பக்கங்கள்

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

மகாராட்டிரம், பீகாரைப் பின்பற்றி தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றிடுக!

தமிழ்நாடு சமூகநீதி மண் என்ற வரலாற்றை நிலை நிறுத்திடுக!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

மகாராட்டிரம், பீகார் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற் கொள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர்  தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

2020-2021 இல் நடைபெறவிருக்கும் நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ஜாதி வாரியான கணக் கெடுப்பு கட்டாயம் நடத்தப்படவேண்டும் என்பதை, தொடர்ந்து திராவிடர் கழகமும், முற்போக்கு சமூகநீதி அமைப்புகளும், கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன!

தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோர், முன்னேறியோர் (எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., எஃப்.சி.) போன்ற பல ஜாதியினரும், வகுப் பினரும் மக்கள் தொகையில் எவ்வளவு உள்ளனர் என்பதைக் கண்டறிய இது கட்டாயம் தேவை. 1901 இல் முதன்முதலில் பிரிட்டிஷ் அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கியபோதே, இம்முறை பின்பற்றப்பட்டது.

ஜாதி சட்டப்படி இன்னும் ஒழிக்கப்படவில்லையே!

ஜாதியும், ஜாதி அடிப்படையிலான பேதங்களும், சடங்குகள், சம்பிரதாயங்கள், சட்டங்கள், நம் நாட்டில் நடைமுறையில் இருக்கின்றன என்பது யதார்த்தம்.

ஜாதியை ஒழிக்க இந்த 73 ஆண்டுகால ‘‘சுதந்திர சுயராஜ்ஜியத்தில்'' எந்த முயற்சியும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதால்தான் தந்தை பெரியார் கட்டளைப்படி 1957 இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நகலை எரித்து 3000 பேர்,  6 மாதம் முதல் 3 ஆண்டுவரை கருஞ்சட்டைத் தோழர்கள் சிறைத் தண்டனை அனுபவித்தனர்.

திராவிடர் கழகம் நடத்திய

சட்ட எரிப்புப் போராட்டம்

அப்போராட்டத்தின் காரணமாக இருபால் தோழர் கள் சுமார் 16 பேர் மரணமடைந்து, வரலாற்றில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்!

தந்தை பெரியார் நடத்திய கடைசி மாநாட்டில்கூட (1973 ஆம் ஆண்டு) இதுபற்றிதான் முக்கியத் தீர்மானம் நிறைவேற்றி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக கோவில் கருவறைக்குள் நுழைந்து, ஜாதி இழிவைத் துடைத்தெறியும் வாய்ப்புக்காகவே  தந்தை பெரியார் போராடினார்.

பல மாநிலங்களிலும் தீர்மானம்

எனவே, ஏற்கெனவே மகாராட்டிர சட்டமன்றம் இப்படி ஜாதி வாரி கணக்கெடுப்பை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அது இப்போது எதிர்க்கட்சி அணி. ஆனால், பீகாரின் நிதீஷ்குமார் கட்சி ஆட்சியில், பா.ஜ.க.வின் கூட்டணி உள்ளதே!  அங்கேயும் சட்டப்பேரவையில் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை என்று வற்புறுத்தி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஒன்றை, ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது!

ஏற்கெனவே நமது திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றிய தீர்மானப்படியே, தமிழ்நாடு அரசும் வருகிற சட்டமன்றத் தொடரில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போதே (2021 இல்) ஜாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவேண்டியது அவசியம், அவசரமும்கூட!

தமிழ்நாடு சட்டமன்றத்திலும்

தீர்மானம் நிறைவேற்றிடுக!

மகாராட்டிரம், பீகார் மாநிலமும் வழிகாட்டியுள்ளன.

தமிழ்நாடு அ.தி.மு.க. அரசு இதைப் பின்பற்றி சமூகநீதி மண் இந்த மண் என்ற வரலாறு படைப்பதில் முந்திக் கொள்ளவேண்டும்!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

28.2.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக