பக்கங்கள்

புதன், 28 மார்ச், 2018

1933இல் வேலூர் போலீஸ் பயிற்சி மய்யத்தில்...

காவல்துறை பயிற்சி மய்யத்தில் பயிற்சி பெறும் போலீஸ்காரர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று ஆணையிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு பார்ப்பனர்கள் வலியுறுத்திய நிலையில் பார்ப்பனர்களைக் கண்டித்து தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்.

“போலீசுக்கு ஆள்களைச் சேர்த்து பயிற்சி கொடுத்துவரும் வேலூரில் உள்ள போலீஸ் சிப்பாய்களை அவர்களது மேல் அதிகாரி யானவர் எல்லா போலீஸ்காரர்களும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடவேண்டும் என்று சொன்ன தற்காக உடனே இரண்டு  மேல்ஜாதிக்கார  போலீஸ்காரர்கள் ராஜினாமா செய்து விட்டார்கள், என்றும் இதைப்பற்றி சட்ட சபையில் கேள்விகேட்டு அந்த அதிகாரிமீது தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் ‘சுதேசமித்திரன்’ என்னும் ஒரு  தேசியப் பத்திரிகை 11.-03.-1933ந்தேதி தனது நிரூபர் பெயரால் ஒரு நீண்ட வியாசம் எழுதி இருக்கின்றது.

இந்தக் காரியம் ஒன்று சுதேசமித்திரனின் தேசியத்திற்கு விரோதமானதாக இருந்திருக்க வேண்டும், அல்லது பொது ஜனங்களுக்கே  இது ஒரு விரோதமான காரியமாய் இருந்திருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் ராணுவத்தை இந்த ஜனங்களைக் கொண்ட இந்திய மயமாக்கலாமா? என்பது தான் நமது கேள்வி. இதுசமயம்  வேலூர் போலீசார் வெட்டிசாதம் சாப்பிட்டுக் கொண்டு சோம்பேறியாய் இருக்கின்ற சமயமானதால் இரண்டு போலீஸ்காரர்கள் ராஜினாமாக் கொடுத்து விட்டதினால் ஒன்றும் முழுகிப்போய் விடவில்லை. தவிரவும் இந்த சமயம் பழசு போனால் புதுசு தானாக வரக்கூடிய சமயமுமாகும். ஆனால் யுத்தத்துக்கு தயார் செய்யப்பட்ட ஒரு நெருக்கடியான சமயத்தில் இம் மாதிரியான ஒரு நிலைமை. அதாவது ஒரு யுத்தத்துக்கு போன இடத்தில் ஒவ்வொரு ராணுவ வீரனும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு ராணுவ அதிகாரி அந்தப்படி உத்தரவு போட்ட உடன் இந்த இந்திய மயமாக்கிய போர்வீரர்கள் (வேலூரில் செய்தது போலவே) உடனே ராஜினாமாக் கொடுத்து விடுவார்களேயானால் யுத்தத்தின் தன்மை என்னவாய் முடியும் என்பதை சற்று இந்திய தேசியவாதிகளும், இந்திய சட்டசபை பிரதிநிதிகளும், தேசியப் பத்திராதி பர்களும் சிந்தித்துப் பார்ப்பார்களாக.

இந்தியன் என்பவனுக்கு ஒவ்வொரு வருணத்துக்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் சாப்பாட்டில் ருசி வேறு, சமையல் செய்வதில் பக்குவம் வேறு, சமையல் செய்வதற்கு சமையல்கரனுடைய ஜாதி வேறு, சமையல் செய்ய வேண்டிய இடம் வேறு சமைக்கப்பட வேண்டிய சாமான்கள் வேறு, சாப்பிடுவதற்கு இடம் வேறு என்று இப்படிப்பட்ட அநேகமான? வேறு வேறுகள் வேண்டுமானால் பிறகு இதற்குத் தகுந்த மனச்சாட்சிகளும் வேறு வேறு வேண்டுமானால் இதை விசாரித்து நடவடிக்கை நடத்தி நீதி செலுத்த சட்டசபை மெம்பர்களும் வேறு வேறு  வேண்டியிருக்கு மானால் இவை சாத்தியப்படுமா? என்பதை யோசித்துப் பாருங்கள். சாத்தியப்பட்டாலும் இந்த யோக்கியதை கொண்ட ராணுவத்தை யுடைய ஆட்சி உருப்படி ஆகுமா? என்று கேட்கின்றோம்.

ஒரு மனிதனுடன் கூட இருந்து உண்ணுவதால் தனது யோக்கியத்தை கெட்டுபோய் விடுகின்றதென்று ஒருவன் தனது உத்தியோகத்தை ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடுவதும் இதை விசாரித்து இந்தப்படி உத்தரவு போட்ட மேலதிகாரியின் மேல் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு தேசியப்பத்திரிக்கை எழுதுவது மானால் இந்த நாட்டுக்கு ஒரு சுயராஜ்யம் வேண்டுமா? அல்லது இந்த நாட்டை நான் கொல்லையில் நெருப்பு வைத்துக் கொளுத்தி சாம்பலாக்கி சமுத்திரத்தில் கரைத்து விட்டு பாலைவனமாக ஆக்கிவிட வேண்டுமா? என்று தான் கேட்கின்றோம். அந்நிய ஆட்சி இருக்கும்போதே ஏற்கனவே இந்த நாட்டை ஜமீன்தாரர்களும், சோம்பேறி களான பார்ப்பனர்களுமே ஆளுகிறார்கள். இனி சுயாட்சி என்பது கிடைத்து தட்டிப் பேசவே ஆளில்லாத நிலையில் சாட்சிக்குக்கூட ஒரு அந்நியன் இங்கில்லாத ஒரு நிலை ஏற்பட்டு விடுமானால் இந்த நாட்டு உழைப்பாளி மக்களின் கதி, தாழ்த்தப்பட்ட மக்களின் கதி என்ன ஆவது என்பது தான் நமது கவலை. இந்த நாடு சமதர்ம நாடு ஆகவேண்டுமானால், இந்த நாட்டில் முதலாளிகளையும், மேல்ஜாதிக் காரர்கள் என்னும் சோம்பேறிகளையும் காப்பாற்றும், பாதுகாக்கும் அரசியலும், மற்றப் பாதுகாப்புகளும் அடியோடு அழிக்கப்பட வேண்டுமானால் ராணுவத்தை இந்திய மயமாக்குவது என்பது ஒருநாளும் கூடாத காரியமேயாகும். இந்திய மயமாக்க வேண்டும் என்று சொன்னவுடனே வகுப்புவாரி உரிமை வந்தே தீரும். ஒவ்வொரு வகுப்புக்கு ஒரு சிப்பாய் ராணுவ அதிகாரி ஏற்பட்டே தீரும். அதிலும் கூட இப்போதைய போலவே சூழ்ச்சிக் காரர்களும், தந்திரக்காரர்களும், மேல் ஜாதிக்காரர்களும் அதிகமான எண்ணிக்கை ஸ்தானங்களை எப்படியாவது கைப்பற்றியே தீருவார்கள். இவர்கள் எப்பொழுதும் உழைப்பாளிகள் மேலும், பாட்டாளிகள்மேலும் சமதர்மத்துக்கு வாதாடுபவர்கள் மேலும் தான் இவர்களது துப்பாக்கியையும், மிஷின் பீரங்கிகளையும் திருப்புவார்களே ஒழிய ஒரு நாளும் ஏழைகளை வஞ்சித்து அவர்களது உழைப்பைக் கொள்ளை கொள்கிறவர்கள் மீதும் அவர்களை அடக்கி வைத்திருப்பவர்கள் மீதும் திருப்பவே மாட்டார்கள். ஆதலால் இந்த நிலையில் இந்தியா ஒரு நாளும் சமதர்ம நாடாக முடியவேமுடியாமல் போய்விடும்.

- தந்தை பெரியார், ‘குடிஅரசு’ 19.3.1933
(தொடரும்)👌🏽

-  உண்மை இதழ், 1-15.3.18

ஞாயிறு, 18 மார்ச், 2018

பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை புகுத்தும் செயல்!




-விடுதலை நாளேடு, 13.3.18

ஜாதி ஆணவத்துடன் தாழ்த்தப்பட்ட பெண்ணைத் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ.மீது வழக்குப் பதிவு




டேராடூன், மார்ச் 13 பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், ருத் ராபூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமாகிய ராஜ்குமார் துக்ரால் என்பவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை ஜாதி ஆணவத்துடன் தாக்கியுள்ளார். தாழ்த்தப்பட்ட பெண்ணை பாஜக சட்டமன்ற உறுப்பினர் தாக்கிய காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு பரவியுள்ளது.

காதலித்த பெண்ணுடன் இளைஞர் சென்றது தொடர் பான பிரச்சினையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் துக் ரால் தன்னுடைய வீட்டில் இருதரப்பினரையும் அழைத்துப் பேசியுள்ளார். அப்போது, அவ் விளைஞரின் தாயை பாஜக சட்டமன்ற உறுப்பினர் துக்ரால் அடித்துள்ளார். அதனையடுத்து, அவ்விளைஞரின் தந்தை காவல் துறையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் துக்ரால்மீது புகார் கொடுத்தார்.

அதனையடுத்து,வன்கொடு மைத் தடுப்புச் சட்டப் பிரிவு உள்படபல்வேறுபிரிவுகளின் கீழ்  பாஜக சட்ட மன்ற உறுப்பி னர் ராஜ்குமார் துக்ரால் மற்றும் பாஜகவைச் சேர்ந்த மேலும் இருவர்மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார் அளித்தவர் தற்பொழுது, சில ரின் நெருக்குதலால் புகார் அளித்ததாகக்குறிப்பிட்டு அதைத் திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளாராம்.

உத்தம்சிங் நகர் காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் சுதா னந்த் தத்தே  கூறுகையில்,

Òபுகாரைத்திரும்பப்பெறு வதாகக்கூறினாலும்,வழக் குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதைய டுத்து காவல்துறையினர்  தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்’’ என்றார்.

துக்ரால் இதுகுறித்து கூறு கையில்,

இது காங்கிரசு கட்சியின் சதிச்செயல் என்றும், தன்னு டைய வீட்டில் கண்காணிப்பு கேமரா பதிவைக் கொண்டு ஆராயலாம் என்றும் கூறினார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் துக்ரால்இப்பிரச்சினையில் 10 நாள்களுக்குள்ளாகவிளக்கம் அளிக்குமாறு கோரி மாநிலத் தலைவர் அஜய்பட் விளக் கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓட்டுநர் ஒருவர் தன்னைத் தாக்கியதாக துக் ரால்மீது புகார் கொடுத்தார். தற்பொழுது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணைத் தாக்கியதாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது-.
- விடுதலை நாளேடு, 13.3.18

வெள்ளி, 2 மார்ச், 2018

திருப்பதியிலும் தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகர் ஆக்கப்பட உள்ளனர்! தமிழக அரசே உடனே அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குக!


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார்ப்பனர்கள் அல்லாதவர்களும் அர்ச்சகர் ஆகும் வகையில் 200-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. விரைவில் 200 அர்ச்சகர்களை பணியிலமர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  

அனைத்து ஜாதியினரையும்  அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்ற பரவலான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு திருப்பதி கோவிலில் பணி புரிய சுமார் 200 பேர்களுக்கு கோவில் விதிகள், மந்திரங்கள் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆவார்கள்.

தேவஸ்தான அதிகாரி கூறுகிறார்

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி அனில் சிங்கால் கூறியதாவது:

‘‘அர்ச்சகராக பார்ப்பனர் அல்லாதோரை நியமிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால், பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு வந்ததால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.   தற்போது அவர்கள் உண்மை நிலையைப் புரிந்துகொண்டு சம்மதம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சுமார் 200 பேரைத் தேர்ந்தெடுத்து அர்ச்சகர்களுக்கான பயிற்சி அளித்தது.   அவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர்  ஆவார்கள்.  அவர்கள் இப்போது பயிற்சி முடிந்து பணிபுரியத் தயாராக உள்ளனர்.  விரைவில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

கேரளாவைப் பாரீர்!

கேரளாவில் உள்ள பல கோவில்களை உள்ளடக்கிய திருவாங்கூர் தேவஸ்தானம் தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்துள்ளது. இதில் 6 பேர் தற்போது கேரள கோவில்களில் பணி செய்து வருகின்றனர்; பிற்படுத்தப்பட்டவர்கள் 30 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகின்றனர்.

கருநாடகாவில்...

கருநாடக அரசும் தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும் புதிய சட்டவரைவை விரைவில் கொண்டுவர உள்ளதாக முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். திருப்பதி கோவிலில் தேவஸ்தான பயிற்சி மய்யம்  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவருக்கு பயிற்சி அளித்து விரைவில் அவர்களுக்குப் பணி ஆணை வழங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மகாராட்டிரத்தில் பெண்கள் அர்ச்சகர்கள்

இன்னும் சொல்லப்போனால், மகாராட்டிர மாநில பாந்தார்பூரில் 900 ஆண்டுப் பழைமையான ருக்மணி அம்மன் கோவிலில் இப்பொழுது பெண் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தக் கோவிலில் அன்றாடப் பூஜைகள் செய்ய பெண் அர்ச்சகர்கள் மற்றும் உயர் வகுப்பினர் அல்லாத இதர பிரிவினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது (2016). 129 பெண்கள் விண்ணப்பம் செய்ததில், 16 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அர்ச்சகர்களாகப் பணியாற்றி வருகின்றனர். 900 ஆண்டுப் பரம்பரை மரபு இதன்மூலம் உடைக்கப்பட்டு விட்டது.

தமிழ்நாடு அரசு செயல்படட்டும்!

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு _- அனைத்து ஜாதியினரையும் அர்ச்சர்களாக நியமனம் செய்வதில் எந்தத் தடையும் இல்லை _ இல்லவே இல்லை!

திருப்பதி கோவிலிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, அர்ச்சகர்களாக நியமிக்க முன்வந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசுக்குத் தடுமாற்றம் ஏன்? தயக்கம்தான் ஏன்?

மேலும் தாமதம் இன்றி தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுமாக!

கி.வீரமணி,
ஆசிரியர்

- உண்மை இதழ்,16-31.12.17

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்! கேரள அரசு வரலாற்றுச் சாதனை! தமிழக அரசு தாமதிக்கலாமா?



“கோயில் கருவறையில் பாதுகாப்புத் தேடிக் கொண்டுள்ள ஜாதி அங்கும் ஒழிக்கப்பட வேண்டும்’’ என்று தந்தை பெரியார் தன் இறுதி மூச்சு நிற்கும்போதுகூடப் போராடினார்.

1970இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்று சட்டம் இயற்றி இந்தியாவுக்கே வழிகாட்டினார். இதன்மூலம் தந்தை பெரியாரின் இதயத்தில் தைத்த முள்ளை அகற்ற முயன்றார்.

ஆனால், அதை எதிர்த்தவர்கள் தொடுத்த வழக்குகளினால் அச்சட்டம் நிறைவேற்றப் படாமல் முடக்கப்பட்டது.

2006இல் மீண்டும் கலைஞர் அவர்கள் ஒரு தனிச் சட்டம் (கிநீt 15 ஷீயீ 2006) இயற்றினார்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.இராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு போட்டு, சைவ, வைணவ ஆகமப் பாடங்களைக் கற்று ஓராண்டில் பட்டயம் பெற்று அனைத்து ஜாதியினரும் அர்ச்ககராக (69% இடஒதுக்கீட்டு அடிப்படையிலும், பொதுப் போட்டி அடிப்படையிலும்) வழி செய்தார்.

இதனை எதிர்த்து தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபை, ஆதிசைவ சிவாச்சாரியர் நலச்சங்கம் உட்பட சில அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடையாணையைப் பெற்றனர்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 16.12.2015இல் ஜஸ்டிஸ் ரஞ்சன் கோகாய், ஜஸ்டிஸ் ரமணா அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக இயற்றப்பட்ட தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

சேஷம்மாள் வழக்கில் கூறப்பட்டுள்ளபடி அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளின்படி செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யப்படும் ஒவ்வொரு நியமனத்திலும் பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றத்தில் பரிகாரம் தேடலாம் என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டது.

இத்தீர்ப்பின்படி தமிழக அரசு அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்காததால், 16.05.2016இல் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தி 5,000 பேர் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்றனர்.

திராவிடக் கட்சி என்ற பெயரில், அண்ணா, எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லிக்கொண்டு, அதற்கான கொள்கைப்பற்று, உணர்வு, உந்துதல் ஏதும் இன்றி தமிழக அரசு இருக்கும் நிலையில், கேரள முதல்வர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்கள், அமைதியாக ஆனால், அதிரடியாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக (இடஒதுக்கீட்டின் அடிப்படையில்) ஆணையிட்டார்.

அதன்படி, திருச்சூர் மாவட்டம், சாலக்குடிக்கு அருகிலுள்ள நாளுகெட்டு என்ற ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான யது கிருஷ்ணா 09.10.2017 அன்று அர்ச்சகராகப் பணி ஏற்றார்.

இதன் மூலம் கோயில் கருவறையுள் ஒரு தாழ்த்தப்பட்டவர் அடியெடுத்து வைத்தார். இது சாதாரண நிகழ்வல்ல! சமூகநீதி வரலாற்றில் இது மாபெரும் சாதனை! நிலவில் முதல் அடியெடுத்து வைத்த சாதனையைவிடவும் பெரிய சாதனை. இந்தப் பெருமைகள் அனைத்தும் கேரள அரசையும் அதன் முதல்வர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களையும் சேரும்.

கேரள அரசு பா£ப்பனர் அல்லாத 36 அர்ச்சகர்களை நியமனம் செய்துள்ளது. அதில் 6 பேர் தாழ்த்தப்பட்டவர்கள் என்பது சமூகநீதியின் அடிப்படையில் முக்கியமானது.

வரவேற்கும் உயர் சாதியினர்

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தின் திருவல்லாவில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மணப்புரம் மகாதேவர் ஆலயம். இந்த ஆலயத்தின் முகப்பு, அதற்குச் செல்லும் பாதை என காணும் இடமெல்லாம்யது கிருஷ்ணாவை வரவேற்று டிஜிட்டல் பதாகைகள். 

அக்டோபர் 9 திங்கள் கிழமை அன்று, யது கிருஷ்ணா முதன் முதலில் அர்ச்சராகப் பொறுப்பேற்க வந்தபோது, மணப்புரம் ஸ்ரீ மகாதேவர் ஆலய சேவா சங்கத்தினர் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு முதல், குறும்புகள் வரை ஒவ்வொன்றையும் விளக்கும், கேரளாவில் பிரசித்தி பெற்ற வஞ்சிப்பாட்டு பாடி, யது கிருஷ்ணாவைக் கோயில் கருவறைக்கு அனுப்பிவைத்தனர். இப்படி உற்சாக வரவேற்பு கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் அந்தப் பகுதியைச் சேர்ந்த உயர் சாதியினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நெற்றி நிரம்ப பட்டை, கழுத்தில் உத்திராட்சம், கூடுதலாக இரு அர்ச்சகர் மாலைகள், பூணூல், அர்ச்சகருக்கே உரிய கேரள பாணியில் கட்டப்பட்ட வேட்டி சகிதம் காட்சியளிக்கிறார் யது கிருஷ்ணா.

90 ஆண்டுகளுக்கு முன் இதே கேரளத்தில் தந்தை பெரியார் குடும்பத்துடன் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தினைத் தொடங்கி நடத்தி, வெஞ்சிறையேகி போராட்டத்தினை வெற்றிகரமாக்கி வரலாற்றுச் சிகரத்தில் “வைக்கம் வீரர்” என்ற புகழுடன் பட்டொளி வீசிப் பறந்து கொண்டுள்ளார்.
அன்று உயர் ஜாதிக்காரர்கள் குடியிருக்கும் வீதிகளில் கீழ் ஜாதியார் நடக்கக் கூடாது என்ற நிலையை எதிர்த்துப்  போராடினார்.

அதன்பின் கோயில் கருவறைக்குள் வலுவாக பின்பற்றப்படும் தீண்டாமையை எதிர்ப்பதற்கான போராட்டத்தை தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதிப் போராட்டமாக அறிவித்து அந்தக் களத்தில் நின்றபடியே இறுதி மூச்சைத் துறந்தார்.

தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்திட்ட வெற்றி

கேரளாவில் வைக்கத்தில் போராட்டம் நடத்தி, வீதியில் நடக்கவும், பின் கோயிலுக்குள் செல்லவும் உரிமை பெற்றுத் தந்தார் பெரியார். அன்றைக்கு பெரியார் ஊட்டிய உணர்வு, அங்கு மாபெரும் எழுச்சிக்கும், சுயமரியாதை உணர்வுக்கும் வழியேற்படுத்தி, இன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆணையிடும் அளவிற்கு மாபெரும் வெற்றியைத் தந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் தந்தை பெரியார் விட்ட பணியை, அவர் போட்டுத்தந்த பாதையில் அன்னை மணியம்மையார் காலத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தினார். அதன் பின் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அப்பணியை சட்ட ரீதியாகவும், போராட்ட வடிவிலும், அறிக்கை வாயிலாகவும் அழுத்தம் தந்து வருகிறார். இன்று வரை போராட்டக் களத்திலேயே நாம் நின்று கொண்டுள்ளோம்.

தலைவர்கள் கோரிக்கை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:  

“தமிழ்நாடு அரசும், இந்து அறநிலையத் துறையும் தந்தை பெரியார் பிறந்த, சுயமரியாதை இயக்கம் பிறந்த, திராவிடர் இயக்கம் பீடு நடைபோடும் தனித்தன்மைமிக்க தமிழ் மண்ணிலேயும், தாழ்த்தப்பட்டவர் உட்பட   அனைத்து ஜாதியினரையும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகராக பணி நியமனம் செய்தால், இந்த அரசுக்கு நற்பெயர் கிட்டக் கூடிய வாய்ப்பும் வருமே!
இந்தியா முழுவதும் ஒரே சட்டம்தான் _- கேரளாவுக்குப் பொருந்தக் கூடியது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் அல்லவா?

தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படட்டும்!’’

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:  

“ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக நியமிக்கப் படுவதே சமூகநீதியாகும். அதனை நிலைநாட்ட, கேரள அரசிடமிருந்து தமிழக அரசு முற்போக்குப் பாடம் கற்று, உடனடியாகச் செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.’’ 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:  

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசு, திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தி உள்ளது. அதன்படி, அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ள 62 பேரில் 30 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 6 பேர் தலித்துகள், சமூகநீதியை உத்தரவாதப்படுத்தும் கேரள அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதேபோன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்:  

“அரசமைப்புச் சட்டம் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று தெரிவித்தாலும்கூட இன்றும் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஜாதிய வேறுபாடுகளும், அதன் விளைவாக வன்முறைகளும் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் 6 தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட 36 பேரை, பிராமணர்கள் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்திருப்பது, வரவேற்கத்தக்கது. இதனை முன் மாதிரியாகக் கொண்டு தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.’’

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:  

“தந்தை பெரியார் எழுப்பிய முழக்கத்தை கேரள மாநில அரசு நடைமுறைப்படுத்தி யிருக்கிறது. கேரள அரசின் இந்த நடவடிக்கை சிறப்புக்குரியது, வரவேற்கத்தக்கது.

தந்தை பெரியார் வைக்கம் போராட்டம் நடத்தி வெற்றிகண்ட அதே மண்ணில் பினராயி விஜயனால் சமூகநீதி நிலைநாட்டப் பட்டிருக்கிறது. கேரளாவில் நடந்த சாதனை தமிழகத்தில் நடவாதது வருத்தமளிக்கிறது.

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி கலைஞர் சட்டம் கொண்டு வந்தாலும் தமிழகத்தில் இன்றுவரை நடைமுறைக்கு வராதது வருத்தம் தருகிறது.’’

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்:  

“இது மிகப்பெரிய சமூகப் புரட்சியாகும். இதைச் சாதித்துக் காட்டியிருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 2006ஆம் ஆண்டு திமுக அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 2007ஆம் ஆண்டு மாநில அரசு நடத்திய பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து தலித்துகள் உள்ளிட்ட பிராமணர் அல்லாத 206 பேர் அர்ச்சகர் பயிற்சி பெற்றும் தமிழக அரசு இன்றுவரை பணி நியமன ஆணை வழங்கவில்லை.

கேரள அரசைப் பின்பற்றி தமிழக அரசும் உடனடியாக தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க முன்வர வேண்டும்.’’

தமிழக அரசு தாமதிக்கலாமா?

இப்படி எல்லா தலைவர்களும் அழுத்தம் கொடுக்கும் நிலையில், தொல்.திருமாவளவன் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளார். அப்படியிருந்தும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆணையிடுவதில் தமிழக அரசைத் தடுப்பது எது? இராஜாவை மிஞ்சிய விசுவாசமா?

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா படங்களை போட்டுக்கொண்டு, அவர்கள் வழி நடக்கிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களின் முதன்மைக் கொள்கை நிறைவேறாமல் முடக்கிப் போடுவது அவர்களுக்குச் செய்யும் துரோகம் அல்லவா?

திராவிடக் கொள்கைகளை அறவே கைவிட்டுவிட்டு, ஆர்.எஸ்.எஸ்.ன் அணுக்கத் தொண்டர்களாக அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் நடந்து கொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இடஒதுக்கீட்டில் 9 ஆயிரம் வருமானவரம்பு கொண்டு வந்தபோது, எம்.ஜி.ஆரையே தண்டித்தவர்கள் தமிழக மக்கள்.

யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, தங்களின் அளப்பரிய விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்காக, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆணை பிறப்பிக்காமலிருப்பது வரலாற்றுத் தவறாகும்.

கம்யூனிஸ்டகள் ஆளும் கேரளாவில் இது நடைமுறைப்படுத்தப்ப்பட்ட பின்புகூட, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தாதது கேலிக்குரியது மட்டுமல்ல; கேவலத்திற்குரியதும் ஆகும்.

இதில் தமிழகம் உணர்வற்று இருப்பது கண்டு அனைத்து தரப்பு மக்களும் கேவலமாகப் பேசுகின்றனர். “ஆமையும் முயலும்’’ கதையைப் போல, சமூகநீதிக்கு இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழகம், இந்தச் செயல்பாட்டில் மெத்தனமும், மௌனமும் காட்டுவது கண்டு கைகொட்டிச் சிரிக்கும் நிலை வந்துள்ளது.

காவிரி உரிமையில் தமிழகத்திற்கு எதிர்நிலை; ‘நீட்’ தேர்வை அனுமதித்து மாணவர்களை வஞ்சித்தது; தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை ஆதரிப்பது என்று தொடர்ந்து அ.தி.மு.க அரசு செய்துவரும் துரோகச் செயல்களின் தொடர்ச்சியாய், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பிரச்சினையிலும் திராவிட கொள்கையையே காவு கொடுத்து, அடிமையாட்சி நடத்திக் கொண்டிருப்பது மக்களின் வெறுப்பையும் தாண்டி அவர்களின் கோபத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு உடன் கேரளாவைப் பின்பற்றி அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும். தவறினால், அ.தி.மு.க என்ற இயக்கத்தின் அழிவிற்கு அதுவே காரணமாகும் என்பதை எச்சரிக்கையாகவே கூறிக்கொள்கிறோம்.

தி.க. சிறை நிரப்பும் போராட்டம்: அ.தி.மு.க. எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்!

சமூகநீதி போராட்டக் களத்தில் திராவிடர் கழகம் மேற்கொண்ட எந்தவொரு முயற்சியும் வெற்றிபெறாமல் போனதில்லை. கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று எல்லோரும் ‘விடுதலை’யை ஒவ்வொரு நாளும் படித்து அதன்படி தங்கள் செயல்பாட்டை சீர்செய்து கொண்டவர்கள். அத்தடத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமி விலகிச் செல்வது அவரின் அரசியல் முடிவுக்கே வழிவகுக்கும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆணையிட அ.தி.மு.க அரசு தவறினால், அடுத்து தி.மு.க. அரசு அதை முதல் ஆணையாகவே நிறைவேற்றும்.

அ.தி.மு.க. அரசுக்கு வலிய வரும் வரலாற்றுப் பெருமையை அடைவதற்கு மாறாய் வரலாற்றுப் பழியைச் சுமக்கும் அவலத்திற்கு ஆளாவது அறிவார்ந்த, அறம் சார்ந்த அணுகுமுறையாகாது.

1991ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், அரசு சார்பில் திருச்சி அருகே வேத ஆகமக் கல்லூரி திறக்கப்பட்டு, அதில் சமூகநீதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இதில் பயிற்சி பெற்றவர்கள் இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்களில் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்டதை அவர்கள் வழியில் ஆட்சி செய்கிறோம் என்கிற தற்போதைய அதிமுக அரசு செயல்படுத்தாமல் இருப்பது அவருக்குச் செய்யும் துரோகம் அல்லவா? 69% இடஒதுக்கீடு தந்து வரலாற்றில் இடம் பிடித்த ஜெயலலிதா வழிவந்தவர்கள், கேரளா செய்த பின்னும் செய்யாது தயக்கம் காட்டலாமா? அவ்வாறு தயங்குவது கேலிக்குரியது, கேவலத்திற்குரியது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டாமா?

தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கெடு கொடுத்து, சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துவிட்டார்கள். அப்படியொரு போராட்டம் நடத்தித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை அ.தி.மு.க. அரசு உருவாக்குமானால், அது, அ.தி.மு.க. அத்தியாயத்தை முடித்து வைக்கும் செயலாகவே அமையும்.

கடவுள் கொள்கையைத் தவிர, பெரியாரின் மற்றக் கொள்கைகளை ஏற்காத எந்த அரசையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே, பெரியாரை பிழையாதீர்! ஏற்றுக்கொண்ட தலைவர்களின் கொள்கைகளுக்கு துரோகம் செய்யாதீர்! உடன் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி, கேவலம் சேராது, வரலாற்றுப் பெருமை சேரும்படி செயல்படுங்கள்! இதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம்! வேண்டுகோள், வேட்கை!


 - மஞ்சை வசந்தன்


- உண்மை இதழ், 1-15.11.17