பக்கங்கள்

திங்கள், 13 மார்ச், 2017

காங்கிரசுக் கொடியின் மூவண்ணம் 

காங்கிரசுக் கொடியின் மூவண்ணம் காந்தியால் மாறிய விந்தை தந்தை பெரியார் கண்டுபிடித்த உண்மை

- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்தந்தை பெரியார் 8.10.1057 அன்று காலை வலங்கைமான் அருகில் கோவிந்தகுடி எனும் ஊரில் திராவிடர் கழகக் கொடியினை ஏற்றி வைத்துப் பேசுகையில் காங்கிரசுக்கொடி குறித்த உண்மையான சுவையான தகவலை அளித்தார்.

“தோழர்களே! திராவிடர் கழகத்திற்கென்று ஒரு கொடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தக்கொடி கழகத்தின் லட்சியத் தையும், கொள்கையையும் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. கட்சிக்கு, சர்க்காருக்கு என்று ஒரு கொடியிருப்பது சம்பிரதாயம். அந்தக் கொடி எல்லாம் பெரும்பாலும் ஒரு கொள்கையை விளக்குவனவேயாகும். ஆனால் நாளடைவில் கொள்கைகள் மங்கிப்போய், அதன் விளக்கத்தை மக்கள் மறந்துவிடுவர்.

காங்கிரசுக்கொடி பிறந்த கதை

காங்கிரசுக்கு ஒரு கொடி இருக்கிறது. அதில் உள்ள மூன்று வண்ணம் மூன்று மதங் களைக் குறிக்கிறது. அந்தக்கொடியை முதலில் அமைத்தவர் பெசன்ட் அம்மையார். அதில் உள்ள மூன்று வண்ணங்கள் சிவப்பு, வெள்ளை, பச்சை. சிவப்பு இந்து மதத்தைக் குறிப்பது, பச்சை முஸ்லீம் மதத்தைக் குறிப்பது. வெள்ளை மற்ற சிறுபான்மையோருடைய மதத்தைக் குறிப்பது.

பெசன்ட் அம்மையார் கொடியை அமைத்தபோது வெள்ளை, பச்சைக்குக் கீழே சிவப்பை அமைத்தார். சிறுபான்மையோராகிய மற்ற மதக்காரர்களுக்கு பெரும் பான்மையோராகிய இந்துக்கள், பாதுகாப்பாய், உதவியாய், ஆதரவாய் இருப்பவர்கள் என்ற தன்மையை உணர்ந்து சிவப்பு கீழே போடப்பட்டது. நல்லெண்ணத்தின் மீதே அவ்வாறு அந்த அம்மையார் செய்தார்.

காந்தியால் பார்ப்பனருக்கு ஆதிக்கம்

அதன் பிறகு காந்தி வந்தார். காந்தி வந்த பின் அவரைப் பார்ப்பனர்கள் நன்றாக விளம்பரப்படுத்தினார்கள். பெசன்ட் அம்மையாரை மறைக்கவே அவ்வாறு செய்தனர். பெசன்ட் காலத்தில் விபூதி பூசுகின்ற பார்ப்பனருக்கு மட்டுமே ஆதிக்கம். காந்தி வந்த பிறகு எல்லாப் பார்ப்பனருக்கும் ஆதிக்கம். காந்தியாரும் பார்ப்பனருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு அதன்படி செயல்படுத்தினார்.

இந்துமத ஆதிக்கத்துக்காகத் தலை கீழ் மாற்றம்

காந்தி வந்தவுடன் கொடியைத் தலை கீழாகத் திருப்பினார். கீழே இருந்த சிவப்பை மேலே போகச்செய்தார். இந்துமதக்காரரைக் குறிக்கவும் மற்ற மதக்காரர்களுக்கு மேலே தான் இந்துமதம் என்ற தன்மையைக் குறிக்கவே அவ்வாறு செய்தார்.

அதோடு இந்த நாட்டு மக்களுக்கு ஒரு தொழில் இருக்க வேண்டும். அதுதான் ராட்டினத்தில் நூல் நூற்பது என்று சொல்லி ராட்டினத்தைக் கொடியில் போட்டார். மக்கள் என்றென்றும் ராட்டினத்தில் நூற்றுக்கொண்டு கூலிகள் நிலைமையில் இருக்க வேண்டுமென்பதே அதன் விளக்கம். உலகத்தில் யந்திரத்தால் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ள இந்த நாளில், 2000 வருடத்துக்கு முந்தைய காட்டுமிராண்டிக் காலத்து ராட்டினத்தைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களை நிரந்தரமான கூலிகளாகவும் இந்துமத ஆதிக்கத்திற்கு அடிமைகளாகவும் ஆக்க வேண்டுமென்பது தான் அந்தக் கொடியின் தத்துவம் அதுவேதான் காங்கிரசின் லட்சியம்.

பார்ப்பனர் செய்த மாற்றம்

பிறகு அரசாங்கம் பார்ப்பனர்கள் கைக்கு வந்துவிட்டது. அரசாங்கக் கொடியில் ராட்டினம் இருந்தால் அதைப்பற்றி உலகத்தாரெல்லாம் விசாரிப்பார்கள். என்னடா நாட்டு மக்களெல்லாம் கூலி வேலை செய்ய வேண்டுமா? என்று உலகத்தாரெல்லாம் சிரிப்பார்கள். ஆகவே அதை மாற்ற நினைத்து அசோக சக்கரத்தைப் போட்டார்கள்.

புத்த நெறி காட்டும் சக்கரம், அசோக சக்கரம் என்றால் அது புத்தரைக் குறிப்பது தான். புத்தருடைய கொள்கையைக் குறிப்பதுதான். புத்தருடைய கொள்கைப்படி சாதி இல்லை. எல்லோருக்கும் சமநீதி வழங்கவேண்டும். புத்தருடைய கொள்கை எந்த மதத்தையும் சார்ந்ததல்ல. அறிவுப்படி ஆராய்ச்சிப்படிதான் ஒவ்வொருவரும் நடக்க வேண்டும். இதுதான் புத்தருடைய கருத்து.

புத்தரை அசோகரைப் பின்பற்றித்தான் ராஜ்யபாரம் செய்கின்றோம் என்ற முறையில் சிங்கச்சின்னம் போட்டுக்கொண்டுள்ளார்கள். அரசாங்கம் பேருக்கு தர்மம், நீதி என்று போட்டுக் கொண்டு காரியத்தில் அக்கிரமமமாக நடக்கிறார்கள்.

மற்றும் புராணத்திலும் கொடிகள் உண்டு. ஏதாவதொரு அடிப்படையில் அவை அமைக்கப்பட்டன. தமிழனுக்கும் ஒரு கொடியிருந்ததாதாகப் புலவர்கள் போடுகிறார்கள்.

இந்த வகையில் கொடியை ஏதோ ஒரு லட்சியத்திற்கு ஏற்பாடு செய்து வைத்து அதைப் பறக்கவிட்டால், அதைப்பார்ப்பவர்கள் லட்சியத்தைத் தெரிந்து கொள்வார்கள்!”

-லிடுதலை.ஞ.4.3.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக