பக்கங்கள்

சனி, 6 ஜூலை, 2024

மராட்டிய மாநிலம் போல் தமிழ்நாடு அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! ஜாதி ஒழியும் வரை இடஒதுக்கீடு வேண்டும்!

 

தலையங்கம் : இடஒதுக்கீடு

ஜனவரி 16-31 2020

மராட்டிய மாநிலம் போல் தமிழ்நாடு அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்!

ஜாதி ஒழியும் வரை இடஒதுக்கீடு வேண்டும்!

 

மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில், கடந்த புதன்கிழமையன்று (8.1.2020) சபாநாயகரே, தாமே முன்வந்து ஒரு முக்கிய தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.

அதை ஒருமனதாக அனைவரும் வழிமொழிந்து நிறைவேற்றியுள்ளனர்.

வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதி வாரியாக மக்கள் தொகையும் இணைத்து எடுக்கப்படல் வேண்டும்; அப்போதுதான் இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள்  (Other Backward Classes) தொகை எவ்வளவு என்பது துல்லியமாகக் கண்டறியும் வாய்ப்பு ஏற்படும் என்றும் தனது முன்மொழிவின் விளக்கத்தில் கூறியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு தெரிந்துகொள்ளட்டும்!

புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.

இதற்குப் பா.ஜ.க.வின் முன்னாள் முதல்வரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிசும் தனது கட்சியின் ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.

இதைத் தமிழ்நாடு அரசும், மற்ற அனைத்து மாநிலங்களின் அரசும் வற்புறுத்தவேண்டும்.

இக்கோரிக்கை நம்மால் பல ஆண்டுகளுக்கு முன்பே வற்புறுத்தப்பட்ட ஒன்றாகும்.

‘‘ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பா? மக்களை இப்படிப் பிரித்துக் கணக்கெடுப்பது நியாயமா? அதிலும் ஜாதி ஒழிப்புக்கான இயக்கம் போன்ற திராவிடர் கழகம் இதனை வற்புறுத்தலாமா? அது முரண்பாடு அல்லவா?’’ என்று மேலெழுந்தவாரியாக இப்பிரச்சினையை நோக்கும் சிலர் கேட்கக்கூடும்.

ஏன் இட ஒதுக்கீடு?

நமது லட்சியம் ஜாதியற்ற சமூகம் காண்பதுதான்; ஆனால், அதே ஜாதி தர்மம் (குலதர்மம் – மனுதர்மம்) காரணமாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பல கோடி மக்கள் மற்ற முன்னேறிய ஜாதி – வகுப்பினருக்குச் சமமாக ஆகும் நிலை வரும்வரை, அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டியது அவசியம் என்பதால்தான், இந்திய அரசமைப்புச் சட்டமே சமூகநீதிக் கண்ணோட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களான (மலைவாழ்) பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தருவது அவசியம் என்று வரையறுத்து, மூன்று  முக்கிய அரசமைப்புச் சட்டத் திருத்தங்களையும் உள்ளடக்கி, நிலைநாட்டியுள்ளது.

உச்சநீதிமன்றமும் தனது 9 நீதிபதிகள் அமர்வுமூலம் மண்டல் வழக்குமூலம் இதை (இந்திரா சகானி வழக்கு) ஏற்றுள்ளது.

ஜாதிக் கணக்கெடுப்புமூலம்தான் ஜாதி புகுத்தப்படுகிறதா?

சட்டத்தில் ஜாதி!

இருக்கின்ற யதார்த்த நிலை என்ன?

1. இந்திய அரசமைப்புச் சட்டத்திலே ‘‘தீண்டாமை’’தான் ஒழிக்கப்பட்டுள்ளது – சட்டபூர்வமாக (நடைமுறை சங்கதியோ வேறு – மகா வெட்கக்கேடு!)

இன்னமும் ‘‘ஜாதி’’ ஒழிக்கப்படவில்லை; ‘ஜாதி’  (Caste)   என்னும் சொல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் இடம்பெற்றுள்ளது என்பதை எவரே அறிவர்!

2. ‘ஜாதி’ பார்த்துத்தானே இன்னமும் திருமணங்கள் (இந்து மத முறையில்) நடைபெறுகின்றன.  Matrimonial   என்கிற ‘மணமக்கள் தேவை’ விளம்பரங்களில் – எங்கோ ஒன்றில்தான்  ‘Caste No Bar’ – ‘ஜாதி’ ஒரு பிரச்சினை இல்லை’ என்ற சொற்றொடர் உண்டு.

3. தேர்தல்களில் வேட்பாளர்கள் தேர்வு முதல் வெற்றி வரை ஜாதி அம்சங்கள் படமெடுத்தாடவில்லையா?

பார்ப்பனர்களின் இரட்டை வேடம்

4. ஏதோ முற்போக்காளர்களைப்போல சில பார்ப்பனத் திருமேனிகளே, இரட்டைக் குரல் – இரட்டை வேடம் போடுவார்கள்; அந்த ‘பிரகஸ்பதிகளை’க் கேட்கிறோம்.

‘‘உங்கள் முதுகில் ஜாதிச் சின்னமான பூணூல் தொங்காமல் உள்ளதா?’’

உங்கள் வீட்டில் – குடும்பத்தில் எத்தனை ஜாதி மறுப்புத் திருமணங்கள்? அவர்களைப் பார்த்துக் கெட்டுப்போன ‘‘சூத்திரர்களோ’’, ஜாதி ஜாதியென்று மாய்ந்து விடுகிறார்களே!

‘பிராமணர் சங்கம்’ , ‘பிராமண் சம்மேஜம்’, ‘பிராமணா தொழில் முனையம்’ மாநாடுகளை நாட்டில் நடத்திடவில்லையா?

எனவே, இட ஒதுக்கீடு – சமூகநீதி நிலைநாட்டப்படுவதை எதிர்ப்பதற்கு மட்டும்தான் உங்களுக்கு ‘‘ஜாதி ஒழிப்பு – முற்போக்கு’’ப் பார்வையா?

எனவே, தமிழ்நாடு அரசும் தனது நிலைப்பாட்டில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரியான அளவீடு முக்கியம் என்பதை வற்புறுத்திடவேண்டும்.

ஜாதியை ஒழிக்க சட்டம் கொண்டு வரட்டுமே – பார்க்கலாம்!

மத்திய அரசு நாளைக்கு ஜாதியை ஒழிக்க ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினால் பிறகு இதை வற்புறுத்தமாட்டோம் என்று கூற நாங்கள் தயார், மற்றவர்கள் தயாரா?

கி.வீரமணி

ஆசிரியர்

 

சனி, 29 ஜூன், 2024

டில்லியில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாநாடு

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (335)

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் மார்ச் 16-31, 2024

டில்லியில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாநாடு

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள், சிறுபான்மையர் ஆகியோரின் தேசிய ஒன்றியம் நடத்திய மாநாடு 2004, டிசம்பர் 9இல் காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மிகச் சிறப்பாக டில்லி மல்கோத்ரா மைதானத்தில் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்

மாநாட்டிற்கு மேனாள் மத்திய கல்வி அமைச்சர் டி.பி. யாதவ் தலைமை வகித்தார். கருநாடகத்தில் இருந்து திரு.லட்சுமி சாகர், திருமதி இந்திரா ஜெயராமன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திருமதி டாக்டர் சாந்த்வானா அலு மற்றும் கப்பாஸ், தமிழ்நாட்டில் இருந்து சுப. சீதாராமன், கழகப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு, ஆந்திராவில் இருந்து ஜெய்பால், அரியானாவில் இருந்து சாந்த், உ.பி. மாநிலத்தில் இருந்து முகமது அப்துல்லா, ஹீராலால், மோதிலால் சாஸ்திரி, கேரளாவில் இருந்து ராமதாஸ் கதிரூர் முதலியவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

வாய்ப்பு மறுக்கப்பட்டோர், சமூகநீதிப் போராட்டத்தை மற்றொரு விடுதலைப் போராட்டத்தைப் போல் நடத்தவேண்டும் என்றனர்.
கூடியிருந்தவர்களில் கணிசமான ஒரு பகுதி மகளிர் ஆவர்.

இந்த மாநாடு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லுவோம் என்ற முழக்கத்துடன் நடைபெற்ற மாநாடு.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. அரசுப் பணிகளில் தற்போது அளிக்கப்பட்டு வரும் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அளவு தற்போதைய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி சிறுபான்மை மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்தப்பட வேண்டும்.

2. மக்கள் தொகைக்கு ஏற்ற கல்வி வாய்ப்பு பெற, உயர் கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்வி
நிலையங்களின் மாணவர் சேர்க்கையிலும் இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மாநாட்டில் தலைவர்களுடன் ஆசிரியர்

3. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீடு முறை அரசுத்துறை, தனியார்துறை, மின்னணுவியல் துறை, பத்திரிகைச் செய்தித்துறை அமைப்புகள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

4. தாழ்த்தப்பட்ட பழங்குடி, மக்கள் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள அதே அரசமைப்புச் சட்ட அந்தஸ்து பிற்படுத்தப்பட்ட மக்கள் கமிஷனுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

5. ராணுவத் துறை, மத்திய மாநில அரசுகளின் போலீஸ் மற்றும் பாதுகாப்புத் துறை நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளும் இடஒதுக்கீட்டு முறைப்படி செய்யப்பட வேண்டும்.

6. நகராட்சி, பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முறையில் உள்ளாட்சி மன்றங்களில் உள்ளதைப் போல, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் தொகைக்கு ஏற்றவாறு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

7. அமைச்சர்கள், ஆளுநர்கள், அயல்நாட்டுத் தூதர்கள், ஹை-கமிஷனர்கள், கமிஷன்களின் உறுப்பினர்கள், அரசுக் கழகங்களின் உறுப்பினர்கள் ஆகிய நியமனங்களிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
8. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி சிறுபான்மை மக்கள் தங்கள் மக்கள்தொகைக்கேற்ப முன்னேற்றத்தை எட்டும் வரை, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்னும் ‘கிரீமிலேயர்’ கொள்கை நடைமுறைப்படுத்தப்படக் கூடாது.

9. பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் கமிஷனின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கட்டாயமாக இந்தப் பிரிவு மக்களிலிருந்தே நியமிக்கப்பட வேண்டும்.

10. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீட்டு முறையின்படி பொது மற்றும் தனியார் நிறுவன நியமனங்கள் மற்றும் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரையிலான உறுப்பினர்களில் 50 விழுக்காடு பெண்களுக்குச் சட்டப்படி அளிக்கப்பட வேண்டும்.

11. உயர்நீதி மன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்ய தேசிய நீதிக்கமிஷன் ஒன்று அமைக்கப்படவேண்டும். இந்தக் கமிஷன் உறுப்பினர் நியமனத்திலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கான பிரதிநிதித்துவம் இருப்பது உறுதிப்படுத்தப்படவேண்டும்.

12. சட்ட அதிகாரிகள், சட்ட ஆலோசகர்கள், பொதுத்துறை, தனியார் துறைகளில் அரசு வழக்குரைஞர்கள் (ஸ்டாண்டிங் கவுன்சில்) நியமனங்களிலும் இடஒதுக்கீடுச் சட்டம் உடனடியாகப் பின்பற்றப்பட வேண்டும்.

13. இடஒதுக்கீடு முறையை சரியாக நடைமுறைப்படுத்துவோருக்குப் பதவி உயர்வும், தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் தகுந்த ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.

14. சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களின் நல்வாழ்விற்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்கள் பற்றி பத்திரிகைச் செய்தி, தொலைக்காட்சித் துறைகள் மூலமாகப் பரவலாக விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

15. 2005ஆம் ஆண்டில் ஜாதிகளின் அடிப்படையில் தனி மக்கள் தொகைக் கணக்கீடு ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும்.

16. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

17. பல்கலைக் கழக மான்யக் குழுத் தலைவர் உதவித் தலைவர் பணியிடங்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். தலைவர் மற்றும் உதவித் தலைவர் பணியிடங்கள் இந்தப் பிரிவு மக்களைக் கொண்டே கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும்.

18. மேற்கண்ட பிரிவுகளிலான இடஒதுக்கீட்டு முறையைப் பாதுகாக்க, ஓர் ஒருங்கிணைந்த சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும்.

ஆகிய 18 கோரிக்கைகளை மாநாட்டின் தீர்மானங்களாக நாம் முன்மொழிந்தோம். அதை கூடியிருந்த அனைவரும் கைகளை உயர்த்தி ஒரு முறை, பலத்த கைதட்டல் மூலம் (மற்றொரு முறை என்று) ஒரு மனதாக நிறைவேற்றினர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்ய ஒரு குழுவும் ஆயத்தமாகி பல்வேறு மாநிலங்களிலும் மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சமூக நீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித், கருநாடக மகளிர் சார்பில் திருமதி ஜெயராமன், மாநாட்டுத் தலைவரும் நேஷனல் யூனியன் தலைவருமான மேனாள் எம்.பி. டி.பி. யாதவ் ஆகியோர் வழிமொழிந்தும் விளக்கியும் பேசினர்.

“நிறைவாக எமது உரையில், “உரைகள் நிகழ்த்தும் காலம் இனிமேல் முக்கியமல்ல, செயல்தான் முக்கியம். இடஒதுக்கீடு இரக்கத்தால் பெறுவது அல்ல; அது சமத்துவத்துக்கான உரிமை ஆகும். அதைப் பெறும் வகையில் ஆட்சியாளர்களைச் செயல்பட வைக்கவேண்டும்” என்று வலியுறுத்தினோம்.
அதற்குப் பின்பு சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின் சார்பில் விண்ணப்பம் ஒன்றை மத்திய அரசுக்கு அளிக்க நாடாளுமன்றம் நோக்கிச் சென்றபொழுது, அது தடை செய்யப்பட்டது. தடையை மீறிச் செல்ல முயன்றதால், சந்திரஜித் ஆகியோர் தலைமையில் சுமார் 10,000 பேர் கைது செய்யப்பட்டோம்.
கழகத்தின் சார்பில் 30 தோழர்களும், தோழியர்களும் கைதாயினர். பின்பு மாலை 5 மணிக்கு அனைவருமே விடுதலை செய்யப்பட்டோம்.

( கட்டுரையின் ஒரு பகுதி)

வெள்ளி, 31 மே, 2024

ஆர்.எஸ்.எஸ். சமூக நீதியை ஆதரிக்கும் அமைப்பா?




Published May 27, 2024, விடுதலை நாளேடு

14.5.2024 ‘தினமணி’யில் வினய் சஹஸ்ர புத்தே என்பவரால் எழுதப்பட்ட நடுப்பக்கக் கட்டுரையின் தலைப்பு “சமுதாய நல்லிணக்கமும், ஆர்.எஸ்.எஸும்” என்பதாகும்.

(1) ஆர்.எஸ்.எஸில் ஜாதிக்கு இடமில்லை என்பது ஒரு அம்சம். இதற்கு பதிலடி கொடுத்து 24.5.2024 நாளிட்ட விடுதலையில், ஆதாரத்துடன் பதில் அளிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸின் சமூக நீதியைத் தூக்கிப் பிடிக்கும் இரண்டாவது அம்சத்திற்கான பதிலடியே இக்கட்டுரை.
பி.ஜே.பி.யின் தேசிய தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட சி.பி.தாகூர் பாட்னாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் என்ன பேசினார்?

“இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்ற நிலையில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி வாக்குகளை வாங்குவதற்காக இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது.” என்று பேசவில்லையா? ((IMB Live, 28.4.2014))

ராம் விலாஸ் பஸ்வான் இதனைக் கடுமையாக எதிர்க்கவில்லையா?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஆர்.எஸ்.எஸ். ஏடான ‘பஞ்சான்யா’விற்கு அளித்த பேட்டி என்ன சொல்லுகிறது?

“இந்தியா போன்ற பெரிய மக்களாட்சி நாட்டில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் சரிசமமாக வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படும்போது தான் சமூகத்தில் அமைதி நிலவும். ஆனால் இங்கே பலரது வாய்ப்புகளைப் பறித்து சிலருக்கு மட்டுமே கொடுக்கும் சூழ்நிலை இடஒதுக்கீடு என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இந்த நாடு கலாச்சாரத்தில் முதுமை பெற்ற நாடு ஆகும். கலாச்சாரக் காவலர்கள் இந்த நாட்டை இன்றளவும் புனிதம் கெடாமல் வைத்துள்ளனர். இடஒதுக்கீடு என்ற பெயரில் கலாச்சார காவலர்களை இழிவுபடுத்தும் விதமாக அவர்களின் தலைமுறைகளுக்குத் துரோகம் இழைக்கும் வகையில் செயல்படுவது பெரும்பான்மையான மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திவிடும்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆர்.எஸ்.எஸ். இதழுக்குப் பேட்டி அளித்ததற்கு என்ன பொருள் ‘தினமணி’யாரே?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் அதோடு நிற்கவில்லை. ஒருபடி மேலே சென்று பேட்டி அளித்தார்.

“இந்த நாட்டில் வாழும் அனைவரின் நன்மைக்காக ஆட்சியாளர்களின் சிந்தனை இருக்க வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரின் பார்வைகளும் விரிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்த நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் பாடுபடுகிறார்கள். ஆகவே அரசு வளர்ச்சிக்காக தியாகம் செய்யத் துணிச்சலுடன் இருக்கும் மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபடும்போது தான் இதுபோன்ற இடஒதுக்கீட்டு தேவைக்கான போராட்டங்கள் வெடிக்கும். ஆகவே இதுவரை இடஒதுக்கீட்டு முறையை மாற்றி அமைப்பது அத்தியா வசியமான ஒன்றாகும்” என்று பேட்டி கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். தலைவர்தானே!

உண்மை இவ்வாறு இருக்க, ஆர்.எஸ்.எஸ். இட ஒதுக்கீட்டுக்கு, சமூகநீதிக்கு எதிரானது அல்ல ‘தினமணி’, நடுங்காமல் எழுதுகிறது. முழுப் பூசணிக்காயை சுண்டு விரலால் மறைக்கப் பார்க்கும் அவாளின் சூட்சுமம் புரிகிறதா இல்லையா?
ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆர்.எஸ்.எஸ் இதழான ‘பஞ்சான்யா’ இதழுக்கு அளித்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான இந்தப் பேட்டியை எதிர்த்தும், கண்டித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உடனடியாக ‘விடுதலை’யில் (22.9.2005) அறிக்கை விட்டதையும் ‘தினமணி’யின் நடுப்பக்க எழுத்தாளருக்குத் தெரிவித்துக் கொள் கிறோம்.

தினமணி’களுக்கு இது ஒன்றும் புதிதல்ல! அண்ணல் அம்பேத்கரே இடஒதுக்கீடுக்கு எதிரானவர் என்று தலையங்கம் தீட்டியதுண்டே! தலையங்கத்தின் தலைப்பு “மவுனப் போராட்டம்”.

அம்பேத்கர் கூறியதாக ‘தினமணி’ தன் தலையங்கத்தில் குறிப்பிட்டது என்ன?

“இந்தியா விடுதலை அடைந்தபோது பட்டியல் இன மக்களுக்கு நூற்றாண்டுகளாய் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரமாக, தற்காலிக ஏற்பாடாக இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த பாபா சாகேப் அம்பேத்கர் காலாகாலம் எங்கள் சமூகத்தை ஊன்றுகோலில் நிற்க வைத்துவிடும் இடஒதுக்கீடு தேவையில்லை என்று அதை எதிர்த்தார். ஆனால் பண்டித நேருவும், சர்தார் படேலும் வற்புறுத்தியதற்கிணங்கதான் பத்து ஆண்டு கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பட்டிலினத்தவருக்கான இடஒதுக்கீட்டை அம்பேத்கர் ஏற்றுக் கொண்டார்” என்று தினமணியின் தலையங்கம் அப்பட்டமாக உண்மைக்கு மாறான தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

‘தினமணி’யின் இந்தத் தலையங்கத்துக்குப் பதிலடியாக உடனே ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியதே! தலையங்கத்தின் தலைப்பு: ‘தினமணி’யின் அண்டப்புளுகு – ஆகாசப் புளுகு’ (விடுதலை, 4.10.2016). தலையங்கத்தின் முக்கிய பகுதி இதோ:

“நேரு தலைமையில் அரசியல் சட்ட வடிவமைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது (27.2.1947) இடஒதுக்கீடு குறித்து அம்பேத்கர் கூறியதாவது, “இந்திய சமூகத்திலும், பொருளா தாரத்திலும் இன்றுவரை சமூகநீதி கிடைக்கவில்லை, இங்கு மக்களிடையே ஜாதியின் காரணமாக வேறுபாடுகள் மிகவும் அதிகமாக உள்ளன. இந்த வேறுபாடுகளைக் களையாவிட்டால், மக்களாட்சியில் அதிகார வர்க்கத்தினரின் மூலம் பெரும் ஆபத்து ஏற்பட்டு விடும், இங்கு பிறர்மீது சகோதரத்துவத்துடன் பழகும் மனப்பான்மை மிகவும் அரிதாக உள்ளது. சமூக நீதியின் மூலம் சமத்துவமான இந்திய சமூகத்தை உருவாக்க முடியும். இடஒதுக்கீட்டின் மூலமே சமூக நீதியை எட்ட முடியும். இல்லாவிட்டால் இடஒதுக்கீடு இல்லையென்றால் சமூக நீதியை எட்டுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்துவிடும். இடஒதுக்கீடு மட்டுமே இதற்கான ஒரே வழி. வேறு மாற்று வழிகள் இந்திய சமூகத்தில் இன்றைய சூழலில் பயனற்றவையாக அமைந்துவிடும் (பயனற்றவை என்பது குறித்து கூறும் போது தலித்துகளுக்குத் தனிக்குளம் போன்ற ஒரு தீர்வை காந்தியார் கூறியதை மேற்கோள் காட்டினார்).
தினமணிக்கு அப்போதே மறுத்து எழுதப்பட்ட விடுதலை தலையங்கத்தின் பகுதி இது!

ஆர்.எஸ்.எஸ். இடஒதுக்கீடுக்கு எதிரானதல்ல என்று கூறுகிறதே – ஆர்.எஸ்.எஸைத் தாயாகக் கொண்ட ஜனசங்கத்தின் கொள்கை அறிக்கை என்ன கூறுகிறது?
“அரசியல் சட்டத்தின் எல்லாக் குடிமக்களுக்கும் சட்ட உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது. இருந்தாலும் சில இடங்களில் ஜாதி, மாநில மொழி அடிப்படையில் விசேஷ சலுகைகள் கேட்கிறார்கள். பிற்படுத்தப் பட்டோர் என்ற போர்வையில் கோரப்படும் இந்த சுயநலக் கொள்கைகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் – ஜனசங்கம் அதற்கொரு முடிவு கட்டும்” இதுதான் ஆர்எஸ்.எஸின் அரசியல் வடிவமான ஜனசங்கத்தின் கொள்கை அறிக்கை.

மண்டல் குழுப் பரிந்துரையில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வேலைவாய்ப்பில் சமூக நீதிக் காவலர் மாண்புமிகு பிரதமர் வி.பி.சிங் அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்த நிலையில் – பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். – எப்படி எல்லாம் நடந்து கொண்டன?

வி.பி.சிங். 27 சதவிகித இடஒதுக்கீட்டை அறிவித்த வுடன் அயோத்தியில் இராமன் கோயில் கட்ட ரதயாத்திரை புறப்பட்டார் – அன்றைய பா.ஜ.க தலைவர் அத்வானி. அதற்கு முன்னோடும் பிள்ளை யாக இருந்தவர்தான் மோடி என்பது நினை விருக்கட்டும். அதற்குப் பிறகு அத்வானியை அஸ்தமனம் செய்தவர்தான் மோடி!
பல இடங்களில் கலவரம் வெடித்தது. ஆர்.எஸ்.எஸ்.தானே முன்னின்று நடத்தியது. ஹிந்து மதவெறியை ஊதி விட்டது. பீகார் மாநிலத்துக்குள் இந்த யாத்திரை நுழைய அன்றைய முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் அனுமதிக்க வில்லை. லல்லு பிரசாத். வி.பி.சிங் அணியில் இருந்தார். உடனே வி.பி.சிங் ஆட்சிக்கு வெளியிலிருந்து வழங்கிய ஆதரவைத் திரும்பப் பெற்று, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க வழி வகுத்தது. இவர்கள்தான் மண்டல் பரிந்துரையை ஆதரித்ததாக வெட்கப்படாமல் பொய் பேசுகிறார்கள். வி.பி.சிங் மண்டல் பரிந்துரையை அமல்படுத்தியதால்தான் இராமன் கோயில் கட்டும் பிரச்சினையை உடனே கையில் எடுத்ததாக அத்வானியே ஒப்புக் கொண்டிருக் கிறார். அத்வானி அப்போது தந்த பேட்டி இது.

27 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான வி.பி.சிங் ஆட்சியை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் கலவரம் செய்தனர். இராஜீவ் கோஸ்வாமி என்ற உயர்ஜாதி மாணவர் உடலுக்கு தீ வைத்துக் கொண்டார் (இது திட்டமிட்டு நடந்த எரிப்பு என்ற குற்றச் சாட்டும் எழுந்தது). 55 சதவிகித தீப்புண் காயத்துடன் புதுடில்லி சப்தர்ஜங் மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அந்த நிலையில் அத்வானி, “இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டுக்கு ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி அத்வானியின் இடஒதுக்கீடு எதிர்ப்பை அப்படியே வெளிச்சப்படுத்துகிறது.   இதோ,

அந்தப் பேட்டி:

“புதுடில்லியில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் தீக்குளித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் மாணவர்களின் பெற்றோர்கள் என்னை. வீடு தேடி வந்து சந்திக்கிறார்கள். இன்னும் ஏன் இந்த ஆட்சிக்கு ஆதரவு தருகிறீர்கள்? ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று வற்புறுத்தி வருகிறார்கள். மண்டல் பிரச்சினையைக் காரணம் காட்டி. ஆதரவைத் திரும்பப் பெற்றால், அது அரசுக்கு பெரும் பயனைத் தேடிக் கொடுத்து விடும் என்றே நான் உணர்ந்தேன்.” என்னைத் தேடி வந்த பெற்றோர்களிடம் நான் கூறினேன்:

“நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. இந்த அரசு இட ஒதுக்கீடு பிரச்சினையில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது என்பது உண்மை தான். உரிய நேரத்தில் – நாங்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கையை எடுப்போம்.” என்றாரே எல்.கே.அத்வானி.

(New Delhi, where the self immolation had taken place, parents used to come to my place daily. “Why are you supporting the government? Withdraw your support.” I felt that withdrawing our support on the issue of Mandal would be of an enormous benefit to the government. I said ‘I agree with you that the government is behaving very badly but we will take action at the appropriate time. – Advani – Hindustan Times, 21 Sep. 1990)

சொன்னபடியே வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த் தார்களா இல்லையா?

தன் ஆட்சி மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை துணிவோடு எதிர்கொண்டார் வி.பி.சிங் அவரே நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் பேசினார்.

27 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரிப்போர் யார்? எதிர்ப்போர் யார்? இதை இந்த வாக்கெடுப்பு வழியாக மக்கள் அறிந்து கொள்ளட்டும். என்னுடைய ஆட்சி வீழ்த்தப்பட்டாலும், நான் அமர்ந்திருந்த பிரதமர் இருக்கையில் யார் வந்து அமர்ந்தாலும் 27 சதவிகித “இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டு, இந்த நாற்காலியில் ஒரு நிமிடம் கூட உட்கார முடியாது” என்று வி.பி.சிங் நாடாளுமன்றத்தில் கம்பீரமாக முழக்கமிட்டார்.

வி.பி.சிங் அறிவிப்பை ஆவேசமாக எதிர்த்தது ஆர்.எஸ்.எஸ். இந்த தேசத்தைப் பிளவுபடுத்துகிறார் என்று கூறிய ஆர்.எஸ்.எஸ். அதன் அதிகாரபூர்வ ஏடான ”ஆர்கனைசர்’ இதழில் முதல் பக்கத்தில் ‘ராஜாவின் (வி.பி.சிங்கின்) ஜாதி யுத்தம்’ என்ற தலைப்பிட்டு கீழ்க்கண்டவாறு எழுதியது;

150 ஆண்டுகால அந்நிய ஆட்சியான பிரிட்டீஷ் ஆட்சி சாதிக்க முடியாத ஒன்றை ஒரே ஆண்டில் சாதித்துக் காட்டுவேன் என்று வி.பி.சிங் மிரட்டுகிறார். இந்து சமூகத்தை ஒற்றுமைப்படுத்த விவேகானந்தரும், தயானந்த சரசுவதியும். மகாத்மா காந்தியும் டாக்டர் ஹெட்கேவரும் மேற்கொண்ட மாபெரும் முயற்சிகளை வி.பி.சிங் சிதைக்கத் துடிக்கிறார்.சமூகத்தை மண்டல் மயமாக்கி, வி.பி.சிங் சாதிக்க விரும்புவதெல்லாம் இந்து சமூகத்தை. முன்னேறியவர்கள். பிற்படுத்தப்பட்டோர், அரிஜன் என்பதாகக் கூறுபோட வேண்டும் என்பது தான் என்று ‘ஆர்கனைசர்’ ஏடு எழுதியது.

(V.P. Singh threatens to achieve in one year what the British could not do in these 150 year long alien rule….. He wants to undo the great task of uniting Hindu society from the days of Vivekananda, Dayananda Saraswathi, Mahathma Gandhi and Dr. Hedgewar…. what V.P.Singh through Mandalisation of the society intends to achieve is a division of Hindus on forward, backward and Harihjan lives… (‘Organiser’ 26, Aug. 1990. Page 1)

வி.பி.சிங் மண்டல்குழு பரிந்துரையை செயல்படுத்தி யதற்காக பா.ஜ.க அவரது ஆட்சியைக் கவிழ்க்க வில்லை என்று குரலை மாற்றிப் பேசுகிறார்களே, அவர்களின் உண்மை நிலை இதுதான்!

மக்களை பிறப்பின் அடிப்படையில் வருணா சிரமத்தைப் புகுத்தி பல்லாயிர ஜாதிகளாகக் கூறு போட்டவர்கள் அவர்கள். ஜாதியால் பிளவுப்படுத்தப் பட்டு, கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்னும் வாய்ப்பினை அளித்தால், அப்படி அளிப்பது சமூகத்தைப் பிளவு படுத்துவதாம்! எப்படி இருக்கிறது? நம் காலத்தில் நம் கண் எதிரேயே நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சமூக அநீதி சக்திகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட சமூகநீதிக்கு ஆதர வாளர்கள் என்று கதை புனையும் – ஆர்.எஸ்.எஸ். – அதை ஆதரிக்கும் தினமணி போன்ற ஊடகங்களை எளிதாக இவற்றின் மூலம் அடையாளம் காணலாம் அல்லவா?

------+++++-----+++++-----

உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு (EWS) வழங்குவதில் எத்தனை எத்தனை வேகம்?


Published May 27, 2024, விடுதலை நாளேடு

உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு (EWS) வழங்குவதில் எத்தனை எத்தனை வேகம்?
103ஆம் சட்ட திருத்தம்.
8.1.2019 – மக்களவையில் நிறைவேற்றம்.
9.1.2019 – மாநிலங்களவையில் நிறைவேற்றம்.
12.1.2019 – குடியரசுத் தலைவர் ஒப்புதல்
17.1.2019 – ஒன்றிய சமூக நலத்துறை ஆணை
19.1.2019 – ஒன்றிய பணியாளர் துறை செயல்படுத்த ஆணை பிறப்பித்தல்
29.1.2019 – ஒன்றிய சுகாதாரத்துறை ஆணை பிறப்பிப்பு
30.1.2019 – ஒன்றிய பணியாளர் துறை ரோஸ்டர் முறை ஆணை பிறப்பிப்பு.
1.2.2019 – எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
6.2.2019 – ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது.
8.2.2019 – இடைக்காலத்தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
8.9.2022 – உச்சநீதிமன்றத் தலைவமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் அரசியல் சட்ட அமர்வு.
13.9.2022 – உச்சநீதிமன்றத்தில் விவாதம் தொடக்கம்
27.9.2022 – தீர்ப்பு ஒத்திவைப்பு
7.11.2022 – EWS சட்டம் செல்லும் என்று தீர்ப்பு.
சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான் இடஒதுக்கீடு என்று அரசியல் சட்டம் கூறியுள்ள நிலையில் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தும் உயர்ஜாதியினருக்கு அவசர கதியில் இடஒதுக்கீட்டைத் திணித்ததுதான் சமூகநீதியா?


புதன், 13 மார்ச், 2024

முசுலிமாக மாறுபவருக்கும் 3.5 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு

 


 Published March 13, 2024, விடுதலை நாளேடு

சென்னை, மார்ச் 13- ஆதிதிராவிடர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இசுலாத்தை தழுவினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முசுலிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை என்றும், இவர்களுக்கும் முசுலிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா சட்டமன்றத்தில் பேசினார்.

இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இசுலாத்தை தழுவும் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இசுலாத்தை தழுவினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம் களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அரசாணையில், ‘அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், ஜாதி சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் இந்த அரசாணைப்படி செயல்பட உரிய அறிவுறுத் தல்களை வருவாய் நிர்வாக ஆணையர் வழங்க வேண்டும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மராட்டிய சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

 



மும்பை, பிப். 22- மராட்டிய மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசு நாளன்று மும்பைக்கு பேரணியாக வந்த அவர், பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார்.

கோரிக்கைகள் தொடர்பாக அவசர சட்டம் நிறைவேற்றப்படா விட்டால், காலவரையற்ற பட்டின் போராட்டத்தை மேற்கொள்வேன் என கூறினார். இதற்காக தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதா னத்தை தேர்வு செய்திருந்தார். ஆனால் அங்கு செல்வதற்கு முன் பாகவே, அவரது கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால் போராட்டத்தை கைவிட்டார். மனோஜ் ஜரங்கேவுக்கு முதலமைச் சர் ஏக்நாத் ஷிண்டே பழச்சாறு கொடுத்து பட்டினிப் போராட் டத்தை முடித்து வைத்தார். இட ஒதுக்கீடு குறித்த அரசுத் தீர்மா னத்தை மாநில அரசு வெளியிட் டது.

ஆனால் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி சட்ட மசோ தாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மனோஜ் ஜரங்கே கடந்த 10ஆம் தேதி பட் டினிப் போராட்டத்தை தொடங் கினார்.
இந்நிலையில் மராட்டிய மாநில சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற் றப்பட்டது. இடஒதுக்கீடு அம லுக்கு வந்ததும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபரிசீலனை செய்யலாம் என்றும் மசோதாவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

  

 * சென்னை மாநகரில் வி.பி. சிங் சிலை திறப்பு வரலாற்றுச் சிறப்பானது

* சமூக நீதிக்காக பிரதமர் பதவியை விலையாகக் கொடுத்தவர் 

* திராவிடர் கழகத்தின் மீது வி.பி.சிங் கொண்ட பாசம் - நேசம் பெரியது!

சமூக நீதிக்காவலர் வி.பி. சிங்குக்கு தமிழ்நாடு அரசு சார்பில் திறக்கப்பட்ட சிலை தி.மு.க. ஆட்சி மகுடத்தில் ஒளிரும் முத்து

2

சென்னையில் தமிழ்நாடு அரசால் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் சிலை திறப்பு வரலாற்றுச் சிறப்பானது. தி.மு.க. அரசின் மகுடத்தில் ஒளிரும் முத்து என்றும், மண்டல் பரிந்துரையை செயல்படுத்திய சமூக நீதி காப்பாளர் வி.பி.சிங்கின் சிலையைத் திறந்தமைக்காக முதல் அமைச்சருக்கு கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் நன்றி என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமூகநீதிக் காவலர்  மாண்புமிகு வி.பி.சிங் அவர்களது முழு உருவச் சிலை சமூகநீதிக்கான சரித்திர நாயகர்  மானமிகு மாண்புமிகு  முதலமைச்சர் 

மு.க. ஸ்டாலின் அவர்களால்  இன்று காலை (27.11.2023) திறந்து வைக்கப்பட்டு தமிழ்நாடு வரலாற்றுச் சாதனை புரிந்த பெருமை பெற்றுள்ளது!

சென்னை தியாகராயர் நகரில் நமது வேண்டுகோளும், கலைஞரின் வாக்குறுதியும்

சில ஆண்டுகளுக்கு (2008) முன் வி.பி.சிங் அவர்களது புகழ் வணக்கம் செலுத்திய கூட்டத்தில் தியாகராயர் நகரில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது முன்னிலையில், சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களுக்கு சிலை எழுப்பப்பட வேண்டும் என்று கூறியதை கேட்ட கலைஞர் - அதனை நிச்சயம் செய்வோம் என்று கூறி ஒடுக்கப்பட்டோரின் நன்றிக் குரலாய் மாறினார்!

அதனை இன்றைக்கு கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படும் மகிழ்ச்சிகரமான கால கட்டத்தில் அவரது தனயனும் நமது 'திராவிட நாயகரு'மான நமது முதலமைச்சர் தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்து இன்று திறந்து வைத்துள்ளார்.

வி.பி. சிங் அவர்களது வாழ்விணையர் திருமதி சீதாதேவி மற்றும் அவரது இரு மகன்கள் அஜயா சிங், அபய் சிங்  ஆகியோர் முன்னிலையிலும் உ.பி.  எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்களை சிறப்பு விருந்தினராகவும் வரவழைத்து நடத்தியுள்ளார்!

தி.மு.க. அரசின் மணி மகுடத்தில் ஒளிரும் முத்து!

தமிழ்நாடு (தி.மு.க.) அரசின் மணிமகுடத்தில்  அற்புதமாகப் பதிக்கப்பட்ட சமூகநீதிக்கான ஒளி வீசும் முத்து ஆகும் இது!

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் ஒரு மாமனிதர் பண்பட்ட, அரசியல் ஞானி! எடுத்துக்காட்டான லட்சிய வீரர்.

பிரதமர் பதவி காரணமாக பெருமை பெற்றவர் பலர்; பிரதமர் பதவியை கொள்கைக்காக இழந்து, அதனால் பெருமை பெற்றவர் - பெறுபவர் அது என்றும் இழக்க முடியாத பெருமை; இறவாப் புகழ் ஆகும்!

அவரது தமிழ்நாட்டு நேசிப்பு வியக்கத்தக்கது! எளிதில் எவராலும் மறக்கத்தக்கதன்று.

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் அமைக்க ஆணையிட்டதுடன், தமிழ்நாட்டை மிக சக உறவுக்காரர்களின் உன்னத பூமியாகக் கருதி திராவிட இயக்கத்திடம் மாறா பாசமும் மரியாதையும் வைத்திருந்தவர்!

மண்டல் பரிந்துரையை நிறைவேற்றி அதற்காக பிரதமர் பதவியை இழந்தவர்

மண்டல் அறிக்கையின் பரிந்துரையை (வேலை வாய்ப்பை)  செயல்படுத்திய அவரது துணிச்சல் அசாதாரணமானது. அவருடன் இருந்த அமைச்சரவை சகாக்கள் கட்சிப் பொறுப்பாளர்கள் உள்பட பலரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது "எதிர்நீச்சல் அடித்து" அதைச் சாதித்துக் காட்டியவர்!

"சிறந்த பொருளை பெற நல்ல விலை கொடுத்தாக வேண்டும்" அல்லவா?  அதற்காக ஒரு முறை அல்ல எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமர் பதவியை இழக்கத் தயார்" என்று அவர் கூறியது பொன் எழுத்துக்கள் ஆகும். 

"இது" கமண்டலுக்கும் மண்டலுக்கும் நடக்கும் கருத்துப் போர்; இதில் மண்டல் வெற்றி பெற்று வருங்காலத்தில் "மண்டல் காற்று" தனி வாசனையுடன் நாடெங்கும் வீசும் என்று முன்னோக்கோடு அவர் முழங்கினார்!  இன்று நாடெங்கும் சமூகநீதிக் குரல் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திராவிடர் கழகத்தின்மீது 

வி.பி.சிங் கொண்ட பாசம்!

திராவிடர் கழகத்தோடும் நம்மீதும், தி.மு.க.வுடனும், கலைஞரோடும் அவர் கொண்ட பாசமும் நேசமும் என்றும் மறக்க முடியாத வரலாற்றுப் பெட்டகமே!

தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா, பெயர்களைக் கூறி மரியாதை செலுத்திய பிறகே மண்டல் ஆணையை நாடாளுமன்றத்தில் அறிவித்த ஒப்பற்ற சமூகநீதியாளர். 

அவரது சிலை போதிக்கும் சீலம், சமூகநீதி அரசியலில்  கொள்கைக்காக பதவி துறப்பு மூலம் கொள்கை உயிர்ப்பு என்ற புதுத்தத்துவம் - ஒரு அரசியல் புத்தொளி - புதிய பரிமாணம் ஆகும்! அவரால் துவக்கி வைக்கப்பட்ட மண்டல் புயல் இன்று நாடு தழுவிய சுனாமியாகி, ஆதிக்கவாதிகளின் ஏகபோகத்தையும், எகத்தாள ஏதேச்சதிகாரத்தையும் வீழ்த்த சூறாவளியாக சுழன்றடிக்கத் தொடங்கி விட்டதால் சுயமரியாதை உலகுக்குப் புதிய வெற்றி முளைக்கின்றது!

3

வி.பி.சிங் சிலையை நிறுவிய முதல் அமைச்சருக்கு ஒடுக்கப்பட்டோரின் நன்றி!

புதிய நம்பிக்கை சிறகடிக்கிறது! சமூகநீதிக் காவலர்

வி.பி. சிங் சிலை வைத்த நமது திராவிட மாடல் அரசுக்கும், அதன் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களுக்கும் கோடானு கோடி ஒடுக்கப்பட்டோரின் நன்றி!

இது பெரியார் மண்; சமூகநீதி மண்!

திராவிட இயக்கம் அதன் காவல் அரண் - அதனை நாளும் கட்டிக் காப்பது திராவிடர் ஆட்சி. அதுவே என்றும் எம்மாட்சி - வி.பி. சிங் சிலையே அதற்கான சாட்சி.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.11.2023

மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் முழு உருவச்சிலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

  

சென்னை, நவ. 27- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.11.2023) காலை சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 52 இலட் சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினர். உத்தரப்பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வி.பி. சிங் அவர்களின் துணைவியார் சீதா குமாரி, மகன் அஜயா சிங் மற் றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் திறந்து வைத் தார்.

புகழ்சால் பெருந்தகையாளர் கள், தமிழ்மொழியின் வளர்ச் சிக்கு அரும்பாடுபட்டு தமிழ் நாட்டிற்குப் பெருமைத் தேடித் தந்த அறிஞர் பெருமக்கள், சமூக நீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத் திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையி லும்,  செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங் கள், உருவச் சிலைகள், அரங் கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில், மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாகப் பிறந் தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி. சிங். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார்; சர் வோதய சமாஜில் இணைந்தார், பூமிதான இயக்கத்தில் பங்கெ டுத்தார், தனது நிலங்களையே கொடையாக வழங்கினார். 

1969-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். பின்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகவும், ஒன்றிய வர்த்தக அமைச்சராகவும், வெளி யுறவுத் துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும், பாதுகாப் புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.  

தேசிய முன்னணியை உரு வாக்கி 1989-ஆம் ஆண்டு இந்தி யாவின் பிரதமராக பதவி வகித் தார். 

27 விழுக்காடு இடஒதுக்கீடு

இந்திய அரசமைப்புச் சட் டம் உருவாக்கப்பட்டபோது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இட ஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்பட வில்லை. இதனை வழங்குவதற் காக அமைக்கப்பட்ட இரண்டா வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் பி.பி. மண்டல் தலைமையிலான ஆணையம்.  சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப் படும் சமூகத்துக்கு, பி.பி. மண் டல் பரிந்துரையின் கீழ் ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்தியவர் வி.பி.சிங் ஆவார்.

வி.பி. சிங் பதவியிலிருந்த 11 மாத காலத்தில், பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் திற்கான தொடக்கப் புள்ளி, வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை ஆக்கியது, தேர் தல் சீர்திருத்தங்கள்,  மாநிலங்க ளுக்கிடையிலான கவுன்சில்,  தேசியப் பாதுகாப்புக் குழு, உழ வர்கள் பிரச்சினையைத் தீர்க்க மூன்று குழுக்கள்,  டில்லி குடி சைப் பகுதி மக்களுக்கு வாழ் விடங்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (விஸிறி) அச்சிடு தல் போன்றவற்றை செயல்படுத் திய மாபெரும் சாதனையாளர் ஆவார். 

விமான நிலையத்துக்குப் 

பெயர்

தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணை யத்தை அமைத்துத் தந்த்தோடு, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத் திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட் டிய பெருமைக்குரியவர் வி.பி. சிங். 

உயர்வர்க்கத்தில் பிறந்தா லும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கா கச் சிந்தித்தவர், எத்தனை உயர் பதவி வகித்தாலும் கொள்கையை விட்டுத் தராதவர் வி.பி. சிங். 

இத்தகைய ஒப்பற்ற தலை வரான வி.பி.சிங் அவர்களின் நினைவைப் போற்றும் வகையி லும், அவருக்குத் தமிழ்ச் சமுதா யத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் 20.4.2023 அன்று சட்டப்பேரவை விதி 110இன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், சமூகநீதிக் காவலர், மேனாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங்  அவர்களின் நினை வைப் போற்றும் வகையில், சென் னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப் பட்டுள்ள மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் முழு உரு வச் சிலையை சிறப்பு விருந்தி னரான உத்தரப்பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர் அகி லேஷ் யாதவ்,  வி.பி. சிங் அவர்க ளின் துணைவியார் சீதா குமாரி, மகன் அஜயா சிங் மற்றும் அவ ரது குடும்பத்தினர் முன்னிலை யில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத் தார். 

இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை  அமைச் சர் மு.பெ. சாமிநாதன், அமைச் சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை  செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், செய்தி மக் கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண் டனர்.