பக்கங்கள்

புதன், 30 ஆகஸ்ட், 2017

நாராயணகுரு



1855 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள செம்பழந்தி எனும் கிராமத்தில், ஈழவ சமுதாயத்தில் விவசாயம் செய்து வந்த மாடன் ஆசான் - குட்டி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர்தான் நாராயணன். இவர் பெற்றோர்களால் நாணு என்று சுருக்கமாகவும், செல்லமாகவும் அழைக்கப்பட்டார்.

15 வயதில் தனது தாயை இழந்த நாராயணன் அதிகமான நேரம் தனது தந்தையின் ஆசிரியப் பணியிலும், மாமாவின் ஆயுர்வேத மருத்துவப் பணியிலும் உதவியாக சில பணிகளைச் செய்து வந்தார். பின்னர் கல்விகற்று  ஆசிரியர் பணி செய்தார். இவருடைய திறனைக் கண்டு வியந்த அப்பகுதி மக்கள் அவரை "நாணு ஆசான்" என்று செல்லமாக அழைக்கத் துவங்கினர்.

அக்காலத்தில் ஈழவர்கள் ஆலயம் செல்லக்கூடாது, அவர்களின் பெயர்களில் கூட கடவுள் பெயர் இருக்கக் கூடாது போன்ற பல்வேறு ஜாதிய அடக்குமுறைகளை கண்டு கொதித்து மக்களுக்கு அவர்கள் விரும்பும் பெயர் சூட்டியும், கோவில் நுழைவிற்காகவும் போராடினார்.  1903இல் திருவனந்தபுரத்தை மய்யமாகக் கொண்டு அருவிப்புரத்தில் "சிறீ நாராயண தர்ம பரிபாலன சபா" எனும் அமைப்பை நிறுவினார்.

இந்த அமைப்பில் ஈழவர்கள் மட்டுமின்றி புலையர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் கல்வி, செல்வம், ஆன்மீகம் போன்றவற்றில் உயர்சாதியினரைப் போல் முன்னிலைக்கு வந்தால் உயர்வு - தாழ்வு எனும் பாகுபாடு நிலை இல்லாமல் போய்விடும்; எனவே அந்த நிலைக்கு உயர்வதற்கு முதலில் அவர்களிடையே அறியாமையைப் போக்கப் பாடுபட்டார்.  பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு சிறீ நாராயண தர்ம பரிபாலன சபாவின் மூலம் ஏராளமான பள்ளிகளையும், கல்விக்கூடங்களையும் கட்டினார்.

கேரளாவில் தெருவில் நடக்க தடைவிதித்த உயர்ஜாதியினருக்கு எதிராக வைக்கம் என்ற இடத்தில் போராட்டம் நடைபெற்றது, தந்தை பெரியார் தலைமையேற்று நடத்தப்பட்ட தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் அது. இப்போராட்டத்திற்கு நாராயண குரு ஆதரவளித்தார். நாராயண குரு தனக்குச் சொந்தமான பேளூர் மடத்தைப் போராட்டக் காரர்கள் தங்குவதற்காக அளித்தார். இந்தப் போராட்டத்திற்கு நன்கொடையாக ஆயிரம் ரூபாயும் அளித்தார்.

அம்பேக்தர் பிரியன் எழுதிய "சிறீ நாராயண குரு வாழ்க்கை வரலாறு" (நூலின் பக்கம் - 110).

கல்வி, சமூக நிறுவனங்களை அதிக அளவில் கொண்ட ஒரு பெரிய அமைப்பாக சிறீ நாராயண தர்ம பரிபாலன சபா உருவானது. இதன் மூலம் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் அனைவரும் கல்வி கற்க முற்பட்டனர். இன்று இந்தியாவில் கேரளா மாநிலத்தில் நூறு சதவிகிதம் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள், அனைவரும் கல்வி அறிவுடையவர்கள் என்கிற முதல் நிலையைப் பெற்றிருப்பதற்கு அடிப்படைக் காரணம் சிறீ நாராயண தர்ம பரிபாலன சபாவின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

- மயிலாடன்

-விடுதலை,28.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக