பக்கங்கள்

சனி, 13 ஜூன், 2020

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையேயாகும்!

June 12, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ளபடியும் - அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய கர்த்தாக்களின் கருத்துப்படியும் -

இந்திரா சகானி வழக்கில் நீதிபதிகளின் கருத்துப்படியும்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடிப்படை உரிமையல்ல என்று கூறும் கருத்து சரியானதல்ல!

தமிழ்நாட்டின் சார்பில் பல்வேறு கட்சிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சமூகநீதி, இட ஒதுக்கீடு அடிப்படையான உரிமையல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள கருத்து - சட்டப்படி சரியானதல்ல என்று பல்வேறு சட்ட ஆதாரங்களையும், தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முக்கிய அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பொதுத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டவர் புறக்கணிக்கப் பட்டது குறித்து திராவிடர் கழகம், அனைத்துக் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுதி சமூக அநீதியைச் சுட்டிக்காட்டியது.

இந்தக் கல்வி ஆண்டில் ‘நீட்' (NEET), மருத்துவ மேற்பட்டப்படிப்பு (PG) மற்றும் பல் மருத்துவ மேற் படிப்பில் மாநிலங்கள் முறையே 7,981 இடங்களையும்,  மேற்படிப்பில்  மாநிலங்கள் முறையே 7,981 இடங் களையும், 274 இடங்களையும் அகில இந்திய தொகுப் பிற்கு ஒப்படைத்துள்ளன.

இந்தக் கல்வி ஆண்டில் (2020-2021) மாநிலங்கள் அளித்த எட்டாயிரத்திற்கும் கூடுதலான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர் களுக்கு இட ஒதுக்கீடு உரிய சதவிகிதம் வழங்கப்பட வில்லை.

மாபெரும் சமூக அநீதி!

2013 ஆம் ஆண்டிலிருந்து (‘நீட்' தேர்வு அமலான ஆண்டுமுதல்) தருவிக்கப்பட்ட தகவல்களின் அடிப் படையில் அகில இந்திய தொகுப்பிற்கு - மாநிலங்கள் அளித்த இடங்கள் பட்டப் படிப்பு மற்றும் மேற்பட்டப் படிப்பு (மருத்துவம்) 72,500 இடங்கள் ஆகும். இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்த இடம் பூஜ்ஜியமே! என்னே கொடுமை! எத்தகைய மாபெரும் சமூக அநீதி!

சமூகநீதி மண்ணாகவும், தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாக்கும் நிலமாகவும் தமிழ்நாடு திகழ்வதால், தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் - கட்சி மாச்சரி யங்களைக் கடந்து இந்த அநீதியைக் களைய - உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தன, இதுபற்றி நீதி கேட்டு!

உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியானதா?

திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது; தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.அய்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்.), காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளோடு தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இவ்வழக்குகள் நேற்று (11.6.2020) விசாரணைக்கு வந்தபோது, இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு ஒன்று, வாதாடிய தி.மு.க. வழக்கு ரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் அவர்களிடம் ‘‘இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல (Not  a Fundamental Right). எனவே, நீங்கள் அந்த மாநில உயர்நீதிமன்றத்திலேயே ‘‘வழக் கைத் தொடுங்கள். இங்கே ஏன் வந்தீர்கள்?'' என்று கண்டிப்பு தொனியில் பேசி, ‘‘வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் - இல்லையானால், டிஸ்மிஸ் செய்யவேண்டி வரும்'' என்று கூறியுள்ளது கண்டு, சமூக நீதியாளர்களும், சட்ட வல்லுநர்களும்கூட அதிர்ச்சி அடைந்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியானதா?

அரசமைப்புச் சட்டப்படியும், அதனை உருவாக்கிய அதன் கர்த்தாக்கள் (Founding Fathers) நோக்கப்படியும் சரியானதுதானா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.

கருநாடக மாநில அரசால் அமைக்கப்பட்ட எல்.ஜி.ஹாவனூர் கமிஷன் அறிக்கை

1975 இல் கருநாடக மாநிலத்தில் - அரசால் அமைக்கப்பட்ட எல்.ஜி.ஹாவனூர் கமிஷன் தலைவர், அந்த அறிக்கையின் முன்னுரையில் ஓர் அருமையான கருத்தினை எடுத்து வைத்தார். (அப்போது சமூகநீதி வழக்குகளே சொற்பம்).

‘‘.....Language of the Constitution in so far as it relates to backward classes, is simple and unambiguous. But the language of the Judiciary in interpreting the Constitutional provisions is highly ambiguous and complicated.”

‘‘பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் சம்பந்தமான (இந்திய) அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைப்பற்றிய வாசகங்கள் மிகவும் தெளிவானதும், பல அர்த்தங்களுக்கு இடம் தராததும் ஆகும். ஆனால், நீதிமன்றங்கள் இந்த அரசமைப்புச் சட்ட வாசகங்களைப்பற்றிய வியாக்கி யானங்கள் செய்யும்போது அது மிகவும் சிக்கலான தாகவும், பலவித அர்த்தங்களைக் கொண்டவை போலவும் செய்யப்படுகின்றன'' என்று மிகவும் பொருத்தமாகச் சொன்னார்.

‘‘நேற்று (11.6.2020) உச்சநீதிமன்றத்தில் மாண்பமை நீதிபதி ஜஸ்டீஸ் நாகேஸ்வரராவ் அவர்களது தலைமை யிலான அமர்வு கூறியது இதைத்தான் நினைவூட்டுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை

  1. இட ஒதுக்கீடு - Reservation என்பது சமூகநீதியின் வடிவம் ஆகும். அதை அடிப்படை உரிமை அல்ல என்று கூறுவது சரியல்ல என்பதற்கு முதல் எளிமையான பதில்.

அந்த இட ஒதுக்கீடு பிரிவுகள் இடம்பெற்றுள்ள அரசமைப்புச் சட்ட அத்தியாயம் மூன்றாம் பிரிவின் (Part III) தலைப்பு என்ன?

‘‘Fundamental Rights'' என்பதல்லவா?

பின் அதன்கீழ் வரும் ஷரத்துக்கள் எப்படி அந்தத் தன்மையற்றவைகளாக ஆக முடியும்?

  1. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை - பீடிகை (Preamble) யில்
    Justice - Social - Economic and Political என்ற வாசகங்கள் உள்ளதின் விரிவாக்கம்தானே இட ஒதுக்கீடு - அதிலும் சமூகநீதிக்கே முன்னுரிமை, முதலிடம் அம்மூன்றில் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
  2. அரசமைப்புச் சட்டத்தின் மாற்றப்பட முடியாத அடிக்கட்டுமான (Basic Structure of the Constitution) பகுதியில், பீடிகை தொடர்ச்சி IV பகுதிவரை உள்ளன என்பதை எவரே மறுக்க முடியும்?
  3. இந்திய அரசமைப்புச் சட்ட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள கருத்தையும் இங்கே சுட்டிக்காட்டுவது இட ஒதுக்கீடு - சமூகநீதி என்பது அடிப்படை உரிமை தான் என்பதை நிரூபிக்கும் ஆவணமாகும்.

‘‘The Fundamental rights are basic rights and include basic freedoms guaranteed to the individual. Articles 12 to 35 deal with the Fundamental Rights. The Fundamental Rights are freedoms guaranteed but these freedoms are not absolute, they are Judicially enforceable.


‘‘....The Fundamental Rights  என்பதற்கும், Legal Rights என்பதற்கும் - அதாவது அடிப்படை ஜீவாதார உரிமை என்பதற்கும், சட்ட உரிமை என்பதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால்,

சட்ட உரிமை (Legal Rights) என்பது நீதிமன்றங்களால் பாதுகாக்கப்படுவது. ஆனால், ஜீவாதார - அடிப்படை உரிமைகளோ, அரசமைப்புச் சட்டத்தாலேயே பாதுகாக் கப்படக் கூடியது.

அத்தகைய அடிப்படை உரிமைகள் அடங்கியவை.

  1. சமத்துவத்திற்கான உரிமை - Right to equality (Articles 14 to 18)

  2. சுதந்திரத்திற்கான உரிமை - Right to Freedom (Articles 19 to 21, 21A and 22)

  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை - Right against Exploitation - (Articles 23 and 24) 

  4. மதச் சுதந்திர உரிமை - Right  to Freedom of Religion (Articles 25 to 28)

  5. கலாச்சார மற்றும் கல்விக்கான உரிமைகள் - Cultural and Educational Rights (Articles 29 and 30)
  6. அரசமைப்புச் சட்டப்படி கிடைக்கவேண்டிய உரிமைகளுக்காக நிவாரணம் கோரும் உரிமை - Right to Constitutional Remedies (Article 32)

மேற்காட்டியவைகளில் சமத்துவத்துக்கான அடிப் படை உரிமை என்பதன் கீழ்தான் இட ஒதுக்கீடு, சமூகநீதி பாதுகாக்கப்படுகிறது.

இட ஒதுக்கீடு என்பது

சமூகநீதி அடிப்படை உரிமைதான்

  1. இதை 9 நீதிபதிகள் கொண்ட இந்திரா சகானி வழக்கு என்ற மண்டல் கமிஷன் வழக்கில் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகளும், ஒட்டுமொத்த பெரும்பான்மை தீர்ப்பிலும் சரி, தனித்தனியே எழுதப்பட்ட தீர்ப்புகளிலும் சரி, இதனை வலியுறுத்தத் தவறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதும், இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி அடிப்படை உரிமைதான் என்பதைப் பறைசாற்றுகிறது.

உதாரணத்திற்கு, மண்டல் கமிஷன் வழக்கு என்ற இந்திரா சகானி வழக்குத் தீர்ப்பில், ஜஸ்டீஸ் பி.பி.ஜீவன் ரெட்டி (மற்றவர்களுக்காகவும் இணைந்து) எழுதிய தீர்ப்பில்,

‘‘Articles 14 to 18  In short the doctrine of equality has many facets. It is a dynamic and evolving concept. Its main facets relevant to the Indian society have been referred to in the Preamble and Articles under the sub-heading 'Right to Equality.'''

‘‘அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 14 முதல் 18 வரை, சுருக்கமாக, ‘சமத்துவத்தின் கோட்பாடு’ பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இது மாறுதலையும், வளரும் தன்மையும் கொண்ட கருத்தாகும்.

இந்திய சமுதாயத்துடன் தொடர்புடைய அதன் முக்கிய அம்சங்கள் 'சமத்துவத்திற்கான உரிமை' என்ற துணைத் தலைப்பின்கீழ் முகப்புரை மற்றும் சட்டப் பிரிவுகளில்  குறிப்பிடப்பட்டுள்ளன.''

‘‘Articles 14 to 18  In short the goal is 'equality of status and opportunity'.

Articles 14 to 18 must be understood not merely with reference to what they say but also in light of several Articles in Part IV (Directive Principles of State Policy).

Justice - social, economic and political is the sum total of aspirations in Part IV.''

‘‘அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 14 முதல் 18, சுருக்கமாக சொல்வதென்றால், சம அந்தஸ்து, சம வாய்ப்பு என்பது குறிக்கோள்.

அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 14 முதல் 18 வரை அவர்கள் சொல்வதைக் குறிப்பதோடு மட்டுமல் லாமல், அரசமைப்புச் சட்டம் நான்காம் பகுதியின் (அரசிற்கான கொள்கை வழிகாட்டு நெறிமுறைகள்) பல பிரிவுகளில் இருந்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப் பட்டுள்ள, “நீதி - சமூக, பொருளாதார மற்றும் அரசியல்'' - என்பது பகுதி IV இல்  குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளின் மொத்த சாரமாகும்.''

அரசமைப்புச் சட்டத்திற்கு

முரணான வியாக்கியான கருத்து

எனவே, இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல என்று கூறுவது அரசமைப்புச் சட்டப்படியும், அரச மைப்புச் சட்டக் கர்த்தாக்கள் - தந்தைகள் கருத்துப்படியும், 9 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கான - மண்டல் வழக்குத் தீர்ப்புப்படியும் - அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான வியாக்கியான கருத்து ஆகும்!

என்றாலும், மக்கள் மன்றத்தின் இடையறாத போராட் டங்களும், நியாயங்களும், கண் திறக்க மறுப்பவர்களுடைய கண்களையும் திறக்க வைக்கும் என்பது உறுதி,  உறுதியிலும் உறுதி!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

12.6.2020

50% இட ஒதுக்கீடுக்கு உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு

சென்னை, ஜூன் 12 மருத்துவக் கல்வியில் முதுநிலைப் படிப்புகளுக்கு மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட் டோருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்தன. உயர்நீதிமன் றத்திலேயே மனு தாக்கல் செய்துகொள்ளலாம் என்று நேற்று (11.6.2020) உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில், தி.மு.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக