பக்கங்கள்

வியாழன், 8 பிப்ரவரி, 2018

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தீர்மானத்தை தோற்கடித்த பிஜேபி, அதிமுக

தமிழர் தலைவர் கண்டனம்

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துத் தோற்கடித்த கட்சிகளுக்கு  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற கோரிக்கை 1996ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

குடியரசுத் தலைவர் உரைமீது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு பற்றிய திருத்தம் ஒன்றை மாநிலங்களவை உறுப்பினர் திரு. டி.கே. ரெங்கராஜன் (சிபிஎம்) நேற்று கொண்டு வந்துள்ளார். அதன் மீதான வாக்கெடுப்பில் திருத்தத்துக்கு எதிராக பிஜேபியும், அ.இ.அ.தி.மு.க.வும் வாக்களித்துள்ளன.

இந்தியா முழுவதும் சட்டப் பேரவைகளில் 9 விழுக்காடு அளவுக்குத்தான் பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவையில் உள்ள 542 பேர்களில் 64 பேர்கள் மட்டுமே பெண்கள். மாநிலங்களவையில் 245 பேர்களில் 27 பேர் மட்டுமே பெண்கள் உள்ளனர். இதில் உலக அளவில் இந்தியா 148ஆம் இடத்தில் உள்ளது என்பது வெட்கக் கேடானதாகும்.

இந்த நிலையில் பிஜேபி, அஇஅதிமுக, சிவசேனா, தெலுங்குதேசம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் திருத்தத்துக்கு எதிராக வாக்களித்திருப்பது பெண்கள் உரிமைக்கான அவர்களின் நிலைப்பாட்டைத் தான் அம்பலப்படுத்தும். இக்கட்சிகளுக்கு பெண்களின் வாக்குகள் மட்டும் வேண்டும். ஆனால் அவர்களின் உரிமைகள் என்றால் எதிர் நிலையா? கசப்பா? மகா வெட்கக் கேடு.

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்கள் தொகையில் சரி பகுதி எண்ணிக்கை உள்ள பெண்கள் இவர்களை அடையாளங் கண்டு உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கி. வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்

சென்னை 
8.2.2018

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக