பக்கங்கள்

செவ்வாய், 21 ஜனவரி, 2020

தாழ்த்தப்பட்ட அமைச்சர்களும் கோவிலுக்குள் நுழைய முடியவில்லையே!

70 ஆண்டு குடியரசின் இலட்சணம்!

தாழ்த்தப்பட்ட அமைச்சர்களும் கோவிலுக்குள் நுழைய முடியவில்லையே!

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் குமுறல்!

கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட  இமாச்சலப் பிரதேச மாநில அமைச்சர்  ராஜீவ் சைசால், கோவிலுக்கு வெளியே நின்றிருந்த காட்சி.

சிம்லா, ஜன. 13 இமாச்சலப் பிரதேசத்தின் சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சர் ராஜிவ் சைசால் மாநிலத்தின் இட ஒதுக்கீடு தொடர்பான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தின் போது தன்னை கோவிலில் நுழைய விடாமல் அவமானப்படுத்திவிட்டனர். என்னை மட்டுமல்ல, பல அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வரு கின்றனர் என்று புலம்பியுள்ளார்.

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு மட் டும் வழங்கப்பட வேண்டுமென அரச மைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

எனினும், இந்த இடஒதுக்கீட்டை 1960-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 10 ஆண்டு களுக்கும் மத்திய அரசு நீட்டித்து வந்தது. அந்த வகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை நீட்டித்து கடந்த 2010-ஆம் ஆண்டு இயற் றப்பட்ட சட்டம், வரும் 25-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

‘‘எம் ஓட்டுநர் கோவிலுக்குள் போகலாம்;

நான் போக முடியாது!''

இதையடுத்து, இந்த இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அரசமைப்புச் சட்ட (126-ஆவது) திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநில சட்டப் பேரவைகளிலும் இந்த இடஒதுக்கீடு நீட்டிப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவைக் கூட்டத்தின்போது மத்திய அரசின் இந்த சட்டம் மாநிலத்தில் நடை முறைப்படுத்த விவாதம் நடைபெற்றது. அப்போது சமூக நீதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜீவ் சைசால் கூறும் போது, “நானும் சட்டமன்ற உறுப்பினரான வினோத் முகோரும் கோவி லுக்குச் சென்றோம் (கோவில் பெயர் குறிப் பிடப்படவில்லை). அப்போது கோவி லுக்கு வெளியே வந்த கோவில் நிர்வாகிகள் எங்களை கோவில் வாசலில் இருந்து பல மீட்டர் தூரம் வெளியே நிற்குமாறு மிரட் டினார்கள்.

என்னுடன் வந்த பாதுகாவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கோவிலுக்குள் சென்று வந்துவிட்டனர், அங்கு நின்று கொண்டு இருந்த எங்களுக்கு மிகுந்த அவமானமாகப் போய்விட்டது,  எனது ஓட்டுனர் கோவிலுக்குள் சென்று வந்த பிறகு நாங்கள் அங்கு நிற்பதைப் பார்த்து ஒன்றும் கூறாமல் நின்றுவிட்டார்” என்று வேதனையுடன் கூறினார். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கின்னரூ ஜகத் சிங் நெஹி என்பவர், ‘‘உண்மைதான் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இது போன்று பல கோவில்களில் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டுள்ளனர்'' என்று கூறினார்.

இதற்குப் பிறகும் பேசிய சைசால் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் கேபினெட் தகுதி பெற்ற என்னைப் போன்ற அமைச்சருக்கே இந்த அவமான சூழ்நிலை என்றால், மற்றவர்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டிருப்பார்கள். இந்த இழிநிலை எப்போதுதான் முடிவிற்கு வரும் என்று கண்கள் கலங்க சபையில் பேசினார். மேலும் அவர் பேசும் போது, சீக்கிய மதகுரு இந்த பேதங்களை நீக்க அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் முறையையும் (லங்கர்), அனைவரும் ஒன்று சேர்ந்து வணங்கும் முறையையும் கொண்டுவந்தார். இதன் மூலம் சீக்கியர்களிடம் ஜாதிய முறை ஒழிந்தே போனது என்று கூறினார்.

இது தொடர்பாக மற்றொரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுக்வீந்தர் சிங்சாக்கு  கூறும் போது, “நமது மாநில கேபினெட் தகுதி பெற்ற அமைச்சரை கோவிலில் நுழையவிடாமல் தடுத்தவர்களை தாழ்த் தப்பட்ட பழங்குடியினர் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். இது போன்ற நிலை வரக்கூடாது என்று தான் ராஜீவ் காந்தி சிறப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்'' என் றார்.

கோவில்களில் தீண்டாமை இன்றும் உள்ளது -முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

தனக்கு ஏற்பட்ட இந்த அவமானமான நிகழ்வு குறித்து அமைச்சர் ராஜிவ் சைசால் கூறியதும், சிறிது நேரம் அவையே அமைதி யானது. அதன் பிறகு முதல்வர் ஜெயராம் தாக்கூர் பேசிய போது, “சைசால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது வேதனை எங்களுக்குப் புரிகிறது, அவரைப்போலவே அவையில் உள்ள பலரின் வேதனைகளையும் நான் கணக்கில் எடுத்துள்ளேன்.  சில இடங்களில் நானும் இதே போன்ற ஒரு நிலையை சந்தித்துள்ளேன். தாழ்த்தப்பட்ட வர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உணவு வழங்கும் போது தனிவரிசை மற்றும் தனி பாத்திரம் கொடுப் பதும் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இதற்கான மாற்றங்கள் அடிமட்டத்தில் இருந்து வரவேண்டும். இன்னும் நிறைய தூரம் நாம் செல்லவேண்டியுள்ளது'' என்றார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆசா குமாரி பேசும் போது முதல்வர் இவ்விவகாரத்தை சாதாரணமாகப் பேசுவது போல் தெரிகிறது, மாநிலம் முழுவதுமே இந்த தீண்டாமை தொடர்கிறது.  ஒரு சில இடங்களில் மட் டும் நடக்கிறது என்பது போல் உள்ளது முதல்வரின் பேச்சு என்று கூறினார்

இதனை அடுத்து சிபிஅய்(மார்க்சிஸ்ட்) சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சின்கா பேசும்போது, மாநிலத்தில் தீண்டாமையை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் தீண்டாமை நீடிப் பது அவமானகரமான ஒன்றாகும் என்று கூறினார்.

அப்போது பேசிய பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் ஆட்சியின் போதும் தீண்டாமை இருந்தது இப்போதுமட்டும் புதிதாக தோன்றியது போன்ற நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்றனர்.

இதற்குப் பதிலளித்து காங்கிரஸ் உறுப் பினர் ஆசாகுமாரி பேசும் போது, “காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் ஒரு வாரம் நடைபெறுகிறது, உறுப்பினர்கள் அனைவருமே பேச வாய்ப்புகள் தரப்படுகின்றன. ஆனால் இங்கே ஒரு நாள் அதுவும் சில மணி நேரம் மட்டுமே சட்டமன்ற கூட்டம் நடைபெறு கிறது. இச்சபையில் இருக்கும் அனைத்து உயர்ஜாதியில்லாத உறுப்பினர்கள் தாங்கள் தீண்டாமையால் பாதிக்கப்பட்டோம் என்றுகூறுகிறார்கள். ஆனால், அவர்கள் பேசுவதற்கு அரசு அனுமதி மறுத்து, சபையை விரைவில் முடித்துவிடப் பார்க் கிறது. இதுதான் பாஜகவினரின் தீண்டா மையை ஒழிக்கும் நடைமுறையா என்று கூறினார். இதனை அடுத்து சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

2017-ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநில சட்டமன்றத்திலும் கோவில்களில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்தனர். அப் போதைய மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் மீது திடீர் பாசம் கொண்டவருமான தருண் விஜய் சில தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு உத்தராகண்டில் உள்ள கோவில்களுக்குச் சென்றார். அப் போது கோவில் நிர்வாகத்தினர் அவருடன் வந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட நபர்கள் மீது கல்லெறிந்தனர். அதன் பிறகு அவருடன் சென்ற தாழ்த்தப்பட்ட நபர்கள் ஊரில் இருந்து ஒதுக்கிவைக்கப் பட்டனர். இது தொடர்பாக ‘‘தைனிக் பாஸ்கர்'' என்ற இந்தி இதழில் செய்தி வந்த பிறகும், இது தொடர்பாக தருண் விஜய் எந்த கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 13 1 20

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

ஜாதிவாரி கணக்கெடுக்க மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானித்தது வரவேற்கத்தக்கதே!

தமிழ்நாடு அரசும் இதனைப் பின்பற்றவேண்டும் -
ஜாதி ஒழிக்கப்படும்வரை இட ஒதுக்கீடு அவசியம் தேவை!
ஜாதியை ஒழிக்க மத்திய அரசு சட்டம் ஒன்று கொண்டு வரட்டும்!
ஜாதி ஒழிக்கப்படும்வரை ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை - அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடும் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது  அறிக்கை வருமாறு:
மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில், கடந்த புதன்கிழமையன்று (8.1.2020) சபாநாயகரே, தாமே முன்வந்து ஒரு முக்கிய தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.
அதை ஒருமனதாக அனைவரும் வழிமொழிந்து நிறைவேற்றியுள்ளனர்.
வருகின்ற மக்கள் தொகை கணக் கெடுப்பின்போது ஜாதி வாரியாக மக்கள் தொகையும் இணைத்து எடுக்கப்படல் வேண்டும்; அப்போதுதான் இதர பிற் படுத்தப்பட்ட சமூக மக்கள் (Other Backward Classes) தொகை எவ்வளவு என்பது துல்லியமாக கண்டறியும் வாய்ப்பு ஏற்படும் என்றும் தனது முன்மொழிவின் விளக்கத் தில் கூறியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு தெரிந்துகொள்ளட்டும்!
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.
இதற்குப் பா.ஜ.க.வின் முன்னாள் முதல் வரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரு மான தேவேந்திர பட்னாவிசும் தனது கட்சியின் ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.
இதைத் தமிழ்நாடு அரசும், மற்ற அனைத்து மாநிலங்களின் அரசும் வற் புறுத்தவேண்டும்.
இக்கோரிக்கை நம்மால் பல ஆண்டு களுக்கு முன்பே வற்புறுத்தப்பட்ட ஒன்றாகும்.
‘‘ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பா? மக்களை இப்படிப் பிரித்து கணக்கெடுப்பது நியாயமா? அதிலும் ஜாதி ஒழிப்புக்கான இயக்கம் போன்ற திராவிடர் கழகம் இதனை வற்புறுத்தலாமா? அது முரண்பாடு அல்லவா?'' என்று மேலெழுந்த வாரியாக இப்பிரச்சினையை நோக்கும் சிலர் கேட்கக்கூடும்.
ஏன் இட ஒதுக்கீடு?
நமது லட்சியம் ஜாதியற்ற சமூகம் காண்பதுதான்; ஆனால், அதே ஜாதி தர்மம் (குலதர்மம் - மனுதர்மம்) காரணமாக பல் லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பல கோடி மக்கள் மற்ற முன்னேறிய ஜாதி - வகுப்பினருக்குச் சமமாக ஆகும் நிலை வரும்வரை, அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டியது அவசியம் என்பதால்தான், இந்திய அரசமைப்புச் சட்டமே சமூகநீதிக் கண்ணோட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்த வர்களான (மலைவாழ்) பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், மிகவும் பிற் படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தருவது அவசியம் என்று வரையறுத்து, மூன்று  முக்கிய அரசமைப்புச் சட்டத் திருத்தங்களையும் உள்ளடக்கி, நிலைநாட்டியுள்ளது.
உச்சநீதிமன்றமும் தனது 9 நீதிபதிகள் அமர்வுமூலம் மண்டல் வழக்குமூலம் இதை (இந்திரா சகானி வழக்கு) ஏற்றுள்ளது.
ஜாதிக் கணக்கெடுப்புமூலம்தான் ஜாதி புகுத்தப்படுகிறதா?
சட்டத்தில் ஜாதி!
இருக்கின்ற யதார்த்த நிலை என்ன?
1. இந்திய அரசமைப்புச் சட்டத்திலே ‘‘தீண்டாமை'' தான் ஒழிக்கப்பட்டுள்ளது - சட்டபூர்வமாக (நடைமுறை சங்கதியோ வேறு - மகா வெட்கக்கேடு!)
இன்னமும் ‘‘ஜாதி'' ஒழிக்கப்படவில்லை; ‘ஜாதி' (Caste)  என்ற சொல் இந்திய அரச மைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் இடம் பெற்றுள்ளது என்பதை எவரே அறிவர்!
2. ‘ஜாதி' பார்த்துத்தானே இன்னமும் திருமணங்கள் (இந்து மத முறையில்) நடைபெறுகின்றன. Matrimonial என்ற ‘மணமக்கள் தேவை' விளம்பரங்களில் - எங்கோ ஒன்றில்தான் ‘Caste No Bar' - ‘ஜாதி' ஒரு பிரச்சினை இல்லை' என்ற சொற்றொடர் உண்டு.
3. தேர்தல்களில் வேட்பாளர்கள் தேர்வு முதல் வெற்றி வரை ஜாதி அம்சங்கள் படமெடுத்தாடவில்லையா?
பார்ப்பனர்களின் இரட்டை வேடம்
4. ஏதோ முற்போக்காளர்களைப்போல சில பார்ப்பனத் திருமேனிகளே, இரட்டைக் குரல் - இரட்டை வேடம் போடுவார்கள்; அந்த ‘பிரகஸ்பதிகளை'க் கேட்கிறோம்.
‘‘உங்கள் முதுகில் ஜாதிச் சின்னமான பூணூல் தொங்காமல் உள்ளதா?''
உங்கள் வீட்டில் - குடும்பத்தில் எத்தனை ஜாதி மறுப்புத் திருமணங்கள்? அவர்களைப் பார்த்துக் கெட்டுப்போன ‘‘சூத்திரர்களோ'', ஜாதி ஜாதியென்று மாய்ந்து விடுகிறார்களே!
‘பிராமணர் சங்கம்', ‘பிராமண் சம் மேஜம்', ‘பிராமணா தொழில் முனையம்' மாநாடுகளை நாட்டில் நடத்திடவில்லையா?
எனவே, இட ஒதுக்கீடு - சமூகநீதி நிலை நாட்டப்படுவதை எதிர்ப்பதற்கு மட்டும் தான் உங்களுக்கு ‘‘ஜாதி ஒழிப்பு - முற்போக்கு''ப் பார்வையா?
எனவே, தமிழ்நாடு அரசும் தனது நிலைப்பாட்டில், மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் ஜாதி வாரியான அளவீடு முக்கியம் என்பதை வற்புறுத்திடவேண்டும்.
ஜாதியை ஒழிக்க சட்டம் கொண்டு வரட்டுமே - பார்க்கலாம்!
மத்திய அரசு நாளைக்கு ஜாதியை ஒழிக்க ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினால் பிறகு இதை வற்புறுத்தமாட்டோம் என்று கூற நாங்கள் தயார், மற்றவர்கள் தயாரா?

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
12.1.2020

சனி, 11 ஜனவரி, 2020

தாழ்த்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீடு நீட்டிப்பு: ஆங்கிலோ இந்தியன் நியமனம் நீக்கம்

சென்னை, ஜன. 10- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் நீட்டித்தும், ஆங்கிலோ இந்தியன் நியமனத்தை நீக்கம் செய்தும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டித்து அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு தமிழக சட்டப்பேரவையில் ஒப்புதல் பெறுவதற்கான தனி தீர்மானத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீதான விவாதத் தில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசியதாவது:

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு சட்டப்பேரவையில் மேலும் 10 ஆண்டுகள் நீட்டித்து வழங்க தீர்மானம் நிறைவேற்றப்படு கிறது. இப்படி, ஒவ்வொரு முறை 10 ஆண்டுகள், 10 ஆண்டுகளாக நீட்டித்து கொண்டே வரப்படுகிறது.

இதற்கு ஒரே அடியாக 25 ஆண்டுகள் நீட்டித்திருக்கலாம். அதே நேரத்தில் ஆங்கிலோ இந்தியன் சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

சிறுபான்மையாக உள்ள ஆங்கிலோ இந் தியன் மக்களுக்கு 70 ஆண்டுகளாக சட்டப் பேரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் களது பிரதிநிதித்துவத்தை கவனத்தில் கொண்டு அவர்களுக்கான அங்கீகாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

- விடுதலை நாளேடு 10 1 20

வெள்ளி, 10 ஜனவரி, 2020

உயர்ஜாதி ஏழைகளுக்கு (EWS) 10% இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகளே முடிவு செய்யலாம்

தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு...

உயர்ஜாதி ஏழைகளுக்கு (EWS) 10% இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகளே முடிவு செய்யலாம்

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்

புதுடில்லி, ஜன.8 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்திருத்தத்துக்கு விளக்கம் கேட்கும் பொதுநல வழக் கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய இட ஒதுக்கீடு சலுகைகள் பெறாத உயர்ஜாதி வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்தது. இந்த சட்டத்திருத்தத்தால், தமிழ கத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 6 சதவிகித இட ஒதுக்கீட்டில் பாதிப்புகள் இருக்குமா என்ற விளக்கம் கேட்டு, உச்சநீதிமன்ற வழக் குரைஞர் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன் றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந் தார்.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் நேற்று (7.1.2019) பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதி வகுப்பினருக்கு கல்வி - வேலைவாய்ப்பில் இட ஒதுக் கீடு வழங்க அந்தந்த மாநில அரசு களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு தலையிட முடி யாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 சதவிகித இடஒதுக்கீடு என்பதை மத்திய அரசு தனது அதிகாரத்தின் கீழ்வரும் துறைகளில் மட்மே செயல்படுத்தியுள்ளது என்றும் பதில் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு 8.1. 20

செவ்வாய், 10 டிசம்பர், 2019

நாடாளுமன்ற, சட்டசபைகளில் தனித்தொகுதிகள் மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி, டிச.5 நாடாளுமன்ற, சட்டசபைகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவருக்கு இட ஒதுக் கீடு வழங்கி தனித்தொகுதிகள் உரு வாக்கி அவை நடைமுறையில் இருந்து வருகின்றன. இது வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதியுடன் முடிகிறது.

தனித்தொகுதிகளை மேலும் 10 ஆண்டுகள் அதாவது, 2030ஆம் ஆண்டு, ஜனவரி 25ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சவை கூட் டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கான மசோதா, நாடாளுமன் றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத் தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா, பொது மற்றும் தனியார் நிறுவ னங்கள் தனிப்பட்ட தரவுகளை கையாள்வது தொடர்பான கட்ட மைப்பை கொண்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், குடிமக்கள் திருத்த சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

காஷ்மீரில் பொருளாதாரத்தில் நலிவு அடைந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவ தற்கான மசோதாவை திரும்பப்பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

சமூக, பொதுத்துறை ஒன்றியம் உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு கூடுதல் நிதி வழங்குவதற்காக பாரத பத்திர பரிமாற்ற வர்த்தக நிதியம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல திருத்த மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது.

டில்லி ராஷ்ட்ரிய சமஸ்கிருத சமஸ்தான் மற்றும் லால் பகதூர் சாஸ்திர சமஸ்கிருத வித்யா பீடம், திருப்பதி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் ஆகியவற்றை மத்திய பல்கலைக்கழகங்களாக மாற்றுவ தற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

டில்லி பிரகதி மைதானத்தில் 3.7 ஏக்கர் நிலத்தை 5 நட்சத்திர விடுதி கட்டுவதற்காக ரூ.611 கோடிக்கு இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்துக் கும், இந்திய ரெயில்வே உணவு வழங் கல் மற்றும் சுற்றுலா கழகத்துக்கும் குத்தகைக்கு விட இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

 - விடுதலை நாளேடு 5 12 19

வியாழன், 21 நவம்பர், 2019

ஜாதியும், மதமும் சேர்ந்ததுதான் பி.ஜே.பி. ஆட்சியா?

அகர்வால் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேலைக்கு வாருங்கள்!''

ரயில்வே உணவு வழங்கும் பிரிவு கொடுத்த விளம்பரம்

ஜெய்ப்பூர், நவ. 13 ரயில்வேயின் துணை நிறுவனமான அய்.ஆர்.சி.டி.சி.யின் சார்பில் ரயில்களில் உணவு அளிக்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ள  நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிய அகர்வால் வைசிய ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும் என்று விளம்பரம் கொடுத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ரயில்வேதுறை உணவு வழங்கலுக்கு அய்.ஆர்.சி. டி.சி. என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங் களிடம் ரயிலில் உணவுவழங்கும் பணியை ஒப்படைத்து வருகிறது, ராஜஸ்தானைச்சேர்ந்த  பிருந்தா வன் உணவுப் பொருட்கள் வழங்கும் நிறுவனமும் மத்திய மேற்கு ரயில்வே சார்பில் உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவ னம் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு இடையில் ஓடும் சில ரயில்களில் உணவு வழங்கும் பணியைச் செய் கிறது. இந்த நிறுவனத்திற்கு சமீபத் தில் மேலும் பல புதிய ரயில்களில் உணவு வழங்க ஒப்பந்தமிடப்பட்டது.

இதனை அடுத்து இந்த நிறுவ னத்தின் சார்பில் ரயில் உணவக மேலாளருக்கான ஆட்கள் தேவை என விளம்பரம்  செய்யப்பட்டு இருந்தது. இந்த விளம்பரத்தில் “ரயில்வேயில் கேட்டரிங், கிச்சன் மற்றும் ஸ்டோர் மேலாளர் காலி பணியிடங்களுக்கு 100 ஆண்கள் தேவை, விண்ணப்பதாரர்கள் அகர் வால் வைஷ்ணவ சமூகம், நல்ல குடும்பப் பின்னணியை  உடையவர் களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி 10, 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்''  என குறிப்பிடப்பட்டி ருந்தது.

இது தொடர்பாக புனே அய்.ஆர்.சி.டி.சி. ஊழியர் ஒருவர் கூறும் போது, ”இவ்விவகாரம் ஊடகத்தில் வெளிவந்த காரணத் தால் தான் விவாதப் பொருளானது. ஆனால் நீண்ட காலமாகவே ரயில் வேயில் உணவு வழங்குபவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் தான் வேலை பார்க்கின்றனர்.

ராமன்தான் பணித்தாராம்!

அகர்வால் பிரிவினர் அனை வரும் ராமன் அயோத்தி திரும்பிய பிறகு நடந்த கொண்டாட்டத்தின் போது தன்னலமில்லாமல் உணவு சமைத்து தங்களது கையாலேயே அனைவருக்கும் வழங்கினார்கள். மேலும் இவர்களுக்கு ராமன் தனது சேனைகளுக்கு உணவு வழங்கும் பணியைக் கொடுத்தார். இதனா லேயே மிகப்பெரிய உணவுப் பரி மாறல் வலைப்பின்னலைக் கொண்ட  இந்திய ரயில்வேதுறையில் பெரும்பாலும் அகர்வால் ஜாதி னரையே தேர்ந்தெடுக்கின்றனர்.  சமீப காலமாக ரயில்வே சார்பில் வெளியிடப்படும் ஒப்பந்ததாரர் பணியிடங்களுக்குத் தரும் விளம் பரத்தைப் பார்த்து பலரும் வரு கின்றனர். இதனால் அனைவரிட மும் நேர்காணல் நடத்தவேண்டியுள் ளது. ஆகவே ஊடகத்திலேயே குறிப்பிட்ட ஜாதியினர் தான் ரயில் வேயில் உணவு வழங்கும் பணிக்கு வரவேண்டுமென்று விளம்பரம் கொடுத்துவிட்டால் நேரம் மிச்ச மாகும்'' என்று கூறினார்.

”இந்தியாவைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர். இதில் பெரும் பாலானோர் இந்துக்கள் ஆவார் கள். இவர்களின் நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் அகர் வால் ஜாதியைச்சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்கின்றனர்” என்றும் கூறினார்.

மதிய உணவிலும்

குறிப்பிட்ட ஜாதியினர் தானாம்!

இஸ்கான் என்ற அரே ராமா அரே கிருஷ்ணா அமைப்பின் சார்பில் மோடி பிப்ரவரி மாதம் மதுராவில் உள்ள சந்திரோதயா பிருந்தாவன் கோவிலுக்குச் சென்று அக்ஷயா பாத்திரம் என்ற ”3 கோடிப் பள்ளிமாணவர்களுக்கு மதிய உணவு” என்ற திட்டத்தை துவங்கி வைத்தார்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இஸ்கான் சார்பில் உணவு வழங்கப்படுகிறது, இங்கு பணி புரிபவர்கள் அனைவருமே சுத்த வைணவர்களாக இருக்க வேண்டும். அதாவது கிருஷ்ணனை மட்டும் கும்பிடுபவரக்ளாக இருக்க வேண்டும் கட்டாயம் குடுமி வைத் திருக்க வெண்டும். இணையதளத்தில் அங்கு வேலைபார்ப்பவர்கள் அனை  வரும் வேதப் பாரம்பரியத்தின் படி நடந்துகொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமர்சனம் எழுந்த போது ”இங்கு ஜாதி பேதம் இல்லை. ஆனால் இந்தியக் கலாச்சாரத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைப்படி வாழ நாங்கள் வலியுறுத்துகிறோம். இங்கே அனைத்து ஜாதியினரும் வேலை பார்க்கின்றனர்'' என்று விளக்கம் கொடுத்திருந்ததுதான் வேடிக்கையும், விஷமமுமாகும்.

- விடுதலை நாளேடு 13 11 19

வெள்ளி, 11 அக்டோபர், 2019

ராமர் கோவில் திருவிழாக் காலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடதாம்


உத்தரப்பிரதேசத்தில் உள்ள  ராமர் கோவிலில் 10 நாள் பூஜைக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் ஹமிர்பூர் மாவட்டத் தில் உள்ள கதா என்ற ஊரில் பிரபல ராமர் கோவில் உள்ளது, அந்தக் கோவிலில்  10 நாள் ராமாயணப் பாடம் படிக்கும் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருவிழா நடத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. அதில் :-

"ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் 10 நாட்கள் நடைபெறும் ராமாயணப்பாடம் படிக்கும் திருவிழா நடக்கும் காலங்களில் கோவில் பூஜைகளில் கலந்துகொள்வதை தடைசெய்கிறோம். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தவறுதலாக கோவிலுக்குள் நுழைந்து விடுவார்கள். ஆகையால் அவர்கள் திரு விழா நடக்கும் 10 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவர்கள் அப்படி வர நேர்ந்தால் கோவிலின் புனிதம் கெட்டு விடும், மேலும், கோவில் திருவிழாவில் உயர்ஜாதியினர் அதிகம் கலந்துகொள்ள வருவார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை தொட்டுவிட்டாலோ, பார்க்க நேரிட்டாலோ தீட்டுப் பட்டுவிடும். ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியது கோவில் நிர்வாகம்.

தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் வருவதை கண்காணிக்க தனியார் பாது காப்பு நபர்களை நியமித்துள்ளனர்.  இது தொடர்பாக சில சமூக ஆர்வலர்கள் ராம் ஜானகி கோவிலுக்குச் சென்று விசாரணை செய்தபோது "தாழ்த்தப்பட்டவர்கள் இங்கே வந்தால் கோவில் புனிதம் கெட்டு விடும். ஆகையால் தான் நாங்கள் இந்த சுற்றறிக்கையை அனுப்பினோம்" என்று கூறினர்.

இந்த விவகாரம் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சியில் வெளிவந்த பிறகு ஊரில் சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற நோட்டீசை அகற்றியுள்ளனர். ஆனால் தனியார் நிறு வன பாதுகாவலர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் பகுதிகளில் அதிகம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, இதனை அடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராம்ஜானகி கோவிலுக்குச் சென்று விசா ரணை நடத்த வருவாய்த்துறை அதிகாரி களை அனுப்பினார்.   அவர்களின் விசார ணையில் தாழ்த்தப்பட்டமக்களில் அதிகம் பேர் இறைச்சி சாப்பிடுகின்றனர், மது அருந்துகின்றனர். ஆகவே தான் இது போன்ற ஒரு சுற்றறிக்கையை நாங்கள் அனுப்பியுள்ளோம் என்று பதில் கூறியுள் ளனர்.  மேலும்  இந்த கோவில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது, இந்துமத சாம்பிரதா யங்களின் படி சூத்திரர்கள் கோவிலில் நுழையக்கூடாது என்பதை வலியுறுத்தி இருக்கலாம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக தாழ்த்தப்பட்ட மக்களி டம் நடத்த விசாரணையில் அவர்கள் கூறும் போது, “கோவிலில் நுழைவதற்கு நீண்டகாலமாகவே எங்களுக்கு கடுமை யான எதிர்ப்புகள் வருகிறது, எங்களை கோவில் உள்ள தெருக்களில் கூட நடக்க அனுமதி மறுக்கின்றனர். மேலும் எங்களை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை" என்றனர்.

மற்றொரு தாழ்த்தப்பட்ட நபரான ராஜூ சாகு என்பவர் கூறும் போது "கோவில் பகுதியில் நாங்கள் சென்றால் எங்களை அடித்து விரட்டுகிறார்கள். எந்த ஒரு விழா மற்றும் பூஜைகளுக்கும் எங்களை அனுமதிப்பதில்லை. ஆனால் எங்களிடம் வந்து கோவில் திருவிழாவிற்கு பணம் மட்டும் வசூலித்துச்சென்றுவிடுகின்றனர்" என்று கூறினார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர் சுரேஷ் குமார் மிஸ்ரா கூறும்போது, “ நாங்கள் விசாரணைக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளோம். அதிகாரிகள் கொண்டு வரும் விசாரணை அறிக்கையினை அடுத்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இங்கு யாரும் எந்த காரணத்தைச் சொல்லியும் கோவி லிலோ, பொது இடங்களிலோ தாழ்த்தப் பட்டமக்கள் வருவதை தடுக்க முடியாது என்று கூறினார்.

- விடுதலை ஞாயிறு மலர், 7 .9 .19