளிவந்த 'தம்பி' படத்தில் வடிவேலுவின் பாத்திரம் உட்பட பல பாத்திரங்கள் இந்த வார்த்தையை சகஜமாக பயன்படுத்துவார்கள். அந்தப் படத்தைப் பார்த்த போது எனக்கு மிக வருத்தமாக இருந்தது. அந்தத் தருணத்தில் நான் 'தலித் முரசு' ஆசிரியர் குழுவில் இருந்தேன். நான் சீமானை தொலைபேசியில் அழைத்து அந்த வார்த்தையை இப்படிப் பயன்படுத்துவது தவறு என்று சொன்னேன். இதைக் கேட்ட அவர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, எனக்கு ஒரு கடிதத்தையும் எழுதினார். அந்த சமயத்தில் மு. கருணாநிதி கூட ஒரு கண்டன அறிக்கையில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். ஒரு கட்சிப் பத்திரிகையிலும் இந்த வார்த்தை இடம்பெற்றிருந்தது.
"யாரையும் இழிவாகப் பார்ப்பது சரியானதல்ல"
இதையெல்லாம் சேர்த்து, சண்டாளர் என்ற வார்த்தையை இழிவுபடுத்தும் நோக்கில் பயன்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்டு தலித் முரசுவில் ஒரு தலையங்கம் புனித பாண்டியனால் எழுதப்பட்டது.
யார் சண்டாளர்கள் என மனு ஸ்மிருதி வரையறுக்கிறது. அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்றால் அந்த மனநிலையில் இருந்துதானே பயன்படுத்துகிறோம் என்று அர்த்தம்? அந்த சாதியினர் இங்கே வசிக்கிறார்களா, இல்லையா என்பது பிரச்னையே இல்லை. ஒரு சாதிப் பெயரை இழிவுபடுத்துவதற்காக பயன்படுத்துவது ஏற்கத்தக்கதே அல்ல. அதுவும் ஒரு இயக்கம் நடத்துபவர்கள் இதனை செய்யக்கூடாது" என்கிறார் அழகிய பெரியவன்.
முன்பு பேசினார்கள், பாடினார்கள் அதனால் இப்போது அதைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறோம் என்பது ஏற்கத்தக்கதல்ல என்று குறிப்பிடும் அழகிய பெரியவன், யாரையும் இழிவாகப் பார்ப்பது சரியானதல்ல என்கிறார்.
நாம் தமிழர் கட்சி கருத்து
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, இந்த வார்த்தையை யாரையும் இழிவுபடுத்துவதற்காகச் சொல்லவில்லை என்கிறார்கள். தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் முன்பே இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான பாக்கியராசன்.
"யாரையும் இழிவுபடுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. இது எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தையாகத்தான் இருந்தது. அந்தப் பாடலும்கூட அந்த அர்த்தத்தில் பாடப்படவில்லை. கருணாநிதியை விமர்சிக்கும் வகையில் பாடுவதற்காக விளையாட்டாகத்தான் சொல்லப்பட்டது. ஆனால், அந்தப் பாடல் காரணமாக, இப்படி ஒரு அறிக்கை வெளிவந்திருப்பது மகிழ்ச்சிதான். அவர்கள் இதை முன்பே செய்திருக்கலாம்" என்கிறார் பாக்கியராசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக