பக்கங்கள்

ஞாயிறு, 26 மார்ச், 2017

திராவிட இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா ?

திராவிட இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா ?

இல்லை ! இல்லை !

பெரியார் சொல்வதென்ன?

" திராவிட இயக்கம் தலித்களின் விடுதலைக்கு எதிரானது " என்ற குற்றச்சாட்டை மறுத்து பதிலளித்த பெரியார் , திராவிடர் இயக்கம் தலித்களின் முன்னேற்றத்திற்காக தனது
கடைசி மூச்சு உள்ளவரை உழைக்கும் என உறுதியளித்தார்.

அதற்கு மேலே போயும் அவர் சொன்னார் :

" நான் , நீங்கள் (தலித்கள் )
தாழ்த்தப்பட்டவர்களின் சங்கங்களில் சேரக்கூடாது என்று எப்போதுமே சொன்னதில்லை. அவற்றினுடைய செயல்பாடுகள் மூலம் நீங்கள்
கண்டிப்பாகப் பயனடையவேண்டும்.
நீங்கள் திராவிட இயக்கத்தில் சேருகிறீர்களோ இல்லையோ
என்பது முக்கியமில்லை.
ஆனால் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தின் தோழர்கள் என்ற அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கங்களின் செயல்பாடுகள்
மூலம் கிடைக்கும் பயன்களை அனுபவிக்கும் உரிமையை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதுதான் முக்கியம்."

(விடுதலை ,  8 ஜூன் 1947 --
தஞ்சை ஆடலரசன் , 1992.)

சான்று : பக்கம் 147.
கட்டுரை : அடையாளங்களை
கட்டியமைப்பது திராவிட இயக்கம்.
ஆசிரியர் : எஸ்.ஆனந்தி
நூல்:வரலாறு ,பண்பாடு ,
            மதச்சார்பின்மை
வௌியீடு: சவுத் விஷன்
                        சென்னை 600 002.

-ஆறுமுகம் எ.பச்சையப்பன்(முக நூல்)

தெலுங்கானா சட்டபேரவையில் இடஓதுக்கீடு சம்பந்தமான விவாதத்தில்...

நேற்று முன் தினம் தெலுங்கானா சட்டபேரவையில் இடஓதுக்கீடு சம்பந்தமான விவாதத்தில் பேசிய முதல்வர் சந்திரசேகரராவ். என் தலைமையிலான அரசு இந்த மாநிலத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க இந்திய அரசோடு எந்த எல்லைக்கும் சென்று போராடுமென்று அறிவித்திருக்கிறார்.

இதில் சிறப்பு என்னவென்றால் இடஓதுக்கீடு சம்பந்தமாக இவ்வளவு முக்கியத்துவமும் அதற்காக விரிவான போராட்டம் செய்யும் உத்வேகத்தை எது/யார் தந்தது என்பதையும் அவரே அதே விவாதத்தில் சொன்னார்.

அவர் தனக்கு உத்வேகமாக இருந்தது தமிழ்நாடும் இதற்கனவே அங்கு இயக்கம் கண்டு வெற்றிபெற்ற ஈ.வெ.ரா பெரியாரும் தான் என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் அவர் நாமெல்லாம் இங்கு  தசரா கொண்டாட லட்சக்கணக்கில் வீதியில் நின்றபோது தமிழ்நாட்டில் மதத்தை தள்ளிவைத்துவிட்டு மனிதத்திற்காக மக்களை ஒருங்கினைத்தார். அதற்கு அவருக்கு எதிர்ப்புகளும் இருந்ததுஏன் செருப்பால் கூட மாலை போட்டார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களுக்காக வாகனம் இல்லாத நேரங்களில் நடந்தே அவர் இந்த வேலையை செய்திருக்கிறார். அந்தளவுக்கு அவர் உறுதியாக இருந்து தமிழகத்தை வழிநடத்தினார். அதுபோலவே நானும் இடஓதுக்கீடுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசியிருக்கிறார். https://www.youtube.com/watch?v=FYge-TuYvfY

பெரியாரின் உழைப்பும் அவர்தம் போராட்டங்களும்  பல  மாநிலங்களுக்கே முன்மாதிரியாக மாறிவரும் வேளையில் அவரின் உழைப்பால் முன்னேறியவர்கள் அவரை வீழ்த்த நினைக்கும் கொடுமையை எங்கே போய் சொல்வது.

நீங்கள் பெரியரை எவ்வளவு தான் இழிவாக பேசினாலும் அவரின் உழைப்பு அதனை எரித்து பொசுக்கும் என்பதை தான் தெலுங்கானா முதலமைச்சரின் பேச்சு உணர்த்துகிறது.
-கட்செவி செய்தி

திங்கள், 13 மார்ச், 2017

காங்கிரசுக் கொடியின் மூவண்ணம் 

காங்கிரசுக் கொடியின் மூவண்ணம் காந்தியால் மாறிய விந்தை தந்தை பெரியார் கண்டுபிடித்த உண்மை

- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்



தந்தை பெரியார் 8.10.1057 அன்று காலை வலங்கைமான் அருகில் கோவிந்தகுடி எனும் ஊரில் திராவிடர் கழகக் கொடியினை ஏற்றி வைத்துப் பேசுகையில் காங்கிரசுக்கொடி குறித்த உண்மையான சுவையான தகவலை அளித்தார்.

“தோழர்களே! திராவிடர் கழகத்திற்கென்று ஒரு கொடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தக்கொடி கழகத்தின் லட்சியத் தையும், கொள்கையையும் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. கட்சிக்கு, சர்க்காருக்கு என்று ஒரு கொடியிருப்பது சம்பிரதாயம். அந்தக் கொடி எல்லாம் பெரும்பாலும் ஒரு கொள்கையை விளக்குவனவேயாகும். ஆனால் நாளடைவில் கொள்கைகள் மங்கிப்போய், அதன் விளக்கத்தை மக்கள் மறந்துவிடுவர்.

காங்கிரசுக்கொடி பிறந்த கதை

காங்கிரசுக்கு ஒரு கொடி இருக்கிறது. அதில் உள்ள மூன்று வண்ணம் மூன்று மதங் களைக் குறிக்கிறது. அந்தக்கொடியை முதலில் அமைத்தவர் பெசன்ட் அம்மையார். அதில் உள்ள மூன்று வண்ணங்கள் சிவப்பு, வெள்ளை, பச்சை. சிவப்பு இந்து மதத்தைக் குறிப்பது, பச்சை முஸ்லீம் மதத்தைக் குறிப்பது. வெள்ளை மற்ற சிறுபான்மையோருடைய மதத்தைக் குறிப்பது.

பெசன்ட் அம்மையார் கொடியை அமைத்தபோது வெள்ளை, பச்சைக்குக் கீழே சிவப்பை அமைத்தார். சிறுபான்மையோராகிய மற்ற மதக்காரர்களுக்கு பெரும் பான்மையோராகிய இந்துக்கள், பாதுகாப்பாய், உதவியாய், ஆதரவாய் இருப்பவர்கள் என்ற தன்மையை உணர்ந்து சிவப்பு கீழே போடப்பட்டது. நல்லெண்ணத்தின் மீதே அவ்வாறு அந்த அம்மையார் செய்தார்.

காந்தியால் பார்ப்பனருக்கு ஆதிக்கம்

அதன் பிறகு காந்தி வந்தார். காந்தி வந்த பின் அவரைப் பார்ப்பனர்கள் நன்றாக விளம்பரப்படுத்தினார்கள். பெசன்ட் அம்மையாரை மறைக்கவே அவ்வாறு செய்தனர். பெசன்ட் காலத்தில் விபூதி பூசுகின்ற பார்ப்பனருக்கு மட்டுமே ஆதிக்கம். காந்தி வந்த பிறகு எல்லாப் பார்ப்பனருக்கும் ஆதிக்கம். காந்தியாரும் பார்ப்பனருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு அதன்படி செயல்படுத்தினார்.

இந்துமத ஆதிக்கத்துக்காகத் தலை கீழ் மாற்றம்

காந்தி வந்தவுடன் கொடியைத் தலை கீழாகத் திருப்பினார். கீழே இருந்த சிவப்பை மேலே போகச்செய்தார். இந்துமதக்காரரைக் குறிக்கவும் மற்ற மதக்காரர்களுக்கு மேலே தான் இந்துமதம் என்ற தன்மையைக் குறிக்கவே அவ்வாறு செய்தார்.

அதோடு இந்த நாட்டு மக்களுக்கு ஒரு தொழில் இருக்க வேண்டும். அதுதான் ராட்டினத்தில் நூல் நூற்பது என்று சொல்லி ராட்டினத்தைக் கொடியில் போட்டார். மக்கள் என்றென்றும் ராட்டினத்தில் நூற்றுக்கொண்டு கூலிகள் நிலைமையில் இருக்க வேண்டுமென்பதே அதன் விளக்கம். உலகத்தில் யந்திரத்தால் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ள இந்த நாளில், 2000 வருடத்துக்கு முந்தைய காட்டுமிராண்டிக் காலத்து ராட்டினத்தைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களை நிரந்தரமான கூலிகளாகவும் இந்துமத ஆதிக்கத்திற்கு அடிமைகளாகவும் ஆக்க வேண்டுமென்பது தான் அந்தக் கொடியின் தத்துவம் அதுவேதான் காங்கிரசின் லட்சியம்.

பார்ப்பனர் செய்த மாற்றம்

பிறகு அரசாங்கம் பார்ப்பனர்கள் கைக்கு வந்துவிட்டது. அரசாங்கக் கொடியில் ராட்டினம் இருந்தால் அதைப்பற்றி உலகத்தாரெல்லாம் விசாரிப்பார்கள். என்னடா நாட்டு மக்களெல்லாம் கூலி வேலை செய்ய வேண்டுமா? என்று உலகத்தாரெல்லாம் சிரிப்பார்கள். ஆகவே அதை மாற்ற நினைத்து அசோக சக்கரத்தைப் போட்டார்கள்.

புத்த நெறி காட்டும் சக்கரம், அசோக சக்கரம் என்றால் அது புத்தரைக் குறிப்பது தான். புத்தருடைய கொள்கையைக் குறிப்பதுதான். புத்தருடைய கொள்கைப்படி சாதி இல்லை. எல்லோருக்கும் சமநீதி வழங்கவேண்டும். புத்தருடைய கொள்கை எந்த மதத்தையும் சார்ந்ததல்ல. அறிவுப்படி ஆராய்ச்சிப்படிதான் ஒவ்வொருவரும் நடக்க வேண்டும். இதுதான் புத்தருடைய கருத்து.

புத்தரை அசோகரைப் பின்பற்றித்தான் ராஜ்யபாரம் செய்கின்றோம் என்ற முறையில் சிங்கச்சின்னம் போட்டுக்கொண்டுள்ளார்கள். அரசாங்கம் பேருக்கு தர்மம், நீதி என்று போட்டுக் கொண்டு காரியத்தில் அக்கிரமமமாக நடக்கிறார்கள்.

மற்றும் புராணத்திலும் கொடிகள் உண்டு. ஏதாவதொரு அடிப்படையில் அவை அமைக்கப்பட்டன. தமிழனுக்கும் ஒரு கொடியிருந்ததாதாகப் புலவர்கள் போடுகிறார்கள்.

இந்த வகையில் கொடியை ஏதோ ஒரு லட்சியத்திற்கு ஏற்பாடு செய்து வைத்து அதைப் பறக்கவிட்டால், அதைப்பார்ப்பவர்கள் லட்சியத்தைத் தெரிந்து கொள்வார்கள்!”

-லிடுதலை.ஞ.4.3.17

புதன், 1 மார்ச், 2017

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாண வர்கள் தீவைத்துக் கொளுத்திய மனுதர்ம




டில்லி பல்கலைக் கழக மாணவர்கள் கொளுத்திய (8.3.2016) மனுதர்ம வாசகங்களைக் காணீர்!!

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாண வர்கள் தீவைத்துக் கொளுத்திய மனுதர்ம நூலின் 40 விதிகள்

1.  ‘‘எந்தப் பருவத்தினளாயினும், தனது இல்லத் திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலா காது’’ (10 : 147)

2. ‘‘இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது’’ (10 : 148).

3. ‘‘இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குண மின்மை இவற்றையுடையவனா யினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக’’

(10 : 154).

4. ‘‘அன்றாட வேள்விகள் அய்ந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு’’ (9 : 14).

5. ‘‘நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண் பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும் போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை’’ (9 : 15).

6. ‘‘இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது’’ (9 : 17).

7. ‘‘படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்’’ (9 : 17).

8. ‘‘மாதர்க்குப் பிறவியைத் தூய்மை யாக்கும் சமஸ்காரங்கள் மந்திரபூர்வமாகச் செய்வித்தல் யாது மின்று. இவர்களுக்கு வெள்ளை யுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர்’’ (9 : 18).

9.  ‘‘பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் அப்பேது ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்திரவு பெற்றுக்கொண்ட தன் மைத்துனன் அல்லது தன் கணவ னுக்கு ஏழு தலை முறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்க தான ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம்.’’

( அத் 9. சு.59)

10.  ‘‘கணவன் துராசாரமுள் ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனாயிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப்போல பூசிக்க வேண்டியது.’’ ( அத் 5. சு.154)

11. ‘‘பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌ வனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது.’’ ( அத் 5. சு.148)

12. ‘‘பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.’’ ( அத் 11 சு.65)

13. ‘‘தனக்கு பொக்கிஷநாசம் முதலிய மேலான ஆபத்து வந்தாலும் அரசன் அதிகத் தீர்வையை ஏற்படுத்தி பிராமணர்களுக்குக் கோபம் வரச் செய்யக் கூடாது. அவர்கள் கோபித்தால் இவன் சேனை யோடும். வாகனத்தோடும் அழிந்து போகும்படி சபிப்பார்கள்.’’ (அத் 9. சு.343)

14. ‘‘வைதீகமாக இருந்தாலும், லவுகீகமாக இருந் தாலும் மூடனாயிருந்தாலும் பிரா மணனே மேலான தெய்வம். ‘’ ( அத் 9. சு.317)

15. ‘‘ஒளியுள்ள அக்கினியானது மயானத்தில் பிணத்தைத் தகித்தாலும் நிந்தனை இல்லாமல் எப்படி ஹோமத்தினால் விர்த்தி செய்யப்படுகின்றதோ அப்படியே பிராமணன் கெட்ட காரியத்தில் ஈடு பட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவன்; மேலானவன்.

அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால் அதில் பாதியை பிராமணர்களுக்கு தானஞ்செய்து மற்றதை தன் பொக்கிஷத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியது.’’ ( அத் 8. சு.38)

16. ‘‘பிராமணனுக்குத் தலையை முண்டிதஞ் செய்வது (மொட்டை அடிப்பது) கொலைத் தண்ட னையாகும். மற்ற வருணத் தாருக்கு கொலைத் தண்டனை யுண்டு.’’ ( அத் 8. சு.379)

17. ‘‘சர்ப்பம், பிராமணன் இளைத்திருந்தாலும் அவனை அவமானம் செய்யக்கூடாது.’’ (அத் 4. சு.135-6)

18. ‘‘பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யாமலும் துன்பப்படுத்தாமலும் அவன் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்பவேண்டும்.’’ (அத் 8. சு.380)

19. ‘‘பிராமணனுக்கு மங்களத்தையும், சத்திரி யனுக்குப் பலத்தையும், வைசியனுக்குப் பொருளை யும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டியது. சூத்திரனுக்குத் தாஸன் என்ற தொடர் பெயராக இடவேண்டியது.’’ (அத் 2. சு.31-32)

20. ‘‘பிராமணனுக்கு பஞ்சு நூலாலூம், சத்ரியனுக்கு சணப்ப நூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது.’’ (அத்2. சு.44)

21. ‘‘பன்றியின் மோத்தலினாலும், கோழிச் சிறகின் காற்றினாலும், நாயின் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது. (அத்3.சு,241) சிரார்த்த உணவு சூத்திரனுக்குக் கூடாது.’’

22. ‘‘எவன் சிரார்த்தஞ்செய்து அன்னம் முதலிய வற்றை சூத்திரனுக்குப் போடுகிறானே அந்த மூடன் கால சூத்திரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான்.’’ (அத் 3. சு. 249)

23. ‘‘இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்கவேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது’’ (10 : 54).

24. ‘‘அந்த சிரார்த்தத்தில் (சூத்திரனுக்கு தானஞ்செய்யப்பட்ட சிரார்த்தத்தில்) புசித்த பிராமணன், தன் மனைவி புணர்ச்சி யினாசையால் வந்தபோதிலும், அவளுடன் அன்று சம்போகஞ் செய்தால் அவளு டைய மலத்தில் அந்த மாதம் முழுவதும் அவனுடைய பிதுர்க்கள் மூழ்குகிறார்கள்.’’ (அத்.3.சு .250)

25. ‘‘சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும் 1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன். 2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன். 4. விபச்சாரி மகன். 5. விலைக்கு வாங்கப்பட்டவன். 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன். 7. தலைமுறை தலை முறையாக ஊழியம் செய்கிறவன்.’’ (அத் 8. சு. 415)

26. ‘‘சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, ஜீவனத்திற் காவது அல்லது இரண்டிற்குமாவது, பிராமணனையே தொழவேண்டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம்.’’ (அத் 10. சு .122)

27.‘‘பிராமணர்களைவழிபடாததனாலும்உப நயனம் முதலிய சடங்குகள் செய்து கொள்ளாத தனாலும் சத்திரியர் வரவர சூத்திரத் தன்மை அடைந்தார்கள்.’’ (அத்10. சு.43)

28. பிராமணன் உண்டு மிகுந்த உணவு(எச்சில்) உடுத்திக் கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம்(பதர்) இவைகளைப் பிராமணன், சூத்திரன் ஜீவனத்திற்குக் கொடுக்க வேண்டும். (அத்.10.சு.,125)

29. ‘‘சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணர் வேலை வாங்கலாம், பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத் திருக்கிறார்.’’ (அத்.8. சு 413)

31. ‘‘சூத்திரன், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும்படி அரசன் செல்ல வேண்டியது, அப் படிச் செய்யாவிட்டால் அரசர்கள் தண்டித்து அங்ஙனம் செய்யச் சொல்ல வேண்டியது.’’ (அத் 8. சு. 235)

32. ‘‘சூத்திரன் மற்ற மூன்று வருணத் தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தர்மமாக ஏற்படுத்தினார் ; இதனால் அவனுக்குத் தானம் முதலியவையும் உண்டென்று தோன்றுகிறது’.’ (அத் 1. சு.91)

33. ‘‘யாகம் செய்யாதவனுடைய (சூத்திரன்) பொருள் அசுரர் பொருளாகும் . ஆகையால் அதைக் கொள்ளையிடுவது தர்மமாகும்.’’ (அத். 7. சு.24)

34. ‘‘செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும், கேளாமலும் பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம்.’’ (அத்.11. சு.13)

35.‘‘சூத்திரன்பொருள்சம்பாதிக்கத்தக்க வனாயிருந்தாலும், குடும்பத்திற்கு உபயோகமானதை விட அதிகப் பொருளை சம்பாதிக்கக் கூடாது. அப்படிச் சம்பாதித்தால் தன்னால் உபசரிக்கத்தக்க பிராமணனையே இம்சை செய்யவேண்டி வரும்.’’ (அத்.10.சு.129)

36. ‘‘சூத்திரன், பிராமணர்களைத் திட்டி னால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்.’’ (அத்.8.சு.270)

37. ‘‘சூத்திரன் பிராமணன் பெயர்,சாதி இவை களைச் சொல்லித் திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்கவேண்டும்.’’ (அத்.8.சு.271)

38. ‘‘சூத்திரன் பிராமணனைப் பார்த்து, நீர் இதைச் செய்ய வேண்டும் என்று உபதேசம் செய்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்.’’ (அத்.8. சு.272)

39. ‘‘சூத்திரன் பிராமணனுடன் ஒரு ஆசனத்தில் உட்கார்ந்தால், இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும்.’’ (அத்.8.சு.281)

40. ‘‘சூத்திரன் பிராமணனின் எந்தெந்த உறுப்பு களை கையினாலும் தடியினாலும் தாக்குகிறானோ, அந்தந்த உறுப்புகளை நறுக்க வேண்டும் அடித்தால் கையையும் , உதைத்தால் காலையும் வெட்டிவிட வேண்டும்.’’ (மனு. அத் 9. சு.280)

-விடுதலை,1.3.17

பிற்படுத்தப்பட்டோர்இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுகிறது



தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினரான எஸ்.கே.கார்வேந்தன் மத்திய அரசு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் புறக்கணித்துவருவதாகக் கூறியுள்ளார்.
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும், மக்களவை யின் காங்கிரஸ் உறுப்பினராக இரண்டு முறையும் இருந்த எஸ்.கே. கார்வேந் தன் தற்போது தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் உறுப்பின ராக இருக்கிறார்.
அவர் தி இந்து இதழுக்கு (5.4.2015) அளித்த பேட்டி விவரம் வருமாறு:
கேள்வி: தேசிய பிற்படுத்தப்பட் டோர் ஆணையம் எப்போது, என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது?
பதில்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ஆம் ஆண்டு அமல்படுத் தப்பட்டபோது தாழ்த்தப்பட்டவர் மற்றும் மலைவாழ்மக்கள் பட்டியல் அரசிடம் இருந்தது. ஆனால், யாரெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பட்டியல் அரசிடம் இல்லை. அதற்காக, அம்பேத்கர் ஆலோசனை யின்படி பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையை அடையாளம் காண ஒரு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 340-இல் தெளிவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1978இ-ல் பி.பி. மண்டல் தலைமையில் ஒரு ஆணை யம் அமைத்தார். அந்த ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு நடத்திப் பல தரப்பினரையும், மாநில அரசுகளையும் விசாரித்து 31.12.1980 அன்று தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.
பல ஆண்டுகளாக அமல்படுத்தப் படாமல் இருந்த அந்த அறிக்கையை, நாடு முழுவதும் நடந்த மாபெரும் போராட்டங்களுக்குப் பின், 1989-இல் அப்போதைய பிரதமர் வி.பி. சிங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து வி.பி. சிங் 1990-இல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அரசுப் பணியில் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆணை பிறப்பித்தார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்திரா சஹானி தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இதர பிற்படுத்தப்பட்டோருக்காக தேசிய அளவில் ஒரு ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் மாநில அளவில் ஆணையங்களும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதற்குப் பிறகு உருவாக்கப்பட்டதுதான் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.
கேள்வி: உங்கள் ஆணையத்தின் முக்கியப் பணிகள் என்ன?
பதில்: சமூக ரீதியாக, கல்விரீதி யாகப் பின்தங்கிய சமுதாயத் தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதும், தவறாகச் சேர்க்கப்பட்டு விட்டதாகப் புகார்கள் வந்தால் அந்தச் ஜாதியினரைப் பட்டியலிலிருந்து நீக்குவதும்தான் எங்கள் பணிகள்.
கேள்வி: நாடு முழுவதும் மாநில வாரியாக எத்தனை ஜாதியினர் தேசிய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்?
மண்டல் கமிஷன் நாடு முழுவதும் 3,743 ஜாதியினரைப் பிற்படுத்தப்பட் டோராக அடையாளம் காண்பித்தது. எங்கள் ஆணையம் முறையான விசா ரணைக்குப் பின்னர் இதுவரை மொத்தம் 2,418 சாதியினரைப் பட்டியலில் சேர்த் துள்ளது. இவற்றில் 47 ஜாதியினரை நீக்குவது குறித்தும், மேலும் 298 சாதி யினரைச் சேர்ப்பது குறித்தும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி: ஒரு ஜாதியினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும் நீக்கவும் உங்கள் ஆணையம் பின்பற்றும் வழிமுறைகள் என்ன?
பதில்: ஜாதிய அமைப்பினரிடம் அல்லது மாநில அரசிடம் இருந்தோ கோரிக்கை வருமானால் அதைப் பதிவு செய்து மாநில அரசிடமும், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமும் அந்த சாதியைப் பற்றி அறிக்கை கேட்கிறோம். அறிக்கை பெற்ற பின்னர் அந்த மாநிலத்துக்கே சென்று கோரிக் கையாளரையும், சம்பந்தப்பட்ட மாநில அரசையும் விசாரித்து, குறிப்பிட்ட ஜாதி யினர் சமூகரீதியாக, கல்விரீதியாகப் பின்தங்கியவர்களாக இருந்தால் அவர் களைப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கிறோம். எங்கள் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு, அரசாணை வெளியிடும். பட்டியலி லிருந்து ஒரு சாதியை நீக்குவதற்கும் இதே முறைதான் பின்பற்றப்படுகிறது.
கேள்வி: உங்களுடைய பரிந்துரை இறுதியானதா? அதை அரசு நிராகரிக்க லாமா?
பதில்: எங்களுடைய பரிந்துரை அரசைக் கட்டுப்படுத்தும் என தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட் டத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அரசு எங்கள் பரிந்துரையை நிராகரிக்க வேண்டுமென்றால் அதற்கு தகுந்த கார ணங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
எங்கள் பரிந்துரையையும் மீறிக் கடந்த ஆட்சியில் ஜாட்டுகளுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டதுதான் இந்த ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய முக் கியக் காரணமாக அமைந்தது.
கேள்வி: இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கான 27% இடஒதுக்கீடு மத்திய அரசின் பணிகளில் கடைப்பிடிக்கப் படுகிறதா?
பதில்: இதர பிற்படுத்தப்பட்டோருக் கான மத்திய அரசுப் பணிகளில் 27சதவீத இடஒதுக்கீடு 1993-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது, ஆனால், மத்திய அரசின் சில துறைகளில் ஏ பிரிவில் ஒருவர்கூட பணியில் இல்லை. அனைத் துத் துறைகளிலும் பார்த்தால் 0 சதவீதம் முதல் 10 சதவீதம் பேர் மட்டும் உள்ளனர். காரணம் பெரும்பாலான துறைகளில் ஏ, பி, சி ஆகிய பிரிவுகளில் பல பதவிகள் காலியாகவே உள்ளன. அவற்றைப் பூர்த்திசெய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.
கேள்வி: இந்த 27சதவீத ஒதுக்கீடு, குறைந்தபட்சம் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலாவது அமல்படுத்தப் பட்டுள்ளதா?
மத்திய அரசின் கீழ் நடைபெறும் பல கல்வி நிறுவனங்கள் இதுவரையிலும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவ, மாண வியருக்கு முழுமையாக இடஒதுக்கீடு வழங்கவில்லை. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகள் மற்றும் இந்திய ராணுவ அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகளுக்கான இடஒதுக்கீடு வழங் கப்படுகிறது. ஆனால், இதுவரை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15(5)-க்குப் புறம்பாக அவை செயல்படுகின்றன.
கேள்வி: அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப் பட்ட ஊழியர்களின் உரிமைகள் முறைப் படி காக்கப்படுகிறதா?
பதில்: அரசுப் பொதுத்துறை நிறுவ னங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்ட ஊழியர்களின் உரிமைகளைக் காக்க இந்திய அரசின் பணியாளர் நலத் துறை அமைச்சகம் பல வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. உதாரணமாக, ஒவ் வொரு துறையும் இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர்களுக்கென்று தனி ஒருங் கிணைப்பு அதிகாரியை, அதுவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்தே நியமிக்க வேண்டும்; குறைந்தபட்சம் ஆண்டுக்கு இருமுறை கூட்டம் நடத்த வேண்டும்; ஊழியர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடித் தனி அலுவலக அறை ஒதுக்கித்தர வேண்டும்; பணி நியமனங்களுக்கான குழுவில் ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும், என் றெல்லாம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பல பொதுத்துறை நிறுவனங்கள், வங் கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் இதில் எந்த வழிகாட்டுதலையும் பின்பற்றவில்லை.
கேள்வி: பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த வசதி படைத்த முன் னேறியவர்களை இடஒதுக்கீடு சலுகை பெறாமல் தடுக்க என்ன வழி பின்பற்றப்படுகிறது?
மண்டல் வழக்கு எனப்படும் இந்திரா சஹானி வழக்கில் இந்திய உச்ச நீதி மன்றம் பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறி யவர்களை கிரீமிலேயர் பிரிவினர் என அடையாளம் காட்டியுள் ளது. இட ஒதுக்கீடு சலுகையிலிருந்து நீக்கப்பட வேண்டிய கிரீமிலேயர் பிரி வினரைக் கண்டுபிடிக்க இந்தியஅரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த நிபுணர் குழு (1) பிரதமர், குடியரசுத் தலைவர் நீதிபதிகள் போன்ற அரசியல் சாசன தகுதி பதவி வகிப்பவர்கள் (2) அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.
குரூப் ஒன்று பணியில் உள்ளவர்கள் (3) இராணுவ உயர் அதிகாரிகள் (4) தொழில் துறையில் கிரீமிலேயர் வருமான வரம்புக்குமேல் வருமானம் சம்பாதிப் பவர்கள். (5) 85சதவீத பாசன நிலம் வைத்துள்ள விவசாயிகள் ஆகிய அய்ந்து பிரி வினரையும் அடையாளப் படுத்தியது. இதில் 2- வது பிரிவில் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் பணியாற்றுப வர்களில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் அதிகாரிகளுக்கு இணையான அந்தஸ் தில் உள்ளவர்கள் கிரீமிலேயர் பட்டி யலில் வருவார்கள்.
சமமான பதவியில் உள்ளவர்கள் யார் யார் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். அதுவரை அவர்களின் வருமானம், மற்றும் சொத்து மதிப்பின் அடிப்படையில் அவர்கள் நிலை தீர்மானிக்கப்பட வேண்டும் என அறிவு றுத்தப்பட்டுள்ளது. இதில் அவர்களின் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என விதிவிலக்கு அளித்துள்ளது.
இதன் விளைவாகப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் உயர்பதவி வகிப்பவர்கள் அதுவும் ஆண்டுக்கு ரூ. 15 இலட்சத்துக்குமேல் சம்பளம் வாங் குபவர்கள்கூட இடஒதுக்கீடு சலுகை பெறுகிறார்கள். அதன் விளைவாக ஏழ்மையில் வாழும் உண்மையான பின்தங்கிய சமுதாயத்தினர் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் கடந்த 23 ஆண்டு காலமாக மத்திய அரசின் முதல் நிலைப் பணியாளர்களுக்கு இணையாகச் சம அந்தஸ்தில் உள்ள பதவி வகிப்பவர்கள் யார் யார் என்பதைத் தீர்மானிக்க எவ் வித நடவடிக்கையும் எடுக்காதது தான்.
தற்போது புதிய அரசு மத்தியில் பொறுப்பேற்ற பின்னர் அந்தப் பணியை எங்களிடம் கொடுத்துள்ளது. கிரீமிலேயர் சம்பந்தமாக அனைத்துக் குறைகளையும் களையவும், கிரீமிலே யருக்குத் தற்போது உள்ள 6 லட்சம் ரூபாய் வரம்பை 10.5 லட்சமாக உயர்த் தவும் பல தரப்பினரின் கருத்துக்களைப் பெற்று அரசுக்கு கடந்த மார்ச் 2இ-ல் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். நமது பிரதமர் பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்தவர் என்பதால் நம் முடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார் என்று நம்புகிறோம்!
- இவ்வாறு கார்வேந்தன் பேட்டியில் கூறியுள்ளார்.
நன்றி: தி இந்து  - 5.4.2015
-விடுதலை,6.4.15