பக்கங்கள்

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

  

 * சென்னை மாநகரில் வி.பி. சிங் சிலை திறப்பு வரலாற்றுச் சிறப்பானது

* சமூக நீதிக்காக பிரதமர் பதவியை விலையாகக் கொடுத்தவர் 

* திராவிடர் கழகத்தின் மீது வி.பி.சிங் கொண்ட பாசம் - நேசம் பெரியது!

சமூக நீதிக்காவலர் வி.பி. சிங்குக்கு தமிழ்நாடு அரசு சார்பில் திறக்கப்பட்ட சிலை தி.மு.க. ஆட்சி மகுடத்தில் ஒளிரும் முத்து

2

சென்னையில் தமிழ்நாடு அரசால் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் சிலை திறப்பு வரலாற்றுச் சிறப்பானது. தி.மு.க. அரசின் மகுடத்தில் ஒளிரும் முத்து என்றும், மண்டல் பரிந்துரையை செயல்படுத்திய சமூக நீதி காப்பாளர் வி.பி.சிங்கின் சிலையைத் திறந்தமைக்காக முதல் அமைச்சருக்கு கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் நன்றி என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமூகநீதிக் காவலர்  மாண்புமிகு வி.பி.சிங் அவர்களது முழு உருவச் சிலை சமூகநீதிக்கான சரித்திர நாயகர்  மானமிகு மாண்புமிகு  முதலமைச்சர் 

மு.க. ஸ்டாலின் அவர்களால்  இன்று காலை (27.11.2023) திறந்து வைக்கப்பட்டு தமிழ்நாடு வரலாற்றுச் சாதனை புரிந்த பெருமை பெற்றுள்ளது!

சென்னை தியாகராயர் நகரில் நமது வேண்டுகோளும், கலைஞரின் வாக்குறுதியும்

சில ஆண்டுகளுக்கு (2008) முன் வி.பி.சிங் அவர்களது புகழ் வணக்கம் செலுத்திய கூட்டத்தில் தியாகராயர் நகரில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது முன்னிலையில், சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களுக்கு சிலை எழுப்பப்பட வேண்டும் என்று கூறியதை கேட்ட கலைஞர் - அதனை நிச்சயம் செய்வோம் என்று கூறி ஒடுக்கப்பட்டோரின் நன்றிக் குரலாய் மாறினார்!

அதனை இன்றைக்கு கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படும் மகிழ்ச்சிகரமான கால கட்டத்தில் அவரது தனயனும் நமது 'திராவிட நாயகரு'மான நமது முதலமைச்சர் தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்து இன்று திறந்து வைத்துள்ளார்.

வி.பி. சிங் அவர்களது வாழ்விணையர் திருமதி சீதாதேவி மற்றும் அவரது இரு மகன்கள் அஜயா சிங், அபய் சிங்  ஆகியோர் முன்னிலையிலும் உ.பி.  எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்களை சிறப்பு விருந்தினராகவும் வரவழைத்து நடத்தியுள்ளார்!

தி.மு.க. அரசின் மணி மகுடத்தில் ஒளிரும் முத்து!

தமிழ்நாடு (தி.மு.க.) அரசின் மணிமகுடத்தில்  அற்புதமாகப் பதிக்கப்பட்ட சமூகநீதிக்கான ஒளி வீசும் முத்து ஆகும் இது!

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் ஒரு மாமனிதர் பண்பட்ட, அரசியல் ஞானி! எடுத்துக்காட்டான லட்சிய வீரர்.

பிரதமர் பதவி காரணமாக பெருமை பெற்றவர் பலர்; பிரதமர் பதவியை கொள்கைக்காக இழந்து, அதனால் பெருமை பெற்றவர் - பெறுபவர் அது என்றும் இழக்க முடியாத பெருமை; இறவாப் புகழ் ஆகும்!

அவரது தமிழ்நாட்டு நேசிப்பு வியக்கத்தக்கது! எளிதில் எவராலும் மறக்கத்தக்கதன்று.

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் அமைக்க ஆணையிட்டதுடன், தமிழ்நாட்டை மிக சக உறவுக்காரர்களின் உன்னத பூமியாகக் கருதி திராவிட இயக்கத்திடம் மாறா பாசமும் மரியாதையும் வைத்திருந்தவர்!

மண்டல் பரிந்துரையை நிறைவேற்றி அதற்காக பிரதமர் பதவியை இழந்தவர்

மண்டல் அறிக்கையின் பரிந்துரையை (வேலை வாய்ப்பை)  செயல்படுத்திய அவரது துணிச்சல் அசாதாரணமானது. அவருடன் இருந்த அமைச்சரவை சகாக்கள் கட்சிப் பொறுப்பாளர்கள் உள்பட பலரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது "எதிர்நீச்சல் அடித்து" அதைச் சாதித்துக் காட்டியவர்!

"சிறந்த பொருளை பெற நல்ல விலை கொடுத்தாக வேண்டும்" அல்லவா?  அதற்காக ஒரு முறை அல்ல எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமர் பதவியை இழக்கத் தயார்" என்று அவர் கூறியது பொன் எழுத்துக்கள் ஆகும். 

"இது" கமண்டலுக்கும் மண்டலுக்கும் நடக்கும் கருத்துப் போர்; இதில் மண்டல் வெற்றி பெற்று வருங்காலத்தில் "மண்டல் காற்று" தனி வாசனையுடன் நாடெங்கும் வீசும் என்று முன்னோக்கோடு அவர் முழங்கினார்!  இன்று நாடெங்கும் சமூகநீதிக் குரல் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திராவிடர் கழகத்தின்மீது 

வி.பி.சிங் கொண்ட பாசம்!

திராவிடர் கழகத்தோடும் நம்மீதும், தி.மு.க.வுடனும், கலைஞரோடும் அவர் கொண்ட பாசமும் நேசமும் என்றும் மறக்க முடியாத வரலாற்றுப் பெட்டகமே!

தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா, பெயர்களைக் கூறி மரியாதை செலுத்திய பிறகே மண்டல் ஆணையை நாடாளுமன்றத்தில் அறிவித்த ஒப்பற்ற சமூகநீதியாளர். 

அவரது சிலை போதிக்கும் சீலம், சமூகநீதி அரசியலில்  கொள்கைக்காக பதவி துறப்பு மூலம் கொள்கை உயிர்ப்பு என்ற புதுத்தத்துவம் - ஒரு அரசியல் புத்தொளி - புதிய பரிமாணம் ஆகும்! அவரால் துவக்கி வைக்கப்பட்ட மண்டல் புயல் இன்று நாடு தழுவிய சுனாமியாகி, ஆதிக்கவாதிகளின் ஏகபோகத்தையும், எகத்தாள ஏதேச்சதிகாரத்தையும் வீழ்த்த சூறாவளியாக சுழன்றடிக்கத் தொடங்கி விட்டதால் சுயமரியாதை உலகுக்குப் புதிய வெற்றி முளைக்கின்றது!

3

வி.பி.சிங் சிலையை நிறுவிய முதல் அமைச்சருக்கு ஒடுக்கப்பட்டோரின் நன்றி!

புதிய நம்பிக்கை சிறகடிக்கிறது! சமூகநீதிக் காவலர்

வி.பி. சிங் சிலை வைத்த நமது திராவிட மாடல் அரசுக்கும், அதன் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களுக்கும் கோடானு கோடி ஒடுக்கப்பட்டோரின் நன்றி!

இது பெரியார் மண்; சமூகநீதி மண்!

திராவிட இயக்கம் அதன் காவல் அரண் - அதனை நாளும் கட்டிக் காப்பது திராவிடர் ஆட்சி. அதுவே என்றும் எம்மாட்சி - வி.பி. சிங் சிலையே அதற்கான சாட்சி.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.11.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக