பக்கங்கள்

வெள்ளி, 1 டிசம்பர், 2023

ஜாதி ஒழிந்தால் தான் சமத்துவம் வரும்; அதற்கு சமூக நீதி தேவை! அந்த சமூக நீதிக்கான புள்ளிவிவரம் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு- சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

17

18
சென்னை பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் அண்ணா பொது வாழ்வியல் மய்ய அமைப்பின் துறை தலைவர் முனைவர் கலைச்செல்வி சிவராமன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி வரவேற்றார். பெரியார் - வீரமணி அறக்கட்டளைக்கு தொழிலதிபர் மாம்பலம் சந்திரசேகரன் ரூ.50,000மும், எஸ்.ஜே. பிரகாஷ் ரூ.50,000மும், மருத்துவர் இளஞ்செழியன்.ஜெ ரூ.50,000மும் நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினர். 

சென்னை, டிச.1- சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று, ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்ற கருத்தமைய உரையாற்றினார். 

சென்னை பல்கலைக்கழகத்தில் 30.11.2023 அன்று காலை 11 மணி அளவில், முகப்புக் கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள தந்தை பெரியார் அரங்கில் (தி-50) அண்ணா பொது வாழ்வியல் மய்யம் சார்பில், “ஜாதிவாரி கணக்கெடுப்பு” எனும் தலைப்பில், கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடக்கத்தில் கல்லூரி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

அண்ணா பொது வாழ்வியல் மய்யம் அமைப்பின் துறைத் தலைவர் (பொறுப்பு) முனைவர் கலைச்செல்வி சிவராமன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கருத்தரங்கின் முதல் கருத்துரையாளராக தமிழ்நாடு அரசின் மாநிலத் திட்டக்குழுவின் மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் உரையாற் றினார். சென்னை கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அய்.ஏ.எஸ்.(ஓய்வு) கே.அசோக் வர்தன் ஷெட்டி அடுத்த கருத்துரையாளராகவும் முன்னிலை வகித் தும் உரையாற்றினார். அசோக் வர்தன் ஷெட்டி படக்காட்சி மூலம் புள்ளிவிவரங்களுடன் விளக்கி, ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பதை புரிய வைத்தார்.

19

நிறைவாக நிகழ்ச்சியின் தலைமைப் பொறுப்பேற்றிருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி சிறப்புரை ஆற்றினார்.  அவர் தமது உரையின் முதலில் பேராசிரியர் நாகநாதன், அஷோக்வர்தன் ஷெட்டி ஆகியோரது உரைகளை மனம் திறந்து பாராட்டினார். தொடர்ந்து, ”இந்தியாவில் இருப்பது இரண்டே இரண்டு அணிதான். ஒன்று சமூக நீதி தேவை என்கிற அணி! மற்றொன்று சமூக நீதி கூடாது என்கின்ற அணி!” என்று தலைப்பின் தேவையை நினைவு கூர்ந்தவர், தொடர்ந்து அறிஞர்கள் அமர்ந்திருந்தாலும், மாணவர்கள் அதிகம் இருந்ததால், “ஜாதி ஒழிய வேண்டும் என்று போராடுகிற நாங்கள் ஜாதிவாரி கணக்கு வேண்டும் என்கிறோம். ஆனால் ஜாதியை நிலைநிறுத்த வேண்டும் என்பவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என்று சொல்கிறார்கள். இதென்ன முரண்பாடாக இருக்கிறதே? என்று இங்கே கூட சிலர் நினைக்கலாம்” என்று தொடங்கி மாணவர்களின் ஆவலைக்கூட்டினார். தொடர்ந்து, அதற்கு பதிலாக “ஜாதி ஒழிய வேண்டும் என்றால்; சமத்துவம் வரவேண்டும்; சமத்துவம் வரவேண்டும் என்றால் அதற்கு சமூக நீதி தேவை! அந்த சமூகநீதியை அடைய ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை!” என்று எங்களிடம் சுயமுரண் இல்லை என்பதை பளிச்சென்று புரியவைத்தார். கூடாது என்பவர்களின் நோக்கம் என்ன என்பதையும் குறிப்பிட்டார். மேலும் எளிமையாக புரிய வைக்க, “அம்மை நோய்க் கிருமியை ஒழிக்க, அம்மை மருந்து தான் பயன்படுத்தப்படு கிறது” என்றொரு உதாரணத்தையும் எடுத்துரைத்தார். 

15

”ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூகத்தை ஸ்கேன் செய்வது போன்றது” என்றொரு கருத்தைச் சொல்லி, “அப்படி ஸ்கேன் செய்தால் தான் சமூகத்தில் இருக்கின்ற ஜாதிக் கிருமிகளை கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடித்த பிறகுதான் அதற்கான மருந்து கொடுத்து அழிக்க முடியும். அந்த மருந்தும்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு” என்று உதார ணங்களைத் தொடர்ந்தார். இந்திய அரசமைப்புச் சட்டப் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, முகப்புரையை படித்துக்காட்டி, ’சமூக நீதி’ என்பது நமது உரிமை என்பதை எண்பித்தார். மேலும் அதே அரசமைப்புச்  சட்டத்தில் உள்ள ’அடிக்வேட் ரெப்பரசென்டேசன்’ என்பதற்கான பொருளை விளக்கினார். "சமூகத்தில் இருக்கும் மேடு, பள்ளங்களைப் போக்க, சமூகநீதி அவசியம்! அதற்கும் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை” என்பன போன்ற பல்வேறு அரிய கருத்துகளைக் கூறி, "ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதே ஜாதியை ஒழிக்கத்தான். ”ஆகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் தேவை” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.   

ஆசிரியர் பேசுவதற்கு முன்பு, பேராசிரியர் நாகநாதன், “கடந்த கூட்டத்தில் கல்வியாளர்கள் இணைந்து ’பெரியார் - வீரமணி அறக்கட்டளை’ நிறுவியதை சுட்டிக்காட்டி, அதற்கு நன்கொடை வழங்குகின்றனர் என்று அறிவித்தார்.  பெரியார் - வீரமணி அறக்கட்டளைக்கு தொழிலதிபர் மாம்பலம் சந்திரசேகரன் ரூ.50,000மும், எஸ்.ஜே. பிரகாஷ் ரூ.50,000மும், மருத்துவர் இளஞ்செழியன்.ஜெ ரூ.50,000மும் நன் கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினர். இறுதியில் கல்லூரி மாணவி நன்றி கூறினார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவு செய்தனர். 

நிகழ்ச்சியில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், கோ.தங்கமணி, தனலட்சுமி, க.கலைமணி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மேனாள் நீதியரசர் மற்றும் வழக்குரைஞர்கள், அரங்கத்தை நிறைத் திருந்த கல்லூரியின் இருபால் மாணவர்கள்   கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக