பக்கங்கள்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி - ஓ.தணிகாசலம்

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்.  முதன் முதலில் சட்டமன்றத்திற்குள் சென்றவர் - முதன்முதலில் சட்டமன்றத் துணைத் தலைவர் என்ற பெருமைகளுக்கு உரியவர்.
நீதிக்கட்சியின் பிரதமர் பனகல் அரசரின் உதவியால் லண்டன் சென்று மருத்துவ மேற்படிப்பை மேற்கொண்டார். சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலேயே அவுஸ் சர்ஜனாகப் பணியாற்றினார். நீதிக்கட்சி ஆட்சியில், சுப்ராயன் பிரதமராக இருந்தபோது 1929 பிப்ரவரி 2ஆம் நாள் பெண்களைக் கோயில்களில் பொட்டுக் கட்டி விடும் தேவதாசி முறை ஒழிப்புக்கான சட்ட முன் வடிவை முன்மொழிந்தார். சத்தியமூர்த்தி போன்ற தேசியப் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். தந்தை பெரியாரோ பேராதரவு காட்டினார்.
“தொன்று தொட்டு வருவது தேவதாசி முறை; தேவதாசியாக இருப்பதால் அடுத்த ஜன்மத்தில் மோட்சம் கிடைக்கும்’’ என்றார் சத்தியமூர்த்தி அய்யர். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் “இதுவரை எங்கள் சமூகம் மோட்சம் பெற்றது போதும்; இனி உங்கள் குலப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து மோட்சத்தை அடையலாமே!’’ என்று பதிலடி கொடுத்தார் முத்துலட்சுமி அம்மையார். சத்தியமூர்த்தி அய்யர் வாயடைத்து நின்றார். சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அவர் அடிக்கல் இட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, அடையாறு ஆலமரம் போல ஆதரவு கரங்கள் நீட்டி, ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கிறது. இத்தனை சிறப்புகளுக்கும் உரிய அம்மையார் அவர்கள் 1968 ஆம் ஆண்டு ஜூலை 22 இல் உயிர் நீத்தார்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓ.தணிகாசலம்
ஓ.தணிகாசலம் செட்டியார் 1875ஆம் ஆண்டில் வடசென்னையில் பிறந்தவர். மிகச் சிறந்த வழக்குரைஞர்.
நீதிக்கட்சியின் முக்கிய தலை வராகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும், நீதிபதி யாகவும் ஒளி வீசிய பெருமகனார் இவர்.  இவர்தான் முதன்முதலில் 1921இல் வகுப்புரிமை தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். சென்னை தியாகராயர் நகர் பகுதியில் ஒரு தெரு ஓ.தணிகாசலம் (செட்டியார்) என்ற பெயரில் விளங்குகிறது.
1875இல் பிறந்த தலைசிறந்த நீதிக்கட்சித் தமிழரான இவர் 29.7.1929 மறைவுற்றார்.
-உண்மை இதழ்,16-31.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக