பக்கங்கள்

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

வரவேற்கத்தக்க அரிய தீர்ப்பு! பழங்குடியினருக்கு உள்இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

 


புதுடில்லி, ஆக.1 தாழ்த்தப்பட்ட சமூகத்திலேயே மிகவும் பின் தங்கிய வருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்கிய முடிவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின் தங்கியவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும்
7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்ற அமர்வில், ஆறு நீதிபதிகள் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்ப ளித்துள்ளனர். ஒரு நீதிபதி மட்டும் மாறு பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே உள் ஒதுக்கீடு வழங்கி உள்ளன. அந்த சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலிருந்த திமுக அரசு அருந்ததி யினருக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 2020 ஆம் ஆண்டு அய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என்று தீர்ப்பு அளித்தது.

ஆனாலும், ஏற்கெனவே உள் ஒதுக்கீட்டை அனுமதிக்கக் கூடாது என்று ஆந்திரா வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதி கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துரை செய்திருந்தது. இதேபோன்று பஞ்சாப், அரியானா மாநில வழக்குகளும் ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

ஏழு நீதிபதிகள் அமர்வில் விசாரணை!
அந்த வழக்குகள் ஒட்டுமொத்தமாக கடந்த பிப்ரவரி மாதம், 7 நீதிபதிகள் அமர்வின்முன்பு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கியது.
இதில், அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும். பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க முடியும் என பெரும்பான்மை அமர்வு தீர்ப்பளித்தது. உள் ஒதுக்கீடு சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் ஆறு நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பில் நீதிபதி பெலா திரிவேதி மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளார்.மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆவது பிரிவை உள் ஒதுக்கீடு மீற வில்லை. அதன்பிறகு பட்டியலின உள்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படவில்லை.இதன் காரணமாக உள் ஒதுக்கீடு வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை. மேலும் பட்டியல் இனத்தவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்த ஒரு தடையும் கிடை யாது என உச்ச நீதிமன்றம் இறுதியில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக