பக்கங்கள்

வியாழன், 17 ஜூலை, 2025

சமூகநீதி அமைப்புகள் இதற்காகக் குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம்! (உச்சநீதிமன்ற பணிகளில் இட ஒதுக்கீடு)

 


உச்சநீதிமன்ற பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடுக்கு

வழி செய்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் ஆணை வரவேற்கத்தக்கது!
உயர்நீதிமன்றங்களிலும் இம்முறை இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்!
எஸ்.சி., எஸ்.டி.,க்கு அளிக்கப்பட்டதைபோல பிற்படுத்தப்பட்டவர்களுக்கும்
உச்ச, உயர்நீதிமன்றங்களிலும் அரசமைப்புச் சட்டப்படி இட ஒதுக்கீடு அவசியம் தேவை!
தமிழர் தலைவர் ஆசிரியரின் சமூகநீதிக்கான அறிக்கை

உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது; இதில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வழி செய்யவேண்டும்; அதேபோல, உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும்; இதற்காக சமூகநீதி அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமூகநீதி பாய வேண்டிய முக்கியமான தளங்களில் முதன்மையானது உச்சநீதிமன்றம்; அதற்கடுத்தவை உயர்நீதிமன்றங்கள்.

ஆசிரியர் அறிக்கை

நீதிமன்றங்களிலும்
இட ஒதுக்கீடு!

நாமும் (திராவிடர் கழகம், தி.மு.க. போன்ற திராவிட இயக்கம்), முற்போக்கு கட்சிகளும், அமைப்புகளும், ராகுல் காந்தியின் முக்கிய பொறுப்பில் இயங்கும் இன்றைய இந்திய தேசிய காங்கிரசும், இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் இயக்கங்களும் சமூகநீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது – சற்று காலந்தாழ்த்தியாவது – பலன் அளித்து வருகிறது!

மக்கள் பிரதிநிதிகள் இயற்றும் சட்டங்களைச்  ‘செல்லும் அல்லது செல்லாது’ என்று தீர்ப்ப ளிக்கும் மேல்நிலையில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் உள்ளன!

‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான் முக்கியம்!

அங்கே பொறுப்பேற்கும் நீதிபதிகள் நிய மனங்களில் – ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்ற சமூகநீதி அடிப்படையிலும், பல நாள் பட்டினியால் வாடியவர்களான ‘பசியேப்பக்கா ரர்களுக்கு’ முன்னுரிமை, அஜீரணம் ஆகும்வரை ஏற்கெனவே விருந்தில் வயிறு முட்ட உண்டவர்களுக்கு அடுத்த வரிசை என்ற அடிப்படையிலும்தான் நியமனங்கள் அமையவேண்டும்.

தந்தை பெரியார், திராவிடர் இயக்கத்தின்  அடிநாதம் இதுவே ஆகும்!

இந்தத் தத்துவம் – டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அடிப்படை உரிமைகள் பகுதியில் ஒடுக்கப்பட்டோரை நியமனம் செய்யும்போது ‘Adequately’ என்ற சொல்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றவர்களோடு சமப்படுத்தும்வரை!

இலத்தீன் மூலச் சொல் Adequatus என்பதன் ஆங்கிலச் சொல்லான Adequate என்ற சொல்லின் பொருள் ‘Till it is equalized’ – ‘மற்றவர்களோடு சமப்படுத்தும் வகையில் அமையவேண்டும்’ என்பதுதான்.

நீதிபதிகள் நியமனங்களுக்குப் பரிந்து ரைக்கும் கொலிஜியத்தில் (Collegium) சமூகநீதி சில ஆண்டுகளுக்கு முன்தான் உச்சநீதிமன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பிருந்துதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொள்கை அளவில் வெளிப்படையாகவே ஏற்கப்பட்டது. (எடுத்துக்காட்டு, ஜஸ்டிஸ் மகாதேவன் அவர்களது நியமனப் பரிந்துரை).

வரவேற்கத்தக்கது!

இப்போது தலைமை நீதிபதியாகியுள்ள ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் அவர்கள், உச்சநீதி மன்றப் பணி நியம னங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தி ருப்பதை நாட்டின் சமூகநீதிப் போராளிகளின் சார்பாக வரவேற்கிறோம்.

ஆனால், இதில், OBC என்ற பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு உண்டு என்று விரிவுபடுத்தப்படுவதும் அவசியமாகும்.

மாண்பமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் இதனை உடனடியாகப் பரிசீலித்து ஆணை வழங்குவது அவசியமாகும்.

நீதிபதிகள் நியமனத்தில் இக்கொள்கையை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, அது செயலுக்கும் வந்துவிட்ட பிறகு, உச்சநீதிமன்றப் பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோ ருக்கும் அதைத் தருவது நியாயம்தானே!

எனவே, மாண்பமை தலைமை நீதிபதி அவர்கள், பணி நியமனத் தொடர்ச்சியில் விட்டுப் போனதையும் இணைத்தால், சமூகநீதி அனைவருக்கும் கிடைத்த வரலாறு முழுமை அடையும்.

நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு – பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தேவை!

மற்றொரு முக்கிய வேண்டுகோள் – உச்ச நீதிமன்றப் பணி நியமனங்களில் பின்பற்றப்படும் இதே நடைமுறை உயர்நீதிமன்றங்களிலும் பின்பற்றப்படல் வேண்டும்.

உயர்நீதிமன்றப் பணி நியமனங்களில் சமூகநீதி பின்பற்றப்படல் முக்கியமானதாகும். இதுவரை இருப்பதாகத் தெரியவில்லை.

சமூகநீதி அமைப்புகள், இயக்கங்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து, ஓரணியில் நின்று இந்த உரிமைக்குக் குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம்.

முதலில் ‘‘கணக்குத் திறந்தது’’போல  ஒரு புதிய அத்தியாயத்தினைத் தொடங்கிய தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் அவர்களின் உத்தரவு சமூகநீதிக்கான அமைதிப் புரட்சியாகும்! அவருக்கு நமது வாழ்த்துகளும், நன்றியும்!

அனைவரும் ஒருமித்து குரல் தருவதும், அவசரம், அவசியமாகும்!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
4.7.2025

 விடுதலை நாளேடு, July 4, 2025

வரவேற்கத்தக்க அறிவிப்பு! உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு!



தமிழர் தலைவர் ஆசிரியரின் பாராட்டும், நன்றியும்!

உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதற்கு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தமது நெஞ்சம் நிறைந்த பாராட்டினையும், நன்றியையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் எஸ்.சி.,  எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆணை பிறப்பித்ததை வரவேற்று நேற்று (4.7.2025) ‘விடுதலை’யில் அறிக்கை வெளியிட்டிருந்தோம்.

OBC என்ற பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு  விரிவுப்படுத்த வேண்டியது அவசரம், அவசியம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். நமது கோரிக்கைக்கு செவி சாய்த்ததுபோல் இன்று (5.7.2025)) காலை அந்த நல்ல செய்தி வெளிவந்துவிட்டது. ‘பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என்ற ஆணையை உச்சநீதிமன்றம் பிறப்பித்துவிட்டது. சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமாக இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள், மேனாள் ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கும் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதி மன்ற மேலதிகாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கான 1961 ஆண்டின் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பணி சார்ந்த விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் சார்ந்த விவரங்கள் அடங்கிய பட்டியலில் முறைப்படி திருத்தம் செய்துள்ளனர். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜூலை 3 ஆம் நாள் கையொப்பமிட்டு விதி எண்.4A–வில் திருத்தத்தை அங்கீகரித்துள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் விதி எண்.146/பிரிவு 2–இன்படி உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு பெறுவது உறுதி

புதிய விதி 4A–வின்படி- “பல்வேறு பதவிகளுக்கான நேரடி நியமனங்களுக்கு எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்படுகிறது. அவ்வப்போது ஒன்றிய அரசு வெளியிடும் அறிவிப்புகள், அறிக்கைகள்,  அரசாணைகள் மட்டும் விதிமுறைகளுக்கு ஏற்றபடி இது பின்பற்றப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பற்றிய விவரங்கள், இன்ன பிற திருத்தங்கள், நிபந்தனைகள் போன்றவற்றை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவ்வப்போது அறிவிக்கும்போது அவற்றுக்கேற்ப மேற்கண்ட ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும். பணி நியமனங்களின்போது மேற்கண்ட பிரிவினர் அனைவரும் ஒதுக்கீடு பெறுவது உறுதி செய்யப்படுகிறது.”

இவ்வாறு திருத்தப்பட்ட விதி எண்.4A–வில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

நமது நெஞ்சம் நிறைந்த
பாராட்டு – நன்றி!

‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி, மாற்றுத் திறனாளிகள் என அனைத்து பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அளித்திடும் ஆணையை பிறப்பித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் பி.ஆர்.கவாய் அவர்களுக்கு,  நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், நன்றியையும் உரித்தாக்குகிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

5.7.2025

புதன், 7 மே, 2025

தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 


விடுதலை நாளேடு

தமிழ்நாடு

சென்னை, ஏப்.29 தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த மாதம் 14ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ஆம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, 24ஆம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தாக்கல் செய்யப் பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.4.2025) பதிலளித்து பேசினார். அப்போது, தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்கிற சொல் நீக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

“இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-ஆவது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும். மேனாள் முதலமைச்சர் கலைஞர், ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு உழைப்பு’ என கூறுவார். ஆனால் அவர் தற்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் ‘சாதனை சாதனை சாதனை’ என கூறியிருப்பார். கலைஞர்  இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன்.

தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம். இந்தியாவில் 11.2% வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை. மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 25 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு.

தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் ஒன்றிய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைந்துள்ளது. ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் தமிழ்நாடு அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வியாழன், 28 நவம்பர், 2024

பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் கொடூரம் பழங்குடியின பெண் வாயில் மலத்தை திணித்து தாக்குதல்!

 

விடுதலை நாளேடு

புவனேசுவர், நவ.23 பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் பழங்குடியின பெண் வாயில் மலத்தை திணித்து தாக்கு தல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒடிசா மாநிலத்தில் முதன்முறையாக பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக பழங்குடியினத்தைச் சேர்ந்த மோகன் சரண் மாஜி உள்ளார். ஒடிசாவில் பழங்குடியினரின் நலனுக்காக மோகன் சரண் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க.வினர் பெருமை பேசினர்.

ஆனால் ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஒடிசாவின் லங்கீர் மாவட்டத்தில் உள்ள ஜுராபந்த் எனும் கிராமத்தில் அபய் பக் எனும் வேறு சமூகத்தைச் சேர்ந்த நபர், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்குச் சொந்தமான வயலில் டிராக்டரை ஓட்டி பயிர்களை நாசம் செய்து இருக்கிறார்.
இதைக் கண்டித்தும், அபய் பக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இளம்பெண்ணும், அவரது உறவி னர்க ளும் ஜுராபந்த் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் நவ.19ஆம் தேதி அன்று வயலை நாசப்படுத்திய ஜாதி வெறிக் குண்டர்களைக் கண்டித்து போராட்டம் நடத்திய இளம்பெண் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அபய் பக் இளம்பெண்மீது தாக்குதல் நடத்தி, மானபங்கம் செய்தது மட்டுமல்லாமல் ஆபாசமான வார்த்தைகளால் ஜாதிய ரீதியாக திட்டியிருக்கிறார்.

தனது மகளை மீட்க வந்த இளம்பெண்ணின் தாயின் கழுத்தை பிடித்து நெரித்து அபய் பக் தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் மனித மலத்தை எடுத்து இளம் பெண்ணின் முகம் முழுவதும் பூசி, அவரது வாயிலும் திணித்திருக்கிறார் அபய் பக்.
இதனையடுத்து இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசா ரணை நடத்துவதாக மட்டுமே தெரி வித்துள்ளனர். ஆனால், இன்னமும் அபய் பக் கைது செய்யப்படவில்லை. இதனால் அபய் பக் பா.ஜ.க.விற்கு நெருக்கமானவராக இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

புதன், 25 செப்டம்பர், 2024

ஆந்திர சட்ட மன்றத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு – அமைச்சரவையில் தீர்மானம்


விடுதலை நாளேடு

அமராவதி, செப்.20 ஆந்திர அமைச் சரவை கூட்டம் முதலமைச்சர் சந்திரபாபு தலைமையில் அமராவதியில் நேற்று (19.9.2024) நடை பெற்றது.

இதில் சட்டப் பேரவையில், பிற்படுத் தப்பட்ட பிரிவினருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதன் மூலம் தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் சந்திரபாபு நிறைவேற்றி உள்ளார். மேலும் மதுபான கடைகளை மீண்டும் தனியாருக்கே வழங்கி, தரமான மதுபானங்களை குறைந்த விலைக்கு கொடுப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

180 மிலி ரூ.99-க்கு தரமானதாக வழங்கிட வேண்டுமெனவும், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் அளவுக்கு விலை இருக்க வேண்டுமெனவும், அதுவும் தரமான மதுபானங்களை மட்டுமே விற்க வேண்டுமெனவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஜெகன் அரசு, அவரது ‘சாட்சி’ நாளிதழை மட்டுமே கிராம,வார்டு செய லகங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ.200 செலுத்தி அரசு சார்பில் வழங்கி வந்தது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும், சாட்சி நாளிதழ் வழங்குவதை நிறுத்தவும் முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவிட்டார்.

ஆதார் அட்டைபோன்று, மாணவ, மாணவிகளுக்கு தனி அடையாள அட்டையை அரசு தரப்பில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு ‘ஸ்டே மீ’ எனும் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. உள்துறைக்கு புதிய கார்ப்பரேஷன் கொண்டு வரப்பட உள்ளது.
இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

இடஒதுக்கீட்டில் மோசடி செய்து வெளிநாடுகளில் உல்லாச வாழ்வு! ஜாதியோ உயர்ந்த ஜாதி! செய்வதோ தரம் தாழ்ந்த அநீதி!-பாணன்

 ஞாயிறு மலர்,விடுதலை


இடஒதுக்கீட்டில் மோசடி செய்து, ஜாதிப் பிரிவுகளுக்கு போலிச் சான்றிதழ் கொடுத்து, ஒன்றிய அரசின் நிதிச் சலுகைகளைப் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று குடியுரிமை பெற்று உல்லாசமாக வாழும் பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதியினர் குறித்துப் பார்க்கலாம்:

இது மத்தியப் பிரதேசம்

போலி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சான்றிதழ் கொடுத்து வெளிநாடு படிக்கச்சென்று செட்டில் ஆன பார்ப்பனர்கள்.

வெளிநாடு சென்று படிப்பதற்காக 30 மாணவர்கள் ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளின் போலி ஜாதிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் உதவித்தொகை பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் படிப்பை முடித்துவிட்டு லண்டன். சிட்னி, மிட்சிகன்(அமெரிக்கா) உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களில் பணியில் சேர்ந்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

தகுதி இருந்தும் பல ஆண்டுகளாக தங்களுக்கு வெளிநாடு சென்று படிப்பதற்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என்று விண்ணப்பித்திருந்த மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், இவர்களின் சான்றிதழ்களை தனியார் அமைப்பு ஆய்வு செய்தபோது இவர்கள் தகுதியானவர்கள். ஆனால், இவர்கள் இடத்தில் வேறு நபர்களுக்கு உதவித்தொகை கொடுத்து அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதும் தெரியவந்தது.

மத்தியப் பிரதேச அரசு ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கான வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு வந்த விண்ணப்பங்களில் பல விண்ணப்பதாரர்களின் சிலரை ஆய்வு செய்தது. அப்படி விண்ணப்பித்து பணம் பெற்று வெளிநாடு சென்றவர்களின் குடும்பப் பெயர் சர்மா ஆகும்.
இதில் ஆயுஷி சர்மா, சிசிர் சர்மா மற்றும் நயன் சர்மா ஆகிய மூவரைப் பற்றியும் துறையின் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது.

இந்தூரில் தயாரிக்கப்பட்ட அவர்களது ஜாதிச் சான்றிதழ்கள் உள்ளூர் நிர்வாகத்தால் சரிபார்க்கப்பட்டபோது, மூன்று மாணவர்களும் பார்ப்பனர்கள் என்பது தெரிய வந்தது.

ஓபிசி மகாசபை, பழங்குடியினர் சேவா சங்கம் மற்றும் பிற அமைப்புகள் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டன. 2019 முதல் 2022 வரை உதவித்தொகை பெற்ற மாணவர்களின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்படி ஆய்வின் போது 50 க்கும் மேற்பட்டவர்கள் பார்ப்பனர்களாக இருந்தனர்.

எனவே, இந்த அமைப்புகள் விண்ணப்பதாரர்களின் ஆவணங்களை சரிபார்ப்பதுடன், அவர்கள் வசித்த இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தின. இந்த விசாரணையின் போது, அவர்கள் பார்ப்பனர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

புகார் அளித்த பிறகும் இது குறித்து மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக புகார் அளித்த அமைப்புகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளன.

1. ஜனவரி 1, 2022 அன்று நயன் சர்மாவின் போலி ஜாதிச் சான்றிதழ் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், ஏப்ரல் 2022இல் 19 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2022இல் நயன் ஆஸ்திரேலியா சென்றார். ஜாதிச் சான்றிதழ் போலியானது என கண்டறியப்பட்டது.

2. சிசிர் சர்மா 2020இல் 35 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற்றார். இவருக்கு இயக்குநர் பொறுப்பில் உள்ள மூத்த அதிகாரி சிபாரிசு செய்திருந்ததாக கூறப்படுகிறது மேலும் அவர் சிக்ஷா சாஸ்திரி கலா பள்ளி, கனாடியா சாலை, இந்தூரில் படித்ததாகக் கூறினார். சான்றிதழில் குறிப்பிடப்பட்ட அந்தப் பள்ளியே இல்லை என்பது தெரிய வந்தது. மாவட்ட கல்வித்துறை உயரதிகாரியும் இதை உறுதிப்படுத்தினார். இவர் லண்டனில் உள்ளார்.

3. அவனீஷ் தன்வருக்கு 2022இல் 20 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. தன்வரின் சான்றிதழ் இந்தூரில் எந்த முகவரியில் தயாரிக்கப்பட்டதோ அது வாடகை வீடு என்பதும், அய்டிஆர் மற்றும் பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பானிபட் முகவரியும் போலியானது என்பதும் தெரிய வந்தது. இவர் சிட்னியில் உள்ளார்.
கல்வி உதவித்தொகைக்காக மாணவர்களின் போலி ஜாதிச் சான்றிதழ் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரது பெயர் பட்டியலில்.

1. பெயர் நயன் ஷர்மா, ஆண்டு: 2021, அரசு உதவி: ₹20 லட்சம், ஜாதி: பிராமணர்.
2. கரிமா சிங், ஆண்டு: 2020, அரசு உதவி: ₹29 லட்சம், ஜாதி: தோமர் ராஜ்புத்.
3. ஆஷின் மொஹ்பே, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹26 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
4. பிரகர் அமிர்தா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹27 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
5. ஷுபம் தேஷ்முக், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித் தொகை: ₹31 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
6. தருண் கும்ராவத், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹2 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
7. ஆஷிர், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹37 லட்சம், ஜாதி: ஜெனரல் ராஜ்புத்.
8. அவ்னிஷ் தன்வார், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹20 லட்சம், ஜாதி: உயர்ஜாதி.
9. ரவீனா சர்மா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹1 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
10. ஷிஷிர் சர்மா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹35 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.

 

11. ஆயுஷி ஷர்மா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹30 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
12. தர்ஷன் சோன்வானே, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹35 லட்சம், ஜாதி: உயர்ஜாதி.

மத்தியப் பிரதேசம் விதிசா என்ற இடத்தில் பழங்குடியின சான்றிதழைக் கொடுத்து 32 ஆண்டுகளாக வனத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் அபிசேக் சர்மா என்ற பார்ப்பனர். இவர் மீது புகார் அளித்த பிறகும் விசாரணையை துவங்க 12 ஆண்டுகள் ஆனது. அதற்குள் அவர் பணி ஓய்வும் பெற்றுவிட்டார்.

13. நீலம் ரத்தோர், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹37 லட்சம், ஜாதி: உயர்ஜாதி.
14. பரம் கேவலே, ஆண்டு: 2019, பெற்ற அரசு உதவித்தொகை: ₹28 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
15. துவாரகை வீர், ஆண்டு: 2010, பெற்ற அரசு உதவித்தொகை: ₹48 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

வரவேற்கத்தக்க அரிய தீர்ப்பு! பழங்குடியினருக்கு உள்இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

 


புதுடில்லி, ஆக.1 தாழ்த்தப்பட்ட சமூகத்திலேயே மிகவும் பின் தங்கிய வருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்கிய முடிவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின் தங்கியவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும்
7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்ற அமர்வில், ஆறு நீதிபதிகள் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்ப ளித்துள்ளனர். ஒரு நீதிபதி மட்டும் மாறு பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே உள் ஒதுக்கீடு வழங்கி உள்ளன. அந்த சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலிருந்த திமுக அரசு அருந்ததி யினருக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 2020 ஆம் ஆண்டு அய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என்று தீர்ப்பு அளித்தது.

ஆனாலும், ஏற்கெனவே உள் ஒதுக்கீட்டை அனுமதிக்கக் கூடாது என்று ஆந்திரா வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதி கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துரை செய்திருந்தது. இதேபோன்று பஞ்சாப், அரியானா மாநில வழக்குகளும் ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

ஏழு நீதிபதிகள் அமர்வில் விசாரணை!
அந்த வழக்குகள் ஒட்டுமொத்தமாக கடந்த பிப்ரவரி மாதம், 7 நீதிபதிகள் அமர்வின்முன்பு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கியது.
இதில், அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும். பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க முடியும் என பெரும்பான்மை அமர்வு தீர்ப்பளித்தது. உள் ஒதுக்கீடு சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் ஆறு நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பில் நீதிபதி பெலா திரிவேதி மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளார்.மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆவது பிரிவை உள் ஒதுக்கீடு மீற வில்லை. அதன்பிறகு பட்டியலின உள்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படவில்லை.இதன் காரணமாக உள் ஒதுக்கீடு வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை. மேலும் பட்டியல் இனத்தவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்த ஒரு தடையும் கிடை யாது என உச்ச நீதிமன்றம் இறுதியில் உத்தரவு பிறப்பித்துள்ளது.