பக்கங்கள்

செவ்வாய், 20 டிசம்பர், 2016

மருத்துவக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சாதனை!

திராவிட இயக்கத்தின் சாதனையைப் பாரீர்!
மருத்துவக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சாதனை!
இதனை ஒழித்துக் கட்டத்தான் நுழைவுத் தேர்வு எனும் சதி - எச்சரிக்கை!

தமிழர் தலைவர் ஆசிரியர் சமூகநீதிக்கான அறிக்கை 

தேர்தல் முடிவுகள்  - திராவிட கட்சிகளுக்கு மாற்று ஏதுமில்லை என்பதற்கான நிரூபணம்!  அதிமுக வெற்றி மிகப் பெரியது என்றோ - தி.மு.க. தோல்வி பரிதாபமானது என்றோ சொல்லுவதற்கு இடமேதுமில்லை

நடந்து முடிந்த மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் திறந்த போட்டியில் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் அரும் சாதனையைப் புரிந்துள்ளனர். இந்த நிலையை ஒழித்துக் கட்டத்தான் நுழைவுத் தேர்வு என்ற சதித் திட்டத்தை திணிக்க உயர் ஜாதி வட்டாரம், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் கச்சைக் கட்டி நிற்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

2016-2017ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 2853 இடங்களுக்கு 25,379 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
குறைந்தது 197.75 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த 884 இடங்களைப்  பெறுகின்றனர் .

ஒவ்வொரு பிரிவிலும் மிக அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களும் தரவரிசைப் பட்டியலில்  அவர்களது மதிப்பெண்ணும், தரவரிசை எண்ணும் வருமாறு:

நம் மக்களிடையே ஒரு பொதுவான எண்ணம் உண்டு அல்லது பரப்பப்படுகிறது; தாழ்த்தப்பட்டோர் 35% மதிப்பெண் பெற்றாலே இடம் கிடைத்து விடும் என்பதுதான் அது.  உயர் வகுப்பினர் என்று எண்ணிக் கொள்பவர்கள் 200/200  வாங்கினால் மட்டுமே அனுமதி என்ற தவறான கருத்தும் பரப்பப்படுகிறது. அது தவறானது என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் நிரூபிக்கும்.
புள்ளி விவரங்கள் காட்டுவது என்ன?

மேற்கண்ட புள்ளி விவரங்கள் எதைக் காட்டுகின்றன? திராவிட இயக்க ஆட்சியில் 69 சதவீத இடஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு ஒழிப்பு, கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள் செம்மையாகத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதால் இத்தகைய "அறுவடை" நிகழ்ந்திருக்கிறது.

திராவிட இயக்கத்திற்கான வெற்றி!

திராவிட இயக்கத்தின் சமூகநீதிக்குக் கிடைத்த மகத்தான வெற்றியல்லவா இது!

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற பார்ப்பன சூழ்ச்சியை ஒழித்துக் கட்டியது நீதிக்கட்சி அல்லவா! தந்தை பெரியார் அவர்களின் முயற்சி அல்லவா!
+2 தேர்வு மதிப்பெண் அடிப்படைக் காரணமாக கிராமப்புற ஒடுக்கப்பட்ட ஏழை எளிய நடுத்தர இருபால் மாணவர்களும் இந்தச் சாதனையின் வெற்றிச் சிகரத்தை எட்டியுள்ளனர் பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம்!

வெற்றியை வீழ்த்த சதி!

இந்த வெற்றியைத் தட்டிப் பறிக்கத்தான் - ஆண்டாண்டு காலமாக கல்விஉரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் இந்தச் சாதனையை ஒழித்துக் கட்டத்தான் அகில இந்திய நுழைவுத் தேர்வு எனும் கொடுவாளை கொல்லைப்புற வழியில் தூக்கிக் கொண்டு வருகின்றனர். உயர் ஜாதி வட்டாரமும், பா.ஜ.க., சங்பரிவார்களும் மும்முரம் காட்டுகின்றன; கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின், தலைவர்கள் சமூகநீதியாளர்கள் ஒன்று திரண்டு,  நாம் போராடிப் போராடிப் பெற்ற இந்த நல்வாய்ப்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் இதனை ஒழித்துக் கட்ட துடித்துக் கொண்டு நிற்கும் முயற்சிகளைப் புறந்தள்ளவும்,  நுழைவுத் தேர்வை உள்ளே நுழைய விடாமல் நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தவும் ஒன்றுபட்டு நிற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவுக்கே வழிகாட்டுவோம்!


தந்தை பெரியார் பிறந்த தமிழ்மண் இந்தப் பிரச்சினையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு நிலையை உருவாக்கி, இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கும், வளர்ச்சிக்கும் வழி காட்டுவோம்! வழி காட்டுவோம்!!

வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
-விடுதலை,18.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக