பக்கங்கள்

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

ஆந்திர மாநிலம் முக்தீஸ்வரத்தில் தமிழர் தலைவர் தலைமையில் சமூகநீதி விழா!

நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமியின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சிகள்
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சமூகநீதி நடைமுறைக்கு அரும்பாடுபட்ட போராளிகளுள் ஒருவரான ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதியான ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமி (1942-2008) அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

11.7.2017 அன்று ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், முக்தீஸ்வரத்தில் சிறீ ஒய்.வி.எஸ். & பி.ஆர்.எம். கல்விச் சங்கம் மற்றும் நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமி நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்த விழா - சமூகநீதிப் பெருவிழாவாக விமரிசையாக நடைபெற்றது.

மண்டல் குழு பரிந்துரையின் நடைமுறைக்கு தமிழர் தலைவர் மற்றும் பல்வேறு சமூகநீதித் தலைவர்களோடு ஆந்திர மாநிலத்தில் களப் போராளியாக செயல்பட்டு சமூகநீதி உணர்வுகள் தழைத்திடப் பாடுபட்ட நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அறக்கட்டளை சார்பாக நடத்தப் படுகிறது. அதில் சமூகநீதி உணர்வுகளுக்கு உரமேற்றும் வகையில் பல்வேறு அரசியல், சமூக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்பது நடைமுறை வழக்கம். அந்த விழாக்களில் தமிழர் தலைவர் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு பேருரை ஆற்றி சமூகநீதிபற்றி அவ்வப்போதைய நிலைமைகளை எடுத்து வைத்து  ஆவன செய்வதற்கு அறைகூவல் விடுவதும் வழக்கம்.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் முக்தீஸ்வரத்தில் கல்விச் சேவை ஆற்றிவரும் சிறீ ஒய்.வி.எஸ். & பி.ஆர்.எம். பல் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் வெகுசிறப்புடன் கொண்டாடப்பட்டது.

கல்வி வளாகத்தில் அமைந்துள்ள நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமியின் சிலைக்கு தமிழர் தலைவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள், ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் பலர் சிலைக்கு மலர்மாலை அணிவித்தனர். கல்வி வளாகத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் நடைபெற்றது.

பின்னர் கல்வி வளாக மைதானத்தில் அமைக்கப்பட்ட துணிப் பந்தல் கூடாரத்தில் பிறந்த நாள் ஆண்டு விழா தொடங்கியது. நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமி நினைவு அறக்கட்டளையின் பொறுப்பாளர் பொறியாளர் சுதாகர் மற்றும் குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினர்.
தமிழர் தலைவரின் தலைமையும், உரையும்!

விழாவிற்குத் தலைமை வகித்து நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தமிழர் தலைவர் உரையாற்றினார். ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம் தமிழில் வருமாறு:



மண்டல் குழுப் பரிந்துரை நடைமுறைக்கு நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடந்து வந்த 1980-களில் வழக்குரைஞராகப் பணியாற்றிய பி.எஸ்.ஏ.சுவாமி அவர்கள் எமக்கு அறிமுகமானார். அந்நாளில் ஆந்திர மாநில சமூகநீதித் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய சர்தார் லச்சண்ணா அவர்கள் நடத்திய பல்வேறு களப் போராட்டங்களில் பங்கேற்ற சமூகநீதிப் போராளியாக பி.எஸ்.ஏ.சுவாமி விளங்கினார். பின்னர் ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தாம் எந்த நிலையிலும் - எந்தப் பதவியில் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்கிட பாடுபடும் உணர்வுடனே விளங்கினார். ஆளும் அதிகாரம், அடக்கியாளும் ஒரு பிரிவினரிடமிருந்து மற்றொரு அடக்கியாளும் பிரிவினருக்குச் செல்லும் அதிகார மாற்றத்தினைத் (Transfer of Power) தாண்டி ஒடுக்கப்பட்ட மக்களும் கையாளும் அதிகார முறை மாற்றம் (Transformation of Power)  பற்றிய அக்கறையுடன் செயல்பட்டு வந்தார்.

வழக்குரைஞர் வட்டத்தில் அவர் உருவாக்கிய சமூகநீதி உணர்வுகள், பின்னாளில் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடமும் நிலவிவரும் நிலைமைகளை உருவாக்கியது. சுவாமி அவர்கள் மறைந்து 9 ஆண்டுகள் கடந்தும்,  அரசியல் துறையில் ஆளும் தலைவர்கள் - ஆந்திர மாநில துணை முதல்வர், சட்டமன்ற மேலவை, பேரவை உறுப்பினர்கள், நீதித் துறையில் அளப்பரிய பங்காற்றிய உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள், அதிகார வர்க்கத்தினைச் சார்ந்த இந்நாள், மேனாள் அதிகாரிகள் பலர் இந்த விழாவில் பங்கேற்றிருப்பது சுவாமி பேணிய சமூகநீதி உணர்வுகளுக்குச் சான்றாக விளங்குகிறது.

சமூகநீதிப் போராட்டத்தில் களப் பணியோடு மட்டும் நிறைவடைந்திடாமல், ஆக்க ரீதியாக ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பிள்ளைகள் கல்வி பயில - தொழிற்கல்வி பயில - பல்வேறு உயர் கல்வி நிலையங்களை - அவர்கள் வாழ்விடத்திற்கு அருகியிலேயே முக்தீஸ்வரம் பகுதியில் அமைத்தார். அந்தக் கல்வி நிலையங்கள் இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த சமூகநீதி பயன்பாட்டை பறைசாற்றுவதாக உள்ளன. இன்றளவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு உரிய வாய்ப்புகள், சமூகநீதி வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை. அரசமைப்புச் சட்டம் அளித்துள்ளபடி உரிய நிலைகள் ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை. உரிய உரிமைகளைப் பெற்றிடும் விழிப்புணர்வு வேண்டும். இது ஒருபுறம்; மற்றொரு புறத்திலே இருக்கும் சமூகநீதி உரிமைகளைத் தட்டிப் பறிக்கின்ற வகையில் ஆளும் நிலையில் உள்ள ஆதிக்கவாதிகளின் செயல்கள் உள்ளன. இவைகளையும் மீறி ‘அனைவருக்கும் அனைத்தும்' எனும் சமூகநீதித் தத்துவம் பரவலாக்கப்படவேண்டும். அதற்குரிய பணிகளில் இங்கு வருகை தந்துள்ள அனைத்து அரசியல், சமூக, கல்வி அமைப்புகளும் முன்வரவேண்டும்; முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் நினைவுகளுக்கு உரிய மரியாதை அளிப்பவையாக இருக்கும்; அவரைப் போற்றுவதற்கு ஒப்பானதாக இருக்கும்; அப்படிப்பட்ட சமூகநீதியினை முழுமையாகப் பெற்றிட நடவடிக்கைகளை தொடருவோம்.

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்.
ஆந்திர மாநில துணை முதல்வர்
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆந்திர மாநில துணை முதல்வர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி தமது உரையில் குறிப்பிட்டதாவது:

ஆந்திர மாநிலத்தில் சமூகநீதி பரவலுக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமி அவர்கள். வழக்கு ரைஞராகப் பணியாற்றிய பொழுதும், உயர்நீதிமன்ற நீதி பதியாக பணியாற்றிய காலத்திலும், பணி நிறைவு பெற்று முழுமையான பொது வாழ்க்கைக்கு வந்த பொழுதும் நேர்மையாளராக, ‘தவறு’ என்பதை துணிச்சலாகச் சொல்லி, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டவர். சமூக நீதிக்கு சுவாமி அவர்கள் ஆற்றிய பங்கிற்கு, சமூக நீதி தத்துவத்தின் பிறப்பிடமாக விளங்கிடும் தமிழ்நாட்டிலிருந்து அவருக்கு சமூகநீதி விருது அவரது வாழ்நாள் காலத்திலேயே வழங்கப்பட்டிருப்பது சரியான அளவீடு ஆகும்.

இன்றைய விழாவின் தலைவர் மதிப்பிற்குரிய கி.வீரமணி காரு பெயராலேயே அமைந்தது சுவாமி அவர்களுக்கு வழங்கப்பட்ட விருது என்பது கூடுதல் சிறப்பானதாகும். முக்தீஸ்வரம் போன்ற ஒடுக்கப்பட்ட பகுதிகளில் கல்வி நிலையங்களை அமைத்து அப்பகுதி மக்களின் கல்வித் தரம், வாழ்க்கைத் தரம் மேம்பட சுவாமி பாடுபட்டு வந்தார். அந்தப் பணிகள் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும். சுவாமி அவர்கள் போற்றி பாதுகாத்த சமூகநீதிக் கொள்கைகளை இந்த மாநிலத்தை ஆளுகின்ற அரசும் நடைமுறைப்படுத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு துணை முதல்வர் குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்ற  மேனாள் நீதிபதிகள் உரை

பி.எஸ்.ஏ. சுவாமி அவர்கள் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் நினைவு பேருரையினை ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி முனைவர் ஜி.யதிராஜுலு வழங்கினார். மேலும் விழாவில் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் முனைவர் ஜி.பவானி பிரசாத் (தலைவர், ஆந்திர பிரதேச மின் ஒழுங்கற்று ஆணையம்), கே.சி.பானு, ஜி.சந்திரய்யா ஆகியோர் பி.எஸ்.ஏ. சுவாமி அவர்களது நினைவுகளைப் போற்றி உரையாற்றினர்.

மேலும் ஆந்திர பிரதேச சட்டமன்ற மேலவையின் துணைத் தலைவர் ரெட்டி சுப்பிரமணியம் (எம்.எல்.சி.) சட்டப்பேரவை உறுப்பினர் பி.நாராயணமூர்த்தி (எம்.எல்.ஏ.) பணிநிறைவு பெற்ற இந்திய ரயில்வேப் பணி உயர் அதிகாரி பாரத் பூஷன், அயினவல்லி மண்டலத் தலைவர் சலாடி புல்லையா நாயுடு, ஜில்லா பரிஷத் தலைவர் கங்கு முல்லா காசி அன்னபூர்ணா ஆகியோர் உரையாற்றினர்.

விழாவில், கல்வி நிலையங்களில் பயின்று முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்க்கு தமிழர் தலைவரும், இதர சிறப்பு விருந்தினர்களும் பரிசளித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நடத்தி தமிழர் தலைவருக்கும், இதர விருந்தினர்களுக்கும் சால்வை அணிவித்து சிறப்புச் செய்து நினைவு பரிசு வழங்கினர்.

சுவாமி குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் பாராட்டு

ஒவ்வொரு ஆண்டும் சுவாமி அவர்களுக்கு விழா எடுக்கும் சுவாமி குடும்பத்தினர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகி களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு தெரிவித்தார். நீதிபதி பி.எஸ்.ஏ. சுவாமி அவர்களது வாழ்விணையர் திருமதி ஜெயலட்சுமி, மகள் சவீதா குமார், மருமகன் சுதாகர் ஆகியோருக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

விழா இனிதே நிறைவு பெற்றது, வருகை தந்த அனைவ ருக்கும் நண்பகல் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசியல், சமூக, கல்வி அமைப்புகளைச் சார்ந்தோர் மற்றும் பொதுமக்கள்
-விடுதலை, 13.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக