கி.வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்
‘சமூகநீதி’ என்பது நமது (இந்திய) அரசமைப்புச் சட்டத்தின் “பீடிகையில்” இடம்பெற்றுள்ள முக்கிய கோட்பாடு ஆகும்.
மக்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கச் செய்யும் நீதி வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதில் முதலில் சமூகநீதி, அடுத்துதான் பொருளாதார நீதி, அரசியல் நீதி என்று முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
ஏன் சமூகநீதி கோரிக்கை ஏற்பட்டது? தேவை என்ன? சமூக அநீதி காலங்காலமாக நிலவி வந்தது. உலகில் எங்குமில்லாத ஜாதி முறை - வர்ணாசிரமத்தால் படிப்பு உயர்ஜாதியினருக்கே; உழைப்பு கீழ்ஜாதியின ருக்கே என்ற மனுநீதிதான் அரசர்கள் காலம்முதல் கடைப்பிடிக்கப்பட்டதாக இருந்தது. இதை எதிர்த்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சமூகநீதி - கல்வி - வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கை முழக்கமாகி, அது 1916 முதல் பழைய சென்னை மாகாணத்தில் இயக்கமாகியது!
அவ்வியக்கத் தலைவர்கள் நீதிக்கட்சி டாக்டர் சி.நடேசனார், சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்களின் முயற்சியால் அது அரசியல் கட்சியாகி, ஆளும் அரசாகவும் ஆன நிலையில், பல்வேறு காலகட்டங்களில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.
அப்போது தமிழ்நாடு காங்கிரசு தலைவராக இருந்த தந்தை பெரியார், காங்கிரசு மாநாடுகளில் இதனைத் தீர்மானமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிட செய்த முயற்சி செல்வாக்குள்ள உயர்ஜாதியினரால், 1920 முதல் 1925 வரை தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டது. அதன் காரணமாக, 1925 இல் தந்தை பெரியார் காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் கட்சியை விட்டு வெளியேறினார்.
தனியே சமூகநீதியை நிலைநாட்ட 1925 ஆம் ஆண்டு இறுதியில் சுயமரியாதை இயக்கத்தை நிறுவி, சமூக நீதியின் முழக்கமாக ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற கொள்கையை அடிநாதமாக்கினார்.
நீதிக்கட்சியில் சேராத காலத்திலும்கூட, அதே கொள்கையை வற்புறுத்தி “சென்னை மாகாண சங்கத்தில்” பொறுப்பேற்று வலியுறுத்தியே வந்தார்.
1928 இல் வகுப்பு வாரி உரிமை ஆணையை நீதிக்கட்சியின் ஆதரவுடன் ஆண்ட டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் அவர்கள்மூலம் ஆணை பிறப்பிக்கச் செய்து, அதை வரவேற்றார்.
அதன்படி, அரசு ஆணை (எண் 1129, நாள்:15.12.1928) அமலில் அன்றிருந்த சமூகநீதி அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டது.
1950 இல் அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில அடிப்படை உரிமைப் பிரிவுகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, இவ்வாணை ‘சமத்து வத்திற்கு’ எதிரானது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர்ஜாதியினர் போட்ட வழக்கில் நீதிபதிகள் அமர்வு மற்றும் உச்சநீதிமன்றமும் அதை உறுதிசெய்து அறிவித்த நிலையில், இதற்கான பெரியதொரு மக்கள் கிளர்ச் சியை தந்தை பெரியார் முன்னின்று நடத்தினார். இதனை அறிந்த பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முதலாவது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் 1951இல் நிறை வேற்றினர்.
அதன்மூலம் சமூகநீதி, உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்ற தீர்ப்புகளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்பட்டது.
இதில் சென்னை மாகாணத்தில் அவ்வப்போது வகுப்புவாரி உரிமை ஆணையில் பற்பல மாற்றங்கள் பரிமாண வளர்ச்சியாக உருவெடுத்தன.
எடுத்துக்காட்டாக, ஓமந்தூர் ஓ.பி.இராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்த காலத்தில், அதற்குமுன் இடம்பெறாத பிற்படுத்தப்பட்ட (ஙிணீநீளீஷ்ணீக்ஷீபீ) என்ற சொல் அவ்வாணையில் இடம் பெற்றது - சட்டத் தேவையை ஒட்டி, அது கல்வி வள்ளல் காமராசர் முதல்வர் ஆன காலத்தில், ‘‘தாழ்த்தப்பட்டவர்’’ இணைந்து மலைவாழ் மக்கள், என்ற பிரிவுகளின் கீழ் முறையே 16 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 விழுக்காடு என 41 விழுக்காடு இடஒதுக்கீடு என்று ஆணை செயற்பாட்டிற்கு வந்தது.
1967 இல் அறிஞர் அண்ணா ஆட்சி அமைத்து, பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு - தந்தை பெரியார் வற்புறுத்தலால், போடப்பட்டு, அந்தக் குழு தன் பரிந்துரையை கலைஞர் (மு.கருணாநிதி) அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் அளித்தது. அதனை ஏற்று, கலைஞர் அரசு, அவ்வாணையை, தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் ஆகியோ ருக்கு இருந்த 16 சதவிகிதத்தை 18 ஆக உயர்த்தியது.
பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவிகிதமாக இருந்ததை 31 சதவிகிதமாக உயர்த்தியது.
எஞ்சிய 51 சதவிகிதம் முன்னேறிய வகுப்பினர் உள்பட அனைவரும் போட்டியிடும் பொதுப் போட்டிக்கானது.
1979 இல் அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆண்டு வருமானம் 9,000 ரூபாய் இருந்தால் அவர்கள் பிற்படுத்தப் பட்டவர்களாக இருக்க முடியாது என்ற “வருமான வரம்பு ஆணை”யைப் போட்டார்.
இது அரசமைப்புச் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் எதிரானது என்று திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜனதாவில் சில தலைவர்கள் குறிப்பாக ரமணிபாய், காங்கிரசில் டி.என்.அனந்தநாயகி, திண்டிவனம் இராமமூர்த்தி, மணிவர்மா போன்றோர் எதிர்த்தனர். அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது. 39 இடங்களில் 2 இடங்களில் தான் வெற்றி பெற்றது.
இத்தோல்வி, திராவிடர் கழகத்தின் தலைமையில் நடந்த பிரச்சாரம், கிளர்ச்சி எல்லாம் எம்.ஜி.ஆர். அவர்களை மறுசிந்தனைக்கு உள்ளாக்கியது.
அதனால் அவர், ரூ.9,000 வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு, பிற்படுத்தப் பட்டோருக்கு ஒதுக்கிய 31 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக உயர்த்தினார். அதன்படி, இட ஒதுக்கீடு 68 சதவிகிதமாக உயர்த்தப் பட்டது. மலைவாழ் மக்களுக்குத் தனி ஒதுக்கீடு, பிறகு வந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பால் தி.மு.க. ஆட்சியில் ஒரு சதவிகிதம் ஒதுக்கப்பட்டது. 68 சதவிகிதம் 69 சதவிகிதமாக உயர்ந்தது.
இதற்கிடையில், மத்திய அரசு கல்வி, உத்தி யோகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றி ருந்த நிலையில், அரசமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட காகாகலேல்கர் முதல் குழுவின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலேயே முடக்கப்பட்டது.
இரண்டாவது குழு பி.பி.மண்டல் தலைமையில் அமைக்கப்பட்டு (1980), அந்தக் கமிஷன் பரிந்துரை அளித்தது. திராவிடர் கழகம், தி.மு.க. மற்ற சமூகநீதி அமைப்புகள் எல்லாம் சேர்ந்து கிளர்ச்சியை நடத்தின. திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது. பிறகு சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் பிரதமராக வந்த நிலையில், வேலை வாய்ப்பில் மட்டும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை அளித்து 1990 இல் ஆணை பிறப்பித்தார்.
இதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு 9 நீதிபதிகள் அமர்வு 1992 இல் தீர்ப்பளித்தது. மத்திய அரசில் முதல் முறையாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (அய்.ஏ.எஸ்.முதல் பல நிலைகள்) 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்களின்படி, 50 விழுக்காட்டிற்கு மேல் இடஒதுக்கீடு போகக்கூடாது என்பது போன்ற ஒரு நிலைப்பாடு(பாலாஜி வழக்கினைக் காட்டி) கூறப்பட்டது.
தமிழ்நாட்டில் அமலில் இருந்த 69 சதவிகிதத்திற்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க, அப்போது ஜெயலலிதா அவர்கள் முதல்வரான நிலையில் (1992), திராவிடர் கழகம் அதனைக் காப்பாற்ற இதுவரை வெறும் ஆணையாக இருந்ததை, இனி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமாக்கி (கிநீt), பின்னோக்கி (ஸிமீtக்ஷீஷீsஜீமீநீtவீஸ்மீ மீயீயீமீநீt) சென்று அரசமைப்புச் சட்டத்தின் 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் வைக்கலாம் என்று கூறிய யோசனையை முதல்வர் ஜெயலலிதா ஏற்று அனைத்துக் கட்சி கூட்டத்தையும், சட்டமன்றத்தையும் தனியே கூட்டி, சட்டத்தை நிறைவேற்றச் செய்தார். 76ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வேண்டி, அன்றைய பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவுடன் பல சந்திப்புகள், பிறகு அது நாடாளுமன்றத்தில் எதிர்ப்பின்றி நிறைவேறி, குடியரசுத் தலைவராக இருந்த சங்கர்தயாள் சர்மா அவர்களின் ஒப்புதல் பெற்று, 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் உள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மொத்த இடஒதுக்கீடு 69 சதவிகிதம் அதுவும் அரசு ஆணையாக இல்லாமல், சட்டமாக (கிநீt ஆக) உள்ளது.
இதைச் செய்த செல்வி ஜெயலலிதா அவர் களுக்கு, திராவிடர் கழகம் ‘‘சமூகநீதி காத்த வீராங் கனை’’ என்று பட்டம் கொடுத்துப் பாராட்டியது.
ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 50 சதவிகிதமானது, மிகவும் பிற் படுத்தப்பட்டவர் என்ற பிரிவுக்கு 20 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 சதவிகிதம் என்று பிரிக்கப்பட்டு, சமூகநீதி பரவலாக ஏற்பட 1990 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் செய்தார். மேலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டில் முஸ்லீம் களுக்கு 3.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பிறகு அதேபோல், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள்ள பிரிவில், அருந்ததியினருக்கு 3 சதவிகிதம் தனியே மாநில அரசில் ஒதுக்கீடு செய்தார். அதன் காரணமாக தாழ்த்தப்பட்டோருக்குப் பரவலாக சமூகநீதி கிடைத்தது!
2005ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த 93ஆவது அரசமைப்பு திருத்த சட்டத்தின்படி மத்திய கல்வி நிறுவனங்களில் (தனியார் நிறு வனங்கள் உட்பட) ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.
திராவிடர் இயக்கம், காமராசர் ஆட்சியிலும் சமூகநீதி!
தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், சமூகநீதியில் கைவைக்கும் துணிவு இல்லா சூழ்நிலை நிரந்தரமாக பாதுகாக்கப்பட்டது, கலங்கரை வெளிச்சம்போல மற்ற மாநிலங்களுக்கு இன்றும் அது வழிகாட்டியாக அமைந்துள்ளது. ‘இதனால் இது பெரியார் மண்’ என்ற பீடுநடை போடுகிறது!
அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் (15(4)), அடுத்து 76 ஆவது திருத்தம், 93 ஆவது திருத்தம் என்று மூன்று அரசமைப்பு சட்டத் திருத்தங்கள் திராவிடர் இயக்கத்தின் முப்பெரும் சாதனைகளாகும்!
தேர்தலில் ஈடுபடாத, சட்டமன்றம், நாடாளு மன்றத்திற்குச் செல்லாத ஒரு இயக்கம் சமூகநீதியில், இத்தகைய சாதனைகளைப் படைத்தது என்பது ஒரு அதிசயமே!
திராவிடர் கழகம் நியாயமாகப் பெருமைப் படுகிறது.
நன்றி: 'தினத்தந்தி', 20.2.2018
- விடுதலை நாளேடு, 21.2.18