17.7.10
கல் எல்லாம் மாணிக்கக் கல் அல்ல!
`சமூகநீதியில் கழகம் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல.
சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியார் காங்கிரசை விட்டே வெளியே வந்தார்.
அதே காங்கிரசைக் கொண்டே சமூக நீதிக்காக அரசமைப்புச் சட்டத்தை முதன்முதலாகத் திருத்தவும் செய்தார்.
மத்திய அரசுத் துறைகளிலே இடஒதுக்கீடு கிடையாது; 1940-இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டிலேயே இதுகுறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றாலும் செயலுக்கு வரவில்லை. ஜனதா அரசு அமைத்த மண்டல் குழு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பரிந்துரை செய்தாலும் (31.12.1980) அதனை நடைமுறைக்குக் கொண்டுவர பார்ப்பன ஆதிபத்தியம் அனுமதித்து விடவில்லை.
திராவிடர் கழகம் அதற்காக 42 மாநாடுகளை நடத்தவேண்டியிருந்தது; 14 போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. டில்லி வரை சென்று போராடியது திராவிடர் கழகம் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி தலைமை யில்.
அதன் விளைவாக இந்தியா முழுமையும் உள்ள அனைத்துப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சமூகநீதியின் ஆணி வேரையே வெட்டும் பொருளாதார அளவுகோலைத் திணித்தார். அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போரிட்டது; இறுதி வெற்றி கழகத்துக்கே! மேலும் ஒரு புதிய வாய்ப்பு யாரும் எதிர்பார்க்காதவகையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அதுவரை இருந்து வந்த 31 விழுக்காட்டை 50 ஆக உயர்த்தி ஆணை பிறப்பித்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.
தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு 69 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் என்னும் நிலை உறுதியாயிற்று.
50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடுப் போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தன் போக்கில் ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. அதனை எதிர்த்து 69அய் நிலை கொள்ளச் செய்யும் பொறுப்பும் திராவிடர் கழகத்தின் தோள்மீதுதான் விழுந்தது. தமிழர் தலைவர் உருவாக்கிக் கொடுத்த சட்டம்தான் 31 சி பிரிவு என்பது. அது ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டது.
அதனை எதிர்த்தும் ஆதிக்கவாதிகள் உச்சநீதிமன்றம் சென்றனர். 1994 முதல் இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் உச்சநீதிமன்ற ஆயம் (Bench) சமூக நீதியாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. (13.7.2010)
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடரப்படுகிறது. அதனை நிலை நிறுத்த சில யோசனைகளையும் உச்சநீதிமன்றம் தந்திருக்கிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நீதியரசர் திரு. எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் உள்ளது. அதனைக் கலந்து கொண்டு, தக்க புள்ளி விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தந்து வெற்றி பெறும் வைர ஒளி மின்னுகிறது. இதன் மூலம் இந்திய அளவுக்கே நல்வழி காட்டும் பாதை திறந்து விடப்பட்டுள்ளது.
ஒன்றை இந்த நேரத்தில் குறிப்பிடுவது மிக மிக முக்கியம்.
தந்தை பெரியார் இல்லாத கால கட்டத்தில் சமூக நீதித்திசையில் இவ்வளப் பெரிய சாதனை களைச் செய்து வந்தது திராவிடர் கழகம் தான். அதன் தன்னிகரற்ற தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனைகள், சட்டப் பேரறிவு, நுண்மான் நுழைபுலம் இவற்றிற்கெல்லாம் அடித்தளமாக இருந்து வருகின்றன.
கல்லெல்லாம் மாணிக்கக் கல் அல்ல
கழகம் எல்லாம் திராவிடர் கழகம் அல்ல.
தலைவர் எல்லாம் தமிழர் தலைவர் வீரமணியும் அல்ல.
தந்தை பெரியார் அவர்கள் தந்த சமூகநீதியா கட்டும்; பகுத்தறிவுக் கொள்கையாகட்டும்; எந்த முற்போக்கு எண்ணங்கள் ஆகட்டும்; அவை எல்லாம் இந்தக் கழகத்தாலும், தலைமையாலும் தான் சாத்தியம் என்பது காலத்தின் கல்வெட்டாகும் நடைமுறை உண்மையுமாகும்.
பெரியார் கொள்கைகளை நாங்களும் சொல்கிறோம் செய்கிறோம் என்று சொல்லக் கூடியவர்களிடத்தில் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பார்களாக!
இவர்களால் இவற்றைச் சாதிக்க முடியுமா என்று ஒரு கணம் ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்த்தால் எது தலைமை? எது கழகம்? சாதிக்கும் சக்தி யாரிடத்தில்? என்பதில் தெளிவு பெற்று விடலாமே!
ஓர் அரிமா நோக்கு
9.10.1987: புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு கூட்டத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 31 (சி) பிரிவின்படி தனிச் சட்டம் இயற்றி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் கருத்து உருவாக்கம்.
16.11.92: டில்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு மண்டல் பரிந்துரை அமல் 50 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது.
20.11.92: சென்னை பெரியார் திடலில் பொதுச் செயலாளரின் சிறப்புப் பொதுக் கூட்டம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 31(சி) பிரிவின்கீழ் தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டுகோள்.
25.8.93: உச்சநீதிமன்ற இடைக்காலத் தடை 50 சதவிகிதத்துக்குமேல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு கூடாது என்று.
26.8.93: இத்தீர்ப்புக்குப் பொதுச் செயலாளர் கண்டனம். 1.9.93: உச்சநீதிமன்ற இடைக்காலத் தடை ஆணை நகலை எரித்துச் சாம்பலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு திராவிடர் கழகம் அனுப்பிய போராட்டம் 15,000 பேர் கைது.
5.11.93: 31 (சி) பிரிவின்கீழ் தனிச் சட்டம் இயற்றக் கோரி பொதுச் செயலாளர் அறிக்கை.
6.11.93: சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சமூகநீதி மாநாடு.
9.11.93: தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் அரசியல் சட்டத் திருத்தம் கோரி தீர்மானம்.
16.11.93: தமிழகம் தழுவிய அளவில் முழு அடைப்பு.
17.11.93: சென்னையில் பொதுச் செயலாளர் செய்தியாளர்கள் சந்திப்பு. 31(சி)யின்கீழ் மாதிரி சட்ட முன்வடிவம் தயாரித்து அளிக்கப்பட்டது.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்.
26.11.93: தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை கோட்டையில்.
31.12.93: தமிழக சட்டப் பேரவையில் 31(சி) சட்டம் நிறைவேற்றம். (சட்டமன்ற பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நடவடிக்கைகளைத் தமிழர் தலைவர் கவனித்தார்).
7.2.94: தமிழக மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி குடியரசுத் தலைவருக்குத் தந்தி கொடுக்குமாறு பொதுச் செயலாளர் வேண்டுகோள்.
11.3.94: தஞ்சை வல்லத்தில் தமிழக முதலமைச்சருக்கு சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம்.
7.4.94: டில்லியில் சமூகநீதிக்கான தேசிய கவுன்சில் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பங்கேற்பு. தமிழக சட்டத்துக்கு ஒப்புதல் தரக் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் டில்லியில் சம்பந்தப்பட்ட தலைவர்கள், மத்திய சமூகநல அமைச்சர் சந்திப்பு வற்புறுத்தல்.
17.5.94: திருச்சியில் செய்தியாளர்களை பொதுச் செயலாளர் சந்தித்தல். குடியரசுத் தலைவர் ஒப்புதல் வற்புறுத்தல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று எச்சரித்தார் பொதுச் செயலாளர்.
14.6.94: உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை அகற்றக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பொதுச் செயலாளர் தந்தி.
15.6.94: அனைத்துக் கட்சி தூதுக்குழு சென்று பிரதமரை, குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதல்வருக்கு பொதுச் செயலாளர் வேண்டுகோள்.
23.6.94: சென்னையில் திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சி மற்றும் அனைத்துச் சமூக சங்கங்களின் கூட்டம்.
25.6.94: முதலமைச்சர் தலைமையில் தூதுக்குழு டில்லி சென்று பிரதமரைச் சந்தித்தல்.
26.6.94: டில்லியில் அனைத்துச் சமூக நீதி சிந்தனை உடைய தலைவர்களைப் பொதுச் செயலாளர் சந்தித்தல்.
16.7.94: ஈரோட்டில் கழகத்தின் சார்பில் சமூகநீதி மாநாடு.
17.7.94: 69 சதவிகித அடிப்படையில் தமிழ்நாட்டில் மாணவர்கள் சேர்க்கை.
19.7.94: தமிழக தனிச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
28.7.94: சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சி மற்றும் அனைத்துச் சமூக சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டம்.
2.8.94 - 13.8.94 : குமரி தொடங்கி திருத்தணி _ சென்னை வரை திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி எழுச்சிப் பயணம்.
14.8.94: 9ஆவது அட்டவணையில் சேர்க்கும் சட்ட திருத்தத்துக்கு ஆதரவு அளிக்கக் கோரி அனைத்துக் கட்சி நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கும் பொதுச் செயலாளர் தந்தி.
16.8.94: பொதுச் செயலாளர் கல்கத்தா செல்லுதல்.
17.8.94; 18.8.94; 19.8.94: டில்லியில் மத்திய சமூக நலஅமைச்சர் மற்றும் தேசிய முன்னணித் தலைவர்கள் சந்திப்பு.
17.8.94: உச்சநீதிமன்றத்தின் தவறான ஆணை.
(50 சதவிகித அடிப்படையில் இடஒதுக்கீடு இருந்தால் திறந்த போட்டியில் எத்தனை இடங்கள் கிடைக்க வேண்டுமோ அத்தனை இடங்களைக் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்ற ஆணை).
22.8.94: சென்னையில் பொதுச் செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தல், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களிலும், இடஒதுக்கீடு அடிப்படையில் நீதிபதிகள் நியமனஅவசியத்தை வலியுறுத்துதல்.
23.8.94: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சென்னை சிறப்புக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் கண்டனம்.
24.8.94: 25.8.94: மாநிலங்களவையிலும், மக்களவையிலும் 9ஆவது அட்டவணையில் சேர்க்கை.
13.7.2010: தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு தொடரலாம் உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் தீர்ப்பு.
- மின்சாரம் அவர்கள் 17-7-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
'தமிழ் ஓவியா வலைப் பூ' விலிருந்து