பக்கங்கள்

வெள்ளி, 19 அக்டோபர், 2018

பரோடாவில் ஆலயப்பிரவேசம்

06.11.1932 - குடிஅரசிலிருந்து....


சுதேச சமஸ்தானங்களில் முற்போக்கான காரியங்களை முதன்மையாகச் செய்து வரும் சமஸ் தானம் பரோடா சமஸ்தானம் ஒன்றே யென்பதை நாம் கூற வேண்டியதில்லை. அதிலும் தாழ்த்தப் பட்டவர்கள் விஷயத்தில், பரோடா அரசாங்கம் மிகவும் அனு தாபங் கொண்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்து கொண்டு வருகின்றது.

தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளை எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் ஆட்சேபணையின்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனச் சென்ற வருஷத்தில் பரோடா அரசாங்கத்தார் உத்தரவு பிறப்பித்தனர்.

இவ்வுத்தரவை அகங்காரம் பிடித்த உயர் ஜாதி இந்துக்கள் எவ்வளவோ எதிர்த்தனர். பள்ளிக் கூடங்களில் சேரவந்த தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளுக்கு எவ்வளவோ கஷ்டங்களை உண்டாக்கினார்கள், தங்கள் பிள்ளைகளை ஜாதி இந்துக்களின் பிள்ளைகள் வாசிக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிய தாழ்த்தப்பட்ட வகுப்புக் குடும்பத்தினரின் குடிசைகளை நெருப்புக்கிரை யாக்கினர். அவர்கள் தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் மண்எண்ணெய் ஊற்றி, குடிதண்ணீருக்குத் திண்டாட விட்டனர். இவ்வாறு உயர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்தாலும், அவர்கள் அரசாங் கத்தார் தமக்குக் கொடுத்த சுதந்திரத்தை உபயோகிக் காமல் விட்டு விட வில்லை. அரசாங்கத்தாரும், தாம் பிறப்பித்த  உத்தரவை மாற்றாமல், பிடிவாதமாகவே நிறைவேற்றினார்கள். இவ்வகையில் அரசாங்கம் கொண்டிருந்த உறுதியைத் தாழ்த்தப்பட்ட சமுகத்தினர்பால் அனுதாபம் உள்ள எவரும் பாராட்டாம லிருக்க முடியாது.

இப்பொழுது இன்னும் சிறந்த துணிகரமான காரியமாக, தாழ்த்தப்பட்டார் அனைவரும்

கோயிலுக்குள் செல்ல உரிமையுண்டு என்றும் உத்தரவு பிறப்பித்ததை நாம் பாராட்டுகிறோம். இதற்கு முன் போர் சமதானத்திலும் இவ்வாறே தாழ்த்தப்பட்ட சமுகத் தார்க்கும் கோயில் பிரவேசம் அளித்தி ருக்கின்றனர்.

அதைப்பின்பற்றி பரோடாவும் தைரியத்தோடு வைதிகர்களின் எதிர்ப்பைச் சிறிதும் பொருட்படுத் தாமல் இக்காரியத்தைச் செய்ததைப் பாராட்டு கிறோம். இப்பொழுது தான் சென்னைச் சட்ட சபையில், தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத்தக்க சட்டத்தை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்வதாக தீர்மானம் நிறைவேறியிருக்கின்றது. சென்னை அரசாங்கத்தார் இத்தீர்மானத்தை அனுசரித்தும் பரோடா, போர் பந்தர் முதலிய சமதானங்கள் செய்திருக்கும் உத்தரவு களைப் பார்த்தும் தாமதமில்லாமல் தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத் தகுந்த சட்டத்தை நிறைவேற்ற முன்வருமா? என்று கேட்கிறோம்.

சுதேச சமஸ்தானங்கள் இக்காரியத்தைச் செய்த பின்னும் சென்னை மாகாண பொது ஜனங்களின் பிரதிநிதியாகிய சட்டசபை இக்காரியத்தை நிறை வேற்ற வேண்டுமென்று சிபாரிசு செய்த பிறகும் சென்னை அரசாங்கம் மௌனஞ் சாதித்துக் கொண்டு வாளாவிருக்குமாயின் அது நேர்மையும் ஒழுங்கும் ஆகாது என்பதைச் சொல்ல விரும்பு கிறோம். அரசாங்கத்தின் நோக்கம் எல்லா வகுப்பின ருக்கும் சமத்துவமளிப்பதும், எல்லா வகுப்பின ருக்கும் நீதி புரிவதும் அல்ல வென்று பொது ஜனங்கள் நினைக்கும் படி இருக்கும். ஆகையால் சென்னை அரசாங்கம் சிறிதும் தாமதம் இல்லாமல் பரோடா போர்பந்தர் முதலிய சமஸ்தானங்கள் செய்தது போலத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு ஆலயங் களில் சம உரிமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றோம்.

- விடுதலை நாளேடு, 13.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக