பக்கங்கள்

வெள்ளி, 15 ஜூன், 2018

பிராமணாள்' என்று போட்டால் மற்றவர்களை சூத்திரர்கள்' என்று அவமதிப்பதாகும் என்பதை நீதிபதி அறியவேண்டும்

*பிராமணாள் கிளப்' என்பதற்கு நீதிபதி வக்காலத்து வாங்கலாமா?

* வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா?

மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம்!
சீரங்கம் உணவு விடுதி ஒன்றில் பிராமணாள்' என்ற பெயர் போட்டது தொடர்பான வழக்கில் மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தவ றானது - உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

திருச்சி சீரங்கத்தில் பார்ப்பனர் ஒருவர் நடத்தும் உணவுக் கடை (ஓட்டல்) யின் பெயர்ப் பலகையில் உள்ள பிராமணாள்' என்ற வர்ண பேதத்தையும், உயர்ஜாதி வெறியையும் வெளிச்சம் போட்டுக் காட்டும், பிராமணாள் கஃபே'' என்ற பெயரை அகற்றிட வேண்டுமென்று அறவழியில் அந்த உரிமையாளருக்கு வேண்டுகோள் விடுத்தும், சில பார்ப்பன அமைப்புகளின் தூண்டுகோல், தூபம் காரணமாக அகற்றாமல் பிடிவாதம் காட்டியதால், அக்கடைமுன்னர் மறியல் முதலியன நடத்தி, திராவிடர் கழகம் மற்றும் ஒத்தக் கருத்துடைய பல்வேறு அமைப்புகள் சார்பில் அறவழிப் போராட்டங்களும் நடத்தின.

நீதிபதியின் தீர்ப்பு தவறானது


அவர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்து, வழக்குகளும் போட்டது- அ.தி.மு.க. அரசு!

அவ்வழக்கில் ஈடுபட்ட 112 பேர்கள் அந்த வழக்கினை ரத்து செய்யக் கோரி (Quash Petition) போட்ட வழக்கினை விசாரித்த ஜஸ்டீஸ் திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அமர்ந்து வழங்கியுள்ள தீர்ப்பில் (13.6.2018),

கடைகளுக்குத் தாங்கள் விரும்பும் பெயர்களை சூட்டுவதற்கு உரிமையாளர்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் 19(1)ஏ மற்றும் 19(1) ஜி உரிமை வழங்கியுள்ளது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமையில் தலை யிட முடியாது.

இந்த உரிமையின் அடிப்படையில் கடையின் உரிமையாளர் தனது ஓட்டலுக்கு "ஸ்ரீ கிருஷ்ணய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே'' எனப் பெயர் சூட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட கடைகளில் தீண்டாமை பின்பற்றப்பட்டால், குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் அனுமதிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடலாம். ஆனால், இந்த ஓட்டலில் அவ்வாறு இல்லை.

மதுரையில் கோனார் மெஸ், முதலியார் இட்லிக் கடை எனக் குறிப்பிட்ட சமூகங்கள், ஜாதிகளைக் குறிப்பிடும் வகையில் பல ஓட்டல்கள் உள்ளன. சாலை ஓரங்களில் பல்வேறு இடங்களில் அய்யங்கார் பேக்கரி என்ற பெயரில் பேக்கரி, காபி கடைகள் இருக்கின்றன. புதுச்சேரியில் ரெட்டியார் மெஸ் உள்ளது. இந்த மெஸ்சில் கல்லூரியில் பயிலும் காலங்களில் சாப்பிட்டுள்ளேன்.

இதனால், "ஜாதிப் பெயர்களில் ஓட்டல்கள் இருப்பது தவறில்லை'' என்று அத்தீர்ப்பில் கூறியுள்ளார்.

இத்தீர்ப்பு தவறான தீர்ப்பு மட்டுமல்ல, அடிப்படையில் பிராமணாள்' என்ற வார்த்தை பேதத்தை மற்றவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற பிறவி ஆணவத்தை உள்ளடக்கிய ஒரு வருணாசிரம வெளிப்பாட்டை நியாயப்படுத்தி, ஊக்கமூட்டும் தீர்ப்பும் ஆகும்.

தந்தை பெரியார் கூறிய உதாரணம்!


தந்தை பெரியார் அவர்கள் 1956 இல் இந்த பிராம ணாள்' பெயர் அழிப்புப் போராட்டத்தை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள முரளீஸ் கஃபே என்ற ஓட்டலில் - பிராமணாள் காபி கிளப் என்பதில், பிராமணாள்' என்பது உயர் வருண பேதத்தை நிலை நாட்டுவதால், அந்த சொல்லின்மீது தார் பூசி அழிக்கச் செய்தார். நாடு தழுவிய இயக்கமாகவே சாத்வீக முறையில் நடந்தது; பலரும் முரளீஸ் கஃபே உரிமையாளர் உள்பட மாற்றிக் கொண்டனர். (முரளீஸ் கஃபேயில் பிராமணாள்' என்ற வார்த்தை (சிமெண்ட்) மாற்றப்பட்டு, Ideal Cafe  என்று பிறகு மாற்றப்பட்டது என்பது வரலாறு).

சீரங்கத்தில் வருணாசிரம மேலாண்மையை வெளிச்சம் போட்டு மற்ற கடைகளிலிருந்து மாறுபட்டு, தாங்கள் உயர்ந்த ஜாதி வர்ணக் கடை என்னும் பிறவிப் பேதத்தை நிலைநாட்டும் நோக்கமே அப்பலகையின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை மனசாட்சி உள்ள எவரே மறுப்பர்?

காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்து


நம் மதத்தில் பிராம்மணர், க்ஷத்ரியர், வைச்யர், சூத்ரர் என்று நான்கு வர்ணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த வர்ணங்'களை நாம் ஜாதி' என்கிறோம்.


வாஸ்தவத்தில் ஜாதி வேறே, வர்ணம் வேறே. வர்ணங்கள் மேலே சொன்ன நாலுதான். இதற்குள்ளேயே ஒவ்வொன்றிலும் பல ஜாதிகள் இருக்கின்றன. பிராம்மண வர்ணத்திலேயே ஐயர், ஐயங்கார், ராவ் என்று பல ஜாதிகள் இருக்கின்றன. நாலாம் வர்ணம் ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டி, நாயக்கர், நாயுடு, கவுண்டர், படையாட்சி என்கிற மாதிரி எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன.


இருந்தாலும், பொது வழக்கில் வர்ணம்' என்று சொல்லாமல் ஜாதி' என்றே சொல்வதால், நானும் இந்த இரண்டிற்கும் வித்யாஸம் பார்க்காமல் வர்ணத்தையும் ஜாதி என்றே சொல்லிக் கொண்டே போகிறேன்.


நான்கு ஜாதிகளுக்கும் (அதாவது வர்ணங்களுக்கும்) சாஸ்திரங்களில் வெவ்வேறு விதமான கர்மாக்களையும்,  ஆசாரங்களையும் விதித்திருக்கிறது. இதனால் ஒரே மதஸ்தரிடையிலேயே ஏகப்பட்ட வித்யாஸங்கள் உள்ளன. ஒருவர்  சமைத்ததை இன்னொருத்தர் சாப்பிடக்கூடாது; ஒருத்தரோடு ஒருத்தர் கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது; ஒருவர் செய்யும் காரியத்தை மற்றொருவர் செய்யக்கூடாது என்று இப்படி எவ்வளவோ வித்யாசங்கள் இருக்கின்றன.


நாலு வர்ணம் என்று பெயரளவில்தான் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக் கின்றன. இன்னும் பல பிரிவுகள் உண்டாகிக் கொண்டே இருக்கின்றன. இப்படி, இந்து ஹிந்து மதமானது ஒரு விசித்ரமான மதமாக இருக்கின்றது.''


(தெய்வத்தின் குரல்' இரண்டாம் பகுதி,

பக்கம் 985-986)

'பிராமணாள்' வார்த்தைக்கு ஏன் ஆட்சேபம் என்ற கேள்வி எழுந்தபோது, எளிமையான உதாரணத்துடன் கூட்டங்களில் தந்தை பெரியார் விளக்கினார்:

ஒரு தெருவில், 4 வீடுகள் இருக்கின்றன. அதில் ஒரு வீட்டின் முன்பு, இது பதிவிரதை - பத்தினி வீடு'' என்று பெயர்ப் பலகை தொங்கவிடப்பட்டால், மற்ற வீட்டாரைப்பற்றி பிறர் என்ன நினைப்பார்கள்? அதுபோல, ஒருவன் பிராமணன்' என்று தம்பட்டம் அடித்தால், மற்றவனை சூத்திரன்' - கீழ் வர்ணத்தவன் என்று கூறு வதுதானே!'' என்று கேட்டார்.

சூத்திரன்' என்பதற்கு விபச்சாரி மகன் என்ற பொருள் உண்டே! (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 415).

வர்ணம் வேறு - ஜாதி வேறு; இதுதான்


சங்கராச்சாரியாரின் நிலைப்பாடும்கூட!


மாண்புமிகு நீதிபதி அவர்களின் வாதம் சரியானதல்ல என்பதற்கு அவர்களால் பெரிதும் போற்றப்படும் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் உபதேசங்களைக் கொண்ட தெய்வத்தின் குரல்'' (மற்றவர்கள் பேசினால்தான் மனிதர்கள் குரல்) நூலில் இரண்டாம் தொகுதியில், ஜாதி வேறு - வர்ணம் வேறு'' என்று விளக்கம் கூறியுள்ளார்.

வர்ணாஸ்ரம தர்மப்படி பிராமணன் உயர்ந்தவன் என்றுதான் அடுக்குமுறை அமைக்கப்பட்டுள்ளது.

பிராமணர்களில் அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா என்பது ஜாதிப் பிரிவுகள்.

சூத்திரர்களில் உள்ள முதலியார், கோனார், ரெட்டியார் போன்ற பிரிவுகள் உண்டு.

நீதிபதி காட்டிய கோனார் மெஸ், ரெட்டியார் மெஸ், முதலியார் இட்லி கடை ஜாதிப் பட்டத்தில் பெயரில் ஒட்டிக்கொண்டதின் சுருக்கப்பட்ட பதப்பிரயோகமே; அதையும்கூட நாம் ஆதரிக்காதவர்கள்; ஆனால், அவர்கள் ஜாதியால் உயர்ந்தவர்கள் என்ற கருத்தை உள்ளடக்கி அந்தப் பெயரைப் போட்டுக் கொள்ளவில்லை! (காஞ்சி சங்கராச்சாரியாரின் குரல்' தனியே கட்டம் கட்டி போடப்பட்டுள்ளது - கீழே காண்க).

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமானது!


மேலும் உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் 2010 இல் வந்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு விரோதமாகவே தீர்ப்பளித்துள்ளார். உச்சநீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பட்டதா இல்லையா? அதை மீறி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அது செல்லத்தக்கதா?

மேல்முறையீட்டில் தான் நீதித்துறை இதனைத் தெளிவுபடுத்தவேண்டும்.

State of Uttarapradesh
Vs
Ram Sajivan


உத்தரப்பிரதேச அரசு


Vs


ராம் சஜீவன் வழக்கு


AIR 2010 S.C. 1738 என்ற வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தந்த தீர்ப்பில்,

‘‘It is absolutely imperative to abolish the caste system as expeditiously as possible for the smooth functioning of the Rule of law and Democracy in our Country''

என்று கூறப்பட்டுள்ளதே!

நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் சிறப்பாக செயல்படவேண்டுமானால்,  ஜாதி முறையை   ஒழிக்க வேண்டும். அதிலும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக முற்றும் முழுதாக ஜாதி முறையை ஒழிக்க வேண்டியது அவசியமாகும்'' என்பதுதான் அந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பாகும்.

இதற்கு மாறான ஒரு நிலைப்பாட்டினை தங்களது சட்ட வியாக்கியானம் மூலம் உயர்நீதிமன்றத் தீர்ப்பாகத் தரலாமா?

ஜாதி என்பது மனிதர்களிடத்தில் பேதத்தை வளர்ப்பது - வருணத்தின் கள்ளக் குழந்தையும்கூட. ஒரு தீர்ப்பு என்பது இந்தப் பிறவி ஏற்ற - தாழ்வை ஒழிக்கும் வகையில் இருக்கவேண்டுமே தவிர மனிதகுல சமத்துவத்துக்கு எதிரான - பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஜாதிக்குச் சட்ட அங்கீகாரம் கொடுப்பதுதான் ஒரு நீதிபதியின் தீர்ப்பா? 60 ஆண்டுகளுக்குமுன் திராவிடர் கழகத்தால் தந்தை பெரியார் கட்டளைப்படிப் போராடி ஒழிக்கப்பட்ட பிராமணாள்' ஓட்டல் என்பதைப் புதுப் பித்துக் கொள்ளலாம் என்ற உள்ளடக்கம் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பில் இருக்கிறதா, இல்லையா? நாடு எங்கே போகிறது?

இரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள் - இதராள் என்றிருந்த பேதத்தை ஒழிப்பதில் (20.3.1941) நீதிக்கட்சிக்கும், தந்தை பெரியாருக்கும் இருந்த பங்களிப்பும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திடுதல் முக்கியம்.

எந்த வகையில் பார்த்தாலும் நீதிபதி இப்பொழுது அளித்துள்ள தீர்ப்பு சமுதாயத்தில் ஜாதியை- வருணத்தை ஊக்குவிக்கும் தன்மை கொண்டதேயாகும்.

மேல் நீதிமன்றம் செல்லுமுன் வீதிமன்றமும்


செல்லவேண்டும்!


இந்திய அரசியல் சட்ட அடிப்படை உரிமைகள்கூட தலையிடவே முடியாத Absolute Rights என்ற நிலை களை உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் இதற்கு முந்தைய பல  தீர்ப்புகளில் ஏற்றுள்ளனவா?

‘Reasonable Restrictions' - நியாயமான சில கட்டுப் பாடுகளை விதிப்பது என்பது நடைமுறையாக உள்ளதே!

மத உரிமைகள்கூட (26, 25) பொது அமைதி, ஒழுக்கம், சுகாதாரம் போன்றவைகளுக்கு உட்பட்டுதானே அனு மதிக்கப்படுகிறது.

ஜாதிப் பெயர்களைத் தெருக்களில்கூட போடக் கூடாதென்று தமிழக (எம்.ஜி.ஆர்.) அரசின் 1979 ஆணை அமலில் உள்ளபோது, ஓட்டல் பெயர் எப்படி நியாயப்படுத்தப்படுகிறது? பல கேள்விகள், சட்ட நுணுக் கங்கள் அடங்கி உள்ள மனித உரிமைப் பிரச்சினை இது.

இதற்கு மேல்முறையீடு நீதிமன்றங்களில் மட்டுமல்ல; மக்கள் மன்றத்தில்கூட தொடரவே செய்யும்!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

15.6.2018

- விடுதலை நாளேடு, 15.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக