பக்கங்கள்

திங்கள், 5 செப்டம்பர், 2016

குஜராத்தில் கோயில் கட்டிய தலித் பெண்ணுக்கு கோயிலுக்குள் நுழைய உரிமை இல்லையாம்!

மஞ்சை வசந்தன்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நந்தனார் சிதம்பரம் கோயிலுக்குள் சென்று வழிபட போராடியபோது தீட்சதர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, நந்தன் தொடர்ந்து அதற்காகப் போராட, தீட்சதர்கள் சூழ்ச்சியாக நந்தனாரை நெருப்பில் தள்ளி எரித்த காலந்தொட்டு தலித்துக்கள் கோயிலுக்கு செல்ல முயலும் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அண்மையில் கோயில் வழிபாடு சார்ந்து தாழ்த்தப்பட்டோருக்கும் ஜாதி இந்துக்களுக்குமான மோதலில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், ஆண்டிமடம் அருகில் சிலம்பூர் கிராமத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் 14 பெண்கள் உட்பட 21 பேர் இருதரப்பிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலம்பூரில் உள்ள அய்யனார் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் வழியாடு நடத்த ஜாதி இந்துக்கள் மறுத்து எதிர்ப்புத் தெரிவித்ததால் பெருங் கலவரம் நிகழாமல் இருக்க உடையார்பாளையம் வருவாய் கோட்ட அலுவலர் (RDO) சனிக்கிழமை இரவு (06.08.2016) 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
காந்தியார் பிறந்த மாநிலம் குஜராத். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமும் இதுதான்.
ஆனால், குஜராத்தில் ஜாதி ரீதியான பாரபட்சம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தலித்களுக்கு சம உரிமை என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.
பெரும்பாலான கோவில்களில் தலித்துகளை உள்ளே அனுமதிப்பதில்லை. குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆலயத்தின் கேந்திர பகுதிக்கும், நுழைவாயிலுக்கும் இடையே அக்னி குண்டம் உள்ளது. இந்த அக்னி குண்டத்தை கடந்து செல்லும் உரிமை தலித்துகளுக்கு கிடையாது. உயர் ஜாதி இந்துக்கள் மட்டுமே அக்னி குண்டத்தை கடந்து செல்ல முடியும்.
பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்பதை ஏற்க முடியாது. தலித்துகளை கேந்திரப் பகுதிக்குள் அனுமதித்தால் புனிதம் கெட்டுவிடும் என்று கோவில் பூசாரிகள் கூறுகிறார்கள். கோதா என்ற இடத்தில் உள்ள சுவாமி நாராயண் நூதன் மந்திர் என்ற நவீன ஆலயத்திலும் கூட தலித்துகளுக்கு சம உரிமை அளிக்கப்படுவதில்லை.
கோயில் கட்டியவருக்கே கோயிலுக்குள் செல்ல தடை
குஜராத்தில் அகமதாபாத் அருகேயுள்ள குக்கிராமம் ரகமல்பூர் என்பதாகும். இந்த கிராமத்தை சேர்ந்த பிந்தூபென் கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். தலித் சமூகத்தை சேர்ந்த இவருக்கு 35 பிகா நிலம் உள்ளது. இது சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பிற்கு சமம். இந்த நிலத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தை சேமித்து வைத்து ரூ.10 லட்சம் திரட்டிய அவர் இதைக் கொண்டு ஒரு கோவில் கட்டினார்.
இந்த கோவிலில் நேரந் தவறாமல் வழிபாடு நடைபெற்று வருகிறது. ஆனால், கோவிலுக்குள் நுழைய பிந்தூபென்னுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஏனெனில் அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்று உயர் ஜாதியினர் கூறுகின்றனர். கட்டிய கோவிலுக்குள் நுழைய முடியாதது பிந்தூபென்னுக்கு மன உளச்சலை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் தலித் சமூகத்தினர் பாரபட்சமாக நடத்தப்படுவதால்தான் அங்கு அடிக்கடி கலவரங்கள் நடக்கின்றன.
கோயிலுக்குள் நுழைந்த 4 தலித் பெண்களுக்கு அபராதம்: கர்நாடகாவில் அவலம்
கர்நாடக மாநிலம் ஹொலேநார்சிபூர் தாலுகாவில் உள்ள சிகரனஹல்லியில் ஸ்ரீபசவேஸ்வரர் கோயிலில் தடையை மீறி நுழைந்ததாக 4 தலித் பெண்களுக்கு உயர் சாதியினர் அபராதம் விதித்தனர்.
கடந்த ஆண்டு (2015) ஆகஸ்ட் 31-ஆம் தேதியன்று நடைபெற்ற சிறப்பு பூஜையின் போது இந்த 4 தலித் பெண்களும் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த 9 பெண்களும், கோயிலுக்குச் சென்றனர், அப்போது வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த தேவராஜா என்பவர் தலித் பெண்கள் நால்வரும் நுழையக் கூடாது என்று உரத்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு அடுத்த நாளே உயர் சாதியினர் கூடி ரூ.1000 அபராதம் விதித்தனர். மேலும் சடங்குகள் என்பது கோயிலின் புனிதத்தையும் தூய்மையையும் காக்க நடைபெறுகிறது என்றும் இந்நிலையில் தலித்துகள் நுழைவினால் கோயிலின் புனிதம் கெட்டு விட்டது என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.
கர்நாடகத்தில் பல புராதன பெருமைவாய்ந்த கோயில்கள் உள்ளன. அதில் உலகப் புகழ்பெற்ற உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் பக்தர்களை சாதி அடிப்படையில் நடத்துவது பல நூற்றாண்டு காலமாக நடந்து வருகிறது.
இங்கு உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற அடிப்படையில் தனித்தனியாக உணவு பரிமாறப்படுகிறது.
கடந்த மாதம் 15-ஆம் தேதி (ஏப்ரல் 2014) உணவு அருந்தச் சென்ற பெண் ஒருவர் சாதியைக் காரணம் காட்டி வெளியேற்றப் பட்டார். இது கண்டனத்திற்குரியது.
எவிடன்ஸ் என்னும் அரசுசாரா நிறுவனம் கேவில்களில் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டு வரும் உரிமைகள் குறித்து புள்ளி விவரம் ஒன்றை சில வருடங்களுக்கு முன் வெளியிட்டது. அந்த புள்ளிவிவரம் இந்த ஆண்டும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதும்,இந்த கணிணி யுகத்திலும் தொடர்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.. 85 ஊராட்சிகளில் உள்ள 69 கேயில்களில் தலித்துகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 72 கேயில்களின் சன்னிதானமும் 56 கேயில்களில் அர்ச்சனையும் மறுக்கப்படுகின்றன. 54 கேயில்களின் தேர்கள் தலித் பகுதிகளில் வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. 52 கோயில்களில் பரிவட்டம் மறுக்கப்பட்டுள்ளது. 33 கோயில்களில் தலித்துகள் வடத்தைத் தொடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 64 கோயில்களில் தலித்துகள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது. பால்குடம் எடுப்பது, தீச்சட்டி ஏந்துவது பேன்ற சடங்குகளின்போது 60 கேயில்களில் பாகுபாடு காட்டப்படுகிறது.
05.04.2016 அன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மலையம் விநாயகம்பட்டியில்,  கோயிலில் ஒரு சமூகத்தினர் சிலை வைக்க முயன்றனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்து தடுத்ததால் வாக்குவாதம் முற்றியது. இதில் ஏற்பட்ட கலவரத்தில் 4 போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர்.
22.10-.2015இல் உசிலம்பட்டி அருகே ஏழுமலை கோயில் திருவிழாவில் இருபிரிவினர் மோதிக் கொண்டதால் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதில் தாசில்தார் ஜீப் உள்பட சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  இது தொடர்பாக 32 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தப்புரத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஆதிதிராவிடர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பில் சுவாமி சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. அப்போது கோயில் அருகே இருந்த அரசமரத்தில், ஒருவர் ஆணி அடித்து அதில் மாலை அணிவித்தார். இதனை மற்றொரு பிரிவினர் தட்டிக்கேட்டனர். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. போலீசார் தகராறை விலக்கி விட்டனர். இது குறித்து முனியாண்டி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சித் தலைவரின் கணவர் முருகேசன் உள்பட 35 பேர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
2011ஆம் ஆண்டு மதுரை திருமங்கலத்திற்கு அருகிலுள்ள டி.கல்லுப்பட்டி வட்டத்தை சார்ந்த வில்லூர் கிராமத்தில் ஆதிக்க சாதியான முக்குலத்தோரின் உட்பிரிவான அகமுடையார் சாதியைச் சார்ந்தவர்கள் அதிகம். சிறுபான்மையான தாழ்த்தப்பட்டவர்கள் சுமார் 300 குடும்பத்தினரும் இங்கு வசித்து வருகின்றனர்.
அகமுடையார்கள் வசிக்கும் மேலத் தெருவான காளியம்மன் கோயில் தெருவிற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் சைக்கிளிலோ அல்லது செருப்பு அணிந்தோ போகக் கூடாது.
ஆண்டுதோறும் ஆடிமாதம் 5 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தங்களுக்கும் ஒருநாள் கட்டளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தள்ளிமேடு பகுதி தலித் மக்கள் போராடி வருகின்றனர். அப்படி திருவிழாவில் ஒருநாள் கட்டளை நடத்திக் கொள்ள அனுமதிக்காவிட்டால், ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறப் போவதாகவும் தலித் மக்கள் கூறினர். இதனால் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சு வார்த்தையில் தலித் மக்களுக்கு கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு கட்டளை நடத்திக் கொள்ளக் கூறப்பட்ட ஆலோசனைகளை எதிர்த் தரப்பினர் ஏற்க மறுத்தனர்.
1924ஆம் ஆண்டில் வைக்கத்தில் கோயில் நுழைவு உரிமை முழக்கத்தை பெரியார் மீண்டும் முன்வைத்தார்.
தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தின் தூண்டு விளைவாக திருவிதாங்கூர் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட சுசீந்திரத்தில் தீண்டப்படாதார் கோயில் நுழைவுக் கிளர்ச்சி 1925ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் நாள் நடைபெற்றது.
1927ஆம் ஆண்டு தமிழகக் கோயிலுக்குள் சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் தாழ்த்தப்பட்டோரை அழைத்துச் செல்லும் போராட்டத்தை நடத்தினர். ஜே.என்.இராமநாதன் தலைமையில் பல தாழ்த்தப்பட்டோர் திருச்சி தாயுமானவர் கோயிலில் நுழைந்தனர். அவர்கள் கோயிலை நோக்கி மலைப்படியேறிச் சென்றபொழுது பார்ப்பனர் ஏவிய ரவுடிகளால் தாக்கப்பட்டு, மலைப்படியில் உருட்டித் தள்ளப்பட்டனர்.
ஜே.என் கண்ணப்பர் தலைமையில் திருவண்ணாமலையில் கோயிலுக்குள் நுழைந்தவர்களை கோயிலுக்குள் பூட்டி வழக்கு தொடர்ந்தனர்.
1927 மே மாதம் கி.ஆ.பெ.விஸ்வநாதம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியினரும் மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலுக்குள் நுழைய முயன்றனர். அதை அறிந்த கோயில் நிர்வாகிகள் கோயிலைப் பூட்டித் தடுத்தனர். அதையும் மீறி பக்க வழியே போராட்டக்காரர்கள் கோயிலுக்குள் நுழைந்தனர்.
25.06.1928இல் திருச்சி மலைக்கோட்டையிலும், 12.08.1928இல் திருவானைக்காவலிலும் கோயில் நுழைவுப் போராட்டத்தில் பெரியார் தொண்டர்கள் பங்கு கொண்டனர். இரண்டு இடங்களிலும் போராட்டக்காரர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டனர்.
1929ஆம் ஆண்டு குத்தூசி குருசாமி அவர்கள், ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயிலுக்குள் ஈரோடு கச்சேரி வீதி ஈஸ்வரன், ஈரோடு மஞ்சைமேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய தாழ்த்தப்பட்டோருடன், ஆதிதிராவிடர் தோழர்களையும் அழைத்துக்கொண்டு, நாகம்மையார், பொன்னம்பலனார் ஆகியோருடன் பூசைப் பொருட்களுடன் நுழைந்தார்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் தொகுதி, தலைஞாயிறு ஒன்றியத்தில் உள்ள கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை ஜாதி மோதல் காரணமாக மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவு - ஏடுகள் தரும் செய்திகள்!
திராவிடன் 16.12.1929 பாகம் 4 பக்கம் 1
சிதம்பரத்தில் ஆதிதிராவிடர்கள் கோயிலுக்குள் நுழைந்து விடுவார்களென்று தீட்சதர்கள் நடுக்கம் கொண்டிருக்கிறார்கள். அதற்காக போலிஸ் படையையும் வைத்திருக்கிறார்களாம். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களின் அப்பன் வீட்டு சொத்து அல்ல. தீட்சதர்களுக்கு நுழைய எவ்வளவு உரிமை உண்டோ அவ்வளவு உரிமையும் ஆதிதிராவிடருக்கும் உண்டு.
திராவிடன் 25.12.1929 பாகம் 3 பக்கம் 2
ஜாதி எனும் சண்டாளப் பேயை கொல்லுவதற்காக நடைபெறப் போகும் சிதம்பரம் நடராஜர் ஆலயப் பிரவேச இயக்கத்தில் கலந்துகொள்ள துறையூரிலிருந்து சுமார் 500 ஆதிதிராவிடர் வரை கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார்கள்.
திராவிடன் 26.09.1932 பாகம் 11
ஸ்ரீ மீனாக்ஷி கோவில் ஆலயப் பிரவேசம்: கோயில்களில் பூஜைசெய்யும் பட்டர்கள் நிலை ஒரே நிலையில் இல்லாது அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு கட்சியார் அதிகாரிகள் உத்தரவுப்படி தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயப் பிரவேசத்தை ஒப்புக்கொள்ளலாம் என்றும், மற்றொரு கட்சியார், எவர் எவ்விதம் உத்தரவிடினும் தாங்கள், தீண்டாதார் ஆலயப் பிரவேசத்தை ஆதரிப்பதில்லை என்றும், ஒருக்கால் பெருந்திரளாக மக்கள் ஆலயத்தினுள் புகுந்துவிட்டால் ஸ்வாமி இருக்கும் மூலஸ்தானத்தைப் பூட்டிக்கொண்டு வெளியில் வந்துவிடுவதென்றும் தீர்மானம் கொண்டிருப்பதாய்த் தெரிகிறது.
கோயிலுக்குச் சென்ற மூவரை கோயில் சிப்பந்திகள் யார், எந்த ஊர் என்று கேட்டதாகவும் அதற்கு அவர்கள் நீ யார் என்று கேட்டுவிட்டு ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
திராவிடன் 1929
ஈரோட்டில் சர்க்கிள் தேவஸ்தானம் கமிட்டியின் தீர்மானத்திற்கு 4ஆம் தேதி காலையில் கருப்பர், தேசியன், சாளி, வெங்கடாசலப் பண்டிதர், கலியப் பண்டிதர் ஆகியோர், ஈஸ்வரன், மாயவரம் நடராசன், ராவணன், பொன்னம்பலனார், நித்தியாநந்தம், குருசாமி ஆகியோர் தலைமையில் இதுவரை பஞ்சமர் அனுமதிக்கப்படாத இடம்வரை சென்று முதல் வாசற்படியருகில் பாட்டுகள் பாடிக்கொண்டு சென்றபோது அர்ச்சகர் முதலாவது வாயிற்படியை மூடிவிட்டான் மறுநாளும் கோயில் கதவுகளெல்லாம் மூடப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கானோர் ஏமாறித் திரும்பினர்.
திராவிடன் 19.05.1930
சுசீந்திரம் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் பிரவேச உரிமையை நிலைநாட்ட தீண்டாதாரும் அவர்களிடம் அனுதாபம் உடையவர்களும் ஆரம்பம் செய்திருக்கும் சமதர்மப் போர் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. தினந்தோறும் மாலை 4 மணிக்கு ஆலயத்துக்குச் செல்லும் சந்நிதித் தெருவில் 4 தொண்டர்கள் சத்தியாக்கிரம் செய்கிறார்கள். இதுவரை தலைவர் ராமன் பிள்ளை உட்பட 21 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். அவர்களில் 4 பேருக்கு திருவிதாங்கூர் பீனல்கோடு 90ஆவது செக்ஷன்படி 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்ததினால் 6 மாதம் வெறுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
விடுதலை 16.08.1939
ஆடி அமாவாசையன்று சுமார் 100 நாடார்களும், ஹரிஜனங்களும் கிழக்கு கோபுரத்தின் வழியாக ராமேஸ்வரம் கோயிலுக்குள் நுழைய எத்தனித்ததாகவும் சனாதனிகளும் சேர்வைக்காரர்களும் தடுத்துவிட்டதாகவும், பகல் பூஜைகள் வழக்கத்துக்கு முன்னதாகவே நடத்தப்பட்டு, கோயில் கதவுகள் பூட்டப்பட்ட விட்டனவாம். ஆக, தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் மேற்கண்ட நிகழ்வுகள் மூலம் அறிவதோடு, அந்த போராட்டங்கள் பெரிதும் தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார் தொண்டர்களாலேதான் நடத்தப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
பெரிய கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் செல்ல தற்போது தடையில்லை என்றாலும், கிராமப்புறக் கோயில்களில் தாழ்த்தப்பட்டோருக்கான தடையும், அதையொட்டிய தாக்குதல்களும் நடைபெறுகின்றன என்பது கசப்பான உண்மை.
2015 ஆகஸ்ட் மாதம் விழுப்புரம் வட்டம் சங்கராபுரம் அருகில் சேஷசமுத்திரம் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு தாழ்த்தப்பட்டோர் தங்கள் சொந்த செலவில் கட்டிய தேரையே இழுத்துச் செல்ல முடியாமல் ஆதிக்க ஜாதியினரால் அத்தேர் எரிக்கப்பட்டு பெரும் கலவரம் நடந்தது, நாமெல்லாம் வெட்கமும் வேதனையையும் படத்தக்கதாகும்!
இறைவன் முன் எல்லோரும் சமம் என்று கூறிக்கொண்டே, ஜாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி, இழித்து, விலக்கி வைப்பது உண்மையான பக்தன் செய்யும் செயலா?
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த நந்தனார் நாயன்மாராக கோயிலுக்குள் வைத்து வணங்கப்படும் நிலையில், தாழ்த்தப்பட்டோரை நுழையாதே என்பது அறியாமையல்லவா? கோயிலுக்குள் கோலோச்சும் ஜாதி வெறி அனைவராலும் அகற்றப்பட வேண்டிய கொடுமையாகும்!
-உண்மை இதழ்,16-31.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக