பக்கங்கள்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

செய்ய முடியாத காரியங்களைச் செய்து முடித்தவர் பனகால் அரசர்!

தந்தை பெரியார்
தேடற்கரிய, ஒப்பு உயர்வு அற்ற நமதருமைத் தலைவர் கனம். பனகால் ராஜா சர். ராமராய் நிங்கவாரு திடீரென்று நம்மை விட்டு சனிக்கிழமை இரவு 1 மணிக்கு பிரிந்துவிட்டார் என்கின்ற சங்கதியைக் கேட்டவுடன் பொதுவாக இந்திய மக்களுக்கும், சிறப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் அளவே இருக்காது. ஒரு நல்ல நெருக்கடியான சந்தர்ப்பத்தில் தலைவரின் காலம் முடிவு பெற்றதால், பெரியதும் திறமையானது மான ஒரு யுத்தம் முளைத்து வெற்றி குறியோடு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், போர் வீரர்கள் சேனாதிபதியின் ஆக்ஞையை எதிர்பார்த்து திரும்பியபோது சேனாபதி இறந்து போய்விட்டார் என்ற சேதி கிடைக்குமானால் அந்தச் சமயத்தில் அப்போர் வீரர்களின் மனம் எப்படி துடிக்குமோ அதுபோல் நமது தமிழ் மக்கள் துடித்திருப்பார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டிய தில்லை. திரு. ராஜா சாஹேப் அவர்கள் நம் தேசத்தில் உள்ள மற்ற பெரும் பான்மையான தலைவர்கள் என்பவர்களைப் போல் கவலையும் பொறுப்பும் இல்லாமல் கூட்டத்தில் கோவிந்தா போட்டுக் கொண்டு, பாமர மக்களின் அறியாமையை ஆதரவாய்க் கொண்டு, வெறும் வார்த்தைகளை மாத்திரம் அடுக்காகவும், அழகாகவும் பேசுவதும் எழுதுவதும் சமயம், சந்தர்ப்பம், அவசியம் ஆகிய ஒன்றையும் கவனியாமல் சர்க்காரை எதிர்த்தும், கண்டித்தும் பேசுவது போல் காட்டுவதும் ஆகிய காரியங்களாலேயே பெரிய தலைவர் பட்டமும், கீர்த்தியும், பெருமையும் பெற்று வாழக் கூடியதான ஒரு சுலபமான முறையைக் கைக்கொண்டு தலைவரானார் என்று யாரும் சொல்லிவிட முடியாது.
அன்றியும் மற்றொரு விதமாகியும் அதாவது பத்திரிகை-காரர்கள் தயவால் அதாவது, பத்திரிகைக்-காரர்களை திருப்தி செய்து அவர்களது லட்சியங்களுக்கு ஆயுதமாய் இருந்து அவர்களால் கை தூக்கி விடப்பட்டு, தலைவர் ஆனவரும் அன்றியும், மற்றொரு விதமாகவும் அதாவது ஆங்காங்கு கூலி ஆட்கள் பிடித்துக் கூலி கொடுத்து அவர்களைக் கொண்டு நாடு முழுவதும் தங்களை தலைவர்கள் எனக்-கூச்சலிடச் செய்து அதனாலேயே தலைவரான-வரும் அன்று. அன்றியும் பார்ப்பனர்களின் அடிமையாய் இருந்து உலக நலத்தின் பேரால், கலை நலத்தின் பேரால் மோட்ச நலத்தின் பேரால், சுயராஜ்யத்தின் பேரால் என்று பார்ப்பன ஆதிக்கத்திற்கும் நலத்திற்கும் ஆளாயிருந்து அவர்களால் தலைவர் பட்டம் பெற்றவரும் அன்று.
மற்றென்னையோவெனில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இழிவாய்க் கருதப்பட்ட மக்கள் அதாவது தீண்டாதார், கீழ்சாதியார், ஈன சாதியார், சூத்திரர் என்பனவாகிய பிறவி இழிவும், பிறவி அடிமைத்தனமும் சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும், விடுதலைக்கும், சமத்துவத் திற்கும், மனிதத் தன்மைக்குமாக வேண்டி பிரவாகமும் வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர் நீச்சு செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக் கைக்கொண்டு அதில் இறங்கி வேலை செய்தவர். அவ்வேலையில் அவர்பட்ட கஷ்டத்தை யார் அறிவார் என்பது எமக்கே சொல்ல முடியாததாய் இருக்கின்றது. இந்தியாவில் ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற அரசியல் இயக்கத்திற்கும் விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற சமுகத்திற்கும் விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கும் விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரசார கூலிகளுக்கும் விரோதி, இவ்வளவுமல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும் படியான பாமர மக்களுக்கும் விரோதி என்று சொல்லும் படியான நிலையில் நெருப்பின் மேல் நின்று கொண்டு வேலை செய்வது போல் வெகுகஷ்டமான துறையில் வேலை செய்தவர். இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கண-மாகவும் இலக்கியமாகவும் விளங்கினார். நமது தலைவர் பனகால் அரசர் என்று சொல்லுவது ஒரு சிறிதும் மிகையாகாது என்றே எண்ணுகின்றோம்.
அது மாத்திரமல்ல, நமது தலைவரின் தொண்டில் அவருக்கு உற்ற துணையாகவாவது உதவியாகவாவது யாராவது இருந்தார்களா என்று பார்ப்போமானால், ஒருவரைக்கூட உறுதியாய்ச் சொல்லமுடியாது இவருக்கு முன்னைய தலைவர்களான டாக்டர். நாயர், சர். தியாகராயர் ஆகியவர்களுக்கு நமது ராஜா போன்ற உள்ளன்போடு மனப்பூர்வமாய் பின்-பற்றுகின்றவர்கள் அநேகர்கள் இருந்தார்கள். ஆனால் நமது ராஜாவுக்கு யார் இருந்தார்கள்? ஒருவரும் இல்லையே என்று சொல்லுவதுடன் மாத்திரம் நில்லாமல் உள்ளுக்குள்ளாகவே எதிரிகள் சதா குற்றம் சொல்லிக் கொண்டு, பழி சுமத்திக் கொண்டும் அவரது தலைமையைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்து கொண்டும், அவரைச் சுற்றிலும் அவரது சொக்காய்ப் பையிலும் இருந்தார்கள். பின்னை எப்படி ராஜாவுக்கு கட்சியும் ஆள்பலமும் இருந்தது என்று யாராவது கேட்பீர் களானால், அதற்கு பதில், அவருடைய தனி சாமார்த்தியத்தால், புத்திசாலித் தனத்தால், இராஜதந்திரத்தால், சிலரை தான் சொல்லுகின்றபடி கேட்டுத் தீரவேண்டிய நிலையில், வைத்துக் கொண்டிருந்-தார் என்றுதான் சொல்ல வேண்டும். அன்றியும் பார்ப்பனரல்லாத படித்தவர்கள் எனினும் கூட்டத்தாரில் பனகால் அரசரால் அதிருப்தி அடையாதவர்களோ ஏமாற்றமடையாதவர்-களோ, அவர் மீது வெறுப்புக் கொள்ளாதவர்-களோ ஒருவர் இருவராவது உண்டு என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது! ஏனெனில் அவர் ஒரு அருமையான சாதனத்துக்கு பாடுபட்டதினால் அது ஏதாவது கடுகளவாவது பயன் அளிப்ப தானாலும் அந்தப் பலன் அனுபவிப்பதில் ஏற்படும் சண்டைகளும் போட்டிகளும், அபிப்பிராய பேதங்களும் ராஜா சாஹேபை அநேகருக்கு விரோதியாகவும் அதிருப்தி கொள்ள வேண்டியவராகவும் செய்து விடுகிறது. இந்த நிலையில் அவர் மேல்கொண்ட தொண்டில் ஒரு தனி வீரராய் நின்று போர் புரிந்தார் என்றுதான் சொல்லியாக வேண்டும்.
அப்படியிருந்தாலும் எதிரிகளால் அடிக்கடி அவருக்கு ஏற்பட்ட இடையூறுகளை சமாளிப்-பதில் வழிதவறிப்போவது மனிதத் தன்மைக்கு விரோதமாக ஆவது போன்ற எந்தக் காரியத்தையும் செய்யாமல் ஒரு சுத்த வீரனைப் போலவே நின்று கருமம் ஆற்றியவர். எந்த சமயத்திலும் மனம் கலங்கியோ அல்லது யாருக்காவது பணிந்தோ அல்லது தலை குனிந்தோ நின்றவரல்ல.
உதாரணமாக, அவரது தலைமை வாழ்வு இந்த பத்து வருஷத்திற்கு உள்ளாக மூன்றுவித பரிட்சைக்கும் ஆளாகிற்று. அதாவது ஒரு சமயத்தில், முதல் மூன்று வருஷத்தில் அவருக்கு அதிகாரமும் செல்வாக்கும், அதாவது மந்திரி அதிகாரமும் கட்சி செல்வாக்கும் இருந்தது. இரண்டாவது, மூன்று வருஷத்தில் உள்ளுக்-குள்ளாகவே கட்சி ஏற்பட்டதால் செல்வாக்கு இல்லாத அதிகாரம், அதாவது கட்சி செல்வாக்கில்லாத மந்திரி அதிகாரம் மாத்திரம் இருந்தது. மற்றொரு சமயத்தில் மூன்றாவது மூன்று வருஷத்தில், உள்கலகத்தை எதிரிகள் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக் கொண்டதால் அதிகாரமும் செல்வாக்கும் இரண்டும், அதாவது கட்சி செல்வாக்கும் மந்திரி அதிகாரமும் இல்லாமல் செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் முக்காலத்திலும் அவர் செய்ய வேண்டியதை தைரியமாகவும் ஒரே மாதிரியாகவுமே செய்து வந்தார் என்று சொல்லியாக வேண்டுமேயொழிய எப்போதா-வது களைத்துப் போயோ மனமுடைந்து சோர்ந்து விட்டார் என்று சொல்ல முடியாது. மேலும், அதிகாரமும் செல்வாக்கும் இல்லை என்று சொல்லும் படியான மூன்றாவது மூன்று வருஷமான நிகழ்காலத்தில் மந்திரி வேலையுமில்லாமல் கட்சி செல்வாக்கு-மில்லாமல் முன் ஆறு வருஷத்தில் செய்ய முடியாதகாரியங்கள் அநேகம் செய்து முடித்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதனாலேயே நமது பனகாலரசரின் பெருமையும் சாமார்த்தியமும் விளங்கும்-படியான சம்பவங்கள் நடந்து கொண்டே வந்தன.
(23.12.1928 - குடிஅரசு - தலையங்கத்திலிருந்து)
-உண்மை இதழ்,16-31.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக