பக்கங்கள்

புதன், 10 அக்டோபர், 2018

பழைய சம்பிரதாயங்கள் எவ்வளவோ மாற்றம் கண்டுள்ளன - அய்யப்பன் கோவில் வழிபாட்டில் மட்டும் பெண்கள் வழிபடக்கூடாதா?

உச்சநீதிமன்றத் தீர்ப்பு: கேரள அரசின் முடிவு வரவேற்கத்தக்கது!
- தி எகானமிக் டைம்ஸ்', 4.10.2018

எவ்வளவோ சம்பிரதாயங்களும், பழக்கங் களும் மாற்றத்திற்கு ஆளான நிலையில், சபரி மலை அய்யப்பன் கோவில் வழிபாட்டில் பெண்கள் நேரடியாக ஈடுபடக் கூடாது என்பதில் மட்டும் மாற்றம் வரக்கூடாதா? உச்சநீதிமன்றமும், கேரள மாநில அரசும் இதில் எடுத்த முடிவின்படி சபரிமலை அய் யப்பன் கோவிலில் பெண்கள் நேரில் சென்று வழி பாடுஎன்பதுசெயல்படுத்தப்படவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

ஆண்களுக்கு உள்ள வழிபாட்டு உரிமை - பெண்களுக்கும் தேவை!


சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 10 வயதுக்கு மேற்பட்ட - 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அய்யப்பன்' தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாதது இந்திய அரசியல் சட்டப்படி - ஆண் - பெண் பாகுபாடு கூடாது என்பதற்கு முற்றிலும் முரண்பட்டது; எனவே, ஆண்களுக்கு உள்ள வழிபாட்டு உரிமை அங்கே பெண்களுக்கும் தேவை என்பதை வலியுறுத்தி, முற்போக்குச் சிந்தனை யாளர்களும், சில அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். (ஏற்கெனவே கேரள உயர் நீதிமன்றம், வழக்கம் - மதச் சுதந்திரம் - வழிபாடு என்பது மதச் சம்பந்தப்பட்ட நிகழ்வு என்பதைக் காட்டி, பழைய சனாதனத்திற்குப் பாதுகாப்பு அளிப்பதுபோல் தீர்ப்பு தரப்பட்ட நிலையில், அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது!)

சனாதன சடங்கு என்ற சாக்கில் தடுப்பது ஏற்கத்தக்கது அல்ல!


இது அரசியல் சட்டத்தின் துல்லியமான தீர்ப்பாக அமையவேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டு விட்டது.

ஒரு (பெண்) நீதிபதியைத் தவிர மற்ற நான்கு (ஆண்) நீதிபதிகளும் அனைத்துப் பெண்களுக்கும் வழிபட உரிமை உண்டு; சனாதன சடங்கு என்ற சாக்கில் தடுப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று தெளிவான தீர்ப்பு தந்துவிட்டார்கள்!

புரட்சிகர முடிவுகளை வரவேற்று பாராட்டியுள்ளார்கள்


பார்ப்பனர்களும், சில வைதீகப் பிடுங்கல்களும் தவிர, பெரும்பாலான பக்தர்கள் உள்பட இந்தப் புரட்சிகர முடிவுகளை வரவேற்றுப் பாராட்டியுள்ளார்கள்.

கேரளத்தில் முன்பு ஆட்சி செய்த காங்கிரசு தலைமையிலான அரசு, பழைய பழக்கம் - பெண்களை பாகுபாடுபடுத்துவது எல்லாம் சரியே என்று கூறும் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம்:


கேரள முதல்வர் பினராயி விஜயன்


அரசியல் மாற்றத்தின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர் பினராய் விஜயன் அவர்கள் முதல மைச்சராகிய நிலையில், வேற்றுமை பாராட்டக்கூடாது, பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிப்பதில் பாரபட்சம் கூடாது என்று முற்போக்காளர்களது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டதோடு, இத்தீர்ப்பினை வரவேற்று, இதனை செயல்படுத்த கேரள புரட்சி அரசு தக்க ஏற் பாடுகளைச் செய்யும்; உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குக் கட் டுப்படுவோம் என்று அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது!

மறு சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு - தேவசம் போர்டும் போடுவதில்லை என்ற முடிவு வரவேற்கத்தக்கது.

கேரளத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் பெண் பக்தர்களை பாகுபடுத்துவது ஏற்கத்தகாத பழைய அநீதியான முறை என்று 2016 இல் ஆர்.எஸ்.எஸ். ஆண்டுக் கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளரான சுரேஷ் பையாஜி ஜோஷி என்ற பார்ப்பனர் கூறினார். முற்போக்காளர்களின் வழக்கு நிலைப்பாட்டை இதன்மூலம் வரவேற்றும் பேசினார்.

'பேசுநா இரண்டுடையாய் போற்றி!'


அவரே இப்போது திடீர் பல்டி அடித்துத்தான் முன்பு பேசியதை மாற்றிக்கொண்டு, பக்தர்களின் உணர்வை மதிக்கவேண்டும்; பக்தர்கள் ஒப்புதல் இன்றி இதை உடனடியாக செயல்படுத்தக்கூடாது'' என்று பேசுநா இரண்டு' என்ற ஆரிய மாயை'யை அப்பட்டமாக நிரூபித்துள்ளது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய செயலாகும்!

பக்தர்களைக் கேட்டால் பழைய பஞ்சாங்கத் தைத்தானே நியாயப்படுத்துவார்கள். அவர்களின் வாதங்களை ஏற்காமல்தானே உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் ஏகோபித்து ஆராய்ந்து இந்த நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

பின் ஏன் இப்படி ஒரு தலைகீழ் பல்டி - About Turn முறை?

கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. கோழியைக் கேட்டா மிளகாய் அரைக்க முடியும்? (குழம்பு வைக்க)'' என்று - அதுதான் நினைவிற்கு வருகிறது!

சபரிமலை கோவிலில் மின்சார விளக்கு சம்பிரதாயத்தில்'' உண்டா? சாலைகளும், மற்ற நவீன ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறதே, அதில்தானே பக்தர்கள் இப்போது செல்லுகிறார்கள்!  (கல்லும் முள்ளும் என்னாயிற்று?) அது முந்தைய சனாதனப்படி சரியா? அதை மாற்றிடும்போது இந்த சமூக அநீதி பாலியல் அநீதியைக் களைதல் சரிதானே!

பக்திப் பித்தலாட்டம் பல குரலில் பேசுகிறார்கள்; பார்ப்பனியம் வக்காலத்து வாங்குகிறது. ஆனாலும், இதில் ஆர்.எஸ்.எஸால் வெற்றி பெற முடியவில்லை!

 

கி.வீரமணி,


தலைவர் திராவிடர் கழகம்.


சென்னை

4.10.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக